Loading

 

 

ஈர்ப்பு 12

 

எனக்கு தான் அந்த இரவு தூக்கமில்லாத இரவாக மாறியது. நானும் அம்மா என்னை அழைத்த காரணத்தை அறிய என் மூளையை கசக்கிப் பார்த்தேன். 

 

‘ஒருவேளை யாருக்காவது உடம்பு சரி இல்லயோ! இல்ல யாராவது இறந்ததுட்டாங்களோ?’ இதை நினைக்கும் போது மெல்லிய நடுக்கம் என்னுள்ளே.

 

‘ச்சே, நம்ம வீட்டுல யாருக்கும் எதுவும் ஆகிருக்காது. அப்படி ஏதாவதுனா அம்மா கண்டிப்பா சொல்லிருப்பாங்க. இந்த அபி ஏதாவது அப்பா கிட்ட சண்டை போட்டுருப்பானோ! ஆனா, அதுக்கெதுக்கு அம்மா உடனே கிளம்பி வர சொல்லுறாங்க?’ இப்படி என் சிந்தனை எங்கெங்கோ சுற்றித் திரிந்தது. பின்பு எப்போது நான் தூங்கினேன் என்றே தெரியவில்லை.

 

அடுத்த நாள் அதிகாலை, நான் கிளம்பி கொண்டிருந்தபோது ப்ரியா என் அருகில் வந்து “சாரி டி நேத்து என்னால உன் கூட வரமுடியல.” என்றாள்.

 

“எனக்கு புரியுது டி. நோ ஒர்ரிஸ்.” என்றேன்.

 

“பார்த்து போடி, எதுக்கும் டென்ஷன் ஆகாத.  போயிட்டு போன் பண்ணு டி.” என்று எனக்கு தெரியாத விஷயத்திற்கு ஆறுதல் கூறினாள்.

 

“ஓகே டி, நான் கிளம்புறேன்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு ஆனந்துடன் கிளம்பினேன். நான் வெளியே வந்தபோது ராகுலை என் கண்களால் தேடினேன். ஆனால், அவனைக் காணவில்லை. அதில் சிறிது ஏமாற்றத்துடனே ஆனந்துடன் சென்றேன்.

 

அங்கு என்னை பேருந்து ஏற்றிவிட்ட ஆனந்தின் கண்கள் ஏதோ ஒன்றை உணர்த்த முற்பட்டது. ஆனால், என்னால் அது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. குழப்பத்துடனே பயணத்தை மேற்கொண்டேன்.

 

பேருந்தில் இருந்து இறங்கியதும், எனக்கு ஆச்சரியம் தரும் வகையில் என் அண்ணன் எனக்காக காத்திருந்தான். அதுவும் சரியான நேரத்திற்கு வந்திருக்கிறான் என்பதே எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி!  அவன் வாழ்நாளிலேயே இன்று தான் சரியான நேரத்திற்கு என்னை அழைக்க வந்திருக்கிறான்.

 

அதே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் அவனின் ‘வாகனத்தில் அமர்ந்தேன். அந்த பயணத்தின் போது பல முறை அவனிடம் கேட்டும் பதில் சொல்லவில்லை.

 

மௌனமான அந்த பயணம் முடிவிற்கு வந்தது. வீட்டிற்கு வெளியே இருந்த மயான அமைதியே எனக்கு ஒரு வித பயத்தை அளித்தது. என் மனதில் இப்போது ஒரு கேள்வியே தோன்றிக்கொண்டிருந்தது. ‘யாருக்கு என்னாச்சு?’

 

அப்போது தான் என் அம்மாவை பார்த்தேன். உடனே ஓடி வந்து அவரிடம் என்னவாயிற்று என்று வினவினேன். அவர் சொன்ன பதிலில் ஒரு நொடி சிலையாகிப் போனேன் நான்.

 

நேற்று இரவு முதல் தற்போது வரை எத்தனையோ காரணங்களை யோசித்துக் கொண்டிருந்த நான் இப்படி ஒரு காரணத்தை எதிர்பார்க்கவே இல்லை.

 

நடந்தது இது தான்! என் ‘அழகான’ அத்தை மகள் அவளின் ‘பணக்கார’ காதலனுடன் ஓடி போய்விட்டாளாம். இதை கேட்டு நான் செயலற்று இருந்தது ஒரு நொடி தான். அடுத்த நிமிடமே அதிர்ச்சியை தாங்க முடியாமல், “என்…ன்ன?!” என்று கத்திவிட்டேன். 

 

என் சத்தத்தில் பக்கத்துக்கு வீட்டு ஆன்ட்டி கூட எங்கள் வீட்டை எட்டி பார்த்துவிட்டு சென்றார். அம்மா தான் என் வாயைமூடி உள்ளே அழைத்துச் சென்றார்.

 

உள்ளே சென்ற நான் கண்டது ஓய்ந்து போன என் தந்தையை தான். ஒரு நாளிலே மிகவும் சோர்ந்து தெரிந்தார். என்னை பார்த்து தலையசைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். நானோ என் அம்மாவை தொடர்ந்து சென்றேன், முழுக்கதையை கேட்பதற்காக.

 

ஷீலாவிற்கு எப்போதுமே அடுத்தவர்களை பார்த்து பொறாமை தான். தன்னிடம் உள்ளவற்றை கொண்டு மகிழாமல் எப்போதும் மற்றவர்களை ‘நோக்கியே’ தன வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருப்பவள் அவள்.

 

ஆனந்தைப் பிடித்திருக்கிறது என்று அவள் சொன்னபோதே எனக்கு சந்தேகம் தான். அது கூட அவனின் செல்வ நிலையை பார்த்து மறைந்து போனது. அவனோடு பழகியபோது கூட ஷீலாவின் வாழ்க்கை ஆனந்தோடு சிறப்பாக இருக்கும் என்றே எண்ணி மகிழ்ந்தேன் என்று கூட சொல்லலாம். ஆனால், அவளோ தன் கையில் கிடைத்த நல்ல வாழ்க்கையை தானே  அழித்துக் கொண்டாள்.

 

கெட்டதிலும் நல்லதாக ஆனந்தின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்கிறது. அவன் குணத்திற்கு ஷீலா தகுதியுடையவள் இல்லை என்ற எண்ணம் எனக்கு அவனைப் பார்த்திலிருந்தே இருந்தது.

 

மேலும் ஷீலாவை பற்றி அவனிடம் கூறாதது எனக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இன்றோ அவனின் தோழியாக நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். அவனிற்கு இதை விட சிறந்த வாழ்க்கை அமையும் என்பது உறுதி.

 

அப்போது என் அம்மாவின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது. “அவ கல்யாணத்துக்கு உங்க அப்பா சேர்த்து வச்சுருந்த நகை பணம் எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டா!” என்றார்.

 

“எப்படி மா அவ ஓடி போய்ட்டான்னு தெரிஞ்சுச்சு?” என்று நான் விசாரணையை ஆரம்பித்தேன்.

 

“முதல்ல உங்க அப்பா கூட அவளை காணோம்னு தெரிஞ்சவங்கிட்ட விசாரிச்சாரு. எங்க தேடியும் கிடைக்கலன்னு போலீசுக்கு போகலாம்னு  முடிவெடுத்தப்ப தான் அபி அவ ரூம்ம செக் பண்ணலாம்னு அங்க போய் பார்த்தான். அப்போ தான் அவ எழுதி வச்சுட்டு போன லெட்டர் கிடைச்சது.” என்று அந்த கடிதத்தை மகளிடம் காட்டினார்.

 

 

இப்போ தான் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சுருக்கு. தயவு செஞ்சு யாரும் என்ன தேடி எனக்கு கிடைச்ச இந்த வாழ்க்கையை அழிச்சுடாதீங்க! என்னோட லவர் நீங்க பார்த்த மாப்பிளையை விட பணம், அழகுனு எல்லாத்துலயும் உயர்ந்தவர். அதனால எங்க வாழ்க்கை ரொம்ப நல்லாவே இருக்கும். என்னை நினைச்சு யாரும் கவலைப்பட வேண்டாம். எனக்காக சேர்த்து வைத்த நகை பணம் எல்லாம் நான் எடுத்துக்கிட்டேன். இது வரைக்கும் என்னை பார்த்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ்!

 

பை

ஷீலா

 

அதை படித்ததும் எனக்கு மிகவும் கோபம் வந்தது. “செல்பிஷ்! இப்படி கூடவா ஒரு பொண்ணு இருப்பா? இவ்ளோ நாள் வளர்த்ததை மதிக்காம, ஏன் அவ அம்மாவை கூட நினைக்காம அவ விருப்பம் தான் முக்கியம்னு போயிருக்கா. இதுல பணம் நகை எல்லாத்தையும் எடுத்துட்டு போயிருக்கா! அந்த விஷயத்துலலாம் கரெக்ட்டா தான் இருக்கா.” என்று என் அம்மாவிடம் அவளை திட்டிக் கொண்டிருந்தேன்.

 

அப்போது என் அத்தை வீட்டிற்குள் நுழைந்தார். ‘பெர்ஃபெக்ட் டைமிங்!’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

 

என் அம்மா என்னை சமையலறையிலேயே இருக்குமாறு கூறிவிட்டு கூடத்திற்கு சென்றார். என் அத்தையோ அவர்களின் ‘டேமை’ திறந்து விட்டார்.

 

‘ஹ்ம்ம், இவங்க அழ ஆரம்பிச்சுட்டாங்களா. இனி வீடே வெள்ளத்தில மூழ்குன மாதிரி தான் இருக்கும்!’ என்று நான் கவுண்டர் கொடுக்க ஆரம்பித்தேன்.

 

அவரோ இன்னும் அழுதுக் கொண்டே தான் இருந்தார். என் அப்பா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். என் அத்தையும் அப்பாவின் முகத்தையே ஏதாவது சொல்வாரா என்று பார்த்துக் கொண்டே கண்ணைக் கசக்கினார். இதை பார்த்த எனக்கு அந்த சூழ்நிலையிலும் சிரிப்பாக வந்தது!

 

அப்பா எதுவும் சொல்லாததால் அடுத்தகட்ட நடவடிக்கையாக அவரின் நடிப்புத் திறமையை காட்டினார். ஆஸ்கார் அவார்ட்டே கொடுக்கும் அளவிற்கு நடிப்பை அள்ளி வீசினார்! ஒரு ஓரமாக இருந்த என் அம்மாவை பார்த்து, அவரின் மகள் ஓடிப் போனதற்கு அம்மா தான் காரணம் என்று அடுத்த குற்றச்சாட்டை சுமத்தினார்.

 

எனக்கோ கோபம் எல்லை மீறியது. என் அப்பா இதற்கும் எந்த எதிர்வினையும் காட்டாததால் அவரின் மீதும் கோபம் வந்தது. ‘ச்சே, இந்த அப்பா ஏன் இப்போ கூட எதுவும் சொல்லாம இருக்காரு! அவருக்கு நல்லா தெரியும் அம்மா மேல எந்த தப்பும் இல்லனு. அப்பறம் ஏன் இப்படி அமைதியா இருக்காரு? இந்த அத்தைக்கு வேற வேலையே இல்ல, அவங்க பொண்ணு கொழுப்பெடுத்து ஓடிப் போனதுக்கு எங்க அம்மா எப்படி காரணமாவாங்க!’ என்று மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தேன்.

 

இவ்வளவு  பேசியபோதும் அடங்காமல் தன் கொடுக்கால் ச்சே, நாக்கால் யாரை காயப்படுத்தலாம் என்று சுற்றி பார்த்திருப்பார் போல. அப்போது அவரின் பார்வையில் விழுந்த என் அம்மாவிடம், “உன் பொண்ணையாவது பத்திரமா பார்த்துக்கோ. அவளும் எவன் கூடயாவது ஓடிப் போகப் போறா!” என்று கூறினார்.

 

இதற்கு மேல் பொறுமையா இருக்க முடியாது என்று சமையலறையை விட்டு வெளியே வந்த போது இடி போன்று உரத்து ஒலித்த குரலில் ஒரு நொடி என் இதயமே நின்று விட்டது.

 

“நிறுத்து லேகா! என் பொண்ணை பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல. உன் பொண்ணு மாதிரி இல்ல என் பொண்ணு. உன் பொண்ணு தான் எல்லாரையும் ஏமாத்தி பொய் சொல்லி ஓடி போயிருக்கா. உன் பொண்ணுக்கு பணம் மட்டும் தான் முக்கியம். உறவுகளோட அருமை தெரியல. ஆனா, என் பொண்ணை ஒன்னும் நாங்க அப்படி வளர்க்கல. அது மாதிரி அவ ஒன்னும் உன் பொண்ணு மாதிரி கோழை இல்ல. லவ் பண்றதை கூட பெத்தவங்க கிட்ட சொல்ல முடியாம ஓடி போன உன் பொண்ணு எங்க, பிடிக்கலைனாலும் உறவுகளா உங்களை மதிக்கிற என் பொண்ணு எங்க? இன்னொரு முறை அவ கூட கம்பேர் பண்ணி பேசுறதா இருந்தா இந்த பக்கம் வந்துடாத.” என்று கர்ஜித்தார் என் தந்தை. 

 

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவரை இப்படி பார்த்ததேயில்லை. அதுவும் அவரின் தங்கையிடம் கோபமாக பேசியதே இல்லை. எத்தனை கோபமாக இருந்தாலும் அமைதியாக இருப்பாரே தவிர இவ்வளவு சத்தமாக பேசி பார்த்ததில்லை. அதுவும் என்னை ஆதரித்து பேசுவார் என்று நினைக்கவும் இல்லை! 

 

சிறு வயதிலிருந்தே ஏதாவது போட்டியில் வெற்றி பெற்று வந்தால் கூட வாய் திறந்து என்னை பாராட்டி விடமாட்டார். அன்று ஒரு நாள் என் அத்தையுடன் சேலை விஷயத்தில் சண்டை வந்த போது கூட எனக்காக அவர் பேசவில்லை என்ற வருத்தம் எனக்கு இன்று வரை இருக்கிறது. ஆனால் இன்று என் குணத்தை பாழ்படுத்துவது போல பேசியதும், என் அத்தையை அவர் திட்டியது எனக்கு சிறிது ஆறுதல் அளித்தது.

 

என் அத்தையோ என்னையும் என் அம்மாவையும் முறைத்து பார்த்துவிட்டு ஏதோ முணுமுணுத்தவாறே அங்கிருந்து சென்றார்.

 

*****

 

அன்று இரவு மொட்டைமாடியில் காலாற நடந்துகொண்டே, நிகழ்ந்த சம்பவங்களையெல்லாம்  என் மனதில் ஓட்டிப் பார்த்தேன். இரவு நேர காற்று என் உடலை நடுங்கச் செய்தது. நானோ என் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு வானத்தில் இருந்த நட்சத்திரங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.

 

இதே மாடியில் சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவங்கள், அந்த சிறுவர்களுடன் விளையாடியது, ராகுலைப் பிடித்தது என்று ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தேன். அப்போது தான் எனக்கு ராகுலின் நினைவு வந்தது. 

 

அவனிடம் சொல்லாமல் வந்ததை எண்ணிப் பார்த்தேன். மதியமே ப்ரியா அழைத்து இங்கு நடந்ததை பற்றி விசாரித்தாள். ஆனந்தை கேட்ட போது அவன் ஊருக்கு சென்றிருப்பதாய் கூறினாள். அவளிடம் ராகுலைப் பற்றி கேட்க தயக்கமாக இருந்ததால் அவனைப் பற்றி கேட்காமல் வைத்து விட்டேன். இப்போது அதை யோசித்துக் கொண்டிருக்கையில் என் அப்பா அழைத்தார்.

 

நான் ஹாலிற்கு சென்றபோது என் அம்மா ஒரு ஓரத்தில் நின்றிருந்தார். அப்பாவோ  ஒரு வித தீவிர பாவனையோடு அமர்ந்திருந்தார். அவரே துவங்கட்டும் என்று காத்திருந்தேன். ஒரு நிமிடம் என் முகத்தை பார்த்தவர், பின்பு பெருமூச்சு விட்டு பேச ஆரம்பித்தார்.

 

“உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி உன் கிட்ட இப்போவே கேட்டுடுறேன், உனக்கும் அவ மாதிரி லவ்… அப்படி ஏதாவது இருக்கா?” கடைசி வரியை வினவும்போது அவரின் குரலில் மெல்லிய நடுக்கத்தை என்னால் உணர முடிந்தது.

 

என் அப்பா இதை கேட்டதும் பேச்சற்று போனேன். ‘கல்யாணமா! இப்போவா?’ ஒரு நொடி ராகுலின் முகம் வந்துபோனது என் மனதில்.

 

‘அவன்கிட்ட இன்னும் லவ்வே சொல்லல. அவனுக்கும் என்னை பிடிக்குமான்னு தெரியல. இதுல அப்பா வேற இப்படி கேட்குறாரு! ச்சே, எல்லா பிரச்சனையும் ஒரே நேரத்துல வருதே. இது எல்லாத்துக்கும் காரணம் அந்த காட்ஸில்லா தான்!’ என்று எனக்கு இப்போதும் அவளின் மீது கோபம் பெருகியது.

 

நான் மனதில் இவற்றை யோசித்துக் கொண்டிருக்க அதை தவறாக நினைத்துவிட்டார் அவர்.

 

உடனே, “நான் லவ்லாம் பண்ணல அப்பா!” என்று கூறியதும் தான் அவர் சற்று  இயல்பானார். ஆனால், இதைக் கூறும்போது நான் என் மனதிற்குள் அழுதது எனக்கு மட்டுமே தெரியும்!

 

“ஆனா, அப்பா நான் இன்னும் கல்யாணத்துக்கு ‘மென்டல்லி ப்ரிப்பேர்’ ஆகல!”

 

“ஏன்?” என்று அழுத்தமான குரலில் வினவினார்.

 

‘ஐயோ டக்குனு கேட்டுட்டாரே, என்ன சொல்றதுன்னு தெரியலையே!’ என்று புலம்பும்போது, எங்களை கடந்து சென்ற அபியை பார்த்தேன்.

 

சட்டென்று அவனை வைத்து ஒரு திட்டம் என் மூளைக்குள் உருவாக,மானசீகமாக அவனிடம் மன்னிப்பு வேண்டிவிட்டு, “அண்ணா…” என்று சத்தமாக கூறினேன்.

 

“என்ன?” என்று என் அப்பா சிறிது குழப்பத்துடன் கேட்டார். ஒன்றும் புரியாமல் அங்கு நின்ற அபியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அவனுக்கு என்ன?” என்றார் சிறிது காட்டமாக.

 

“அண்ணா வேலைக்கு போகாம, கல்யாணம் பண்ணாம நான் மட்டும் எப்படி பண்ணிக்குறது?” என்று நல்ல பிள்ளை போல சொல்லிவிட்டு வேகவேகமாக என் அறைக்குள் சென்று விட்டேன்.

 

‘பின்ன அங்கிருந்தா மத்த கொஸ்டின்னுக்கெல்லாம் யாரு ஆன்ஸர் பண்றது?’ என்று என் மனசாட்சி கேலி செய்ததை எப்போதும் போல டீலில் விட்டுவிட்டேன்.

 

ஆனால், இதனால் திட்டு வாங்கப் போகிற ஜீவனை நினைத்தால் ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் சிரிப்பாக இருந்தது. நான் அப்பாவிடம் சொன்ன காரணத்தைக் கேட்டதும் அவன் முகம் போன போக்கை நினைத்து இப்போதும் வயிறு வலிக்க சிரித்துக் கொண்டிருந்தேன்.

 

அப்போது என் தலையில் விழுந்த கொட்டில் நிமிந்து பார்த்தால் அங்கு அபி கோபத்தோடு நின்றிருந்தான்.

 

அவனை வம்பிழுப்பதற்காக, “என்ன அபி, தக்காளி ஃபேசியலா? முகம் ஃபுல்லா ‘ரெட்’டா இருக்கு!” என்று சிரிக்காமல் கூறியதும் அவன் என்னை துரத்தி துரத்தி அடித்தான்.

 

பிறகு, அவனை சமாதானம் செய்வதற்குள் சோர்ந்து போய் மூன்று முறை இரவு உணவு உண்டது வேறு கதை!

 

*****

 

அன்று தான் வெகு நாட்களுக்கு பின் க்ரிஷ் ஆன்லைனில் இருந்தான். அவன் நலத்தை விசாரித்து பின் நான் ஊட்டி சென்றது, அந்த காட்ஸில்லா ஓடிப் போனது, இறுதியாக என் கல்யாணப் பேச்சு என்று அனைத்தும் பகிர்ந்தேன். 

 

என் கல்யாணத்தைப் பற்றி கூறும்போது அவன் இப்படி அனுப்பினான்.

 

க்ரிஷ் : கல்யாணம் தான, பண்ணிக்க வேண்டியது தான!

 

நான் : ஹலோ, என்னமோ தெரியாத மாதிரியே பேசுற. நான் தான் ராகுலை லவ் பன்றேன்னு உனக்கு தெரியும்ல!

 

க்ரிஷ் : ஆர் யூ சீரியஸ் அபவுட் இட்?

 

நான் : ஹே, நான் விளையாடுறேன்னு நினைச்சியா? எஸ், ஐ லவ் ஹிம்.

 

க்ரிஷ் : அவனை பத்தி என்ன தெரியும்னு, லவ் பண்றேன்னு சொல்ற? இன்ஃபேக்ட் அவன் பேரே இப்போ ரீசண்ட்டா தான உனக்கு தெரியும்.

 

நான் : உன்னை பத்தி கூட தான் எதுவும் தெரியாது. ஆனா, உன் கூட பிரெண்டா இல்ல, அது மாதிரி தான் இதுவும்!

 

க்ரிஷ் : பிரெண்ட்ஷிப் இஸ் டிஃப்ரெண்ட் ஃப்ரம் லவ் இடியட்!

 

க்ரிஷ் : ப்ச், லவ் ஒரு மேஜிக், க்ரிஷ். அது யாரு என்னன்னு பார்த்து வரதில்ல. அதை ஃபீல் பண்ணனுமே தவிர ஆராய்ச்சி பண்ண கூடாது!

 

சிறிது நேரம் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

 

நான் : என்ன கோபமா?

 

க்ரிஷ் : எனக்கென்ன கோபம்? இது உன் லைஃப். நீதான் முடிவெடுக்கணும். உன்னை லவ் பண்ணக்கூடாதுன்னு தடுக்க எனக்கு எந்த உரிமையும் இல்ல. அட் தி சேம் டைம், இது ஏதாவது தப்பான டிராக்ல போற மாதிரி இருந்தா, உன்னை தடுக்குற முதல் ஆளா நானா தான் இருப்பேன்.

 

நான் : தட்ஸ் குட்! ஆனா போற போக்க பார்த்தா கடைசி வரைக்கும் நான் பேச்சிலரா தான் இருப்பேன் போல!

 

க்ரிஷ் : ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் ‘பேச்சிலர்’ லைஃப்! (பல சிரிக்கும் ஸ்மைலிகள்)

 

இப்படியே சிறிது நேரம் பேசிவிட்டு உறங்கச் சென்றோம்.

 

உறங்கும் முன், மீண்டும் க்ரிஷின் உரையாடலை படித்தபோதோ, ‘சச் ஏ ஸ்வீட் பெர்சன்! இப்படி ஒரு பிரெண்ட் கிடைக்க நீ கொடுத்து வச்சுருக்கணும்!’ என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
24
+1
0
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்