Loading

நாட்கள் வேகமாக உருண்டோடி மாதங்களாகப் பறக்க, அனுஷியாவின் பிரசவ நாளும் நெருங்கியது.

 

தினமும் இரவு மனைவியின் வயிற்றில் தலை சாய்த்து வயிற்றில் உள்ள குழந்தையுடன் பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தான் பல்லவன்.

 

தந்தையின் குரல் கேட்டாலே வயிற்றில் இருக்கும் குழந்தை தாயின் வயிற்றில் எட்டி உதைத்து தன் இருப்பை வெளிப்படுத்தும். 

 

அந்த நொடியில் இல் உலகையே சாதித்த மகிழ்ச்சியை அடைவர் கணவன் மனைவி இருவரும்.

 

முதல் முறை வயிற்றில் குழந்தையின் அசைவை உணர்ந்த போது பல்லவன் அழுதே விட்டான்.

 

வழமை போல அனுஷியாவின் வயிற்றில் முத்தமிட்டு குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தவன் மனைவியின் வயிற்றில் தலை சாய்க்க, கணப்பொழுதில் சிறு அசைவு தோன்றி மறைந்தது.

 

பல்லவன் அதிர்ச்சியுடன் மனைவியை நோக்கி, “ஷி…ஷியா…” என்க, “குழந்தை அசையுதுங்க.” என்றாள் அனுஷியா கண்ணீருடன்.

 

பல்லவன் அவசரமாக அனுஷியாவின் வயிற்றில் கரம் வைத்துப் பார்க்க, எந்த அசைவும் இல்லை.

 

“பாப்பா கூட பேசுங்க.” என அனுஷியா கூறவும் மனைவியின் வயிற்றில் கரம் பதித்தவாறே, “பாப்பா… அப்பா பேசுறேன்.” எனப் பல்லவன் கூறிய மறு நொடியே மீண்டும் குழந்தையிடம் அசைவு.

 

உடனே கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க, “ஷியா… நம்ம குழந்தை… என்னைத் தெரியுது.” என்றான் பல்லவன் புன்னகையுடன்.

 

ஆமோதிப்பாகத் தலையசைத்த அனுஷியாவின் கண்களிலும் கண்ணீர்.

 

அவ்வாறே அவர்கள் நாட்கள் கடக்க, அனுஷியாவிற்கு பிரசவத்திற்கு குறித்து தந்த நாளுக்கு ஒரு வாரம் முன்பே உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு அடி வயிற்றில் ‘சுளீர்’ என ஒரு வலி.

 

சில நிமிடங்களிலேயே வலி அதிகமாக, ஏற்கனவே ஜெயா என்ன செய்ய வேண்டும் என்று எல்லாம் இருவருக்கும் அறிவுறுத்தி இருந்ததால் விரைவாக செயற்பட்டான் பல்லவன்.

 

அனுஷியாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் அவளைப் பரிசோதித்த மருத்துவர் இன்னும் நன்றாக வலி வர வேண்டும் என்றும் குழந்தை பிரசவிக்க சில மணி நேரங்கள் ஆகும் என்றும் கூறினார்.

 

பல்லவனுக்கோ மனைவியின் கதறல் மட்டும் தான் மனதில் இருந்தது.

 

வேறு எதைப் பற்றியும் சிந்திக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.

 

“இல்ல டாக்டர். அவ ரொம்ப வலில கஷ்டப்படுறா. ஆப்பரேஷன் பண்ணியாவது குழந்தைய வெளிய எடுங்க. அவ கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியல.” என்றான் பல்லவன் பதட்டமாக.

 

“என்ன மிஸ்டர் புரியாம பேசுறீங்க? உங்க வைஃப் மேல நீங்க வெச்சிருக்குற பாசம் புரியுது எனக்கு. அதுக்காக நீங்க சொல்றத போல எல்லாம் ஆப்பரேஷன் பண்ண முடியாது. இப்ப ஆப்பரேஷனுக்கு எடுத்தா தாய், சேய் ரெண்டு பேருக்குமே ஆபத்து. கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கோங்க. அவங்களுக்கு வலி அதிகமானதும் கூப்பிடுங்க.” எனச் சற்று கடுமையாகக் கூறி விட்டு அங்கிருந்து அகன்றார் மருத்துவர்.

 

அவரும் இது போல் எத்தனை கேஸ்களைப் பார்த்திருப்பார்.

 

அனுஷியாவிற்கோ வலி வருவதும் போவதுமாக இருக்க, பல்லவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

 

அவனால் முடிந்திருந்தால் மனைவியின் வலியை தனக்குக் கொடுக்குமாறு கடவுளிடம் கெஞ்சி இருப்பான்.

 

“ஷியாம்மா… கொஞ்சம் பொறுத்துக்கோடா.” எனப் பல்லவன் கெஞ்ச, “முடியலங்க. ரொம்ப வலிக்கிது.” என்றாள் அனுஷியா வலியில் பல்லைக் கடித்துக் கொண்டு.

 

அதனைக் கேட்டு பல்லவனின் கண்கள் கலங்க, அவனின் வேதனையைப் புரிந்து கொண்ட அனுஷியா முடிந்தளவு தன் வலியை முகத்தில் காட்டாது பொறுத்தாள்.

 

பல்லவன் அனுஷியாவின் தலையை வருடி விட்டவாறு அவளின் அருகிலேயே நிற்க, அவனின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்ட அனுஷியா, “எனக்குப் பயமா இருக்குங்க. எனக்கு உங்க கூட ரொம்ப காலம் வாழணும். ஒருவேளை நான் குழந்தை பிறக்கும் போது செத்துப் போய்ட்டேன்னா என்னங்க பண்ணுறது? நம்ம பாப்பாவ பத்திரமா பார்த்துப்பீங்களா?” எனக் கேட்கவும், “அனுஷியா…” எனச் சத்தமிட்டான் பல்லவன்.

 

மனதில் இருந்த பயமும் ஹார்மோன்களின் மாற்றமுமே அனுஷியாவை அவ்வாறு கேட்க வைத்தது.

 

“அறைஞ்சேன்னு வை. என்ன பேச்சு டி பேசுற? உனக்கு ஒன்னும் ஆகாது. நீ, நான், நம்ம பாப்பா எல்லாம் ஒன்னா சந்தோஷமா இருக்க தான் போறோம்.” எனக் கோபமாகக் கூறிய பல்லவன், “நான் சுயநலமா இருந்தாலும் பரவால்ல. அப்படி மட்டும் ஏதாவது ஆச்சு. நானும் அடுத்த நிமிஷமே உன் கூட வந்துடுவேன்.” என்றான் தழுதழுத்த குரலில்.

 

ஆனால் இருவருமே அறியவில்லை காலம் அவர்கள் இருவருக்கும் வைத்திருந்த சோதனைகளை.

 

அனுஷியா அவசரமாக தன் கரத்தால் அவனின் வாயை மூட, “ப்ளீஸ் ஷியாம்மா… இப்படி எல்லாம் பேசி என்னைக் கஷ்டப்படுத்தாதே. எனக்குன்னு இருக்குறது நீயும் நமக்கு பிறக்க போற குழந்தையும் தான்.” எனக் கண்ணீருடன் கூறிய பல்லவன் அனுஷியாவைப் பக்கவாட்டாக அணைத்துக்கொள்ள, அவனின் முதுகை வருடி விட்டாள் அனுஷியா.

 

அனுஷியாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக வலி இருந்ததை விட அதிகரித்துக்கொண்டே செல்ல, அவளுடன் ஏதேதோ பேசியவாறு அவளின் வலியை மறக்கச் செய்ய முயன்றான் பல்லவன்.

 

சில மணி நேரங்கள் கழித்து விடியலை நெருங்கிக் கொண்டிருந்த நேரம், “என்னங்க… மாலதி அக்காவ வர சொல்றீங்களா?” எனக் கேட்டாள் அனுஷியா.

 

அவள் எதற்காகக் கேட்கிறாள் எனப் புரிந்து கொண்ட பல்லவன் உடனே மாலதிக்கு அழைத்து தகவல் தெரிவிக்க, அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தாள் அவள்.

 

“அனும்மா… ரொம்ப வலிக்கிதாடா?” எனப் பரிவாகக் கேட்ட மாலதியைப் பார்த்து முறுவலித்த அனுஷியா, “இன்னும் அவ்வளவா வலி வரலக்கா. அதை விடுங்க. நீங்க ஏன் இவ்வளவு இளைச்சி போய் இருக்கீங்க? சரியா சாப்பிடுறது இல்லையா?” எனக் கேட்டாள்.

 

அனுஷியாவின் கேள்வியில் பதட்டமடைந்த மாலதி மறு நொடியே அதனை யாருக்கும் தெரியாதவாறு மறைத்து, “வயசாகுதுல்ல அனு. வேற ஒன்னும் இல்ல.” என சமாளித்தாள்.

 

பதிலுக்கு ஏதோ கேட்க வந்த அனுஷியாவின் முகம் சட்டென மாற, “ஆஹ்…” என அலறினாள் வலியில்.

 

“ஷியா… ஷியா… என்னாச்சு?” எனப் பதட்டமாகக் கேட்ட பல்லவனின் கரத்தைப் பற்றிக் கொண்ட அனுஷியாவிற்கு வலியில் வார்த்தைகள் வர மறுத்தன.

 

“கொஞ்சம் பொறுத்துக்கோடா… நான் டாக்டர கூப்பிடுறேன்.” என்ற பல்லவனின் கரத்தை விடவே இல்லை அவள்.

 

“நீங்க இருங்க தம்பி. நான் கூட்டிட்டு வரேன்.” என்று விட்டு கிளம்பிய மாலதி சற்று நேரத்தில் மருத்துவருடன் வர, அனுஷியாவைப் பரிசோதித்த மருத்துவர், “அவங்களுக்கு வலி வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் நேரத்துல குழந்தை பிறந்துடும். நீங்க ரெண்டு பேரும் வெளிய இருங்க.” என்றார்.

 

மாலதி உடனே வெளியே சென்று விட, “இல்ல டாக்டர். நான் என் வைஃப் கூடவே இருக்கேன். ப்ளீஸ்…” என்க, “இல்ல பல்லவன்… நீங்க இருக்குற நிலைமைல நீங்க எங்களயும் எங்க வேலைய செய்ய விட மாட்டீங்க. ப்ளீஸ் நிலைமைய புரிஞ்சி வெளிய போங்க. டைம் போக போக ரொம்ப ரிஸ்க் ஆகுது.’ என்றார் மருத்துவர்.

 

பல்லவனுக்கு தன்னவளை விட்டுச் செல்ல மனமே இல்லை.

 

முகம் களை இழந்து, கண்கள் கலங்க நின்றவனைப் பார்க்கும் போது அனுஷியாவின் மனமும் வேதனை கொண்டது.

 

“அவர் இருக்கட்டும் டாக்டர். ப்ளீஸ்…” என வலியில் பல்லைக் கடித்துக் கொண்டு அனுஷியா கெஞ்ச, அதன் பின் மருத்துவரும் பல்லவனை எதுவும் கூறவில்லை.

 

சற்று நேரத்திலேயே அனுஷியாவின் “அம்மா…” என்ற அலறலுடன் தொடர்ந்து ‘வீல்…’ என்ற சத்தத்துடன் தன் தந்தையை உரித்து வைத்தது போல் பிறந்தாள் பல்லவன் மற்றும் அனுஷியாவின் தவப் புதல்வி அனுபல்லவி.

 

மருத்துவர் காட்டியை குழந்தையை தன் கண்களில் நிரப்பிக் கொண்டு மயக்கத்திற்கு சென்றாள் அனுஷியா.

 

குழந்தையை மறந்து, “டாக்டர்…” எனப் பல்லவன் பதற, “டோன்ட் வொரி பல்லவன். சாதாரண மயக்கம் தான். கொஞ்சம் நேரத்துல கண்ணு முழிச்சிடுவாங்க.” என்ற மருத்துவர் தாதி தந்த குழந்தையை அவனிடம் நீட்டினார்.

 

குழந்தையைக் கையில் வாங்காமல் எட்ட நின்று குழந்தையை ரசித்த பல்லவன், “கொஞ்சம் இருங்க டாக்டர். வரேன்.” என்றவன் அவசரமாக வெளியே சென்று மாலதியை அழைத்துக் கொண்டு வந்தான்.

 

தன் வளர்ப்பு மகளுக்கு என்னவோ ஏதோவென்ற பதட்டத்தில் பல்லவனுடன் வந்த மாலதி மருத்துவரின் கரத்தில் இருந்த பூக்குவியலைக் கண்டு கண்கள் கலங்கி நிற்க, “வாங்கிக்கோங்கக்கா…” என்றான் பல்லவன்.

 

“நா…நானா?” என மாலதி தயக்கமாகக் கேட்க, “ஆமாக்கா. வாங்கிக்கோங்க. உங்க பொண்ணோட விருப்பம்.” என்றான் பல்லவன் புன்னகையுடன்.

 

கரங்கள் நடுங்க குழந்தையைக் கையில் வாங்கிய மாலதிக்கு கண்கள் குளமாகின.

 

எந்தப் பெண்ணுக்கும் தான் ஒரு பெண் என்ற நிறைவைக் கொடுக்கும் தாய்மை.

 

அது சிலருக்கு கிட்டா விட்டாலும் அவர்களையும் சேர்த்து பெண்ணாகப் பிறந்த அனைவருக்குள்ளும் தாய்மை என்ற உணர்வு நிச்சயம் இருக்கும்.

 

மாலதிக்கு அப் பாக்கியம் தன் வளர்ப்பு மகளால் கிட்டியது.

 

மாலதியின் முகத்தில் இந்த நிறைவைக் காணத் தானே அனுஷியாவும் ஆசைப்பட்டாள்.

 

மாலதியின் கரத்தில் குழந்தையைக் கொடுத்த பல்லவன் தன்னவள் கண் விழிக்கும் வரை அவளை விட்டு விலகவே இல்லை.

 

அனுஷியாவை நார்மல் வார்டுக்கு மாற்றி சற்று நேரத்தில் கண் விழித்தவளின் அருகே அமர்ந்திருந்த பல்லவன், “ஷியா…” என்றவாறு தன்னவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதிக்க, “ரொம்ப பயந்துட்டீங்களா?” எனக் கேட்டாள் அனுஷியா புன்னகையுடன்.

 

அவளைப் போலியாக முறைத்த பல்லவன், “ரொம்பவே…” என்றான் நா தழுதழுக்க கண்ணீருடன்.

 

தன்னவனின் முகத்தைப் பரிவாக வருடிய அனுஷியா, “அதான் வந்துட்டேன்ல. இனிமே நோ அழுகாச்சி.” என்றவாறு பல்லவனின் கண்களைத் துடைத்து விட்டான்.

 

அதே நேரம் மாலதி குழந்தையைத் தூக்கிக்கொண்டு வர, அனுஷியாவின் கண்கள் பிரகாசித்தன.

 

“அனும்மா… ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா நான். அந்தக் கடவுள் இந்த நிமிஷம் என்னோட உயிரைப் பறிச்சாலும் சந்தோஷமா கண்ண மூடுவேன்.” என்றாள் மாலதி தன்னை‌ மறந்து.

 

“அக்கா…” என பல்லவனும் அனுஷியாவும் ஒருசேரப் பதற, தன்னிலை அடைந்த மாலதி, “நெருப்புன்னு சொன்னா நாக்கு சுட்டுடாது அனு. அட மறந்தே போய்ட்டேன். குழந்தைய பிடிம்மா. எனக்கு இவள கைய விட்டு இறக்கி இவள பிரிஞ்சி இருக்க மனசே இல்லடா. அப்படியே தம்பிய உரிச்சி வெச்சிருக்கா. ஆனா கண்ணு மட்டும் எங்க அனு போல.” என்றவாறு குழந்தையை நீட்டினாள்.

 

மாலதி நீட்டிய குழந்தையைக் கையில் வாங்கிய அனுஷியா, “எதுக்கு பிரிஞ்சிருக்கணும்? எங்க கூடவே இருக்கலாம்ல.” என்கவும் மாலதியின்‌ முகம் மாறியது.

 

“குழந்தைய பாரும்மா. ரோஜாப்பூ போல இருக்கா.” என மாலதி பேச்சை மாற்றவும் கணவன் மனைவி இருவரின் கவனமும் குழந்தையிடம் திரும்பியது.

 

“என்னங்க… நம்ம குழந்தை. உங்கள போலவே இருக்கா பாருங்க.” என்றாள் அனுஷியா கண்கள் கலங்க.

 

காதல், கணவன், குடும்பம் என எதனைப் பற்றியும் யோசித்திராதவளின் வாழ்வில் புயலென நுழைந்து காதலை அள்ளிக் கொடுத்து தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துத் தந்து பெண்ணாய் நிறைவாய் உணர வைத்தவனையே காதலுடன் நோக்கினாள் அனுஷியா.

 

தன்னவளின் மடியில் இருந்த குழந்தையின் முகத்தை வருடிய பல்லவன், “தேங்க்ஸ் ஷியாம்மா…” என்றவாறு குழந்தையின் காலில் முத்தமிட, தந்தையின் முகத்தில் எட்டி உதைத்த சேயின் முகம் உறக்கத்திலும் மலர்ந்தது. 

 

அதனைக் காணவும் அவ்வளவு நிறைவாய் இருந்தது இருவருக்கும்.

 

கணவன் மனைவிக்கு தனிமையைக் கொடுத்து விட்டு மாலதி வெளியே சென்று விட, “நான் தான்ங்க தேங்க்ஸ் சொல்லணும். ஐ லவ் யூங்க… ஐ லவ் யூ சோ மச். நீங்க புருஷனா கிடைக்க போன ஜென்மத்துல நான் ஏதோ பெரிய புண்ணியம் பண்ணி இருக்கணும்.” என அனுஷியா கூறவும் பல்லவனின் முகத்தில் ஆனந்த அதிர்ச்சி.

 

திருமணத்தன்று முதல் நாள் அனுஷியா தன் காதலை வார்த்தைகளால் கூறிய பின் இது வரை வார்த்தைகளால் கூறியதே கிடையாது.

 

பல்லவன் பல முறை கெஞ்சிக் கேட்டும் தம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளில் மட்டும் தான் கூறுவேன் என உறுதியாக மறுத்து விட்டாள் அனுஷியா.

 

பல்லவனும் அதன் பிறகு அனுஷியாவை வற்புறுத்தவில்லை.

 

வார்த்தைகளால் வெளிப்படுத்தாவிடினும் ஒவ்வொரு நொடியும் தன் காதலை தன்னவனுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தாள் அனுஷியா.

 

“ஐ லவ் யூ டூ டி பொண்டாட்டி. என் வாழ்க்கையில வரமா வந்த தேவதை நீ. எனக்கு கிடைச்ச பொக்கிஷம்.” என்ற பல்லவன் தன்னவளின் இதழ்களை சில நொடிகள் சிறை பிடித்து விடுவிக்க, பெண்ணவளின் கன்னங்கள் வெட்கச் சதுப்பைப் பூசிக் கொண்டன.

 

தன்னை மட்டும் விடுத்து தாயும் தந்தையும் கொஞ்சிக் கொள்வது பொறுக்காது தன் பிஞ்சுக் கால்களால் எட்டி உதைத்து தன் இருப்பை வெளிப்படுத்தினாள் அவர்களின் தவப் புதல்வி.

 

அதில் வாய் விட்டு சிரித்த பல்லவன் குழந்தையுடன் சேர்த்து மனைவியை அணைத்துக்கொள்ள, “சரியான அப்பா பொண்ணு போல. இப்பவே எனக்கு போட்டியா வந்துட்டா. கொஞ்ச நேரம் என் புருஷன் கூட ரொமான்ஸ் பண்ண விட மாட்டேங்குறா.” எனப் போலியாக அலுத்துக் கொண்டாள் அனுஷியா.

 

முகத்தில் பெரிய புன்னகையுடன் மனைவியையும் குழந்தையையும் அணைத்திருந்த பல்லவன் இனி தம் வாழ்வில் வசந்தம் மட்டுமே வீசும் என எண்ண, விதியோ அவனைப் பார்த்து கேலியாகச் சிரித்தது.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்