Loading

              மேலும் பத்து நாட்கள் கடந்திருக்க, அந்த பத்து நாட்களும் சித்துவும், கவினும்  அலுவலகத்தில்தான் குடியிருந்தனர் எனலாம். கடைசி நேரத்தில் நேர்ந்த தவறால் அந்த பிராஜக்ட் கைவிட்டு போவது போல இருக்க, சித்தார்த் இன்னும் பத்தே நாட்களில் புதிய பிராஜக்டே செய்து தருவதாக பேசி ஒப்புக் கொள்ள செய்திருந்தான்.

அலுவலகத்தில் உள்ள திறமை வாய்ந்த நபர்களை கவின் டீமிற்கு மாற்றியவன் தானும் உடனிருந்து பணிகளை கவனிக்க யாருக்கும் மறுப்பு கூற வழியில்லாமல் போனது. ஆனால் சில நாட்களிலே அவனது திறமை பற்றியும், கவினின் திறமையையும் புரிந்து கொண்ட மற்றவர்களும் இயல்பாக ஒத்துழைக்க வேலை தொய்வின்றி நடந்தது.

அலுவலகத்தின் மற்றொரு புறம் புறணி பேசும் வேலைகளும் நடந்து கொண்டிருக்க, சித்து அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. கவினுக்கு தனது நண்பனை நினைத்து ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் இருந்தது. சித்து பொறுப்பிற்கு வந்த அன்று நடந்ததை நினைத்து பார்த்தான் கவின்.

கவின் கோபத்தில் வீட்டிற்கு சென்று சித்துவிற்கு காத்திருந்த போதே கண்ணயர்ந்திருக்க மறுநாள் காலையில் எழுந்து பார்த்தவன், “அப்ப இன்னும் அவன் வரலயா? எங்க போயிருப்பான்?” என யோசித்துக் கொண்டே உள்ளே செல்ல மெத்தையில் தூங்கி கொண்டிருந்தான் சித்து.

வேகமாக சென்று அவனை எழுப்பியவன், “டேய். எப்படா வீட்டுக்கு வந்த. வந்ததும் என்ன எழுப்ப வேண்டியதுதானே?” எனக் கேட்க, “நான் அப்பவே வந்துட்டேன்டா. நல்லா தூங்கிட்டு இருந்தனு நான் எவ்ளோ சமத்தா படுத்துட்டேன். இப்ப எதுக்கு நீ என்ன இவ்வளவு காலைல எழுப்பற?” எனக் கேட்டான் சித்து.

“ஆமாமா உங்களை இவ்வளவு காலைல எழுப்பியிருக்க கூடாது. ஏன்னா, நேத்து வர நீங்க தொழிலாளி. இப்ப முதலாளி இல்ல. சோ எப்ப வேணா ஆபிஸ் போலாம். தூங்குங்க சார். நான் போய் ரெடி ஆகறேன்.” என கவின் கூறியதும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான் சித்து.

“ஆமாடா. இதை மறந்துட்டேன் பாரு. ஆனா ஒன்னு தெரியுமா. என் காலேஜ் டேய்ஸ்க்கு அப்பறம் நான் ரொம்ப ரிலாக்ஸ்டா இருந்தது இங்க வந்ததுக்கு அப்பறம்தான். டெய்லி வேலைக்கு போனமா, வீட்டுக்கு வந்தோமா, மாசமானா சம்பளத்தை வாங்கினோமா, வீக் எண்டுக்கு வெளில போனமான்னு இருக்கலாம்.

இனிமே அப்படி இல்ல. எவ்ளோ லாபம் வருது. எவ்ளோ நஷ்டம் வருது. பை ஷீட் டேலி ஆகுதா இல்லையா. ஆப்போசிட் கம்பெனி என்ன லான்ச் பண்ணுவாங்க. மார்க்கெட் வேல்யூ ஏறுதா இல்ல இறங்குதானு எல்லாத்தையும் பார்க்கனும். ரொம்ப கஷ்டம் இல்ல மச்சி.” என்றான் சித்து.

“ஏண்டா ஊர்ல பாதி பேரு எப்படி தொழிலதிபர் ஆகலாம்னு ரூம் போட்டு யோசிச்சிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா மாச சம்பளம் வாங்கறது பெஸ்ட்னு சொல்லிட்டு இருக்க?” என கவின் கேட்க, “எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை கான்செப்ட் தான். இரு வந்தடறேன்.” என்ற சித்து குளியலறைக்குள் செல்ல கவின் சமையலறைக்கு சென்றான்.

பதினைந்து நிமிடத்தில் தயாராகி சித்து வரவேற்பறைக்கு வர, கவின் தேநீரோடு அங்கு வந்தான். “என்ன மச்சி. இவ்ளோ சீக்கிரம் எங்க கிளம்பற?” என ஆச்சர்யமாக கேட்க, “வேற எங்க. ஆபிஸ்க்கு தான்டா.” என்றவாறே தேநீரை பருக, “ஏன் இன்னிக்கு வாட்ச்மேன் எதுவும் லீவ்ல போறாரா? நீ போய் கேட் தொறக்க போறீயா?” என நக்கலடித்தான் கவின்.

“அடப்பாவி. காலைல எழுப்பி நீ இப்ப எம்.டினு சொல்லிட்டு இப்ப இப்படி இறக்கிட்டியேடா. ஆனாலும்.” என சித்து இழுக்க, “என்ன இப்ப அந்த வாட்ச்மேன் கூட எவ்வளவு நிம்மதியா இருப்பாரு. என்ன பாருன்னு.. மறுபடி லெக்சர் குடுக்க போறீயா? அப்பா. சாமி. நீ ஆபிஸ்க்கே கிளம்பு.” என கவின் கூற சிரித்தபடியே வெளியில் சென்றான் சித்து.

அவனோடே வெளியில் வந்தவன், “என்னடா பைக் எடுக்கற? நான் எப்படி வரது?” என கவின் கேட்க, “ஷார்ப்பா எட்டறை மணிக்கு ரெடியா இரு. நான் உனக்கு வண்டி அனுப்பறேன்.” என்றவாறே கிளம்பி விட்டான் சித்து.

‘யாரிடமாவது பைக்கை குடுத்தனுப்ப போகிறானா.’ என யோசித்தபடியே கவின் கிளம்பி வெளியில் வர, புன்னகை முகத்தோடு அங்கு ஸ்கூட்டியில் நின்று கொண்டிருந்தாள் ஸ்ரேயா. ‘அடப்பாவி. இப்படி கோர்த்து விட்டுட்டானே.’ என நொந்து கொண்டவன், “உன்னை யாரு வர சொன்னது?” எனக் கேட்டான்.

ஸ்ரேயாவோ, “வேற யாரு நீதானே கவின் ‘என்ன பிக்கப் பண்ணிக்க முடியுமான்னு.’ மெஸேஜ்  பண்ணியிருந்த. அதான் வந்தேன்.” என்க, கவின் எடுத்து பார்க்க அவனது மொபைலில் இருந்து வேலைக்கு செல்வதற்கு முன்பே சித்துதான் அவளுக்கு மெஸேஜ் செய்திருந்தான்.

‘இவனை.’ என பல்லைக்கடித்தவன், “ஏதோ நியாபகத்துல மறந்துட்டேன் போலாமா?” எனக் கேட்டுக் கொண்டே ஏறி அமர வண்டி கிளம்பியது. ஏதேதோ பேசிக் கொண்டே வந்தவள், “அப்பறம் கவின் ட்ரீட் எப்போ?” எனக் கேட்டாள் ஸ்ரேயா.

கவின், “எதுக்கு ட்ரீட்?” எனக் கேட்கும்போதே கம்பெனி வந்திருக்க, “அதான் நீ டீம் லீடரா புரோமோட் ஆகிட்டல்ல. அதுக்குதான்.” என ஸ்ரேயா கூறவும், ‘இதைப்பத்தி கேட்கதானே நைட் அவனுக்காக வெயிட் பண்ணோம். காலைல ஏதேதோ பேசி அதையே மறக்க வைச்சுட்டான். கேட்கனும்.’ என யோசித்தவன், “வைச்சரலாம்.” என்றபடியே உள்ளே சென்றான்.

உள்ளே சென்றவன் எப்போதும் போல அவனிடத்திற்கு சென்று பார்க்க, அங்கு சித்து இல்லாமல் இருக்கவும் அவனது அறைக்கு போய்விட்டானோ என நினைத்தால் சிரித்த முகமாக அங்கு வந்து கொண்டிருந்தான் சித்து. “எங்கடா போயிட்டு வர?” என கவின் கேட்க, “ஒன்னும் இல்லடா. சும்மா நர்ஸ் ரூம் வரைக்கும்.” என பதில் கொடுத்தான் சித்.

“அங்க எதுக்கு இப்ப போன நீ?” என கவின் கேட்க, “அங்க ஏதாவது ஃபெசிலிட்டி வேணுமானு கேட்கதான். தொழிலாளர் நலமே நம் நலமல்லவா.” என ஏற்ற இறக்கத்துடன் கூற, அவனை முறைத்த கவின், “நீ உன் நலத்துக்காக தான் போயிருக்கன்னு நல்லா தெரியுது. வா.” என்க.. அதற்கு பின் வேலைகளை கவனித்தனர் இருவரும்.

அன்றைய நாள் இரவில் தான் சித்திடம் கவினால் பேசவே முடிந்தது. “நேத்துல இருந்து இதை கேட்கனும்னு பார்க்கறேன். ஆனா முடியல. நீ எம்.டி ஆனதுக்கு என்ன ஏண்டா டீம் லீடர்னு சொன்ன. ஆபிஸ்ல எல்லாரும் செம காண்டுல இருக்கானுங்க.” என சலித்துக் கொண்டான் கவின்.

“ஓ. அப்படியா மச்சி. சாரிடா. நாளைக்கே நான் போய் நீயும் இந்த கம்பெனில பார்ட்னர். வெளில தெரிய வேணாம்னு டீம் லீடர்னு சொல்லிட்டேன். இனி நீதான் முதலாளின்னு சொல்லிடவா?” என சித்து சிரிக்காமல் கேட்க, கவினோ பேந்த பேந்த விழித்தபடி, “டேய் மச்சி. இன்னும் என்ன பிளான்லாம் வைச்சு இருக்கனு சொல்லிடுடா. நான் அன்னைக்கே சொன்ன மாதிரி இப்படில்லாம் பேசினா உன் கூடவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.” என்றான் கவின்.

“அதான் நீ சொல்லிட்டல்ல. விடு. இப்ப இந்த பிராஜக்ட் ரொம்ப முக்கியம்டா. அதுக்கு நீ ரொம்ப முக்கியம். ப்ளீஸ். புரிஞ்சுப்பன்னு நினைக்கறேன். நாம இதை சக்ஸஸ் பண்ணிட்டு அப்பறமா டிஸ்கஸ் பண்ணலாம் சரியா? இன்னிக்கு கிளையண்ட் மீட்டிங் வேற இருக்கு.” எனக் கேட்கவும் கவினும் தலையாட்டினான்.

எப்படியும் ஒரு மாதம் அளவிற்கு நேரம் இருக்கும் முடித்து விடலாம் என நினைத்த கவினுக்கே இறுதியில் பத்தே நாட்களில் முடிப்பதாக சித்து ஒப்புக் கொண்டது அதிர்ச்சியாகதான் இருந்தது. ஆனால் சித்து தெளிவாக இருந்தான். அழகாக திட்டமிட்டு இதோ இன்னும் சற்று நேரத்தில் வெற்றிகரமாக பிராஜக்ட்டை முடிக்க போகின்றனர். இதனால்தான் சித்துவின் மீது பெருமையாக உணர்ந்தான் கவின்.

            அதே நேரம் சென்னையில், சந்துரு தனது அறையில் மகியிடம் ஏதோ வம்பு பேசி சீண்டி கொண்டிருந்தான். இந்த வாரத்திலேயே மூன்று நாட்கள் மகி உணவு எடுத்து வந்திருக்க, இன்றும் அது போல எடுத்து வந்தவள், அவன் உணவருந்தியதும் டப்பாவை வாங்க அறைக்கு வந்திருந்தாள் மகி. அப்போது அவன், “மகி நாளைல இருந்து எனக்கு நீ சாப்பாடு எடுத்துட்டு வர வேணாம்.” என்றான்.

“ஏன். எங்காவது வெளில போறீங்களா?” என மகி கேட்க, “அதெல்லாம் இல்ல. அடிக்கடி நீ எடுத்துட்டு வரது ஒரு மாதிரி இருக்கு. வேண்ணா டெய்லியும் எடுத்துட்டு வந்துட்டு ஆன்ட்டியை காசு வாங்கிக்க சொல்றீயா?” என சந்துரு கேட்கவும், அவனை ஏகத்துக்கும் முறைத்தவள், “சோ. உங்ககிட்ட இருக்கற காசை வாங்கதான் நான் சாப்பாடு எடுத்துட்டு வரேனா?” என கேட்டு வைத்தாள் மகி.

“ஹேய். நான் எப்ப அப்படி சொன்னேன். ஆன்ட்டிக்கும் கஷ்டம். உனக்கும் கஷ்டம். என்னைக்காவது யாருக்கு கொண்டு போறன்னு கேட்டா. எங்க எம்.டிக்குனு சொல்லுவ. அப்ப தப்பா நினைக்க மாட்டாங்களா? முதலாளின்னு சொல்லிகிட்டு இப்படி ஓசி சாப்பாடு சாப்பிடறானு.” என்றான் சந்துரு.

அதில் கோபம் வர, “அப்படில்லாம் யாரும் நினைக்க மாட்டாங்க. அப்பறமும் நீங்க ஓனர்னு நான் சாப்பாடு எடுத்துட்டு வரேனா, இதெல்லாம் ஒரு ஃப்ரண்ட்ஷிப்ல பண்றது. ரொம்ப பண்ணாதீங்க. வேணாம்னா நேராகவே சொல்லலாம்.” என மகி கூறவும், அவளை அமைதிப்படுத்தினான் சந்துரு.

“நிஜமாலும் நீ என்ன ஃப்ரண்டா நினைக்கறீயா?” என சந்துரு கேட்கவும்.. “ஆமா. இதுல ஏன் இவ்ளோ டவுட் உங்களுக்கு?” என்றாள் மகி சாதாரணமாக. “ஏன்னா. எனக்கு பெருசா ஃப்ரண்ட்ஸ்லாம் இல்ல மகி. அதான் கேட்டேன்.. வேற ஒன்னுமில்ல. ஓகே.. ப்ரண்ட்ஸ்.” என்றபடி சந்துரு தனது கரங்களை நீட்ட மகியும் அவனது கரங்களை பற்றினாள்.

அந்த நேரம் பார்த்து சரியாக நிரஞ்சனி உள்ளே வந்தாள். மகியும் சந்துருவும் கைகுலுக்கி கொண்டிருப்பதை அறியாமல் வேகமாக, “அங்க என்னடான்னா உங்கண்ணன் ஒரு கம்பெனியையே விலைக்கு வாங்கி நடத்திட்டு இருக்கான். நீ என்னடான்னா கண்டவளோட கையை பிடிச்சு கொஞ்சிகிட்டு இருக்க? என்ன பார்த்தா எப்படி இருக்கு உங்களுக்கு.” என கோபத்தில் கத்தினாள்.

அவள் கூறியதில் வேகமாக தனது கைகளை விலக்கி கொண்ட மகிக்கு அவமானத்தில் முகம் சிவந்தது. மகி அனைவருடனும் எதார்த்தமாக பழகுபவள் அதுபோலதான் சந்துருவிடமும் ஒரு நட்பு ரீதியில் பழகி கொண்டிருந்தாள்.

அதனால் நிரஞ்சனி அப்படி கூறியதும் முகம் சுருங்கி விட்டது மகிக்கு. அவளது முகத்தை பார்த்த சந்துருவிற்கு இன்னும் கோபம் அதிகரிக்க, “நான் ஆபிஸ்ல இருக்கப்ப நீங்க வரக்கூடாதுனு சொல்லி இருக்கேன்ல. இப்ப எதுக்கு இங்க வந்து கத்திட்டு இருக்கிங்க. முதல்ல வெளில போங்க.” என்றான் சந்துரு.

மகியின் முன்னால் வைத்து அவன் அவ்வாறு கூறியதும், நிரஞ்சனியின் கோபமும் அதிகரிக்க, “இன்னேரம் எல்லாம் சரியா நடந்திருந்தா இது என்னோட கம்பெனி. எவ்ளோ தைரியம் இருந்தா இவ முன்னாடி என்ன வெளில போக சொல்லுவ.” என்றாள் நிரஞ்சனி.

“உங்க முன்னாடி அவள வெளில போக சொல்லிருந்தா தான் தப்பு. அவ இங்க ஸ்டாப். நான் எம்.டி. எங்க இரண்டு பேருக்கும் இங்க இருக்க உரிமை இருக்கு. அதான் நீங்களே சொல்லிட்டிங்களே. எல்லாம் சரியா நடந்திருந்தானு. அதான் நீங்க நினைச்சது எதுவும் நடக்கலயே!” என்றான் சந்துரு நக்கலாக.

அதன்பிறகு, சந்துரு இருக்க சொல்லியும் மகி தான் வெளியில் இருப்பதாக கூறி வெளியே வந்து விட்டாள். தனது இடத்திற்கு வந்தும் அவளுக்கு படபடப்பு அடங்கவில்லை. அங்கு வந்த ராகினி அவளுக்கு தண்ணீர் கொடுக்கவும், “அவங்க என்ன தப்பா நினைச்சுட்டாங்க போல ராகினி.” என்றாள் மகி.

“எங்கையும் இப்படிதான் மகி. நீ என்னதான் எதார்த்தமா சந்துரு சார்கிட்ட பழகினாலும் ஆபிஸ்லயே பாதி பேரு உன்ன சந்தேக கண்ணோட தான் பார்க்கறாங்க. அவ்ளோதான் அவங்க புத்தி விடு. சந்துரு சார் பணக்காரராக இருக்கறதால நம்மள மாதிரி ஆளுங்க சாதாரணமா பேசினா கூட தப்பாதான் பார்க்கும் இந்த உலகம். ப்ரீயா விடு” என்ற ராகினியின் கூற்றில் அதிர்ந்து போய் அவளை பார்த்தாள் மகி.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்