Loading

சற்று நேரத்திற்கு முன்பு முகத்தில் இருந்த மகிழ்ச்சி எங்கோ சென்று மறைய, இருவரின் மனமும் வெவ்வேறு மனநிலைகளில் இருந்தன.

 

அனுஷியாவின் மனமோ ஹேமாவின் சுடு சொற்களில் காயப்பட்டு ரணமாகிக் கிடக்க, பல்லவனின் மனமோ உலைக்களமாய் கொதித்தது.

 

கார் ஒரு உயர்தர ஹோட்டலில் முன் நிற்கவும் தன்னிலை அடைந்த அனுஷியா இருளைக் கிழித்து வெளிச்சம் பரப்பிய விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஹோட்டலை சுற்றும் முற்றும் நோக்க, காரில் இருந்து இறங்கிய பல்லவன் மறு பக்கம் வந்து தன்னவள் இறங்குவதற்காக கதவைத் திறந்து விட்டான்.

 

அதில் இவ்வளவு நேரமும் இருந்த மன சுணக்கம் மறைய, அனுஷியாவின் முகத்தில் லேசாக புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

 

பல்லவன் நீட்டியிருந்த கரத்தைப் பற்றி கீழறங்கிய அனுஷியா தன்னவனைப் பார்த்து புன்னகைக்க, அவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்த‌ பல்லவன், “ஷியா… எதைப் பத்தியும் நினைச்சி கவலைப்படாதே. நான் எப்போவும் உன் கூட இருப்பேன்.” என்றான்.

 

பதிலுக்கு புன்னகைத்த அனுஷியாவின் கரம் பற்றி ஹோட்டலின் உள்ளே அழைத்துச் சென்றான் பல்லவன்.

 

வெளியில் இருந்த விளக்குகளின் வெளிச்சத்துக்கு மாறாக உள்ளே எங்கும் மெழுகுவர்த்தியின் பிரகாசம் பரவி இருக்க, ஒரே ரம்மியமாக இருந்தது அச் சூழல்.

 

ஆனால் அனுஷியாவையும் பல்லவனையும் தவிர அங்கு யாருமே இருக்காமல் போக, “என்ன யாரையும் காணோம்? அவ்வளவு மோசமாவா இருக்கும் இந்த ஹோட்டல் சாப்பாடு?” எனக் கேட்டாள் அனுஷியா குழப்பமாக.

 

அதனைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்த பல்லவன், “ஷியா… நீ இன்னும் வளரணும்.” என்கவும் அவனைப் பொய்யாக முறைத்தாள் அனுஷியா.

 

“ஓக்கே ஓக்கே கூல். இது நமக்கான நேரம். நமக்கு மட்டுமேயான நேரம். கேன்டில் லைட் டின்னர். நீயும் நானும் மட்டும்…” எனப் பல்லவன் கூறவும் அனுஷியாவின் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை.

 

இருவரும் தம் பால்ய நினைவுகள், ஆசைகள், எதிப்பார்ப்புகள், கல்லூரிக் கதைகள் என நேரம் செல்வதே அறியாது மனம் திறந்து ஏதேதோ பேசிக்கொண்டு உணவை முடித்தனர்.

 

சில மணி நேரங்கள் கழித்து ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இருவரின் மனமும் பல நாட்கள் கழித்து நிறைந்து இருந்தது.

 

அதே மகிழ்ச்சியுடன் அனுஷியாவை அழைத்துக் கொண்டு சென்று காரை நிறுத்திய இடத்தைக் கண்டு அனுபல்லவிக்கு ஆனந்த அதிர்ச்சி.

 

“இங்க ஏன்ங்க வந்திருக்கோம்?” எனக் கேட்டாள் அனுஷியா இத்தனை நாட்கள் பல்லவன் அவளைத் தங்க வைத்திருந்த வீட்டைப் பார்த்தவாறே.

 

“வா சொல்றேன்.” என அவளின் கைப் பிடித்து அழைத்துச் சென்ற பல்லவன் காலிங் பெல்லை அழுத்த, சில நொடிகள் கழித்து கையில் ஆரத்தி தட்டுடன் கதவைத் திறந்தார் ஜெயா.

 

“அம்மா…” என அனுஷியா ஆனந்தக் கண்ணீர் விட, “இரண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க ஆரத்தி எடுக்க.” என ஜெயா கூறவும் பல்லவன் அனுஷியாவின் தோளில் கரம் போட்டு அவளை நெருங்கி நிற்க, இருவருக்கும் ஆரத்தி சுற்றி வரவேற்றார் ஜெயா.

 

அப்போது தான் அனுஷியாவிற்கு மனதில் இருந்த பெரும் குறை அகன்று நிம்மதியாக இருந்தது.

 

“இரண்டு பேரும் வலது காலை எடுத்து வெச்சி உள்ள போங்க. நான் இதைக் கொட்டிட்டு வரேன்.” என்ற ஜெயா அங்கிருந்து செல்ல, கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வீட்டினுள் நுழைந்தனர்.

 

ஆரத்தியைக் கொட்டி விட்டு உள்ளே வந்த ஜெயா அனுஷியாவை பூஜை அறையில் விளக்கேற்ற வைத்து விட்டு இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்தார்.

 

பின் தன்னால் முடிந்த அளவு சின்னச் சின்ன சம்பிரதாயங்களை நிறைவேற்ற, அனுஷியாவிற்கு தன் உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க இயலாத நிலை.

 

முகத்தில் புதுமணப்பெண்ணுக்கே உரிய பொழிவு தோன்ற, மனைவியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைக் கண்ட பின் தான் பல்லவனின் மனமும் குளிர்ந்தது.

 

ஜெயாவை அணைத்துக் கொண்ட அனுஷியா, “ரொம்ப நன்றிம்மா. இதுக்கெல்லாம் உங்களுக்கு எப்படி கைம்மாறு பண்ண போறேன்னே தெரியல.” என்க, “என்னை அம்மான்னு தானே கூப்பிடுற. அம்மாவுக்கு போய் யாராவது நன்றி சொல்லுவாங்களா?” எனக் கேட்டார் புன்னகையுடன்.

 

“நீங்க ஊருக்கு போய் இருந்தீங்களே. எப்போ வந்தீங்க?” எனக் கேட்ட அனுஷியாவிற்கு, “இன்னைக்கு சாயந்திரம் தான் வந்தேன் மா. தம்பி கால் பண்ணி விஷயத்த சொன்னதும் எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. ஏதோ என்னால முடிஞ்சதை எல்லாம் பண்ணேன். இப்போ தான் எனக்கு திருப்தியா இருக்கு.” என்றார் ஜெயா.

 

மறுப்பாகத் தலையசைத்த அனுஷியா, “இல்லம்மா… எனக்கு ஒரு அம்மா இருந்தா இதெல்லாம் பட்டி இருப்பாங்களான்னு தெரியல. ஆனா நீங்க இவ்வளவு பண்ணி இருக்குறதே பெரிய விஷயம்.” என்றாள் கண்கள் கலங்க.

 

பதிலுக்கு பாசமாக அவளின் தலையை வருடி விட்ட ஜெயா, “சரி சரி போதும் டா கண்ணா. ரெண்டு பேரும் டயர்டா இருப்பீங்க. போய் ரெஸ்ட் எடுங்க.” என்கவும் கணவன் மனைவி இருவரும் மாடி ஏறி தம் அறைக்குச் சென்றனர்.

 

பல்லவனுக்கு முன்னால் சென்று கதவைத் திறந்த அனுஷியா அதிர்ந்து அறை வாயிலிலேயே நிற்க, அவளைத் தொடர்ந்து வந்த பல்லவன், “என்னாச்சு ஷியா? ஏன் நின்னுட்ட?” எனக் குழப்பமாகக் கேட்டவாறே அறையினுள் பார்வையைப் பதித்தவனுக்கும் அதிர்ச்சி.

 

முதலிரவுக்காக அவ் அறை முழு அலங்காரத்தில் இருக்க, முதலில் அதிர்ந்த பல்லவனின் மனதிலும் காதல் கணவனுக்கே உரிய ஆசை எழ, மனைவியின் முகத்தை காதலுடன் ஏறிட்டான்.

 

அனுஷியாவோ இன்னும் அதிர்ச்சி மாறாமல் நிற்க, அதனைக் கண்டுகொண்ட பல்லவன் எங்கு தன்னவளுக்கு பிடிக்கவில்லையோ என நினைத்து லேசாக மனம் வாடியவன், “ஷியா… டோன்ட் வொரி. எனக்கு நீ என் பக்கத்துல இருந்தாலே போதும். இதெல்லாம் உடனே நடக்கணும்னு அவசியம் இல்ல. நான் ஜெயாக்கா கிட்ட சொல்றேன் இதெல்லாம் க்ளீன் பண்ண சொல்லி…” என்றவாறு கிளம்ப முயன்றான்.

 

அப்போது தான் தன்னிலை அடைந்த அனுஷியா சட்டென தன்னவனின் கரம் பற்ற, தன் முகத்தை சீர்ப்படுத்திக் கொண்டு மனைவியின் முகத்தைக் கேள்வியாக ஏறிட்டான் பல்லவன்.

 

பல்லவன் எவ்வளவு முயன்றும் அவனின் கண்களில் தெரிந்த தவிப்பையும் ஆசையையும் கண்டுகொண்ட அனுஷியா அவன் மார்பில் சாய்ந்து, “இ… இருக்கட்டும்.” என்றாள் தாங்கியவாறு.

 

சட்டென அவளைத் தன்னை விட்டு விலக்கிய‌ பல்லவன், “ஷியா… நிஜமா தான் சொல்றியா?” எனக் கேட்டான்.

 

வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைப்பதற்காக மீண்டும் தன்னவனின் மார்பிலேயே தஞ்சம் அடைந்த அனுஷியாவை வாகாக அணைத்துக்கொண்ட பல்லவன், “எனக்காக சொல்றியா ஷியா? நிஜமா எனக்கு நீ பக்கத்துல இருந்தாவே போதும். வேற எதுவுமே எனக்கு முக்கியம் இல்ல. இந்தக் கல்யாணம் வேணா அவசர அவசரமா நடந்து இருக்கலாம். மற்றது எல்லாம் மெதுவா நடக்கட்டும். உனக்கும் இதெல்லாம் ஏத்துக்க டைம் வேணும்ல.” என்றான்.

 

ஆனால் அவனுக்கு பதிலளிக்காத அனுஷியாவோ பல்லவனின் மார்பில் இன்னும் அழுத்தமாக முகம் புதைத்து தன் சம்மதத்தை தெரிவிக்க, அதற்கு மேல் பல்லவனாலும் தன் உணர்வுகளை அடக்க முடியவில்லை.

 

அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் அவளை சட்டென கரங்களில் ஏந்திக்கொண்ட பல்லவன் அறையினுள் நுழைந்து கதவைத் தாழிட்டான்.

 

தன்னவனின் கழுத்தில் மாலையாகக் கரங்களை கோர்த்த அனுஷியா மறந்தும் அவன் விழிகளை நோக்கவில்லை.

 

வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை.

 

“ஷியா…” என பல்லவன் காதல் முழுவதையும் குரலில் தேக்கி வைத்து அழைக்க, “ம்ம்ம்…” என்ற பதில் மட்டும் தான் வந்தது அனுஷியாவிடம் இருந்து.

 

“ஷியா… என் கண்ணைப் பாரு.” எனப் பல்லவன் கூறவும் தயக்கமாக அனுஷியா அவனின் விழிகளை ஏறிட, மறு நொடியே அவளின் இதழ்கள் பல்லவனின் இதழ்களுக்குள் சிறைப்பட்டன.

 

அவனுக்கு வாகாக இசைந்து கொடுத்தாள் அனுஷியா.

 

சில நிமிடங்கள் நீடித்த இதழ் முத்தத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக மனைவியைக் கைகளில் ஏந்தியவாறே மஞ்சத்திற்கு கொண்டு சென்று அனுஷியாவை அதன் மேல் கிடத்திய பல்லவன் தன்னவளின் விழிகளை நோக்க, விழிகளை அழுந்த மூடி தன் சம்மதத்தைத் தெரிவித்தாள் அனுஷியா.

 

அதன் பின் அங்கே அரங்கேறியது ஒரு அழகிய காதல் சங்கமம்.

 

அனுஷியா மற்றும் பல்லவனின் இல்லறம் நல்லறமாகத் தொடங்கி இருவரும் ஈருயிர் ஓருடலாக இணைய, இங்கு பல்லவனின் வீட்டிலோ அவர்கள் இருவரையும் பிரிப்பதற்காக தீட்டப்பட்டது மிகப் பெரிய சதித் திட்டம்.

 

_______________________________________________

 

அதன் பின் வந்த நாட்களில் அனுஷியா தன் இல்லற வாழ்வுடன் சேர்த்து கல்லூரிப் படிப்பையும் தொடர, பல்லவனும் தன் வியாபாரத்தை மேலும் விருத்தியாக்குவதில் ஈடுபட்டான்.

 

காதலுடன் சேர்த்து புரிந்துணர்வும் இருவருக்கிடையே இருந்ததால் அவர்களின் வாழ்வில் எந்தப் பிரச்சினையும் வரவில்லை.

 

மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்தனர். 

 

பல்லவனின் அனுமதியுடன் மாலதியை பல முறை தன் வீட்டிற்கு அழைத்தாள் அனுஷியா.

 

ஆனால் மாலதியோ அதனை உறுதியாக மறுத்தாள். அவளின் மனம் உணர்ந்து அனுஷியாவும் அவளைக் கட்டாயப்படுத்தவில்லை.

 

அனுஷியா தன் கல்லூரிப் படிப்பையும் முடிக்க, சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு வேலையில் சேர்வதாகக் கூறி விட்டாள் அனுஷியா. அவளின் முடிவில் பல்லவன் தலையிடவில்லை.

 

இடைக்கிடையே பல்லவன் ஏதாவது தேவைக்கு மட்டும் தன் வீட்டுக்குச் சென்று வந்தாலும் அனுஷியாவை முதல் நாளுக்குப் பின் அங்கு அழைத்துச் செல்லவில்லை.

 

இத்தனை நாட்கள் ஆகியும் ஹேமா மற்றும் கிஷோர் அமைதியாக இருப்பது பல்லவனின் மனதை உறுத்தினாலும் அவர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லாத அளவுக்கு நன்மை என் நினைத்து அமைதியாக இருந்தான்.

 

ஆனால் அவனின் எண்ணம் முற்று முழுவதும் தவறு என அவனுக்கு உணர்த்த விதியும் சதியும் வெகுவாகக் காத்திருந்தது.

 

பிரதாப் தான் அடிக்கடி அத்தையைக் காண வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தான்.

 

அனுஷியாவிற்கும் பிரதாப்பைக் காண ஆசையாக இருந்தாலும் ஹேமாவின் பேச்சுக்குப் பயந்து தன் ஆசையை பல்லவனிடம் கூட வெளிப்படுத்தவில்லை.

 

ஆனால் அனுஷியாவின் ஒவ்வொரு அசைவையும் நன்றாக அறிந்து வைத்திருந்த பல்லவனுக்கு அவளின் மனம் புரிந்தது.

 

நேரே பிரதாப்பின் ப்ளே ஸ்கூலுக்குச் சென்றவன் அவனின் பொறுப்பாசிரியரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் பல்லவன்.

 

பிரதாப்பின் பெற்றோரை விட பல்லவனே அதிகமான சந்தர்ப்பங்களில் பிரதாப்பை ப்ளே ஸ்கூலுக்கு அழைத்து வருவதால் பொறுப்பாசிரியரும் பல்லவனுக்கு தடை விதிக்கவில்லை.

 

“அத்தை…” என ஓடி வந்து தன் காலைக் கட்டிக்கொண்ட பிரதாப்பைக் கண்டதும் அனுஷியாவின் முகம் நிறைவாய் மலர்ந்தது.

 

கண்களில் காதல் பொங்கி வழிய தன்னவனை ஏறிட்ட அனுஷியாவிற்கு கண்களை மூடித் திறந்து தான் என்றும் அவனவளுக்காக இருக்கிறேன் என உணர்த்தினான் பல்லவன்.

 

“பிரதாப் கண்ணா… உனக்கு சாப்பிட என்ன பண்ணி தரட்டும்? இன்னைக்கு நீ என்ன கேட்டாலும் பண்ணி தரலாம்னு இருக்கேன்.” எனக் கேட்டாள் அனுஷியா.

 

“ஹை… ஜாலி… அத்தை எனக்கு கேசரின்னா ரொம்ப பிடிக்கும். கேசரி பண்ணிக் கொடுக்குறீங்களா?” எனக் கேட்ட பிரதாப்பிற்கு சம்மதமாகத் தலையசைத்தாள் அனுஷியா.

 

மனைவியைக் குறும்பாக நோக்கிய பல்லவன், “என்ன மேடம்? ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல. எங்களுக்கு இந்த ஆஃபர் எல்லாம் இல்லையா? உனக்கு கஷ்டம்னா சொல்லு. நான் என் வழில ஆஃபர எடுத்துக்குறேன்.” எனக் கண்ணடித்தான்.

 

அவனின் தோளில் விளையாட்டாக அடித்த அனுஷியா, “ப்ச்..‌. சின்ன பையன பக்கத்துல வெச்சிட்டு என்ன பேசுறீங்க நீங்க? அதுவும் இல்லாம உங்களுக்கு இல்லாத ஆஃபரா? ஆனா நான் இதை விட பெரிய ஆஃபரா வெச்சிருக்கேன் உங்களுக்கு.” எனப் புதிர் போட்டாள்.

 

பல்லவன் அவளைக் கேள்வியாக நோக்க, “அப்புறம் சொல்றேன். முதல்ல என் பிரதாப்புக்கு பிடிச்ச கேசரி பண்ணிக் கொண்டு வரேன்.” என்றவாறு எழுந்து சமையலறைக்குச் சென்றாள் அனுஷியா.

 

பல்லவன் குளித்து உடை மாற்றி வர தம் அறைக்குச் செல்ல, அவன் வருவதற்கு முன் கேசரியை செய்து முடித்த அனுஷியா பல்லவனுக்கு பிடித்த பாயாசத்தையும் செய்தாள்.

 

கேசரியைக் கண்டதும் பிரதாப் உற்சாகமாக, “பிரதாப் கண்ணா… நீங்க கேசரி சாப்பிட்டுட்டு இருங்க. நான் உனக்கு கார்ட்டூன் போட்டு தரேன். அத்தை சீக்கிரம் வரேன். அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடலாம்.” என அனுஷியா கூறவும் சமத்தாக அமர்ந்து கேசரியை சாப்பிட்டான் பிரதாப்.

 

கணவனுக்கு பிடித்த பாயாசத்தை ஒரு சிறிய கோப்பையில் எடுத்துக் கொண்டு மாடியேறிய அனுஷியா பல்லவன் வரும் வரை பால்கனியில் காத்திருந்தாள்.

 

சில நிமிடங்கள் கழித்து குளியலறையில் இருந்து வெளியே வந்த பல்லவன் பால்கனியில் தன்னை மறந்து நின்ற அனுஷியாவைப் பின்னிருந்து அணைத்து, “என்ன பொண்டாட்டி? எனக்கு அப்படி என்ன பெரிய ஆஃபர் வெச்சிருக்கீங்க?” எனக் கேட்டவாறு அவனின் மூக்கினால் அனுஷியாவின் கழுத்தில் குறுகுறுப்பூட்டினான்.

 

வெட்கத்தில் நெளிந்த அனுஷியா பல்லவனின் புறம் திரும்பி தான் கொண்டு வந்த பாயாசத்தை அவனிடம் நீட்ட, கண்கள் மின்ன அதனை வாங்கிப் பருகிய பல்லவன் அனுஷியாவிற்கும் ஊட்டியவாறு, “என்ன சஸ்பன்ஸ் எல்லாம் பலமா இருக்கு? எனக்கு பிடிச்ச பாயாசம் வேற.” எனக் கேட்டவனின் முகத்தில் புன்னகை.

 

பல்லவன் பாயாசத்தை குடித்து முடிக்கும் வரை காத்திருந்த அனுஷியா அவன் முன் தன் கரத்தை நீட்ட, மூடியிருந்த உள்ளங்கையைக் குழப்பமாக நோக்கினான் பல்லவன்.

 

அனுஷியா புன்னகையுடன் அதனைக் கண் காட்ட, அனுஷியாவின் விரல்களைப் பிரித்துப் பார்த்த பல்லவனுக்கு ஆனந்த அதிர்ச்சி.

 

அனுஷியாவின் கரத்தில் இரட்டை கோடிட்ட ப்ரெக்னன்சி கிட் இருக்க, அதனைத் தன் கையில் எடுத்த பல்லவன், “நி…நிஜமாவா?” எனக் கேட்டான் நம்ப முடியாமல்.

 

ஆம் எனத் தலையசைத்த அனுஷியா, “நேத்து தான் கன்ஃபார்ம் பண்ணேன்.” என்ற மறு நொடியே, “யா ஹூ…” எனக் கூக்குரல் இட்டவாறு அனுஷியாவைத் தூக்கிச் சுற்றினான் பல்லவன்.

 

“அச்சோ… என்னங்க… போதும்… போதும்… விடுங்க. பாப்பா இருக்கு வயித்துல.” என அனுஷியா பதட்டமாகக் கூறவும் அவளைக் கீழே இறக்கி விட்ட பல்லவன், “ஹே சாரி..‌. சாரி டா… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ஷியா. நான் அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்.” என்றவன் தன்னவளின் முகம் முழுவதும் முத்தமிட்டான்.

 

“பிரதாப் கீழே தனியா இருக்கான். வாங்க போலாம்.” என்ற அனுஷியா பல்லவனுடன் ஹாலுக்குச் சென்றான்.

 

கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த பிரதாப்பைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்ட பல்லவன் மனைவியையும் தன் கை வளைவில் வைத்துக் கொண்டு, “பிரதாப்… உனக்கு தனியா விளையாட போர் அடிக்கலயா?” எனக் கேட்டான்.

 

“போர் அடிக்கிது மாமா… வீட்டுல என் கூட விளையாட யாருமே இல்ல. ஆனா இங்க அப்படி இல்ல. அத்தை சொன்னாங்க என் கூட விளையாட வரேன்னு. ஆமா தானே அத்த?” என்ற பிரதாப் அனுஷியாவை நோக்க, “ஆமாடா பிக் பாய். நாம நிறைய கேம்ஸ் விளையாடலாம்.” என்றாள் அனுஷியா.

 

“டோய்ஸ் வெச்சே எவ்வளவு நாள் விளையாடுவ பிரதாப்? உனக்கு ஒன்னு தெரியுமா? உங்க அத்தை உனக்கு விளையாடவே கூடிய சீக்கிரம் ஒரு தம்பி பாப்பாவோ தங்கச்சி பாப்பாவோ கொண்டு வரப் போறாங்க. அப்புறம் நீ அவங்க கூடவே விளையாடலாம்.” என்றான் பல்லவன்.

 

கண்கள் பளிச்சிட, “நிஜமாவா அத்தை?” எனப் பிரதாப் கேட்கவும் அனுஷியாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

 

பின் சிறிது நேரம் கணவன் மனைவி இருவரும் பிரதாப்புடன் விளையாடி விட்டு பல்லவன் அவனை அழைத்துச் சென்று வீட்டில் விட்டான்.

 

அனுஷியாவிற்கு பிரதாப்பை அனுப்ப மனமே இல்லை. இருந்தும் வேறு வழியின்றி அனுப்பி வைத்தாள்.

 

தன் வீட்டுக்குச் சென்ற பிரதாப்போ அத்தைக்கு குட்டிப் பாப்பா வரப் போவதாக தாயிடம் உளறி வைக்க, தம் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதை எண்ணி விஷமச் சிரிப்பை உதிர்த்தாள் ஹேமா.

 

பிரதாப்பை வீட்டில் விட்ட பின் அனுஷியாவிற்கு பிடித்த உணவு வகைகளை வாங்கிக் கொண்டு வீடு வந்த பல்லவன் அதன் பின் அனுஷியாவை ஒரு வேலையும் செய்ய விடவில்லை.

 

அனுஷியா கர்ப்பமாக இருப்பதை அறிந்த ஜெயா அவளுக்குப் பிடித்தவை எல்லாம் சமைத்து தன் கையாலேயே ஊட்டி விட்டார்.

 

தனக்கு யாரும் இல்லை என்ற குறை அனுஷியாவிற்கு வராமல் இருக்க பல்லவன் அவளைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்கினான்.

 

இருவரும் சேர்ந்து தம் குழந்தையைப் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் பல கனவுகள் காண, ஆனால் விதியோ அவளுக்கு ஒரு இருண்ட எதிர்காலத்தை என்றோ எழுதி வைத்து விட்டதை அறியாமல் போயினர் இருவரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்