Loading

              ஞாயிற்றுக்கிழமை காலை, எப்போதும் சுட்டெரிக்கும் சூரியன் அன்று ஏனோ மந்தமாக இருக்க, நல்ல காற்று வீச ரம்யமாக விடிந்தது பொழுது. நேற்றிரவே அகல்யாவை மட்டும் இங்கு விட்டுவிட்டு மற்றவர்கள் ஆகாஷின் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இரவெல்லாம் கதை பேசி தூங்க நேரமானாலும் மகிழ் எப்போதும் போல காலையிலே விழித்து விட்டாள். தனது தந்தைக்கும் சேர்த்து தேநீர் எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்தவள், அவரோடு பேசிக் கொண்டே அதை பருகினாள்.

இப்போதெல்லாம் இது வழக்கமான நிகழ்வாகி விட்டது அவளுக்கு. தந்தையோடு இணைந்து தேநீர் அருந்திவிட்டு, சிறு சிறு தோட்ட வேலைகளை செய்து கொடுத்து அவரோடு காலைப் பொழுதை கழிப்பாள்.

பிறகு அவர் கிளம்ப சென்றதும், தாய்க்கு உதவிகள் செய்வதோடு, தங்கை கிளம்புவதற்கும் ஏற்பாடு செய்து விட்டு இருவரும் கிளம்பியதும் நால்வருமாக உணவு உண்பர். பிறகு மகிழும், மீனாட்சியும் மற்ற வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு தொலைக்காட்சியில் ஏதாவது படம் பார்ப்பர்.

சாயங்காலம் இருவரும் வந்ததும் சிற்றுண்டி, இரவு உணவு தயார் செய்தல் என பொழுது அருமையாகவே சென்றது. மகிழுக்கு இதுபோல குடும்ப அமைப்பில் இருந்து பழக்கமில்லாததால் மிகவும் பிடித்திருந்தது. அதை ரசிக்கவும் செய்தாள். சித்து எப்போதாவது மெஸேஜ் செய்வதோடு சரி. இவளும் அவனுக்கு அழைக்கவே இல்லை.

இருவரும் உள்ளே வர அப்போதுதான் அகல்யா எழுந்து வந்தாள். “நைட் லேட்டாகிடுச்சுல்ல. அதான் தூங்கிட்டேன். நீயாவது எழுப்பி இருக்கலாம்ல. அம்மா தப்பா நினைக்கப் போறாங்க” எனக் கூற, அப்போது அங்கு வந்த மீனாட்சி, “அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டேன்மா. காபி கொடுக்கவா?” எனக் கேட்டார்.

“ஓகேம்மா. நான் ப்ரஷ்அப் ஆகிட்டு வந்தடறேன்” என்றபடி அகல்யா உள்ளே செல்ல, மகிழ் சென்று இசையை எழுப்பினாள். அவளோ, “என்னக்கா இன்னைக்கு சண்டே தானே. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேனே” என இழுத்து போர்த்த, “இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க எல்லாரும் வந்திடுவாங்க. அதான்” என்றாள் மகிழ்.

“அவங்களும் நம்பள மாதிரி தானே. சண்டேன்னு இன்னும் தூங்கிட்டு தான் இருப்பாங்க. நாமதான் ஃபோன் பண்ணி நியாபகப்படுத்தனும் பாரு” என்றாள் அகல்யா. அதற்குள் எழுந்திருந்த இசை, “அப்படியெல்லாம் சொல்ல முடியாதுக்கா, இந்த மாம்ஸ் இருக்காறே அவரு நைட்டெல்லாம் தூங்கியே இருக்க மாட்டாரு. இன்னேரம் கிளம்பியே இருப்பாரு. அக்கா மேல அவ்ளோ லவ்ஸ்” என்றாள்.

ஆனால் அங்கு நடந்ததோ வேறு. இரவு ஆகாஷின் வீட்டுக்கு செல்லும் முன்பே, தன்னைக் கூட்டிச் செல்வதற்காக சந்துருவை அங்கு வர சொல்லியிருந்தாள் சிந்து. அவனும் வந்து சிந்துவோடு கிளம்புவதாக கூற, ஆகாஷோ, “ஏன் சார் இப்பவே லேட் ஆகிடுச்சு. இதுக்கு மேல அங்க போயும் தனியாதானே இருக்கனும். காலைல சாப்பாடுக்கே அங்க வர சொல்லிட்டாங்க. பேசாம இங்கேயே தங்கிடுங்க” என்றான்.

சித்து, “அவங்க எங்க தனியா இருக்காங்க?’ என புரியாமல் கேட்க, “அப்ப உங்களுக்கு விசயமே தெரியாதா. சந்துரு சாரும், சிந்துவும் தனியாதான் இருக்காங்க. உங்க சித்தி மட்டும்தான் அந்த வீட்டில் இருக்காங்களாம்” என விவரம் சொன்னான் ஆகாஷ். உடனே சித்து, “சாரிடா, என்னால உங்களுக்குதான் ரொம்ப கஷ்டம்” என்றான்.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லணா. அம்மாவுக்கு ஒருநாள் இதெல்லாம் தப்புனு புரியும்ணா. நீங்க வருத்தப்படாதீங்க.” என்றாள் சிந்து. “ம்ம். சரி இங்கையே தங்கிடுங்க. பார்த்துக்கலாம்” என சித்துவும் கூறிவிட அவர்களும் அங்கேயே தங்கினர்.

அடுத்த நாள் காலையில் எல்லோரும் நன்கு உறங்கி கொண்டிருந்தனர். சந்துருதான் முதலில் எழுந்து மற்றவர்களையும் எழுப்பினான். “ஏண்டா இவ்வளவு சீக்கிரம் எழுப்பற?” என சித்து கேட்க, “அண்ணா, அண்ணி உனக்காக வெயிட் பண்ண மாட்டாங்களா. நீ இப்படி தூங்கிட்டு இருக்க?” எனக் கேட்டான் சந்துரு.

“உங்க அண்ணியும் தேட மாட்டாங்க. அவங்க தங்கச்சியும் உன்னை பத்தி யோசிக்க மாட்டாங்க. பேசாம படு” என்றான் கவின் படுத்துக் கொண்டே. அதில் உறக்கம் கலைந்த சித்து, “என்ன மச்சி சொல்ற. இப்படி ஒரு டிராக் ஓடுதா?” என்றான் ஆச்சர்யமாக.

“அட என்னடா நீ எல்லாத்துக்கும் ஷாக் ஆகற. அந்த பக்கம் ரெஸ்பான்ஸ் இருக்கிற மாதிரி தெரியல. ஆனா உன் தம்பி முகத்துல தான் அந்த பொண்ணை பார்க்கும் போதெல்லாம் பல்பு எரியுது. பெங்களூர்ல அவ்ளோ பிரச்சனையிலயும் இவன் கண்ணு அந்த பொண்ணு மேலதான் இருந்தது.” என சிறப்பாக போட்டுக் கொடுத்தான் கவின்.

“அப்படியெல்லாம் இல்லண்ணா” என அவன் மழுப்பும்போதே மற்ற அனைவரும் எழுந்ததோடு அவன் பின்னால் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். “என்கிட்ட கூட சொல்லலயேண்ணா” என சிந்து கேட்க, “கூடவே இருக்கேன். எனக்கு கூட இது தெரியாம போச்சே” என்றான் ஆகாஷ்.

“சார்க்கு மகி மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்குனு கெஸ் பண்ணேன். ஆனா அது இவ்ளோ சீக்கிரம் லல்வாகும்னு நான் கூட நினைக்கலயே” என்றாள் ராகினி. “ஹேய்.ஹேய். நிறுத்துங்கப்பா. எனக்கே இப்பதான் கன்பார்மா தெரிஞ்சது. இன்னும் அவகிட்ட கூட சொல்லல. ஆனா கவின் அண்ணா இப்படி கண்டுபிடிப்பீங்கன்னு நினைக்கல” என்றான் சந்துரு.

“அதெல்லாம் ஊர், உலகத்துல எல்லார் பீலிங்ஸ்ஸூம் நல்லா தெரியும். என்னோட லவ்வை மட்டும்தான் புரிஞ்சுக்க முடியாது” என போகிறபோக்கில் பேசிவிட்டு அறைக்குள் சென்றாள் சிந்து. சித்து சந்துருவிடம், “எதுவா வேணும்னாலும் இருக்கட்டும். ஆனா இப்போதைக்கு இசைக்கு எதுவும் தெரிய வேணாம். சரியா?” என்றான்.

அவனும் தலையாட்ட அதன்பிறகே அனைவரும் அங்கிருந்து கிளம்பி வந்தனர். சரியாக எட்டு மணிக்கெல்லாம் அங்கு வந்துவிட, சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அனைவரும் காலை உணவை உண்டு முடித்தனர். அதன்பிறகு மதிய உணவை செய்வதற்கு மீனாட்சியும், மகிழும் செல்ல, சித்து அவர்களை தடுத்தான்.

“ஆன்ட்டி நீங்க இருங்க. நாங்க இன்னைக்கு சமைக்கிறோம்.” என்க, அவரோ, “இல்ல தம்பி நீங்க விருந்துக்கு வந்துருக்கீங்க. அதனால” எனும்போதே, “விருந்து இவங்க ரெண்டு பேருக்குதான். இன்னைக்கு உங்க எல்லாருக்கும் ரெஸ்ட் நான், கவின், ஆகாஷ் அப்பறம் சந்துரு நாலு பேரு தான் பண்ண போறோம். ரெடியா கைஸ்” என எழுந்தான் சித்து.

சமையலறைக்குள் சென்றதும், “நாம ஏதாவது பண்ணுவோம்டா. உங்க அண்ணன் எதுக்கு ஏதோ பண்ண போற மாதிரி டயலாக்கெல்லாம் பேசிட்டு வரான்” என்றான் கவின் சந்துருவிடம். “ஏன் புரோ இப்படி சொல்றீங்க. அவர் நல்லாதானே சமைப்பாரு” என்றான் ஆகாஷ்.

“ஆமா. நல்லா சுடுதண்ணீ வைப்பான். என்னடா” என கவின் அலுத்துக் கொள்ள சந்துரு தலையாட்டினான். அதற்கு ஆகாஷ் ஏதோ கூற வர, அதற்குள் அவர்களை பார்த்த சித்து, “என்னடா அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க. ஆரம்பிக்கலாம்ல. டைம் ஆகுது” எனவும், “இந்த சூப்பர்வைஸர் வேலைக்குதான் இங்க வந்துருக்கான். கன்பார்ம்” என்றபடி கவின் சென்றான்.

ஆனால் அவர்களிடம் வெங்காயம், பூண்டு உறிப்பது, தேங்காய் அரைப்பது என மேல்வேலைகளை செய்ய சொன்ன சித்து மொத்த சமையலையும் அவனே முடித்து விட்டான்.

அவன் செய்ததை ஆச்சர்யமாக பார்த்த கவின், “அடேய். உனக்கு சமைக்க தெரியும்னு இதுவரைக்கும் நீ சொன்னதே இல்ல. இங்க என்னடான்னா, மாமியாருக்கு விதவிதமா செய்யற” என்றான். சந்துரு, “ஆமாண்ணே. எனக்கு கூட அண்ணன் சமைக்கும்னு தெரியாது” என்க, “எனக்கு தெரியுமே” என்றான் ஆகாஷ்.

“உனக்கு எப்படி தெரியும்” என கவின் கேட்க, “அதான் நாங்க ஒரு டூர் போயிருந்தோமே. அன்னைக்கு அவ்ளோ டேஸ்டா சமைச்சாங்க மகிழ், முகிலன் அப்பறம் இவரும். ஆனா இவ்ளோ வெரைட்டியா செய்வாங்கன்னு எனக்கே தெரியாது” என்றான் ஆகாஷ்.

“ஏண்டா இவ்ளோ நாள் சொல்லல” என கவின் கேட்க, “நீ இதுவரைக்கும் கேட்டதே இல்லையே மச்சி. இந்தா இந்த கேரட்டை துருவு” என்றான் சித்து அசால்டாக. அவனை முறைத்தபடியே அதைச் செய்ய வெளியிலோ, “ஆன்ட்டி. எனக்கென்னவோ, இன்னும் ரெண்டு நாளைக்கு நீங்க கடைல தான் சாப்பிட போறீங்கன்னு நினைக்கறேன்” என்றாள் அகல்யா.

“ஏம்மா. அப்படி சொல்ற. அவ்ளோ மோசமாவா சமைப்பாங்க” என்றார் மீனாட்சி. “அப்படியெல்லாம் இல்லம்மா. அவங்க நல்லாதான் செய்வாங்க. உனக்கு தெரியுமாடி. பேசாம இரு” என்றாள் மகிழ்.

“அது இல்லைடி, பசங்க பொதுவாகவே நல்லா டேஸ்டாதான் சமைப்பாங்க. ஆனா நீ படத்துல லாம் பார்த்ததில்ல. அதுக்கப்பறம் கிச்சன் கிளீன் பண்ணதான் இரண்டு நாள் ஆகும். அதைத்தான் சொன்னேன்” என்றாள் அகல்யா. அப்போது சரியாக ஆகாஷ், “லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன். சாப்பாடு ரெடி. எல்லாரும் டைனிங் ஹால் வரலாம்” என்றான்.

அகல்யா சொன்னதில் பயந்த மீனாட்சி வேகமாக சமையலறைக்கு சென்று பார்த்ததில் ஆச்சர்யப்பட்டு போனார். அங்கு ஒரு சமையல் நடந்ததற்கான அறிகுறியே இல்லாத அளவு கிச்சன் அவ்வளவு சுத்தமாக இருந்தது. அவரின் பின்னாலே வந்த அகல், “ஒருவேளை கடையில ஆர்டர் பண்ணீட்டாங்களோ” என சந்தேகமாக கேட்க, “ஹேய். நிஜமா நீ அடி வாங்க போற” என்றாள் மகிழ்.

“இங்க என்ன பண்றீங்க.” என சந்துரு கேட்க, “இல்ல சாப்பாடு எடுத்துட்டு போகலாம்னு” என இழுத்தாள் மகிழ். “அது  எல்லாம் டேபிள்ல இருக்கு. வாங்க” என அழைத்து சென்றான் சந்துரு. அங்கோ இசை முதல் ஆளாக, எல்லாவற்றையும் திறந்து பார்த்து வாசம் பிடித்து கொண்டிருந்தாள்.

வருவது சித்துதான் என நினைத்து, “அசத்தீட்டிங்க மாமா வாசனையே சூப்பரா இருக்கே” என்றாள். சந்துருவோ அவளது அழைப்பில் உருகி நிற்க, அங்கு வந்த சித்து, சந்துருவை உலுக்கி விட்டு, “உட்காரு இசை. உனக்குதான் முதல்ல.” என்றான்.

ஆனால் அங்கு வந்த மீனாட்சியோ, “இல்ல தம்பி. நீங்க உட்காருங்க. நாங்க அப்பறம் சாப்பிட்டுக்கறோம்” என்றதற்கு, “அதெப்படி, நாங்கதானே சமைச்சோம். அப்ப நாங்கதான் பரிமாறுவோம். நீ உட்காரு மகி. நீங்களும் உட்காருங்க ஆன்ட்டி” என்றான் சந்துரு உரிமையாக.

அப்போது இசை, “ஒரு ஐடியா, பேசாம எல்லாத்தையும் ஹாலுக்கு கொண்டு போய் எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடலாமா. நாமளே பரிமாறிக்கலாம்” என்க, மளமளவென அதன்படியே நடுவில் உணவுகளை வைத்து சுற்றி வட்டமாக அமர்ந்தனர்.

ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டே மகிழ்ச்சியோடு பேசி சிரித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டே உணவை உண்டனர். சாப்பிட்டு முடித்ததும், சிறியவர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, இசை,

“சான்ஸே இல்லக்கா. இவங்களை எல்லாம் பேசாம அந்த கம்பெனியை மூட சொல்லிட்டு, நல்ல ஹோட்டலா ஆரம்பிச்சோம்னு வையேன்” என்க, “உனக்கு டெய்லி சாப்பிட வசதியா இருக்கும். அதானே” என்றான் ஆகாஷ்.

அதில் அனைவரும் சிரிக்க, “சரி விடு” என்ற இசை, “அக்கா நீ தாராளமா மாம்ஸை கல்யாணம் பண்ணிக்கலாம். கல்யாணம் முடிஞ்சு போகும்போது, நானும் உன்கூடவே வந்துடறேன் சரியா?” என்றாள் மகிழிடம்.

“தாராளமா மகி. நீ எப்ப வேணா வரலாம்” என்றான் சந்துரு. அதற்குள் கதவு தட்டும் சத்தம் கேட்க, அவர்களை இருக்க சொல்லிவிட்டு சித்து சென்று திறக்க வெளியில் நின்றிருந்த ஐயம்மாளை கண்டு அதிர்ச்சியடைந்தான் அவன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்