

முகம் 15
மருத்துவமனை இப்போது தற்காலிகமாக மயலின் பொறுப்பில் தான் இருந்தது.
அங்கே உள்ளே நுழைந்தவளை அடுத்து வேலை இழுத்துக் கொள்ள, மதியம் வரை அதுவே தொடர்ந்தது.
‘வயிற்றுக்கு ஏதும் போட்டால் தான் அடுத்து முடியும்’ என்று எண்ணியவள் கேன்டீன் சென்று, தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு ஒரு இருக்கையில் அமர, அவள் முன்னே முரளிதரன் அமர்ந்தார்.
இவளோ “சொல்லுங்க டாக்டர், ஏதாச்சும் பேசணுமா? ஏதும் இம்போர்ட்டண்ட்ன்னா என் கேபின்லயே பேசி இருக்கலாமே” என்றாள்.
“இல்ல, மிஸ் மயல்” என்று அவர் ஆரம்பிக்க,
“மிஸ் மயல் இல்ல, மிஸிஸ் மயல்மொழி ஜெயதீரன்” என்றாள் அவரைத் திருத்தி…
“ஓஓஓஓ உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா, ஆனா பார்த்தா அப்படி தெரியல…” என்றவரது பார்வை அவளுக்கு உள்ளுக்குள் ஒரு அபாயமணியை லேசாகத் தட்டி விட்டுச் சென்றது.
பதில் எதுவும் சொல்லாமல் அவள் அவரையே பார்க்க, தன்னை சுதாகரித்துக் கொண்டவர்,
“ஜஸ்ட் ஃபிரண்ட்லியா பெர்சனலா பேசலாம்னு வந்தேன்மா” என்க, அவள் புருவம் உயர்ந்தது.
அதனை உணர்ந்தவரோ “இந்த ஹாஸ்பிடல் சீனியர் டாக்டருக்கும் நமக்கும் என்ன பர்சனல்னு தான யோசிக்கிற?” என்றவர்,
“விஷால் என்னோட பையன்மா, உங்க அக்கா கயலைக் கட்டிக்கப் போறது அவன் தான்” என்க,
அவளிடமோ அதே பார்வை தான். ‘சொன்னதைக் கேட்டுக் கொண்டேன்’ என்பதுபோல ஒரு தலைசைப்பு அவ்வளவு…
அவர் சற்று அதிகமாக எதிர்பார்த்து விட்டார் போலும், அது அவருக்குச் சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது.
அவர் யோசனையுடன் அமர்ந்திருக்க, அவர் முன்னே அவருக்கான காஃபி வைக்கப்பட்டது.
“எடுத்துக்கோங்க மிஸ்டர் முரளி உங்களுக்குத் தான்” என்றவள் தன் உணவில் கவனமானாள்.
அந்தச் செயல் அவரை எட்ட நிறுத்துவது போன்று தோன்ற, அமைதியாய் காஃபியைக் குடிக்க தொடங்கினார்.
ராம் பிரசாத்துக்கு இரண்டு பெண்கள் இருக்கும் விஷயமே அவருக்குத் தெரியாது. திடீரென்று இங்கே வந்தவளைக் கோதை பொதுவாக அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்திருந்திருந்தார்.
அவர் உட்பட அங்கிருப்பவர்களுக்கு சற்று அதிர்ச்சி தான். ஆனால் ஏன் என்னவென்று போய் கேட்டுவிட முடியாதே! அது அவர்கள் குடும்ப விவகாரம். அதிலும் பூங்கோதை கராறாகத் தான் இருப்பார். வீட்டு விடயம் வெளியில் அவர் பேசியதே இல்லை…
ராம்பிரசாத்தும் அவரும் பிரிந்திருப்பது அங்குள்ளவர்கள் அறிந்ததே! ஆனால் இன்று வரை ஏனென்ற காரணம் யாரும் அறியார்.
முரளிதரன் கூட ஒருமுறை சாடையாகக் கேட்டு கோதையிடம் வாங்கிக்கட்டி இருந்தார். அதிலிருந்து அவர் மீது ஒரு வன்மம் இவருக்கு…
பூங்கோதை மருத்துவ முகாம்களுக்கு செல்லும் நேரம் எல்லாம் சீனியர் மருத்துவர் என்ற முறையில் இவர் தான் மருத்துவமனையைப் பார்த்துக் கொள்வார்.
ஆனால் இந்த முறை அதற்கு வழியின்றி இவள் வந்திருக்க, ஏதோ தான் அந்த இடத்தில் குறைந்து போவது போல ஒரு எண்ணம் அவருக்கு…
சரி உறவைக் காட்டியாவது அவளுடன் நெருங்கலாம் என்று பார்த்தால் அதற்கும் எட்ட நிற்கின்றாள்.
இதுக்கு மேல அங்கிருக்க முடியாதவர் அவளிடம் சொல்லி விட்டு கிளம்பி இருந்தார்.
நேரே அவரறைக்குச் வந்தவர், யாருக்கோ அழைப்பை விடுத்துக் காத்திருத்திருந்தார்.
அந்தப்பக்கம் “சொல்லு முரளி” என்க,
“என்ன பாட்னர் நடக்குது? இப்படியே விட்டா நம்ம மாட்டிக்க வேண்டியது தான்” என்று கத்தினார்.
“ஏன் இப்படி கத்துற முரளி? யாராலையும் எதையுமே கிழிக்க முடியாது. ஒருத்தன் நாய் மாதிரி போராடி இப்போவரை வருசக் கணக்குல காத்திருக்கானே அப்போலாம் கிடைக்காதது இந்த ஆறு மாச கேப்ல இவளுக்குக் கிடைச்சிடுமா?” என்று பதட்டம் ஏதும் இல்லாமல் பேச,
முரளிதரனால் அப்படி இருக்க முடியவில்லை. சட்டதுக்கு எதிராய் செய்யும் வேலை கொஞ்சம் கசிந்தால் போதும் காலத்துக்கும் சிறை தண்டனை தான். அதற்காகவா இத்தனை சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார். அவற்றை எல்லாம் ஆழ்ந்து அனுபவிக்க, அவர் இருக்க வேண்டும் என்ற பயம் அவரை சூழ்ந்து கொண்டது.
அவர் பயப்படுவது அங்கிருப்பவருக்கு புரிய, “ஸ்டுபிட் மாதிரி பயந்து சாகாத முரளி, எனக்கு இது எவ்வளவு பெரிய லட்சியம்னு உனக்குத் தெரியாதா? இதுக்காக எவ்வளவு விஷயங்களை தியாகம் பண்ணி எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகல, உனக்கு பயமா இருந்தா விலகிக்கோ. ஏற்கனவே தனியா பண்ணிட்டு இருந்த எனக்கு இனிமேலும் தனியாவே பண்ண தெரியும். எனக்கு யாரோட உதவியும் தேவை இல்ல. சும்மா அவன் வந்தான் இவன் வந்தான்னு பயந்து நீயா காட்டிக் கொடுத்துடாத, அப்பறம் நான் உன்ன கொல்லக் கூடத் தயங்க மாட்டேன்” என்று சத்தம் போட்டதில் முரளிதரன் தான் அடங்கி போக வேண்டி இருந்தது.
எதிரில் பேசிக் கொண்டிருப்பவர் எப்படிப்பட்ட கொடூர வேலையை செய்கிறார் என்பது பற்றி சர்வமும் அறிந்தவராகிற்றே!
“அச்சோ என்ன பார்ட்னர், நான் ஏன் விட்டுட்டு போகப் போறேன்?” என்று அமைதியாய் சொல்ல,
“அடுத்து அந்த வேதநாயகபுரம் தான் நம்ம டார்கெட் ஞாபகம் இருக்குல்ல, சொன்னதெல்லாம் சரியா பண்ணிட்ட தானே?” என்று கேட்க,
“பிரக்னண்ட் லேடீஸுக்கு போடுற டிடி இன்ஜெக்ஷன்ல நம்ம மருந்த யாருக்கும் தெரியாம பக்காவா மிக்ஸ் பண்ணிட்டேன்” என்றார்.
“ம்ம்ம்ம் ஓகே, இப்படி அடிக்கடி ஃபோன் பண்ணாத எதுவா இருந்தாலும் நானே கூப்பிடுவேன். அன்ட் நம்ம ஷோல்ஜர் நம்பர் டுவன்ட்டி ஓட பிளட் ரிப்போர்ட் வேணும். ஈவினிங்குள்ள எனக்கு சென்ட் பண்ணிடு” என்றவர் அழைப்பை துண்டித்திருந்தார்.
இங்கே முரளிதரனோ “ஐயோ இப்போ அங்க வேற போகணுமா? அங்க போனா ஏதோ பேய் பங்களாக்குள்ள நுழைஞ்சது மாதிரியே இருக்குமே! இதுல அந்தப் பைத்தியம் கங்கா வேற முறைச்சு பார்த்தே பயம் காட்டுமே!” என்று பீதியுடன் சொன்னவரோ,
“பணம் கிடைக்குதுன்னு உள்ள விழுந்தாச்சு, செஞ்சு தானே ஆகணும். சீக்கிரம் செட்டில் ஆகிட்டு எங்கயாச்சும் பாரின் கண்ட்ரிக்கு எஸ் ஆகிடணும்” என்று புலம்பியபடி அங்கிருந்து கிளம்பி இருந்தார்.
___________________________
அன்று விடியத் தொடங்கும் முன்னரே மருத்துவ முகாம் நடக்கும் இடத்தில் கூட்டம் கூடி விட்டது.
டோக்கன் எடுக்க மக்கள் வரிசையில் நிற்க, சமரசப்பாண்டியனின் அல்லக்கை முருகேசு தான், அந்த வேலைக்கு அமர்த்தப் பட்டிருந்தான்.
அவனுக்குத் தெரிந்தவர்களுக்கு முன்னுள்ள இலக்கங்களைக் கொடுத்துக் கொண்டிருக்க, அதிகாலையே வந்து வரிசையில் நிற்கும் மக்களிடையே சிறிது அதிருப்தியும் கோபமும் வெளிப்படவே செய்தது.
ஆனால் சமசரப் பாண்டியனிடம் நியாயம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா??? அதனாலேயே அமைதியாக இருந்து கொண்டனர்.
அப்படியே நேரம் கழிய, மருத்துவப் பரிசோதனைகளும் ஆரம்பித்தது.
மாணிக்கவேல் பாண்டியனின் தந்தை காலத்தில் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள பதினெட்டு ஊருக்கும் பொதுவாய் இருக்கும் ஒரு ஊரிலேயே மருத்துவமனை கட்டப்பட்டிருந்து.
ஊர்மக்கள் பெரும்பாலும் மருத்துவமனையை நாடுவது குறைவு. கை மருந்து செய்கிறேன் என்ற பெயரில் பாதி மக்கள் அந்தப்பக்கமே செல்வது கிடையாது.
மாணிக்கவேலும் சொல்லிக் கலைத்தே போய்விட்டார். இப்போது மருத்துவ முகாம் ஊருக்கே வந்திருந்ததில் அவருக்கு மகிழ்வு தான்.
முரளிதரன் ஒவ்வொரு ஊராக இலவச மருத்துவ முகாமை கற்பகம் மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்வது வழக்கம்.
இந்த முறை அது சமரசப்பாண்டியனின் மூலம் வேதநாயபுரத்தை நோக்கி வந்திருந்தது.
அந்த ஊர் மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர்கள் இருவர் உட்பட மொத்தமாக ஏழு மருத்துவர்கள் பரிசோதிக்க, அவர்கள் ஒவ்வொருவரின் முன்னும் மக்கள் வரிசை இருந்தது.
பூங்கோதையும் கயல்மொழியும் கர்ப்பிணித் தாய்மார்களையும் குழந்தைகளையும் பரிசோதிக்க, சித்தார்த் விஷாலுடன் இன்னும் மூன்று மருத்துவர்கள் ஆண்கள் மற்றும் மற்ற பெண்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.
பூங்கோதை எப்போதும் போல் தாயாகப் போகும் பெண்களுடன் மலர்ந்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஒவ்வொருவராய் வரிசை கடந்து, அடுத்து நடக்க முடியாமல் நொண்டிய காலுடன் ஒரு பெண் நிற்க, அந்தப்பெண்ணின் கணவர் கை தாங்களாய் அவளை இருக்கையில் அமர வைத்திருந்தார்.
கோதையிடம் வருவதற்கு முன்னரே இரத்த அழுத்தம், இரத்தத்தில் சீனியின் அளவு போன்ற தேவையான விடையங்களை குறிப்பெடுக்கத் தாதியர்கள் ஏற்பாடு செய்யப்படிருக்க,
அந்தப் பெண் கையில் வைத்திருந்த சிட்டை வாங்கி அதனை ஆராய்ந்த்தவரோ, “ம்ம்ம் குட். பிளட் ப்ரசர் நார்மலா தான் இருக்கு. இது எத்தனாவது மாசம்மா? இதுக்கு முதல் ஏதாச்சும் டிடி இன்ஜெக்ஷன் போட்டிருக்கீங்களா?” என்று ஒரு பெண்ணிடம் கேட்க,
“இது நாலாவது மாசம் டாக்டர், என் வீட்டுக்காரர் ஆஸ்பத்திரி பக்கமே இன்னும் கூட்டிட்டுப் போகல, இதுல எங்க ஊசி போடுறது?” என்று அருகில் நின்றிருந்த கணவனை முறைத்துப் பார்த்தபடி சொல்ல, அவனோ தலையைச் சொரிந்தான்.
“இந்த நேரத்துல இப்படி கவனம் இல்லாம இருக்கலாமா தம்பி இருப்பீங்க? இப்போ நான் இன்ஜெக்ஷன் போடுறேன். இதே போல இன்னொன்னு நாலு வாரத்துக்கு அப்பறம் போடணும் மறக்காம பக்கத்துல உள்ள ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க” என்றார்.
அவனும் சம்மதமாய் தலையசைக்க, அருகில் வைத்திருந்த மருந்து குப்பியைத் திறந்தவர் ஊசியில் மருந்தை ஏற்ற, மருந்து மட்டுமல்ல முரளிதரனால் கலக்கப்பட்ட மருந்தும் சேர்த்தே ஏற்றப்பட்டது.
அந்தப் பெண்ணுக்கு ஊசியைப் போட்டு முடித்தவர், தனது மருத்துவ பரிந்துரை தாளில், போடப்பட்ட ஊசியின் வகையையும் அது போடப்பட்ட திகதியையும் அதில் எழுதி கையெழுத்திட்டு அந்தப் பெண்ணின் கணவனிடம் நீட்டிவர்,
“இதக் கொண்டு போய் ஹாஸ்பிடல்ல கொடுத்தாலே அடுத்த மருந்து அவங்களே போடுவாங்க” என்றார்.
மீண்டும் “இன்னும் நல்லா கவனமா பார்த்துக்கணும்” என்று அந்தக் கணவனிடம் மீண்டும் அறிவுறுத்தி விட்டே அனுப்பி இருந்தார்.
அடுத்து வந்த இரு பெண்களுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததில் அவர்களுக்குப் பரிசோதித்து மருந்து எழுதிக் கொடுத்த கோதை, டிடி ஊசியை உடனடியாகப் போடாமல் காய்ச்சல் குறைந்ததும் மருத்துவமனையில் சென்று போட்டுக்கொள்ளும் படி அறிவுரையும் வழங்கி அனுப்பி வைத்தார்.
அதன்பின் வந்த இரு பெண்களுக்குப் பிரச்சனை இல்லை என்றதும் இருவருக்கு ஊசி போடப்பட்டது. அங்கே கயலும் சிலருக்குப் போட்டிருந்தாள்.
இப்போது வரை அந்த மருந்து அங்கிருக்கும் எட்டு பேருக்கு போடப்பட்டிருந்தது.
இப்படியே பரிசோதனை தொடர்ந்து கொண்டே இருக்க, கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கிய நேரம் அது.
அப்படியே மதிய நேரம் வந்துவிட, சிறிது நேரம் வேலையை நிறுத்தியவர்கள் உணவருந்த முடிவு செய்திருந்தனர்.
அங்கேயே ஒரு இடம் உணவுக்காகவென ஒதுக்கப்பட்டு இருந்தது.
இருக்கையில் இருந்து எழுந்த கோதையோ “கயல் போதும். சாப்பிட்டு வந்து மறுபடியும் தொடங்கலாம். டு ஹவர்ஸ் பிரேக். எழுந்துக்கோடா” என்க,
ஒரு சிறிய பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தவளும் “ஓகேமா இந்தக் குட்டி மட்டும் தான். நீங்க முன்னாடி போங்க நான் வரேன்” என்க, அவரும் சரியெனக் கிளம்பி விட்டார்.
“இன்னும் பிக் கேர்ள் ஆகணும்னா அம்மா கொடுக்குற மருந்து எல்லாம் நல்ல பொண்ணா சாப்பிடணும் சரியா” என்று குழந்தையிடம் சொன்னவள்,
தாயிடம் “பயப்படுற மாதிரி எதுவுமே இல்ல, சாதாரண காய்ச்சல் தான். அதோட சாப்பாடும் உள்ள போகலன்னதும் கொஞ்சம் வீக்கா இருக்கா குழந்தை, இந்த மருந்தக் கொடுங்க சரியாகிடும். காய்ச்சல் குறையிற வரை குடிக்க சாதாரண தண்ணி வேணா, சுடவெச்சு லேசான சூட்டோட குடுங்க” என்றாள்.
குழந்தையும் புன்னகையுடன் அவளுக்கு கை காட்டிபடி அங்கிருந்து செல்ல,
“என் ஹார்ட் பெரிசா ஹேர்ட் ஆகிடிச்சு டாக்டர். ஏதாச்சும் மருந்து இருக்கா?” என்று கேட்டபடி அவள் முன்னே வந்து அமர்ந்தான் முகிலின்பன்.
அவனைப் பார்ப்போம் என்று அவளுக்கும் தெரியும் தான். ஆனால் இப்போது அது நடந்து விட, உள்ளே இதயம் எக்குத்தப்பாய் துடித்தது அவளுக்கு…
அவளோ அங்கிருந்து எழுந்து கொள்ளப் பார்க்க, இப்போது அவள் கரம் அவன் கரத்தினுள்…
அங்கே உணவு இடைவேளைக்கு ஆட்கள் குறைந்திருந்தாலும், முற்றாக குறைந்து விடவெல்லாம் இல்லை.
தாய் வேறு எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்றிருக்க, இவளுக்குப் பயம் உள்ளுக்குள்.
அவனுக்கோ அப்படி எதுவும் இல்லை போலும், பிடித்த அவள் கரத்தை வருட ஆரம்பித்திருந்தான்.
அவன் வருடல் கொடுத்த சிலிர்ப்பை உணர்ந்தவள் தேகம் நடுங்க, “விடுங்க என்ன” என்றாள் கோபம் போல்…
“விடுறதா?? இனிமேலுமா?? மூனு மாசம் விட்டது எல்லாம் போதும். வா இப்போவே நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று எழுந்து, அவள் கரத்தைப் பற்றி இழுக்க,
சட்டென ‘அவன் செய்தாலும் செய்து விடுவான்’ என்ற பயத்தில் இருக்கையில் அமர்ந்தவள் அவனையும் அமர்த்தி இருந்தாள்.
அவள் வேகத்தில் அவன் சிரிக்க, தாய் இருந்த இடத்தின் திசையை ஒரு பார்வை பார்த்தவளோ “என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் காட்டமாய்.
“இதுக்கு நான் பதில் சொன்னா ரொம்ப பழைய சினிமா வசனமா இருக்குமே, பரவா இல்லையா?” என்று அவன் சிரிக்க, எப்போதும் போல் அவன் விழிகளும் கூடவே சிரித்தது.
அந்த விழிகளில் அவள் பார்வை நிலைக்க, கயல்மொழி மொத்தத்தையும் மறந்தாள். அவன் விழிகளுக்கு எதையோ தொலைத்தவள் போல் அவள் தேடிக்கொண்டிருக்க, மனைவியின் பார்வையை உணர்ந்தவனுக்கோ வெட்கத்தின் சாயல்…
‘இவ இப்படியே பார்த்து வெச்சு இன்னைக்கு உண்மையாவே வீட்டுக்கு கூட்டிட்டுப் போக வெச்சிடுவா போலயே! மயங்கிடாதடா இன்பா’ என்று எண்ணிக் கொண்டான்.
இத்தனைக்கும் அவள் பார்வை மாறவில்லை. அவன் மீதான ஈர்ப்பு மாறவும் போவதில்லை…
“ஹெலோ டாக்டர் மேடம், இப்படியே பார்த்துட்டு மட்டும் தான் இருப்பீங்களா, இல்ல உங்க புருசனுக்குப் பாவம் பார்த்து முத்தம் ஏதாச்சும் கொடுப்பீங்களா?” என்று கேலியுடன் வினவ,
சட்டெனப் பார்வையை மாற்றிக் கொண்டவளோ, என்ன சொல்லி சமாளிப்பது என்றே புரியாமல் விழித்தாள்.
இப்போது அவள் விழிகளில் தொலைவது அவன் முறையானது.
அவன் கரங்களினுள் அவளைக் ஆயுள் கைதியாக்க அவனது வக்கீல் மூளை வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
அதே மயக்கத்துடன் “பொம்மை” என்று அவன் அழைக்க, சில்லாய் சிதறினாள் பெண்.
“முகி ஸ்டோப், வேணா இந்தக் குரல் இந்த அழைப்பு எதுவுமே வேணாம். என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுது” என்றாள் கலங்கிய குரலில்…
“எனக்கு மட்டும் குளுகுளுன்னு இருக்கா? உன்ன பார்க்கவே வேணான்னு தானடி இருந்தேன். ஆனா உன்னோட குரல் என்ன இங்க வர இழுத்துட்டு வந்துடிச்சு” என்று அவன் சீற,
அவளோ அவனை கேள்வியாகப் பார்த்து வைத்தாள்.
அவளது பார்வையை உணர்ந்தவனோ “கிருபா கிட்ட நீ பேசினத நானும்தான் கேட்டேன்” என்றான்.
அவள் முறைக்க, “சும்மா சும்மா முறைக்காம உன் மீசைக்காரனுக்கு சீக்கிரமே ஒரு புள்ளையப் பெத்துக்கொடு. இனிமேல் நம்ம குழந்தையையும் சேர்த்துக் கொஞ்சலாம்” என்றான் சற்றுமுன் அவள் அந்தக் குழந்தையைக் கொஞ்சிய நினைவில்…
இந்த முறை கோபம் வரவில்லை மாறாக அந்த வார்த்தைகள் அவளுள் ஏக்கங்களுடனான கற்பனையையே காட்சியாய் கொடுத்தது.
அந்த நொடி பிரச்சனை என அவர்கள் வரிசைப்படுத்தி வைத்திருந்த அனைத்து செல்லாக்காசாக, அவர்களின் வருங்காலம் மட்டுமே மனதையும் மூளையையும் ஆக்கிரமித்தது.
அவள் அமைதியில் அவளது உணர்வுகளைப் புரிந்து கொண்டவன், “சொன்னா இது நடந்துடுமோ, அப்படி ஆகிடுமோன்னு பயந்து தினம் தினம் பிரிஞ்சிருந்து சாகுறத விட, சொல்லிட்டு வர்ற பிரச்சனைய சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோமேடா. நீ நினைக்கிற மாதிரி எதுவுமே ஆகாது. அப்படியே ஆனாலும் நான், உன் முகி உன்னோட இருப்பேன்ல” என்றான்.
அவள் விழிகள் அவன் பேச்சை ஆமோதிப்பதைப் போல் ஒற்றைப் பார்வை பார்த்து வைத்ததில், அந்த சிறு நம்பிக்கையே யானை பலத்தைக் கொடுத்தது அவனுக்கு…
‘என்னை ஒற்றைப் பார்வையில் கட்டிப்போடவும் கட்டுடைக்க வைக்கவும் என்னவளால் மட்டுமே முடியும்’ என்ற கர்வம் ஆணவன் கண்களில் காதலைக் கூட்டியது.
அவள் கரத்தை தன் கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவனோ,
“கயல், இங்க இப்போ உன் அம்மா என்…” என்று அவன் ஆரம்பிக்க, அவள் இதழ்கள் செல்லக்கோபத்தோடு சுருங்கியதைக் கண்டு,
“அடியேய், மனிசனோட பீலிங்ஸ் புறியாம படுத்தாதடி, இவ்வளவு நாள் பேசமாட்டாளாம் ஆனா இதுக்கு மட்டும் கோபம் வரும், எங்கிட்ட வருவல்ல அப்போ பார்த்துகிறேன்” என்றவன்,
மீண்டும் “பொம்மை, இங்க இப்போ உன் அம்மா…” என்று மீண்டும் திருத்தி நிறுத்திக் கண்ணடிக்க, அவள் முகத்தில் வெட்கப் பூக்கள்.
அப்போது சரியாய் இன்பனின் செல் சிணுங்கியது.
இருந்த மோன மனநிலையை கலைத்த கோபத்தில் அழைப்பை ஏற்றவன் “சொல்லுடா எரும மாடே” என்றான் பல்லைக் கடித்து,
“என்னது எரும மாடா? ஏன் டா சொல்லமாட்ட. நீங்க அங்க டூயட் பாட நான் இங்க காவல் காக்குறேன்ல இதுவும் சொல்லுவ இன்னுமும் சொல்லுவ. அவ அம்மா, அதான் உன் மாமியார் சாப்பிட்டு முடிச்சிட்டாங்க. அவ்வளவு தான் விஷயத்தை சொல்லிட்டேன் எக்கேடோ கெட்டுப்போ. இப்போ வெச்சித் தொலை” என்றவன்,
“இவனுங்க எல்லாம் வெச்சா குடும்பி அடிச்சா மொட்டை, பிரிஞ்சி இருந்தாலும் சாவடிக்கிறாய்ங்க சேர்ந்தாலும் சாவடிக்கிறாய்ங்களே!” என்று புலம்ப,
“இன்னும் நான் கால் வைக்கல ராசா” என்ற இன்பனுக்கு சில பல நல்ல வார்த்தைகளால் அர்ச்சனை செய்து அழைப்பை தூண்டித்தான் கிருபாகரன்.
அதில் சிரிப்பு விரிய, சத்தமாய் சிரித்தவன் அவள் முகம் பார்க்க,
“ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா” என்றாள்.
“மெதுவா தானே, சிரிக்கலாம் பேசலாம். சத்தம் இல்லாம பேச்சே இல்லாம மொத்தமா மௌனமா ஒரு விளையாட்டு விளையாடலாமா?” என்க, அவன் பேச்சு செல்லும் திக்கில் தவித்தவள் பேச்சை மற்ற எண்ணி,
“கிருபாண்ணா என்ன சொன்னாங்க?” என்றாள்.
“அவன் என்னடி அண்ணன் உனக்கு? நானும் அண்ணனா அப்போ?” என்றான் சற்று ஏறிய சுருதியில்…
“பழகிடுச்சு…” என்று மெல்லிய குரல் வர,
“பழக்கம் எல்லாம் மொத்தமா மாத்தணும் உன்கிட்ட, அத நான் அப்பறம் பார்த்துக்கிறேன். இப்போ உன் அம்மா அதான் என் மாமியார் சாப்பிட்டு இந்தப் பக்கம் தானே வரப்போறாங்கலாம்” என்றான் நன்றாக இருக்கையில் சாய்ந்தமர்ந்து,
“ஐயோ போச்சு போச்சு” என்றவள் எழுந்து செல்லப் போக,
இருமுறை சொல்ல வந்து முடியாமல் போன வசனத்தத்தை முடித்திருந்தான்.
“இங்கயே உன் அம்மாவும் இருக்காங்க என் குடும்பமும் இருக்கு, சோ இனிமேல் நான் பொறுமையா எல்லாம் இருக்க மாட்டேன். வீட்ல பேசலாம், எப்படி என்னனு விளக்கமா சொல்லுறேன் இன்னைக்கு ஈவினிங் நம்ம பண்ணை வீட்டுக்குப் பக்கத்துல இருக்க குளத்துக்கு, கிருபா கூட வந்து சேரு” என்று எழுந்து கொண்டவன்,
அவள் மறுப்பதற்குள் வேக எட்டுக்களுடன் அங்கிருந்து சென்றிருந்தான்.
அப்படியே நின்றிருந்தவளை “இங்க என்ன பண்ற கயல், இன்னும் சாப்பிடலையே நீ? போ முதல்ல போய் சாப்பிட்டு வா, வேலைனு வந்துட்டா எல்லாம் மறந்துடும் உனக்கு?” என்ற கோதையின் குரல் தான் கலைத்தது.
“என்ன நடக்கப் போகிறதோ?” என்ற எண்ணத்துடனே அவளும் அங்கிருந்து சென்றிருந்தாள்.
ஈர்க்கும்…

