Loading

             இசையின் வீட்டில் அனைவரும் உணவருந்த அமர, திடீரென ஆகாஷின் அன்னை அங்கு வந்தார். மற்றவர்களுக்கு அவரை யாரென்றே தெரியாமல் இருக்க, ஆகாஷ்தான் அதிர்ந்து எழுந்தவன், “மம்மி நீங்க எப்படி இங்க?” எனக் கேட்டான்.

ஆகாஷின் அன்னை என அறிந்ததும், மீனாட்சி அவரை வரவேற்றார். அவரோ அதை கவனியாமல், “ஏண்டா இப்படி பண்ண? யாரைக்கேட்டு இந்த முடிவை எடுத்த? என்னை விட நேத்து வந்த இவங்கள்ளாம் உனக்கு முக்கியமா போய்ட்டாங்களா?

அப்படி என்ன பண்ணி மயக்கினா. இவ உன்னை?” எனப் பேசிக் கொண்டே போக, அவரது பேச்சில் அனைவரும் அதிர, குணசேகரனோ, “நிறுத்துங்க. என்ன பிரச்சனைன்னு சொல்லாம ஏதேதோ பேசறீங்க” என்றார்.

உடனே அவர், “வாய்யா, பெரிய மனுஷா, பார்க்க நல்லாதானே இருக்க, அப்பறம் ஏன் பொண்ணை வைச்சு சம்பாதிக்கற? என் பையன் நல்ல சொத்து பத்தோட, நல்லா சம்பாதிக்கறான்னு உன் பொண்ணை வைச்சு வளைச்சு போட்டியா?” என சற்றும் நாகூசாமல் கேட்க, அன்னையென்றும் பாராமல் ஆகாஷ் கையை ஓங்கியிருந்தான்.

“ஓ பெத்த அம்மாவை அடிக்க வந்துட்டீயா?’ எனவும், அவரை வெறுப்போடு பார்த்தவன், கையை கீழே இறக்கி விட்டு, “எதுனாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.” என அழைக்க, அவரோ, “முடியாதுடா, இவ பேர்ல எழுதி கொடுத்ததை இப்பவே என் பேர்ல மாத்தி எழுதனும்” என இசையை பார்த்தே கூறிக் கொண்டிருக்க, யாருக்கும் எதுவும் புரியவில்லை.

“நான் என்ன எழுதி கொடுத்தேன். ஏன் ஏதேதோ உளரிட்டு இருக்கீங்க.” என ஆகாஷ் கேட்கும்போதே, மற்றொருவர் அங்கு வந்தார். “என்னடா தெரியாத மாதிரி கேட்கற, அந்த ப்ராப்பர்ட்டியை எனக்கு எழுதி கொடுக்க சொன்னா, நீ இவ பேர்ல எழுதி வைச்சிருக்க” எனக் கூறவும், “இவர் யாருன்னு தெரியலயே” என யோசித்தாள் இசை.

“டாடி, மம்மிதான் ஏதோ புரியாம பேசறாங்கன்னா, நீங்களுமா? யார் சொன்னா அதை நான் இவ பேர்ல எழுதி வைச்சுட்டேனு” என ஆகாஷ் நேரடியாகவே கேட்டான். “நான்தான் நேர்லயே பார்த்தேனே. அங்க ஏதோ வேலை நடந்துட்டு இருந்தது. இங்க என்ன பண்றீங்க.

இது என் பையன் பேர்ல இருக்கிற நிலம்னு அவங்ககிட்ட கேட்டேன். இப்ப இது உங்க பையனோடது இல்ல. ஓனர் மாறியாச்சு. அவங்கதான் இந்த வேலை செய்ய சொல்லியிருக்காங்க. அப்படீன்னு சொன்னாங்க. அந்த லேண்ட் இப்ப உன் பேர்ல இல்லதானே?” எனக் கேட்டார் அவர்.

“என் பேர்ல இல்லனா, அது இவங்களுக்கு எழுதி கொடுத்ததா அர்த்தமா?” என ஆகாஷ் கேட்க, “உனக்கு வேற யாரை தெரியும். எங்க ரெண்டு பேர்ல யாருக்காவது தந்திருக்கனும் இல்லனா இப்ப புதுசா இங்கதான் எப்பவும் இருக்கியாமே? அப்ப இவளுக்குதான் எழுதியிருக்கனும்” என்றார் அவனின் அன்னை.

“சரி அப்படியே இருக்கட்டும். அது என்னோட சொத்துதானே. நான் யாருக்கு வேணா எழுதி வைக்கலாம். இதைக் கேட்கவா இரண்டு பேரும் இவ்வளவு தூரம் வந்தீங்க” என கேட்டுவிட்டான் ஆகாஷ்.

“நான் அப்பவே சொன்னேன் கேட்டியா? நாம ரெண்டு பேரும் சமாதானமா கேட்டு இருந்தா அட்லீஸ்ட் ஆளுக்கு பாதியாவது கிடைச்சிருக்கும். இப்ப கண்டவ எல்லாம் அதை அனுபவிக்க போறா?” என்றார் அவனின் தந்தை.

“அப்படி ஒன்னும் உன்கிட்ட சமாதானமாகி அது எனக்கு வரனும்னு இல்ல. இவ பேருக்கு எழுதிட்டா அது எனக்கு வராம போய்டுமா? நாலு அறை விட்டா அவளே எழுதி தரப்போறா? இல்லனா என் பையனோட இருந்ததுக்கு சன்மானமா நிலத்தை வாங்கிட்டானு வீதியில போய் சத்தம் போட்டேனு வை தானா எனக்கு வர வேண்டியது வரும்” என ஆகாஷின் அன்னை கூற, “ஸ்டாப் இட்” என கத்தினான்.

ஆகாஷ் அல்ல சந்துரு. “ஹேய். ஏதோ ஆகாஷோட அம்மானு எல்லாரும் அமைதியா இருந்தா உன் இஷ்டத்துக்கு பேசிட்டே போற. எங்க வந்து யாரை பத்தி என்ன பேசிட்டு இருக்க? ரெண்டு பேருக்கும் இப்ப கூட பையன் இன்னொரு வீட்ல இருக்கானு எண்ணம் இல்லாம சொத்து விசயம் பேசும்போதே தெரியுது. உங்க இலட்சணம் என்னனு” என கத்தினான்.

அதற்கும் அவர் அடங்காமல், “அந்த சொத்தோட மதிப்பு தெரியுமாடா உங்களுக்கெல்லாம். அவளை பேசினா உனக்கு ஏன் கோபம் வருது. அப்பனா” எனும்போதே, மீனாட்சி அவரை அறைந்திருந்தார். விட்டிருந்தால் என்ன பேசியிருப்பாரோ, அதற்குள் சந்துரு, “ஆமா கோபம் வரும்தான். ஏன்னா அவ நான் கட்டிக்க போற பொண்ணு. இதுக்கு மேல ஏதாவது பேசினா இங்க நடக்கறதே வேற” என கூறியதில் அனைவருமே திகைத்து நின்றனர்.

ஆகாஷ்தான் சற்று சுதாரித்து, “சார் நான் பேசிக்கறேன்” என்றவன், “லேண்ட் என் பேர்ல இல்ல. இனிமேல் நீங்க நினைச்சாலும் அது உங்க பேருக்கு வராது. யார் சொன்னது இவங்க பேர்ல எழுதிட்டேனு. உண்மை என்னனு தெரியாம பேசாதீங்க. அந்த லேண்டை நான் கவர்மென்ட்க்கு ஆராய்ச்சிக்கு குடுத்துட்டேன்” என்றான்.

அதைக் கேட்டு இருவரும் அதிர, உண்மையில் அவர் அங்கு வேலை நடந்து கொண்டிருந்ததை பார்த்தபோது, “இந்த நிலம் அரசாங்கத்திற்கு சொந்தம்” என போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதை கவனியாமல் அங்கு வேலை செய்பவரிடம் கோபமாக கேட்கவும், அவன் நக்கலாக இப்படி கூற, அதற்கு பிறகே நிலம் கைமாறி விட்டதாக தனது மனைவிக்கு அழைத்து கூறினார்.

அதன்பிறகு இருவரும் கிளம்பி ஆகாஷ் வீட்டிற்கு வந்து பார்க்க, அவன் அங்கு இல்லை எனவும், தெரிந்தவர்களிடம் விசாரித்த போதுதான் அடிக்கடி இங்கு வருவதும், இசையிடம் நட்பாக பழகுவதும் தெரிந்து இங்கே வந்து விசாரிக்காமல் கத்த ஆரம்பித்து விட்டார்.

இப்போது அரசாங்க நிலத்தில் கைவைக்கவும் முடியாது. அவனை திட்டிவிட்டு இருவரும் கிளம்பி விட்டனர். அதன்பிறகு என்ன நடந்ததென ஆகாஷ் விவரித்தான். ஆகாஷின் தாய், தந்தை இருவரும் சொந்தத்தில் திருமணம் முடித்தவர்கள். பெற்றவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணத்தில் இருவருக்குமே நாட்டம் வரவில்லை.

ஆனால் அதை பெரிதாக உணராமல் ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரனையாக நடந்து கொண்டதாலும், கூட்டுக்குடும்பத்தில் இருந்ததாலும் ஆகாஷ் பிறக்கும் வரை பிரச்சனை இல்லை.

அதே நேரம் ஆகாஷின் தந்தைக்கு வெளியூரில் வேலை கிடைக்க, தானும் வேலைக்கு போவதாக கூறி, அவரோடு கிளம்பி வந்தவர் ஆகாஷை ஊரிலேயே விட்டுவிட, பாட்டி, தாத்தாவோடு வளர்ந்தான். இருவருக்கும் நல்ல நிறுவனங்களில் வேலை கிடைக்க, பிறகு ஆகாஷையும் இங்கையே அழைத்து வந்து, பள்ளியில் சேர்த்தனர்.

அதன்பிறகு ஓரளவு நன்றாகவே இருந்தனர். இல்லை அப்படி இருப்பதாக காட்டிக் கொண்டனரோ தெரியாது. ஆகாஷ் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது ஒருநாள் வீட்டுக்குள் வரும்போதே பயங்கர சண்டை. இருவருக்கும் இருக்க வேண்டிய காதல் இரு காதலாக மாறி நிற்க, ஒரே சமயத்தில் அது தெரிந்தும் விட்டது.

நீ என்ன யோக்கியமா, அந்த வாழ்வே எனக்கு மகிழ்ச்சி என இருவரும் அவர்களை பற்றி யோசித்தனரே தவிர, தங்களால் இந்த உலகுக்கு வந்த பிள்ளையை பற்றி யோசிக்க மறந்தனர். அவனை இருவரும் அழைத்து செல்ல மனமின்றி, டிரைவரிடம் சொல்லி ஊரில் விட சொல்லி விட்டு கிளம்பி விட்டனர்.

என்ன நடக்கிறதென்றே தெரியாத வயதில் மீண்டும் தாத்தா வீட்டிற்கு செல்ல, இவன் சென்ற ஒருசில வருடங்களிலே அவனது பாட்டியும் இறந்துவிட்டார். அதற்குள் இருவரும் விவாகரத்து வாங்கியிருக்க, அவர்களோடு செல்ல ஆகாஷ் மறுக்கவே, இருவரும் அவனது செலவை பகிர்ந்து கொள்வதாக கூறி விட்டனர்.

ஆனால் இன்றுவரை, அந்த பணத்தை அவன் எந்த தேவைக்காகவும் எடுத்ததில்லை. தாத்தாவின் பாதுகாப்பில் வளர்ந்து படிப்பை முடிக்கும் வருடம், அவரும் தவறிவிட அதைத்தான் தாங்க முடியாமல் போனது அவனால்.

இறக்கும் முன்பு, அவர் தனது பூர்வீக சொத்தான ஊரில் இருந்த வீட்டையும், கொஞ்சம் நிலத்தையும் அவன் பேருக்கு எழுதிவைத்து விட்டு சென்றுவிட்டார்.

ஆகாஷூம் வேலை கிடைத்து சென்னை வர, அதுவரையில் அவனை திரும்பி பார்க்காத இருவருக்கும் சொத்து விசயம் தெரிய வர, வீட்டை அவன் வைத்துக் கொண்டு நிலத்தை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு மாறி மாறி வந்து கேட்க ஆரம்பித்தனர். நிலத்தின் மதிப்பை விட, அவர்கள் மீது இருந்த வெறுப்பே அதை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான், கார்முகிலன் வந்து சித்துவிடம் அகழ்வாராய்ச்சிக்கு நிலம் கேட்க, அவனால் தர முடியாமல் போனது. அப்போதுதான் ஆகாஷூக்கு ஒரு யோசனை வந்தது. தாத்தாவின் நிலமும், சித்துவின் இடமும் ஐந்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருந்தது.

 

உடனே கார்முகிலனுக்கு அழைத்தவன், தனது நிலத்தை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டான். அதில் முகிலனுக்கும் மகிழ்வாகிட, “ஏண்டா முன்னாடியே சொல்லல.” என கோபித்துக் கொள்ள, “நீங்க முன்னாடியே இதுக்குதான் சித்துவை தேடறேனு சொல்லியிருந்தா தெரிஞ்சிருக்கும். நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்” என்றான் ஆகாஷ்.

அதன்பிறகு வேறு பிரச்சனை வரக்கூடாது என அதை அரசாங்க மதிப்பீட்டிற்கு கிரயமாக செய்து கொடுத்துவிட்டான்.

மொத்தத்தையும் கூறிய ஆகாஷ், “ஆனா இப்படி நடந்துப்பாங்கன்னு நினைக்கல. சாரி மகி. என்னால உனக்கு, வீட்ல எல்லாருக்கும் கெட்ட பேரு. என்னை கூட பொறந்தவன் மாதிரி இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்த. உன்னையை போய் அப்படி பேசிட்டாங்க. சாரி” என இசையிடம் கூறியவன், “என்னை மன்னிச்சிடுங்க அம்மா, அப்பா. இனிமேல் இங்க வர மாட்டேன்” என்றவனுக்கு கண்கள் கலங்கி நின்றது.

அப்படியே வெளியில் செல்ல எத்தனித்தவனை, குணசேகரனின் கரங்கள் நிறுத்த, மீனாட்சி முன்னே வந்து, “அம்மா, அப்பான்னு வாய் நிறைய கூப்பிடற. அப்ப இது உன் வீடு தானேப்பா. எங்களை விட்டுட்டு எங்க போவ நீ.

தனியா இருந்த உனக்கு எங்களோட இருக்கறது வசதியா இருக்காதுன்னு தான் இங்க தங்கறதை பத்தி எதுவும் சொல்லல. மத்தபடி, யாரோ ஏதோ சொல்றதெல்லாம் உண்மையாகிடுமா? விடுப்பா. இப்ப சொல்றேன். உன்னை மாதிரி தங்கமான ஒரு பையனை விட்டுட்டு போனதுக்கு அவங்க வேணா வருத்தப்படலாம்.

ஆனா அவங்களை நினைச்சு வருத்தப்பட கூட தகுதி இல்ல அவங்களுக்கு. நீ எப்ப வேணா இங்க வரலாம். உனக்கு இஷ்டமா இருந்தா இங்கையே தங்கிக்கலாம். சரியா?” எனக் கேட்க நெகிழ்ந்து போனான் அவன்.

இதுவரையில் அவர்களை பார்த்து நின்று கொண்டிருந்த சந்துரு இப்போதுதான் இசையை கவனிக்க, அவளோ அவனைத்தான் முறைத்துக் கொண்டிருந்தாள். ‘இவ ஏன் நம்பள முறைக்கிறா’ என யோசித்தவனுக்கு அப்போதுதான் கோபத்தில் வார்த்தையை விட்டது புரிய, அடுத்து என்ன நடக்குமோ என்ற பயமும் தோன்றியது.

ஆனால் யாரும் அதைப்பற்றி கேட்காமல் உணவருந்த அழைக்க, சரியாக கவனிக்கவில்லை போல என நிம்மதியாக உணவருந்தி முடிக்க, அப்போது குணசேகரன், “தம்பி நீங்க எதுக்காக அப்படீ சொன்னீங்க?” எனக் கேட்க, கவனித்து உள்ளனர் எனப் புரிந்தது.

அதோடு இல்லாமல் இசையிடம் வேறு, “இவர் என்னமா சொல்றாரு. உனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்கா?” எனக் கேட்டு வைக்க, அவள் இவனை ஏகத்துக்கும் முறைத்ததில் சந்துருதான் என்ன கூறுவதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்