Loading

ஏழ்மையே உருவான ஒரு வரிய குடும்பத்தில் பிறந்தவர் தான் லக்ஷ்மி. அவரின் ஒரே தம்பி ராமலிங்கம். இருவருக்கும் இடையில் பத்து வருட வயது வித்தியாசம். தன் ஐந்து வயதிலேயே ஒரு விபத்தில் பெற்றோரை இழந்த ராமலிங்கத்திற்கு லக்ஷ்மி தான் தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக, சகோதரிக்கு சகோதரியாக இருந்து வந்தார்.

 

வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தவர்களின் வாழ்வில் வசந்தம் வீசுவதற்காகவே நுழைந்தார் மூர்த்தி ராஜ்.

 

நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மூர்த்தி ராஜிற்கு லக்ஷ்மியின் மேல் கண்டதும் காதல் வர, அதனை தாமதிக்காமல் அவரிடம் வெளிப்படுத்தினார்.

 

உறவினர்கள் என்று யாரும் அப்போது அவர்களுக்கு இருக்கவில்லை.

 

முதல் முறை ஒரு ஆணவன் வந்து காதலைக் கூறவும் லக்ஷ்மி அதனை ஏற்கத் தயங்க, ராமலிங்கமோ அவரைத் திருமணம் செய்தால் நாம் வறுமை நீங்கி வசதியாக வாழலாம் எனத் தமக்கையை ஊக்கிவித்தார்.

 

லக்ஷ்மியின் மனதிலும் அந்த எண்ணம் தோன்றியதால் மூர்த்தியின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

 

மகனின் சந்தோஷமே முக்கியம் என மூர்த்தியின் பெற்றோர் உடனே இருவரின் திருமணத்தையும் நடத்தி வைத்தனர்.

 

சிறு வயதிலிருந்தே வறுமையில் வளர்ந்தவர்களுக்கு திடீரென இவ்வளவு வசதியான வாழ்வைப் பார்த்ததும் பேராசை எழுந்தது.

 

லக்ஷ்மிக்கு தன் கணவனின் சொத்து, அதனால் தான் வேண்டியவாறு இதனைப் பயன்படுத்தலாம். தானும் தம்பியும் பெற்றோரை இழந்து வறுமையில் கஷ்டப்பட்ட போது ஒரு சிறிய உதவிக்கு கூட வராதவர்கள் முன் தான் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. தம் தகுதிக்கு குறைவானவர்களுடன் பேசுவதே தமக்கு இழுக்கு என்று எண்ணினார். 

 

அதனால் மூர்த்தியிடமே தொழிலைக் கற்று அவருக்கு தொழிலில் உதவியாக இருந்தார்.

 

ஆனால் ராமலிங்கத்திற்கோ தன் மாமனின் பணத்தை செலவலிப்பதில் மாத்திரமே நேரம் சென்றது.

 

மூர்த்தியும் ராமலிங்கத்தை மைத்துனன் என்ற நிலையைத் தாண்டி மகனாகவே நடத்தினார். அதுவே அவருக்கு இன்னும் வசதியாகிப் போயிற்று.

 

மூர்த்தி மற்றும் லக்ஷ்மியின் மொத்த சொத்தையும் மொத்த பாசத்தையும் ராமலிங்கம் ஒருவரே அனுபவித்து வந்தார்.

 

வருடங்கள் கடந்தும் மனமொத்த தம்பதியர்களாய் வாழ்ந்து வந்த மூர்த்திக்கும் லக்ஷ்மிக்கும் குழந்தைப் பாக்கியம் மற்றும் கிடைக்கவே இல்லை.

 

சிகிச்சைகள், வேண்டுதல்கள் எதுவுமே பலனளிக்காது போகவும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர்.

 

உடனே காலம் தாழ்த்தாது பிறந்த சில நாட்களே ஆன பிரணவ்வைத் தத்தெடுத்து அன்பைப் பொழிந்து வளர்க்கத் தொடங்க, பிரணவ் மெது மெதுவாக வளரத் தொடங்கவும் இருவரின் கவனமும் மீண்டும் தொழிலிற்கு சென்றது.

 

குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக கேர் டேக்கர் ஒருவரை நியமித்து பிரணவ்வின் மொத்தப் பொறுப்பையும் அவரிடமே வழங்கினார்.

 

தம் மகனிற்கு எல்லாமே சிறந்ததாக மாத்திரமே கிடைக்க வேண்டும் என்று விரும்பிய லக்ஷ்மி, பெரிய பெரிய பள்ளிக்கூடம், கல்லூரி என்பவற்றில் பிரணவ்வை சேர்த்து தேவைக்கு அதிகமாகவே பணத்தை வாரி வழங்கியவர் அவனுக்கு வேண்டிய அன்பை மட்டும் கொடுக்கத் தவறினார்.

 

ஆரம்பத்தில் ராமலிங்கமும் தனக்கு தாய் தந்தையாக இருக்கும் அக்காவினதும் மாமாவினதும் குழந்தை மீது மிகுந்த பாசத்தை வைத்திருந்தார்.

 

அதனால் தான் பிரணவ் கூட தன் பெற்றோரை விட அவரிடத்தில் நெருக்கமாக இருந்தார்.

 

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, பிரணவ் கல்லூரிப் படிப்பை முடித்ததும் தன் பிஸ்னஸ் மொத்தத்திற்கும் பிரணவ்வை வாரிசாக மூர்த்தி அறிவிக்கவும் மாமனுக்கு பிறகு தன்னைத் தான் தொழில் வாரிசாக அறிவிப்பார் என எண்ணிக் கொண்டிருந்த ராமலிங்கத்திற்கு அது பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

 

அந்த ஏமாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக பிரணவ்வின் மீது‌ வெறுப்பாக மாறத் தொடங்கியது.

 

ராமலிங்கம் பிரணவ் மீது இவ்வளவு வெறுப்பை வளர்க்கும் அளவுக்கு மூர்த்தி ஒன்றும் அவருக்கு அநீதி இழைத்து விடவில்லை. 

 

எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸின் மெய்ன் ப்ரான்ச்சில் ராமலிங்கத்திற்கு ஒரு உயர்ந்த பதவியை வழங்கி இருந்தார். தான் எது செய்வதாக இருந்தாலும் ராமலிங்கத்திடமும் ஒரு வார்த்தை கூறி விட்டே செய்வார்.

 

அப்படி இருந்தும் பிரணவ் மேல் வெறுப்பை வளர்த்த ராமலிங்கம் அவனை தன் வழியில் இருந்து அழிக்க சரியான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தார்.

 

சரியாக பிரணவ்வும் பெங்களூர் செல்ல, அங்கு வைத்து யாருக்கும் சந்தேகம் வராதவாறு அவன் கதையை முடிக்க ஒரு லாரியை ஏற்பாடு செய்தார்.

 

அதிலிருந்தும் பிரணவ் உயிர்ச்சேதம் இன்றி தப்பித்து விட, பார்ட்டியில் வைத்து தன்னை அவமானப்படுத்தியதற்கும் சேர்த்து பழி வாங்குவதற்காகவே இன்று பத்திரிகைகளில் அவனின் உண்மையை எல்லாம் கூறி பேட்டி கொடுத்தது.

 

ராமலிங்கம் கூறியவற்றைக் கேட்டு லக்ஷ்மி அதிர்ச்சியில் உறைந்திருக்க, மூர்த்தியோ இத்தனை காலமும் பாம்புக்கா பால் ஊட்டி வளர்த்தேன் என மனம் நொந்தார்.

 

தம்பியின் செயலில் மனம் உடைந்த லக்ஷ்மி ஆவேசமாக அவன் சட்டையைப் பற்றி, “உனக்கு இந்த சொத்து தான் வேணும்னா அதை எங்க கிட்ட கேட்டு இருக்க வேண்டியது தானே டா… நீ ஒரு வார்த்தை கேட்டா நாங்க மாட்டோம்னு சொல்லி இருப்போமா டா? ஆனா நீ உனக்காக நானும் உன் மாமாவும் பண்ணின எல்லாத்தையும் மறந்துட்டு எங்க பையனையே கொல்ல பார்த்து இருக்கேல்ல… ச்சீ… உன்ன என் தம்பின்னு சொல்லவும் அசிங்கமா இருக்குடா…” எனக் காரி உமிழ்ந்தார்.

 

மூர்த்தி, “உனக்கு நான் எதுல குறை வெச்சேன் லிங்கா? அப்படி இருந்தும் எங்க பையனை எங்க கிட்ட இருந்து மொத்தமா பிரிக்க முயற்சி பண்ணி இருக்க நீ…” என்றார் வருத்தமாக.

 

பிரணவ்வோ ராமலிங்கம் கூறியவற்றை எல்லாம் கேட்டு முடித்த பின்னும் எதுவும் கூறாமல் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

 

அவன் அருகில் சென்ற லக்ஷ்மி, “பிரணவ் கண்ணா… இந்த வயித்துல உன்ன பத்து மாசம் சுமந்து பெத்துக்குற பாக்கியத்தை பெறலன்னாலும் நீ தான் கண்ணா எங்க பையன்…எங்க ரெண்டு பேருக்கும் நீ தான்பா எல்லாமே… நீ நல்லா இருக்கணும்னு உனக்காக பணம் சேர்த்து வைக்க நெனச்சோமே தவிர நீ இப்படி பாசத்துக்காக ஏங்குவன்னு நினைக்கலப்பா… அம்மாவ நம்பு பிரணவ்… உன் மேல அம்மா உயிரையே வெச்சிருக்கேன்… சத்தியமா உன்ன நாங்க அநாதையா பார்க்கலப்பா… அம்மாவை நம்பு பிரணவ்…” எனக் கண்ணீர் வடித்தவர் இரத்த அழுத்தம் அதிகரித்து அப்படியே மயங்கிச் சரிய, “லக்ஷ்மி…” “அக்கா…” “மேடம்…” என மூர்த்தி, ராமலிங்கம், ஆகாஷ் மூவருமே அவரிடம் ஓடினர்.

 

ராமலிங்கத்தின் முன் கை நீட்டி தடுத்த மூர்த்தி, “உன்ன எங்க குடும்பத்துல ஒருத்தனா பார்த்துக்கிட்டதுக்கு நீ எங்களுக்கு பண்ணினது வரை போதும்… தயவு செஞ்சி இனிமே எங்க மூஞ்சில கூட முழிக்காதே… இங்க இருந்து போயிடு… இதுக்கு மேல ஒரு நிமிஷம் நீ இங்க நின்னாலும் நான் போலீஸை கூப்பிட்டு உன்ன உள்ள தள்ளுவேன்…” என எச்சரிக்கவும் அனைவரையும் முறைத்து விட்டு அங்கிருந்து சென்றார் ராமலிங்கம்.

 

இத்தனை களேபரம் நடந்தும் முகத்தில் எந்த உணர்வும் காட்டாது வெறித்திருந்த பிரணவ் திடீரென எழுந்து நின்று, “ஆகாஷ்… டோன்ட் ஃபாலோ மீ…” என்று விட்டு வேகமாக கிளம்பினான்.

 

************************************

 

காலையிலிருந்தே அனுபல்லவி பிரணவ்விற்கு பல முறை அழைத்தும் அவளின் எந்த அழைப்புமே ஏற்கப்படவில்லை.

 

அனுபல்லவிக்கு அவனை நினைத்து உள்ளம் அடித்துக்கொண்டது.

 

“அவர் ஏன் கால் அட்டன்ட் பண்ண மாட்டேங்குறார்? காலைல ஆஃபீஸ்ல ரொம்ப உடஞ்சி போய் இருந்தாரே… அவரைப் அப்படி பார்க்கவே முடியல…” எனக் கலங்கிய அனுபல்லவி மீண்டும் பிரணவ்விற்கு அழைக்க முயற்சிக்க, இம்முறையும் அழைப்பு ஏற்கப்படவில்லை.

 

வேறு வழியின்றி ஆகாஷிற்கு அழைத்தாள் அனுபல்லவி.

 

மறுபக்கம் ஆகாஷ் அழைப்பை ஏற்றதும், “அ…அண்ணா… அது… சார் எங்க இருக்கார்?” என அனுபல்லவி கேட்கவும் குழம்பிய ஆகாஷ், “அனு… என்னாச்சுங்க?” எனக் கேட்டான்.

 

அனுபல்லவி, “சாருக்கு ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்… பட் அவர் கால் அட்டன்ட் பண்ணவே இல்ல… அதான் சார் எங்க இருக்காருன்னு உங்களுக்கு தெரியுமான்னு கேட்க தான் கால் பண்ணேன்…” என்றாள்.

 

ஆகாஷும் ஆரம்பத்திலிருந்தே பிரணவ்வும் அனுபல்லவியும் ஒருவரையொருவர் காணும் போது இருவரின் முகத்திலும் தெரியும் மலர்ச்சியை அவதானித்திருந்தான்.

 

இப்போது அனுபல்லவி கேட்கவும் அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் எனப் புரிந்துகொண்ட ஆகாஷ், “பாஸ் எங்க போனார்னு எனக்கும் தெரியலங்க… ரொம்ப அப்சட்டா கிளம்பி போனார்… அவரை ஃபாலோ பண்ண வேணாம்னு என் கிட்ட சொன்னார்…” என்கவும், “ஓஹ்… உ…உங்களுக்கும் தெரியலயா?” எனக் கேட்டாள் அனுபல்லவி வருத்தமாக.

 

“எக்சேக்டா தெரியலம்மா… ஆனா பாஸ் கவலையா இருக்கும் போது அவரோட பீச் ஹவுஸ் போவார்… அநேகமா அங்க தான் இருப்பார்னு நினைக்கிறேன்…” என ஆகாஷ் கூறவும் மகிழ்ந்த அனுபல்லவி, “எனக்கு உடனே அந்த பீச் ஹவுஸ் அட்ரஸை அனுப்புறீங்களா? ப்ளீஸ்…” என்கவும் சரி என அழைப்பைத் துண்டித்த ஆகாஷ் உடனே அனுபல்லவியின் எண்ணுக்கு அந்த முகவரியை அனுப்பி வைத்தான்.

 

ஆகாஷ் மனமோ, ‘இந்தப் பொண்ணால மட்டும் தான் பாஸ் முகத்துல பழைய சிரிப்பை கொண்டு வர முடியும்னு நம்புறேன்…’ என வேண்டியது.

 

இவ்வளவு நேரமும் ஏதோ இழந்ததைப் போல் சுற்றிக் கொண்டிருந்த தோழி திடீரென மிகுந்த மகிழ்வுடன் காணப்படுவதைப் புரியாமல் பார்த்த சாருமதி, “என்னாச்சு அனு? யார் கால்ல?” எனக் கேட்கவும், “சாரு… நான் கொஞ்சம் அர்ஜென்ட்டா வெளிய போய்ட்டு வரேன்… நீ எனக்காக வெய்ட் பண்ணாம தூங்கு…” என்று விட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேற, “ஹேய் அனு… இந்த நைட் டைம்ல எங்க டி போற? சொல்லிட்டு போடி…” என சாருமதி கத்தியது எதுவும் அனுபல்லவியின் செவிகளை எட்டவில்லை.

 

தன்னவனை உடனே காண வேண்டும் என்ற பதட்டத்தில் முன்பு பேரூந்தில் செல்லும் போது இருந்த பயம் எதுவுமின்றி அவசரமாக பேரூந்தில் ஏறி ஆகாஷ் அனுப்பிய முகவரியை சென்றடைந்தாள் அனுபல்லவி.

 

************************************

 

ஆகாஷிடம் தன்னைப் பின் தொடர வேண்டாம் என்று கட்டளை இட்ட பிரணவ் நேராக சென்றது தன் பீச் ஹவுஸிற்கு தான்.

 

கடற்கரை ஓரமாக நடந்தவனின் கால்களை அலைகள் முத்தமிட்டுச் செல்ல, ஆனால் அவனின் மனமோ அமைதியடைய மறுத்தது.

 

உடனே கடலில் இறங்கி தண்ணீருக்கு அடியில் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு சில நிமிடங்கள் இருந்த பிரணவ்வின் மனமோ இந்த நிமிடமே இந்த ஆழ்கடலில் மூழ்கி தான் இறந்து போக மாட்டோமா என வேண்டியது.

 

அந்த அளவு மனமுடைந்து காணப்பட்டான் பிரணவ்.

 

எதிலுமே மனம் லயிக்கவில்லை.

 

தற்கொலை செய்யக் கூட மனதில் துணிச்சல் வேண்டுமாமே. அதற்கு கூட வழியின்றி தண்ணீரில் இருந்து வெளியே வந்த பிரணவ் கடல் மணலில் படுத்துக் கொண்டான்.

 

நினைவு தெரிந்த நாளில் இருந்தே யாரின் அன்புக்காக அவன் ஏங்கினானோ அவர்களே தனக்கு சொந்தம் இல்லை என்பதை அறிந்ததும் துடித்துப் போனான் பிரணவ்.

 

இத்தனை வருடங்களும் செல்லும் இடம் எல்லாம் பிரணவ் ராஜ் எனத் தன்னைப் பெருமையாக அறிமுகப்படுத்தியவனின் பெயரில் பாதியே அவனுக்கு சொந்தமில்லை என்ற உண்மை கசந்தது.

 

பெற்றோரை விட தன் மேல் அதிகம் பாசத்தை பொழிந்த மாமாவிற்கு தன் மேல் இவ்வளவு வெறுப்பு இருந்து இருக்கிறது என்ற உண்மையை பிரணவ்வால் ஏற்க முடியவில்லை.

 

பல எண்ணங்களுடன் வானத்தை வெறித்துக் கொண்டிருந்த பிரணவ் அவனே அறியாமல் உறங்கிப் போனான்.

 

சில மணி நேரங்கள் கழித்து மெதுவாகக் கண் விழிக்க, நன்றாகவே இருட்டி இருந்தது.

 

எழுந்து மணலில் கையூன்றி அமர்ந்த பிரணவ்விற்கு காலை நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நினைவு வந்து அவனை வருத்தியது. 

 

“ப…பல்லவி… பல்லவிக்கும் இந்த நேரம் என்னைப் பத்தின எல்லா உண்மையும் தெரிஞ்சி இருக்கும்ல… ஒ… ஒருவேளை அவளும் என்னை விட்டு போயிடுவாளா?” எனத் தன்னையே கேட்டுக் கொண்டவனை தலைவலி பிய்த்துத் தின்றது.

 

“ஆஹ்…” என வலியில் அலறிய பிரணவ் அங்கிருந்து எழுந்து வீட்டை நோக்கி நடந்தான்.

 

தன் மனதில் உள்ள வலியை கொஞ்சம் நேரமாவது மறப்பதற்காக கப்போர்ட்டிலிருந்து மது பாட்டில்களை எடுத்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தான்.

 

ஒரு பாட்டிலைத் திறந்து வாயில் சரிக்கச் செல்லும் போதே வாசலில், “பிரணவ்…” என்ற அனுபல்லவியின் குரல் கேட்கவும் அவள் பக்கம் திரும்பினான் பிரணவ்.

 

அனுபல்லவியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மதுபாட்டிலை மீண்டும் கையில் எடுத்த பிரணவ் அவளைப் பார்க்காமலே, “நீ எதுக்கு இங்க வந்த?” எனக் கேட்டான்.

 

அவனை நெருங்கிய அனுபல்லவி, “என்ன பண்ணுறீங்க பிரணவ்? எதுக்காக இப்போ குடிச்சி உடம்பைக் கெடுத்துக்க போறீங்க?” எனக் கேட்டாள் கோபமாக.

 

பதிலுக்கு கசந்த புன்னகையை உதிர்த்த பிரணவ், “ஆல்ரெடி கெட்டுப் போன உடம்பு தானே… அதான் பேப்பர் நியூஸ்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சே… இதுக்கு மேல இந்த உடம்புக்கு என்ன நடந்தாலும் யாருக்கு நஷ்டம்?” என்றான் விரக்தியாய்.

 

அனுபல்லவி, “அதுக்காக குடிச்சி உங்களை நீங்களே அழிச்சிப்பீங்களா? இதைக் குடிச்சன்னு உங்களுக்கு என்ன கிடைக்க போகுது?” எனக் கோபமாகக் கேட்கவும் மறு நொடியே பிரணவ்விடமிருந்து, “நிம்மதி… ஆறுதல்… என் மனசுல உள்ள வலி கொஞ்சமாவது இது மூலமா குறையும்…” என்ற பதில் வந்தது.

 

அவனின் கலங்கியிருந்த கண்களைக் கண்டு மனம் பொறுக்காமல், “இதைக் குடிச்சா உங்க வலி போயிடுமா பிரணவ்?” என அனுபல்லவி வருத்தமாகக் கேட்கவும், “வேற என்ன தான் என்னைப் பண்ண சொல்ற பல்லவி?” என அவளின் முகம் பார்த்து கத்திய பிரணவ்வின் விழிகள் கண்ணீரை சிந்தின.

 

அனுபல்லவியிடமிருந்து மௌனமே பதிலாய் கிடைக்கவும், “சொல்லு பல்லவி… இந்த வலியை மறக்க இதை விட்டா வேற என்ன வழி இருக்குன்னு சொல்லு… உன்னால முடியுமா இந்த வலியை மறக்க வைக்க? முடியல டி… ரொம்ப வலிக்கிது…” எனக் கவலையுடன் கூறிய பிரணவ்வின் இதழ்கள் மறு நொடியே அனுபல்லவியின் இதழ்களினால் சிறை செய்யப்பட்டன. 

 

இருவருக்கும் முதல் இதழ் முத்தம்.‌ அவ் இதழ் முத்தத்தை ஆரம்பித்தது என்னவோ அனுபல்லவி தான். ஆனால் அது உடனே பிரணவ்வின் ஆட்சியாகி அவளுள் இன்னும் இன்னும் மூழ்கிப் போக முயன்றான்.

 

பிரணவ்வின் கன்னங்களைத் தாங்கியிருந்த அனுபல்லவியின் கரங்கள் மெதுவாகக் கீழிறங்கி அவனின் சட்டை பட்டனை மேலிருந்து ஒவ்வொன்றாகக் கழற்றவும் தன்னிலை அடைந்த பிரணவ் கஷ்டப்பட்டு தன்னிடமிருந்து அவளைப் பிரித்தாள்.

 

பிரணவ்வின் மடியில் அமர்ந்து அவன் முகத்தைக் கேள்வியாக நோக்கிய அனுபல்லவியை அதிர்ச்சியாகப் பார்த்த பிரணவ், “ப…பவி… எ…என்னப் பண்ணுற நீ?” எனக் கேட்டான்.

 

அவனின் பிரத்தியேகமான அழைப்பில் கண்களில் காதல் சொட்ட பிரணவ்வின் விழிகளுடன் தன் விழிகள் கலந்த அனுபல்லவி, “உங்க வலியை மறக்க வைக்க என்னால முடிஞ்சது…” என்றவள் மீண்டும் அவனின் இதழ்களை சிறை பிடிக்கவும் வலுக்கட்டாயமாக அவளைத் தன்னை விட்டுப் பிரித்த பிரணவ், “பைத்தியமா பல்லவி உனக்கு? நீ என்ன பண்ணுறன்னு தெரிஞ்சி தான் பண்ணுறியா? வே…வேணாம்… நீ போயிடு இங்கிருந்து…” என்றான் எங்கோ பார்த்தபடி.

 

பிரணவ்வின் தாடையைப் பற்றி தன் முகம் காண வைத்த அனுபல்லவி, “எனக்கு எதைப் பத்தியுமே கவலை இல்ல பிரணவ்… இப்போ எனக்கு தெரியிறது எல்லாம் உங்க வலி… வலி மட்டும் தான்… உங்களை இப்படி உடஞ்சி போய் என்னால பார்க்க முடியல… அந்த வலியைப் போக்க நான் எந்த எல்லைக்கும் போவேன்… பிகாஸ் ஐ லவ் யூ மோர் தென் எவ்ரித்திங்… என்ன நடந்தாலும் எப்படியான நிலமையாக இருந்தாலும் உங்களுக்கு நான் இருக்கேன்… பிரணவ்வுக்காக எப்பவுமே அவனோட பல்லவி இருப்பா…” எனக் காதலுடன் கூறவும் பிரணவ்வின் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கின.

 

‘இவள் என்னவள்… எனக்கானவள்‌..‌. எனக்கு என் பவி இருக்கா…’ என்ற எண்ணம் பிரணவ்வின் மனதில் ஆழப் பதிந்தது.

 

கண்ணீருடன் தன்னையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்த தன்னவனின் கன்னம் பற்றிய அனுபல்லவி, “ஐ லவ் யூ பிரணவ்…” என்று அவனின் அதரங்களை சிறைப் பிடிக்க, தன்னவளின் இதழ்த் தேனை இம்முறை விரும்பியே சுவைத்தவன் அவளுள் புதைந்து போனான்.

 

வெகுநேரம் நீடித்த இதழ் முத்தம் இருவரையும் அடுத்த கட்டம் நோக்கிப் பயணிக்கத் தூண்ட, அனுபல்லவியைத் தன்னை விட்டுப் பிரிக்காமலே மெதுவாக அவளைக் கரங்களில் ஏந்திக்கொண்டு அறையை நோக்கி நடந்தான் பிரணவ்.

 

மென் பஞ்சு மெத்தையில் தன்னவளை மெதுவாக கிடத்திய பிரணவ் அவள் மேல் படர்ந்து கழுத்தில் முகத்தைப் புதைத்தான்.

 

அனுபல்லவி, “பி…பிரணவ்…” எனத் தயக்கமாக அழைக்கவும், “பவி… நி…நிஜமாவே உனக்கு சம்மதமா?” என அவளின் கண்களைப் பார்த்து கேட்ட பிரணவ்வின் கண்களில் தெரிந்த ஏக்கம் அனுபல்லவியின் கன்னத்தை வெட்கத்தில் சிவக்கச் செய்து முகத்தில் மென் முறுவல் தோன்றியது.

 

அனுபல்லவியின் முகமே அவளின் பதிலைக் கூறவும் மகிழ்ந்த பிரணவ் மறு நொடியே தன்னவளை முத்தங்களால் அர்ச்சிக்கத் தொடங்கினான்.

 

பிரணவ்வின் விரல்கள் அனுபல்லவியின் உடலில் அத்துமீற, விரும்பியே அவனுக்குள் தொலைந்தாள் அனுபல்லவி.

 

விடியும் வரையுமே தம் இணைகளுக்குள் தம்மைத் தொலைத்து, ஆடை இழந்த மேனிகளுக்கு ஒருவருக்கொருவர் தாமே ஆடையாகி, ஈருடல் ஈருயிராக இருந்தவர்கள் ஈருடல் ஓருயிராக மாறி, தன் காதலால் தன்னவனின் வலியை மறக்கச் செய்யும் நோக்கில் அவளும், தன்னவளின் காதலில் அனைத்தையும் மறக்கும் மாயத்தில் தன்னையே தொலைக்க விரும்பி அவனும் கூடலில் திளைத்தனர்.

 

லேசாக அறையில் வெளிச்சம் படரத் தொடங்கவும் தன்னவளை விட்டுப் பிரிந்த பிரணவ் அவளின் பிறை நுதலில் அழுத்தமாக இதழ் பதித்து இராப் பொழுதில் தொடங்கிய கூடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

 

அனுபல்லவியை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்ட பிரணவ் காற்று கூட இருவருக்கும் இடையில் புக இயலாதவாறு எங்கு தன்னவளை விட்டால் அவள் மாயமாக மறைந்து விடுவாளோ என்ற பயத்தில் அனுபல்லவியை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்