Loading

குமரி – 7

முல்லை மயங்கி சரிந்தவுடன் நாச்சியாரும் , சென்மொழியும் பதறிக் கொண்டு எழுப்ப முயன்றனர். ஆனால், நல்லவேளையாக மலையில் பழங்குடியினர் தங்கும் இடத்தின் அருகே இச்சம்பவம் நடந்ததால் அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர்.

வந்தவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர். ஆனால், முல்லை கண் விழிக்கவே இல்லை. வேறு வழியில்லாமல் அவளை தூக்கிக் கொண்டு அவர்களின் மருத்துவரிடம் சென்றனர். நாச்சியாருக்கும், சென்மொழிக்கும் வேறு வழி இல்லாததால் அவர்களின் பின்னே சென்றனர்.

சில மைல் தூரங்களில் குடிசைகள் கட்டி மக்கள் வாழ் இடமாக மாற்றியிருந்தனர். வத்தல் மலைக்கு மூன்று கிலோ மீட்டருக்கு மட்டுமே பேருந்து செல்லும். அதன் பின் , ஒத்தையடி பாதை போட்டிருக்கும். அதன் வழி இருபது நிமிடங்கள் நடக்க வேண்டும் . அவ்விருபது நிமிடங்களும்  பாதைகளின் ஒரங்களில் பூத்து இருக்கும் பூக்களை காணும் பொழுது ஏதோ ஒரு நந்தவனத்திற்கு நுழைந்தது போன்று இருக்கும்.

அப்பொழுதினில் தான் முல்லை சொக்கி விட்டாள் . இயற்கை காட்சி அவளுக்கு புத்துணர்ச்சியைத் தந்தது. அதை ரசித்துக்கொண்டே வரும் பொழுது தான் தென்றல் வீசி அவள் பூமழை பொழிய மயங்கி விட்டாள்.

அவள் மயங்கி விழுந்தது அத்தகைய இயற்கையின் அழகிலா இல்லை நேற்றிலிருந்து சாப்பிடாமல் இருந்ததிலா   என்று அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஆகும்.

அந்த ஒத்தையடி பாதையின் முடிவில் வலது புறத்தில் எட்டு ஏக்கரில் பாதி விவசாயமும் பாதி பூக்களுக்காக வைத்திருத்தனர். அதே நேர் எதிரில் இவர்களின் குடில்கள் அமைந்திருந்தது. அனைத்து குடிலும் கலை நயத்தோடு இருந்தது. ஒலை, குச்சி, மரம் இது போல் அனைத்தையும் சேர்த்து வீடும் அல்லாது குடிசையும் அல்லாது கட்டி இருந்தனர்.

இவை எல்லாம் தாண்டி ஒரு மைல் தூரம் தாண்டி  அழகிய நீரோடை ஒடிக் கொண்டிருந்தது. இன்னும் மேலே சென்றால் நீர்வீழ்ச்சி இருக்கும். அதன் அருகில் தான் எஸ்டேட் உள்ளது. எஸ்டேட்டுக்கு செல்வதற்கு வேறு வழியும் உள்ளது.

மயங்கிய முல்லையை தூக்கிக் கொண்டு குடில் பக்கம் சென்று அங்கு இருப்பதிலேயே மிகச் சிறிய குடிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றவுடன் பணிவன்புடன் துண்டை இடுப்பில் கட்டி  பவ்யமாக “ஆசனே ” என்று அழைத்தனர்.

குறைந்தது இரண்டு நிமிடத்திற்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், நாச்சியார் மற்றும் சென்மொழிக்கு தான் பதைபதைப்பு கூடியது. அதைவிட  , சென்மொழி யாரையும் எதுவும் கூறிவிடுவாளோ என்கின்ற பயம் தான் நாச்சியாருக்கு பயத்தை கூட்டியது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை சென்மொழி அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

மெதுவாக கதவு திறக்கப்பட்டது. அதிலிருந்து குனிந்து ஒரு உருவம் வந்தது. வெளியில் வந்தவுடன் நிமிர்ந்து பார்க்க அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கையை நெஞ்சினில் வைத்து தலை தாழ்த்தி நின்றனர். சிரித்துக் கொண்டே கையை உயர்த்த அனைவரும் சீராக இரு வரிசையில் பிரிந்து நின்றனர்.

சுற்றியுள்ள அனைத்தையும் கவனித்த கொண்ட அந்த அறுபது வயது மிக்க மனிதர் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்று விட்டு பின் அவரின் இருக்கையில் போய் அமர்ந்தார். அவரது இருக்கையான சணல் கட்டிலில் காலை சம்மணம் இட்டு கையை நெஞ்சினில் வைத்து , கண்களை மூடி , வாயிற்குள்ளே எதையோ உச்சரித்தார். சில நிமிடங்களுக்கு பிறகு அவர் கண்ணைத் திறக்க , கண்கள் சிவந்து காணப்பட்டது.

அவர் கண்ணை திறந்தவுடன் நேர்கோட்டில் அவர் பார்த்தது சென்மொழி. கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அவர் கூட்டத்தினர் அனைவரும் துடித்து விட்டனர். அதே நேரம் சென்மொழிக்கும் கண்கள் கலங்கியது.

நாச்சியார் தான் அவளைத் தட்டி “அவர் ஏன் அழகுறாரு ? இவங்க ஏன் அழகுறாங்கனே தெரிலை? இதுல நீ வேற ஏன்டி ? ” என்று கேட்டார்.” இல்லம்மா , வயசானவர் அழுதவுடனே ஒரு மாதிரி ஆயிடுச்சு ” என்று கூறி கண்களைத் துடைத்து கொண்டாள்.

அவளை பைத்தியம் போல் பார்த்து விட்டு கையை பிசைந்து கொண்டே அருகிலிருந்தவரிடம்  “அய்யா, என் பொண்ணு? ” என்று வார்த்தைகளை மென்று முழுங்கினார்.

அவர் சிரித்துக் கொண்டே  பொறுங்கள் என்று கைகளால் சைகை செய்து காண்பித்தார்.பின்பு, ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு அவர் முல்லை அருகே அமர்ந்து கை நாடியை பிடித்துப் பார்த்தார். பின்பு, அருகிலிருப்பவனிடம் நீரோடையில் தண்ணீர் எடுத்த வரக் கூறினார்.பின்பு, நந்தவனத்தில் இருந்து அரளி பூவை எடுத்து வரச் சொன்னார்.

பின்பு, நீரோடையில் உள்ள தண்ணீரை அவரின் குடிலுக்குள் இருந்து எடுத்து வரப்பட்ட மூலிகைகளோடு கலந்து, இப்பூவின் மகரந்ததில் இருந்து ஒரு சொட்டு மருந்தை எடுத்து இத்தண்ணீரோடு கலந்து அதை
அவள் வாயில் ஒரு தேக்கரண்டி அளவு மட்டுமே ஊற்றினார்.

ஊற்றிய ஐந்து நிமிடத்தில் முல்லை விழித்தாள். விழித்தவுடன் அவள் முதலில் பார்த்தது அந்த ஆசனையே. முல்லை வேகமாக எழுந்து அவரின் தலையில் கை வைத்து  ஏதோ சொல்ல வரும் முன் அவ்வாசன் நாச்சியாரிடம் திரும்பி “உங்க பொண்ணு கூட்டிட்டு போங்க. நான் சில மூலிகை தர்றேன். கலந்து கொடுங்க ” என்று கூறி முல்லையைப் பார்த்து சிரித்து விட்டு சென்றார்.

“அவர்களை ஒரு குடிலுக்கு அழைத்து செல்லுங்கள் ” என்று ஒருவர் உத்தரவிட, விடலை பையன் சரி என்று கூறி இவர்களை அழைத்து சென்றான். முல்லையும், சென்மொழியும் ஒன்றும் கூறாமல் அவர்கள் பின்னே அமைதியாக சென்றனர். நாச்சியார் தான் குழம்பி முல்லையை பிடித்து “ஏண்டி, உனக்கு வேலை எஸ்டேட்லில்  கொடுத்து இருக்காங்க .நீ பாட்டுக்கு அவங்க சொன்னாங்கனு இங்க தங்க போற?” என்று முணுமுணுத்தார்.

முல்லை பதில் கூறும் முன் அந்த விடலை பையன் ” இல்லைம்மா, இந்த வழியாவும் எஸ்டேட் போகலாம். இங்கிருந்து நிறைய பேரு அங்க வேலை செய்யிறாங்க. அதனால், அவங்க கூட்டிட்டு போவாங்க ” என்று சொல்லிக் கொண்டே ஒரு குடிலை காண்பித்தார்.

அதை திறப்பதற்குள் அவ்வாசனின் சிஷ்யன் ஒருவன் ஒடி வந்து “பாரி ஐயா, ஆசன்  அம்மாவோட குடிலை சுத்தம் பண்ணி கொடுக்க சொன்னாங்க ” என்று அவன் சொன்னவுடன் அனைவருக்கும் அதிர்ச்சி.

அக்குடிலை இதுவரை யாரும்  உள்ளே சென்று கண்டதில்லை. அதற்கு அனுமதியும் யாருக்கும் கிடையாது. ஆசனே தான் சுத்தம் செய்வார்.
அப்படிப்பட்ட குடிலில் இவர்களை தங்க சொல்கிறாரா என்று அனைவருக்கும் ஆச்சரியம் தான்.

ஆனால், பாரி எந்த எதிர்வினையும் முகத்தில் காட்டாமல் ஆசன் சொன்னபடியே சுத்தம் செய்து அக்குடிலில் தங்க வைத்தார். முல்லை  உள்ளே சென்றவுடன் அமைதியாக கிழக்கு மூலையில் பாய் விரித்து படுத்து கொண்டாள். சென்மொழி உள்ளே செல்லாமல் அங்கு உள்ள இடத்தை சுற்றி பார்க்க சென்று விட்டாள். நாச்சியார் தான் அருகில் இருப்பவரிடம் எஸ்டேட் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்.

பேச்சு வழக்கில் நாச்சியார் “நீங்க எத்தனை வருஷமா இங்க இருக்கீங்க? “
அப்பெண் “ஆசனை பார்த்தீங்களா அவங்க அப்பா அம்மாவே இங்க தான் பிறந்தாங்க. அதுக்கு முன்னாடி இருந்து எங்க இனத்தவர்கள் இருக்காங்க “

நாச்சியார்”உங்க இனத்தவர் பேரு என்ன? “

“எங்க இனம் பேரு குறிச்சியர்கள் . ஆலம்பாடி குறிச்சியர்களுனு சொல்லுவாங்க. கேரளா  வனப் பகுதி தான் எங்க பூர்வீகம். இப்போ ஏழு தலைமுறையா தான் இங்க வசிக்கிறோம். எங்க குலப்படி சந்தனத்தை நெத்திலையும், நெஞ்சுலையும் குறியா தடவிக்குவோம். அதுல வந்த பேரு தான் குறிச்சியர்கள் .”

சென்மொழி ” ஆனால், உங்களைப் பார்த்தா அப்படி தெரியலை? டவுன்ல உள்ளவங்க மாதிரி தான் இருக்கீங்க ? “சுற்றி பார்த்து விட்டு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கேட்ட விஷயத்தை வைத்து கேட்டாள்.

” இல்லை தாயி, இப்போ தான் பிள்ளைகள் வெளியே போய் படிச்சு  நிறைய கத்துக்கிட்டு மாத்த முயற்சி பண்ணுறாங்க . அதே மாதிரி நம்ம எஸ்டேட் முதலாளி இந்திராணி அம்மாவும் இதுக்கு காரணம்”

சென்மொழி”அப்போ ஆசன் சொல்லுறீங்களே அவங்க யாரு ? “

” அவர் தான் எங்க மூத்த தலைமுறை .அவரை பாத்த எவ்ளோ வயசு மாதிரி இருக்கு ? “

“என்ன ஒரு 60 இல்லை 65 வயசு இருக்குமா ? “என்று நாச்சியார் அனுமானமாக கூறினார்.

“ஹாஹா….. அம்மா அவருக்கு 98 வயசு ஆகுது. அவர் வேலையை அவர் தான் பாப்பார். அவர் தான் எங்களுக்கு பூக்கள் பத்தி நிறைய சொல்லிக் கொடுப்பார். விவசாயமும் அவர் தான் சொல்லி கொடுத்தார். “

நாச்சியார் “ஹப்பா, அவ்ளோ வயசா …..பாத்த அப்படி தெரியலையே ! என் மகளுக்கும் நிறைய பூவைப் பத்தி தெரியும். அதோட படிப்புலையும் கெட்டிக்காரி. நிறைய மெடல்லாம் வாங்கியிருக்கு. அதை வைச்சு தான் இங்க வேலை கொடுத்தாங்க ” என்று தன் மகளை பற்றி பெருமையாக கூறிக் கொண்டிருந்தார்.

“ஒஹோ..அப்பிடியா! நல்லது நல்லது. உங்களுக்கு சாப்பாடு அனுப்பி வைக்கிறேன் சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வு எடுங்க”

“ம்ம்ம்.. சரிங்க ” என்று நாச்சியார் சரி என்று கூறி விட்டு எழுந்து செல்ல , சென்மொழி மட்டும் அமர்ந்திருந்தாள்.அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்து “என்ன தாயி, வேற எதுவும் வேணுமா? “

சென்மொழி”உங்களுக்கு தெய்வம்னு எதை கும்பிடுவீங்க? “

“வேற என்ன, இயற்கையா தான் இருக்கும் என்று எதற்கோ வந்த நாச்சியார் கூறினார்.

“ஆமாம்மா, நாங்க இயற்கை தான் கும்பிடுவோம். வானத்தை பார்த்து பூமியைப் பார்த்து தான் கும்பிடுவோம். ஆனால், எங்க ஆசனுக்கு முன்னாடி தலைமுறையில் ஆங்கிலேயர் ஆட்சி பண்ண காலமாக இருந்துச்சு. அந்த காலத்துல வளர்ந்தவங்க தான் எங்க ஆத்தா குறிச்சி குமரி. அவளை தான் இப்போ சாமியா நினைச்சு எல்லாமே அவளுக்கு படைப்போம். பூஜையெல்லாம் அவளுக்கு பண்ணுவோம்.அவளுக்கு கோயில்கூட கட்டி வச்சிருக்கோம் “

” என்னை அங்க கூட்டிட்டு போறீங்களா? ” சென்மொழி ஆசையாக கேட்க, “இன்னைக்கு தானத் தாயி வந்துருக்க. ஓய்வு எடு நாளைக்கு கூட்டிட்டு போக சொல்லுறேன் “என்று சொல்ல, சென்மொழியும், நாச்சியாரும் நன்றி கூறிவிட்டு அவரவர் குடிலுக்கு சென்று விட்டனர். மதிய உணவு உட்கொண்டு அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். முல்லை குடிலை விட்டு வெளியே வரவில்லை. சென்மொழி குடிலுக்குள்ளேயே வரவில்லை.

மாலை பொழுதினில் அமைதியாக அச்சூழலை ரசித்து கொண்டே வந்து கொண்டிருந்தாள் சென்மொழி. அவளுக்கு குடிலுக்குள் இருக்க பிடிக்கவேயில்லை. அப்படி சுற்றி கொண்டிருக்கும் பொழுது அவள் கண்ட காட்சி ஆசன் அமர்ந்து இருப்பதும், அவரின் சிஷ்யன் சிறு பச்சிளங்களுக்கு வால் வித்தை சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

அவ்விடத்துக்கு  பிள்ளைகளை கவனித்து கொண்டே வந்தவளின் முன்பு எதிர்பாராத விதமாக ஒரு வாள் அவள் முன் விழுக , அதை லாவகமாக பிடித்தாள் முல்லை.

கையை சுழற்றி ஒரு சுற்று சுற்றி அவளின் முடி கற்றுகள் அவிழ்ந்து அவளின் மெய்க்கு ஏற்ப இசைந்து கொண்டு அதுவும் அசைந்தது. திரும்பி அவ்வாளை இறுக்கமாக பிடித்து நெஞ்சை நிமிர்த்து கொண்டு நின்று ” இளமாறா, என்ன விளையாட்டு இது? ” என்று கம்பிரமாக கேட்டாள் முல்லை.

அனைவரும் அதிர்ந்து பார்க்க ஆசன் மட்டும் சிரித்து கொண்டே முல்லை முன் நின்றார்.

கீர்த்தி ☘️

 

 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்