Loading

        பகுதி-18

ஜீவனிடம் தேவான்ஷி ,’அந்தச் சாமியாரைப் பார்க்க செல்ல வேண்டாம் ‘என்று மன்றாடினாள்.

“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு தேவ்! , உனக்கு என்ன உரிமை இருக்கிறது ?என்னைக் கேள்வி கேட்க …?”என்று அழுத்தமாகக் கேட்டான்.

தேவான்ஷி கோபத்துடன் “நான் உங்களுக்கு எந்த உறவும் இல்லையா…?, எனக்கு உரிமை இல்லையா…?” என்று கேட்டாள். 

ஜீவனோ, “அதை நீ தான் சொல்லணும்…?” என்று இறுகிய குரலில் கூற அவள் அமைதியானாள்.

இன்று தேவாவை பேச வைத்திடும் நோக்கில் “ஏதாவது வாய் திறந்து பேசு இல்லை நான் பேசுவதைக் கேளு…” என்றான் ஜீவன் .

ஆனால் தேவான்ஷியோ,  “சொல்லுங்க கேட்கிறேன் …?”என்றாள் அவனை பேச வைக்கும் முயற்சியில். 

அவனோ முயற்சியைக் கைவிடாது, “நான் திட்டிட்டேன் னு தானே சாகப் போன…?”

“ஆமாம்…!!” என்றாள் ஒற்றை வரியில். 

ஜீவனோ மெலிதான புன்னகையுடன், “நான் உனக்கு எந்த உறவும் கிடையாதே…? நான் பேசியதை ஏன் பெருசா எடுத்துக்கிற ?,இதற்காகவா உன் உயிரை விடத் துணிந்தாய்…?, நம்பும்படி இல்லையே “என்றான் எள்ளலாக. 

தேவான்ஷி சம்மந்தமேயில்லாமல் “நான் இத்தனை நாளும் உங்க வீட்டில் தானே இருந்தேன் “என்றாள். 

“அதான் மா எந்த உரிமையில் நீ இங்கே இருந்த… ?, வேதாவிற்குத் தங்கையாகவா…!! அவனுக்கு இப்படி ஒரு உறவு னு சொல்லி முளைக்கிறவங்களை எல்லாம் என்னால் அவன் தங்கையாக ஏற்றுக் கொள்ள முடியாது , அழைச்சுட்டு வந்த அவனுக்கே அப்படின்னா,  எந்த விதமான சம்பந்தமும் இல்லாத உன்னை எல்லாம் . தங்கச்சியாக. ஏத்துக்க  முடியாது… அதனால நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்…  அதற்குச் சம்மதிச்சா நீ இங்கே இருக்கலாம் இல்லை என்றால் உன் தங்கையோட இங்கிருந்து இந்த நிமிஷமே கிளம்பு… !! என்றவன் அதற்கும்  முன்னாடி ஒரு உண்மையைச் சொல்லணும்…!!” என்றான். 

“என்ன உண்மை …?,என்ன முடிவு… ?” தீர்க்கமாகக் கேட்டாள்.

“நீ என் அறைக்குள் எந்த வித சங்கடமும் இல்லாம இருக்க முடிந்தது …? இந்த கேள்விக்கு உன்னுடைய பதில் உண்மையாக  வேண்டும் , அப்புறம்  என்ன முடிவு என்றால் ,”என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ ..!!”என்றான் .

தேவான்ஷி அதிர்ந்து அவனைப் பார்த்தாள். 

‘ஒரு வேளை உண்மை  தெரிந்திருக்குமோ!!’ என்று

அவனோ அதைக் கண்டு கொள்ளாமல் .,”சரி சொல்லு என்னை மேரேஜ் பண்ணிப்பியா மாட்டியா… ?” என்றான் .

“ப்ப்ச் இது என்ன விளையாட்டு…!! நான் எந்த உத்தரவாதமும் தர முடியாது அதே போல அந்தச் சாமியாரை நம்பாதீங்க, ப்ளீஸ் ! ஜீவா அவன் ஃப்ராடு நீங்க அங்கே போகாதீங்க “என்று சொல்ல , அவனோ தன் கேள்வியிலேயே தொக்கி நின்றான்.

“நீ என்னை லவ் பண்றியா இல்லையா…??”  மீண்டும் அதே கேள்வியை வேறு விதமாகக் கேட்டு வைத்தான் அவளைப் பேச வைத்து விடும் ஆவல் அவனிடம்.

அவளோ பதில் கூற மறுத்து விட்டு வெளியே சென்றாள்.

“தேவ் பதில் சொல்லு… !!”

“நீங்க அங்கே போக மாட்டேன் னு ப்ராமிஸ் பண்ணுங்க நான் சொல்றேன்… “என்றதும் ஜீவன் மௌனமாக நின்றான்.

தேவான்ஷி அங்கிருந்து நகர அவளைப் பிடித்துக் கொண்டவன் .,”என்னோடு வா…!!” என்று அழைத்துச் சென்றான். காரில் ஏறி அமர்ந்தவன் கண் காட்டி அமரும்படி கூறினான்.

அவளிடம் ஒரு ஐபாட் ஒன்றை கொடுத்துக் காதில் மாட்டியவன், அமைதியாக வண்டியை ஓட்டினான்.

அதை அவள் கேட்டு முடித்ததும் அவளின் முகம் பார்த்தவனோ .,”இப்பவும் நான் அங்கே போகக் கூடாதா தேவ்… ??என் எண்ணத்தில் என்ன தவறு” என்று கேட்டான்.

“இனிமேல் எதுவும் கேட்கவில்லை போதுமா… !!” என்றவள் ஐபாட் கொடுத்து விட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“சரி உன்னை எப்படிக் கண்டுபிடிச்சேன்னு கேட்க மாட்டீயா…??” ஆர்வம் மேலிட கேட்டான். 

“அதான் கண்டு பிடித்து விட்டீர்களே..?” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு

ஜீவன் அவள் கோபமாக இருக்கிறாள் என்று எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

மீண்டும் வீட்டிற்கு வந்து விடக் காரை விட்டு கீழே இறங்கச் சென்றவனை இழுத்துக் கன்னத்தில் இதழ் பதித்தவளோ,” நீங்க பண்றது மட்டும் தான் பிடிக்கலை மத்தபடி உங்களை ரொம்பப் பிடிக்கும்…  இப்போது யோசித்து முடிவு சொல்லுங்க எப்போது திருமணம்?”  என்றவள் கார் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள்.

“கூடிய சீக்கிரம் சொல்லிடுறேன் ஆனால் எனக்கு உன்னிடம் கேட்க நிறைய இருக்கே ! “என்றவன் அவளின் பின்னால் ஓடினான்.

வேதா வரவும், அவன் மீது மோதி விட, அவனோ கடுப்பாக,” ஏன் டா நீ இன்னுமா ஓடி பிடிச்சு விளையாடுறதை நிறுத்தலை…?” என்றான்.

“ப்ப்ச் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா முடியாது னு சொல்றா டா” என வேதாவைக் கண்டு கொள்ளாமல் ஓடினான்.

“எதேய் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னியா..?, ஏதோ கம்மர்கட் வாங்க சொன்னேன் னு சொல்ற மாதிரி சொல்றான்…!!  இவன் எதைச் செய்தாலும் எக்ஸ்ட்ரீம் லெவலிலேயே செய்றானே…!!  ம்ம்ம் சரி இல்லையே,  இவன் அப்பா கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எவ்வளவு நாள் பின்னாடியே அலைஞ்சுட்டு இருந்திருப்பார் அப்போ எல்லாம் விட்டுட்டு இப்போ இவ கிட்ட கெஞ்சிட்டு இருக்கான்… அவர் ஒரு தப்பு பண்ணிட்டாரு,  இதே மாதிரி அவரும் கல்யாணப் பொண்ணை ஆவியா இறக்கி இருக்கலாம் இவனும் என் உடல் பொருள் ஆவி நீயடி னு அலைஞ்சு திரிஞ்சு கட்டி இருப்பான் “என்று தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தான் வேதாந்த்.

“மிஸ்டர். வேதம் இப்படித் தனியா நின்னு புலம்பக் கூடாது” என்று அனு தோளை தட்டினாள்.

“கடுப்பேத்துறாங்க மை லார்ட்” என்று திரும்பியவனைப் பார்த்து சிரித்தாள்.

“ஹேய் நீ என்ன கிண்டல் பண்றியா ஆமா ஷோரூம் ல இருக்காம இங்கே என்ன பண்ற….?” 

“யோவ் உன் ஷோரூமில் நீயே இருக்க மாட்டேங்கிற, அப்புறம் நான் எதற்கு இருக்கணும் “என்று அனு சொல்லவும் ஜேபி வந்து நின்றான்.

“அனு நீயும் என்னை ஏமாத்திட்ட இல்ல..?, ஒரு வார்த்தை சொன்னியா உங்க அக்கா ஆவி இல்லை னு…” என்றவன் முறைத்தான் வேதாவை.  

“மாமா நீங்க கண்டு பிடித்து இருப்பீங்கனு நினைச்சேன் பட் நீங்க கண்டுபிடிக்கலை..? ஆனாலும் நீங்க ஐக்யூ லெவல் ல வீக்கா இருக்கீங்க மாமா “

“எது மாமாவா …??” ஒரு சேர கேட்டனர் வேதாவும் ஜீவனும்

“அப்புறம் அக்காவோட புருஷன் மாமா இல்லாம சித்தப்பாவா…!!” என்று நக்கலடித்தாள் அனு.

“உங்க அக்கா தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறாளே அப்புறம் எப்படி மாமா…?” என்று முனகினான் ஜீவன்.

“எது ஒத்துக்கலையா…?, எங்கப்பா உங்களை மேரேஜ் பண்ணிக்க விருப்பமா னு கேட்கும் போது உங்க விருப்பம் தான் என் விருப்பம் னு சொல்லி மேரேஜுக்கு ஓகே சொல்லிட்டாளே ….!!” என்றாள் அனு. 

ஜீவனோ,  “என்ன உங்கப்பா என்னை மாப்பிள்ளையா பார்த்தாரா…?? ” அதிர்ச்சியாகக் கேட்டான்.

“என்ன மாமா எல்லாத்துக்கும் ஷாக் ஆகறீங்க,   உங்க கூடத் தான் தேவா அக்காவிற்குக் கல்யாணம் நடக்க இருந்தது… அதுக்குள்ள தான் உங்க அப்பா இறந்து போயிட்டாங்க,  அந்தக் காரியத்திற்குக் கூட அப்பா அம்மா ரெண்டு பேரும் வந்திருந்தாங்களே ,  அப்புறம் என் அக்காவுக்கு ஆக்ஸிடன்ட் னு சொல்லி அவளை நரபலி கொடுக்கப் போயிருக்காங்க…  இது எதுவுமே உங்களுக்குத் தெரியாதா… ?உங்களுக்குத் தெரிஞ்சு தான் அக்காவுக்கு ஹெல் பண்றதா நினைச்சேன்” என்றாள் இயல்பாக.

“இன்னும் என்ன என்ன ஷாக் எல்லாம் வச்சிருக்கீங்க…? ஏன் டா வேத் இதுவும் உனக்குத் தெரியுமா…?” என்று சலித்துக் கொண்டான்..

“இல்ல ஜேபி இது எனக்குத் தெரியாது…  தேவ் இதை எல்லாம் என்னிடம் சொல்லவே இல்லை “என்றான் வேதாந்த்.

ஜீவன்  தேவாவைத் திரும்பி பார்த்தான்.

“அப்போ எல்லாம் தெரிஞ்சு தான் என் ரூமில் ஸ்டே பண்ணி இருக்க…?” என்று எள்ளலாகக் கேட்டதும் அறைக்குள் மீண்டும் ஓடி விட்டாள்.

“இவளை…!!” என்று விட்டு உள்ளே செல்ல

“டேய் அந்தப் பொண்ணு பாவம் டா அடிச்சுடாத… சின்னப் பிள்ளை ” வேதா கத்தினான்.

திரும்பிப் பார்த்து முறைத்தவனோ,”  பேய் வேஷம் போட்டு ஊரையே ஏமாத்தி இருக்கா, அவ பாவமா… ?, சாமியாரை அலற விட்டு இருக்கா , அவ உனக்குச் சின்னப்பிள்ளை, வாயில் ஏதாவது வந்திடும் ஒழுங்கா ரெண்டு பேரும் ஷோரூம் கிளம்புங்க” என்றவன் அறைக் கதவைத் தாழ்ப்பாள் போட்டான்.

” இவன் ஒருத்தன் சும்மா சும்மா கதவை லாக் பண்ணிக்கிட்டு ,  ஆமா சாமியாரை அலற விட்ட விஷயம் இவனுக்கு எப்படித் தெரியும்…?” என்று வாய் விட்டு முணுமுணுத்தவனிடம்,” நீயே உளறி வச்சிருப்ப “என்றாள் அனு.

“இருக்கும் இருக்கும்…” என்றவன் சாப்பிட்டு அனுவோடு ஷோரூம் கிளம்பினான்.

இங்கே ஜீவனின் அறைக்குள் தேவான்ஷியை நெருங்கி இருந்தான் ஜீவன்.

“அப்போ என் கிட்ட இருந்து இதையும் மறைச்சிருக்க…  “என்றதும்,”  இல்லை மறைக்க நினைக்கலை ஆனா சொல்லவும் விரும்பவில்லை” என்றாள்.

“ஏன்…?” 

“அது வந்து அவங்களும் கல்யாணம் னு சொல்லி நரபலி கொடுக்க நினைத்து அங்கிருந்து தப்பி வந்தால் , என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற நீங்களும் அந்தச் சாமியாரை நம்பி ஆவி பேய் னு அலைஞ்சிங்க…  மனசு வெறுத்துப் போய்த் தான் சொல்லவில்லை “என்றாள்.

“தேவ் நிமிர்ந்து பாரு…!!” 

கண்களில் நீர் ததும்ப நிமிர்ந்தவளின் இமைகளில் முத்தமிட, கண்ணீர் துளிகள் கீழே விழுந்தது.

“உனக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கு தேவ்…  அதை இப்போது தெரிந்து கொள்ள வேண்டாம் சீக்கிரம் தெரிஞ்சுப்ப சரியா, ஓகே இப்போ சொல்லு என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா…?” என்றான் எதிர்பார்ப்புடன் .

“உங்களுக்கு நிஜமாகவே என்னைப் பிடிச்சிருக்கா…?”

“ஓய் கிண்டலா…! பிடிக்காமலா நேற்றிலிருந்து உன் பின்னாடியே அலைஞ்சுட்டு ,கெஞ்சிட்டு இருக்கேன்…   ஒண்ணு நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ ,இல்லையா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்,  டீல் எப்படி ஓகேவா…!!”  என்று ஹாஷ்யமாகச் சிரித்தான்.

“உங்களை …!!”என்று அவனின் நெஞ்சில் குத்திட சிரித்தவனோ, இதமாக அணைத்துக் கொண்டான்.

“உலகத்திலேயே ஆவியைக் கல்யாணம் பண்ற ஆசாமி நானா தான் இருப்பேன்” என்றான்.

“நான் தான் ஆவி இல்லையே…  !!”

“ஆனால் ஆவியா தானே என் கிட்ட வந்த. …”

“அது சும்மா, ஆமா உங்களை யார் நம்பச் சொன்னது…?”

“ஹாஹாஹா எப்போ பார்த்தாலும் சாண்டிலியரில் தொங்கறது, அலமாரிக்குள் ஒளியறது, நல்ல ஒரு ரூபாய் நாணயத்தை ஒட்ட வச்சா மாதிரி பொட்டு வச்சுட்டு வெள்ளை புடவையில் அலையிறது னு இருந்தா…நம்பாம இருக்க முடியுமா   நம்ம சினிமாக்காரர்கள் இப்படித் தான் ஆவி இருக்கும் என்று ஒரு வடிவம் கொடுத்து நம்ப வச்சுட்டாங்க…  அந்த ஃபால்ட் தான்” என்றவனோ,” ஆனால் சமாதிக்குள் எல்ஈடி டிவி,  ப்ரிட்ஜ் ,கேட்ட ஒரே ஆவி நீ தான் டி” என்றவன் கலகலவென்று சிரித்தான்.

“அது சும்மா வேதா அண்ணா திடீரென ஆவியா நடிக்க வேண்டும் என்று சொல்லிட்டாங்க எனக்கு என்ன பண்றதுனு தெரியலை அதான் வாய்க்கு வந்ததை அடித்து விட்டேன் அப்புறம் உங்களை நம்ப வைக்கத் தான் அந்த டிராமா எல்லாம்,  ஆனால் நீங்க எப்படிக் கண்டுபிடிச்சீங்க …?”என்றாள்.

“உன்னால் தான்…  எந்தப் பேயாவது  கரப்பான் பூச்சிக்கும், பல்லிக்கும் பயப்படுமா, நீ பயந்தியே,  அது மட்டுமில்லாமல் முதலில் நீ விபத்தாகி இறந்ததாகச் சொன்ன, அப்புறம் அனுவைப் பார்க்கும் போது நரபலி கொடுக்க அழைச்சுட்டுப் போனதாகச் சொன்ன நீ சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருந்தது ஈசியா கண்டுபிடிச்சுட்டேன்” என்றான்.

” ஓஓஓ ஆனாலும் நீங்க அறிவாளி தான் “என்று கூறி விட்டு அவனிடமிருந்து விலக ஜீவன் பிடியை இறுக்கினான்.

“ஜீவ் விடுங்க… இது என்ன விளையாட்டு …?”

“நான் ஒரு விஷயம் கேட்கவா… ?”

“கேளுங்க…”

“வேதா பற்றி என்ன நினைக்கிற…?”

“என் அண்ணன்… ஆபத்திற்கு உதவிய தெய்வம் வேறு என்ன சொல்வது நல்லவன் ரொம்ப ரொம்ப நல்ல பையன் “என்றாள்.

“அப்போ அந்த நல்ல பையனுக்கு உன் தங்கையை மேரேஜ் பண்ணி வைக்கலாமே” என்றான் வேகமாக.

தேவான்ஷி ஒரு நொடி திகைத்தாள். உடனே இயல்பானவள் .,”அவங்க ரெண்டு பேரும் எப்போதும் சண்டை தான் போடுவாங்க பிறகெப்படி சரி வரும்…?”  என்றாள்.

“யார் தான் சண்டை போடவில்லை இதோ கொஞ்ச நேரம் முன்னாடி நாமளும் தான் சண்டை போட்டோம் .ஏன் கதிர் மாமா, மணி அத்தையோட முதல் சந்திப்பே முறைப்பு தான் சண்டை தான் ஆனா அவங்க இப்போ அப்படியா இருக்காங்க ரெண்டு பேரிடமும் பேசலாம் ஓகே என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கலாம்” என்றான் உறுதியாக.

ஏனோ ஜேபி இந்த முடிவை இப்போது எடுத்தது போல அவளுக்குத் தோன்றவில்லை. ஆனாலும்   தேவான்ஷிக்கு வேதா அனு இருவரின் சம்மதம் தான் முக்கியமாகத் தோன்றியது .

“நீ என்ன நினைக்கிறாய் என்று புரியுது மா. அவங்களுக்குப் பிடித்திருந்தால் தான் இந்தக் கல்யாணம் சரியா… !!”என்றதும் சரி என்று சம்மதித்தாள்.

இருவரும் தத்தம் வேலைகளைக் கவனிக்கத் துவங்கினர். வேறு என்ன வேதாந்திடமும் அனுவிடமும் திருமணத்திற்காகச் சம்மதம் கேட்கும் வேலை தான் செய்தனர்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

மணிமேகலையும், கதிர்வேலனும் , ரமேஷ் பார்த்திருந்த வீட்டை ஒரு முறை பார்த்து விட்டு அக்கம் பக்கத்தில் எல்லாம் விசாரித்து விட்டும் வந்தனர். 

கச்சிதமான வீடு  ஒரு குடும்பம் வசிக்கப் போதுமானதாக இருந்தது. 

“மேகா எனக்கு இப்போதும் மனசு கேட்கவே இல்லை” என்று தயங்கினார் கதிர்.

“கதிர் எனக்கும் உங்க ஃபேமிலியை பிரிக்க ஆசை இல்லை…  அவ என்ன செய்து இருக்கான்னு வேதா சொன்னான் தானே… நம்ம முன்னெச்சரிக்கையாக இருந்தும் அவள் ஏதாவது மருந்து கலந்து விட்டால் என்ன செய்வது…?”

“நீ அதை எல்லாமா நம்புற…?”

“நம்பவில்லை கதிர் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஏதாவது நடந்து விட்டால் என்ன செய்வீங்க…? ஏற்கனவே நம்ம இரண்டு பேரும் லேட் மேரேஜ் இதில் குழந்தை பிறப்பதில் சிக்கல் வந்தா பரவாயில்லையா ! சொல்லுங்க இல்லை நமக்கே ஏதாவது ஆகிடுச்சுனா…  நான் நர்த்தனா ரமேஷ் பையனுக்கு எதுவும் தர வேணாம்னு  சொல்லலையே! தாராளமாக இருப்பதைப் பிரித்துக் கொடுப்போம் ஆனால் அது நேர்மையான வழியில் மூன்று பேருடைய வாரிசுகளுக்கு என்ன உண்டோ அதைப் பிரித்துத் தருவோம்…  புரிந்ததா உங்களுக்கு…  ?ரமேஷ் மட்டுமில்லை ஸ்ரீதரனும் ப்ரீத்தியை அழைச்சுட்டுப் பூனா போகிறார் அவருக்கு வேலை இடம் மாற்றல் ஆகி இருக்கு நான் தான் வாங்கிக் கொடுத்தேன்…  “என்றதும் கதிரின் முகம் இறுகியது.

“ஏன் மேகா ப்ரீத்தி என்ன செய்தா…?” 

“அவள் எதுவும் செய்யவில்லை தான் , நர்த்தனாவைப் பார்த்து அவளும் செய்யத் துணியலாம் . அப்புறம் இந்த வேலை இடம் மாற்றம் கேட்டதே ஸ்ரீ தான் , அவருக்கு உங்க வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க விருப்பமே கிடையாது. ப்ரீத்திக்காகத் தான் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறார் புரியுதா உங்களுக்கு…”

“நாங்க இங்கே எந்தக் குறையும் வைக்கவில்லையே அப்புறம் ஏன்… ? தன் மீது எதுவும் குறை இருக்குமோ” என்ற வருத்தம் மேலோங்கியது கதிருக்கு.

“கதிர் எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் னு ஏன் நினைக்கிறீங்க… ? நீங்க எல்லாம் வீட்டு மாப்பிள்ளை என்று மரியாதை தர்றீங்க, ஆனால் நர்த்தனா வீட்டோட மாப்பிள்ளையா நினைத்து முகம் சுளிக்கிறா, அவருடைய வேர் எது தெரியுமா…?,அவருடைய குடும்பம் கதிர் .ஏழையோ, பணக்காரரோ, அவருக்கென்று சுய கௌரவம் இருக்கிறது…  அதை ஏன் அவர் விட்டுக் கொடுத்து இங்கே இருக்க வேண்டும் … பிரீத்தியும் ஒரு குழந்தைக்கு அம்மா அவள் எப்படி இருக்கிறாளோ அது போலத் தான் குழந்தையும் வளரும் சுயமா அவளை வாழ விடனும் கதிர்…  அவளை இங்கே வரவே வேண்டுமென நான் சொல்ல மாட்டேன்…  லீவ் கிடைக்கும் போது பண்டிகை அப்போ என எல்லா நேரங்களிலும் வரட்டும் நல்லாவே உபசரித்து அனுப்புகிறேன் ஆனால் அவள் தனியாகக் குடும்பம் நடத்துவது தான் அவளது கணவரின் விருப்பம் “என்று நீண்ட நெடியதாகப் பேசி கதிரை தன் வழிக்குக் கொண்டு வந்திருந்தார் மேகா.

“அவங்களுக்கு ஏதாவது உதவி என்றால் நான் நிச்சயமாகச் செய்வேன் நீ தடுக்கக் கூடாது “என்ற கதிரை முறைத்து விட்டு,”  என்னைப் பார்த்தா கொடுமைக்காரி மாதிரி தெரியுதா உங்களுக்கு…? “

“ச்சே, ச்சே, நீ என்னை மட்டும் கொடுமை செய்யும் சாகசக்காரி” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தவரை அடி போட்டார் மணிமேகலை.

“பாவம் வயசானவன் விட்டுடுமா… !!”பயந்தது போலப் பாவனைச் செய்தார் கதிர்

“யார் நீங்களா …? உங்களைத் தனியா விட்டா இப்போ கூடச் சைட் அடிக்க ஒரு பட்டாளமே இருக்கு . இதில் நீங்க வயசானவரா…!!” கதிரை கலாய்த்தபடி வீட்டிற்குக் கிளம்பினார் மேகா.

“மேகா சாப்பிட்டுப் போகலாம் டைம் ஆச்சு “என்றதும் ஒரு உணவகத்திற்குள் நுழைய, அங்கே ஒரு பெண்மணியின் மீது  மோதி இருந்தார் மணிமேகலை.

“சாரி” என்று நிமிர்ந்தவரோ எதிரில் இருந்த பெண்மணியைப் பார்த்து தன் வெறுப்பை உமிழ்ந்தார் மேகா.

“மணி… “என்றதும்,” கதிர் வாங்க போகலாம்…” 

“சாப்பிட்டு…”என்று இழுத்த கதிரை முறைத்தார் மணிமேகலை.

“கதிர் எனக்குப் பிடிக்கலை போகலாம் “என்று அழுத்தமாகச் சொல்ல , ‘ஏதோ சரியில்லை’ என்று உணர்ந்த கதிர், மணிமேகலையை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

எதிரில் இருந்த பெண்ணோ, அதைக் கண்டு கொள்ளாமல் கிளம்பினார்.

“டிரைவர் கார் எடுங்க…”

“எங்க மேடம் போகணும்…?”

“ஏன் உனக்குத் தெரியாதா …?,ஐயா ஹெஸ்ட் ஹவுசிற்குப் போ வரச் சொல்லி இருக்கார் “என்று ஏறி அமர்ந்து கொண்டார். 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இங்கே இளங்கோவன் அந்த அரசியல் கட்சி தலைவரிடமிருந்து செல்லாத ஐநூறு , ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மொத்தம் நூறு கோடி ரூபாயை வாங்கி இருந்தார். 

வங்கியில் எந்த வித சந்தேகமும் இன்றி  அங்கே கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வைப்புநிதி போல வைத்து  மீண்டும் அதனை எடுப்பது போலவும்  தொழிற்கடன்  தனிநபர் கடன் என்ற பெயரிலும் பணத்தை  மாற்றி இருந்தார்  இளங்கோவன்.

முதல் தவணை எந்தப் பிரச்சினையும் இன்றிப் பரிமாற்றம் நடந்து தலைவரிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டது.

பரந்தாமன் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி தெரிந்தது. 

“பார்த்தியா ! பணம், பணம் நம்ம உழைச்ச பணம் எல்லாம் சரியான நேரத்தில் சரியா வந்து சேர்ந்திடுச்சு” ஆர்பரித்தார் பரந்தாமன்.

“எல்லாம் சரி எப்போ நான் சொன்னதைச் செய்யப் போறீங்க? செஞ்சா நிரந்தரமாக உங்களுக்கு விடுதலை இல்லை என்றால் உங்க திட்டம் எல்லாம் தவிடுபொடி ஆகி விடும் ” மிரட்டல் விடுத்தார் அந்தப் பெண்மணி.

“செய்கிறேன், செய்கிறேன் , இப்போது தானே அவன் வழிக்கு வந்திருக்கான்.  சீக்கிரம் நீ சொல்றது நடக்கும் “என்றார் பரந்தாமன் தன் ஆடையை உடுத்தியபடி.

“ம்ம்ம்ஹ்ம் சரி … “என்று கூறி விட்டு கிளம்பினார் அவர். 

“ச்சே இவ கிட்ட சபலப்பட்டு என்னென்ன செய்ய வேண்டியது இருக்கு…  நமக்கென்ன இனி அவளாச்சு, அவனாச்சு” என்று புலம்பியபடி பணத்தைப் பத்திரப்படுத்தி விட்டு தனது சொந்த வீட்டிற்குக் கிளம்பினார் பரந்தாமன்.

காரில் செல்லும் போது பார்த்தார் மக்கள் ஓரிரண்டு ஐநூறு ரூபாய் , ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு வங்கியின் வாயிலில் தவமிருப்பதை… 

“உழைச்சு சம்பாதிச்சவங்க இப்படி அல்லோல கல்லோல பட்டுப் பணத்தை மாத்துறாங்க… ஆனால் நிறையப் பெரிய ஆளுங்க சப்தமே இல்லாமல் கோடி கணக்கில் மாத்திடுறாங்க “என்றபடி ஒரு பெரியவர் புலம்பிக் கொண்டே சென்றார் .

பரந்தாமனை அவரது டிரைவர் திரும்பி பார்த்திட,” இங்கே என்னய்யா பார்வை வண்டியைப் பார்த்து ஓட்டு” என்று கடுப்படித்தவாறு திரும்பிக் கொண்டார்.

…. தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Janu Croos

      இந்த ஜீவன் ஏதோ பிளானுல தான் அந்த சாமியார் கிட்ட மறுபடி போகனும்னு சொல்றான் போலயே. அப்படி என்ன பிளானா இருக்கும். தேவாக்கு வேற எதையோ காட்டினானே.
      மேகாவ இடிச்சது ஒரு வேளை ஜீவன், விழியோட அம்மாவோ! அவங்க தானே ஜீவனுக்கு பத்து வயசா இருக்கப்போ அவங்கள விட்டுட்டு போனாங்க. அவங்கால தானே ஜீவனோட அப்பா அவரோட ஊர விட்டுட்டு வேற ஊருக்கு வந்தாரு. சினிமாவேல நடிக்க போறேன்னு பெத்த புள்ளைங்கள விட்டுட்டு போனவங்க தானே அவங்க. மேகா அவ்வளவு கடுப்பாகுறாங்கனா ஒரு வேளை அவங்க தானா ?

    2. Archana

      ஜீவோட அம்மா தான் மேகா அத்ஸ் பார்த்த பொம்பளையா🤔🤔🤔🤔 ஜேபி ஏதோ பெரிய சம்பவம் பண்ண போறான் போல🤩🤩🤩🤩🤩