Loading

 

வானவில் 1

“என்னது பொண்ணைக் காணோமா?” என்று ஒருவர் சத்தமாக கூற, அது ஒவ்வொருவரின் வாய்க்கும் காதுக்கும் இடம்மாறி வருவதற்குள், ‘பொண்ணு யாரையோ லவ் பண்ணுச்சாம். அவங்க குடும்பத்துல ஒத்துக்காம அவங்க பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ண ஃபோர்ஸ் பண்ணதால, அது லவ் பண்ண பையனோட ஓடிப்போயிடுச்சாம்!’ என்ற கதையே உருவாகி இருந்தது.

அவற்றை எல்லாம் எவ்வித சுவாரசியமும் இல்லாமல் கேட்டபடி ‘தேமே’ என்று நின்று கொண்டிருந்தாள் ஆராதனா.

வழக்கம்போல, இப்படிப்பட்ட தருணத்தில் சொல்லப்படும், ‘மணமேடை வரைக்கும் வந்த கல்யாணம் நின்னு போகலாமா? பொண்ணுக்கு தங்கச்சி இருந்தா, கல்யாணத்தை முடிச்சுட வேண்டியது தான!’ என்ற வார்த்தைகளுக்காவே காத்திருந்ததை போல, அதுவரை கண்ணீர் வடிய சோகத்துடன் இருந்த மொத்த குடும்பமும் அவளை திரும்பி பார்த்தது.

அவர்களின் பார்வை சட்டென்று விளங்கிவிட, அதில் சுதாரித்தவள், “எனக்கும் இந்த குடும்பத்துக்கும் சம்பந்தமே இல்ல. இவங்க யாருன்னே எனக்கு தெரியாது. நான் சும்மா ஓசில விருந்து சாப்பிட வந்தேனாக்கும்.” என்று அங்கிருந்து நகர முற்பட, மொத்த குடும்பமும் அவளை ரவுண்டு கட்டி நின்றது.

அதன் விளைவு, அடுத்த பதினைந்து நிமிடங்களில் ரெடிமேட் மணப்பெண்ணாக மேடையை அலங்கரித்தாள் ஆராதனா.

‘குடும்பமா டா நீங்க எல்லாம்!’ என்ற பார்வையை தாங்கி தன்னை சுற்றி தப்பிக்க முடியாதவாறு நின்றிருந்தவர்களை கண்டவளிற்கு, என்றோ தன் தோழியிடம் பேசியது நினைவிற்கு வந்தது.

“நேத்து ஒரு கதை படிச்சேன் டி காயு. கல்யாணத்தன்னைக்கு பொண்ணு ஓடி போயிடுவாளாம். உடனே, பொண்ணோட தங்கச்சியை பிடிச்சு அந்த மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்களாம். சுத்த ஹம்பக் ஐடியா! அந்த பொண்ணோட மனசை பத்தியெல்லாம் யோசிக்கவே மாட்டாங்களா? ச்சேச்சே, இப்படியெல்லாம் நிஜத்துல நடந்துட்டா இருக்கு? என்னால அதெல்லாம் யோசிச்சே பார்க்க முடியல டி.”

“ஆஹான், பார்த்து டி உங்க வீட்டுல இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்து, இந்த மாதிரி சூழ்நிலைல நீயே மாட்டிக்கப்போற!”

“ச்சி, என் குடும்பம் எல்லாம் அப்படி இல்ல பா. அவங்களுக்கு என் விருப்பம் தான் முக்கியம்!”

 

அன்று தான் அருமை பெருமையாய் பேசிய குடும்பத்தை ஒருமுறை சுற்றி பார்த்தவள், சலிப்புடன் தலையசைத்துக் கொண்டாள்.

‘இதுக்கெல்லாம் காரணம் நீதான் டி காயு. அன்னைக்கு உன் நாற வாயை வச்சுட்டு சும்மா இல்லாம, சாபம் கொடுத்த உன்னை சும்மா விடமாட்டேன் டி’ என்று மனதிற்குள் கறுவியவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான், இனி அவளவன், அவன் ஆதவன்.

*****

காலத்தின் கட்டாயத்தால் சிதைந்த பல கூட்டு குடும்பங்களின் மத்தியில் இன்றளவும் சிறிதளவு கூட பிரியாமல் கூட்டு குடும்பமாக சிறப்பாக வாழ்ந்து வரும் குடும்பம் தான் ஆராதனாவின் குடும்பம்.

அதற்காக எப்போதும் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று கைகோர்த்துக் கொண்டு திரிவர் என்பது பொருள் அல்ல.

அதே சமயம், எவ்வளவு சண்டை இருந்தாலும், வெளியில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத பாசமிக்கவர்கள் அவர்கள்.

அந்த குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவர்கள் கண்ணதாசன் – சிவகாமி தம்பதியர் ஆவர். கூட்டு குடும்பமாக இருப்பதற்கென்றே பிள்ளைகளை பெற்றவர்கள் போல, இவர்களுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் என்று மொத்தம் ஐந்து வாரிசுகள்.

எங்கு மகள்களை தங்கள் வீட்டிலேயே தங்க வைத்தால், வீட்டோடு மாப்பிள்ளை என்று தங்களின் மருமகன்களிற்கு பெயர் வந்துவிடுமோ என்று யோசித்தவர்களாக இரு மகள்களையும் இரண்டு வீதிகள் தள்ளி இருக்கும் ஒரே குடும்பத்தில் கட்டி கொடுத்திருந்தனர்.

பெயரளவில் தான் தனி வீடு, மற்றபடி வாரத்திற்கு மூன்று நாட்கள் இரு மகள்களின் ஜாகையும் அவர்களின் நந்தவனத்தில் தான்.

‘நந்தவனம்’ – பெயருக்கேற்றார் போல அழகும் அன்பும் குவிந்து கிடக்கும் இடம். அந்த வீடு அமைதியாக இருப்பதென்னவோ நள்ளிரவில் தான். மற்றபடி, கலகலவென்றே இருக்கும். உபயம் அந்த நந்தவனத்தை அலங்கரிக்கும் பெண்ணரசிகள்!

சிவகாமியின் ஆரம்பித்து கடைக்குட்டி வர்ஷினி வரை அனைத்து பெண்களும் சற்று வாயாடிகளே! அதற்காக ஆண்கள் வாயே திறப்பதில்லை என்பதில்லை. அவர்களுக்கு போட்டியாக வாயாடன்களும் இருக்கின்றனர்.

முன்னர் கூறியது போல, கண்ணாதாசன் – சிவகாமி தம்பதியருக்கு ஐந்து பிள்ளைகள்.

மூத்தவர் சிவதாசன். அவரின் தர்மபத்தினி வாசுகி. இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும் வெண்ணிலா என்ற மகளும் இருக்கின்றனர். கார்த்திக் அவர்கள் குடும்ப தொழிலை கவனித்துக் கொள்கிறான். அவனிற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தான் மாலினியுடன் திருமணம் முடிந்திருக்கிறது. மாலினி தற்போது பேறு காலத்திற்காக தாய் வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வெண்ணிலா கணினி பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, பெங்களூருவில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

நடுவில் இருப்பவர் ஹரிதாசன். அவரின் மனைவி வானதி. இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும் விக்ரம் என்ற மகனும் உள்ளனர். ஆராதனா கல்லூரி படிப்பை முடித்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி. நம் கதையின் நாயகி என்பது கூடுதல் தகவல்! விக்ரம் தற்போது தான் டீனேஜிலிருந்து வெளிவந்து கல்லூரிக்குள் நுழைந்திருப்பவன்.

இளையவர் வண்ணதாசன், அவரின் மனைவி துர்காதேவி. இவர்களின் ஒரே செல்ல மகள் வர்ஷினி. அந்த வீட்டின் கடைக்குட்டி. தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருப்பவள்.

சிவதாசனுக்கும் ஹரிதாசனுக்கும் இடையில் பிறந்தவர் வைஷ்னவி. இவரின் கணவர் ராம். இவர்களின் திருமணம் தான் நந்தவனத்தில் நடந்த முதல் திருமணம் ஆகும். இவர்களுக்கு பரத் – சரத் என்ற இரட்டையர்கள் உள்ளனர்.

இருவரும் சொல்லி வைத்தது போல அவரவர்களின் வேலையிடத்தில் காதலில் விழ, பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் இருவரின் திருமணங்களும் நிகழ்ந்தன. தங்களின் அன்னை திருமணத்தை போல, இந்த தலைமுறையின் முதல் இரு திருமணங்களும் இவர்களதே.

ஹரிதாசனுக்கும் வண்ணதாசனுக்கும் இடையில் பிறந்தவர் ஊர்வசி. அக்காவின் திருமணத்தின் போது, ராமின் தம்பியான கிருஷ்ணனிற்கு இவரை பிடித்துப் போக, அப்போதே இருவரின் திருமணமும் நிச்சயிக்கப்பட்டு, ஆறு மாதங்களின் நடந்தது. இவர்களுக்கு தருண் என்ற மகனும் தர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.

தருணும் கார்த்திக்கும் ஒரே வயதினர் ஆவர். அதே போல ஆராதனாவும் தர்ஷினியும் ஒரே வயதினர். இருவரும் இணைப்பிரியாத தோழிகள் என்றும் கூறலாம். ஆனால், ஏனோ தருணிற்கு குடும்பத்துடன் அத்தனை பற்றுதல் இல்லை. அவன் ஏதோ தனிக்காட்டு ராஜாவை போல தனித்தே சுற்றி வருபவன். இப்போது கூட திருமணத்திற்கு சம்மதிக்காமல், ஊர்வசியின் உயிரை வாங்கிக் கொண்டிருப்பவன்.

இவர்களே இந்த நந்தவனத்தின் உறுப்பினர்கள். என்னதான் சகோதர சகோதரிகளாக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தினர். அவர்களை போலே அவர்களின் பிள்ளைகளும் இருக்க, அவ்வீட்டில் பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இருக்காது.

அவ்வீட்டினரின் குணநலன்களை கதையின் போக்கில் தெரிந்து கொள்வோம்!

*****

இப்போது திருமண நிகழ்விற்கு மீண்டும் வருவோம்.

தன் கழுத்தில் ஏதோ ஊர்வது போலிருக்க, தன் தோழியை திட்டுவதில் கவனத்தை செலுத்தியிருந்த ஆராதனா சுயத்தை அடைந்து தன்னருகே நிமிர்ந்து பார்க்க, அங்கு கடமையே கண்ணாக, வேறு எங்கும் பார்வையை கூட திருப்பாமல் இறுகிய முகத்துடன் தாலி கட்டிக் கொண்டிருந்தவனை கண்டாள்.

‘போயும் போயும் இந்த சிடுமூஞ்சியா எனக்கு வந்து வாய்க்கணும்! பேரை பாரு ஆதவனாம். க்கும், விட்டா பார்வையாலேயே பொசுக்கிடுவான் போல! ஸாஃப்ட்டா ரொமான்டிக்கா ஒருத்தனை ஹஸ்பண்டா எதிர்பார்த்தது ஒரு தப்பா? இப்படி மிலிட்டரிக்கு ஆள் எடுக்குற மாதிரி விறைப்பா இருக்க ஒருத்தனோட என்னை கோர்த்து விட்டுருக்கியே, இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா பிள்ளையாரப்பா?’ என்று மனதிற்குள் புலம்பினாள் ஆராதனா.

அவளைச் சொல்லி குற்றமில்லை. அவள் அவனை பார்த்த இரு நிகழ்வுகளிலும் அவன் உம்மென்று இருந்ததால், அவள் மனதில் ‘சிடுமூஞ்சி’யாக பதிந்து போனது யாரின் குற்றமோ?

*****

இருவரின் முதல் சந்திப்பு, வெண்ணிலாவின் பெண்பார்க்கும் படலத்தில் நடந்தேறியது.

அன்றைய நாள் காலையில் அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, இரு பெண்கள் மட்டும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஆளுக்கொரு புறம் திரும்பி அமர்ந்திருந்தனர். அவர்கள் சிவகாமியும் அவரின் ஆருயிர் பேத்தி ஆராதனாவும் ஆவர்.

வெற்றிகரமாக கல்லூரி வாழ்வினை முடித்துவிட்டு தன் தோழிகளுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்த ஆராதனாவை அவசர அவசரமாக கிளம்பி வரச்சொல்லிவிட்டு, காலையில் பெண்பார்க்கும் சமயத்தில் அவள் அங்கிருக்க வேண்டாம் என்று அத்தை வீட்டிற்கு போகச் சொன்னால், அவளிற்கு கோபம் வரத்தானே செய்யும்.

“கிழவிக்கு என்னை அலைய வைக்குறதுல என்ன ஒரு சந்தோஷமோ!” என்று புசுபுசுவென்று மூச்சுக்காற்றை வெளியிட்டபடி சிவகாமியை பார்த்துக் கொண்டே கூற, அவரோ அவளை திரும்பி பார்க்கவே இல்லை. எங்கு திரும்பினால், முணுமுணுப்பவள் கத்திவிடுவாளோ என்ற பயம் தான். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கோபமாக இருப்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டு பேத்திக்கு போட்டியாக அமர்ந்திருக்கிறார் பாட்டி.

“தனா ம்மா, விடு டா நம்ம பாட்டி தான.” என்று சமாதானம் பேச வந்த வாசுகியை இடைவெட்டியவளோ, “பெரிம்மா நானே செம கோபத்துல இருக்கேன். போன முறை பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போனப்பவும் இப்படி தான். ‘நான் சீரியஸா இருக்கேன். உன்னை பார்க்கணும் போல இருக்கு’ன்னு அழுது ஊரைக்கூட்டியாச்சு. நானும் இவங்க பேச்சை நம்பி அடிச்சு பிடிச்சு வந்தா, தெம்பா ஜூஸ் குடிச்சுட்டு இருக்காங்க. இப்பவும் நான் சிவனேன்னு ஊர் சுத்திட்டு இருந்தேன். ‘நீ வந்தா தான் ஆச்சு’ன்னு போன்ல கத்திட்டு, இப்போ அத்தை வீட்டுக்கு பேக்கப் பண்றாங்க. என்ன தான் நினைச்சுட்டு இருக்காங்க?” என்று கத்தினாள்.

“அம்மணி ஊரை சுத்திட்டு இருந்தா, இங்க வீட்டு வேலை யாரு பார்க்குறது? வீட்டுல விஷேஷம்னா ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். அதை எல்லாம் நம்ம தான பார்க்கணும்.” என்று சிவகாமி பேச, “எதே வீட்டு வேலை செய்யுறதுக்கு வர சொன்னீங்களா?” என்று அதைக் கேட்டு ஆராதனா அடுத்த சண்டைக்கு தயாரானாள்.

அப்போது அங்கு வந்த வானதி, “அடியேய் எதுக்கு டி நடுவீட்டுல இப்படி கத்திட்டு இருக்க?” என்று வினவ, அவரின் குரலில் திடுக்கிட்டவராக “அம்மா வானதி யாரம்மா சொல்ற?” என்றார் சிவகாமி.

“அத்த உங்களை நான் சொல்வேனா? எல்லாம் நான் பெத்து வச்சுருக்கவளை தான் சொல்றேன்!” என்று உடனே பம்மினார் வானதி.

“ம்மா, உனக்கு திட்டணும்னா நான் தான் கிடைச்சேனா? எல்லாத்துக்கும் காரணம் உன் மாமியார் தான். முடிஞ்சா அவங்களை திட்டு. அதை விட்டுட்டு சும்மா சும்மா என்னையே சீண்டுறது! ச்சே, இந்த வீட்டுல நடுவுல பொறந்ததுக்கு, அதுவும் பொண்ணா பொறந்ததுக்கு, வேற எங்கயாச்சும் பொறந்துருக்கலாம்.” என்று வாய்விட்டு புலம்பினாள் ஆராதனா.

அவளின் இந்த புலம்பல் வழக்கமான ஒன்று என்பதால், அங்கிருந்த யாரும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதற்கும் ஒருபாடு புலம்பித் தள்ளினாள் அவள்.

சரியாக அதே சமயம், “என் தனாகுட்டியை யாரு என்ன சொன்னது?” என்றவாறே வந்தார் வண்ணதாசன்.

சிறுவயதிலிருந்தே ஆராதனாவை சமாளிக்கும் திறம் பெற்றிருந்தவர் அவர் ஒருவரே ஆவார்.

அவளும் வழக்கம்போல தன் சண்டையை பற்றி சித்தப்பாவிடம் கூறி அவரிடம் சமாதானமாகிக் கொண்டாள்.

“சின்னா உங்களுக்காக தான் இப்போ அத்தை வீட்டுக்கு போறேன். வேற யாருக்காகவும் இல்ல. உங்க அம்மா கிட்ட சொல்லி வைங்க. இன்னொரு முறை போன் பண்ணி ஏதாவது சொல்லட்டும் அப்பறம் இருக்கு கச்சேரி.” என்று சொல்லியபடி வெளியே வந்தாள்.

அப்போதும் விடாமல் தன் பாட்டியை திட்டியபடியே வந்தவள் எதிரில் வந்தவர்களை கவனிக்காமல் இடித்துவிட, பதட்டத்தில் தன் மீது தான் தவறென்பதை உணராமல், “கண்ணை என்ன பொடனியிலயா வச்சிருக்கீங்க? பார்த்து வரமாட்டீங்க?” என்று கத்தினாள்.

அதைக் கேட்டதும் எதிரில் இருந்தவர்களில் ஒருவன், “ண்ணா, உன் வருங்கால மாமியார் வீட்டுல இப்படி வரவேற்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல.” என்று நக்கலாக கூற, அப்போது தான் அவர்கள் யாரென்று புரிந்தது ஆராதனாவிற்கு.

புரிந்ததும் பதட்டத்துடன் இப்போது பயமும் ஒட்டிக்கொள்ள, அத்தனை நேரத்தில் அப்போது தான் நிமிர்ந்து எதிரிலிருந்தவர்களை பார்த்தாள்.

தன் பெயருக்கேற்றார் போல கோபத்தில் முகம் சிவந்து நின்றிருந்தான் ஆதவன். அவனருகே நக்கலான பாவனையுடன் நின்றிருந்தான் ஆதவனின் தம்பி.

தன் தவறுக்காக மன்னிப்பு வேண்ட நிமிர்ந்தவள், ஆதவனின் கோப முகம் கண்டு தயங்க, அப்போது தான் அங்கு வந்தனர் ஆதவனின் பெற்றோர் சிவக்குமார் மற்றும் திலகவதி.

“பாப்பா, கண்ணதாசன் ஐயா வீடு இது தான?” என்று சிவக்குமார் ஆராதனாவிடம் வினவ, அவளின் கவனம் மகனிலிருந்து தந்தைக்கு திரும்பியது.

தன் தந்தையை போல தன்னை ‘பாப்பா’ என்று விளித்ததாலோ என்னவோ, சிவக்குமாரின் மீது நல்லெண்ணம் ஏற்பட, சிறு சிரிப்புடன் அவருக்கு பதிலளித்தாள் ஆராதனா.

வெளியில் கேட்ட பேச்சு சத்தத்தில், கண்ணதாசனே வெளியே வந்துவிட, அதன்பிறகு அவரே அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். நடந்த கலாட்டாவில், திலகவதியுடன் பேசிக் கொண்டே ஆராதனாவும் மீண்டும் வீட்டிற்குள் வந்து விட்டாள்.

வருங்கால மாமியார் என்பதை அறியாமல், திலகவதியுடன் வாயடித்துக் கொண்டிருந்தவள் எதேச்சையாக திரும்ப, அங்கு அவளை முறைத்துக் கொண்டிருந்தான் ஆதவன்.

‘இவன் எதுக்கு இப்போ முறைச்சுட்டே இருக்கான். ஏதோ தெரியாம இடிச்சது ஒரு குத்தம்னு இவ்ளோ நேரம் அதை பிடிச்சு தொங்கிட்டு இருக்கான். ச்சேச்சே, இப்படி ஒருத்தன் மாப்பிள்ளைன்னா, நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் பா. ஹ்ம்ம், அந்த வெள்ளெலியோட வாழ்க்கை இந்த ‘சிடுமூஞ்சி’யோடன்னு இருந்தா, அதை யாரால மாத்த முடியும்! இனி, அவ பாடு, இந்த சிடுமூஞ்சி பாடு, நமக்கென்ன? நமக்குன்னு ஒரு ஹேண்ட்ஸம் பாய், ரொமான்டிக் ஹீரோ மாட்டாமையா போயிடுவான்!’ என்று ஆதவனை திட்ட ஆரம்பித்தவள், தன் கனவில் மூழ்கி விட்டாள்.

*****

மண்டபத்தில் கேட்ட மேளச்சத்தத்தில் சுயத்தை அடைந்தவளின் மனமோ அவள் அன்று நினைத்ததையே சுற்றி வந்தது.

“அன்னைக்கு அந்த வெள்ளெலிக்கு பாவம் பார்த்தா, இன்னைக்கு என் வாழ்க்கையே இப்படி அந்தரத்துல தொங்கிட்டு இருக்கு! ஹ்ம்ம், ஹேண்ட்ஸம் பாய், ரொமான்டிக் ஹீரோ – எல்லாம் போச்சு!” என்று முணுமுணுத்தவளின் கையை அழுத்தமாக பிடித்த ஆதவன், “இப்போ நீ மிசஸ். ஆதவன். சோ அதுக்கேத்த மாதிரி இருக்க பழகு. இன்னொரு முறை இப்படி லூசு மாதிரி புலம்பிட்டு இருந்த, வாயில சொல்லிட்டு இருக்க மாட்டேன்.” என்று அவளின் காதில் மெதுவாக கூறினான் அவளின் கணவன்.

அதைக் கேட்டு சும்மா இருக்க அவள் என்ன வெண்ணிலாவா. ஆராதனாவாகிற்றே!

அவளின் காதில் முணுமுணுத்துவிட்டு நிமிர்ந்தவனை, அவன் மாலையை பிடித்து இழுத்து தன்னுயரத்திற்கு வர வைத்தவள், அவன் காதில், “ஹலோ, தாலி கட்டிட்டங்கிறதுக்காக நீ சொல்றதெல்லாம் கேட்க முடியாது. இது தான் நான். இப்படி தான் இருப்பேன். நான் புலம்புறதை கேட்க முடியலைன்னா காதை மூடிக்கோ. ஐ டோன்ட் கேர்!” என்று அவனை போலவே கூறினாள்.

அவளின் செய்கையில் முதலில் சற்று தடுமாறியவன், பின்னர் சுதாரித்துக் கொண்டு, “ரௌடி ரௌடி…” என்று திட்டிவிட்டு வேறுபக்கம் திரும்பிக் கொள்ள, அவளோ தோளை குலுக்கிக் கொண்டு மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

இவர்களின் இந்த நாடகத்தை பார்த்த குடும்பத்தினர் தான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.

வானவில் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
19
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.