Loading

சுகப் பிரசவம் என்பதால் மறுநாளே அனுஷியாவை டிஸ்சார்ஜ் செய்ய, தன் மனைவி மற்றும் குழந்தை சகிதம் தம் வீட்டுக்குச் சென்றான் பல்லவன்.

 

மாலதியை அனுஷியா எவ்வளவோ அழைத்தும் அவள் வர மறுத்து விட்டாள்.

 

ஜெயா மூவருக்கும் சேர்த்து ஆரத்தி சுற்றி வரவேற்க, ஒரு கரத்தில் குழந்தையை ஏந்தி மற்ற கரத்தை கணவனின் கரத்துடன் கோர்த்தவாறு வீட்டினுள் நுழைந்த அனுஷியாவின் மனம் அவ்வளவு நிறைவாக இருந்தது.

 

பல்லவன் ஆஃபீஸுக்கு லீவ் போட்டு விட்டு முழு நேரமும் மனைவி மற்றும் குழந்தையுடனே இருந்து விட, அவனின் பொறுப்புகள் அதிகம் ஆகி விட்டது என்பதை உணர்த்திய அனுஷியா பல்லவனை கெஞ்சிக் கொஞ்சி, உருட்டி மிரட்டி வேலைக்கு அனுப்பி வைத்தாள்.

 

ஆஃபீஸுக்குச் சென்றாலும் மனம் முழுவதும் மனைவியிடமும் குழந்தையிடமுமே இருக்க, ஜெயாவை அவர்களின் முழு நேர உதவிக்கு நியமித்து விட்ட, ஏனைய வேலைகளை செய்ய வேறு ஒரு வேலைக்காரியை நியமித்தான் பல்லவன்.

 

வேலை விட்டு வந்ததுமே குழந்தையுடன் அமர்ந்து விடுவான் பல்லவன்.

 

தன் செல்ல மகளின் பொக்கை வாய் சிரிப்புக்கே மயங்கி விடுபவன் மனைவியைக் காதலில் முக்குளிக்க வைத்தான்.

 

ஒரு நல்ல நாளில் தனக்கு மிக நெருக்கமானவர்களை மாத்திரம் அழைத்து சிறியதாக குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவை நடத்தியவன் தன்னவளுடன் சேர்ந்து இருவரின் பெயரும் வருவது போல் தம் மகளுக்கு அனுபல்லவி எனப் பெயரின் சூட்டினான்.

 

நாட்கள் உருண்டோட அனுபல்லவியோ டேட்ஸ் லிட்டில் ப்ரின்சஸ் ஆக வேகமாக வளர்ந்தாள்.

 

இடையில் ஓரிரு தடவை பிரதாப்பை அழைத்து வந்து அனுபல்லவியைக் காட்ட, சிறு குழந்தையைக் கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான் அவன்.

 

அனுபல்லவிக்கு இரண்டு வயது பூர்த்தி அடைந்த நிலையில் அன்று விடுமுறை தினமாக இருக்க, ஹாலில் மகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான் பல்லவன்.

 

அனுஷியா ஜெயாவுடன் சேர்ந்து சமையல் வேலைகளில் ஈடுபட்டிருக்க, காலிங் பெல் சத்தம் கேட்டது.

 

பல்லவன் குழந்தையுடன் இருப்பதால் அனுஷியாவே சென்று கதவைத் திறக்க, வாசலில் பிரதாப்புடன் தலைவிரி கோலமாக நின்றிருந்த ஹேமா, “அண்ணி… என்னை மன்னிச்சிருங்க.” என சட்டென அனுஷியாவின் காலில் விழவும் கணவனும் மனைவியும் ஒருசேர அதிர்ந்தனர்.

 

பிரதாப்போ வந்ததும் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் ஓடி விட, முதலில் தன்னிலை அடைந்த அனுஷியா, “என்ன பண்ணுறீங்க அண்ணி? எழுந்திருங்க முதல்ல. எதுக்கு என் கால்ல எல்லாம் விழுந்துக்கிட்டு?” எனப் பதட்டமாகக் கூறியவள் ஹேமாவின் தோள் பற்றி அவளை எழுப்பி நிறுத்தினாள்.

 

பல்லவனோ குழப்பத்தில் கண்கள் சுருங்க நடப்பதை வேடிக்கை பார்க்க, “இந்தப் பாவிய மன்னிச்சிருங்க அண்ணி. உங்க நல்ல மனசு புரியாம ஏதேதோ பேசிட்டேன்.” என்று கண்ணீர் வடித்தாள் ஹேமா.

 

ஜெயா பிரதாப்பையும் அனுபல்லவியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட, அனுஷியா ஹேமாவையும் பல்லவனையும் மாறி மாறிப் பார்த்தவாறு சங்கடமாக நின்றாள்.

 

“விடுங்க அண்ணி. நான் எதையும் மனசுல வெச்சிக்கல.” என அனுஷியா தயக்கமாகக் கூறவும், “நீங்க இப்படி தான் சொல்லுவீங்க அண்ணி. அது உங்க நல்ல மனசு. உங்கள தப்பா பேசின எனக்கு நல்லா வேணும் அண்ணி. அதுக்கு தான் நான் அனுபவிக்கிறேன்.” என்ற ஹேமா பல்லவனிடம் சென்று, “அண்ணா… உங்கள புரிஞ்சிக்காம தப்பு பண்ணிட்டேன் ணா. என்னை மன்னிச்சிருங்க.” என அவனின் காலைக் கட்டிக் கொண்டு கதற, பல்லவனோ தங்கையை அழுத்தமாக நோக்கியவாறு அசையாமல் நின்றிருந்தான்.

 

என்ன தான் தங்கையாக இருந்தாலும் தன்னை மட்டுமே நம்பி வந்த தன்னவளை பேசிய பேச்சுக்களை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

 

அனுஷியா கண்களால் கணவனிடம் கெஞ்ச, என்ன இருந்தாலும் தான் பார்த்துப் பார்த்து வளர்த்த தங்கை ஆயிற்றே. 

 

அவள் இவ்வாறு தன் காலில் விழுந்து கெஞ்சுவதைக் காண சகிக்காமல் ஹேமாவின் தோள் பற்றி எழுப்பி விட்ட பல்லவன், “விடு ஹேமா. நடந்து முடிஞ்சத யாராலயும் மாத்த முடியாது.” என்க, தேம்பித் தேம்பி அழுத ஹேமா, “யார் பேச்சையோ கேட்டு சொத்துக்கு ஆசைப்பட்டு என் அண்ணன தப்பா நடத்தினதுக்கும் அண்ணிய பத்தி தப்பு தப்பா பேசினதுக்கும் சேர்த்து அந்தக் கடவுள் எனக்கு சரியான தண்டனைய கொடுத்தாட்டார் ணா.” என அழுதாள்.

 

அவளைக் குழப்பமாக நோக்கிய பல்லவன், “என்னாச்சு?” எனக் கேட்டவனுக்கு ஹேமாவை முழுதாக நம்பவும் மனசாட்சி இடமளிக்கவில்லை.

 

“நீங்க வானதிய கல்யாணம் பண்ணாம போகவும் அந்தக் கோவத்துல அத்தையும் மாமாவும் என் வீட்டுக்காரர் கிட்ட கோவமா நடந்துக்க, எல்லா கோவத்தையும் அவர் என் மேல காட்டத் தொடங்கிட்டார். நானும் ஆரம்பத்துல எல்லாம் சகிச்சிட்டு போனேன் சாதாரணமா. ஆனா சொத்து கிடைக்காதோங்குற பயத்துல அவங்க கிஷோர ஏதேதோ சொல்லி ஏத்தி விட்டுட்டாங்க. அவ்வளவு இருந்தும் நீங்க கூட என்னை அடிச்சதில்ல. ஆனா அவர் டெய்லி குடிச்சிட்டு வந்து என்னைப் போட்டு அடி அடின்னு அடிப்பார்.” என ஹேமா கண்ணீருடன் கூறவும் பல்லவன் ஆத்திரத்தில் பல்லைக் கடிக்க, அனுஷியாவோ அதிர்ந்தாள்.

 

“அவன சும்மா விட்டியா? என் கிட்ட அப்போவே சொல்லி இருக்கலாமே.” எனக் கேட்டான் பல்லவன் கோபமாக.

 

“காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு பிரச்சினைன்னு வந்து நிற்க என் ஈகோ தடுத்துச்சு ணா. ஆனா கிஷோரோட அட்டூழியம் அதிகமாயிட்டே போச்சு.” என்ற ஹேமா தன் சேலையை முழங்கால் வரை உயர்த்திக் காட்ட, அவளின் முழங்காலுக்கு கீழே நீளமாக இருந்த சூடு பட்ட தழும்பைக் கண்டு அதிர்ந்தான் பல்லவன்.

 

என்ன தான் கோபம் இருந்தாலும் தங்கைக்கு ஒன்று என்றதும் துடித்துப் போன பல்லவனின் கண்கள் கலங்க, அனுஷியாவும் அதிர்ந்து நின்றிருந்தாள்.

 

“நேத்தும் குடிச்சிட்டு வரவும் எனக்கு கோவம் வந்து ஏன் இப்படி பண்ணுறீங்க கிஷோர்னு மட்டும் தான் கேட்டேன். அதுக்கு சொத்த எழுதி வாங்கிட்டு வர துப்பில்ல. அவரையே எதிர்த்து கேள்வி கேட்குறேன்னு என்னை போட்டு அடிச்சிட்டு சூடு வெச்சிட்டார் ணா. வலி தாங்க முடியாம அங்கயே மயங்கி கேட்க நாதியில்லாம கிடந்தேன். காலைல மயக்கம் தெளிஞ்சதும் இதுக்கு மேல முடியாதுன்னு புள்ளய தூக்கிட்டு ஓடி வந்துட்டேன் ணா.” எனக் கதறினாள் ஹேமா.

 

அனுஷியா அவசரமாக தன் நாத்தனாருக்கு தண்ணீரை கொண்டு வந்து நீட்ட, அதனை வாங்கிக் குடித்த ஹேமாவோ, “தயவு செஞ்சு இந்தப் பாவிய மன்னிச்சிருங்க அண்ணி. என்னை மன்னிச்சிருங்க ண்ணா. உங்களுக்கு பண்ண பாவம் தான் என்னை விடாம துரத்துது.” எனக் கதறிய தங்கையை அணைத்து தலையை வருடி விட்ட பல்லவன், “அழாதே ஹேமா. நான் பார்த்துக்குறேன் எல்லாம். அந்த நாய போலீஸ்ல பிடிச்சு கொடுத்து முட்டிக்கு முட்டி தட்டி அவன கம்பி எண்ண வைக்கிறேன்.” என்றான் கோபமாக.

 

சட்டென தன் சகோதரனை விட்டு விலகிய ஹேமா, “தயவு செஞ்சி அப்படி மட்டும் பண்ணிடாதே ண்ணா.” எனக் கண்ணீருடன் கையேந்த, அவளை ஏன் எனும் விதமாக புருவம் உயர்த்தி குழப்பமாக நோக்கினான் பல்லவன்.

 

“அ…அ…அவன்..‌. நான் போலீஸ் கிட்ட போனா என் பையனோட பிறப்பையே சந்தி சிரிக்க வெச்சிடுவேன்னு சொல்லி இருக்கான் ணா. பிரதாப் தனக்கு பிறக்கலன்னும் நான் ஊர் மேஞ்சி யாருக்கோ பெத்துக்கிட்டேன்னும் சொல்லிடுவானாம்.” என ஹேமா கண்ணீர் வடிக்கவும் அதிர்ந்த பல்லவன், “அவன் சொன்னா அது உண்மை ஆகிடுமா? அதான் DNA டெஸ்ட் இருக்கே.” என்றான் கோபமாக.

 

“இல்லண்ணா… வேணாம். என் கற்ப பத்தி ஊரார் தப்பா பேசினா கூட பரவால்ல. பொறுத்து போவேன். ஆனா என் பையனோட பிறப்ப யாரும் தப்பா பேசிட்டாங்கன்னா அந்த நிமிஷமே நான் செத்துடுவேன் ணா.” என ஹேமா கூறவும் பல்லவன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிற்க, அவனருகில் வந்த அனுஷியாவோ பல்லவனின் கரத்தை அழுத்தி கண்களால் ஆறுதல் கூறினாள்.

 

“சரி அப்போ அவன சும்மா விட சொல்றியா?” எனக் கேட்ட பல்லவன் நினைத்திருந்தால் சொத்தைக் காரணம் காட்டி தங்கையைக் கொடுமைப்படுத்தியவனுக்கு முன்பானால் தங்கையின் நலனுக்காக யோசிக்காமல் மொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்திருப்பான்.

 

ஆனால் இப்போதோ அவனுக்கென மனைவி, குழந்தை என் வந்து விட்ட பிறகு அவ்வாறு செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை.

 

“வேற வழி இல்லண்ணா. இதுக்கு மேல என்னால அவன் கூட போய் வாழ முடியாது. நான் உங்க கூடவே இருந்துடுறேன். ஆனா என்ன இருந்தாலும் நான் காதலிச்சு கல்யாணம் பண்ணவன். என்ன தான் அவன் என்னைக் கொடுமைப்படுத்தினாலும் பதிலுக்கு என்னால திரும்ப அவன தண்டிக்க என் மனசு இடம் கொடுக்க மாட்டேங்குது ண்ணா. நான் காதலிச்சவன் வேணா தப்பா இருக்கலாம். ஆனா என் காதல் தப்பில்லயே. அது அப்படியே தானே இருக்கு.” எனக் கதறினாள் ஹேமா.

 

காதலித்து திருமணம் செய்த அனுஷியாவிற்கும் பல்லவனுக்கும் ஹேமாவின் மனம் புரிந்தாலும் தங்கை மீதிருந்த பாசம் அவனுக்கு கிஷோரை சும்மா விட இடம் கொடுக்கவில்லை.

 

இருந்தும் ஹேமாவின் வார்த்தைக்காக அமைதி காத்தான் பல்லவன்.

 

ஹேமா இன்னுமே அழுது கொண்டிருக்க, “ஷியாம்மா… ஹேமாவ கூட்டிட்டு போய் நம்ம கெஸ்ட் ரூம்ல விடு. அப்படியே ஜெயாக்கா கிட்ட சொல்லி அவளுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்க சொல்லு. நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்.” என்ற பல்லவன் வெளியேற முயல, “அண்ணா…” எனப் பதட்டமாக அழைத்தவளை திரும்பி அழுத்தமாகப் பார்த்தவன், “உனக்காக அவன சும்மா விடுறேன்.” என்று விட்டு வெளியேறவும் தான் ஹேமாவுக்கு நிம்மதியாக இருந்தது.

 

அனுஷிய் காட்டிய அறையில் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்த ஹேமா சில மணி நேரங்கள் கழித்து வெளியே வர, ஹாலில் பல்லவனும் அனுஷியாவும் ஏதோ சிரித்துப் பேசியவாறு இருக்க, அவர்களுக்கு அருகில் பிரதாப் அனுபல்லவிக்கு ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பதைக் கண்டவளுக்கு முகத்தில் சொல்ல முடியாத உணர்வுகள் வந்து போனது.

 

உடனே முகத்தை சீராக வைத்துக் கொண்டு அவர்களை நோக்கிச் சென்ற ஹேமா, “அட… மருமகளே… வாங்க வாங்க அத்தை கிட்ட.” என விளையாடிக் கொண்டிருந்த அனுபல்லவியை தூக்கிக் கொஞ்ச, ஹேமாவை முதல் முறை பார்ப்பதால் பயத்தில் வீரிட்டு அழுதாள் அனுபல்லவி.

 

“உங்கள இதுக்கு முன்னாடி பார்த்து இல்லாததால பயந்துட்டான்னு நினைக்கிறேன் அண்ணி. கொஞ்சம் நாள்ல பழகிடுவா.” என அனுஷியா தயக்கமாகக் கூற, தங்கையின் கரத்தில் இருந்து மகளை வாங்கிக் கொண்ட பல்லவன், “பல்லவி குட்டிக்கு என்னாச்சு? ஏன் அழுறீங்க? அப்பாவ பாருங்க. அப்பாவ பாருங்க. ஒன்னும் இல்லடா. என் ப்ரின்சஸ் தானே. அழக் கூடாது.” எனச் செல்லம் கொஞ்சி சமாதானம் செய்ய முயன்றான்.

 

ஒருவாறு அனுபல்லவியின் அழுகை ஓரளவு மட்டுப்பட, அவளையும் பிரதாப்பையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றான் பல்லவன்.

 

ஹேமா வாசலையே பார்த்துக் கொண்டிருக்க, ஒரு சிறிய கவரைக் கொண்டு வந்து ஹேமாவிடம் நீட்டிய அனுஷியா, “அ…அது வந்து அண்ணி… அவர் மருந்து கொண்டு வந்து கொடுத்தார். உங்க காயத்துக்கு பூசிக்கோங்க. சீக்கிரம் காயம் ஆறிடும்.” என்க, அதனை வாங்காது சோஃபாவில் அமர்ந்து காலை டீப்பாயின் மேல் தூக்கி வைத்தவள் அனுஷியாவிற்கு கண்களால் தன் காலைக் காட்டினாள்.

 

அனுஷியா ஹேமாவை அதிர்ச்சியும் குழப்பமுமாக நோக்க, “நீங்களே பூசி விடுறீங்களா அண்ணி?” எனக் கேட்டாள் ஹேமா புன்னகையுடன்.

 

அனுஷியா தயங்க, சட்டென முகத்தை மாற்றி சோகமாவ வைத்துக் கொண்ட ஹேமா, “பிடிக்கலன்னா பரவால்ல அண்ணி. இருக்கட்டும் விடுங்க. நானே பூசிக்கிறேன்.” என்கவும், “இ…இல்ல அண்ணி. நானே பூசி விடுறேன். இதுல என்ன இருக்கு?” எனக் கேட்ட அனுஷியா கீழே அமர்ந்து ஹேமாவின் காலைப் பிடித்து காயத்துக்கு மருந்து பூசி விடத் தொடங்கினாள்.

 

மேலே அமர்ந்திருந்த ஹேமாவோ அனுஷியாவை வெறித்தவாறு, ‘என் காலுக்கு கீழ இருக்க தான் டி உனக்கு தகுதி இருக்கு. அதை விட்டுட்டு எனக்கு சமமா உட்கார நினைச்சா விட்டுடுவேனா?’ என்றாள் மனதுக்குள் வன்மமாக.

 

அனுஷியா மருந்தைப் பூசி விட்டு எழவும் சட்டென முகத்தை மாற்றிக் கொண்ட ஹேமா அனுஷியாவின் கையைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக்கொள்ள, அனுஷியாவிற்கோ பெரும் சங்கடம்.

 

ஆனால் தான் ஏதாவது கூறி ஹேமாவின் மனம் நொந்தால் தன்னவனுக்கும் வருத்தமளிக்கும் என்பதால் அமைதி காத்தாள்.

 

“அண்ணி…‌ நீங்க நிஜமாவே என்னை மன்னிச்சிட்டீங்களா? நான் இங்க இருக்குறது உங்களுக்கு பிடிக்கலயா?” எனக் கேட்டாள் ஹேமா.

 

உடனே மறுப்பாகத் தலையசைத்த அனுஷியா, “ஐயோ அப்படி எல்லாம் இல்ல அண்ணி. நீங்க எவ்வளவு நாள் வேணா இங்க இருக்கலாம். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. இது உங்க அண்ணன் வீடு. உங்களுக்கு இல்லாத உரிமையா?” எனக் கேட்டாள் வெள்ளந்தியாக.

 

ஹேமா அனுஷியாவின் பதிலில் குரூரமாகப் புன்னகைக்க, அதே நேரம் அவசர அவசரமாக வீட்டினுள் நுழைந்த பல்லவனோ அனுஷியாவை நெருங்கி, “ஷியா… ஷியா… இங்க பாரு. பல்லவி என்ன சொல்றான்னு கேளு.” என்றான் கண்கள் பளிச்சிட.

 

பிரதாப்பும் புன்னகையுடன் நின்றிருக்க, “என்னாச்சுங்க? எதுக்கு இவ்வளவு எக்சைட்டா இருக்கீங்க?” எனக் கேட்ட, ஹேமாவும் அதே கேள்வியுடன் சகோதரனை நோக்கினாள்.

 

“பல்லவி குட்டி… எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்.‌ என்ன சொன்னீங்க?” என அனுபல்லவியுடன் கண்கள் பளிச்சிடக் கேட்க, “ப்…பா… பா… ப்…பா…” என்று விட்டு அனுபல்லவி சிரிக்க, அனுஷியாவின் கண்கள் கலங்கின.

 

அவசரமாக மகளைக் கையில் வாங்கி முகம் முழுவதும் முத்தமிட்ட அனுஷியா, “என்னங்க… நம்ம பொண்ணு பேசுறா. அம்மா சொல்லு. அம்மா சொல்லு.” என்றாள் ஆசையாக.

 

ஆனால் அனுபல்லவியோ, “ப்…பா… ப்பா… பா…” என்றே திரும்பத் திரும்பச் சொல்ல, “என் பொண்ணுக்கு அவ அப்பா மேல தான் பாசம் அதிகமாம். அப்புறம் தான் அம்மா எல்லாம்.” என்றவன் மகளைச் செல்லம் கொஞ்சினாள்.

 

கணவனைப் போலியாக முறைத்துப் பார்த்த அனுஷியாவிற்கும் மகளுக்கு தன்னவன் மேல் பாசம் அதிகம் என்பது பெருமிதத்தைத் தான் தந்தது.

 

அடுத்து வந்த நாட்களில் அவர்களின் வாழ்க்கை என்றும் போல காதலுடன் மகிழ்ச்சியுடனும் செல்ல, ஹேமாவோ பல்லவனுக்கு முன்பு, “நீங்க இருங்க அண்ணி குழந்தையோட. நான் எல்லாம் பார்த்துக்குறேன்.” என்று அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய, பல்லவன் இல்லாத சமயம் அனுஷியாவிடம் அன்பு எனும் ஆயுதத்தைக் கொண்டு நன்றாக வேலை வாங்கினாள்.

 

பல்லவனோ தங்கை திருந்து விட்டதில் நிம்மதியாக இருக்க, அனுஷியாவிற்கு ஹேமாவின் நடவடிக்கைகள் மனம் உறுத்த வித்தியாசமாகப்பட்டாலும் அனைத்தும் தன் பிரம்மையாக இருக்கும் என்றும் தன்னவனுக்காகவும் அவ் எண்ணத்தைத் தட்டிக் கழித்தாள்.

 

ஆனால் அது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணர்த்தும் காலமும் விரைவாகவே வந்து சேர்ந்தது.

 

பல்லவனுக்கு ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட, மனைவியையும் குழந்தையையும் பிரிந்து செல்ல மனம் இன்றிக் காணப்பட்டான்.

 

அனுஷியாவிற்கும் முதல் முறை கணவனைப் பிரிந்து இருக்கப் போவது வருத்தம் அளித்தாலும் அவனது பொறுப்புக்களையும் கடமைகளையும் எண்ணி தன் மனதை சமாதானப்படுத்தினாள்.

 

ஹேமா தான் அவள் பார்த்துக் கொள்வதாக பல்லவனுக்கு ஆறுதல் கூற, ஏதோ ஒன்று மனதை அழுத்த, மனைவிக்கும் மகளுக்கும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து விட்டு மனமேயின்றி கிளம்பத் தயாரானான்.

 

விமான நிலையத்தில் வைத்து மனைவியையும் மகளையும் முத்தத்தால் குளிப்பாட்டிய பல்லவன் விமானத்துக்கான அழைப்பு வரவும் தன்னவளின் இதழில் அழுத்தமாக இதழ் பதித்து விலகினான்.

 

அனுஷியா கண்ணீருடன் நிற்க, அனுபல்லவிக்கு என்ன புரிந்ததோ அவளும் தந்தையை போக விடாது அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.

 

இருவரையும் சேர்த்து சில நொடிகள் அணைத்து விடுவித்த பல்லவன் அது தான் அவர்களின் இறுதி சந்திப்பு என்பதை அறியாமல் மனைவியையும் மகளையும் கண்களில் நிரப்பிக் கொண்டு கண்ணீருடன் அவர்களுக்கு விடை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்