Loading

               சித்தார்த்தை புதிய எம்.டி என பாஸ் கைகாட்டியதும், கவினை தவிர மற்ற அனைவருமே அதிர்ச்சியை முகத்தில் வெளிப்படையாகவே காட்டினர். “ஐ ஆம் சாரி சார்.” என்ற சுகிதா, “பட் என்ன ரீசன்னு தெரிஞ்சுக்கலாமா? நீங்க எம்.டினு சொல்லாததுக்கு” என சித்தை பார்த்தே கேட்டாள்.

சித்துவிற்கு பழைய நினைவுகள் வர, அதை ஒதுக்கியவன் “மேஜரா எதுவும் ரீசன் இல்ல. என்னால இந்த கம்பெனியை மேனேஜ் பண்ண முடியுமானு தெரிஞ்சிக்க தான் இங்க வேலைக்கு சேர்ந்தேன். அதோட புதுசா ஒருத்தரை எம்.டி யா அக்சப்ட் பண்ணிக்கவும் எல்லாரும் ரெடியா இருக்க மாட்டீங்கன்னு தோணுச்சு.” என்றான்.

தொடர்ந்த சித்து, “ஓகே. லீவ் இட். இப்ப விசயத்துக்கு வரலாமா?” என எழுந்து நிற்க, அவனை நடுவில் விட்டுவிட்டு அவனிடத்திற்கு வந்து அமர்ந்தார் பழைய எம்.டி. “சுகிதா இந்த கோடிங் உங்க மூலமாக தான் வெளில போயிருக்குனு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.” என்றான் சித்து.

“இல்ல சார். அது வந்து.” என சுகிதா ராகம் இழுக்கும்போதே மற்றவர்களுக்கு தவறு அவள் மீது என புரிய சற்று தளர்வாக அமர்ந்தனர். “நான் நேரடியா எதுவும் பண்ணல சார். என்னோட கவனக் குறைவான நேரத்துல இது நடந்து இருக்கனும். என்னோட வொர்க் ரெக்கார்ட்ஸ் உங்களுக்கே தெரியும்.” என்றாள் சுகிதா.

“உங்களோட வொர்க் ரெக்கார்ஸை விட இது பெரிய தப்பு. கிட்டதட்ட பினிஷிங் ஸ்டேஜ்ல கண்டுபிடிச்சிருக்கோம். இப்ப மறுபடி வேற ஒரு கோட் ரெடி பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியும்ல. இவ்ளோ நாள் உங்க டீம் மொத்தமும் செஞ்ச வேலை கெட்டு போச்சு. சோ இதுக்கு நான் ஆக்க்ஷன் எடுத்தே ஆகனும்..

நாளைல இருந்து நீங்க வேற டீம்க்கு சேன்ஜ் ஆகறீங்க. ஆனா டீம் லீடரா இல்ல. எக்ஸிகியூட்டிவா. உங்க டீம்க்கு இனி கவின் ஹெட் ஆக இருப்பாரு. உங்களோட எல்லா வேலை பத்தின தகவல்களையும் இன்னிக்குள்ள ஹேண்ட் ஓவர் குடுத்துருங்க. அப்பறம் இந்த மன்த் உங்களுக்கு சம்பளம் வராது.” என சித்து கூற அனைவரும் அதிர்ந்தனர்.

“சார் ப்ளீஸ். நான் எந்த தப்பும் பண்ணல. அப்படி இருக்கப்ப இது ரொம்ப அதிகம்.” என சுகிதா கூறவும், “இருக்கலாம் சுகிதா. ஆனா அப்பதான் இன்னொரு முறை நீங்க கேர்ஃபுல்லா இருப்பீங்க. அண்ட் இதை எல்லார் முன்னாடியும் வைச்சு சொன்னதுக்கு காரணம் இனிமேல் கம்பெனி விசயத்துல யார் அலட்சியமா இருந்தாலும் இதை விட பெருசா தான் பனிஷ்மென்ட்டும் இருக்கும்.” என்றான் சித்து.

பொறுப்பிற்கு வந்த முதல்நாளே கடுமையான நடந்து கொள்வது சித்துவுக்கும் சற்று கடினமாக தான் இருந்தது. ஆனால் சூழ்நிலை வேறாக இருக்க வேறு வழியில்லாமல் தன்னை சமாளித்துக் கொண்டவன் அடுத்தடுத்த கட்டளைகளை பிறப்பித்தான்.

புதிய எம்.டி பொறுப்புகள் அனைத்தையும் அவன் வசம் அளிக்க, அதை புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டதோடு மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்தான். அவனோடு இணைந்து உணவு உண்டவர் விடைபெற்று கிளம்பிவிட அதற்கு மேல் அலுவலகத்தில் இருக்க முடியாமல் வீட்டிற்கு கிளம்பி விட்டான் சித்து.

அதன்பிறகு அலுவலகத்திலும் வேலை எதுவும் நடக்கவில்லை. அலுவலகம் முழுக்க அவன்தான் எம்.டி என்ற விசயம் பரவி விட, எல்லோருடைய பேச்சும் சித்தை பற்றியதாகவே தான் இருந்தது. விசயம் மகிழின் காதுக்கும் வர அவள் ஆச்சர்யப்பட்டாலும், மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.

சித்தை பார்த்த சில நாட்களிலே அவன் இங்கே வேலை தான் செய்கிறான் என மகிழுக்கு தெரியவர, அவ்வளவு பெரிய கம்பெனியின் முதலாளி எதற்காக இங்கு இப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஏனோ அதை பற்றி அவனிடம் கேட்க வேண்டும் என தோன்றவில்லை.

‘இப்போது இந்த கம்பெனியை வாங்கியதால் தான் பழகுவதற்காக இங்கு வேலை செய்து கொண்டிருந்தான் போல.’ என அவளாகவே நினைத்துக் கொண்டாள். ஆனால் அலுவலகத்திலோ சிலர், “எம்.டியாக இருந்தால் ஆறு மாதம் வேவு பார்க்கலாமா?” என சிலர் புறணி பேசிக் கொண்டிருந்தனர்.

கவினும், சித்தும் முன்பே நண்பர்கள் என அறியாமல் அவனை பற்றிய பேச்சுகளும் உலா வந்தன. “கவினுக்கு என்ன தெரியும்னு அவனை டீம் லீடரா ஆக்கியிருக்காங்க. என்ன ஒரு மூனு மாசமா அவரோட ஃப்ரண்டா இருந்தா பிரமோஷனா?” என பேசிக் கொண்டிருந்தனர்.

சுகிதாவோ ஒரே நாளில் தனது பெயர் கெட்டு போனதை அறிந்து வருத்தத்திலும் அதை விட அதிக கோபத்திலும் இருந்து கொண்டே கவினிடம் தனது பணிகளை ஒப்படைத்து கொண்டிருந்தாள். இந்த பணி இல்லையென்றால் கவினும் அப்போதே கிளம்பியிருப்பான் அப்படிதான் இருந்தது அலுவலக சூழ்நிலை.

எல்லா பணிகளையும் முடித்துவிட்டு கவின் வெளியில் வர இருவர் நேரடியாகவே அவனிடம், “என்ன கவின் சித்துவுக்கு ஜால்ரா போட்டு காரியத்தை சாதிச்சுட்ட. அப்ப ஏற்கனவே அவன்தான் எம்.டினு உனக்கு தெரியுமா?” எனக் கேட்க, அவன் பதில் கூறும் முன்பே, “அது எப்படி தெரியாம இருக்கும். ரெண்டு பேரும் ஒரே வீட்ல தான் இருக்காங்க.

நீ எங்ககிட்டயும் சொல்லியிருந்தா நாங்களும் இது மாதிரி பண்ணி பிரமோஷன் வாங்கியிருப்போம்ல?” என்றான் மற்றொருவன். “டேய் சும்மா இருடா. அப்பறம் சார் அவர் ஃப்ரண்டுகிட்ட சொல்லி நம்ம வேலைக்கு ஆப்பு வச்சிடுவாரு.” என்றபடியே இருவரும் அங்கிருந்து கிளம்ப கவினுக்கு கோபமாக வந்தது சித்துவின் மீது.

அதே கோபத்தோடு அவன் வீட்டிற்கு செல்ல பூட்டியிருந்த கதவே அவனை வரவேற்றது. “எங்க போனானு தெரியலயே? இன்னைக்கு வரட்டும் அவனுக்கு இருக்கு.” என்றபடியே சோபாவில் அமர்ந்து காத்திருந்தவன் அப்படியே உறங்கிவிட அதுவரையிலும் சித்து வந்தபாடில்லை.

        அடுத்தநாள் சென்னை அலுவலகத்தில், சந்துரு தனது அறைக்கு வந்தபோது அவனது மேஜையில் ஒரு பொட்டலம் இருந்தது. பிரித்து பார்த்தால், உள்ளே டிபன் பாக்ஸில் உணவு இருந்தது. அப்போதே புரிந்து விட்டது அது யாருடைய வேலை என.

வெளியே மகியும் அதை பற்றிய நினைவில் தான் இருந்தாள். காலையில் கிளம்பும்போது, “அம்மா. லன்ச் பாக்ஸ் ரெடியா?” எனக் கேட்டுக் கொண்டே வர, “ஆமாடி. இதை மட்டும் கரெக்டா கேளு. எவ்வளவு நேரமா எழுப்பினேன். உன் ஆபிஸ்க்கு மட்டும் டைம்க்கு எழுந்து சரியா கிளம்பிடற. ஒரு ஹெல்ப் பண்றீயா?” என்றார் மீனாட்சி.

“நல்ல கேள்வி. ஆனா உனக்கு பதில் சொல்ல தான் நேரம் இல்ல. நான் சாயங்காலம் வந்து சொல்லவா. ஆமா என்ன லன்ச் இன்னிக்கு?” எனக் கேட்டுக் கொண்டே எட்டிபார்த்தவள், “ஓ வாழைப்பூ கூட்டா. சூப்பர்மா.” என்றபோது சந்துருவின் நினைவு மின்னல் போக வந்துபோக, “அம்மா. இன்னொரு பாக்ஸ் தரீயா. ப்ளீஸ்?” எனக் கேட்டாள் மகி.

“யாருக்குடி உன் ப்ரண்ட் ஆகாஷ்க்கா?” என மீனாட்சி கேட்டுக் கொண்டே இன்னொரு டப்பாவிலும் உணவை எடுத்து வைக்க, “இல்லமா. இது இன்னொரு ஃப்ரண்ட்.” என்றவாறே உணவை பையில் எடுத்து வைத்தாள் மகி.

மீனாட்சி, “இந்த ஆபிஸ்ல உனக்கு வேலையை விட நிறைய ஃப்ரண்ட்ஸ் செட் ஆகிட்டாங்க போல.” எனவும்.. “வேலையும் செட் ஆகிடுச்சுமா. வரேன். பாய்.” என்றவள் ஹாலில் இருந்த தனது தந்தையிடமும் கூறிக் கொண்டு கிளம்பினாள்.

அவளது யோசனை கலையுமாறு இண்டர்காம் ஒலிக்க, அவள் நினைத்தது போலவே சந்துரு தான். “உன்னோட லன்ச் பாக்ஸை ஏன் இங்க வச்சிருக்க?” என கிண்டலாக கேட்க.. “ம்ம். தெரியாம வச்சுட்டேன். இப்ப வந்து எடுத்துக்கறேன்.” என்றாள் மகி பதிலுக்கு.

“இப்ப வேண்டாம். ஆப்டர் லன்ச் வந்து எடுத்துக்கோ. ஆமா நீயா சமைச்ச?” என சந்துரு கேட்க, “இல்ல அம்மாதான். ஏன்?” எனக் கேட்டாள் மகி. “அப்ப ஓகே. நான் கூட நேத்து நான் கேட்கவும் நீதான் சமைச்சு கொண்டு வந்தியோனு நினைச்சு பயந்துட்டேன். இப்ப தாராளமா சாப்பிடலாம்.” என்றான் சந்துரு.

“உங்களுக்கு போய் சாப்பாடு எடுத்துட்டு வந்தேன் பாருங்க. என்ன சொல்லனும்.” என சலித்துக் கொண்டே மகி ஃபோனை வைக்க, அப்போது அவளருகில் வந்தாள் ராகினி “யார்கிட்ட பேசிட்டு இருந்த?” என்றவாறே

மகி, “ஒன்னுமில்ல சும்மாதான். நீ சொல்லு.” எனக் கேட்க, “எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்குடி.” என்றாள் ராகினி. “ஹேய். சூப்பர்பா சொல்லவே இல்ல..கல்யாணத்துக்கு அப்பறம் வேலைக்கு வருவியா? எப்ப கல்யாணம்? அவங்க என்ன பண்றாங்க?” என மகி கேட்டுக் கொண்டே சென்றாள்.

“ஹேய். ஹேய். ரிலாக்ஸ். இன்னும் டேட் பிக்ஸ் பண்ணல. வேலை பத்தி தெரியல. ஏன்னா அவங்க பெங்களூர்ல வொர்க் பண்றாங்க. ஆப்டர் மேரேஜ் அங்கேயே செட்டில் ஆகற பிளான் இருக்கும்னு நினைக்கறேன். யார்கிட்டயும் சொல்லாத சரியா?” என ராகினி கூறும்போதே அவளை சுற்றி அவளது டீம் மெம்பர்ஸ் எல்லோரும் நின்று கொண்டிருந்தனர்.

மகிதான் இவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அனைவரையும் சைகையிலே வரவழைத்திருந்தாள். “ஹேய். சூப்பர்பா. கங்கிராட்ஸ். எப்ப ட்ரீட் வைக்க போற? உங்க அவரை எங்களுக்கு அறிமுகம் செய்ய மாட்டியா? லவ் மேரேஜா இல்ல வீட்ல பார்த்தாங்களா?” என ஆளாளுக்கு கேள்விக்கணைகளை தொடுக்க ராகினி மகியை செல்லமாக முறைத்தாள்.

பழகியது சில நாட்களே என்றாலும் ராகினிக்கு மகியின் மேல் ஒரு இணக்கமான புரிதலை உருவாக்கியிருந்தது. பொதுவாக மற்றவர்களிடம் பேசுவதில் ஒருவித கூச்ச சுபாவம் இருந்ததால் நெருங்கிய நட்பு வட்டம் என அவளுக்கு அலுவலகத்தில் யாரும் இல்லை.

ஆனால் முதல் நாளில் இருந்தே மகியின் கள்ளமில்லா பேச்சு அவள்பால் ஒருவித நெருங்கிய நட்பை உணர வைத்தது. அதனால்தான் மற்றவர்களை விடுத்து முதலில் மகியிடம் அவள் இந்த விசயத்தை கூறினாள். அவளோ ரகசியமாக மற்றவர்களுக்கு கூறிவிட இப்போதும் அவள்மேல் கோபம் இல்லை ராகினிக்கு.

தனது அறையில் இருந்து எதார்த்தமாக வெளியில் பார்த்த சந்துரு எல்லாரும் கும்பலாக நிற்பதை கண்டு ஏதாவது பிரச்சனையோ என நினைத்து வெளியில் வந்தான். இவர்களோ அவன் வந்ததை கூட அறியாமல் ராகினியை கேலி செய்து கொண்டிருக்க யாருக்கும் பிரச்சனை இல்லை என அறிந்து கொண்டவன்,

“என்ன ஜோக்குனு சொன்னீங்கன்னா நானும் சிரிப்பேன். இது என்ன ஆபிஸா? இல்ல ஏதாவது பிக்னிக் ஸ்பாட்ல இருக்கீங்களா?” என சத்தம் போட மொத்த பேரும், “சாரி சார்.” என முணுமுணுத்தபடியே அவரவர் இடத்திற்கு செல்ல மகியின் இடத்தில் நின்றதால் அவள் சளைக்காமல் அவனை பார்த்துக் கொண்டு நின்றாள்.

“உனக்கென்ன தனியா சொல்லனுமா? போய் வேலையை பாரு.” என சந்துரு கூற மகி, “உங்களுக்கு யாரு சந்தோஷமா இருந்தாலும் பிடிக்காதா? இப்ப எதுக்கு இப்படி சத்தம் போடறீங்க?” என மற்றவர்களுக்கு கேட்காத வண்ணம் மெதுவாக கேட்க, “சந்தோஷமா இருக்கவும் ஒரு நேரம் இருக்கு. இப்ப வேலையை பாருங்க. இது ஆபிஸ் டைம்.” என அவளை போலவே அடிக்குரலில் கூறிவிட்டு உள்ளே சென்றான் சந்துரு.

‘திடீர்னு நல்லா பேசறாரு. ஆனா பெரும்பாலும் மிளகாய் பஜ்ஜி மாதிரி காரமாவே இருக்காரே. என்ன பிராப்ளம் இவருக்கு. அச்சோ. இவரோட பஜ்ஜியை கம்பேர் பண்ணீட்டியே மகி. அது எவ்ளோ டேஸ்டா இருக்கும். இன்னிக்கு ஈவ்னிங் அம்மாகிட்ட பஜ்ஜி செய்ய சொல்லனும்.’ என யோசித்தபடியே தனது வேலைகளை தொடர்ந்தாள் மகி.

ஆனால் அவளுக்கு தெரியவில்லை. இன்னும் சில நாட்களில் சந்துருவின் அதிகபட்ச கோப முகத்தை பார்க்க போகிறாள் என.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்