Loading

ப்ராஜெக்ட் விஷயமாக வெளிநாட்டுக்குச் சென்ற பல்லவன் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியுடனும் மகளுடனும் வீடியோ காலில் பேசி விடுவான்.

முடியாத பட்சத்தில் சாதாரண அழைப்பிலாவது அவர்களின் குரலைக் கேட்காவிட்டால் அவனுக்கு அன்றைய நாளே ஓடாது.

தினமும் இருவரிடமும் பேசி விடுவான்.

அனுஷியாவிற்கும் கூட அப்படி தான்.

அனுபல்லவியோ அதற்கும் மேல். தந்தையின் குரலைக் கேட்டாலே போதும். “ப்பா… பா‌‌…” என உற்சாகமாகி விடுவாள்.

அதனைக் கேட்கும் போது பல்லவனுக்கு கை கால் ஓடாது. மகளைக் கைகளில் அள்ளிக் கொஞ்ச மனம் வெகுவாய்த் துடிக்கும்.

அடுத்து வந்த ஒரு வாரமும் அவ்வாறே கடந்தது.

இன்னும் மூன்று நாட்களில் ப்ராஜெக்டை முடித்துக் கொண்டு கிளம்ப இருப்பதால் மனைவிக்கும் மகளுக்கும் மனதிற்குப் பிடித்ததை எல்லாம் வாங்கிக் குவித்தான் பல்லவன்.

அதிசயத்திலும் அதிசயமாக இந்த ஒரு வாரமும் ஹேமா அனுஷியாவிடம் சாதாரணமாகவே நடந்து கொண்டாள்.

ஜெயா தன் மருமகளுக்கு உடம்பு முடியாதிருப்பதாகக் கூறி அவசரமாக ஊருக்குக் கிளம்ப, அனுஷியாவிற்கு ஏனோ அவரை அனுப்பவே மனம் இல்லை.

இருந்தும் அவருக்கும் குடும்பம், உறவுகள் என இருப்பதால் சம்பளத்துடன் சேர்த்து மேலும் கொஞ்சம் பணம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தாள் அனுஷியா.

அன்றும் இரவு பல்லவனுடன் பேசி விட்டு அனுபல்லவியைத் தூக்கிக் கொண்டு தன் அறைக்கு உறங்கச் சென்ற அனுஷியாவை கண்களில் வன்மத்துடன் வெறித்தாள் ஹேமா.

மறுநாள் அனுஷியா பல்லவனுக்கு அழைக்க முயற்சிக்க, பல்லவனோ அழைப்பை ஏற்கவே இல்லை.

ஏதாவது வேலையாக இருப்பான் என எண்ணிய அனுஷியா வேலை முடிந்ததும் பல்லவன் தனக்கு அழைப்பான் எனக் காத்திருக்க, பல்லவனோ அனுஷியாவைத் தொடர்பு கொள்ளவே இல்லை.

மறுநாளும் அவ்வாறே நடக்க, அனுஷியாவிற்கு மனம் ஏதோ போல இருந்தது.

சோஃபாவில் கால் நீட்டிப் படுத்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஹேமாவிடம் சென்ற அனுஷியா, “அண்ணி…” என அழைக்க, அவளை சுட்டெரிப்பது போல் நோக்கினாள் ஹேமா.

ஹேமாவின் பார்வையில் அச்சம் கொண்ட அனுஷியாவிற்கு வார்த்தைகள் வராது போக, ஹேமா அவளையே அழுத்தமாக நோக்கிக் கொண்டிருக்கவும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “அ…அது… அவர் ரெண்டு நாளா கால் பண்ணவே இல்ல. நான் கால் பண்ணாலும் ரீச் ஆகல. எ…எனக்கு பயமா இருக்கு.” என்றாள் அனுஷியா.

அவளை ஏளனமாக நோக்கிய ஹேமா, “உன்ன விட பெட்டரா யாராவது கிடைச்சிருக்கும் அவனுக்கு. எத்தனை நாளைக்கு தான் சாக்கடை கூட குப்பை கொட்டுறது? அவனோட தகுதிக்கும் தராதரத்துக்கும் ஏத்தது போல வாழ வேணாமா?” என அனுஷியாவின் மனதில் நெருப்பை வாரி இறைத்தாள்.

“அண்ணி…” என அனுஷியா பதற, சட்டென எழுந்து நின்ற ஹேமா அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் அவளின் கன்னத்தில் அறையவும் அதிர்ந்து போய் நின்றாள் அனுஷியா.

“யாருக்கு யாரு டி அண்ணி? ******** நீ. நான் உனக்கு அண்ணியா?” எனக் கேட்டு மறு கன்னத்திலும் ஓங்கி அறைய, தன்னிலை இழந்து கீழே விழுந்த அனுஷியாவின் இதழ் கிழிந்து இரத்தம் கசிந்தது.

பிரதாப் ப்ளே ஸ்கூல் சென்றிருக்க, அனுபல்லவியோ ஹாலில் தனியாக விளையாட்டு சாமான்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

ஹேமா அறைந்து அனுஷியா கீழே விழுவதைக் கண்ட குழந்தைக்கு என்ன புரிந்ததோ, “ம்…மா… ம்…மா… ம்மா…” என அழைத்தவாறு தாயிடம் தவழ்ந்து வர முயன்றது.

முதல் முறை குழந்தை தன்னை ‘அம்மா’ என்று அழைப்பதைக் கேட்டுக் கூட மகிழ முடியாத நிலையில் இருந்தாள் அனுஷியா.

கீழே விழுந்து கிடந்தவளின் தலையை முடியைப் பற்றித் தூக்கிய ஹேமா அனுஷியா வலியில் துடிக்கவும் தன் பிடியை இறுக்கினாள்.

“என்ன நினைச்ச நீ? ஒரு ****** நீ. வசதியான ஒருத்தனுக்கு வலை விரிச்சு உன் முந்தானைக்குள்ள போட்டுக்கிட்டா எல்லாம் மாறிடுமா என்ன? வெட்கமே இல்லாம அவன் சொத்த முழுசா அனுபவிக்க பார்க்குற.” எனக் கேட்டாள் ஹேமா கோபமாக.

“இப்படி எல்லாம் பேசாதீங்க அண்ணி.” என்றாள் அனுஷியா கதறலாக.

“திரும்ப திரும்ப அண்ணி சொல்ற.” என்ற ஹேமா மீண்டும் அனுஷியாவை அறைய, அனுஷியாவோ தன் வலியையும் மறந்து தன்னவனுக்கு என்னவோ என்று தான் பதறினாள்.

அதே நேரம் வீட்டினுள் நுழைந்த கிஷோரைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தாள் அனுஷியா. 

அனுபல்லவியோ புது ஆட்களைக் கண்டு பயத்தில் வீரிட்டு அழத் தொடங்கினாள்.

“என்ன பேபி? நான் வர முன்னாடியே ஆரம்பிச்சிட்ட?” என இளக்காரமாகக் கேட்ட கிஷோர் அனுஷியாவை மேலிருந்து கீழாக பார்வையால் அலச, அனுஷியாவிற்கு அவனின் பார்வையில் உடலெல்லாம் அருவருப்பில் எரிந்தது.

கிஷோரைக் கண்டு அனுஷியா முகத்தைச் சுளிக்கவும் அவளை ஏளனமாக நோக்கிய கிஷோர், “என்ன டி பெரிய பத்தினி தெய்வம் போல சீன் போடுற? என் மச்சானுக்கு முன்னாடியே பல பேருக்கு முந்தானை விரிச்சவள் தானே நீ.” என்றான்.

தன் கணவன் கூறியதைக் கேட்டு ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் ஹேமா அவ்விடமே அதிரச் சிரிக்க, கூனிக் குறுகி‌ நின்றாள் அனுஷியா.

“என்னை விடுங்க ப்ளீஸ். அ…அவர் கூட நான் பேசணும்.” எனக் கெஞ்சினாள் அனுஷியா.

“பேசலாமே. அதுக்கென்ன? பட் அதுக்கு முன்னாடி நாம கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.” என்ற கிஷோரின் பார்வை அழுது கொண்டிருந்த அனுபல்லவியிடம் செல்ல, “என் குழந்தைய எதுவும் பண்ணிடாதீங்க ப்ளீஸ். உங்க கால்ல விழுந்து கேட்குறேன்.” என்ற அனுஷியா ஹேமாவின் பிடியிலிருந்து தப்பிக்க முயல, அவள அனுஷியாவை விடுவதாக இல்லை.

உதவிக்குக் கூட யாரும் இன்றி கலங்கித் தவித்தாள் அனுஷியா.

அனுபல்லவியை நோக்கிச் சென்ற கிஷோர் அழுது கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி கையில் எடுக்க, அனுபல்லவியின் அழுகை அதிகமானது.

“ஹேய் குட்டி… இங்க பாரு… மாமாவ பாரு.” என்ற கிஷோரின் கரத்தில் இருந்து விடுபடப் போராடிய அனுபல்லவி அனுஷியாவின் பக்கம் இரு கரங்களையும் நீட்டி அழுதாள்.

குழந்தையின் கதறலில் தாயுள்ளம் துடிக்க, மனசாட்சியே அற்ற அம் மிருகங்களுக்கோ குதூகலமாக இருந்தது.

அனுபல்லவியுடன் சோஃபாவில் அமர்ந்த கிஷோர், “உன் புருஷன பார்க்கணுமா?” எனக் கேட்டான் அனுஷியாவிடம்.

அனுஷியா அவசரமாக ஆம் எனத் தலையசைக்க, “ஹஹா… அது என்ன அவ்வளவு ஈசியா? அப்போ நீ நாங்க சொல்றத கேட்கணும்.” என்கவும், “நீங்க என்ன சொன்னாலும் செய்றேன். நான் அவர பார்க்கணும். அவருக்கு என்னாச்சு?” எனக் கேட்டாள் அனுஷியா பதட்டமாக.

“ஏன்? புருஷன பார்க்காம இருக்க முடியலயா? அவ்வளவு ******* ஆ இருக்கா?” என கிஷோர் நாக்கில் நரம்பில்லாமல் பேச, அனுஷியாவின் பார்வையோ குழந்தையிடமே இருந்தது.

“முதல்ல இந்த அழுது சீன் போடுறது எல்லாத்தையும் நிறுத்து. உனக்கு உன் புருஷன பார்க்கணும்னா நாங்க சொல்றத நீ செய்யணும்.” என ஹேமா கூறவும் அமைதி அடைந்த அனுஷியா அவளைக் கேள்வியாக நோக்க, “எங்க அண்ணன விட்டு நீ மொத்தமா விலகி போய்டணும்.” என குண்டைத் தூக்கிப் போட்டாள் ஹேமா.

ஹேமா கூறியதைக் கேட்கும் போதே அனுஷியாவிற்கு தன் இதயத்தை யாரோ கிழித்தெடுப்பது போல் வலித்தது.

அவளால் தன்னவனை விட்டு இருக்க முடியுமா? தன்னவனால் தான் தன்னைப் பிரிந்து இருக்க முடியுமா?

அது பற்றி யோசிக்கும் போதே அனுஷியாவின் இதயம் வேலை நிறுத்தம் செய்வது போல் இருந்தது.

அனுஷியா மறுப்பாகத் தலையசைக்கவும் இகழ்ச்சியாகப் புன்னகைத்த கிஷோர் தன் கைப்பேசியில் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து அனுஷியாவிடம் காட்ட, அதில் உடல் முழுவதும் கட்டுகளுடன் சுய நினைவின்றி மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் படுத்திருந்த பல்லவனைக் கண்டு அதிர்ந்தாள் அனுஷியா.

“என்னங்க…” என அனுஷியா கதற, கைப்பேசியை அணைத்து வைத்த கிஷோர், “நான் ஒரே ஒரு கால் போட்டா போதும். ஏற்கனவே தொங்கிட்டு இருக்குற உன் புருஷனோட உசுரு சட்டுன்னு போயிரும்.” என்றான்.

“வேண்டாம். என் புருஷன எதுவும் பண்ணிடாதீங்க. உங்க கிட்ட கெஞ்சி கேட்குறேன். எங்கள விட்டுடுங்க. ப்ளீஸ்…” எனக் கெஞ்சியவளை துச்சமாகப் பார்த்தனர் இருவரும்.

“எவ்வளவு ப்ளேன் போட்டு என் தங்கச்சிய அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சி சொத்து முழுக்க எங்க பெயர்ல எழுதி வாங்கிக்கலாம்னு பார்த்தா அவன் என்னடான்னா ஒரு சாக்கடைய கல்யாணம் பண்ணிட்டு நிற்குறான். அவ்வளவு ஈஸியா விட்டுடுவோமா? இப்போ கூட ஒன்னும் பிரச்சினை இல்ல. நீயும் நீ பெத்து போட்டதும் அவன விட்டுப் போய்ட்டீங்கன்னா அதுக்கப்புறம் அவன நாங்க பார்த்துப்போம். அவன கல்யாணம் பண்ணிக்க என் தங்கச்சி இருக்கா. பாதில வந்தவ தானே நீ. கொஞ்சம் நாள்ல அவனும் உன்ன மறந்துடுவான்.” என்றான் கிஷோர் வன்மமாக.

ஆனால் அனுஷியாவிற்குத் தெரியும் தன்னவன் எந்த சூழ்நிலையிலும் தன்னை மறக்கவும் மாட்டான், கைவிடவும் மாட்டான் என்று.

கிஷோர் கண்ணைக் காட்டவும் அனுஷியாவை விட்ட ஹேமா உள்ளே சென்று சில பேப்பர்ஸுடன் வர, அதனைக் குழப்பமாக நோக்கினாள் அனுஷியா.

“என்னன்னு தெரியலயா? டிவோர்ஸ் பேப்பர்.” என ஹேமா கூறவும் அனுஷியாவின் உலகம் நழுவிக் காலின் கீழே விழுவது போல் உணர்ந்தாள்.

“நீ மட்டும் இதுக்கு சம்மதிக்கலன்னா…” என இழுத்த கிஷோர் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கையடக்கக் கத்தியை எடுத்துக் காட்டினான்.

அனுஷியா அதிர்ந்து நோக்க, கிஷோரோ அதனை அனுபல்லவியின் அருகே கொண்டு சென்றான்.

“ஐயோ என் குழந்தை. வேண்டாம் ப்ளீஸ். உ..உங்களுக்கு சொத்து தானே வேணும். அவர் கிட்ட நான் பேசி வாங்கி தரேன். நாங்க எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போயிடுறோம். எங்கள விட்டுடுங்க. ப்ளீஸ் அண்ணி.” என ஹேமாவின் காலைப் பிடித்துக் கெஞ்சினாள்.

“நீயும் உன் புள்ளயும் இருந்தா அவன் நாங்க சொல்றத கேட்க மாட்டான். அவன எப்படி எங்க வழிக்கு கொண்டு வரணும்னு எங்களுக்குத் தெரியும். மரியாதையா கையெழுத்த போடு. இல்ல குடும்பத்தோட மேல அனுப்பி வெச்சிடுவேன்.” என மிரட்டினான் கிஷோர்.

குழந்தை அனுபல்லவியோ அழுது அழுதே சோர்வுற்று இருந்தாள்.

அழக் கூட திராணியற்று தாயைப் பார்த்து தேம்ப, அவளுக்கு மிக நெருக்கமாக கிஷோர் பிடித்திருந்த கத்தியைக் கண்டு அனுஷியாவின் சர்வமும் நடுங்கியது.

டீப்பாயின் மீதி விவாகரத்துப் பத்திரங்களை வைத்த ஹேமா அனுஷியாவின் கரத்தில் பேனாவைத் திணிக்க, அதனை வாங்கியவளின் கரங்கள் நடுங்கின.

“இன்னும் என்ன யோசிக்கிற? சீக்கிரம் போடு. இல்ல உன் கண்ணு முன்னாடியே உன் குழந்தை உசுரு போயிடும்.” என்ற கிஷோர் கத்தியை அனுபல்லவியின் கழுத்துக்கு அருகே கொண்டு செல்ல, “வே…வேணாம். நான் போடுறேன்.” என்றாள் அனுஷியா அவசரமாக.

அதனைக் கேட்டு ஹேமா மற்றும் கிஷோரின் முகத்தில் ஒரு குரூரப் புன்னகை உதயமானது.

“இங்க கையெழுத்துப் போட்டுத் தந்துட்டு ஏதாவது ஒரு வழியில உன் புருஷன கான்டாக்ட் பண்ணி ஏதாவது தகிடுதத்தம் பண்ணணும்னு நினைச்ச… உன் புருஷன மொத்தமா மேல அனுப்பி வெச்சிடுவேன்.” என்றான் கிஷோர் மிரட்டலாக.

கண்கள் கண்ணீர் மழை பொழிய, ‘என்னை மன்னிச்சிடுங்க பல்லவன். எ… எனக்கு வேற வழி தெரியல. நீங்களும் நம்ம குழந்தையும் எனக்கு உயிரோட வேணும்.’ என மனதால் தன்னவனிடம் மன்னிப்புக் கேட்ட அனுஷியா விவாகரத்துப் பத்திரங்களில் கையெழுத்து இட்டாள்.

வெற்றிக் களிப்பில் இருந்த கிஷோர், “ப்ச்..‌. எங்களுக்கு வேண்டியது கிடைச்சிடுச்சு. ஆனா… எங்கள இவ்வளவு அலைய விட்ட உங்கள சும்மா விட முடியுமா?” எனக் கேட்டான் விஷமமாக.

அனுஷியா அதிர, “ஆமா… யாரை முதல்ல போட்டுத் தள்ளுறது? உன்ன அனுப்பிட்டு கூடவே உன் பொண்ண அனுப்பட்டுமா? இல்ல… உன் கண்ணு முன்னாடியே நீ துடிக்கத் துடிக்க உன் பொண்ண கொன்னுட்டு அவளுக்கு துணையா உன்ன அனுப்பட்டுமா? எங்களுக்காக கையெழுத்தே போட்டுத் தந்துட்டாய். அதனால ஏதோ போனா போகட்டும்னு இந்தச் சாய்ச மட்டும் உன் கிட்டயே விடுறேன். சீக்கிரம் முடிவு பண்ணு. உனக்கு பத்து செக்கன் தான் டைம்.” என்ற கிஷோர் பத்து, ஒன்பது என எண்ணத் தொடங்க, இளக்காரமாகப் புன்னகைத்தபடி அனுஷியாவை நோக்கினாள் ஹேமா.

நிச்சயம் இவர்கள் சொன்னதை செய்து விடுவார்கள் என்பதை உணர்ந்த அனுஷியாவிற்கு கணவனையும் பிரிந்து விட்டு தம் காதலுக்கு கிடைத்த பரிசான குழந்தையையும் இழப்பதற்கு மனம் இல்லை. 

ஏதாவது செய்து தானும் தப்பித்து குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்று அவசர அவசரமாக சிந்தித்து ஒரு முடிவெடுத்த அனுஷியா நெஞ்சுறுதியுடன் எழுந்து நின்று கிஷோரையும் ஹேமாவையும் அழுத்தமாக ஏறிட்டாள்.

“என்ன? அதுக்குள்ள முடிவு பண்ணிட்டியா? சரி சொல்லு. இருந்தாலும் சாகப் போற நிலமைல கூட உன் திமிரு கொஞ்சம் கூட குறையல இல்ல.” எனக் கேட்டான் கிஷோர்.

கிஷோர் கத்தி இருந்த கரத்தைக் கீழிறக்கி தாம் நினைத்தது நடந்து விட்ட திருப்தியில் இருக்க, அவன் எதிர்ப்பார்க்காத சமயம் சட்டென கிஷோரின் கரத்தில் இருந்த கத்தியை பறித்து ஆபத்துக்குப் பாவம் இல்லை என அவனின் வயிற்றிலேயே இறக்கினாள்.

இதனை எதிர்ப்பார்க்காது நின்றிருந்த கிஷோரோ வலியில் அனுபல்லவியைக் கீழே விட, அவசரமாக குழந்தையைப் பாய்ந்து பிடித்தாள் அனுஷியா.

இத் திடீர்த் திருப்பத்தை எதிர்ப்பார்க்காது அதிர்ச்சியில் நின்றிருந்த சில நொடிகளில் ஹேமா தன்னிலை அடைந்து அனுஷியாவை நோக்கி ஆக்ரோஷத்துடன் வர முயல, டீப்பாயின் மீதிருந்த விவாகரத்துப் பத்திரங்களைக் கையில் எடுத்த அனுஷியா டீப்பாயை ஹேமாவின் மீது தள்ளி விட்டாள்.

உறுதியான மரத்தினால் செய்யப்பட்ட அந்த டீப்பாயின் பாரத்தால் ஹேமாவிற்கு கால்களைக் கூட அசைக்க முடியாதிருந்தது.

சிறிய கையடக்கக் கத்தி என்பதால் கத்தி கிஷோரின் வயிற்றில் ஆழமாக இறங்காவிட்டாலும் இரத்தம் அதிகமாக வெளியேறத் தொடங்கியது.

அனுஷியா அங்கிருந்து தப்பிக்க முயலவும் தன் வலியைக் கூட பொருட்படுத்தாத கிஷோர் அவளைப் பிடித்து விடும் நோக்கில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அவளை நெருங்க, பதட்டமடைந்த அனுஷியா அவனின் ஆண்மையில் உதைத்து விடவும் அவ்விடத்திலேயே சுருண்டு விழுந்தான் கிஷோர்.

இது எல்லாமே சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்திருந்தது.

பலமுறை பல்லவன் அனுஷியாவிற்கு தந்திருந்த மன தைரியத்தினால் தான் அவளால் அவ்வாறு செயற்பட முடிந்தது.

அழுது கொண்டிருந்த குழந்தையைச் சமாதானப்படுத்தக் கூட நேரமின்றி  அனுபல்லவியை தூக்கிக் கொண்டு கையில் விவாகரத்துப் பத்திரங்களுடன் அவசரமாக வீட்டில் இருந்து வெளியேறினாள் அனுஷியா.

இடையில் ப்ளே ஸ்கூலில் இருந்து ட்ரைவருடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிரதாப் அவளை ‘அத்தை… அத்தை…’ என அழைத்தது எதுவும் அவளின் கருத்தில் பதியவில்லை.

வீட்டிற்கு வந்த பிரதாப் வயிற்றில் இருந்து இரத்தம் கசிய சுருண்டு விழுந்திருந்த தந்தையையும் தன் மீதிருந்த டீப்பாயை அகற்ற முயற்சித்துக் கொண்டிருந்த தாயையும் கண்டு ஓரளவு புரிந்து கொள்ளும் வயதில் இருந்த சிறுவனோ கையில் குழந்தையுடன் ஓடிய அத்தையை நினைவு கூர்ந்து நிலைமையை வேறு விதமாகப் புரிந்து கொண்டான்.

அது தான் பிரதாப்பிற்கு அனுஷியா மீது எழுந்த முதல் தவறான அபிப்ராயம்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்