Loading

குமரி – 8

“இளமாறா என்ன விளையாட்டு இது ? ” என்று முல்லை கோபத்துடன் கூற, சென்மொழி அதிர்ந்து நின்றாள். ஆசன் சிரித்துக் கொண்டே அருகில் வந்து “என் பேரன் பேருலாம் தெரிஞ்சு வச்சுருக்கீங்க. பரவாயில்லையே. வந்ததுக்குள்ள பழகிட்டிங்களே “என்று கூற,

ஒரு சிறுவனும் ஒடி வந்து முல்லையின் கையைப் பிடித்து “ஸாரி அக்கா, நான் விளையாட்டுக்கு தான் பண்ணேன் ” என்று சென்மொழியை பார்த்துக்  கூறினான்.அவளும் சரி என்று தலையாட்டி விட்டு அவ்விடத்தை விட்டு இருவரும் நகர்ந்தனர். ஆசன் அப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருந்தார்.

அனைவரும் விசித்திரமாக பார்ப்பதை உணர்ந்து நாச்சியார் காலையில் பேசியவரிடம் அருகில் என்ன என்று விசாரித்தார்.

” அம்மா, என் பெயர் ஆடலரசி அரசினு கூப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே கூப்பிடுங்க. பாரி ஐயானு சொல்றாங்க இல்லையா அவரோட மனைவி நானு . என் கணவரோட அப்பா தான் ஆசன். அவரோட பெயரைத் தான் என் மகனுக்கு வச்சுருக்காங்க” என்று கூறி தனது மகனை அழைத்து பெயரைக் கூறச் சொன்னார்.

அவனும் “இளமாற அமரன் “என்று கூறி விட்டு ஓடி விட்டான். அரசி மறுபடியும் ” அவனை அமரனு தான் கூப்பிடுவோம் . யாரும் ஆசன் பேரை சொல்ல மாட்டோம். அதே மாதிரி சிஷ்யன் இருக்கான் இல்லையா அவன் என் தம்பி செம்பியா . என்னைத் தவிர யாரும் பேரு சொல்ல மாட்டாங்க”

நாச்சியார் யோசனையோடு பார்க்க “என் அம்மையும் அப்பனும் சின்ன வயசுலையே தவறிட்டாங்க. அதனால, அவன வளத்தது நான் தான். ” என்று புன்னகை முகமாக கூறினார் அரசி.

” இங்க வாள் வித்தைலாம் சொல்லி கொடுக்குறாங்க?”நாச்சியார் யோசனையோடு கேட்டார்.

அரசி “அது எங்க ஆசனுக்கு எப்படி மருத்துவம் பூ மூலமா தெரியுமோ அதே மாதிரி அவர் அண்ணனுக்கு வாள் வித்தை அத்துப்படி. அதுனால இங்க உள்ள எல்லாருக்குமே அடிப்படை தெரிஞ்சு இருக்கும் “

நாச்சியார் “இது எல்லாம் அவங்களுக்கு வந்த ஞானுதயமா?  ”  அண்ணனும் தம்பியும் இவ்விடத்தை ஆளுகின்றனர் என்று புரிந்து கொண்டு  நக்கலாக
கேட்டார்.

அரசி அரை நிமிடத்திற்கு  மேல் சிரித்து கொண்டே இருந்தாள்.”தாயி, இவங்க இரண்டு பேரும் தலைவருலாம் கிடையாது. எங்க குலத்துக்கு தலைவி தான் .அதோ அங்க ஒரு ஆத்தா விவசாயம் பண்ணுதுல அதோட பொண்ணு தான் எங்க தலைவி. இவங்க இரண்டு பேரும் குறிச்சி குமரிக் கிட்ட விவசாயமும், சென்னி அம்மைக் கிட்ட வாள் வித்தையும் நேரடியா கத்துகிட்டவங்க “

நாச்சியார் இவர்கள் இருவரையும் விட்டு விட்டு அப்பெண்ணிடம் தாவினார் “அப்போ அந்த அம்மா எங்க ? அவங்க வேலைலாம் செய்ய மாட்டாங்களா?”

“தாயி, நீ சொல்ற மாதிரி பழக்க வழக்கம் எல்லாம் உங்க டவுன்காராங்க பழக்கம். ஏன் இந்த மாதிரி எஸ்டேட்லை கூட பார்த்திருக்கேன். இங்க தலைவினாலும் எல்லா வேலையும் செய்யனும். அவள் தலைவியா இருந்தால், அவுக வம்சம் மட்டும் தான் தலைவியா இருக்கணும்னு கிடையாது. பொம்பள பிள்ளை பிறந்தவுடனே அவளை குறிச்சி அம்மைக் கிட்ட தூக்கிட்டு போவோம். அவளே ஆசிர்வதிப்பா. அப்படி அவள் அவ பிள்ளையா நினைச்சா அதுவாவே சிரிக்கும். அப்படி அந்த பிள்ளைக்கு யோகம் கிடைச்சா எங்க குறிச்சி குமரி மாதிரி கடைசி வரைக்கும் குமரியாவே இருப்பா . ஒருவேளை அந்த பிள்ளைக்கு கல்யாணம் குழந்தைனு ஆசைப்பட்ட, அவங்க உறவுகள் எல்லாம் போய் நிக்கணும். பூசாரி ஐயா சாமி ஆடி ஒருத்தவங்க நெத்தில மட்டும் சந்தனத்தை பூசுவார். அவ தான் எங்களுக்கு தலைவி. வருஷ வருஷ எங்களுக்கு மாறிக்கிட்டே இருக்கும் “என்று மூச்சு விடாமல் நீண்ட விளக்கவுரை கொடுத்தார்.

“ஓஹோ …….பரவாயில்லையே .சரி சரி எஸ்டேட் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன். என் மகளுக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும். “என்று நாச்சியார் மெதுவாக கேட்டார்.

“எஸ்டேட் முதலாளி ரொம்ப நல்லவர் அவர் பேரு அகவன். அவரோட மனைவியோட சொத்து தான் இந்த எஸ்டேட். நாங்க கேரளா வனப் பகுதியில் இருந்து இங்க வந்ததிலிருந்து எங்களுக்கு எந்த குடைச்சலும் கொடுத்தது இல்லனு அப்போவே எங்க ஆத்தா சொல்லும். அகவன் அய்யா முன்னாடி யாரும் இங்க வந்து கவனிச்சது இல்லை. இப்போ தான் பத்து வருஷமா இந்த எஸ்டேட் இயங்குது “அரசி சலிப்புடன் கூறினாள்.

அச்சலிப்பை கவனித்த நாச்சியார்” அதை ஏன் ஒரு மாதிரி சொல்லுறீங்க ? “

“அகவன் ஐயா மூணு வருஷத்துக்கு முன்னாடி தவறிட்டாரு. மலையிலிருந்து விழுந்ததா சொல்லுறாங்க. இன்னும் வரைக்கும் உடம்பு கிடைக்கல. எங்க ஆளுங்களும் போய் தேடிப் பாத்துட்டாங்க “அரசியின் கண்கள் லேசாக பனித்தது.

நாச்சியார்”அப்போ இப்போ யாரு பாத்துகிறது ? “

அரசி” இப்போ இங்க இருக்கிறது இந்திராணி அம்மாவும் அவங்க பையன் ரவீந்தர் அய்யாவும் தான். அப்போ அப்போ அவங்களோட இன்னொரு பையன் ராகவேந்தர் அய்யாவும் வருவாரு.”

நாச்சியார்”அப்போ நாளைக்கு நாங்க யாரைப் பாக்கணும்? “

அரசி “நாளைக்கு உங்க மூணு பேரையும் இந்திராணி அம்மாக்கிட்ட விட சொல்றேன் “
அங்கு வந்தமர்ந்து இவர்களை சம்பாஷனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர் முல்லையும், சென்மொழியும். முல்லை தான் “நாங்க மூணு பேரா போகணுமா? எனக்கு தான வேலை. இவங்க இரண்டு பேரும் எதுக்கு” என்று கேட்டாள்.

அரசி “அதில்லை தாயி, இந்திராணி அம்மா அங்க வேலைப் பார்கிறவங்களுக்கு அவங்களே குடில் கொடுப்பாங்க. அந்த குடிலாம் ஓலையால இருக்காது. சகல வசதியோடு இருக்கிற குடில் தான்”

சென்மொழி “ஏன்? “

” இது வனப்பகுதி தாயி. இங்க எங்கள மாறி ஆளுங்களுக்கு தான் காட்டுல வாழ முடியும். வன விலங்கு வந்தாலும் சமாளிச்சுக்குவோம். நீங்க எஸ்டேட்க்கு உள்ளேயே இருந்தால் உங்களுக்கு தான் பாதுகாப்பு.சுத்தி வேலி போட்டு இருப்பாங்க. அதனால் நீங்க பாதுகாப்பா இருக்கலாம். இதலாம் அகவன் அய்யாவோட ஏற்பாடு தான் “அரசி முடிந்தளவு அனைத்தையும் புரிய வைத்தாள்.

“அப்போ நாங்க இங்க வந்து போக முடியாதா ? “என்று சென்மொழி கேட்க, அரசி தான் அவளின் அறிவுத் திறமையைக் கண்டு மெச்சுதலாக பார்த்தாள்.

“ஏன் , அது என்ன ஜெயிலா……வேற எங்கையும் போக முடியாம இருக்கிறதுக்கு ? ” என்று நாச்சியார் கூறி சென்மொழியின் தலையில் கொட்டினார்.

“ரொம்ப அறிவாளி தாயி நீங்க. சரியா ஊகிச்சிருக்கீங்க. அங்க போனா வெளிய வரமுடியாது .அவங்க எல்லா பாதுகாப்பும் கொடுப்பாங்க. வேலையை விட்டு போறவங்க மட்டும் தான் அடுத்து வெளியில் வருவாங்க. ஆனால், நான் சின்ன பிள்ளையா இருந்து பாக்குறேன். யாரும் வேலையை விட்டு போனதில்லை. அந்தளவுக்கு சகல வசதியும் இருக்கும்.” என்று கூறிய அரசியை மூவரும் வித்தியாசமாக பார்த்தனர்.

ஆனால், அதை கவனியாமல் அரசி “சரிங்க தாயிங்களா! நேரம் ஆயிடுச்சு. நீங்க உங்க குடிலுக்கு போங்க. இரவு சாப்பாடு கொடுத்து விடுறேன். சாப்பிட்டு சீக்கிரமே தூங்குங்க. காலையில எஸ்டேட்டுக்கு போகணும் ” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.

மூவரும் அவர் குடிலுக்கு செல்ல, முல்லை மட்டும் திரும்பி செம்பியாவை பார்த்து விட்டு சென்றாள். செம்பியா கவனிக்கவில்லை ஆனால் ஆசன் கவனித்து விட்டார். இதையெல்லாம் ஆன்மாக்கள் இரண்டும் பார்த்து விட்டு குமரி கோவிலுக்கு சென்று இரவு பூஜை செய்யத் தொடங்கினர்.

இரவு உணவை உண்டு விட்டு அனைவரும் உறங்கி விட்டனர். முல்லை மட்டும் வெளியில் வந்தாள். யாரேனும் உள்ளனரா என்று ஆராய்ந்து விட்டு , ஆசன் குடிலையும் எட்டி பார்த்தாள். அவரும் உறங்குவதை உறுதிப் படுத்தி விட்டு நீரோடையின் அருகே உள்ள ஒரு கல்லில் அமர்ந்து தியானம் செய்தாள்.

ஆன்மாக்களும் தியானம் செய்து கொண்டிருந்தது. மூவருமாக அத்தியானத்தை முடித்தனர். அதன் பின், அக்கோயிலில் ஒளி ஒன்று கிளம்பியது. இதை அந்த நீரோடையின் கரையில் இருந்து கொண்டே உள்ளம் மகிழ்ந்தாள்.

ஆனால், அதே நேரத்தில் முல்லை தியானம் செய்ததையும், கோவிலில் ஒளி வந்ததையும் இரு உருவங்கள் வெவ்வேறு இடத்திலிருந்து கண்டு அரண்டனர்.

அதிகாலை பொழுதினில் குயிலின் சத்தமும், நீரின் சலசலப்பும், சேவலின் கொக்கரிப்பும், மரங்கள் ஒவ்வொன்றும் உரசும் சத்தமும், விலங்குகளின் சுவடுகள் சத்தமும் மனதிற்கு இதமும், பயமும் தந்தது. அதை மனதிற்கும், உடலிற்கும் ஆற்றலை தருகின்றது போல் இருந்தது சென்மொழி.

அவள் எழுந்து வெளியில் வந்த பொழுது இவ்வொலிகளும், சூரியன் உதித்து அதன் ஒளி வீச்சுகள் நீரில் கலக்கும் பொழுது நீர் மின்னியதும் பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

அப்பொழுது செம்பியா எழுந்து தியானம் செய்து வாள் வித்தை பழகிக் கொண்டிருந்தான். அதை விட செம்பியா ஆசனுடன் சண்டையிடுவது தான் அதிசயமாக இருந்தது சென்மொழிக்கு. இவ்வளவு வயதிலும் எப்படி அவரால் முடிகின்றது. ஒரு நிமிடம் தான் இந்த எண்ணம்.

ஆனால், அடுத்த நிமிடமே அவள் மேல் தென்றல் வீச ,அவளே அறியாமல் ஒரு இருக்கையில் வஜ்ராசனாவில் அமர்ந்து கைகள் இரண்டையும் சின் முத்திரையில் வைத்து இவர்கள் சண்டையிடுவதை வேடிக்கைப் பார்த்தாள்.

ஒரு நொடி தான் செம்பியா சென்மொழியை திரும்பி பார்த்தான். அதிர்ந்து விட்டு கவனத்தை விட்டு விட்டான். ஆசன் ஜெயித்து விட்டார். அதைக் கண்ட சென்மொழி “இன்னும் கவனம் வேண்டும் செம்பியா. இளமாறா நீ ஜெயித்ததாக கர்வம் கொள்ளாதே . சிறு பிள்ளைக்கு வாள் வீச்சை சொல்லிக் கொடுப்பதற்கு முன் கவனச் சிதறல் இருக்கக் கூடாது என்பதை சொல்லிக் கொடு . நல்ல ஆசானாக நீ தோற்று விடாதே. புரிகிறதா ? ” என்று கூறி வாளை கையில் வாங்கினாள்.

தனது இருக்கையிலிருந்து எழுந்து வாளை கையில் இறுக்கி பிடித்து வலது காலை மடக்கி வாளை நெஞ்சில் வைத்து ஆகாயத்தை பார்த்து வணக்கத்தை வைத்து, பின்பு அதை நிலத்தில் ஊன்றி நிலத்திற்கு வணக்கம் செலுத்தி எழுந்து வாளை சுழற்றி செம்பியா முன்பு போட்டியிட நின்றாள்.

ஆசன் புன்னகைத்து விட்டு அவரது இருக்கையில் அமர்ந்து விட்டார். பின்பு, இருவருமாக போட்டியிட, இறுதியில் செம்பியா கவனக் குறைவில் தோற்று விட்டான். அதை கூறி , முடிந்த அளவு நிறை குறைகளை கற்றுக் கொடுத்தாள்.

அதனை ஆர்வமாக கேட்டுக் கொண்டு லாவகமாக சுழற்றி கற்றுக் கொண்டிருந்தான். சென்மொழி மறுபடியும் தனது இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

நேரம் போனது கூட தெரியாமல் செம்பியா பயிற்சி மேற்கொள்ள, “செம்பியா எவ்வளவு நேரம் இங்கேயே இருப்ப? சாப்பிட வா!”அரசி தான் சத்தம் போட்டாள்.

அதன் பின் நிதானத்திற்கு வந்து சுற்றி சுற்றி தேடினான். ஆசனையும் காணவில்லை, சென்மொழியும் இல்லை. அவனுக்கே குழப்பமாக இருந்தது. அவன் யோசிக்கும் பொழுது சென்மொழி நீரோடையில் குளித்து விட்டு வந்து கொண்டிருந்தாள். அவளிடம் கேட்கலாமா வேண்டாமா என்கிற தயக்கத்தோடு நிற்க, சென்மொழியே அருகில் வந்து யாரும் அறியா நேரம் அவனின் தோளைத் தட்டி “நீ அப்படியே இளந்தேவனை போல் உள்ளாய். நன்றாக கற்று சீரும் சிறப்புடன் வாழ்வாய் ” என்று ஆசிர்வதித்து  சென்று விட்டாள். செம்பியா கண்கள் பனித்தது.

அருகில் வந்த ஆசன் அவனின் தோளைத் தொட்டு அவனை அமைதிப்படுத்தினார். இருந்தும் அவன் “அய்யா, பாக்கியம் பெற்று விட்டேன். உங்கள் அண்ணன் இளந்தேவன் அய்யா போலவே என்னை அவர் பார்த்தார்.வாழ்க்கையே ஜெயித்தது போல் உள்ளது எனக்கு ” என்று கூறி அவரின் காலை தொட்டு வணங்கி விட்டு அரசி எவ்வளவு கத்தியும் காதில் வாங்காமல் கோயிலுக்கு சென்று விட்டான்.

அதன் பின இவர்கள் மூவரும் காலை சிற்றுண்டி முடித்து விட்டு எஸ்டேட் செல்வதற்கு தயாராக இருந்தனர்.

அப்பொழுது சென்மொழி அடம்பிடித்து கொண்டிருந்தாள். நாச்சியார் அடிப்பதற்கு தயாராக நின்று கொண்டிருந்தார். முல்லை நாச்சியாருக்கும் சென்மொழிக்கும் நடுவில் நின்று செய்வதறியாது நின்று கொண்டிருந்தாள்.

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்