Loading

தன் தோழிக்கு அழைக்க முயற்சித்துக் கொண்டிருந்த அனுபல்லவி திடீரென ஏதோ சத்தம் கேட்கவும் பதறிச் சென்று பார்க்க, குளியல் அறை செல்லும் வழியில் பேச்சு மூச்சற்று விழுந்து கிடந்த பிரணவ்வைக் கண்டு அதிர்ந்தாள்.

 

மறு நொடியே தன்னிலை அடைந்து அவசரமாக பிரணவ்விடம் ஓடிய அனுபல்லவி அவன் தலையை தன் மடியில் ஏந்தி, “பி…பிரணவ்… பிரணவ்… என்னாச்சு உங்களுக்கு?” என அவனின் கன்னத்தைத் தட்டினாள் பதட்டமாக.

 

ஆனால் அவனிடம் இருந்து எந்த அசைவும் வராமல் போகவும் கண் கலங்கிய அனுபல்லவி, “பி‌…பிரணவ்… எனக்கு பயமா இருக்கு… கண்ணைத் திறந்து பாருங்க… ப்ளீஸ்…” எனக் கெஞ்சினாள்.

 

முகத்தில் தண்ணீர் தெளித்தும் பிரணவ் எழாமல் போகவும் பயந்தவள் உடனே ஆகாஷிற்கு அழைத்து தகவல் தெரிவித்தாள்.

 

பத்து நிமிடத்தில் அங்கு வந்த ஆகாஷ் அனுபல்லவியுடன் சேர்ந்து உடனே பிரணவ்வை அவன் விபத்துக்குள்ளான நேரம் சேர்த்த மருத்துவமனையில் சேர்த்தான்.

 

பிரணவ்விற்கு சிகிச்சை நடக்கும் அறைக்கு வெளியே அனுபல்லவி பதட்டமாக நின்றிருக்க, ஆகாஷும் அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்டு சங்கடப்படுத்தவில்லை. 

 

சற்று நேரத்தில் அங்கு வந்த மருத்துவரிடம் ஓடிய அனுபல்லவி, “டாக்டர்… பிரணவ்வுக்கு என்னாச்சு? சொல்லுங்க டாக்டர்… அவர் நல்லா இருக்காரா?” எனப் பதட்டமாகக் கேட்கவும், “நீங்க யார் அவருக்கு?” எனக் கேட்டார் மருத்துவர்.

 

அனுபல்லவி, “நா…நான்…” என என்ன கூறுவது எனத் தெரியாமல் தடுமாற, “அவர் எங்க பாஸ் டாக்டர்… நல்லா தான் இருந்தார்… திடீர்னு மயக்கம் போட்டு விழுந்து இருக்கார்… அப்போ இவங்க தான் பாஸ் கூட இருந்தாங்க…” என்றான் ஆகாஷ்.

 

மருத்துவர், “யாரு சொன்னது அவர் நல்லா தான் இருந்தார்னு?” என மருத்துவர் கேட்கவும் இருவருமே அதிர்ந்தனர்.

 

“எ…என்ன சொல்றீங்க டாக்டர்? அவருக்கு என்னாச்சு?” எனக் கேட்டாள் அனுபல்லவி கண்ணீருடன்.

 

மருத்துவர், “அவருக்கு ஆக்சிடன்ட் ஆனப்போ நான் அவரை ஒரு வாரம் அப்சர்வேஷன்ல இருந்துட்டு டிஸ்சார்ஜ் ஆக சொன்னேன் இல்லையா? ஆனா அவர் தான் பிடிவாதம் பிடிச்சி அன்னைக்கே டிஸ்சார்ஜ் ஆகினார்… அந்த ஆக்சிடன்ட்ல அவரோட தலை பலமா அடிபட்டிருக்கு… ஆனா அன்னைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தப்போ அவரோட தலைல எந்த பிரச்சினையும் காட்டல… அதுக்கு அப்புறம் அவரோட மூளைல இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கு… அதனால இப்போ அவரோட மூளைல ப்ளட் க்லாட் ஒன்னு இருக்கு… அது அவரோட உயிருக்கே ஆபத்தா முடியும்… அதுக்கான அறிகுறிகள் அவருக்கு வெளிப்பட்டு இருக்குமே… நீங்க எப்படி அதைக் கவனிக்காம விட்டீங்க?” என்றார்.

 

மருத்துவர் கூறிய செய்தியில் அனுபல்லவிக்கு உலகமே இருண்டு போய் தன் சுழற்சியை நிறுத்தியது போல் இருந்தது. அதிர்ச்சியில் பேச்சே எழவில்லை.

 

ஆகாஷுக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியாக இருந்தது. 

 

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டவன், “அவருக்கு அடிக்கடி தலைவலி வரும் டாக்டர்… அந்த நேரம் எல்லாம் வலில ரொம்ப துடிப்பார்… ஹாஸ்பிடல் கூப்பிட்டாலும் வர மாட்டார்… டேப்லெட் போட்டுட்டு அமைதியா இருப்பார்…” என்கவும் தான் அனுபல்லவிக்கும் அது பற்றிய நினைவு வந்தது.

 

தான் தன்னவனை சரியாகக் கவனிக்கவில்லையோ என மனம் வருந்தினாள் அனுபல்லவி.

 

மருத்துவர், “டேப்லெட் போட்டதனால தான் உங்க யாருக்குமே அதோட தீவிரம் புரியல… டேப்லெட் போட்டதும் வலி குறையும்… பட் மூளைல அந்த இரத்தக்கசிவு நிற்காது… அது தான் இப்போ அவர் இந்த நிலமைல இருக்க காரணம்…” என்கவும்,

 

“அ… அவரைக் குணப்படுத்தலாம் தானே டாக்டர்…” என அனுபல்லவி கண்ணீருடன் கேட்டாள்.

 

“உடனே அந்த ப்ளட் க்லாட்ட ஆப்பரேஷன் பண்ணி நீக்கணும்… அவர் இப்போ இருக்குறதே  டேஞ்சர் ஸ்டேஜ் தான்… அந்த ப்ளட் க்லாட்ட ரிமூவ் பண்ணலன்னா அவரோட உயிருக்கு உத்தரவாதம் இல்ல…” என மருத்துவர் கூறவும், 

 

“அப்போ உடனே பிரணவ்வுக்கு ஆப்பரேஷன் பண்ணி அதை ரிமூவ் பண்ணுங்க டாக்டர்…” என்றாள் அனுபல்லவி அவசரமாக.

 

மருத்துவர், “அதுல தான் ஒரு ப்ராப்ளம் இருக்கு…” என்கவும் அனுபல்லவியும் ஆகாஷும் அவரைக் குழப்பமாக நோக்க,

 

“இந்த ஆப்பரேஷன் பண்ணா மேக்சிமம் அவர் அவரோட பழைய ஞாபகங்களை இழக்க வாய்ப்பு இருக்கு… டென் பர்சன்ட் தான் எதுவும் நடக்காம இருக்க சான்ஸ் இருக்கு…” என இடியை இறக்கினார் மருத்துவர்.

 

ஆகாஷும் அதிர்ந்து போய் நிற்க, “அதனால முதல்ல அவரோட ஃபேமிலிய வர சொல்லுங்க… அவங்க சம்மதம் இருந்தா தான் இந்த ஆப்பரேஷன் பண்ணலாம்… எதுவானாலும் சீக்கிரம் பண்ண பாருங்க… நாம லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் அவரோட உயிருக்கு ஆபத்து…” என்று விட்டு சென்றார் மருத்துவர்.

 

அவர் சென்றதும் அனுபல்லவி அங்கிருந்து கதிரையில் இடிந்து போய் அமர, அவளைக் கலக்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு பிரணவ்வின் பெற்றோருக்கு தகவல் கூறச் சென்றான்.

 

‘என் பிரணவ் என்னை மறந்துடுவானா?’ என்ற எண்ணம் தோன்றவும் அனுபல்லவியின் இதயத்தை யாரோ கூரிய வாளால் அறுப்பது போல் வலித்தது.

 

அனுபல்லவி, “இல்ல… அவன் என் பிரணவ்… அவன் எப்படி என்னை மறப்பான்?” எனத் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டவளுக்கு நேற்றைய இரவில் நடந்த கூடல் ஞாபகம் வேறு நெஞ்சைப் பிழிந்தது.

 

கண்ணீர் வேறு அவளின் அனுமதி இன்றி கன்னத்தைத் தாண்டி வடிய, திடீரென தன் தோளில் பதிந்த கரத்தில் திடுக்கிட்டு யார் என்று திரும்பிப் பார்த்தாள்.

 

சாருமதி தான் தன் தோழியை வருத்தமாகப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

 

அனுபல்லவி இருக்கும் மனநிலையைப் புரிந்து கொண்ட ஆகாஷ் தன்னவளுக்கு அழைத்து பிரணவ்வின் நிலையை மட்டும் கூறி அனுபல்லவியும் இங்கு தான் இருப்பதாக தெரிவித்தான்.

 

அனுபல்லவி எதற்காக மருத்துவமனையில் இருக்கிறாள் எனச் சாருமதி பதறவும் தானே அனைத்தையும் விளக்கமாகப் பிறகு கூறுவதாகக் கூறிய ஆகாஷ் அனுபல்லவியிடம் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம் எனக் கண்டிப்பாகக் கூறினான்.

 

சாருமதியும் நிலைமையை உணர்ந்து உடனே மருத்துவமனைக்கு கிளம்பி வந்தவள் உடைந்து போய் அமர்ந்திருந்த அனுபல்லவியைக் கண்டு அதிர்ந்தாள்.

 

காரணம் அறியாவிடிலும் தோழியின் மனவருத்தம் அவளையும் தொற்றிக் கொண்டது.

 

“சாரு…” என அனுபல்லவி தோழியை அணைத்துக்கொள்ள, “நைட் நீ வர லேட் ஆகும்னு சொன்னதும் நான் தூங்கிட்டேன்… காலைல எழுந்து பார்க்கும் போது கூட நீ வீட்டுக்கு வந்து இருக்கல…‌ உனக்கு கால் பண்ணணும்னு நினைச்சப்போ‌ தான் ஆகாஷ் கால் பண்ணி விஷயத்த சொன்னார்… கவலைப்படாதே… நம்ம சார்க்கு எதுவும் ஆகாது…” என்றாள் சாருமதி.

 

சற்று நேரத்திலேயே மூர்த்தியும் லக்ஷ்மியும் ஆகாஷுடன் மருத்துவமனைக்கு வந்தனர்.

 

“டாக்டர்… என் பையனுக்கு என்னாச்சு? இவங்க என்ன என்னவோ சொல்றாங்க… என் பையன் நல்லா இருக்கான்ல…” என லக்ஷ்மி பதட்டமாகக் கேட்க,

 

“அவரோட மூளைல இரத்தக்கசிவு ஏற்பட்டு ப்ளட் க்லாட் உருவாகி இருக்கு… அதை உடனே ஆப்பரேஷன் பண்ணி ரிமூவ் பண்ணலன்னா அவரோட உயிருக்கு ஆபத்தா முடியும்… பட் இந்த ஆப்பரேஷன் சக்சஸா முடிஞ்சாலும் அவருக்கு பழைய ஞாபகங்கள் இருக்குமான்னு சந்தேகம் தான்…” என மருத்துவர் கூறவும் தலையில் அடித்துக்கொண்டு கதறினார் லக்ஷ்மி.

 

மனைவியை சாமாதானப்படுத்துவதா இல்லை மகனின் நிலையை எண்ணி வருந்துவதா என மூர்த்தி ஒரு பக்கம் கலங்கினார்.

 

சாருமதியை அணைத்துக்கொண்டு அனுபல்லவியும் கண்ணீர் வடிக்க, “டாக்டர்… பழைய ஞாபகங்கள் இருக்காதுன்னா மொத்தமாவே எந்த ஞாபகங்களும் இருக்காதா? இல்ல குறிப்பிட்ட பீரியட்ல நடந்த சம்பவங்கள் ஞாபகத்துல இருக்காதா?” என மருத்துவரிடம் கேட்டான் ஆகாஷ்.

 

அனுபல்லவியும் மருத்துவரின் பதிலை எதிர்ப்பார்த்து அவரின் முகம் நோக்க, “அதை எங்களால எக்சேக்டா சொல்ல முடியாது… சில பேர் மொத்த ஞாபகத்தையும் இழந்துடுவாங்க… இன்னும் சில பேர் ரீசன்ட்டா ஆர் குறிப்பிட்ட பீரியடுக்குள்ள நடந்த சம்பவங்களை இழந்துடுவாங்க… சில சமயம் எல்லா விஷயமும் ஞாபகத்துல இருக்கவும் வாய்ப்பு இருக்கு… பட் அதுக்கு வாய்ப்பு கம்மி…” என்றார் மருத்துவர்.

 

அனுபல்லவி, ‘என்னை மறந்துடுவீங்களா பிரணவ்?’ என மனதில் தன்னவனிடம் கண்ணீருடன் கேட்டாள்.

 

சில நிமிட யோசனைக்குப் பின் மூர்த்தி, “ஆப்பரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க டாக்டர்…” என்கவும் மருத்துவர் சரி எனத் தலையசைத்து விட்டு சென்றார்.

 

லக்ஷ்மி, “ஏங்க… ஆப்பரேஷனுக்கு அப்புறம் நம்ம பையன் நம்மள மறந்துடுவானாங்க?” என வருத்தமாகக் கேட்கவும் மனைவியை ஆறுதலாக அணைத்துக்கொண்ட மூர்த்தி, “பயப்படாதே லக்ஷ்மி… அவன் நம்ம பையன்… நம்மள எப்படி மறப்பான்? அப்படியே மறந்தாலும் நாம அவனுக்கு அம்மா அப்பா இல்லன்னு ஆகிடுவோமா?” எனக் கேட்டார்.

 

அடுத்த ஒரு மணி நேரத்திலேயே பிரணவ்விற்கு அறுவை சிகிச்சை ஆரம்பமானது.

 

சிகிச்சை ஆரம்பம் ஆனதிலிருந்து அனுபல்லவி கண்களை மூடி கடவுளிடம் தன்னவனுக்காக பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.

 

லக்ஷ்மியும் மூர்த்தியும் இருந்த மனநிலையில் தம் மகனுக்காக இங்கு ஒரு ஜீவன் வருந்திக் கொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை.

 

சாருமதிக்கு கூட அனுபல்லவி ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள் எனப் புரியவில்லை.

 

ஆகாஷ் அவளிடம் எதுவும் கேட்கக் கூடாது எனக் கூறி இருந்ததால் அமைதியாக இருந்தாள்.

 

பல மணி நேர போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர் வெளியே வர, “டாக்டர்… என்னாச்சு? என் பையன் நல்லா இருக்கானா?” எனக் கேட்டார் லக்ஷ்மி பதட்டமாக.

 

அவரைப் பார்த்து புன்னகைத்த மருத்துவர், “ஆப்பரேஷன் சக்சஸ்… கவலைப்படாதீங்க…” என்க, “நாங்க போய் பிரணவ்வ பார்க்கலாமா?” எனக் கேட்டார் மூர்த்தி.

 

மருத்துவர், “தலைல சர்ஜரி பண்ணி இருக்குறதால இப்பவே போய் பார்க்க முடியாது… கொஞ்சம் நேரத்துக்கு அப்புறம் வார்டுக்கு மாத்துவோம்… அப்போ போய் பாருங்க… அவர் கண்ணு முழிக்க எப்படியும் இருபத்தி நான்கு மணி நேரம் எடுக்கும்… அதுக்கப்புறம் தான் எங்களால எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும்… கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க…” என்று விட்டு சென்றார்.

 

அனுபல்லவி அதன் பிறகு தான் நிம்மதியாக மூச்சு விட்டாள்.

 

இருந்தாலும் தன்னவனுக்கு தன்னை நினைவில் இருக்குமா என்று கவலையாக இருந்தது.

 

சில மணி நேரத்தில் பிரணவ்வை வார்டுக்கு மாற்றியதும் மூர்த்தியும் லக்ஷ்மியும் சென்று அவனைப் பார்த்து விட்டு வந்தனர்.

 

அனுபல்லவி இருந்த இடத்திலேயே அமர்ந்து இருந்தாள்.

 

ஆகாஷ், “சேர்… மேடம்… நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க… ரொம்ப நேரமா இங்கயே இருக்கீங்க… அதான் டாக்டர் சொன்னாரே பாஸ் கண்ணு முழிக்க எப்படியும் ஒரு நாள் ஆகும்னு… அதுவரை நீங்க இங்க இருந்து என்ன பண்ண போறீங்க? இங்க எல்லாம் நான் பார்த்துக்குறேன்…” என்றான்.

 

லக்ஷ்மி மறுக்க, “லக்ஷ்மி… அதான் ஆகாஷ் சொல்றான்ல… நீயே நோயாளி… டேப்லெட் வேற போடணும்… நாம கொஞ்சம் நேரம் கழிச்சி வரலாம்…” என மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார் மூர்த்தி.

 

அவர்கள் இருவரும் சென்றதும் அனுபல்லவி சாருமதியின் மடியில் தலை வைத்து படுத்திருக்க, அவர்களை நோக்கி சென்றான் ஆகாஷ்.

 

“மதி… அனு காலைல இருந்து எதுவுமே சாப்பிடல… நைட் ஆகிடுச்சு… நீ கேன்டீன் போய் அவங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா… அப்படியே நீயும் சாப்பிடு… நீ முன்னாடி போ… சின்ன வேலை ஒன்னு இருக்கு… அதை முடிச்சிட்டு நானும் வரேன்…” என ஆகாஷ் கூறவும் எதுவும் கூறாது கேன்டீன் சென்றாள் சாருமதி.

 

கண்கள் வீங்கி அழுது சிவந்த முகத்துடன் அமர்ந்திருந்த அனுபல்லவியை வருத்தமாக நோக்கிய ஆகாஷ், “அனு… நீங்க உள்ள போய் பாஸைப் பாருங்க… மதி இப்பவே வர மாட்டா… நான் பார்த்துக்குறேன்… அதான் ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சதே… வருத்தப்பட வேண்டாம்… பாஸ் நல்லா இருப்பார்…” என ஆறுதல் அளிக்கவும் அவனை நன்றியுடன் ஏறிட்டாள் அனுபல்லவி.

 

நிஜமாகவே அவளுக்காகத் தான் ஆகாஷ் அனைவரையுமே அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

 

எல்லாரும் இருந்தால் நிச்சயம் அனுபல்லவியால் பிரணவ்வைப் பார்க்க இயலாது என்பதை அறிவான் அவன்.

 

சுற்றியும் மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் பிரணவ் படுத்திருக்க, பிரணவ்வின் இதயத்துடிப்பு வீதத்தை அளக்கும் மானிட்டரில் இருந்து எழுந்த மெல்லிய ஓசை மட்டும் அவ் அறையில் எழுந்தது.

 

கதவைத் திறந்து கொண்டு அவ் அறையினுள் நுழைந்த அனுபல்லவி தன்னவன் இருந்த நிலையைக் கண்டு கண் கலங்கினாள்.

 

பிரணவ்வின் அருகில் அமர்ந்த அனுபல்லவி அவனின் கரத்தை எடுத்து தன் கரத்தினுள் வைத்துக்கொண்டு தன்னவனின் முகத்தை நோக்கியவாறு அவனின் நெஞ்சில் தலை சாய்த்தாள்.

 

அனுபல்லவி, “நான் உங்கள சரியா பார்த்துக்கல பிரணவ்… அதனால தான் நீங்க இந்த நிலமைல இருக்கீங்க…” என்றாள் கண்ணீருடன்.

 

“டாக்டர் சொன்னார் நீங்க கண்ணு முழிச்சா பழையது எல்லாம் மறந்துடுவீங்களாம்… அப்போ என்னைக் கூட மறந்துடுவீங்களா? உங்க பல்லவிய… இல்ல இல்ல… உங்க பவிய மறந்துடுவீங்களா?” எனக் கேட்டவளின் மனதில் எழுந்த வலியை அவளால் தாங்க முடியவில்லை.

 

அனுபல்லவி, “ஏன் பிரணவ் இப்படி பண்ணீங்க? உங்களுக்கு தலைவலி வரும் போதெல்லாம் நான் கேட்டேன் தானே என்னாச்சுன்னு? சொல்லி இருக்கலாம்ல… எதுக்கு உங்க வலிய உங்களுக்குள்ள மறைச்சீங்க? நீங்க என்னை மறந்துடுவீங்களா? நம்ம காதல மறந்துடுவீங்களா? வருஷக் கணக்கான ஞாபகங்களையே இழக்க வாய்ப்பு இருக்குறதா டாக்டர் சொல்றாங்க… நேத்து வந்தவ நான்… என்னை எப்படி?” என்றவளின் உதட்டில் விரக்திப் புன்னகை.

 

அனுபல்லவியின் கண்ணீர் பிரணவ் அணிந்திருந்த மருத்துவமனை ஆடையையே நனைத்து விட்டது.

 

“நைட்டு நடந்தது எல்லாம் கனவு போல இருக்குங்க… அந்த நினைவைக் கூட நம்மளால சுகமா அனுபவிக்க முடியல… அதுக்குள்ள நீங்க இப்படி…” என அழுதாள் அனுபல்லவி.

 

அனுபல்லவி, “உங்க கிட்ட நிறைய விஷயங்கள் சொல்ல இருக்கு பிரணவ்… என்னைப் பத்தி நீங்க தெரிஞ்சிக்க நிறைய விஷயங்கள் இருக்கு… அதெல்லாம் தெரிஞ்சா நீங்க என்னை ஏத்துப்பீங்களான்னு முன்னாடி பயமா இருந்தது… என் பிரணவ் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… எங்க காதல் மேல நம்பிக்கை இருக்கு… ஆனா உங்களுக்கு என்னையே ஞாபகம் இல்லாம போனா என்ன பண்ணுவேன் பிரணவ்?” எனக் கேட்டாள்.

 

சில நிமிடங்கள் பிரணவ்வை அணைத்தவாறு கண்ணீர் வடித்த அனுபல்லவி தன் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தவள் தன்னவனின் காய்ந்து போய் மூடிக் கிடந்த இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டாள். 

 

அவளின் கண்ணீர் பிரணவ்வின் கன்னத்தில் விழுந்து அவனின் செவி வழியே இறங்கியது.

 

தன் இதழ்களைத் தன்னவனிடமிருந்து பிரித்த அனுபல்லவி பிரணவ்வின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு மனமே இன்றி அவனின் கரத்தை விடுவித்து விட்டு அவ் அறையில் இருந்து அழுதுகொண்டே வெளியேறினாள்.

 

அனுபல்லவி பிரணவ்வின் கரத்தை விடுவித்து விட்டு செல்லவும் அவனின் மூடியிருந்த விழிகள் கண்ணீரை உகுத்தன.

 

************************************

 

“ஆகாஷ்… இங்க என்ன தான் நடக்குது? அனு எப்படி பிரணவ் சார் கூட? நைட் அவ எங்க போனா? பிரணவ் சாருக்கு ஒன்னுன்னா இவ ஏன் இந்த அளவுக்கு துடிக்கிறா? தயவு செஞ்சி எதையும் மறைக்காம சொல்லுங்க… எனக்கு தலையே வெடிக்க போகுது…” எனத் தன் முன் அமர்ந்து காஃபியைக் குடித்துக் கொண்டிருந்த ஆகாஷிடம் கத்தினாள் சாருமதி.

 

சாருமதியின் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்த ஆகாஷ், “மதி… எதுக்கு டென்ஷன் ஆகும்? கூல் குட்டச்சி பேபி…” என்றான் புன்னகையுடன்.

 

பல நாட்கள் கழித்து அவனின் அழைப்பு சாருமதியின் இதயத்தை மயிலிறகால் வருடினாலும் தன் தோழியைப் பற்றி அறிந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளுக்குள் எழுந்த சந்தோஷத்தை ஆகாஷிற்கு காட்டாது மறைத்தவள் அவனை அழுத்தமாக நோக்கினாள்.

 

பெருமூச்சு விட்ட ஆகாஷ், “அவங்களுக்குள்ள என்ன இருக்குன்னு அவங்களா சொன்னா மட்டும் தான் தெரியும் மதி… ஆனா ஒன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும்… இவங்க ரெண்டு பேர்லயும் ஒருத்தரோட நிம்மதியும் சந்தோஷமும் மற்றவர் கிட்ட தான் இருக்கு…” என்றான் அமைதியாக.

 

அவனை அதிர்ச்சியாக பார்த்த சாருமதி, “ரெண்டு பேரும் லவ் பண்ணுறாங்களா?” எனக் கேட்டாள் அதிர்வாய்.

 

“தெரியல… அவங்க சொன்னா தான் உண்டு… நீ இப்போ அனு கிட்ட எதையும் கேட்காதே… ரொம்ப அப்சட்டா இருக்காங்க… நிச்சயம் உன் கிட்ட எதையும் மறைக்கமாட்டாங்க… சொல்லுவாங்க கண்டிப்பா… அவங்க மேல கோவப்படாதே…” என்றான் ஆகாஷ்.

 

பின் இருவரும் அனுபல்லவிக்கு உணவை வாங்கிக்கொண்டு கிளம்பினர்.

 

பிரணவ் இருந்த அறைக்கு வெளியே இருக்கையில் வாடிப் போய் அமர்ந்திருந்த அனுபல்லவி வேண்டாம் என்று மறுத்தும் அவளின் உடல் நிலையைக் கருதி வலுக்கட்டாயமாக ஒரு குவளை பாலை மட்டும் குடிக்க வைத்தாள் சாருமதி.

 

அன்று இரவும் ஆகாஷ் எவ்வளவு கூறியும் கேட்காது மருத்துவமனையிலேயே தங்கி விட்டாள் அனுபல்லவி.

 

வேறு வழியின்றி சாருமதியும் தன் தோழிக்கு துணையாக மருத்துவமனையில் தங்கினாள்.

 

அவர்கள் இருவருக்கும் துணையாக ஆகாஷ் இருந்தான்.

 

சரியாக மருத்துவர் கூறிய இருபத்தி நான்கு மணி நேரத்தில் மூடியிருந்த விழிகளைக் கஷ்டப்பட்டுப் பிரித்தான் பிரணவ்.

 

தலை ‘விண்… விண்…’ என்று வலிக்க, பார்வை கூட மங்கலாகத் தெரிந்தது.

 

அவன் கண் விழித்த செய்தியை அங்கு இருந்த நர்ஸ் மருத்துவரிடம் கூறவும் அவர் வந்து பிரணவ்வைப் பரிசோதித்து விட்டு அவன் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டான் என உறுதி அளித்தார்.

 

மூர்த்தி, லக்ஷ்மி, ஆகாஷ் மூவரும் பிரணவ்வின் அருகில் நின்றிருக்க, அவர்களை விட்டு சற்றுத் தள்ளி அனுபல்லவியும் சாருமதியும் நின்றிருந்தனர்.

 

பிரணவ் கண் விழித்த பின்னர் தான் அனுபல்லவிக்கு இவ்வளவு நேரமும் சென்றிருந்த உயிர் திரும்ப வந்தது. 

 

மருத்துவர், “நீங்க யாருன்னு ஞாபகம் இருக்கா?” என சுற்றும் முற்றும் கேள்வியாகப் பார்த்த பிரணவ்விடம் கேட்கவும், “பி…பிரணவ்… பிரணவ் ராஜ்…” என்றான் மெல்லிய குரலில்.

 

பின் மூர்த்தியையும் லக்ஷ்மியையும் காட்டி, “இவங்க யாருன்னு தெரியுதா?” என மருத்துவர் கேட்கவும் தன் வலப் பக்கம் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட தன் பெற்றோரைப் பார்த்து, “எ…ன்னோட அ…அப்பா… அம்…அம்மா…” என்றான் பிரணவ்.

 

மறு நொடியே, “பிரணவ்… ஏங்க… என் பையனுக்கு நம்மள ஞாபகம் இருக்குங்க… அவன் அம்மாவ அவனுக்கு ஞாபகம் இருக்கு…” என மூர்த்தியின் தோளில் சாய்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் லக்ஷ்மி.

 

மூர்த்தியும் புன்னகைத்தவாறு கண்ணீருடன் ஆம் எனத் தலையசைத்தார்.

 

அவர்களுக்கு அருகில் நின்ற ஆகாஷின் மீது பார்வையைப் பதித்த பிரணவ், “எ…எனக்கு… என்…னாச்சு ஆ…காஷ்?” எனக் கேட்டான் மெல்லிய குரலில்.

 

தன்னை அவனுக்கு ஞாபகம் இருப்பதில் மகிழ்ந்த ஆகாஷ், “பாஸ்… பாஸ் நிஜமாவே உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா?” எனக் கண்ணீருடன் கேட்கவும் கஷ்டப்பட்டு ஆம் எனத் தலை அசைத்தான் பிரணவ்.

 

பிரணவ்வின் பார்வை மெதுவாக ஆகாஷைத் தாண்டி சற்றுத் தள்ளி நின்றிருந்த தோழிகள் மீது பதியவும் அனுபல்லவியின் இதயம் இரு மடங்கு வேகத்தில் துடித்தது.

 

ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த கரத்தை மெதுவாகத் தூக்கி அனுபல்லவியின் பக்கம் பிரணவ் காட்டவும் அவர்களைத் திரும்பிப் பார்த்த மருத்துவர், “அவங்க யாருன்னு தெரியுமா மிஸ்டர் பிரணவ்?” எனக் கேட்கவும் அனுபல்லவி பிரணவ்வின் முகத்தை ஆவலுடன் நோக்க, “யா…யாரு?” என்ற பிரணவ்வின் கேள்வியில் மொத்தமாக உடைந்து விட்டாள் அனுபல்லவி.

 

தன் வலியை மறைக்க சாருமதியின் கரத்தை அழுத்த, அதிலேயே தோழியின் வலியை உணர்ந்தாள் சாருமதி.

 

ஆகாஷ் ஏதோ கூற வர, அதற்குள், “உன் கம்பனி ஸ்டாஃப்ஸ் பா…” என்றார் மூர்த்தி.

 

திடீரென பிரணவ் முகத்தை சுருக்கவும், “தலை இன்னும் ரொம்ப வலிக்கிதா பிரணவ்?” என மருத்துவர் கேட்கவும், “லை…ட்டா…” என்றான்.

 

மருத்துவர், “ஆப்பரேஷன் பண்ணதனால அப்படி இருக்கலாம்… கொஞ்சம் நாள்ல சரி ஆகிடும்… நவ் யூ ஆர் பர்ஃபக்ட்லி ஆல் ரைட் பிரணவ்… பேஷன்ட்டை டிஸ்டர்ப் பண்ணாதீங்க… கொஞ்சம் நேரம் இருந்துட்டு எல்லாரும் வெளியே போங்க… மிஸ்டர் மூர்த்தி… நீங்க கொஞ்சம் என் கூட வாங்க… பேசணும்…” என்று விட்டு வெளியேற, அவரைத் தொடர்ந்து மூர்த்தியும் லக்ஷ்மியும் வெளியேறினர்.

 

அனுபல்லவி சாருமதியுடன் சேர்ந்து அங்கேயே ஒரு ஓரமாக நிற்க, சில நொடி அமைதிக்குப் பின் ஆகாஷைப் பார்த்து, “தா…தாரா எ…எங்க? அ…வளு…க்கு ஆர்…யான் கூட என்…கேஜ்மென்ட்னு அ…அபி சொன்…னானே…” என்கவும் சிதாராவைப் பற்றித் தெரிந்த ஆகாஷும் அனுபல்லவியும் ஏகத்துக்கும் அதிர்ந்தனர்.

 

சிதாராவுக்கு நிச்சயம் என்று கேள்விப்பட்டது வரை தான் பிரணவ்விற்கு ஞாபகம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அனுபல்லவிக்கு இவ்வளவு நேரமும் வெளி வரத் துடித்த கண்ணீர் அவளையும் மீறி வெளிப்பட்டு விட்டது.

 

தன்னவனுக்கு தன்னை சுத்தமாக நினைவில் இல்லை என்பதைத் தாங்க முடியாத அனுபல்லவி அவ் அறையில் இருந்து வெளியே ஓட, “உங்க பையனுக்கு ரீச்ன்ட்டா நடந்த சம்பவங்கள் தான் மறந்து போய் இருக்கு… கொஞ்சம் கொஞ்சமா அந்த நினைவுகள் திரும்ப வரலாம்… ஏன் வராமலும் கூட போகலாம்… எதையும் உறுதியாக சொல்ல முடியாது… பட் நீங்களா அவருக்கு எதையும் ஞாபகப்படுத்த போக வேணாம்… அவர் ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணி பழைய ஞாபகத்த மீட்க நினைச்சா அவரோட உயிருக்கு ஆபத்தாகலாம்…” என மருத்துவர் கூறியது அனுபல்லவியின் செவியில் விழவும் மேலும் அதிர்ந்தாள். 

 

அனுபல்லவியைத் தொடர்ந்து வெளியே வந்த சாருமதியும் மருத்துவர் கூறியதைக் கேட்டு அதிர்ந்தாள்.

 

பிரணவ்வின் கேள்வியில் ஆகாஷ் அதிர்ச்சியாக அவனைப் பார்க்க, “சொ…ல்லுங்க ஆ…ஆகாஷ்…” எனப் பிரணவ் மீண்டும் கேட்கவும், “அ..அது பாஸ்… சி…சிதாரா மேடமுக்கு ஆர்யான் சார் கூட மேரேஜ் முடிஞ்சு சிக்ஸ் மந்த் ஆகுது…” எனத் தயக்கமாகக் கூறினான் ஆகாஷ்.

 

அதனைக் கேட்டு பிரணவ் எந்த அதிர்வையும் காட்டாது, “ஓஹ்… சரி…” என்று மட்டும் கூறி விட்டு அமைதி ஆகினான்.

 

“நீங்க ரெஸ்ட் எடுங்க பாஸ்… நான் அப்புறம் வரேன்…” என்று கூறி விட்டு வெளியேறிய ஆகாஷிற்கும் மருத்துவர் கூறியது காதில் விழுந்தது.

 

மருத்துவர் கூறிய செய்தியில் மனமுடைந்த அனுபல்லவி, “சாரு… நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்…” என்று விட்டு ரெஸ்ட் ரூம் வந்தவள் கதறி அழுதாள்.

 

“என்னை உங்களுக்கு தெரியலயா பிரணவ்? உங்க பவிய மறந்துட்டீங்களா?” எனக் கண்ணீர் வடித்தவளின் கைப்பேசி வெகுநேரமாக அலற, திரையில் காட்டிய பெயரைக் குழப்பமாகப் பார்த்துக்கொண்டு அழைப்பை ஏற்ற அனுபல்லவி மறு முனையில் கூறிய செய்தியில் அதிர்ந்து, “நா… நான் உடேன வரேன்…” என்று அழைப்பைத் துண்டித்து விட்டு சாருமதியிடம் கூட கூறாது உடனே மருத்துவமனையில் இருந்து கிளம்பினாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்