Loading

“தொட தொடமலர்ந்ததென்ன பூவே

தொட்டவனை மறந்ததென்ன”…

என்ற பாடல் வானொலியில் ஒலித்துக் கொண்டிருக்க 

 

அதை சாய்விருக்கையில் அமர்நது கண்மூடி ரசித்துக் கொண்டிருந்தாள். 

 

அந்த இள வயதில்

ஆற்றங்கரை மணலில்

காலடித் தடம் பதித்தோம்

யார் அழித்தார்…..

 

என்று தொடர்ந்த பாடல் வரிகள் அவளவனின் நினைவுகளை தூண்டில் போட்டிழுத்து புன்னகைக்கச் செய்தது.

அசையக்கூட தோன்றாமல் அந்த பாட்டையே இரசித்துக் கொண்டிருந்தாள்.

 

“பிரித்விகா!” என்று ஒலித்த குரல் அவளை நனவுலகிற்கு திருப்பியது.

 

“ஆன்ட்டி!” 

நிமிர்ந்து புன்னைகையோடு நின்றிருந்த பிரபாவதியைப் பார்த்தாள்.

 

“முழிச்சு தான் இருக்கியா? தூங்கிட்டியோ னு நினைச்சேன்”

 

“ஹி ஹி அது…பாட்டு நல்லா இருந்துச்சா”

 

“சரி சாப்பிட வா. இந்த மதி பய கிட்ட இருந்து ஒரு கோல் ல காணோம். என்ன தான் வேலையோ” 

அவர் ‘மதி’ என்று சொல்லும் போதே அவள் கண்கள் மின்னியதையும் அவர் 

கவனிக்கத் தவறவில்லை. ஆனால் அவளிடம் காட்டிக்கொள்ளாது சாப்பாட்டு மேசை அருகே சென்றார்.

 

அவளும் பின் தொடர்ந்து என்றுமில்லாத அமைதியாய் போய் இருக்கையில் அமர்ந்தாள். சாப்பாடு தட்டைத் தவிர அவள் பார்வை வேறெங்கும் செல்லவில்லை. ஆனால் சிந்தனை தான் இங்கில்லை.  

 

தட்டில் இட்லிக்கு சாம்பார் வைக்க முன்னமே அதைப் பிய்த்து வாயில் அடைத்துக் கொண்டிருந்தாள். 

 

ஆராத்யா மெதுவாக அவளின் காதருகே குனிந்து “அண்ணி, சாம்பார் இன்னும் வைக்கல”

 

அவள் ‘அண்ணி’ எனும் போதே திடுக்கிட்டு நிமிர அவளோ ஒன்றுமே தெரியாதது போல “அக்கா தட்டுல சாம்பார் இன்னும் வைக்கல” என்றாள்.

 

“நீ…நீ இப்போ என்ன சொன்ன?”

 

“அக்கா!!! தட்டுல சாம்பார் வைக்கல” னு சொன்னேன். 

 

“அக்கா னா சொன்ன?”

 

“ஆமா. ஏன் கேக்குறிங்க?”

 

“இல்லை ஒன்னுல்ல”

 

‘நாம தான் தப்பா கேட்டுட்டமோ வர வர நமக்கு எல்லாம் தப்பு தப்பாவே கேக்குது’ மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசி விட்டு பிரபாவதியின் கையிலிருந்த கரண்டியை எடுத்து சாம்பாரை அவளே  போட்டு உண்ணத் தொடங்க

 

அம்மாவும் மகளும் அவளைப் பார்த்து அமைதியாக சிரித்தனர்.

 

“அம்மா!! மதி லைன்ல”  என்று சந்தோஷமாக கூவியவாறு ஃபோனை ஸ்பீக்கரில் போட்டாள்.

 

“ஹலோ ம்மா” என்றவனின் குரலை நிமிர்ந்து காதைக் கூர்மையாக்கிக் கேட்டாள்.

 

“ஏன் டா ஃபோன் பண்ண இவ்ளோ நேரம்?”

 

“அம்மா….நான் இப்போ ஒரு விஷயம் சொல்லும் போது உங்க கண்ணு ரெண்டும் தெரிச்சு விழும் பாருங்களேன்”

 

“எனக்கு புரியல டா” எனும் போது மற்ற இருவரும் அவரது நிலையிலேயே இருந்தனர்.

 

“இன்னும் பத்து நிமிஷத்துல வீட்ல இருப்பேன்”

 

“என்ன???” என்று அவர் விழிக்க பிரித்வி யோ ஒரு படி மேலே போய் இருக்கையிலிருந்து எழுந்தே விட்டாள்.

 

நான்கு வருடம் வேலைக்காக ஜேர்மன் சென்றவன், அடுத்த மாதம் விடுமுறைக்காக வருகிறேன் என்று சொல்லி விட்டு இன்று திடீரென்று வந்தது இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

“ஹா ஹா ஹா

நான் இப்போ வந்துட்டு இருக்கேன். ஃபோன வைக்கிறேன்” என்று வைத்து விட தாயும் மகளும் பரபரப்பாகினர். 

 

பிரித்வி உடனே ஆன்ட்டி நான் வீடு வரைக்கும் போய்ட்டு வாரேன் என்று சாப்பிட்ட  கையைக்கூட கழுவாமல் எதிரில் இருக்கும் தன் வீட்டிற்கு விரைந்து ஓட மற்ற இருவரும் ஒரு நிமிடம் புரியாது  நின்று விட்டு பின் வேலையை தொடர்ந்தனர்.

 

மதியழகன் வீட்டிற்கு எதிரில் பிரித்வியின் குடும்பம் குடியேறிய போது முதலில் சம்பிரதாயமாக பேசியவர்கள் பின் நெருங்கிய நண்பர்களாகினர். 

அதில் மதி படிக்கும் பள்ளியிலே பிரித்வியையும் படிக்க வைத்தனர். பிரித்வி, மதியை விட மூன்று வயது சிறியவளானாலும் இவ்விருவரிடையே வயது வித்தியாசம் தென்பட்டதில்லை. ஏனெனில் அவர்களது நட்பு என்ற பாலத்தில் மரியாதை எல்லாம் பல மைல் தூரத்திற்கு பறந்து சென்றது. 

 

மதி அவளது நண்பனாக மட்டும் இல்லாமல், மறைந்த அவள் தந்தைக்கு பதிலாக தந்யையாகவும் இருந்தான்.   இருவரிடமும் பகிரப்படாத விடயங்களே இல்லை. வீட்டுக்கு தெரியாமல் படம் பார்க்க பிளான் போட்டு செல்வது தொடக்கம் சைட் அடிப்பது வரை எல்லாமே அடக்கம்.

 

ஆனால் இவள் மனதில் காதல் பூத்தது தான் எல்லோரையும் வியக்க வைத்ததோடு நிறைவான உணர்வையும் கொடுத்தது, மதியை தவிர. அவனிடம் அவள் மறைத்த ஒரே விடயம் இது தான்.

 

பருவம் எய்திய போது ஏற்பட்ட இயல்பான விலகல் இவள் மனதில் ஈர்ப்பை விதைத்தது.  நாளாக நாளாக ஈர்ப்பைத் தாண்டிய ஒரு உணர்வை உணர்தாலும் அது என்ன என்று புரியாது தவித்தாள்.

அவனது ஒவ்வொரு செயலும் புதிதாக தெரிந்தது. 

 

இவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது அவள் தலையில் வேணும்மென்றே குட்டுவது….

 

அவள் சோகமாக இருக்கும் போது அவளை சீண்டி விட்டு கோபப்படுத்தி இலகுவாக்குவது….

 

பக்கத்து வீட்டு மாலாக்காவை சைட் அடிக்கிறேன் என்று கடுப்பாக்குவது…

 

கழுதை வயதானாலும் மணலில் வீடு கட்டி விளையாடும் போது உதவியாக இருப்பது…

 

அவள் அம்மாவிடம் சண்டை போட்டு பேசாமல் இருக்கும் போது இருவருக்குமிடையே தூது போவது…

 

அவள் தம்பியுடன் சேர்ந்து வம்பிழுப்பது…

 

 

அவள் பிறந்த நாளிற்கு தானே சமைத்து கொடுப்பது…

 

காய்ச்சல் என்று படுத்தால் அவளைத் திட்டிக்கொண்டே அவளுக்கு உதவுவது….

 

இரவு நேர வகுப்புகளுக்கு இவளுடனே நடந்து  பாதுகாப்பாக அழைத்து செல்வது…

 

அவள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி திருத்துவது…

 

 

என்ற பல நினைவுகள் அவளது அழியா பொக்கிஷமாகியது. 

 

அவன் எப்போதும் நீள் கை சட்டையை  அணியும் போது அதை கைமுட்டி வரை மடித்து விடும் போதும் , 

 

அவன் நெற்றியில் துள்ளி விளையாடும் முடியை கோதி விடும் போதும்,

 

தம்பியின் தோளில் கைபோட்டு சிரித்து பேசும் போதும்,

 

ஒற்றைப் புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்கும் போதும்,

 

அவளை வம்பிழுக்கும் போது கண்ணடித்து விட்டு புன்னகைக்கும் போதும்,

 

திருவிழாவின் போது வேட்டி கட்டி அதன் ஒரு நுனியை கையில் பிடித்து கம்பீரமாக நடக்கும் போதும்,

 

கோபப்படும் போது அவன் மூக்கும் காதும் இயல்பாக சிவக்கும் போதும், 

அவனை இரசிப்பாள்.

 

அவனுக்கு வேலை கிடைத்ததும் முதலில் அதை பகிர்ந்து கொண்டது பிரித்வியிடம் தான். ஆனால் அது வெளிநாட்டில் என்றவுடன் அதைத் தாங்கிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டாள். அவள் காதலையும் உணர்ந்தாள். 

 

ஆனால் அவள் காதலை சொல்ல தயங்கினாள். காரணம், அவளது

சற்று பருத்த உடம்பு, மாநிறம் 

அவனுக்கு சற்றும் பொருத்தமற்றது என்று

அவளே நினைத்தாள். ஆனால் அவன் உருவத்தைப் பார்ப்பவன் அல்ல மனதைப் பார்ப்பவன் என்பதை உணராது போனாள். அத்தோடு இத்தனை நாளும் நட்பு என்று உறவாடி விட்டு காதலை உள் நுழைத்தால் அது தவறாகி விடுமோ,தன்னை அவன் வெறுத்து விடுவானோ என்று பயந்தாள். அவளை விட ஒரு நல்ல பெண் அமைய வேண்டும் என்றே நினைத்தாள். அதனால் தன் காதலையும் வெளிப்படுத்த தயங்கினாள். தயங்கினாள் என்பதை விட மறைத்தாள்.

 

அவன் அவளை விட்டு வெளிநாடு சென்ற போதும் சரி இப்போதும் சரி அவன் மேல் உள்ள காதல் சற்றும் குறையவே இல்லை என்பதை உணரந்தே இருந்தாள். 

 

அவன் அழைப்பு வந்ததுமே துள்ளிக் குதிக்கும் மனதை அடக்க கஷ்டப்பட்டாள்.

அவனின் நினைவுகள் தனிமையில் அவளை புன்னகைக்க வைத்தன. அவனிடம் சற்று விலகி இருக்க நினைத்து பேச்சை குறைத்தாலும் அவனைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதையோ இல்லை விசாரிப்பதையோ நிறுத்தவில்லை. 

 

ஒரு கட்டத்தில், அவளிடத்தில் வேறு பெண் வந்தால் அதை தன்னால் ஏற்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து இறுதியில், தெளிவாக

இருந்த மனம் குழம்பத் தொடங்கியது.

 

வீட்டில் எல்லோருக்கும் இவள் மனது புரிந்தாலும் அதில் தலையிடாமல் இவர்களே பேசி முடிவெடுக்கட்டும் என்று காத்திருந்தனர்.

 

இவள் குழப்பத்தையும் விலகலையும் அவன் உணர்ந்தானோ என்னவோ,

இன்று பறந்து வந்து விட்டான்.

 

“அம்மா! அம்மா! ” என்று கூவிக்கொண்டு கேப் பிலிருந்து பைகளை இறக்கி விட்டு வாயிலில் நின்றான் மதியழகன்.

 

ஆராத்யா, வந்தது அண்ணன் என்று தெரிந்தாலும் “அம்மா! வெளிய பிச்சைக்காரன் வந்துருக்கான் பழைய சோறு இருந்தா கொண்டு வந்து போடு” என்று வாயிலில் நிற்க 

 

அவனோ பாய்ந்து வந்து அவளின் கழுத்தை வலது கையால் வளைத்து குனிய வைத்து தலையில் கொட்டிக் கொண்டே “நான் உனக்கு பிச்சக்காரனா டி. சொல்லுடி”என

 

“ஆ…வலிக்குது விடுடா” என்று அலற 

 

பிரபாவதி அவளின் கையை அடித்து விலக்கிவிட்டு பின் ஆரத்தி தட்டை எடுத்து ஆரத்தி எடுத்தார்.

 

அவனும் புன்னகையுடனே பார்த்திருந்தான். 

 

பிரபாவதி அவன் முகத்தைப் பற்றி கொஞ்சி “எவ்ளோ களைச்சு போயிருப்ப. நாம அப்றம் எல்லாம் பேசுவோம். நீ வாடா கண்ணா”என்று உள்ளே அழைத்து செல்ல

 

ஆராத்யா,” ஹெலோ இந்த பை எல்லாம் யார் கொண்டு போறது?”

 

மதி சாவகாசமாக அவளைப் பார்த்து திரும்பி “அதான் மண் லாரி நீ இருக்கியே” என்று விட்டு உள்ளே ஓடிச் சென்றான்.

 

இவளோ புஸ் புஸ் என்று மூச்சை இழுத்து விட்டபடி பையை எடுத்து வைத்தாள்.

 

அதுவரைக்கும் இவர்களது பாசப்போராட்டம் ஓயவில்லை. 

 

மதி,” ஆமா….எங்க அந்த பிசாசு? வரலயா இன்னைக்கு” என்று எதிர் வீட்டைப் பார்த்து அளந்தபடி கேட்டு முடிக்கவும் அவள் வீட்டிலிருந்து ஓடி வரவும் சரியாக இருந்தது.

 

மூச்சு வாங்க நின்றவளை ஒரு கணம் இரசித்து பார்த்தான். அதை அவள் உணரும் முன்னே பார்வையை மாற்றிக்கொண்டு

 

“ஹே…குரங்கு குட்டி! ஏன் இப்பிடி ஓடி வார?” என்று சிரித்துக் கொண்டே கேட்க

 

அவளோ இமைக்கவும் மறந்தாள்.

 

அவன் முன்னே சற்றேனும் அழகாக தெரிய வேண்டும் என்று அலுமாரியெல்லாம் புரட்டி எடுத்து தெரிவு செய்து கலைந்து கிடந்த தலையை வாரி பிரெஞ்ச் பிளட் போட்டு கண்ணுக்கு மையும் தீட்டி முடிக்க நேரமாவதை உணர்ந்து ஓடி வந்தவள்,

 

தன் முன்னே டிரிம் செய்யப்பட்ட தாடி மீசையுடன் சற்று வெளுத்திருந்த தோளோடு ட்ராக் ஷு, டெனிம் ஜீன்ஸ், ரொலெக்ஸ் வாட்ச், கிரே கலர் டீ சர்ட் அணிந்து இருகைகளையும் பாக்கெட்டில் புதைத்து கதவு நிலையில் சாய்ந்து அவளைப் பார்த்து நின்றவனை பார்த்தவள் முகம் காதலால் மின்னியது. 

 

அவனும் நிமிர்ந்து அவளருகில் வந்து அவள் தலையில் கொட்டி “என்ன?” என்றான்.

 

அவனது ஒற்றைக் கேள்வியில் நிகழ்காலத்திற்கு திரும்பி அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அந்த நிமிடம்,  தான் அவனிடமிருந்து விலக வேண்டும், அவனுக்கு தான் பொறுத்தமற்றவள் என்ற எண்ணத்தையெல்லாம் தாண்டி அவனையே சரணடைந்திருந்தாள். அவனும் அவளை ஆதரவாக அணைத்திருந்தான்.

 

பிரித்வி வெளியே வேகமாக ஓடி செல்வதைப் பார்த்து பதட்டத்தில் வெளியே வந்த அவள் தாய் பார்வதி யும் அவனைப் பார்த்து மகிழ்ந்து போனாள். 

“மதி!!” என்றழைத்து அவனை நெருங்கும் போது தான் 

பிரித்வி தான் நிற்கும் நிலையை உணர்ந்து பதறி விலகினாள். அவள் விலகலையும் பதட்டத்தையும் அவனும் கவனித்திருந்தான்.  

 

“வாங்க ஆன்ட்டி! ” 

 

“வா ரக்ஷன்” என்று அவனை தன் கையணைவுக்கு கொண்டு வந்தான்.

 

பார்வதி “எப்பிடி பா இருக்க? நீ வந்ததை இவ சொல்லவே இல்ல பாரேன்”

 

“ஹா ஹா நான் ஸப்ரைஸா தான் வந்தேன். ஏன் வெளிய நிக்கிறீங்க? உள்ள வாங்க” என்று அழைத்து சென்றான்.

 

ஆராத்யாவையும் பிரித்விகாவையும் சமைலறைக்கு அனுப்பி காஃபி போட சொல்லி அனுப்பி வைத்து விட்டு இவர்கள் சந்தோஷமாக கதையடித்தனர்.

 

பெண்கள் இருவரும் வேலையை தொடர்ந்தபடியே இவர்கள் பேசுவதையும் கேட்டுக்கொண்டிருந்தனர். முக்கியமாக மதி பேசுவதை.

 

“நான் வெளிநாட்டுல இருந்தது போதும் னு தோனுச்சு. அதோட நம்ம பிரெண்ட்ஸ் கொஞ்ச பேர் சேர்ந்து சொந்தமா ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். ஆல்ரெடி ஆன்லைன்ல ஸ்டார்ட் பண்ணோம். இப்போ ஒரு ஆபிஸ் போட வேண்டியது தான் பாக்கி. அதோட எனக்கு இதுக்கு மேல யாரையும் பிரிஞ்சிருக்க முடியாது ” எனும் போதே வெளியில் சென்று அவசரமாக ஓடி வந்த இவன் தந்தை குலசேகரன் “நீ கண்டிப்பா ஜெயிப்ப டா மகனே” என்று வாழ்த்தினார்.

 

அவனும் எழுந்து வந்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினான்.  

 

ஆராத்யா,” அக்கா, பாத்தியா? அவனுக்கு னா எல்லா ஓடி வராங்க”என்றாள் அவளையும் சேர்த்து 

ஆனால் அவளோ கருமமே கண்ணாக இருந்தாள். 

 

பிரித்வி காஃபியை கொண்டு வந்து எல்லாரிடமும் கொடுத்து விட்டு அமர மீண்டும் அரட்டை ஆரம்பமானது.

 

வெகு நாட்களுக்கு பிறகு வந்தவனுக்கான கவனிப்பைப் பற்றி சொல்லவா வேண்டும் அதெல்லாம் சிறப்பாக நடந்தது. 

 

நாட்கள் அதன் போக்கில் செல்ல மதியும் அவன் வேலைகளை ஆரம்பித்தான். தந்தையையும் ஓய்வாக வீட்டில் அமர வைத்தான். 

அத்தோடு தங்கச்சியோடு செல்ல சண்டை, அன்னையோடு பாசப்போராட்டம், எதிர் வீட்டில் ராஜ மரியாதை என்று அவனது நாட்கள் மகிழ்ச்சியாக கழிந்தது.

 

பிரித்வி அன்று அவனை அணைத்ததிலிருந்து அவளாக அவனை நெருங்குவதில்லை. ஒரு ஒதுக்கத்தை காட்டி வந்தாள். அவனும் அதை கண்டு கொண்டது போல் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவனைப் பார்ப்பதை தவிர்க்கவில்லை. தினமும் சென்று பார்த்து விட்டு வருவாள். அதுவும் ஒரு பத்து நிமிடம் தான். 

 

இப்படியே நாட்கள் மாதங்களாகி இரண்டு வருடம் கடந்து செல்ல

மதியின் சாஃப்ட்வேர் கம்பனி நல்ல மதிப்பை பெற்றிருந்தது. அவனுக்கென்று ஒரு நீல நிற காரும், தங்கைக்கும் பிரித்விக்கும் வெஸ்பா பிறந்தநாள் பரிசிற்காக வாங்கிக்கொடுத்திருந்தான். பிரத்வி வாங்க மறுக்க அவளை மிரட்டி வாங்க வைத்தான். குடும்பத்தையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருந்தான். ரக்ஷனும் நல்ல கல்லூரிக்கு சேர வழிநடத்தியிருந்தான்.

 

பிரித்வியும் லோ முடித்து ஜூனியராக வேலை செய்ய, ஆராத்யாவும் பி-டெக் இறுதி வருடத்தில் இருந்தாள்.

 

பார்வதி, மதிக்கு குலாப் ஜாமூன் பிடிக்கும் என்று செய்து ஒரு டப்பாவில் அடைத்து பிரித்வியிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னார்.

 

அவளும் உற்சாகமாக எடுத்துக் கொண்டு வீட்டின் வாயிலை அடைந்ததும் அங்கே அன்னைக்கும் மகனுக்கும் காரசாரமான விவாதம் நடைப்பெற்றுக் கொண்டிருக்க, தந்தையும் மகளும் ஏதோ கிரிக்கட் மேச் பார்ப்பதைப் போன்று அதை பார்ப்கோன் சாப்பிட்டுக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர். பிரித்வியும் சுவாரஸ்யமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

” அம்மா சொன்னாக் கேளுங்க”

 

“இதுவரைக்கும் கேட்டது போதும் டா. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணனும் னு ஆசை இருக்காதா? இதோ பார் உனக்கு பொண்ணும் பாத்து வச்சாச்சு”

 

“அம்மா!!”என்று எரிச்சலாக பல்லைக்கடித்தான்.

 

“இன்னு என்னடா?”

 

“சரி இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. நான் ஒரு பொண்ண விரும்புறேன். அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன். உங்களுக்கு ஓகே னா சொல்லுங்க” 

 

அனைவரும் அதிர்ந்து போயினர். 

 

வாயிலில் நின்றவள் மனம் சுக்கு நூறாக உடைந்தது. எதை அவன் வாயால் கேட்க கூடாது என்று நினைதாதாளோ அதையே கேட்டுவிட நிலைத் தடுமாறினாள்.

 

வாயிலில் அரவம் கேட்டவுடன் தான் அவளை திரும்பிப் பார்த்தனர். அவளின் நிலை கண்டும் மதி சலனமற்றே பார்த்தான். பிரபாவதி மன்னிப்பை யாசித்து அவளைப் பார்த்திருந்தார்.

 

பிரித்வி உள்ளே வந்து குலாப் ஜாமூனை மேசையில் வைத்து விட்டு ‘நான் அப்றம் வாரேன்’ என்று விட்டு விறு விறென்று வீட்டிற்கு சென்று அறைக்குள் நுழைந்து கதவை சாற்றி அதிலேயே தொய்ந்து விழுந்து வாயை மூடிக் கொண்டு அழுதாள். அவள் துக்கத்தை மற்றவரிடமும் கூற  முடியாமல் தவித்தாள். சிறிது நேரத்தில் அறைக் கதவை பார்வதி தட்டுவதை உணர்ந்து முகத்தை அடித்து கழுவி விட்டு வந்து கதவைத் திறந்தாள்.

 

அவர் சொல்ல வருவதை முழுதாக கேட்காமல் ” எனக்கு சாப்பாடு வேணாம். தலை வலிக்குது கொஞ்சம் படுத்துருக்கேன்” என்று விட்டு போய் படுத்துவிட்டாள். அவரும் சரி என்று சென்றுவிட்டார். 

 

படுத்திருந்தும் அவளால் வேதனையை கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னிடத்தில் வேறொருவளை நினைக்கவும் முடியவில்லை.

 

“இனி நான் எப்பிடி இருப்பேன்”

 

“என்னால ஏத்துக்க முடியலயே”

 

“மதி ய என்னால மறக்க முடியாதே” என்று புலம்பியவாறே இருந்தாள்.

 

மன அழுத்தம் அதிகமாவதை உணர்ந்து எழுந்து பால்கனிக்குச் சென்றாள். பால்கனி கம்பியை இறுகப் பற்றியள் கண்களில் கண்ணீர் அமைதியாக வழிந்தபடி இருந்தது. தன் நெஞ்சை யாரோ குத்திக் கிழிப்பதைப் போன்று வலியை உணர்ந்தாள்.

 

அவனிடம் காதலை சொல்லவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் இருகொள்ளி எறும்பாக தள்ளாடினாள்.

 

சிறிது நேரத்தில் யாரோ பின்னால் நிற்பதை உணர்ந்தாள். பின் அது யாரென்று அவனது பிரத்யேக நறுமணத்தை வைத்து உணர்நதாலும் அவனை திரும்பிப் பார்க்க கூட திராணியற்று நின்றாள். 

 

அவனும் அவளை நெருங்கி அவளைப் போலவே பால்கனி கம்பியை இறுகப் பற்றிக் கொண்டான்.

 

“இங்க என்ன பண்ணிட்டு இருக்க?”

 

“அ..அது சும்மா காத்து வாங்கலாம்னு” என்று கரகரத்த குரலை மறைக்க பெரும் பாடு பட்டாள்.

 

மதி அவளை தன்னை நோக்கி திருப்பி அவள் கண்களைப் பார்த்து “நான் கல்யாணம் பண்ணிக்கலாம் னு இருக்கேன். அதுவும் எனக்கு பிடிச்ச பொண்ணோட”

 

வலுக்கட்டாயமாக புன்னகைத்து “கங்கிராட்ஸ்” என்றாள். 

 

அவன் கைகளை ட்ராக் பேண்ட் பாக்கெட்டில் புதைத்து ” எல்லா விஷயத்தையும் உங்கிட்ட முதல்லயே ஷேர் பண்ணிடுவேன். லேட் ஆ பண்ணதுக்கு சாரி”

 

“இடஸ் ஓகே” என்றாள் கம்மிய குரலில்

 

“அதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஏன்னா எனக்கு நிறைய கடமை இருந்துது. அதனால அப்போ அதைப் பத்தி யோசிக்க வேணாம்னு தோனுச்சு. இப்போ அதெல்லாம் இல்ல. நிறைய ஆசைகள் தான் இருக்கு”

 

“என் பொண்டாட்டியோட கார் ல லாங் டிரைவ் லவ் சாங்ஸ் கேட்டுட்டே போணும், 

ரோட் கடைல நின்னு அரட்டை அடிச்சிக்கிட்டே சாப்பிடனும், சேர்ந்து சமைக்கனும், அவ தலைல கொட்டி விளையாடனும், அவ மடில படுத்து கதை பேசனும், பீச் மண்ணுல கைய கோத்துட்டு நடக்கனும், கல்யாண கோலத்துல அவள பார்த்து அசந்து போகனும், இப்டி நிறைய இருக்கு”

 

‘என் பொண்டாட்டி’என்று அவன் சொல்லும் போதே அவள் உடைந்து போயிருந்தாள். ஆனாலும் அவன் ஆசைகளை கேட்டு அவை எல்லாம் நிறைவேற வேண்டும் என்று மனதார வாழ்த்தினாள். ஒருவாறு மனதை திடப்படுத்த முயற்சி செய்தாள். என்ன இருந்தாலும் முதலில் இவன் என் நண்பன் என்பதை மனதில் பதிய வைத்து ஒரு மெல்லிய  புன்னகையோடு நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்தான்.

 

“உன் ஆசை கண்டிப்பா நிறை வேறும்.”

 

“ம்ம்…தேங்க்ஸ்”

 

“அவ எப்பிடி இருப்பா?”என்றாள் உண்மையான ஆர்வத்தோடு

 

“ம்ஹூம்…” என்று பெருமூச்சு விட்டு ” அவள பத்தி சொல்லனும் னா சொல்லிட்டே இருக்கலாம்”

 

“அவள முதல்ல எங்க பார்த்தேன் தெரியுமா?”

 

அவள் அமைதியாகஎ பாரஅமைதியாகஎன

“புளூ கலர் பிராக் போட்டுக்கிட்டு, தலையில பிளவர் பேண்ட போட்டுட்டு,வாயில லாலிபாப்ப வச்சிட்டு என் கையை ஆசையா வந்து பிடிச்சிக்கிட்டா. அவளை என் கைல குடுத்து நீதான் அவள பத்திரமா பாத்துக்கனும் னு சொல்லும் போது. அந்த வயசுல கூட அவளை எப்பையும் கைவிட்டுட கூடாது னு தோனுச்சு.  அழகு னு என்னை கூப்பிட்ட எல்லாரும் என்னை மதி னு கூப்பிட்டதும் அவளால தான்”

 

பிரித்வி ஒரு ஆனந்த அதிர்ச்சியோடு அவனையே பார்த்திருந்தாள்.

 

“அவ சிரிக்கும் போது அவ்ளோ கியூட் டா இருக்கும். வளர வளர அது இன்னும் அழகா தான் இருக்குது. அவளுக்கு புளு கலர் னா அவ்ளோ இஷ்டம். புக் கவர் னாலும் புளூ, சாப்பாடு பாக்ஸ் னாலும் புளூ, டிரஸ் னாலும் புளூ தான். கழுதை வயசாகியும் ஜாக்கி சான் விரும்பி பார்ப்பா” என்றான் இரசனை மிகுந்த புன்னகையுடன்

 

அவளும் சிரித்துக் கொண்டாள். 

 

“அவளுக்கு மனசில எதுவுமே வச்சிக்க மாட்டா. ஏன் னா எல்லாத்தையும் எங்கிட்ட கொட்டிடுவா. அவளோட பியுபர்டி செரிமனி அப்போ வெட்கப் பட்டது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு. அவள கொஞ்சம் சாஃப்ட் னு தான் நினைச்சேன். ஆனா அவளை வம்விழுத்தவனை செருப்பை கழட்டி அடிச்சா பாரு….செம்ம அடி. அதுல இருந்து அவன் அந்த ஏரியா பக்கமே இல்ல. “

 

அவள் புன்னகை மேலும் விரிந்தது.

 

“அடக்கம் என்றது அவ அகராதிலேயே இல்ல. என்னோட கியூட் ரவுடி பேபி. அவளுக்கு போய் தாவணி கட்டி திருவிழா

நேரம் நிப்பாட்டி வச்சாங்க பாரு…அவ்ளோ அழகா இருந்தா. கொஞ்சமே கொஞ்சம் உடம்பு பெருத்தது னாலும் மனசு ரொம்ப அழகானது.  மாநிறம் தான் இன்னும் அவளுக்கு அழக கூட்டும்”

 

அவள் தாழ்வு மனப்பான்மையை தகர்த்து எரிந்தான்.

 

“அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்காக என்ன வேணும் னாலும் செய்வா. ஆனாலும் எங்கிட்ட அவ சண்டை போடுறதை பாக்க பாக்க ரொம்ப பிடிச்சு போய் அவகிட்ட வேணும்னே வம்பிலுத்திட்டே இருப்பேன். அவளுக்கும் அது பிடிக்கும் ஆனா காட்டிக்க மாட்டா. அவகிட்ட நானும் ஷேர் பண்ணாத விஷயமே இல்ல”

 

“என்னையே சுத்தி சுத்தி வருவா. அப்பப்போ என்னை நல்லா சைட் அடிப்பா. சில தடவ வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டே இருப்பா”

 

அவள் முகம் வெட்கப் புன்னகையை தத்தெடுத்திருந்தது. 

 

“நாள் போக போக அவ முட்டை கண்ணுல ஈர்ப்பை தாண்டி வேற ஒன்னு தெரிஞ்சுது. அதை பாக்கும் போதெல்லாம் மனசுக்குள்ள ஜிவ்வுன்னு ஒன்னு ஏறும்”

 

“கொஞ்ச நாள் போக என்னை விட்டு விலக ஆரம்பிச்சா. எனக்கு அது இங்க வலிச்சுது” என்று இதயத்தை தொட்டுக் காண்பித்தான்.

 

அவள் கண்கள் கனிவாக அவனைப் பார்த்தது. 

 

“அவ எனக்கு பிரெண்ட் மட்டும் இல்ல. அதையும் தாண்டி னு தோனுச்சு. அது ஏன்னு தெரில.  அவள விட்டு பாரின் போன போ அவள பத்தின எல்லா நினைவும் ரொம்ப அழகா இருந்தது. அவள யாருக்கும் விட்டுக் குடுக்க கூடாது னு தோனுச்சு. அப்போ தான் நானும் அவள லவ் பண்றேன்னு புரிஞ்சுது. ஆனா நான் அவகிட்ட சொல்லல. அவ மனசு கலையாம அவங்க அப்பாவோட கனவு படி லாயராகனும் னு தான் அவ விலகலையும் அக்செப்ட் பண்ணேன். அவளுக்கு தெரியாம தூரத்துல இருந்து சைட் அடிப்பேன். அவள விட்டு இனியும் என்னால இருக்க முடியாது னு தான் பறந்தும் வந்துட்டேன். அப்பவும் அவ என்னை ஒதுக்குனா. கடைசி வரைக்கும் அவ மனச எங்கிட்ட சொல்லவே இல்ல. ஆனா நான் விட மாட்டேன். இந்த ஜென்மத்துல அவ மட்டும் தான் என் பொண்டாட்டி.”

 

அவள் கம்மிய குரலோடு” உனக்கு அவ பொருத்தமானவளா?”என்று கேட்க

 

“அவள விட பொருத்தமானவ வேற யாரும் கிடையாது”

 

“இப்போ சொல்லு . அவ என்னை கல்யாணம் பண்ணிப்பாளா?”என்று கேட்டு முடிக்க முன் அவனை அணைத்திருந்தாள்.

 

அவனும் அவளை அணைத்தவாறு “டஸ் ஷீ லவ் மீ?”என  

பிரித்வி தலையை ஆம் என்று தலையாட்டினாள்.

 

அவன் அவளை வலுக்கட்டாயமாக பிரித்து “ஸே இன் வர்ட்ஸ்” என்றான் அவள் கண்களைப் பார்த்து 

 

அவளும் அவன் கண்களைப் பார்த்து “ஐ லவ் யூ” என்று சொன்ன அடுத்த நிமிடம் அவனது இறுகிய அணைப்பில் இருந்தாள். அவள் காதல் கைகூடிய சந்தோஷத்தில் கண்கள் கலங்கி இருந்தன. 

 

அவன் தலையை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்து “ஐ லவ் யூ டூ” என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

 

அடுத்த நிமிடம் ஆராத்யாவின் கரகோஷம் எதிரொலித்தது. இருவரும் பதறி விலகி பார்க்க மொத்த குடும்பமும் முகம் முழுக்க சந்தோஷத்துடன் அங்கே ஆஜராகி இருந்தது. 

 

மதியழகன், பிரித்விகா இருவரின் முகமும் வெட்கத்தை தத்தெடுத்து இருந்தது.

 

இனியென்ன டும் டும் டும் தான்.

 

 

முற்றும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    13 Comments

    1. அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!

    2. கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

      1. Prashadi Krishnamoorthy
        Author

        இது போட்டி கதை இல்ல சகோ.
        “திகழ்வாய் நெஞ்சே கலங்காதே!” தான் போட்டி கதை.
        ஆனால் மிக்க நன்றி ☺️

    3. அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!

    4. மதி பிரித்வி க்யூட் லவ்வர்ஸ்..அண்ணன் தங்கச்சி பேச்சு ரசிக்கும்படி இருந்தது சிஸ்..மதி பேசுனதெல்லாம் செம்ம ஸ்வீட்..உருவத்துல என்ன இருக்கு மனசு தான் முக்கியம்னு சொன்ன விதம் அழகு..அழகான காதல் கதை..

    5. மிக நேர்த்தியான படைப்பு. நயத்துடன் ஈர்க்கும் எழுத்து. கதை நகர்வை கூற வார்த்தைகளே இல்லை. மனதிற்கு நெருக்கமாக மாறி விட்டனர் கதை மாந்தர்கள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.