
அத்தியாயம் 24
நிதர்ஷனாவின் அறுவை சிகிச்சை நன்முறையில் நடந்து முடிந்ததை அறிந்த குடும்பத்தினருக்கு அதன்பிறகே பெரும் நிம்மதி பிறந்தது.
ஆதிசக்தியும் இளவேந்தனும் கண்மணியின் அருகில் இருக்க, அவளுக்கு ஏற்கெனவே மாதவிடாய் இருந்ததால், வயிற்றில் அடித்ததில் உதிரப்போக்கு அதிகம் இருந்தது. ஆகினும், பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லையென மருத்துவர் கூறியதில் இருவரும் ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருந்தனர்.
“என்ன ஆதி, தோண்டத் தோண்ட பூகம்பமா இருக்கு. யாரை நம்புறதுனே தெரியலையே…” என நொந்தார் இளவேந்தன்.
“எனக்கும் ஒன்னும் புரியல இளா. ஏஞ்சலினா… ஐ காண்ட் பிலீவ்… என்கிட்ட நல்லவ மாதிரி நடிச்சு, என் பையனை என்கிட்ட இருந்து பிரிச்சு இருக்காளே ராட்சசி!” எனப் பல்லைக் கடித்தார்.
“அந்த நடேசன் மாதிரி துரோகியை எல்லாம் சும்மா விடக்கூடாது மாமா…” கொந்தளித்த மனையாளை சமன் செய்தவர், “கதிரோட மனநிலையும் இதுல அடங்கி இருக்கு ஆதி. கொஞ்சம் பொறுமையா விசாரிக்கலாம். அவன் நல்ல பையன்…” என்றார் பெருமூச்சுடன்.
தங்கையின் நலத்தை அறிந்து கொண்ட நிவேதனுக்கு எண்ணமெங்கும் கண்மணியின் நினைவே ஆட்டிப் படைத்தது.
ஆதிசக்திக்கு அலைபேசி அழைப்பு விடுத்துக் கேட்டதற்கு, ட்ரிப்ஸ் போடுவதாகச் சொன்னதும் பதறிப் போனான்.
வேகமாய் அவளைத் தேடி மருத்துவமனைக்குச் செல்ல, வாசலிலேயே அமர்ந்திருந்த ஆதிசக்தி அவனை முறைத்தார்.
“இப்ப எதுக்கு அடிச்சு விழுந்து ஓடி வர்ற?”
“என்னாச்சு அத்தை கண்மணிக்கு? ட்ரிப்ஸ் எல்லாம் ஏன் போடுறாங்க, ரொம்ப அடிபட்டுடுச்சா?” பரிதவிப்புடன் வினவினான்.
“அவளைக் கஷ்டப்படுத்திட்டுப் போன தான… அப்புறம் இப்ப மட்டும் எதுக்கு வந்து நிக்கிற?” அவர் கோபமாகக் கேட்டதில் நிவேதனுக்குக் கண் கலங்கி விட்டது.
“விடு ஆதி…” இளவேந்தன் சமாதானம் செய்து விட்டு, “அவளுக்கு ப்ளீடிங் அதிகமா இருக்குன்னு ஒரு பாட்டில் மட்டும் ட்ரிப்ஸ் போடணும்னு சொன்னாங்க. பயப்பட ஒன்னும் இல்ல நிவே… நீ போய் பாரு!” என்று அனுப்பி வைத்தார்.
அவனோ ஆதிசக்தியைப் பார்த்துத் தயங்கி நிற்க, “இங்க நின்னு என் மூஞ்சியை எதுக்குப் பார்த்துட்டு இருக்க…” அவர் காட்டத்துடன் பார்த்ததில் திடுதிடுவென உள்ளே ஓடி விட்டான்.
‘வருங்கால மருமகன்னு கூடப் பார்க்காம ரொம்ப திட்டுறாங்க…’ எனப் புலம்பிக் கொண்டவன், மெத்தையில் உறங்காமல் கண் மூடிப் படுத்திருந்த கண்மணியைக் கண்டு உருகிப் போனான்.
அவளது முன்நெற்றிக் கேசத்தைக் கோதி விட்டவன், “கண்மணி…” என மெல்லமாக அழைக்க, சட்டென விழித்து விட்டாள்.
“இப்ப ஓகேவா?” ஒட்டுமொத்த வலியையும் தேக்கிக் கேட்க,
“ம்ம்” எனத் தலையாட்டினாள்.
“ஏன் கண்மணி, நீ இடைல வந்த?” சலிப்பாய் கேட்டவனிடம், “உங்களை அட்டாக் பண்ண வர்றப்ப எப்படி பார்த்துட்டு இருக்க முடியும்? ஆனா வயித்துல எத்துவாருன்னு எதிர்பார்க்கல. கதிர் அண்ணா அப்பா இந்த மாதிரி இருப்பாருன்னு நினைச்சுக் கூடப் பார்க்கல…” என்றாள் வருத்தமாக.
“ஹ்ம்ம்… அந்த ஆளை விடு! வயிறு வலிக்குதா இன்னும்…” என எதையும் யோசியாது, அவளது வயிற்றில் கை வைத்து மெல்லத் தடவிக் கொடுத்ததில், அவளுக்கு வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.
பெண்மை தடுக்க, தன்னிச்சையாக அவனது கையைத் தட்டி விட்டதில் அவனுக்கு ஆதங்கம் தாளவில்லை.
“இன்னும் என்மேல கோபம் போகலையா கண்மணி?” அவள் அருகில் குனிந்து கேட்டான் நிவேதன்.
இத்தனை நெருக்கத்தை, இத்தனை மென்மையை அவளால் எவ்வாறு தாங்க இயலும்?
“நீ..நீங்க தள்ளி நின்னே பேசுங்க…” எனத் திக்கித் திணற, அவன் சுண்டிய முகத்துடன் நகரும்போதே அவனது சட்டையின் கைப்பகுதியினை இரு விரல்களால் பிடித்துக் கொண்டாள்.
“நான் பக்கத்துல வந்தா பிடிக்கலையா கண்மணி?” மீண்டுமொரு ஏக்கம் அவன் குரலில்.
“பிடிச்சுருக்கு! அதான் தள்ளச் சொல்றேன். நான் உங்க மேல கோபமா இருக்கேன். ஆனா அதைக் காட்ட முடியாத மாதிரி இப்படி பக்கத்துல வந்தா, எனக்குப் பேச்சே வர மாட்டேங்குது. அன்னைக்கும் அப்படித் தான், என்னைக் கட்டிப் பிடிச்சு…” அதற்கு மேல சொல்ல இயலாமல் கன்னம் சிவந்தது.
அதன்பிறகே நிவேதனுக்கு பல்ப் எரிந்தது.
“அட, அன்னைக்கு நீ என்மேல கோபமாகி அமைதியா இருக்கலையா அப்போ?” எனக் குதூகலமாகக் கேட்க,
“இல்ல, நான் கோபமா தான் இருக்கேன்!” என்று தலையாட்டினாள். அப்போதே அவளது இதழ்கள் முறுவலித்திருந்தது.
“ஓஹோ… ரொம்ப கோபம் தான் போல. இன்னும் பக்கம் வந்தா சரியாகிடும்னு நினைக்கிறேன்.” என்றபடி அவள் நெற்றியோடு நெற்றி முட்ட, அவளுக்குத் தான் அவஸ்தையாகிப் போனது.
“நிவே, இது ஹாஸ்பிடல்!” படபடத்து விட்டாள் கண்மணி.
“நான் கூட உன் அண்ணனோட லேப்னு நினைச்சேன்…” கன்னத்தில் குழி விழ கிண்டலடித்தவனை முறைத்தவள், “செம்ம காமெடி… என் அண்ணனை வச்சே உங்களை நாலு அடி அடிக்கச் சொல்லிருக்கணும். என்னை விட்டுப் போனதுக்கு…” என நொடித்தாள்.
“நீ வேற அவனுக்கு ஏதாவது ஐடியா கொடுக்காத கண்மணி. ஏற்கெனவே என் தங்கச்சியைக் குடுத்துட்டு நானும் சீதனமா வந்து லோல் படுறது பத்தாதுன்னு, இப்ப என்னையும் இலவசமா குடுத்துட்டேனே…” எனப் போலியாய் கண்ணீர் சிந்த கண்மணி வாய் விட்டே சிரித்து விட்டாள்.
சிரித்ததில் சிறு வலியும் எடுக்க, “ஸ்ஸ் ஆ…” என முகம் சுருங்கியவளைத் தாங்கியவன், “ரொம்ப வலிக்குதாடா?” என்றான் கவலையாக.
“இப்ப பரவாயில்லங்க… கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும். அண்ணி இப்போ ஓகே தான? அம்மா சொன்னாங்க, ஆப்ரேஷன் சக்ஸஸ்ஃபுல்லா முடிஞ்சுதுன்னு.”
“ம்ம், ஆனாலும் அவள் கண்ணு முழிச்சுப் பேசுற வரை அரை உசுரா தான் சுத்தணும்.” நிவேதன் குபுக்கென நிறைந்த கண்ணை அவளிடம் இருந்து மறைத்துக் கொள்ள, அவனது கன்னம் பற்றித் தனது கண்ணைக் காண வைத்தவள், “அண்ணி நல்லாவே திரும்ப வருவாங்க… என் அண்ணனோட காதல் அவங்களை எப்பவும் தோற்க விடாது நிவே…” என்றாள் உறுதியாக.
——
தங்கையின் நலத்தை விசாரிக்க, இளவேந்தனுக்கு அழைத்தான் யாஷ் பிரஜிதன்.
“சொல்லுப்பா…”
“கண்மணி எப்படி இருக்கா?”
“இப்ப பரவாயில்ல. கொஞ்ச நேரத்துல டிஸ்சார்ஜ் ஆகிடலாம். நிதா கண்ணு முழிச்சுட்டாளா யாஷ்?”
“இல்ல. இன்னும் டைம் எடுக்கும்னு நினைக்கிறேன்…”
“சரிப்பா… அதெல்லாம் உன் உழைப்பு வீணாகாது!” எனும்போதே “ஆஆ…” என்ற சின்ன முனகலுடன் இளவேந்தனின் சத்தம் கேட்க,
“ஹலோ… அங்கிள்?” என யாஷ் சற்றே பரபரத்தான்.
அவரிடம் இருந்து பதில் வராது போனதில், “அங்கிள், ஆர் யூ ஆல்ரைட்?” என மீண்டும் மீண்டும் கேட்க, “ப்ச்…” என நெற்றியைத் தேய்த்தவன் தன்னிச்சையாக, “பப்பா, ஆர் யூ தேர்?” என்றான்.
டேபிளின் நுனி அவரது சுண்டு விரலைப் பதம் பார்த்ததில் அதிக வலி எடுக்க, போனை கீழே வைத்து விட்டுச் சற்றே வலி பொறுத்த இளவேந்தன் அப்போது தான் மீண்டும் அலைபேசியைக் காதில் வைத்தார்.
அவனது ‘பப்பா…’ என்ற அழைப்பு அவரது இதயத் துடிப்பை ஓர் நொடி நிறுத்தி இருந்தது.
“ஏதாவது பேசுங்க பப்பா… லைன்ல இருக்கீங்க…. ஹலோ?” என அவன் விடாமல் கேட்டதில்,
“ம்ம்ம்…” என்றவரின் குரலும் நடுங்கியது.
“கால்ல இடிச்சுடுச்சு யாஷ் அதான்…” என்றதுமே இறுகிய மார்பைத் தளர்த்தியவன், “பீ கேர்ஃபுல் பப்பா…” என அழைப்பைத் துண்டிக்க, இளவேந்தன் உணர்ச்சி வசப்பட்டுப் போனார்.
புன்னகையும் அழுகையும் ஒருசேரத் தாக்க, புதிதாய் தந்தையான உணர்வு அவரிடம்.
இங்கு யாஷ் பிரஜிதனும், அலைபேசியை நெற்றியில் தட்டி மெலிதாய் முறுவலித்துக் கொண்டான்.
சில நேரங்களில், தான் அவரைத் தந்தையாக எண்ணவில்லை என அவர் ஆதங்கப்படும் போதெல்லாம், அவருக்கெனத் தனது மனத்தில் தனி மதிப்பிருக்கிறதென்று உணர்த்தத் தோன்றும் தான். ஆனாலும், இருவருக்குள்ளும் இருந்த மெல்லிய திரை அவனை அவருடன் ஒன்ற விடவில்லை. இப்போதோ அனிச்சை செயலாய் அவர்களது உறவின் பிணைப்பை உணர்த்தி விட்டவனுக்குச் சிறு நிம்மதியும் பிறந்தது.
தன்னைத் தந்தையென யாஷ் அழைத்ததை மனையாளிடமும் பகிர்ந்து குதூகலித்த இளவேந்தனைக் கண்டு ஆதிசக்தியும் கண் கலங்கினார். எத்தனை ஏக்கம் கொண்டிருந்தாரோ! அவருக்கும் அத்தனை நிம்மதி…
48 மணி நேரம் கடந்து 72 மணி நேரம் வரை, நிதர்ஷனா தீவிர கண்காணிப்பிலேயே தான் இருந்தாள்.
அதுவரையிலும் யாஷ் பிரஜிதனிடம் துளி உறக்கம் இல்லை. ஒரு மணி நேரம் உறங்கச் சொல்லி ஆதிசக்தி கெஞ்சியும் அவன் அசரவில்லை.
கண்மணியும் உடல்நிலை தேறி வீட்டிற்கு வந்திருந்தாள். நேரம் செல்லச் செல்ல நிவேதனுக்குத் தான் மூச்சடைக்கும் நிலை. யாஷ் பிரஜிதனை நச்சரிக்கவும் மனமில்லை. பயத்தில் அப்படியே அமைதியாகி விட்டான்.
இங்கோ, யாஷ் பிரஜிதனும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தான். அவ்வப்பொழுது அவளது கண்ணிமைகளும் கைகளும் அசைவு கொடுத்தாலும் முழு நினைவு திரும்பவில்லை.
“ஆலம்பனா… நான் பேசுறது கேட்குதாடி? செம்மயா தூக்கம் வருது. நீ கண்ணு முழிச்சா தான் நான் தூங்கப் போகணும் நிது…” என்றான் உடைந்த குரலில்.
தற்போது கண்ணிமைகள் வேகமாக ஆட, “ஒன்னும் அவசரம் இல்ல. உனக்கு மருந்து பவர் அதிகம் நிது. கொஞ்ச கொஞ்சமா முழிக்க ட்ரை பண்ணு. நான் பேசுறது கேட்குதாடி?” தவிப்பாகக் கேட்டான்.
விரல்களை அசைத்துக் கொடுத்து அவள் பதில் அளிக்க, “குட்… மெதுவா கண்ணைத் திறக்க ட்ரை பண்ணு. ஸ்டே வித் மீ…” என்றபடி அசைந்த விரல்களைத் தனது சூடான கரத்தினுள் அடக்கிக் கொண்டான்.
சில நிமிடப் போராட்டங்களுக்குப் பிறகு, மெல்ல மெல்லக் கண்ணைத் திறந்தாள்.
கண்முன் நின்றிருந்தவனை ஒரு பார்வை பார்த்து விட்டுச் சுற்றியும் பார்வையைப் படரவிட்டாள்.
கடந்த இரு முறையும், மயக்கம் தெளியும் போது இதே போலான பார்வையைத் தானே தன் மீது வீசினாள். உள்ளம் உருக்குலையத் தொடங்கியது அவனுக்கு.
“நிவே… நிவே…” விழித்ததும் தமையனின் பெயரை ஜெபம் பண்ணத் தொடங்கியதில் அவனது முகம் சிறுத்து விட்டது.
விறுவிறுவென வெளியில் சென்றவன் இறுகிப் போயிருந்த நிவேதனிடம், “அவள் உன்னைத் தான் பார்க்கணும்னு சொல்றா…” என்றான் உணர்வற்று.
அதில் பரபரப்பாக எழுந்தவன், “முழிச்சிட்டாளா?” எனக் கேட்டபடி உள்ளே சென்றான். மற்றவர்களும் அவனைப் பின் தொடர்ந்தாலும், கதிரவன் யாஷைத் தவிப்பாகப் பார்த்தான்.
“நீ ஏன்டா இப்படி இருக்க?”
அக்கேள்விக்கு அவனுக்கு மட்டும் விடை தெரியுமா என்ன?
நிவேதன், அவசரமாகத் தங்கையின் அருகில் சென்றான். யாஷ் பிரஜிதன் மீண்டும் உள்ளே சென்று அறைக்கதவின் அருகிலேயே நின்று கொண்டான். அவள் மீண்டும் தன்னை மறந்து விட்டதை ஏற்றுக் கொள்ளத் தற்போதைக்கு அவனுக்குத் தெம்பில்லை.
தலையில் கட்டிட்டு இருந்தவளோ, “நிவே… நீ நல்லாருக்கியா?” என நலம் விசாரிக்க அவனுக்கோ பீதியானது.
“ஆபரேஷன் உனக்குத் தான பண்ணுனாங்க? அப்ப இந்தக் கேள்வியை உங்கிட்ட தான் நிதா கேட்கணும்.”
“நீ கட்டையால அடிவாங்குற மாதிரி ஏதோ விஷுவல் வந்துச்சுடா நிவே…” என்றவளின் கரங்களை மென்மையாகப் பற்றிக் கொண்டவன், “நான் நல்லாதான் இருக்கேன் நிதா… நீ கண்டதை யோசிச்சுக் குழம்பாத. ஆமா என்னை யாருடா அடிக்கப் போறா?” என்றான் வெகு அன்புடன்.
“வேற யாரு? என் அரக்கன் தான் உன்னைப் போட்டுப் பொளக்குறான். அவன் தங்கச்சியை ரூட்டு வுட்டு, கழற்றி வுட்டுட்டுப் போன தான…” என குரல் எழும்பாமல் நக்கல் செய்தவளைக் கொலை வெறியுடன் பார்த்தான் நிவேதன்.
‘அரக்கன்’ என்றதும் தான் யாஷ் பிரஜிதன் எனும் சிலைக்கு உயிரே வந்தது.
சடுதியில் அவளருகில் வந்தவன், “ஆலம்பனா…” எனக் குரல் நடுங்க விளிக்க, அவனைக் கண்டதும் மெலிதாய் புன்னகைத்தவள், “எனக்கு நிறைய விஷுவல்ஸ் வந்துச்சு. நீலி மாமா முகம் கூட லேசா வந்துட்டுப் போன மாதிரி…” என்றாள் சோர்வாக.
அவள் கையைப் பிடித்துத் தனது நெஞ்சில் வைத்துக் கொண்டவன், “உன் மூளையைத் தூசி தட்டுனதுல, சில சப்கான்ஷியஸ் மெமரிஸ் வந்துருக்கலாம், நத்திங் டூ வொரி…” என்றவனுக்கு அவளை அள்ளி அணைக்கவே கரங்கள் பரபரத்தது.
“அப்போ விவேக் மாதிரி எனக்கும், நடந்ததும் நடக்கப் போறதும் தெரியுமா?” உத்தமபுத்திரன் சினிமாவில் வரும் காமெடியை அவள் கேட்க, “ஹூ இஸ் தட்?” என முகம் சுருக்கினான் யாஷ் பிரஜிதன்.
அவனை வாரிய மகிழ்வில் இதழ் மடித்துச் சிரிக்க முயன்றவள் வலியில் முகம் சுளிக்க, “ரிலாக்ஸ் ஆலம்பனா… உனக்கு இப்ப நிறைய ரெஸ்ட் வேணும். உனக்குச் சரியானதும் டீஸ் பண்ணலாம்…” என்றவன், “ஜஸ்ட் ஸ்லீப்…” என அவள் கன்னத்தையும் தடவிக் கொடுக்க, மருந்துகளின் வீரியத்தில் தானாய் கண்ணயர்ந்தாள்.
முழுக்க முழுக்கச் செயற்கை நுண்ணறிவை உபயோகித்து வெற்றி பெற்ற அறுவை சிகிச்சையில் மருத்துவர்களும் மகிழ்வு கொண்டனர்.
இதில் இரவு பகல் பாராது தனக்கு உதவி செய்த மருத்துவர்களுக்கு, நன்றியையும் தெரிவித்தான் யாஷ் பிரஜிதன்.
இடையில் ஒரு முறை கண் விழித்த நிதர்ஷனா, “நீ தூங்கு யாஷ்… முழிச்சு என்னைப் பார்த்துட்டே இருக்காத.” எனச் சொல்லி விட்டு மீண்டும் உறக்கத்தினுள் புக, தலையாட்டிப் புன்னகைத்துக் கொண்டவன், அவளது பேச்சைத் தட்டாது அவளுக்கு எதிரிலேயே போடப்பட்டிருந்த சோபாவில் படுக்கச் சென்றான்.
ஆனால், காலை நகர்த்த இயலவில்லை. என்னவென கீழே பார்க்க நிவேதன் தான் அவன் காலைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
“டேய், வாட் ஆர் யூ டூயிங்?” யாஷ் கடுப்பாகக் கேட்க,
“தேங்க்ஸ் மச்சான்…” என்றவனின் கண்களில் இருந்து அருவி வழிந்திட, “ஸ்டுபிட், ஃபர்ஸ்ட் எந்திரிடா…” என்று காலை உதறினான்.
“இல்ல… உன்னை ஆரம்பத்துல நான் பெருசா நம்பல. அவளுக்கு மாத்திரை கலந்து குடுத்தப்ப கூட உன்னைத் தான் தப்பா நினைச்சேன். சாரி மச்சான்… என் தங்கச்சி, நீ மட்டும் இல்லைன்னா இன்னைக்கு உயிரோடவே இருந்திருக்க மாட்டா. அவள் இல்லைன்னா நானும் இருந்திருக்க மாட்டேன்.” எனக் கண்ணீரால் அவன் காலைக் கழுவ, பற்களை நறநறவெனக் கடித்த யாஷ் பிரஜிதன், “கதிர், டேய் கதிர்…” எனக் கத்தினான்.
வாசலில் அமர்ந்திருந்த கதிரவன் அடித்துப் பிடித்து ஓடி வந்து இருவரையும் கண்டு விழித்தான்.
“என்னடா, உன் கல்யாணத்துக்கு ஆசீர்வாதம் வாங்கிட்டு இருக்கியா?”
“டேய்ய்ய்… இவனை எழுப்பி விடுறா!” யாஷ் பிரஜிதன் எரிச்சலுடன் மொழிய, “நீ மன்னிச்சுட்டேன்னு சொல்லு மச்சான்… அப்ப தான் எந்திரிப்பேன்!” என நிவேதன் அடம் பிடித்ததில், அவன் சட்டைக் காலரைப் பற்றி எழுப்பியவன், “கெட் லாஸ்ட்… பைத்தியக்காரா!” எனத் திட்டி விட்டு சோபாவில் படுத்தவனுக்குத் தன்னை மீறியும் புன்னகை அரும்பியது.
அடுத்த பத்து நாள்களும், நிதர்ஷனாவின் உடல்நிலை தேறிடவே பறந்தது.
தலையில் கட்டும் பிரிக்கப்பட்டிருக்க, கதிரவன் தான் மனத்தினுள் மருகினான்.
பரமேஸ்வரி வேறு, கணவனைச் சில நாள்களாகக் காணாததால் கதிரவனிடம் கேள்வி கேட்டுக் குடைந்து கொண்டிருந்தார்.
அவருக்குப் பதில் சொல்லவும், அவனுக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டுமே. யாஷ் பிரஜிதனிடம் கேட்கவும் சங்கடம் கொண்டு, மற்றவர்களிடமிருந்தும் மனத்தால் விலகியே இருந்தான்.
“அதான் நிதா அக்காக்கு சரியாகிடுச்சுல. அப்புறம் ஏன் உர்ருன்னு இருக்கீங்க?” சிந்தாமணி கேட்டதற்கும், “இல்லையே நல்லா தான் இருக்கேன்…” என சமாளித்தாலும் அவனது மனவருத்தம் புரிந்தது தான்.
ஆகினும், அவளுக்கும் அவனை எப்படி சரி செய்வதென்று தெரியவில்லை.
நிதர்ஷனாவிற்கு நடேசனைப் பற்றித் தெரிய வந்ததில் அவளுக்குச் செய்வதறியாத நிலை.
“என்ன நிவே சொல்ற? அங்கிளா உன்னை அட்டாக் பண்ணுனாரு… கண்மணியையுமா?” நம்ப இயலாமல் கேட்டவள், “அதான் அவன் முகமே சரி இல்லையா?” என்றாள் கணித்து.
அன்று எப்போதும் போல, நிதர்ஷனாவிற்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தான் யாஷ் பிரஜிதன்.
“எவ்ளோ நாளைக்கு இந்த உப்புச் சப்பில்லாத கஞ்சியவே குடிக்கிறது அரக்கா? ஒரு கருவாட்டு ப்ரையோட சாப்பிட்டா கூட உள்ள இறங்கும்.” என உதட்டைப் பிதுக்கியதில், “த்ரீ மந்த்ஸ்க்கு நோ நான் வெஜ்!” என்றான் கண்டிப்பாக.
“மூணு மாசத்துக்கா? நான் என்ன முழுகாமலா இருக்கேன்…” எனக் கேட்டு விட்டு வாயை மூடிக்கொண்டான்.
“வாட்ஸ் தட்?” அவனுக்கு அந்தக் கூற்றுப் புரியவில்லை போலும்.
“அது சும்மா…” எனக் கண் சிமிட்டிப் பேச்சை மாற்ற எண்ணியவள், “நடேசன் அங்கிள் உண்மையாவே தப்பானவரா அரக்கா?” எனக் கேட்டாள்.
“உன் ப்ரதரைக் கொன்னுருப்பான் நிது…” அதிலேயே இந்த விஷயத்தின் ஆழம் புரிந்தது அவளுக்கு.
ஆனால் கதிரவன்?
“கதிரு…” என ஆரம்பிக்கும்போதே, “உனக்கு ஹெல்த் ரெகவர் ஆகுறதுக்காகத் தான் அவங்க சேப்டரை பெண்டிங் வச்சுருக்கேன். இன்னைக்கு ஈவ்னிங் நீ நம்ம ரூமுக்கே ஷிஃப்ட் ஆகிக்கலாம். அந்த ஏஞ்சலினாவும், நடேசனும் இந்த வேர்ல்ட விட்டு ஷிஃப்ட் ஆகட்டும்!” என இயல்பாகக் கூற, அவளுக்கு வருத்தம் மேலோங்கியது.
“என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு…”
“ஏய்… எனக்கு ஆரம்பத்துல இருந்தே தட் பெர்சன் மேல நல்ல அபிப்ராயம் இல்ல. அவனைக் கையும் களவுமா பிடிச்சும் கூட முன்னுக்கு முரணாவே இருந்துச்சு, அவனோட எக்ஸ்பிளனேஷன்.
அதுவும் நீலகண்டன் குடுத்த லெட்டர்னு அவன் ஒரு லெட்டர் குடுத்தான். அது உன் அம்மாவோட சூசைட் நோட். வரதராஜன் செஞ்ச துரோகத்தை மறக்க முடியாம அவங்க சூசைட் பண்ணிக்கப் போறதாவும், உன்னை நீலகண்டனோட பொறுப்புல ஒப்படைச்சதாவும் இருந்துச்சு. கண்டிப்பா அவங்க சூசைட் பண்ணிருக்க மாட்டாங்க. ஒன்னு அந்த நடேசனும் நீலகண்டனும் ஒண்ணா சேர்ந்து அமுதவல்லியைக் கொன்னுருக்கணும். இல்ல ஏஞ்சலினாவோட பேச்சைக் கேட்டு நடேசன் மட்டுமே இதுல இன்வால்வ் ஆகியிருக்கலாம்னு நினைச்சேன். பட்…”
“சரி யாஷ்… அப்போ என் அம்மாவைக் கொன்னதும் என்னையும் கொன்னுருக்கலாமே? நிவேதனையும் சேர்த்தே… எதுக்காக இந்த நாடகமெல்லாம்?” நிதர்ஷனா குழப்பமாகக் கேட்டாள்.
பெருமூச்சு விட்டவன், தனது அலைபேசியில் ஒரு வீடியோவை எடுத்து அவளிடம் காட்டினான்.
ஏஞ்சலினாவையும், நடேசனையும் கட்டி வைத்து விசாரித்த வீடியோ அது.
இருவரின் முகத்திலும் அதிகக் காயம் இருக்க, ஏஞ்சலினா கொந்தளித்தாள்.
“வேணாம் யாஷ். நீ என்னை அழிக்கிறது உனக்கு நல்லது இல்ல. என்னோட சாம்ராஜ்யம் ரொம்பவே பெருசு!”
எதிரில் அசட்டையாக நின்றிருந்த யாஷ் பிரஜிதன், “எவ்ளோ பெரிய சாம்ராஜ்யமா இருந்தாலும் என் கால் தூசிக்குச் சமம் மிஸஸ் ஏஞ்சலினா…” இருவரும் இத்தாலி மொழியில் கதைத்ததில்,
“ஏற்கெனவே எனக்கு மண்டை சூடா இருக்கு. எனக்கு நீயே ட்ரான்ஸ்லேட் பண்ணிடேன் அரக்கா…” என்றாள் பாவமாக.
அதில் சட்டெனப் புன்னகைத்தவன், “இந்த மொத்த ஆராய்ச்சிக்கும் காரணம் ஏஞ்சலினா தான் நிது. என் அப்பாவும், உன் அப்பாவும் வெறும் பப்பெட் தான். ஷீ இஸ் அ சைக்கோபாத்…” என்றவனின் முகத்தில் ஆத்திரம் தாண்டவமாடியது.
“அவளுக்குக் கூடப் பிறந்தவன்ல இருந்து பழகுனவன் வரை யாருமே நல்லாருக்கக் கூடாது. அமெரிக்கால அவள் செஞ்ச ரிசர்ச்ச பான் பண்ணுனதும் அதே ரிசர்ச்சை இத்தாலில செய்ய ஆரம்பிச்சுருக்கா. எலைட் கம்பெனியோட மூளை என் மம்மா… அதை எடுத்து நடத்துறது முழுக்க வரதராஜன்.
என்னதான் இவங்க ரெண்டு பேருமே அவளுக்குத் தேவையா இருந்தா கூட, அவளை விடப் புத்திசாலி யாருமே இருக்கக் கூடாதுன்னு நினைக்கிற சீப் பிஹேவியர்.
சோ, என் மம்மாவை அலெஸ் வச்சு மெண்டலி பிசிக்கலி டார்ச்சர் பண்ணக் காரணமா இருந்துருக்கா… பட் ஷீ லவ்ஸ் மீ. பிகாஸ், ஐ ஆம் நாட் லுக் லைக் இந்தியன், ரைட்? அவளுக்கு மூளை இருக்குறவங்க கூட அவளோட நாட்டுக்காரங்களா தான் இருக்கணும்னு ஒரு வெறி. ஆனா அதை யாருக்குமே காட்டாம நடிச்சுக்குறதுல அவளை யாருமே அடிச்சுக்க முடியாது.
அண்ட் தென், வரதராஜன்… உனக்கும் உன் அம்மாவுக்கும் அவன் செஞ்ச துரோகம் முழுக்க அவனோடது தான்… இருந்தாலும், நிவேதனை வச்சு அவனோட மூளையையும் மழுங்கடிக்க முடிவு செஞ்சா ஏஞ்சலினா.
ஏற்கெனவே உங்களைக் கொல்றது வரதராஜனோட திட்டம் தான். அதே நேரம் ஏஞ்சலினாவுக்கு அவனோட ஆண் வாரிசு, வியாபார புத்தியோட வந்துடக் கூடாதுன்னு ஒரு எண்ணம் இருந்திருக்கு.
அப்போ தான் நீலகண்டனை வச்சு உங்களைக் கொல்ல அலெஸ் போட்ட திட்டத்துக்குள்ள, ஏஞ்சலினா நிவேதனையும் ஜாயிண்ட் பண்ணிருக்கா.
ரித்திகாவையும் கொன்னுருப்பா… ஆனா அவள் மேல சந்தேகம் வந்துடும்னு அவளைப் பின்னால பார்த்துக்கலாம்னு டீல்ல விட்டிருக்கா.”
யாஷ் விளக்கம் கொடுக்கும்போதே, “எனக்குப் புரியல. நிவேதனை எப்படி?” எனக் கேட்டதில்,
“நான் ஒரு தடவை சொன்னேனே… என்னோட கெஸ் கரெக்ட் தான் ஆலம்பனா. உன்னையும் உன் அம்மாவையும் ரயில்வே டிராக்ல தள்ளிக் கொலை பண்ண வைக்கிறது தான் பிளான். அதே நேரம் நிவேதனை அவன் வீட்ல இருந்து ஆள விட்டுக் கடத்தி, அவனையும் நீலகண்டன்கிட்டச் சேர்த்துருக்கா ஏஞ்சலினா.
பணத்துக்காக அவங்களைக் கொலை பண்ண நினைச்ச நீலகண்டன் கடைசி நேரத்துல மனசு மாறியிருக்காரு…
உன் அம்மாவோட அன்பு அவரைத் தப்பு செய்ய விடல. அவங்ககிட்ட மன்னிப்புக் கேட்டிருக்காரு.
உன் அம்மாவும் அவர் மேல இருந்த நம்பிக்கையைக் குறைக்கல. அதே நேரம் உன்னக் காப்பாத்தணும்னு யோசிச்சுருக்காங்க. நிவேதனும் அப்போ உங்க கூட இருந்திருக்கான். அவனை அப்படியே விட்டுப் போக அவங்களுக்கு மனசில்லை. திரும்ப அவனை அவன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனா அவனைக் கொலை பண்ண சான்ஸ் அதிகம்னு அவனையும் காப்பாத்த முயற்சி செஞ்சிருக்காங்க.
அண்ட், நடேசன் சென்னைல இருக்குறது தெரிஞ்சு அங்க நீ, நிவே, நீலகண்டன் மட்டுமில்ல… உன் அம்மாவும் தான் வந்துருக்காங்க…” என்றதில் அதிர்ந்தாள்.
“அப்போ ரயில்வே டிராக்ல அவங்க சாகலையா?”
“இல்ல. கதிரோட அம்மா நீங்க வந்தப்ப தான் ரெண்டாவது பிரசவத்துக்குக் கதிரையும் கூட்டிட்டு அவங்க பிறந்த வீட்டுக்குப் போயிருக்காங்க…”
“ஆனா கதிருக்குக் கூடப் பிறந்தவங்க யாரும் இல்லையே யாஷ்?” அவள் குழம்ப, “வெய்ட் பண்ணுடி… அவங்க செகண்ட் ப்ரெக்னன்சில ஒரு ப்ராப்ளம் ஆகி, செவன் மந்த்ஸ்ல பேபி இறந்துடுச்சு…” என்றதில், “அச்சச்சோ…” என்றாள் பதறி.
“நீ பதட்டப்பட எதுவும் இல்ல நிது. நம்ம விதைக்கிறது தான் விளையும்னு தமிழ்ல ஒரு பழமொழி இருக்கே. அது தான் நடேசனுக்கும்… ஏஞ்சலினா, நீலகண்டன் மனசு மாறுனதுல விலைக்கு வாங்கப்பட்டவன் தான் நடேசன்.
என்னதான் உங்க குடும்பத்தோட ஒட்டி உறவாடுனாலும், நீலகண்டன் அளவுக்கு அவனுக்கு ஒட்டுதல் எல்லாம் கிடையாது.
தேவைக்குப் பணம்… அந்தப் பணம் தான் உன் அம்மாவைக் கொலை பண்ண வச்சு, தற்கொலைன்னு மாத்த வச்சுச்சு. அவங்க இறந்த அன்னைக்குத் தான் அந்த ஆளோட குழந்தையும் இறந்திருக்கு. கழுத்தை நெறிச்சுக் கொலை பண்ணிருக்கான் என் மாமியாரை…” என்றவனின் நரம்புகள் எல்லாம் புடைக்க, நிதர்ஷனாவின் விழிகள் தெறித்து விடும் அளவு அதிர்ந்தது.
கண்ணீர் குளம் கட்டி நிற்க, “நிஜமா அவரா அரக்கா?” என்றவளுக்கே இத்தனை வலிக்கும்போது கதிரவன்? அவளுக்கு அனைத்தையும் விட, அனைத்துமானவனாக உடன் வளர்ந்த நண்பனின் மனநிலையே முண்டியடித்து நின்றது.
“மின்னல்… ப்ளீஸ்! ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட். இந்த வீடியோல நடேசன் குடுத்த வாக்குமூலமும் இருக்கு. அதைக் கதிர்கிட்டக் காட்டி அவனை ஹர்ட் பண்ண எனக்கும் விருப்பமில்ல. அதான் அவன்கிட்ட என்னால எதுவும் பேசவும் முடியல. பட் ஐ ஹோப், அவன் புரிஞ்சுப்பான். தயவு செஞ்சு நீயும் புரிஞ்சுக்கோ!” எனக் கனிவுடன் கூறியதில் அவளுக்கு மூச்சடைக்கும் நிலை.
“நம்ம இதைப் பத்தி அப்புறம் பேசலாமாடி?” அவளைக் கண்டு அவனுக்கும் வேதனை அதிகரித்தது.
“இப்பவே பேசி முடிச்சிடலாம் யாஷ். அம்மாவைக் கொன்னது அந்த ஆளு தான்னு நீலி மாமாவுக்குச் சந்தேகம் வரலையா?”
“வந்துருக்கு! ரொம்ப லேட்டா… ஆரம்பத்துல நிவேதனையும் உன் கூட ஸ்கூலுக்கு அனுப்பி இருக்கான் நீலகண்டன். ஆனா ஏஞ்சலினா அவனை முட்டாளாக்கத் தான் விரும்பியிருக்கா. நீலகண்டனுக்கு நடேசன் மேல சந்தேகம் வரவும், அவனையும் கொன்னுட்டு ஹார்ட் அட்டாக்ல செத்துட்டதா பொய் சொல்லி இருக்கான். உங்க ரெண்டு பேருக்கும் விவரம் தெரியாத வயசு! சோ அவன் சொன்னதைத் தான் உண்மைன்னு நம்பிட்டீங்க… நிவேதனுக்குப் படிப்பை நிறுத்திட்டான். அவன் வைஃப் வச்சு உன்னையும் ஹர்ட் பண்ண வச்சிருக்கான்.”
“அப்போ ஆண்ட்டியும் இதுக்கு எல்லாம்?” என மென்று விழுங்கியவளிடம்,
“இல்லைன்னு சொல்ல எனக்கும் ஆசை தான்! பட் ஷீ நோ எவெரிதிங்…” என்றான்.
“கடவுளே… எனக்கு சுத்தமா புரியல. கதிர் எப்படி இதை அடாப்ட் பண்ணிப்பான்?”
அவனும் விடை தெரியாததால் அமைதி காத்தான்.
“ஆனா அரக்கா… அப்போ எங்களை ஏன் கொலை பண்ணல?”
“நான் சொன்னேனே, ஏஞ்சலினா ஒரு சைக்கோ பாத்னு… அவளுக்கு வரதராஜன் பையனைக் காணோம்னு தேடி அலையுறதுல ஒரு ஆத்ம திருப்தி. தி கிரேட் பிசினஸ் கிங் வரதராஜனோட பையன் படிப்பறிவு இல்லாம துணிக் கடைல வேலை பார்க்குறதுல ஒரு ஆழ் மன அமைதி. அவனோட பொண்ணு, அப்பா அம்மா யாருனு கூடத் தெரியாம, கூடப் பிறந்தவன்னு நம்பி ஸ்டெப் பிரதர் கூட வளர்றதைப் பார்க்க ஒரு குரூர சந்தோசம். விவரம் தெரியுறதுக்கு முன்னாடியே கொன்னுட்டா, உங்களுக்கு ஒன்னும் தெரியாதே. அதான் எல்லாம் தெரிய வச்சு, உங்களை அட்டாச் ஆக விட்டு, வளர விட்டு, உன்னையவே அவளோட ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தி இருக்கா.”
“ச்சை! மனுஷியா அவ… என்னமோ அரக்கா… எனக்கு ஆரம்பத்துல இருந்தே அந்தப் பொம்பள மேல ஒரு நல்ல எண்ணமே வரல. ஏதோ ஒட்டாத பீல். ஒருவேளை, அந்த அம்மா கலரா இருக்குறனாலன்னு நினைச்சுத் தான் மனசத் தேத்திக்கிட்டேன். என்ன ஒரு ஈனப்புத்தி? எதுக்கு இப்படி எங்க வாழ்க்கையோட, உணர்வோட விளையாடனும்…” எனக் கரித்துக் கொட்டினாள்.
“இப்ப சொல்லு! அவங்க ரெண்டு பேரையும் எப்படி உயிரோட விடுறது? சான்ஸே இல்ல ஆலம்பனா”
“புரியுது அரக்கா, ப்ச்!” எனத் தலையில் கை வைத்துக் கொண்டாள்.
அவள் அருகில் அமர்ந்து கொண்டவன், “சில விஷயங்களை அக்செப்ட் பண்ணித் தான் ஆகணும். பாவம் பார்க்க இது நேரமில்லை. விட்டிருந்தா அந்த ஆளு ஆஹிலைக் கொன்னுருப்பான். நிவேதன், கண்மணின்னு எல்லாரையுமே கொலை பண்ணப் பார்த்திருக்கான். நீ இவ்ளோ பீல் பண்ணுனா, எனக்கும் இதை அடுத்து மூவ் பண்ணக் கஷ்டம்டி…” அவனது கூற்றில், “எனக்கே அதுங்களைக் கொலை பண்ணிப் போடணும்னு தான் இருக்கு. என் அம்மாவைக் கொன்னவங்களை மன்னிக்கிற அளவு எனக்கும் ஒன்னும் பரந்த மனசு இல்ல தான் அரக்கா… நான் யோசிக்கிறது கதிருக்காக மட்டும் தான்…” என்றதில்,
“எனக்காக யாரும் யோசிக்க வேணாம்…” அறை வாயிலில் இருந்து கதிரவனின் குரல் கேட்க இருவரும் திரும்பினர்.
அங்கு அவனது மொத்தக் குடும்பமும் நின்றிருந்தது.
இளவேந்தனுக்குத் தனது தங்கையை அநியாயமாகக் கொலை செய்து விட்டதை எண்ணி வேதனை அதிகரிக்க, ஏஞ்சலினா இத்தனைக் கொடூரமானவளா என அறிந்த ஆதிசக்திக்கும் ஆற்றாமை தீரவில்லை.
நிவேதனுக்கும், கதிரவனின் மனநிலையை எண்ணித் தான் அதிகக் கவலை.
கதிரவன், “இவ்ளோ கேவலமானவங்களுக்கு நான் பையனா இருக்குறத விட, அனாதையா இருந்துட்டுப் போயிடலாம். உனக்கு என்ன தோணுதோ செய் யாஷ்… எந்த முடிவா இருந்தாலும் எனக்கு ஓகே தான்!” என்றவன், விறுவிறுவென அங்கிருந்து செல்ல சிந்தாமணியும் அவன் பின்னேயே ஓடினாள்.
தனதறைக்குச் சென்று விட்டவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
இதில் அவனது தாயும் உடந்தையெனச் சில மணி நேரத்திற்கு முன்பே அவனுக்குத் தெரிந்திருந்தது. கணவனைக் காணாமல் மகனுக்கு அழைத்த பரமேஸ்வரி, “எல்லாத்துக்கும் காரணம் அந்த யாஷ் தான்! அவன் உன் அப்பாவையும் கொன்னுட்டு, என்னையும் கொன்னுடுவான். அதுக்கு முன்னாடி அவனைக் கொன்னுடு! இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது கதிரு. அவங்க உன்னை ரொம்ப நம்புறாங்க. அது தான் நமக்கு ஆயுதம்! எல்லாம் அந்த வெளிநாட்டுக்காரி தான் எங்களை இப்படி ஆட்டுவிச்சா. நாங்க என்ன செய்யறது?” எனக் கண்ணீர் வடித்ததில் அவனுக்குச் சுருக்கென இருந்தது.
இவர்கள் நினைத்திருந்தால் கூட அமுதவல்லியைக் காப்பாற்றி, அவரது குடும்பத்தாருடன் சேர்த்திருக்கலாமே. தனது உயிர் தோழமைகளுக்கு எத்தனைப் பெரிய துரோகத்தைச் செய்து விட்டனர். இப்போது அதே கேவலமான வேலையைத் தன்னையும் செய்யச் சொல்கின்றனரே என உடைந்து போனவன், யாஷ் பிரஜிதனின் மூலம் அனைத்தையும் அறிந்து இன்னுமே சுக்கு நூறாகிப் போனான்.
அந்நிலையிலும், தனக்காகச் சிந்தித்த இருவரது தூய அன்பிற்கு முன்னால், அவன் என்ன செய்யக்கூடும்?
தனது தாய் தந்தையை விட்டு விடுமாறு கேட்டால், தனக்காக நிச்சயம் அவன் விட்டு விடுவான். என்னவோ, நிவேதன் நிதர்ஷனா போல யாஷ் பிரஜிதனும் அவனது உற்ற நண்பனாகி விட்டான்.
ஆனால், அது நியாயமல்லவே! தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும்! என மனத்தைக் கல்லாக்கிக் கொண்டாலும், வலி கொன்று எடுத்தது.
தன்னருகில் அமர்ந்த சிந்தாமணியின் மடியில் முகம் புதைத்துக் கதறி விட்டான்.
“கதிர்… கதிர்…” சிந்தாமணி தான் அவனை உலுக்கினாள்.
“ப்ளீஸ் கதிர், அழாதீங்க…” அவளுக்கும் கண்ணீர் வந்தது.
“முடியல சிந்தா. என்னால யார் முகத்தையும் கூடப் பார்க்க முடியல. நிதாவை நான் எப்படி ஃபேஸ் பண்ண? அவளோட அம்மாவை என் அப்பா கொன்னாருன்னு என்னால எப்படி…” பேசக் கூட இயலவில்லை அவனுக்கு.
“நீங்க ஏன் ஃபேஸ் பண்ணத் தயங்கணும்? எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சா நடந்துச்சு? இதோ பாருங்க கதிர்… என்னைப் பாருங்க!” என்று அழுதவனை நிமிர்த்தினாள்.
“என்ன இருந்தாலும் நான் ஒரு கொலைகாரனோட பையன் சிந்தா…” தேம்பலாகக் கூறியவனின் பின்னால் யாஷ் பிரஜிதன், நிதர்ஷனா, நிவேதனுடன் மற்றவர்களும் வந்திருந்தனர்.
“ஆமா, உன் அப்பா கொலை பண்ணாரு. எங்க அப்பாலாம் கொத்து பரோட்டா போட்டுட்டு இருந்தாரு…” நிதர்ஷனா அவனது தலையில் அடித்தாள்.
“நம்மளைப் பெத்ததுங்க எல்லாம் வெஷம் தான்! என் அப்பாவே விட்டிருந்தா என்னையும் என் அம்மாவையும் போட்டுத் தள்ளிருப்பாருடா. நீ லூசு மாதிரி யோசிக்காத சரியா?” என்று அதட்டினாள்.
ரித்திகாவும், “அதான… என்னமோ உன் அப்பா தான் துரோகம் பண்ணுன மாதிரி ஒப்பாரி வச்சுட்டு இருக்க… அப்படிப் பார்த்தா நிதாவோட இந்த நிலைக்குக் காரணமே அலெஸ் தான் கதிர்!” என்றாள்.
“ஆனால், அதைச் சரி பண்ண யாஷுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது. ஆனா இவங்களோட இழப்பைச் சரி பண்ண எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காதுல?” மீண்டும் அழத் தொடங்கியதில்,
நிவேதனோ, “செத்துப் போனவங்களைத் திரும்பக் கொண்டு வர முடியாது. உன் அப்பா இல்லைன்னாலும், நிதாவோட அம்மாவை யார் மூலமாவது கண்டிப்பா கொன்னுருப்பாங்க. அதோட இப்ப என்ன, என்னைப் படிக்க வைக்கல அதான… நான் வேணும்னா இனிமே படிச்சுப் பெரிய ஆளா ஆகிடுறேன் மச்சி…” என்றான் தீவிரமாக.
கண்மணியும், “ஆமா, அதுக்கும் ஆப்ஷன் எல்லாம் இருக்கு. நானே உங்களை பாஸ் ஆக வைக்கிறேன்…” எனத் தலையாட்டி வெகு தீவிரமாக உரைக்க நிவேதன் விழித்தான்.
‘இவளைக் கல்யாணம் பண்ணி அப்பாவா பாஸ் ஆகலாம்னு பார்த்தா, இவள் என்ன இவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கா…’ என மிரண்டதில் அவனது பேய் முழி கண்டு அங்குச் சிரிப்பலை பரவியது.
சிந்தாமணியின் பெற்றோரும் கூட, கதிரவனைச் சமாதானம் தான் செய்தனர்.
ஏற்கெனவே இவர்களது காதலை அறிந்து அதற்கும் சம்மதமே தெரிவித்தனர். ஆனாலும், அவனுக்குத் தான் உறுத்தல். அதனாலேயே இப்படி கொட்டி விட்டான்.
யாஷ் பிரஜிதன், ஒன்றும் பேசாமல் அவனை அணைத்துக் கொண்டான்.
அவனது புரிதலில் எழுந்த பெருமிதம் அந்த அணைப்பில். அதில் சற்றே இயல்பானவன், “நான் ஓகே தான் யாஷ்!” என்றான் பெருமூச்சுடன்.
“நீ ஓகே ஆகி தான் ஆகணும்…” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டுச் செல்ல, இங்கோ சிந்தாமணி உதட்டைப் பிதுக்கி நின்றாள்.
“உனக்கு என்னாச்சு சிந்தா?” கதிர் கேட்டதில்,
“போங்க, உங்க மேல கோபமா இருக்கேன். நான் கட்டிப்பிடிச்சுச் சமாதானம் பண்ணுனா அழுது கரைஞ்சீங்க… இப்ப மாமா கட்டிப் பிடிக்கவும் நார்மல் ஆகிட்டீங்க. உங்களுக்கு நான் லவரா அவரு லவரா?” என மூக்கை உறிஞ்சியதில், அத்தனை நேரம் இருந்த இறுக்கம் மறந்து சிரித்து விட்டான்.
“இதுல என்ன சந்தேகம்? நீ தான் என் லவர்! என்னோட எல்லா சூழ்நிலைலயும் உன் காதல் மட்டும் தான் இப்ப எனக்குத் துணையா இருக்கு சிந்தா. தேங்க்ஸ்!” என மனமுவந்து கூறியதில் முறுவலித்தவள், “எது நடந்தாலும் பார்த்துக்கலாம் கதிர். இனி இப்படி அழாதீங்க… கஷ்டமா இருக்கு.” என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
மாலையில் சொன்னது போன்றே மருந்துகளின் வாசம் ஒழிய, தங்களது அறைக்கே வந்து விட்டாள் நிதர்ஷனா.
“இனி நான் நார்மலா இருக்கலாமா யாஷ்?” ஆர்வமாகக் கேட்டாள்.
“கொஞ்சம் ரெஸ்ட் வேணும்டி. ஒரு மாசம் கழிச்சு இன்னொரு எம். ஆர். ஐ எடுத்துப் பார்க்கணும். ஜஸ்ட் ஒரு ஃபார்மாலிட்டி. தென், அந்த வானத்துக்குக் கூட ஏணி போட்டு நடந்து போய்க்கோ!” என்றான் கண் சிமிட்டி.
“நீயும் வர்றியா?”
“நீ போனா பின்னாடியே நானும் வந்துடுவேன் மின்னல்!” அவள் மூக்கு நுனியில் முத்தமிட்டான்.
“கனவு மாதிரி இருக்கு அரக்கா… உன்கூட இனி நான் எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் இல்லாம இருக்கலாம் தான?”
“எஸ்! உடனே இல்ல கொஞ்ச மாசம் கழிச்சு… உன்னை மாதிரியே ஒரு பேபி பிளான் பண்ணலாம்…” என அவள் கன்னம் கிள்ளினான்.
அதில் சிவந்தவள், “எனக்கு உன்னை மாதிரி தான் வேணும்…” என அவன் சட்டை பட்டனைத் திருக, “அப்போ என் சாயல்ல வர்ற மாதிரி டியூன் பண்ணிடலாம், கோடிங் எழுதி…” என்றான் குறும்பாக.
“எதே! நீ இன்னும் ஏஐ மோட்ல இருக்க அரக்கா…” எனப் பல்லைக் கடித்ததில் அவன் சத்தமாகச் சிரிக்க, அவளும் இணைந்து நகைத்ததில், புன்னகையுடன் சூரியனும் மேற்கில் விடை கொடுத்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
31
+1
2
+1
1

