
அத்தியாயம் -18
ஆதிரைக்கு அவனது நிலைமையைப் பற்றி ஓரளவு புரிந்தது.அதனால் அவன் சொல்ல வருவதற்கு முன் எந்த கேள்வியும் கேட்கவில்லை.
ஆதிரையைப் பார்க்காமல் நேராக கடலைப் பார்த்தவன் “அவளுக்கு எப்படின்னு தெரியலை ஆனால் எனக்கு அதை கேட்கும் போதே ரொம்ப அருவருப்பா இருந்துச்சு நீ ஏன் இப்படி இருக்கேன்னு கேட்டப்போ வாழுற ஒரு வாழ்க்கையை இஷ்டப்படி வாழ்ந்துக்கலாம் உனக்கு ஒருத்தியை பிடிச்சிருந்தா நீயும் இப்படி வாழ்ந்துக்கோ நான் எதுவும் கேட்க மாட்டேன் நெறிமுறையே இல்லாத வாழ்க்கை வாழச் சொல்லும் அவளை நினைக்கவே வெறுப்பாக இருந்துச்சு ஒரு வருடம் முழுதாகக் கூட என்னோட திருமண வாழ்க்கை நிலைக்கலை ஆதி அப்படிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எல்லோருக்கும் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை” என்ற போது முகத்தை திருப்பிக் கொண்டான்.அவனது நிலைமையை ஓரளவு புரிந்தவள் “இதோடு இந்த பேச்சை நிறுத்திக்கலாமே! தேவையில்லாத விஷயங்களை பத்தி யோசிக்கவே வேண்டாம்னு நினைக்கிறேன்” என்று மெதுவாக அவன் தோள்களின் மேல் கைவைத்தாள் ஆதரவாய்…
சட்டென்று திரும்பிப் பார்த்தவனின் விழிகள் இரண்டும் சிவந்து போய் இருப்பதை கவனித்தவளுக்கு ஏதோ போல் இருந்தது.ஆண்கள் என்றாலே திமிரும் கோபமும் அடக்குமுறை முகமாய் கண்டவளுக்கு தர்ஷன் விசித்திரமாகத் தெரிந்தான்.
அவனோ அவளைப் பார்த்து அந்த வலியோடு சிரித்தவன் “ஆதி இன்றையிலிருந்து நாம ஒருவொருக்கொருவர் புரிந்து தெரிந்து நம்மை நாமே முழுசா அறிந்துக் கொண்டால் தானே வாழ்க்கை தித்திப்பா இருக்கும்னு நினைக்கிறேன் அதனால எனக்கு பிடிக்கலைன்னாலும் என் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லனும்” என்றான்.
அவளோ சம்மதம் என்பது போல் தலையசைத்தாள்.
தர்ஷன் “அந்த வாழ்க்கையை நான் நினைச்சது போல் ரொம்ப ஈஸியா விட முடியலை அதுக்கு அவளும் விடலை.திவ்யா இஷ்டப்படி வாழட்டும்னு முடிவு செய்து நான் விவகாரத்து செய்ய கோர்ட்டுக்கு போனால் என் மூலமா அவளுக்கு இருக்கிற ஆதாயங்களை விட்டுக் கொடுக்க விருப்பமில்லை.அதனால என் மேல தேவையில்லாத அவதூறுகளையும் பொய்களையும் அவளும் அவளுடைய பெற்றோர்களும் சேர்ந்து சொன்னாங்க அப்பவே பெண்கள்னா இப்படித் தானோன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டேன் ஆனால் அப்படி இல்லைன்னு புரிய வைச்சதே நீங்க தான் ஆதி” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் ஆதிரையின் மனதில் தோன்றியது இது தான் ஆண்கள் மட்டும் தான் மோசடி செய்கிறவர்கள் என்று கிடையாது பெண்களிலும் இப்படி இருக்கத் தான் செய்கிறார்கள்.மொத்தத்தில் இந்த உலகத்தில் தான் எந்த உயிரினங்களுக்கும் எவ்வகையான துன்பத்தை இழக்காமல் வாழ்வியல் நெறியோடு வாழ்வதே உண்மையான மனிதன் என்பதே நிதர்சனமான உண்மை’ என்று நினைத்தவள் “என்னை சிந்தியா கல்யாணத்துல தானே பார்த்தீங்க” என்றாள் கேள்வியோடு…
“இல்லை அங்கே முதல் தடவை பார்க்க வில்லை”
“அப்போ எங்கே என்னை பார்த்தீங்க?”
“நீதிமன்றத்தில் வியன்காவுக்கு இரண்டு வயசு இருக்கும்னு நினைக்கிறேன் அவளை கையில் தூக்கி வைச்சுட்டு முகம் முழுவதும் வியர்வை பதற்றத்தோடு நின்னுட்டு இருந்தீங்க” என்றான்.
இவளோ விழிகள் விரித்து “அப்பவே தெரியுமா?” என்று கேட்கவும் “தெரியாது நீங்க யாருண்ணே தெரியாது ஆனால் என் பக்கத்துல நின்னுட்டு இருந்தது இப்பவும் நினைவு இருக்கு என் அம்மாவும் உங்க கையில இருந்த வியன்காவை வாங்கி வைத்திருந்தாங்களே!” என்ற போது அன்றைய நிகழ்வுகள் அவளுக்கும் நினைவில் வந்து போயின.
அரவிந்த் உடனான வாழ்க்கையில் குழந்தை பிறந்த பிறகும் எந்த மாற்றமும் இல்லாததாலும் அவனுக்கு பெண் குழந்தை பிறந்ததிலும் அவ்வளவாக விருப்பம் இல்லாததால் வியன்காவை அவன் கொஞ்சி பேசி ஆசையாய் தூக்கியது இல்லை.ஆதிரை ஒவ்வொரு முறை பிரச்சினை என்று வீட்டுக்கு வரும் பொழுது அவளது அண்ணன் ஆதிரையிடம் சமாதானம் பேசி திரும்ப அரவிந்தின் வீட்டிற்கு அனுப்பி விடுவான்.
ஒருமுறை ஆதிரையை தனியாக அழைத்து அரவிந்த்தோடு எப்படியும் அனுசரித்து வாழ்ந்துக் கொள் என்று முடிவாகச் சொல்லி விட்டான்.அதனால் வீட்டிற்கு தெரியாமல் ஆதிரையே விவகாரத்திற்கு நீதிமன்றத்தை நாடினாள்.
அவனோ அவளை பல விதத்தில் கேவலமாகி பேசி அசிங்கப்படுத்தினான்.
இதனால் யாருமில்லாத அந்த நேரத்தில் அவனுடான கடைசி சந்திப்பினில் அரவிந்த் சொல்லப் போகும் வார்த்தைகளுக்கு பயந்து மனதளவில் உடைந்து போய் அன்று நின்றதும் அப்போது இவளுக்கு அருகில் கை மரத்துப் போகும் அளவிற்கு பிள்ளையை பிடித்துக் கொண்டிருந்தவளை பக்கத்தில் நின்ற பெண்மணி “எம்மா எவ்வளவு நேரமா பிள்ளையை கையில் வைச்சு இருப்பே என்கிட்ட கொடும்ம நான் கொஞ்ச நேரம் வைச்சுக்கிறேன்” என்று வாங்கிக் கொள்ள எத்தனிக்க “பரவாயில்லை” என்று அவள் மறுத்தும் குழந்தையை வாங்கி வைத்திருந்ததும் அப்போது பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தவனிடம் ஏதோ மெதுவாகச் சொன்னார்.
அவனும் சிறிது நேரத்தில் கையில் ஒரு பாட்டிலோடு வந்தான்.அதை வாங்கி ஆதிரையிடம் “இதை குடிம்மா பார்க்க ரொம்ப டயர்டா இருக்கே இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியலை” என்று அவள் மறுத்தும் அதைக் கொடுத்து குடிக்கச் சொன்னார்.அதற்குப் பிறகு தான் அவளுக்கு கொஞ்சம் படபடப்பு நின்று இருந்தது.
திடீரென்று ஏற்பட்ட வலியோடு அவசரமாக ஆதிரை அவளுடைய கால்களை நகர்த்தும் போது அவனும் அந்தப் பெண்மணியும் காலில் இருக்கும் காயத்தைப் பார்த்து “என்னம்மா இது இப்படி காயமா இருக்கு?” என்று விசாரித்தார்.
அதற்கு ஆதிரை “கண்ணாடி க்ளாஸ் உடைஞ்சுப் போச்சு தெரியாமல் அதன் மேல் மிதிச்சிட்டேன்” என்று சொன்னது போது அவள் கண்கள் இரண்டும் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.அவளது நிலைமையை ஓரளவு புரிந்தவர்கள் அமைதியாக இருந்துக் கொண்டார்கள்.அதோடு அவர்கள் செல்லும் வரை வியன்காவை கையில் வைத்திருந்து பார்த்துக் கொண்டது நினைவுக்கு வந்தது.
ஆதிரை அதிர்ச்சியோடு…“அன்னைக்கு நீங்களா பக்கத்துல இருந்தீங்க”
“ஆமாம்” என்றான்.
“எனக்கு தான் உங்களை யாருன்னே அடையாளம் தெரியலை” என்றான்.
“நீங்க தான் என்னை நிமிர்ந்து முகத்தையே பார்க்கலையே உங்க சூழ்நிலைனால அப்படியே உறைந்துப் போய் இருந்தீங்க”
நீண்ட பெருமூச்சு விட்டவள் “அன்னைக்கு நடந்த நிகழ்வுல இவ்வளவு ஒரு சுவாரஸ்யமான விஷயமும் சேர்ந்து இருக்கும்னு நான் நினைக்கலை தர்ஷன் அந்த நாளை நினைத்தாலே இன்னும் எதிர் கொள்ள முடியலை ஆனால் அதுலயும் ஒரு நல்ல நினைவு இருக்குன்னு நினைக்கிறப்போ இந்த வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் எதிர்பாராத ஒரு நிகழ்வை நமக்கு கொடுத்து இருக்கு” என்ற போது அழகான சில்லிட்ட ஒரு தென்றல் காற்று அவர்களை இருவரையும் மட்டுமல்லாது அங்கிருந்த எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு ஆறுதலை தந்துச் சென்றது.
தன் பக்கத்தில் இருந்த அந்த சின்னப் பெட்டியை எடுத்து அவளது கையில் கொடுத்தவன் “இது உங்களுக்கான கிப்ட்” என்றான்.
அவள் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டாள்.
அவனோ அவளைப் பார்த்து “திறந்து என்ன இருக்குன்னு பாருங்க”
அவளோ “இப்பவே பார்க்கட்டுமா?”
ஆமாம் என்று தலையசைத்தான்.ஆதிரை ஆர்வமாக அந்த பெட்டியின் மேல் இருந்த காகித்தை பிரிக்கும் போது அதற்கு மேல் இவளுடைய பெயரை எழுதாமல் “என்னவள்” என்று குறிப்பிட்டு இருந்தாள்.
அதைப் பார்த்ததும் ஏதோ மனம் முழுவதும் அன்பு நிறைந்து போய் இருந்தது.பெரிய விஷயங்களை செய்து தான் தன் அன்பை நிரூபிக்க வேண்டியது இல்லை.சின்னச் சின்ன விஷயங்களில் கூட தன்னை நினைப்பதில் தானே இந்த காதலும் நிறைந்து போகுது.
அதைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவளை கண்டுக் கொண்டவனின் முகத்திலும் ஒரு புன்னகை.அந்த காகிதத்தை கிழியாமல் பிரித்து முதலில் தன் கைப்பையில் வைத்துக் கொண்டாள்.அந்த பெட்டியை திறக்க அதில் அழகான கண்ணாடி வளையல்கள் இருந்தது.அதைப் பார்த்ததும் இவனை பார்த்தாள்.
அவனோ “நல்லா இருக்கா?”
“ம்ம்… நல்லா இருக்கு”
“அவ்வளவு தானா?”
“வேற என்னச் செய்யனும்?”
“உங்க கையில் போட்டு எனக்கு காட்டு”என்றான்.
அவன் அப்படிச் சொன்னதுமே நினைவுகள் பின்னோக்கிச் செல்வதை தடுத்தவள் இந்நேர கணத்தை முழுதாய் அனுபவிக்க அதை எடுத்து தன் கையில் போடப் போகும் போது அதை வாங்கி தன் கைகளாலேயே போட்டு விட்டான் தர்ஷன்.
இரண்டு கைகளிலும் அதிலிருந்த எல்லா வளையல்களையும் போட்டு விட்டான்.அதுவரை வெற்றிடமாக இருந்த அவளது கரங்களை வண்ணங்களால் நிரப்பினான்.அவள் கைகளை லேசாக அசைக்கவும் அதிலிருந்து வந்த சத்தத்தில் கேட்டு “இனிமேல் ஆதி நீ என்கிட்ட வரும் முன்னாடியே இந்தச் சத்தம் நீ தான்னு எனக்கு காட்டி கொடுத்துடும் உன்னையும் என் பொண்ணையும்” என்றான் நிறைவான அன்பாக….
ஆதிரை “அப்போ தெரிஞ்சேத் தான் சிந்தியா கல்யாணத்துக்கு வந்தீங்களா?”
“இல்லை நீயும் அங்கே இருப்பேன்னு தெரியாது ஆனால் அன்றைக்கு கோர்ட்ல சந்திச்ச நிலைமை உனக்கும் எனக்கும் சரியான நேரம் கிடையாது ஆனால் ஒரு நம்பிக்கை திரும்ப சந்தித்தால் அதோட இதை விட்டுடக் கூடாதுன்னு ஒரு எண்ணம் இருந்துச்சு அதை மறந்தும் போய்ட்டேன் நாலு வருஷம் கழிச்சு திரும்ப சந்திக்கவும் இம்முறை எப்படியும் பேசிடனும்னு முடிவு செய்தேன் ஆனால் என் குரலை இரண்டு வருஷமா தினந்தோறும் கேட்டுகிட்டே இருக்கேன்னு சொல்லவும் இந்த பந்தம் தொடரத் தான் இத்தனையும் என் மனசு சொல்லிச்சு” என்றான்.
அவன் சொல்லச் சொல்ல ஏனோ எல்லாம் அவர்களுக்காவே இருந்தது.ஏதோ ஒரு தொடர்பு எல்லாவற்றிலும் இருப்பது அவளுக்கும் ஆச்சரியமாய் இருந்தது.
அப்போது வியன்கா ஓடி வந்து “அம்மா நான் கட்டின வீட்டைப் பாருங்க” என்றாள்.இருவரும் அவள் கட்டியிருந்த வீட்டைப் பார்த்தனர்.
“ரொம்ப அழகா இருக்கு” என்றாள் ஆதிரை.
தர்ஷன் எழுந்து இருட்டிக் கொண்டிருந்ததால் “வீடு அழகா இருக்கு ஆனால் வெளிச்சமே இல்லை” என்று தன்னிடம் இருந்த கைப்பேசியில் இருந்த வெளிச்சத்தை வைத்து அந்த மணல் வீட்டின் அருகே வைக்கவும் அந்த மஞ்சள் நிறத்தில் அழகாக மிளிர்ந்தது.
அதைப் பார்த்த சந்தோஷத்தில் வியன்கா துள்ளிக் குதித்து “ஹே… சூப்பரா இருக்கு” என்று தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு குதித்தாள்.கை அசையவும் அணிந்திருந்த வளையல் லேசாக சப்தத்தை வெளிப்படுத்தியது.
நம் மனநிலை மாறும் போது சூழ்நிலைகளும் அதற்கு ஏற்றார்போல தன்னையும் மாற்றிக் கொள்ளும்.இருவரையும் நிற்க வைத்து ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டவன் அடுத்த புகைப்படத்தில் தன்னையும் சேர்த்து இணைத்துக் கொண்டான் மூவராக…
வியன்காவும் தர்ஷனும் கடலில் நின்று கொஞ்ச நேரம் அலையில் கால்களை நனைத்து விளையாடிக் கொண்டிருக்க ஆதிரை ஓரமாக உட்கார்ந்து இருந்தாள்.
வியன்கா அவளையும் கட்டாயப்படுத்தி கடல்நீரில் நனைய வைத்து பின்னர் மூவருமாக நடக்கத் தொடங்கினர்.வியன்காவும் தர்ஷனும் ஏதேதோ பேசி சிரித்தப்படி நடக்க அவர்களுக்கு பின்னால் இரண்டு அடி இருவரையும் பார்த்து சிரித்தப்படி நடந்தாள் ஆதிரை.
இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும்
இல்லையே கடலலை போல
வந்து கரைகளை அள்ளும்
ஒன்று முழுகிட மனதும் பின்
வாங்கவில்லையே…
கடற்கரையை தாண்டி சாலைக்கு செல்வதற்காக வந்து நிற்கவும் தர்ஷன் ஆதிரையிடம் “வெயிட் பண்ணுங்க நான் போய் என் காரை எடுத்துட்டு வரேன்” என்றதும் ஆதிரை “நான் ஆட்டோல போறேன்” என்றாள்.அதற்கு அவள் மறுத்தும் இவன் பிடிவாதமாக சென்று இருந்தான்.

