
அத்தியாயம் -17
சில்லென்ற கடற்கரைக் காற்று அவளது முகத்தினை வருடிச் சென்றது.எதிரேயிருந்த ஆர்ப்பரித்த கடலலையின் சத்தம் பேரிச்சலாக இருந்த அவள் மனதினை சாந்தப்படுத்தியது.
முகத்திற்கு நேராக அடித்த வெயிலின் வெளிச்சத்தினால் கையை வைத்து மறைத்தப்படி நடந்தாள்.
“ஆதி ஆதி” என்ற அழைப்பினில் திரும்பிப் பார்க்க அவளை நோக்கி நடந்து வந்தான்.இரண்டு கைகளிலும் பையை தூக்கிக் கொண்டு வந்தான்.
ஆதிரை நிற்கவும் வியன்கா திரும்பிப் பார்த்தாள்.அன்னையை நோக்கி வருபவனைக் கண்டு ஓரளவு தெரிந்துக் கொண்டவள் கையை மேலே தூக்கி “ஹாய் தர்ஷன் நாங்க இங்கே இருக்கோம்” என்றாள்.
ஆதிரை மெதுவாக அவளை தட்டியபடி “தர்ஷன்னு சொல்லாதே அங்கிள்னு சொல்லு”
வியன்கா முடியாது என்று தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.
அவனும் பதிலுக்கு கையை ஆட்டியபடி வந்தான்.வியன்காவிடம் “ஹாய் நான் தர்ஷன்” என்று தன் கையை முன்னால் நீட்ட வியன்கா அவன் கையைப் பிடித்து குலுக்கியபடி “நான் வியன்கா” என்று சிரித்தாள்.
அவளின் கன்னங்கள் சிரிக்கும் போது கண்களை நிறைத்துக் கொள்வதை பார்த்தவன் “இன்னும் அப்படியே சிரிக்கிறீங்க” என்றான்.ஆதிரையின் முகத்தை பார்த்தவன் எப்போதும் போல் இருக்கும் புன்னகை முகம் இல்லாமல் ஏதோ கவலையாக இருந்தது அதையும் கவனித்துக் கொண்டான்.
உடனே ஆதிரை “என்னச் சொல்லுறீங்க புரியலை?”
“அதை விடுங்க வாங்க போய் எங்கேயாவது ஓரமா உட்காரலாம்” என்றான்.
உடனே வியன்கா “தண்ணீர் பக்கத்துல உட்காரலாம் அப்போத் தான் எனக்கு வீடு கட்ட ஈஸியா இருக்கும்”என்றவளிடம் தன் இரண்டு கைகளிலும் இருந்த பையிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்து விட்டு மற்ற இரண்டையும் வியன்காவிடம் கொடுத்தான்.
வியன்கா ஆவலாக “என்னது இது?’’
“திறந்து பாருடா”
அவளோ ஒன்றைப் பார்த்தாள். இவளுக்கு பிடித்த நொறுக்குத் தீனிகள் அதுவும் எல்லாம் ஆரோக்கியமானவை.
அதை அம்மாவிடம் கொடுத்து விட்டு இன்னொரு பையை திறந்துப் பார்த்தால் இவளுக்கு பிடித்ததாகச் சொன்ன பத்து வகைக்கும் மேலான வளையல்களை வாங்கி வைத்திருக்கிறான்.
அதை ஒவ்வொன்றையும் திறந்து பார்த்து அதிர்ச்சியான வியன்கா ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அவனை பார்த்து “ரொம்ப ரொம்ப தாங்ஸ் தர்ஷன்” என்றாள்.
அதைப் பார்த்து ஆதிரை “ப்ச் வியன்கா அங்கிள்னு சொல்லு”
அவளோ “முடியாது தர்ஷன் உங்களுக்கு ப்ரெண்ட்டுனா எனக்கும் ப்ரெண்ட் உங்களுக்கு ஓகே தானே” என்று அவனைப் பார்த்து கேட்டாள்.அவனும் “எனக்கு ஓகே தான் ஆதிரை” என்றான்.
இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாக இருந்துக் கொண்டாள் ஆதிரை.
வியன்கா சொன்ன இடத்தில் போய் அமர்ந்துக் கொண்டார்கள்.வியன்கா தர்ஷனிடம் “எனக்கு வீடுக்கட்ட ஹெல்ப் பண்ணுறீங்களா?”
“கண்டிப்பா என்னச் சொல்லுறீங்களோ அதைத் தான் செய்வேன்” என்று எழுந்துக் கொண்டவன் கையில் வைத்திருந்த பெட்டியை ஓரமாக ஆதிரையின் அருகில் வைத்து விட்டு “இதை பத்திரமா பார்த்துக் கோங்க” என்று சொல்லி விட்டுச் சென்றான்.
வியன்கா மணலில் விளையாடுவதற்கு என்றே கையில் பொருட்களோடு வந்திருந்தாள்.அதனால் மெதுவாக எல்லாம் ஆரம்பாத்தாள்.தர்ஷனை எடுபிடியாக வைத்துக் கொண்டாள்.
“போய் தண்ணீர் எடுத்து வாங்க,இதை இங்கே வைங்க” என்று அவள் சொன்னது எல்லாவற்றிருக்கும் இவனும் ஆமாம் போட்டு செய்துக் கொண்டிருந்தான்.
அவர்களை இவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.வியன்கா விவரம் தெரிந்த பிறகு ஆதிரையை விளையாட அழைப்பதில்லை.அவளே செய்துக் கொள்வாள்.ஆதிரை சிறிது நேரம் கடலலையைப் பார்த்த மாதிரி அமர்ந்துக் கொள்வாள்.ஆனால் இன்றோ அதற்கு மாறாக இருந்தது.
தர்ஷனிடம் அதிகாரம் செய்துக் கொண்டும் கோபித்துக் கொண்டும் சிரித்தும் பேசிக் கொண்டிருந்தாள் இதை எல்லாம் பார்த்தவளுக்கு வியன்கா தன்னால் தான் ஆசைகளை சுருக்கிக் கொள்கிறாளோ! என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது எப்போதும் கொஞ்சம் தள்ளி அமர்ந்துக் கொள்பவன் இன்று ஆதிரைக்கு அருகில் ஒரு இன்ச் இடைவெளியில் அமர்ந்தான் தர்ஷன்.
இருவரில் ஒருவர் கையை அசைத்தாலும் உரசிக் கொள்ளும் நிலையில் அமர்ந்தான்.அவளுக்கு ஒருவிதமான பதற்றமாக இருந்தது.சட்டென்று நகர்ந்துக் கொள்ள முடியாமல் தவித்தாள்.அவள் ஒன்னும் சிறு பிள்ளை இல்லையே பதறிக் கொள்வதற்கு.
ஆதிரையை குனிந்துப் பார்த்தவன் “என்னாச்சு ஏன் முகமே சரியில்லை” என்றான் அவளைப் பார்த்தபடியே….
அவன் அப்படிக் கேட்டதும் விழிகள் இரண்டும் சட்டென்று கண்ணீரை அப்பிக் கொண்டது.எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது இவ்வளவு அக்கறையான ஒரு வார்த்தையைக் கேட்டு அதுவும் ஒரு ஆண்குரலில்…
மகளின் வாழ்க்கையே இருண்ட விட்டப் பிறகு ஆதிரையின் தந்தை அவளுடைய முகத்தைப் பார்த்துக் கூட நேராக பேச மாட்டார்.தன்னால் எதுவும் செய்ய முடியாத ஒரு இயலாத நிலைமையால் தன் மகளிடம் உரிமையாக ஏன் முகமே சரியில்லை? என்று கேட்டு சரி செய்ய முடியாமல் போனதால் அந்த வார்த்தையையே தனக்குள்ளே புதைத்துக் கொண்டது ஆதிரை அறிந்த விஷயம்.அதனால் சட்டென்று முகத்தை திருப்பி சரி செய்ய முயன்றவளிடம் “ஆதி இந்தப் பக்கம் திரும்புங்க என்னாச்சு”
அவள் மெதுவாக திரும்பி ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தாள்.அவளைப் பார்த்து மெலிதாக சிரித்தவன் “இப்படி தனியா வர்றதுக்கு ஆதி தயக்கமா இருந்துச்சா?” அவள் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்தான்.
ஆதிரை அதிர்ச்சியாக பார்த்தாள்.அவனோ அதைக் கண்டு “நாம தப்பு பண்ணுறதுக்கு சின்னப் பசங்க இல்லை ஆதி.ஓரளவு வளர்ந்த பெரியவர்கள்.
இரண்டு பேருக்கும் அவங்க அவங்களுடைய வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்க முழு சுதந்திரம் இருக்கு” என்றான்.
“முதல்ல என்னைப் பற்றி முழுசா உங்ககிட்ட சொல்றேன் நான் யாருன்னு இதுவரைக்கும் உங்ககிட்ட சொன்னது இல்லைல எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு ஆதிரை ஆனால் அதைப் பற்றி சொல்வே எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு” என்றான்.அவன் சொன்னதைக் கேட்டு இவளோ பல கேள்விகளோடு “என்ன?” என்று அதிர்ச்சியாகி கேட்டாள்.
அவள் அதிர்ச்சியாகிப் போனதை பார்த்த தர்ஷன் “ப்ச் அவ்வளவு பெரிய ஷாக்கிங்கான விஷயமா சொல்லிட்டேன்” என்று சிரித்தான்.
அவளோ முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு “நான் முதல் தடவை உங்களை பத்தி விசாரிச்சப்போ எதுவுமே சொல்லலை” உரிமையாகக் கேட்டாள்.
அவனோ “ஆமாம் அப்போ நான் சொன்னதும் உண்மை இப்போ சொல்லப் போறதும் உண்மை தான்” என்றவனை புரியாமல் பார்த்தவள் “என்ன சொல்ல வர்றீங்க? தர்ஷன் நிகழ்ச்சில பேசுற மாதிரியே புதிர் போடுறீங்க” என்றாள்.
அவனோ சிரித்துக் கொண்டே “ஆதி உங்களை யோசிக்க வைக்கிறதுக்கு எனக்கு பிடிச்சிருக்கு அப்போத் தான் ரொம்ப தெளிவா இருக்கீங்க இல்லைன்னா” என்று நிறுத்தினான்.
அவளோ “இல்லைன்னான்னு ஏன் நிறுத்திட்டீங்க?” திரும்பவும் அதே யோசனையோடு கேட்டாள்.
தர்ஷன் “நீங்க யோசிக்காத போது ரொம்ப உடைஞ்சு போறீங்க என்னச் செய்றதுன்னு திணறி நிற்கிறீங்க ஆதி எனக்கு தெரியும்” என்று அவன் சொன்னதைக் கேட்டு அவள் கைகள் நடுங்கத்தைக் கண்டது.
“எ..என்ன சொல்ல வ…வர்றீங்க தர்ஷன் எனக்கு புரியலை” என்றதும்
சட்டென்று நடுங்கிய அவள் கைகளை பிடித்தவன் “எல்லாத்துக்கும் என்கிட்ட பதில் இருக்கு ஆதி என்னைப் பத்தி முதல்ல உங்களைப் பத்தி நான் தெரிந்ததையும் சொல்றேன்” என்றான்.
அவன் பிடித்த விரல்களை உதறித் தள்ளாமல் அப்படியே மெளனமாக இருந்தாள்.இரண்டு நிமிடத்தில் அவளுடைய கைகளை விடுவித்தவன் “ஆதி உங்களை மாதிரி தான் திருமணத்தை ஆயிரம் கனவுகளோடும் ஆசைகளோடும் என் வாழ்க்கையை ஆரம்பித்தேன் இரண்டு வருடமாக காதலித்த திவ்யாவை அவளோட பெற்றவங்ககிட்ட பேசி என் பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணோம்.ரொம்ப சந்தோஷமான ஜோடின்னா நாங்களாகத் தான் இருந்தோம் நினைச்சேன்.திவ்யா என்கிட்டச் சொன்னது ஒரே விஷயம் இப்போதைக்கு குழந்தை வேண்டாம்னு மட்டும் தான்.நான் அதை பெரிதாக எடுத்துக்கலை.குழந்தைன்னா பெரிய பொறுப்பு அதனால கொஞ்ச நாளைக்கு அதுல இருந்து விலகி இருக்கனும்னு நினைச்சு இருக்கான்னு நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்.
ஆனால் காரணம் அது இல்லை.திவ்யாவுக்கு இன்னொருத்தன் மேலயும் காதலாம்.அது எப்படின்னு எனக்கு புரியலை நான் நேர்ல பார்த்து கேட்டப்போ அப்படித் தான் சொன்னாள்” என்றான்.

