Loading

குமரி – 3

இலை தீப்பற்றி எரிந்ததை வினோதமாக பார்த்தனர். கருணாகரன் அதிர்ந்து விட்டான். அந்நிலையிலும் “உன்னை சும்மா விட மாட்டேன். வந்து கவனிச்சுக்கிறேன் ” என்று கத்திக் கொண்டே சென்றான்.

அக்காலனியில் உள்ள சிலர் இவளை  தூற்றினர். சிலர் போற்றினர். ஏனென்றால். கருணாகரனைப் பற்றி சிலருக்கு தெரியும். இருந்தும் இது அதிகம் என்று மனதினில் நினைத்து கொண்டனர்.

அனைவரும் அவரவருக்குள் பேசுவதை பொறுக்க மாட்டாமல் நாச்சியார் தான் அவளை இழுத்து கொண்டு  அவர் வீட்டிற்குள் சென்று விட்டார். பின்னாலேயே, சென்மொழியும் அனைவரையும் முறைத்து பார்த்து கொண்டே சென்று விட்டாள்.

உள்ளே  நுழைந்தவுடன் நாச்சியார் முல்லையை வெளுத்து வாங்கி விட்டார். ” ஏன் உனக்கு இவ்வளவு குரோதம். அவர் உனக்கு நல்லது தான செஞ்சாரு. உங்க அப்பனும் விட்டுட்டு போய்ட்டான், உங்க அண்ணன்காரனும் பொண்டாட்டி முக்கியம்னு போய்ட்டான். இரண்டு பொம்பள பிள்ளையை வச்சுக்கிட்டு நான் நடுத்தெருவுல தான் நிக்கனும். இந்த வீடும் இல்லைனா நாம எங்க போறது. அவன் வந்து என்ன சொல்ல போறானோ ? உங்களை எப்படி கரை சேர்ப்பேன்? ஹய்யோ! ஹய்யோ!” என்று கூறி தலையில் அடித்து கொண்டார்.

” அம்மா  , நிஜமாவே நான் உதவி செய்ய தான் போனேன்.என்னை நம்புங்க !” என்று அழுது கொண்டே புரிய வைக்க முயன்றாள்.

“அம்மா, அவள் சொல்லுறதையும் கேளுங்களேன் ! அவள் ஏன் பண்ணப் போறா ? அவளை நம்ப மாட்டீங்களா ? ” என்று சென்மொழியும் நாச்சியாரை புரிய வைக்க முயன்றாள்.

“ஆமாடி, நம்பாம இருக்கே . எப்போ பாரு அந்தாளை குறை சொல்லிக்கிட்டே இருப்பீங்க. அதுக்கும் மேல என் கண்ணாலயே பார்த்தேன் தீ பிடிச்சு எரிஞ்சதா ? இதுக்கு மேல என்ன வேணும்? “என்று நாச்சியார் கூறிக் கொண்டே விளக்கமாற்றால் விளாசி விட்டார்.

ஒரு வழியாக அவ்வீட்டில் அமைதி குடிபுகுந்தது. முல்லையின் தேம்பல் சத்தம் மட்டுமே கேட்டது. நாச்சியாருக்கு புரிந்ததாலா  இல்லை அவருக்கு சோர்வு ஏற்பட்டதாலா என்று தெரியவில்லை. அது கடவுளுக்கே வெளிச்சம்.

அப்படிப்பட்ட கடவுளுக்கே பொறுக்கவில்லை போல, மதியம் மூன்று மணியளவில் தன் அம்மா வீட்டில் உண்டு மகிழ்ந்து வந்த மஞ்சுளாவிற்கு இவ்விஷயங்கள் காதில் விழுந்து விட்டது.
காலனி அல்லவா.

இவளுக்காவே சொல்வதற்கு வீட்டு வேலைக் கூட செய்யாமல்  வாசலில்  காத்திருந்த எதிர் வீட்டு அம்புஜம் ” ஏன்டி மா , எங்க போய்க்கிட்டு வர? “என்று பேச்சை வளர்த்தார்.

“ஏன் மாமி, புதுசா கேட்கிறீங்க? அம்மா வீட்டுக்கு தான்! என்ன விஷயம் தெரிந்தது? பக்கத்து வீட்டு மாலா விஷயமா இல்லை மேல் வீட்டு கோகிலாவா? “என்று கேட்டுக்கொண்டே அம்புஜம் வீட்டு வாசலில் சிரித்து கொண்டே அமர்ந்தாள் புரளி கேட்பதற்காக.

அம்புஜம் மாமி சிரித்துக் கொண்டே “நீ ஏண்டி மா, பக்கத்து வீட்டுக்கெல்லாம் போற? உன் வீட்டிலேயே பெரிய கதை தான் ஒடுது!” என்று நக்கலாக கூறினார்.

” என்ன சொல்லுறீங்க ? ” என்று கேட்ட மஞ்சுளாவிற்கு முகம் கறுத்து விட்டது.

“ஹாங்… , நீ இனிமே பக்கத்து வீட்டு கதையெல்லாம் கேட்க முடியாது. வேற வீடு பார்க்கணும்னு சொல்லுறேன் ” என்று அம்புஜம் கூறியவுடன் நெஞ்சில் கை வைத்து விட்டாள் மஞ்சுளா.

பின்பு, காலையில் நடந்ததை விலாவாரியாக கூறியதன் பயனாக மஞ்சுளா நேரடியாக மாமியாரின் வீட்டின் முன் கத்த ஆரம்பித்தாள்.

தன் வேலை முடிந்தது என்பது போல் அம்புஜம் சுற்றி முற்றி பார்த்து விட்டு வீட்டிலிருந்து கொய்யா பழம் கொண்டு வந்து கடித்துக் கொண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

மஞ்சுளா கத்தியவுடன் நாச்சியாருக்கு மீண்டும்  கோவம் வந்து முடிந்த மட்டும் முல்லையை அடித்து ” இவ வேற என்ன சொல்ல போறாளோ தெரியலையே ? ” என்று கூறிக்கொண்டே கதவைத் திறந்தாள்.

அம்மாவின் செயல்கள்  தனக்கு கோபம் தந்தாலும் தன் அக்காவே தனக்கு முதல் என்று அவளின் அருகில் அமர்ந்து முல்லையை அணைத்து ஆறுதல் படுத்தினாள்.

கதவை வேகமாக தட்டிய மஞ்சுளா, நாச்சியார் திறந்த வேகத்தில் நாச்சியாரின் முகத்தில் அடித்து விட்டாள் மஞ்சுளா. அம்புஜம் கத்தியே அனைவரையும் வரவழைத்து விட்டார். இதை கண்ட முல்லையும், சென்மொழியும் பதறிக் கொண்டு ஓடிவந்து விழப்போன தன் அன்னையை பிடித்தனர்.

இதற்கு மேல் முடியாது என்று சென்மொழி பொங்கி விட்டாள். “ஏன் இப்படி செய்றீங்க ? எதுக்குங்க கத்துறீங்க ? ” என்று பல்லைக் கடித்து கொண்டு முயன்ற மட்டும் அமைதியாக கேட்டாள்.

தன் முன் என்றும் பேசாதவள் இன்று அதுவும் அனைவர் முன்பும் கேள்வி கேட்டது மஞ்சுளாவிற்கு கோபத்தை கிளப்பியது. அதனால், “இந்தா பிள்ளை பூச்சிலாம் பேச கத்துகிடுச்சு. ஏன் கத்துறேனா?என்னமோ உங்கப்பன்  சொத்தா சேத்து வச்சிருக்கிற மாறியும்,  சொந்த வீடு , வாசல், தோப்பு, துறவுன்னு இருக்கிற மாறியும் நடந்துக்கிட்டா என்ன அர்த்தம்? இப்படி ஓனரோடு   பஞ்சாயத்து பண்ணிருக்கீங்க? “என்று படபடவென பொறிந்தாள்.

“நாங்க பஞ்சாயத்து பண்ணத நீங்க பார்த்திங்களா?”என்று பொறுமையாக கையை கட்டிக் கொண்டு கேட்டாள். பின்னருந்து முல்லை அவளை இழுத்து கொண்டிருந்தாள். அதைப் பொருட்படுத்தாமல் சென்மொழி பேசிக் கொண்டே இருந்தாள்.

“ஆமா, இந்த கருமத்த நேரா வேறே பாக்கணுமாக்கும் “என்று  குமடை தோளில் இடித்துக் கொண்டே சொன்னாள்.

“ஏய், இந்தா நீ கேட்கிறதுக்கு நான் ஏன் பதில் சொல்லணும்?” என்று கை நீட்டி எச்சரித்தவள், ” பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாத ஜென்மம் ? ” என்று முணுமுணுத்தாள் மஞ்சுளா.

” இந்த ஜென்மத்துக்கு மரியாதை பத்திலாம் தெரியுமா?  மாமியாரும்  பெரியவங்க தானு இந்த ஜென்மத்துக்கு தெரியலயே ? “என்று மஞ்சுளாவை பார்த்து கையை நீட்டிக் கொண்டே பேசினாள் சென்மொழி.

நீட்டிய கையை பிடித்து மடிக்கினார் மஞ்சுளா.வலியில் துடித்து விட்டாள் சென்மொழி. “ஏன்ம்மா, உனக்கு என்ன தான் மா வேணும்? “என்று தன் மகள் வலியில் கத்துவதை தாங்காமல் நாச்சியார் கேட்டார்.

“என்ன ஆளாளுக்கு  சவுண்ட் ஏத்துறீங்க? இப்படி ஓனர் கூட பிரச்சனை செய்தால் உங்களை வெளியே துரத்துறதும் இல்லாம எங்களையும் சேத்துல துரத்துவான். நீங்க பண்ணதுக்கு தெருவுல நிக்கிறது என்ன ஜெயிலையே போடலாம்? நான் ஏன் போகணும்? “மஞ்சளா அவள் இஷ்டத்திற்கு கத்திக் கொண்டிருந்தாள்.

“ஏன்ம்மா இப்படி பேசுற? ஏதோ தெரியாம நடந்து போச்சு! நான் அவர்ட்ட பேசுறேன் ” என்று கையெடுத்து கும்பிட்டும் மறுபடியும் கத்திக் கொண்டே இருந்தாள்.

அவள் முன் வந்து நின்று “நான் பார்த்துக்கிறேன். உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. இப்போ கொஞ்சம் சத்தம் போடாம உங்க வீட்டுக்கு போறீங்களா ? “என்று கடுமையாக கூறிய முல்லையைக் கண்டு பேச்சு மூச்சற்று போனாள்.

அவள் கண்கள் கிலி உண்டு பண்ணியது மஞ்சுளாவிற்கு.”என்ன இவள் கண்ணு ஏதோ பண்ணுது ? இவளே செய்யுறாளோ? இருக்கும் இருக்கும் ? கண்ண உருட்டி பயப்பட வைக்கிறீங்களோ ? பார்த்துக்குறேன் ? “என்று மனதிற்குள்ளேயே நினைத்தவள் திட்டம் திட்டி விட்டாள்.

முல்லை பேச பேச விதண்டாவாதமாகவே மஞ்சுளா  பேச, அதற்கு பதில் பேச்சு சென்மொழி பேச அக்காலனியே கலவரம் ஆனது.

இறுதிகட்டத்தில் செழியன் உள்ளே நுழையும் நேரம் மஞ்சுளா சேலையை இடுப்பில் சொருகி விட்டு விளக்கமாறை எடுத்து  இரு நாத்தானரையும், மாமியாரையும் சாற்ற முற்பட்டாள்.

ஆனால், முல்லை சுதாரித்து மஞ்சுளாவின் கையில் இருக்கும் விளக்கமாறை வாங்க முற்பட்டாள்.

ஆனால், தன்னை குறுக்கி விளக்கமாறை பாதுகாக்க ,எங்கிருந்து வந்தது தைரியம் என்று தெரியவில்லை சாந்தமான முல்லைக்கு. குனிந்த மஞ்சுளாவின் முதுகில் சுழண்டு வலது புறத்திற்கு வந்து நிமிர  விடாமல் இரு கையையும் இவள் ஒரு கையால் பிடித்து அவளின் கழுத்தை பிடித்து வளைத்து அவள் வலது கையை பின்பக்கம் வளைத்து விளக்கமாறை வாங்கி வாளை தாங்குவது போல் தாங்கி நின்றாள்.

அதை மஞ்சுளா எழும் முன் சென்மொழியிடம் வீச, சென்மொழி கத்தி சண்டையில் கை தேர்ந்தவள் போல் சுழற்றி விளக்கமாறை வாங்கினாள்.
இதை கண்டு அந்த இரு ஆன்மாவும் உள்ளம் மகிழ்ந்தது.

இந்நிகழ்வை அனைவரும் அதிர்ச்சியாகி பார்க்க, நாச்சியாருக்கு உலகமே நின்றது போல் இருந்தது. உள்ளே நுழைந்த செழியன் யாரும் அறியும் முன் வெளியேறி விட்டான்.

அம்புஜம் வாயில் வைத்த கொய்யாப்பழம் விழுங்கவும் முடியாமல், துப்பவும் தோன்றாமல் அதிசயமாக இருவரையும் பார்த்தாள்.

மனதினில் நினைப்பதாக எண்ணி “ஆத்தாடி, இந்த சுத்து சுத்துறாளுங்க. பேசுனவளுக்கே இந்த கதியா? அப்போ நான் தான் சொன்னேனு தெரிஞ்சா ? “என்று வெளியில் பேசினார்.

“ஆங்ங்….. செத்திடுவ!” என்று கூறிய வேலனை அம்புஜம் முறைத்தார்.

அம்புஜம்”டேய்,உனக்கு இங்கு என்ன வேலை? “

வேலன் “அண்ணன், டிரஸ் எடுத்துட்டு வர சொன்னுச்சு “

அம்புஜம் ” அந்த வேலையை மட்டும் பாரு. போ “

வேலன் போகாமல் அவர்கள் திண்டில் நன்றாக சாய்ந்து அம்புஜத்தை கிட்ட அழைத்து இரகசியம் பேசுவது போல் “அது எப்படி நீ மட்டும் ஷோ பாக்கலாம். நானும் பார்ப்பேன். அப்புறம் இன்னொரு விஷயம் ” என்று சொல்ல,

யார் வீட்டு கதையை சொல்ல போகிறான் என்று நினைத்து பல்லை இளித்துக் கொண்டு  ஒரு காதை சண்டையிலும், இன்னொரு காதை இவனிடம் திருப்பினாள்.

திருந்தாத ஜென்மம் என்று மனதில் நினைத்து “சாது மிரண்டா காடு தாங்காதுனு ஒரு பழமொழி இருக்குக்கா. காடே தாங்காதுனா இந்த காலனி தாங்குமா? இல்ல இந்த குட்டி வீடு தாங்குமா? ” என்று அம்புஜம் வீட்டை காண்பித்தான் .

“என்னது? “

“இல்லைக்கா , ஒன்னே தாங்காது இப்போ இரண்டு பேருல அதான் சொன்னேன் ” என்று சிரித்துக் கொண்டே கூற

“அதைப் போய் உங்க அண்ணட்ட சொல்லு முதல “என்று கூறி பட்டென்று  கதவை அறைந்து சாத்தி விட்டு உள்ளே சென்றாள்.

“சொல்ல தான் போறேன் அந்தாள்ட்ட ! அந்த ஆளும் நீயும் அதுக இரண்டுட்டையும் அடி வாங்குனா தான் என் ஆத்மா சாந்தி அடையும் “முணுமுணுத்து  கொண்டே போய் நின்றது முல்லையின் அருகில்.

” இந்தா பாரு முல்லை, விடு பிரச்சனையை  . அம்மாவை கூட்டிக்கிட்டு  உள்ளே போ.” என்று முல்லையிடம் கூறி விட்டு, திரும்பி “எல்லாரும் அவங்க அவங்க வேலையை பாருங்க. போங்க போங்க. அடுத்த வீட்டுல பிரச்சனை வந்திடக் கூடாது. வந்து நின்றது வேடிக்கை பார்க்க ,போங்க முதல” என்று கூறி அனைவரையும் கிளப்பி விட்டான்.

வேலனைப் பார்த்து ஆண் ஆன்மா சிரிக்க யாரும் அறியாமல் வேலனும் சிரித்து விட்டு சென்றான்.

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்