Loading

ஐந்து வருடங்களுக்கு பிறகு…

 

“அன்னைக்கு தான் அனுவ கடைசியா பார்த்தது… அப்புறம் பார்க்கவே இல்ல… அவ எங்க போனா? என்ன ஆனா? எப்படி இருக்கா? ஏன்? உயிரோட இருக்காளான்னு கூட தெரியல…” என சாருமதி தன் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு மாலதியிடம் கூற, 

 

மாலதி, “என்ன சாரு சொல்ற? நான் சடன்னா மேரேஜ் ஆகி ஜாப்ப ரிசைன் பண்ணிட்டு வெளியூர் போனதால எனக்கு எதுவும் தெரியல… உங்க ரெண்டு பேரையும் மீட் பண்ணலாம்னு வந்தா இப்போ நீ சொல்ற நியூஸ் எல்லாம் அதிர்ச்சியா இருக்கு… அதுக்கு அப்புறம் அனுவ எங்கயும் தேடலயா டி?” எனக் கேட்டாள் வருத்தமாக.

 

கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்த சாருமதி, “அது எப்படி மாலு தேடாம இருப்போம்? ஆகாஷ் அவருக்கு தெரிஞ்ச வழியில எல்லாம் தேடினார்… நானும் தேடினேன்… கடைசியில போலீஸ் கம்ப்ளைன் கொடுப்போம்னு நினைக்கும் போது எனக்கு அனு கால் பண்ணா… நான் நல்லா இருக்கேன்… எந்தப் பிரச்சினையும் இல்ல… என்னைத் தேட வேணாம்னு சொல்லிட்டு உடனே கட் பண்ணிட்டா…” என்றாள். 

 

அவர்கள் இருவரும் கம்பனி கஃபடேரியாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பிரணவ்வுடன் ஏதோ பேசிவாறு அங்கு வந்தாள் அர்ச்சனா.

 

அர்ச்சனா சாருமதியைக் கண்டதும் வேண்டுமென்றே பிரணவ்வை நன்றாக உரசிக்கொண்டு பேச, அதனைக் கண்டு பல்லைக் கடித்தபடி வேறு பக்கம் திரும்பினாள் சாருமதி.

 

அர்ச்சனா பேசப் பேச அவளுக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்த பிரணவ் அவள் தன்னை நெருங்கவும் அவசரமாகத் தள்ளி நின்று அவளை ஒரு பார்வை பார்த்தான் அழுத்தமாக.

 

அதில் அர்ச்சனாவிற்கு உள்ளுக்குள் திக் என்றிருந்தாலும் அதனைக் காட்டிக் கொள்ளாது, “என்ன பிரணவ் நீங்க? உங்கள கட்டிக்க போற பொண்ணு நான்… இப்படி தள்ளி தள்ளி போறீங்க…” எனப் பொய்யாகச் சிணுங்க,

 

“கட்டிக்க போற பொண்ணுன்னு இல்ல… யாரா இருந்தாலும் என் அனுமதி இல்லாம என் ப்ரைவசிக்குள்ள என்ட்ரி ஆக முடியாது… மைன்ட் இட்… எனக்கு இம்பார்ட்டன்ட் மீட்டிங் ஒன்னு அட்டன்ட் பண்ண இருக்கு… நான் கிளம்புறேன்…” என எச்சரிக்கை குரலில் கூறி விட்டு அங்கிருந்து சென்றான் பிரணவ்.

 

பிரணவ் அவ்வாறு கூறவும் ஆத்திரத்தில் பல்லைக் கடித்த அர்ச்சனா சாருமதியையும் மாலதியையும் முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.

 

மாலதி, “இந்த லூசு எப்படி டி சார் கூட?” எனக் குழப்பமாகக் கேட்கவும் பெருமூச்சு விட்ட சாருமதி, “எல்லாம் சாரோட மறதிய யூஸ் பண்ணி பிரயோஜனம் எடுத்துக்கிட்டா… பிரணவ் சார் வீட்டுல என்ன நாடகம் ஆடினான்னே தெரியல… மூர்த்தி சார் ஒரு நாள் வந்து பிரணவ் சாரை கட்டிக்க போற பொண்ணுன்னு இவளை இன்ட்ரூ பண்ணிட்டு போனார்…” என்றாள்.

 

“எனக்கு என்னவோ இதுல பிரணவ் சாருக்கு உடன்பாடு இல்லன்னு நினைக்கிறேன் சாரு… அவரோட முகத்த பார்த்தாலே தெரியுது…” என மாலதி கூறவும், “எப்படி இருந்தா என்ன? அவர் அர்ச்சனாவ தான் கல்யாணம் பண்ணிக்க போறார்… என் அனுவே இல்ல இப்போ… இவங்க எப்படி போனா எனக்கென்ன?” என்றாள் சாருமதி சலிப்பாக.

 

மாலதி, “ம்ம்ம் ஓக்கே டி… நீ எதையும் மைன்ட்ல போட்டு குழப்பிக்காதே… எவ்ரித்திங் வில் பீ ஓக்கே… ரொம்ப லேட் ஆகிடுச்சு… அவர் வேற கால் பண்றார்… இன்னொரு நாளைக்கு மீட் பண்ணலாம்… கண்டிப்பா வீட்டுக்கு வா… நான் கிளம்புறேன்…” என விடை பெற்றுச் செல்லவும் தோழியின் நினைவில் தலையைப் பிடித்தபடி அமர்ந்தாள் சாருமதி.

 

திடீரென தன் அருகில் ஏதோ சத்தம் கேட்கவும் சாருமதி தலையை உயர்த்திப் பார்க்க, கன்னத்தில் கை வைத்து அவளையே கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.

 

சாருமதி புருவம் உயர்த்தி என்ன எனக் கேட்க, அவளின் கரத்தை எடுத்து தன் கரத்துக்குள் வைத்துக் கொண்ட ஆகாஷ், “அனு பத்தி திங்க் பண்ணுறியா?” என வருத்தமாகக் கேட்க, அவன் தோளில் தலை சாய்த்த சாருமதி, “ஃபைவ் இயர்ஸ் ஆகிடுச்சு அனு போய்… ஜாப் ஜாய்ன் பண்ண நாள்ல இருந்து ஒன்னாவே இருந்தோம்… அவ இல்லாம ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றேன் ஆகாஷ்…” எனக் கண்ணீர் வடித்தாள்.

 

ஆகாஷ், “மதி… அழாதே டா… அனு எங்க இருந்தாலும் நல்லா இருப்பா… கூடிய சீக்கிரம் அவளே நம்மள தேடி வருவா…” என சமாதானப்படுத்தியவன், “அப்புறம் மதி… அம்மா கால் பண்ணி இருந்தாங்க… எப்போ அவங்க மருமகள காட்டுவேன்? எப்போ கல்யாணம் பண்ணிக்க போறேன்னு கேட்டாங்க…” என்றான் புன்னகையுடன்.

 

அவனின் தோளில் சாய்ந்து கொண்டே தலையை உயர்த்திப் பார்த்த சாருமதி, “நீங்க என்ன சொன்னீங்க?” என்க,

 

“நீங்களே நல்ல பொண்ணா பாருங்கம்மா… பொண்ணு பாருங்க… சில பேரைப் போல ரௌடிய பார்க்க வேணாம்னு சொன்னேன்…” என்றான் ஆகாஷ் புன்னகையுடன்.

 

உடனே அவனை விட்டு விலகிய சாருமதி, “நான் உனக்கு ரௌடியா பனை மரம்? ரௌடி என்ன செய்யும் தெரியுமா?” எனக் கேட்டு விட்டு ஆகாஷின் கரத்தைக் கடிக்க, “ஆஹ்… விடு டி… விடு டி குட்டச்சி… வலிக்கிது… பேபி விடு… நான் சும்மா பொய் சொன்னேன்…” எனக் கத்தினான்.

 

சாருமதி, “அந்தப் பயம் இருக்கணும்…” எனக் கேலியாகக் கூறவும் ஆகாஷ் அவளைப் பொய்யாக முறைக்க, சாருமதி புன்னகைக்கவும் பதிலுக்கு புன்னகைத்த ஆகாஷ், “ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதே… ரௌடி… இவ்வளவு அழகான எனக்கே எனக்கான குட்டச்சி பேபி இருக்கும் போது நான் எப்படி வேற பொண்ணைப் பார்ப்பேன்? லூசு… சீக்கிரமா அவங்க மருமகளை கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்… அனு வந்ததுக்கு அப்புறம் தான் நமக்கு கல்யாணம் மதி…” என்றான் தன்னவளை அணைத்து காதலுடன்.

 

சாருமதி, “உங்கள ரொம்ப வெய்ட் பண்ண வைக்கிறேனா ஆகாஷ்?” என வருத்தமாகக் கேட்க, “இதுல என்ன மதி இருக்கு? உன் லைஃப்ல அனு எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியாதா? உனக்கு முக்கியமானவங்க எனக்கும் முக்கியமானவங்க தானே… அதுவும் இல்லாம அனு எனக்கு தங்கச்சி மாதிரி… அவ இல்லாம நம்ம கல்யாணம் எப்படி நடக்கும்? நீ வேணா பாரு குட்டச்சி… நம்ம அனு தான் உனக்கு நாத்தனார் முடிச்சு போட்டு நம்ம கல்யாணத்த நடத்தி வைப்பா… அது வரைக்கும் நாம ஜாலியா லவ் பண்ணலாம்…” என்றான் ஆகாஷ் புன்னகையுடன்.

 

“ஐ லவ் யூ ஆகாஷ்… ஐம் சோ லக்கி டு ஹேவ் யூ இன் மை லைஃப்…” எனத் தன்னவனைக் காதலுடன் அணைத்துக் கொண்டாள் சாருமதி.

 

************************************

 

நள்ளிரவைக் கடந்தும் பிரணவ்வை உறக்கம் தழுவாமல் இருக்க, பால்கனியில் அமர்ந்து பௌர்ணமி நிலமை வெறித்துக் கொண்டிருந்தான்.

 

மனம் வேறு அமைதியின்றி தவித்தது. கூடவே அனைவரும் இருந்தும் யாரையோ காண பிரணவ்வின் மனம் ஏங்கித் தவித்தது.

 

இது இன்று நேற்று தோன்றும் உணர்வல்ல. கடந்த ஐந்து வருடங்களாவே அவனின் மனம் எதையோ எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது.

 

அது என்னவென்று தெரிந்தால் கூட எங்கிருந்தாலும் தேடிக் கண்டு பிடித்து விடலாம். ஆனால் இங்கோ தான் எதை எதிர்ப்பார்க்கிறோம் என்றே தெரியாத நிலை.

 

அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததில் இருந்து அவனின் பெற்றோர் பிரணவ்வின் மீது பாசத்தை அள்ளித் தெளித்தனர்.

 

அதிலும் லக்ஷ்மி பிஸ்னஸை ஒதுக்கி வைத்து விட்டு மகனின் நலனில் மட்டுமே கண்ணாக இருக்கிறார்.

 

திடீரென இவர்களுக்கு என்னவாயிற்று எனப் பிரணவ்வும் யோசிக்காத நாள் இல்லை.

 

ஆனால் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு தனக்கு வேண்டிய அன்பைத் தன் பெற்றோர் வழங்கும் போது எதற்கு அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று அத்தோடு விட்டு விட்டான்.

 

இருந்தும் மனதில் எழும் அந்த ஏக்கம் மட்டும் இன்று வரை தீரவே இல்லை.

 

பிரணவ்வின் மனம் ஒரு வித வெறுமையைத் தத்தெடுத்து இருந்தது.

 

அப்படி தோன்றும் நேரம் எல்லாம் நேரத்தைக் கூடப் பார்க்காது உடனே தன் பீச் ஹவுஸிற்கு கிளம்பிச் சென்று விடுவான்.

 

இன்றும் யாரிடமும் கூறாது உடனே பீச் ஹவுஸ் கிளம்பிச் சென்றவன் நிலவை வெறித்தபடி இந்த ஐந்து வருடங்களில் நடந்தவற்றைப் பற்றி எண்ணிப் பார்த்தான்.

 

பலவித எண்ணங்களில் சிக்கித் தவித்தவனின் கண்கள் தூக்கத்தில் சொக்க, பால்கனியிலேயே படுத்து விட்டான்.

 

மறுநாள் விடிந்ததுமே கண் விழித்த பிரணவ் தன்னைக் காணாது தாய் வருந்துவார் என உடனே வீட்டுக்கு கிளம்பிச் சென்றான்.

 

ஹாலில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த மூர்த்தி, “எங்கப்பா போய்ட்ட காலைலயே?” எனக் கேட்கவும், “எங்கேயும் இல்லப்பா… சும்மா தான்…” என்றவாறு அவருக்கு அருகில் அமர்ந்தான்.

 

கணவனுக்கும் மகனுக்கும் காஃபி கலந்து எடுத்து வந்த லக்ஷ்மி இருவருக்கும் கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு அமர்ந்தார்.

 

பிரணவ் அமைதியாக காஃபியைப் பருக, “பிரணவ் கண்ணா… உனக்கும் வயசு போய்ட்டே இருக்கு… நாங்களும் வயசாகிட்டோம்… எப்போ கண்ணா கல்யாணம் பண்ணிக்க போற? என் மருமகள் அர்ச்சனாவும் பாவம்… அப்பா அம்மா இல்லாத பொண்ணு… சீக்கிரம் அவளை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாப்பா…” என்றார் லக்ஷ்மி.

 

அர்ச்சனாவின் பெயரைக் கேட்டதும் முகம் சுருக்கிய பிரணவ்வின் மனம் வேறு எதையோ எதிர்ப்பார்க்க, தாயின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

 

மூர்த்தி, “பிரணவ்… அம்மா உன் கிட்ட தான் கேட்குறாங்க…” என்கவும் தன்னிலை அடைந்த பிரணவ், “ஆஹ்… கொஞ்சம் நாள் போகட்டும் மா… இப்பவே என்ன அவசரம்?” எனக் கேட்டான்

 

லக்ஷ்மி, “அஞ்சி வருஷமா இதையே தான் பா நீ சொல்லிட்டு இருக்க… நாங்களும் உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வெச்சி பேத்தி பேரனுங்கள பார்க்க வேணாமா?” என வருத்தமாகக் கேட்கவும் பிரணவ் பதில் கூறாது அமைதியாக இருந்தான்.

 

“ஏன் பிரணவ்? உனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லையா? இல்ல வேற யாரையாவது காதலிக்கிறியா?” என மூர்த்தி குழப்பமாகக் கேட்கவும் பிரணவ்வின் இதயம் வேகமாகத் துடித்தது.

 

“என்னங்க நீங்க பேசிட்டு இருக்கீங்க? நம்ம பையனும் அர்ச்சனா பொண்ணும் ரொம்ப நாளா காதலிக்கிறதா சொன்னாங்களே… இப்போ போய் இப்படி கேட்குறீங்க…” என லக்ஷ்மி கணவனைக் கடிந்து கொள்ள, தன்னையும் அர்ச்சனாவையும் சேர்த்து வைத்து தாய் பேசியதை ஏனோ பிரணவ்வின் மனம் விரும்பவில்லை.

 

ஆனால் தான் ஏதாவது கூறி தாயின் மனம் வருத்தப்படும் என்பதற்காக அமைதியாக இருந்தான்.

 

மூர்த்தி, “சரி அதை விடு லக்ஷ்மி… இன்னும் கொஞ்சம் நாள் டைம் கொடு பிரணவ்வுக்கு… அர்ச்சனா தான் நம்ம வீட்டுக்கு மருமகள்னு முடிவெடுத்துட்டோம்… கொஞ்சம் நாள் பொறுக்குறதுல எதுவும் ஆகப் போறதில்ல…” என மனைவியிடம் கூறியவர் பிரணவ்விடம் திரும்பி, 

 

“அப்புறம் பிரணவ்… பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் பத்தி தெரியும்ல… இந்தியா மட்டும் இல்லாம வேர்ல்ட்லயே நம்பர் வன் இடத்துல இருக்குற கம்பனி… அவங்க புதுசா ப்ராஜெக்ட் ஒன்னு ரெடி பண்ணி இருக்காங்க… அவங்க ஃபேக்டரில வர்க் பண்ற வசதி வாய்ப்பு குறைந்த ஐநூறு பேருக்கு அவங்க செலவுல வீடு கட்டி கொடுக்க நினைக்கிறாங்க… இந்த ப்ராஜெக்ட் மட்டும் நம்ம கம்பனிக்கு கிடைச்சா நம்ம கம்பனி பெயர் இந்தியா மட்டும் இல்லாம வேர்ல்ட் லெவல்ல ஃபேமஸ் ஆகும்…” என்றார்.

 

பிரணவ், “ஓக்கே பா… நான் என்ன பண்ணணும்?” எனத் தந்தையிடம் கேட்க, “டூ டேய்ஸ்ல பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி இந்தியா வராங்க… அவங்கள மீட் பண்ண அப்பாய்ன்மென்ட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்… சோ நீ நாளைக்கே கிளம்பி ஹைதரபாத் போகணும்… அங்க தான் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் மெய்ன் ப்ராஞ்ச் இருக்கு… எப்படியாவது எத்தனை நாள் போனாலும் அவங்கள மீட் பண்ணி இந்த ப்ராஜெக்ட்ட நம்ம கம்பனிக்கு வாங்கி எடுக்குறது உன்னோட பொறுப்பு பிரணவ்…” என்றார் மூர்த்தி.

 

பிரணவ் சரி எனத் தலையசைக்க, “எதுக்குங்க அவ்வளவு தூரம் பிரணவ்வ தனியா அனுப்புறீங்க? ஆப்பரேஷன் எல்லாம் முடிஞ்சி இப்போ தான் கொஞ்சம் நல்லா இருக்கான்… அதுக்குள்ள நீங்க…” என லக்ஷ்மி குறைப்பட்டார்.

 

“மா… எதுக்கு ஃபீல் பண்ணுறீங்க? அதான் இப்போ நான் நல்லா இருக்கேனே… அதுவும் இல்லாம ஆகாஷும் என் கூட வரப் போறான்… எனக்கு ஒன்னும் இல்லம்மா…” என்றான் பிரணவ் லக்ஷ்மியை அணைத்துக்கொண்டு புன்னகையுடன்.

 

மூர்த்தி ஹைதரபாத் போகக் கூறியதில் இருந்து பிரணவ்வின் மனம் காரணமே இன்றி மகிழ்ச்சி அடைந்தது. 

 

அவனின் இதயம் வேறு வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

 

லக்ஷ்மி, “அப்போ ஒரு கன்டிஷன்… அதுக்கு சம்மதிச்சா தான் நான் பிரணவ்வ ஹைதரபாத் போக அலோ பண்ணுவேன்…” எனப் புதிர் போடவும் தந்தையும் மகனும் அவரைக் கேள்வியாக நோக்கினர்.

 

“என் மருமகளையும் பிரணவ் கூட கூட்டிட்டுப் போகணும்…” என லக்ஷ்மி கூறவும், “அவ எதுக்கு மா அங்க? நான் என்ன ஊரை சுத்திப் பார்க்கவா போறேன்? கம்பனி விஷயமா போறேன்…” என்றான் பிரணவ் சலிப்பாக.

 

மூர்த்தி எதுவும் கூறாது அமைதியாக இருக்க, “எனக்கு அதெல்லாம் தெரியாது… அர்ச்சனாவையும் உன் கூட ஹைதரபாத் கூட்டிட்டுப் போகணும்… இல்லன்னா நீயும் போக வேணாம்…” என்றார் லக்ஷ்மி முடிவாக.

 

பிரணவ், “மா… என்னம்மா?” என ஏதோ கூற வர, “பிரணவ்… அதான் அம்மா சொல்றாங்களே… அர்ச்சனாவும் உன் கூட வரட்டும்… அதுவும் இல்லாம அர்ச்சனா உன் ஆஃபீஸ்ல தானே வர்க் பண்றா… அவ வந்தா உனக்கும் ஹெல்ப்பா இருக்கும்… ஆகாஷும் உன் கூட இருப்பான்ல… சோ எந்தப் பிரச்சினையும் இல்ல… முக்கியமா உனக்கு அர்ச்சனாவைக் காதலிச்ச எந்த ஞாபகமும் இல்லன்னு சொல்ற… ஒருவேளை இந்தப் பயணத்தால அந்த ஞாபகங்கள் கூட திரும்ப வர வாய்ப்பு இருக்குல்ல… அதனால போய்ட்டு வாங்க…” என மூர்த்தி கூறவும் மனமே இன்றி சம்மதித்தான் பிரணவ்.

 

மறுநாள் காலையிலேயே பிரணவ், ஆகாஷ், அர்ச்சனா மூவருமே விமானத்தில் ஹைதரபாத் பறந்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்