Loading

ப்ராஜெக்ட் முடிந்து இன்னும் மூன்று நாட்களில் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லவிருந்த பல்லவன் மனைவிக்கும் மகளுக்கும் பிடித்தவற்றை எல்லாம் வாங்கிக் குவித்தான்.

 

ஆனால் பல்லவன் எதிர்ப்பார்த்ததற்கு மாறாக மறுநாளே ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிவடைய, காதல் மனைவியையும் ஆசை மகளையும் பார்க்கும் ஆவலில் அனுஷியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அவளிடம் கூறாமலேயே மறுநாள் இந்தியா கிளம்ப டிக்கெட் புக் செய்தான்.

 

மறுநாள் இந்தியா வந்திறங்கி ஒரு டாக்சி பிடித்து வீட்டிற்கு கிளம்பிய பல்லவனின் மனமெங்கும் தன்னவளின் நினைவே.

 

தன்னைக் கண்டதும் தன்னவளின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளைக் காணும் ஆவலில் இருந்தவன் சென்று கொண்டிருந்த டாக்சி திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு லாரி மூலம் அடித்துத் தூக்கப்பட்டது.

 

மறு நொடியே அவ் இடத்தில் கூட்டம் அலைமோத, போலீஸாரும் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர்.

 

டாக்சி ட்ரைவர் அங்கேயே இறந்து விட, பல்லவன் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டான்.

 

மயக்கத்திற்குச் செல்லும் போது கூட அனுஷியாவின் முகம் தான் அவன் மனக் கண்ணில் வந்து போனது.

 

லாரி ட்ரைவர் சரியாக ப்ரேக் பிடிக்கவில்லை எனத் தானாகவே வந்து சரண்டர் ஆகி விட, அவ் வழக்கு அத்துடன் முடிந்தது.

 

ஆனால் அது திட்டமிடப்பட்ட விபத்து என்பதை அவர்கள் அறியவில்லை.

 

கிஷோர் தான் தன் ஆட்கள் மூலம் பல்லவனை முழு நேரமும் கண்காணித்து சரியாக ஆள் வைத்து அவ் விபத்தை ஏற்படுத்தினான்.

 

அந்த லாரி ட்ரைவர் கூட கிஷோரின் ஆள் தான்.

 

தானாகவே சரண்டரானால் தண்டனை குறைவு என்பதால் தான் அந்த ஏற்பாடு.

 

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பல்லவன் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சுய நினைவின்றிக் கிடந்தான்.

 

அதன் பின்னர் தான் கிஷோர் அனுஷியாவை மிரட்ட அவள் வீட்டிற்கே சென்றது.

 

ஆனால் அவன் எதிர்ப்பாராத விதமாக அனுஷியா தப்பித்து விட, அங்கு வந்த பிரதாப் மூலம் ட்ரைவரை வரவழைத்து இருவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

 

அவர்களிடமிருந்து தப்பித்த அனுஷியா குழந்தையையும் தூக்கிக் கொண்டு சற்றுத் தூரம் ஓடி வந்து மூச்சு வாங்கினாள்.

 

அவளுக்கு உலகமே இருண்டு விட்டது போல் இருந்தது.

 

தன்னவனுக்கு என்ன ஆனதோ என மனம் ஒரு பக்கம் பதற, பிஞ்சுக் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு எங்கு செல்வது, அடுத்து என்ன செய்வது என்றே அவளுக்குப் புரியவில்லை.

 

அப்போது தான் மாலதியின் நினைவு வர, அங்கிருந்த கடை வியாபாரி ஒருவரிடம் கைப்பேசியை வாங்கி மாலதிக்கு அழைத்து தகவல் தெரிவித்தாள்.

 

சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த மாலதி, “அனு… என்னாச்சு?” எனக் கேட்டாள் பதட்டமாக.

 

அனுஷியா நடந்தவற்றைக் கூறவும் ஆத்திரம் அடைந்த மாலதி, “நீ அவங்கள சும்மாவா விட்ட? வா உடனே போலீஸ்ல கம்ப்ளைன் பண்ணலாம் கா.” என்றாள்.

 

மறுப்பாகத் தலையசைத்த அனுஷியா, “இல்லக்கா. வேண்டாம். எனக்குப் பயமா இருக்கு. அவங்க என் பொண்ண கொன்னுடுவாங்க. எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல. ஆ..ஆனா அவருக்கோ என் பொண்ணுக்கோ எதுவும் ஆகக் கூடாது.” என்றாள் கண்ணீருடன்.

 

“அதுக்காக அவங்கள சும்மா விட சொல்றியா? அவங்க திரும்ப உன்ன தேடி வந்தா என்ன பண்ணுறது?” எனக் கேட்டாள் மாலதி கோபமாக.

 

“வேண்டாம் கா. ப்ளீஸ்… புரிஞ்சிக்கோங்க. என் குழந்தை மட்டும் தான் எங்க காதலுக்கு சாட்சியா மிச்சம் இருக்கு. அவளையும் இழக்க விரும்பல நான். எ…எனக்கு அவர் வரும் வரை இருக்கு ஒரு இடம் மட்டும் ஏற்பாடு பண்ணி தாங்க. அ…அவருக்கு என்ன ஆச்சோ தெ…தெரியல. ஹா…ஹாஸ்பிடல்ல இருக்காரு. எனக்கு பயமா இருக்குக்கா. யார் கிட்ட உதவி கேட்குறதுன்னே தெரியல.” எனக் கதறினாள் அனுஷியா.

 

“சரி சரி அழாதே அனு. ஏதாவது பண்ணலாம். உன் புருஷனுக்கு எதுவும் ஆகாது. அவர் நல்லா இருப்பாரு. நான் உயிரோட இருக்கும் வரைக்கும் உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்.” என்றாள் மாலதி வேறு வழியின்றி.

 

அனுஷியா மாலதியின் தோளில் சாய்ந்து கதற, அவளை அணைத்து தலையை வருடி விட்ட மாலதி, “அனு… முதல்ல அழுகைய நிறுத்து. அழுதா எதுவும் நடக்க போறதில்ல. இது நீ தைரியமா இருக்க வேண்டிய நேரம். முதல்ல வா நீ என் கூட. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்து என்ன பண்ணுறதுன்னு யோசிக்கலாம்.” என்றவள் இருவரையும் அழைத்துக் கொண்டு தான் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றாள்.

 

சத்யனைக் கைது செய்த பின் அவர்கள் அனைவரும் விடுதலையடைய, ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வேலைகளை செய்து பிழைப்பை நடத்தினர்.

 

மாலதியின் வீட்டுக்கு வந்த அனுஷியா வீட்டை விட்டு வெளியே எங்குமே செல்லவில்லை.

 

தன்னவன் இல்லாமல் தனியே குழந்தையுடன் எங்கும் செல்லவும் அவளுக்குப் பயமாக இருந்தது.

 

மாலதி தான் அனுஷியாவிற்கு இருந்த ஒரே ஆறுதலும் துணையும்.

 

தனக்குத் தெரிந்த ஆட்கள் மூலம் மாலதி தான் பல்லவனைப் பற்றி அறிய பலவாறாக முயற்சி செய்தாள்.

 

இருந்தும் பலன் என்னன்னவோ பூச்சியம் தான்.

 

ஏனெனில் கிஷோர் அவ்வளவு தெளிவாக பல்லவன் பற்றிய தகவல்கள் வெளியே வராது காத்தான்.

 

தன் காயத்துக்கு சிகிச்சை பெற்றுக் கொண்ட கிஷோர் தன் அடியாட்களிடம் கூறி அனுஷியாவைத் தேடச் சொல்லிக் கட்டளையிட, அவர்கள் எங்கு தேடியும் அனுஷியா பற்றிய தகவல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

 

அனுஷியாவின் நல்ல நேரத்திற்கு மாலதி பற்றி கிஷோர் அறியவில்லை.

 

கிஷோரும் ஹேமாவும் வீடு திரும்பியதும் பிரதாப் அனுஷியா பற்றிக் கேட்க, “அந்த சாக்கடைய அத்தைன்னு சொல்லாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.” என்றாள் ஹேமா கோபமாக.

 

தாயின் கோபத்தில் பயத்தில் நடுங்கிய பிரதாப், “அ…அவங்க தான் அப்பாவ கத்தியால குத்தினாங்களா?” எனக் கேட்கவும் அதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஹேமா உடனே முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, “ஆமாடா கண்ணா. அவ தான் உங்க அப்பாவ கத்தியால குத்தினா. என்னையும் அடிச்சிப் போட்டா. எல்லாம் சொத்துக்காக. உங்க மாமாவ கூட ஏதோ பண்ணிட்டா கண்ணா. எங்க அண்ணனுக்கு என்ன ஆச்சோ தெரியல.” என நீலிக் கண்ணீர் வடித்தவளுக்கு நன்றாகவே தெரியும் பிரதாப் பல்லவன் மீது வைத்திருக்கும் பாசம் பற்றி.

 

அன்றிலிருந்து அனுஷியாவை வெறுத்தான் பிரதாப். ஹேமாவும் அதனை அதிகரிக்கும் விதமாகவே அவனிடம் கட்டுக் கதைகளைக் கூற, சிறுவன் பிரதாப்பும் தாயின் பேச்சை அவ்வாறே நம்பினான்.

 

அன்று வீட்டுக்கு வந்த கிஷோரின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

 

“என்னாச்சுங்க? ஏன் கோவமா இருக்கீங்க? அந்த அனுஷியா பத்தி ஏதாவது தெரிஞ்சதா?” எனக் கேட்டாள் ஹேமா.

 

“நாம நினைச்சது ஒன்னு. நடக்குறது ஒன்னா இருக்கு ஹேமா. இனிமே அந்த அனுஷியாவால நமக்கு ஒரு லாபமும் கிடையாது. அவ திரும்பி வராத அளவுக்கு நல்லது தான்‌.” என்ற கிஷோரை ஹேமா குழப்பமாக ஏறிட, “ஹாஸ்பிடல்ல இருந்து கால் வந்தது. உங்க அண்ணன் கோமாவுக்கு போய்ட்டானாம். திரும்ப எப்போ கான்ஷியஸ் வரும்னே தெரியலயாம். வருமான்னே சந்தேகமாம்.” என்றான் கிஷோர் கோபமாக.

 

அதனைக் கேட்டு ஹேமா அதிர, “அவன் கண்ணு முழிச்சதும் அவன் பொண்டாட்டி, புள்ளய வெச்சி அவன மிரட்டி சொத்த எழுதி வாங்கலாம்னு பார்த்தா நம்ம ப்ளேன் இப்படி சொதப்பிடுச்சே.” எனக் கிஷோர் கோபமாகக் கூறவும் ஏதோ சிந்தித்த ஹேமாவுக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது.

 

“இந்த சொத்த பூரா அனுபவிக்க என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு.” என வன்மத்துடன் கூறிய ஹேமா தனது திட்டத்தைக் கூற, அதனைக் கேட்டு கிஷோரின் முகத்திலும் குரூரச் சிரிப்பு.

 

அதன்படி மறுநாளே அனைத்து பத்திரிகைகள், சமூகவலைத்தளங்கள், செய்திகள் என்பவற்றில் வந்த செய்தியைப் பார்த்து மாலதியின் வீட்டில் தன்னவன் நிச்சயம் வருவான் என நம்பிக் காத்திருந்த அனுஷியாவிற்கு மிகப் பெரிய அதிர்ச்சி.

 

அங்கேயே சுயநினைவின்றி விழுந்தவளைத் தாங்கிப் பிடித்த மாலதியின் கண்களிலும் கண்ணீர் குளம் கட்டியது.

 

குழந்தை அனுபல்லவியும் காரணமே இன்றி வீரிட்டு அழ, மாலதிக்கு அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை.

 

அனுஷியாவிற்கு அவ்வளவு அதிர்ச்சி அளித்த செய்தி யாதெனில், ‘பிரபல தொழிலதிபர் மற்றும் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் ஸ்தாபகர் சாலை விபத்தில் மரணம்.’ என்பதே.

 

ஹேமாவின் திட்டப்படி ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பல்லவனுக்குப் பதிலாக ஒரு இறந்த அனாதைப் பிணமொன்றுக்கு பல்லவனின் உடைமைகளை அணிவித்து பல்லவன் இறந்து விட்டதாக வெளியுலகுக்கு தெரியப்படுத்தினர்.

 

இனிமேலும் பல்லவனை மருத்துவமனையில் வைத்திருந்தால் ஆபத்து என யாருக்கும் தெரியாத வண்ணம் ஒரு வீட்டில் பல்லவனை அடைத்து வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

 

விபத்தில் பல்லவனின் முகம் சிதைந்திருப்பதாக மருத்துவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் மூலம் போலீஸாரை நம்ப வைத்தனர்.

 

அதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.

 

சில நிமிடங்கள் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த அனுஷியா தன்னவனை எண்ணிக் கதறி அழுதாள்.

 

“அக்கா… அவர் என்னைத் தனியா விட்டுட்டுப் போய்ட்டார் கா. இனி எனக்கு யாருக்காக இருக்கா? என்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்னு சொன்னாரே. இப்போ என்னை திரும்ப அநாதை ஆக்கிட்டாரேக்கா.” எனக் கதறினாள் அனுஷியா.

 

மாலதி அவளை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் அனுஷியாவை சமாதானப்படுத்த முடியவில்லை.

 

தாயின் அழுகையைக் கண்டு அனுபல்லவியும் ஒரு பக்கம் அழ, மாலதிக்கு செய்வதறியாத நிலை.

 

அனுஷியா பசி, தூக்கம் மறந்து தன்னவனின் நினைவில் கண்ணீர் வடிக்க, மாலதி தான் அனுபல்லவியைக் கவனித்துக் கொண்டாள்.

 

“அனு… உனக்காக இல்லன்னாலும் குழந்தைக்காகவாவது நீ நல்லா இருக்கணும். குழந்தைய பாரு. சரியா சாப்பிடுறது கூட இல்ல. அந்தக் குழந்தைக்கு இப்போ மிச்சம் இருக்குறது அம்மா மட்டும் தான். உன்ன போலவே குழந்தையையும் அநாதையா விட்டுட்டுப் போகப் போறியா?” என மாலதி சற்றுக் கடுமையாகக் கேட்கவும் அது ஓரளவு வேலை செய்தது.

 

குழந்தைக்காக தன்னை சமன் செய்து கொண்ட அனுஷியா அனுபல்லவியை வாரி அணைத்து முத்தமிட, பல நாள் கழித்து தாயின் அரவணைப்பில் குழந்தை அனுஷியாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதது.

 

அனுபல்லவியைக் காணும் போதெல்லாம் அவளிடமிருந்த கணவனின் சாயலில் மனம் உடைந்து போனாள் அனுஷியா.

 

சுமங்கலிக் கோலத்தில் அனுஷியாவைத் காணும் போது மாலதியின் உள்ளமோ நிதர்சனத்தை எண்ணி கண்ணீர் விட்டது.

 

வேறு வழியின்றி அனுஷியாவிடம் தாலியைக் கழட்டக் கூற, அனுஷியாவின் மனம் ஏனோ அதற்கு இடமளிக்கவில்லை.

 

தாலியைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்ட அனுஷியா, “அக்கா… அதை மட்டும் பண்ண சொல்லாதீங்க. இ..இந்தத் தாலி என் கிட்ட இருக்கும் போது அவர் என் கூடவே இருக்குறதா நான் உணருறேன் கா. அ…அவர் எங்கேயும் போகல. என் கூட தான் இருக்கார்.” என்றாள் கண்கள் கலங்க.

 

அதற்கு மேல் மாலதிக்கும் அவளை வற்புறுத்த மனம் வரவில்லை.

 

“அக்கா… இ..இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியல க்கா. இந்த ஊருல இருக்குற ஒவ்வொரு நொடியும் அவர் கூட வாழ்ந்த நினைவு மட்டும் தான் கா வருது. எதைப் பார்த்தாலும் அவரோட நினைவு தான். இப்படியே இருந்தா என் குழந்தைய என்னால சரியா பார்த்துக்க முடியாதுக்கா. அவர் என் கூட இல்லன்னாலும் எங்க காதலும் எங்க காதலோட சாட்சியான இந்தக் குழந்தையும் என்னோட இருக்கு. நான் அவர் பொண்ண அவர் ஆசைப்பட்டது போல வளர்த்துக் காட்டணும் கா.” என்றாள் அனுஷியா.

 

அதன்படியே யாருக்கும் சந்தேகம் வராதவாறு மாலதி மற்றும் அனுபல்லவியுடன் அனுஷியா தன்னவனின் நினைவுகளை சுமந்துகொண்டு மும்பை கிளம்பினாள்.

 

பல்லவனுக்குப் பதிலாக அவ் அநாதைப் பிணத்துக்கே இறுதிக் கிரியைகள் நடைபெற, அதன் போது ஹேமா கதறிய கதறலில் இறுதிக் கிரியைக்கு வந்திருந்த அனைவரும் அவளுக்கு தன் சகோதரன் மீதிருந்த பாசத்தில் கண் கலங்கினர்.

 

பிரதாப்பும் தன் ஆசை மாமன் இறக்கக் காரணம் அனுஷியா தான் என்ற தவறான புரிதலில் அனுஷியா மீது வெறுப்பை வளர்த்தான்.

 

ஆனால் இறுதிக் கிரியைகள் முடிந்த நிலையில் மறுநாள் ஹேமாவும் கிஷோரும் எதிர்ப்பாராத வண்ணம் அங்கு சமூகம் தந்தார் பல்லவனின் வக்கீல் அசோகன்.

 

“வாங்க சார். உட்காருங்க. என்ன விஷயமா வந்திருக்கீங்க? நீங்க ஊர்ல இல்லன்னு உங்க அசிஸ்டன்ட் சொன்னார். எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீங்க. அண்ணன் இப்படி பாதில எங்கள விட்டுப் போயிடுவார்னு நான் கனவுல கூட நினைக்கல.” என்றாள் ஹேமா கண்ணீருடன்.

 

“வெரி சாரி. உங்க இழப்பு ரொம்ப பெரிசு தான். நானுமே இதை எதிர்ப்பார்க்கல. இன்னைக்கு காலைல தான் வந்தேன்.” என்றார் அசோகன்.

 

“ஹ்ம்ம்… என்ன பண்ணுறது சார். புருஷன் இறந்த சோகத்துல எங்க மச்சானோட பொண்டாட்டியும் பொண்ணும் யாருக்கும் சொல்லாம எங்கேயோ போய்ட்டாங்க. நாங்களும் அவங்கள தேட எவ்வளவோ முயற்சி பண்ணோம். ஒரு பிரயோஜனமும் இல்ல. பாதில வந்தவங்க பாதில போய்ட்டாங்க. இப்போ அவரோட பிஸ்னஸ எல்லாம் நாங்க தான் பார்த்துக்கணும். இத்தனை நாள் மச்சானோட சப்போர்ட்ல எல்லாம் நடந்துச்சு. இப்போ அவர் இல்லாம என்ன பண்ண போறேனோ?” எனப் பெருமூச்சு விட்ட கிஷோர் வராத கண்ணீரைத் துடைத்தபடி இனி தான் மட்டும் தான் அனைத்துக்கும் பொறுப்பு என சொல்லாமல் சொன்னான்.

 

“என்ன? பல்லவனோட வைஃபையும் பொண்ணையும் காணோமா? பல்லவனோட வைஃப் கூட பேசுறதுக்காக தான் நான் வந்ததே.” என்றார் அசோகன் அதிர்ச்சியாக.

 

“அவ கூட என்ன பேச வேண்டி இருக்கு?” எனக் கேட்டாள் ஹேமா தன்னை மறந்து கோபமாக.

 

அசோகன் அவளை சந்தேகமாக நோக்க, கிஷோர் பார்வையாலேயே மனைவியை அடக்கினான்.

 

“என்னாச்சு சார்? என்ன விஷயமா பேச வந்திருக்கீங்க?” எனக் கேட்டான் குழப்பமாக.

 

தன் கைப்பையில் இருந்து ஒரு ஃபைலை எடுத்து மேசை மீது வைத்த அசோகனை கணவனும் மனைவியும் குழப்பமாக நோக்க, “பல்லவன் சில மாசஙகளுக்கு முன்னாடியே உயில் எழுதி வெச்சிட்டார். நான் காரணம் கேட்டேன் எதுக்காக இவ்வளவு அவசரமா எழுதுறீங்கன்னு? அவர் சிரிச்சிட்டே எப்படியும் ஒரு நாளைக்கு தேவைப்படத் தானே போகுதுன்னு சொன்னார். ஆனா அதுக்கு இவ்வளவு சீக்கிரமா தேவை வரும்னு நான் நினைக்கல.” என்றவரின் கண்கள் கலங்கின.

 

அவர் கூறியதைக் கேட்டு ஹேமா மற்றும் கிஷோர் இருவரும் ஏகத்துக்கும் அதிர்ந்தனர்.

 

அசோகன் தந்த உயிலை எடுத்துப் படித்த கிஷோரின் முகம் கோபத்தில் சிவந்தது.

 

ஹேமா கணவனைக் குழப்பமாக நோக்க, “பல்லவனோட சொத்து முழுவதையும் அவரோட பொண்ணு அனுபல்லவி பெயர்ல எழுதி இருக்கார் பல்லவன். அவர் பொண்ணோட பதினெட்டு வயசு பூர்த்தியாகும் வரை அந்த சொத்து எல்லாத்துக்கும் பொறுப்பு அவரோட மனைவி அனுஷியா. ஆனா அவங்களால கூட அந்த சொத்த அனுபவிக்க முடியுமே தவிர விற்கவோ, கை மாற்றவோ முடியாது. அப்படி விற்குறதாவோ, கை மாற்றுவதாவோ இருந்தா அது அவங்க பொண்ணுக்கு இருபது வயசு பூர்த்தியாகினதுக்கு அப்புறம் முழு விருப்பத்தோட அவங்க கையெழுத்தும் அவங்க கணவனோட கையெழுத்தும் இருந்தா மட்டுமே முடியும். இப்போ பல்லவனோட மனைவியும் மகளும் இங்க இல்லாத பட்சத்துல பல்லவனோட வக்கீலா, அவரோட சாட்சிதாரரா தற்காலிகமான பொறுப்புதாரிகளா மட்டும் என்னால நியமிக்கலாம். அப்படி இருந்தாலும் முன்னாடி சொன்னது போல அந்த சொத்துக்கள உங்களால அனுபவிக்க முடியுமே தவிர விற்கவோ, கை மாற்றவோ முடியாது. அதுக்கு மேல என்னால எதுவும் பண்ண முடியாது. சீக்கிரமா பல்லவனோட மனைவியையும் குழந்தையையும் கண்டு பிடிக்க பாருங்க. நான் வரேன்.” என்ற அசோகன் அங்கிருந்து கிளம்பினார்.

 

ஹேமா அவர் கூறிய தகவலில் அதிர்ந்து நின்றிருக்க, கிஷோரோ தன் கையில் இருந்த உயிலின் பிரதியை தூக்கி சுவற்றில் எறிந்தான் ஆக்ரோஷமாக.

 

“பல்லவன்…” எனக் கிஷோர் ஆத்திர மிகுதியில் கத்த, தன்னிலை அடைந்த ஹேமா, “இப்போ என்னங்க பண்ணுறது?” எனக் கேட்டாள்.

 

மறு நொடியே பாய்ந்து சென்று அவளின் கழுத்தைப் பற்றிய கிஷோர், “என்ன பண்ணுறதா? என்ன பண்ணுறதுன்னா கேட்குற? போய் சாவு டி. உன் அண்ணன் பண்ணி வெச்சிருக்குற காரியத்துக்கு எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டு நிற்குறதுக்கு பதிலா சாகலாம்.” என்றான் கோபம் கொப்பளிக்க.

 

மூச்சுக்குத் தடுமாறி அவனைத் தள்ளி விட்ட ஹேமாவோ தன் கழுத்தைப் பற்றியபடி இறுமினாள்.

 

கிஷோர் இன்னுமே கோபம் குறையாது நின்றிருக்க, “அறிவிருக்காயா உனக்கு? என்னைக் கொன்னுட்டா எல்லாம் சரி ஆகும். உனக்காக தான் என் அண்ணனையே எதிர்த்தேன் நான். என் மேலயே கை வைக்கிறியா நீ?” எனக் கேட்டாள் பதிலுக்கு கோபமாக.

 

நீண்ட மூச்சுகளை விட்டு தன்னை சமன் செய்து கொண்ட கிஷோர், “வேற என்ன தான் டி பண்ணுறது? சொத்து முழுக்க நம்ம கைல இருந்தும் அதை வெச்சி ஒன்னுமே பண்ண முடியாதபடி பண்ணிட்டான் அந்தப் பல்லவன்.” என்றான் கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு.

 

“பொறுமையா இருங்க கிஷோர். இப்போதைக்கு சொத்து நம்ம கைல தான். அதுவரைக்கும் நமக்கு லாபம் தான். நம்மள கேள்வி கேட்க தான் யாரும் இல்லையே. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அந்த அனுஷியாவையும் அவ பொண்ணையும் கண்டு பிடிக்கணும்.” என்றாள் ஹேமா வன்மமாக.

 

“ஹ்ம்ம்… நீ சொல்றதும் சரி தான் ஹேமா. ஆத்திரம் கண்ணை மறைச்சிடுச்சு. அதான் வக்கீல் தெளிவா சொல்லிட்டாரே எது பண்ணுறதா இருந்தாலும் பல்லவனோட பொண்ணுக்கு இருபது வயசு பூர்த்தியானதுக்கு அப்புறம் தான் பண்ண முடியும்னு. நம்ம கிட்ட நிறையவே டைம் இருக்கு. இந்தத் தடவை ப்ளேன் சொதப்பவே கூடாது. அவசரப்பட்டு இப்போவே ஏதாவது பண்ணப் போனால் அந்த அனுஷியா சுதாகரிச்சு ஈசியா தப்பிச்சிடுவா. கொஞ்சம் காலம் போகட்டும். அவ எல்லாம் மறந்து சாதாரணமா வெளிய சுத்த ஆரம்பிக்கட்டும். நம்ம பையனும் வளரட்டும். அப்புறம் நம்ம பிரதாப்புக்கு பல்லவனோட பொண்ண கல்யாணம் பண்ணி வெச்சி சொத்து பூரா நம்ம பெயர்ல மாத்திக்கலாம். அதுவரைக்கும் இந்த மொத்த சொத்துக்கும் நாம தான் ராஜா, ராணி எல்லாமே…” எனக் கற்பனைக் கோட்டைகளைக் கட்டியவாறு கூறிய கிஷோர் அவ் இடமே அதிரச் சிரிக்க, அவனுக்குத் துணையாகச் சிரித்தாள் அவன் மனைவி ஹேமா.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்