Loading

          அதே நாளில் நள்ளிரவு ஒரு மணிக்கு நல்ல உறக்கத்தில் இருந்த கவினை எழுப்பி, கதவை திறக்க வைத்து உள்ளே வந்தான் சித்தார்த். “ஏண்டா? இன்னொரு சாவி உன்கிட்ட இருக்குல்ல. அதை வைச்சு திறந்து வர வேண்டியதுதானே. நடுராத்திரில தொல்லை பண்ற.” என அலுத்துக் கொண்டான் கவின்.

“நான் சாவியை எடுத்துட்டே போகலயே மச்சான். அதோட நீ வீட்ல இருக்கப்ப நான் சாவி எடுத்துட்டு போனா நல்லாவா இருக்கும். உனக்கு ரொம்ப கஷ்டம் குடுக்கற மாதிரி இருந்தா.” என ஆரம்பிக்க நிச்சயம் அதில் பகலில் இருந்த கோபம் இல்லை.

“எப்பா சாமி. ஆள விடுடா. நான் கோவிச்சுக்கவே இல்ல. எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. வந்து படு. காலைல எனக்கு வொர்க் இருக்கு.”  என சலித்துக் கொண்டவாறே படுத்தான் கவின்.

கவினும், சித்தார்த்தும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் தான் பணிபுரிகின்றனர். ஆனால் வேறு வேறு ஷிப்ட். கவின் இந்த வாரம் ஜெனரல், சித்து செகண்ட் ஷிப்ட். அதற்கே இருவரும் சேர்ந்து இருக்க முடிவதில்லை. ஆனாலும் கவின் தினமும் மதிய உணவு நேரத்திற்கு சித்துக்கும் சேர்த்து வாங்கி வந்து அவனோடே உணவருந்தி செல்வான்.

ஒரு வாரம் இப்படியே கழிய, அந்த வார ஞாயிறு விடுமுறையில் அருகில் இருந்த ஒரு மாலுக்கு இருவரும் வந்திருந்தனர். சற்று நேரம் அங்கு சுற்றி திரிந்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது சிக்னலில் வண்டி நிற்க, அருகில் இருந்த ஆட்டோவில் கலங்கிய முகத்தோடு ஒரு பெண் அமர்ந்திருந்தாள். எதார்த்தமாக சித்து அந்த பெண்ணை பார்க்க, அவளது பார்வையோ இலக்கின்றி இருந்தது.

அவளை கண்டதும் ஒரு நொடி யோசித்தவனின் இதழ்கள், தானாக “வதனி” என உச்சரித்தது. ஆனால் அடுத்த நொடியே சிக்னல் போட்டு விட ஆட்டோ கிளம்பி விட்டது. சித்தார்த், “டேய். அந்த ஆட்டோவை ஃபாலோ பண்ணுடா.” என்றான்.

இவர்கள் செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் அது போகவும் கவினால் அதை பின்தொடர முடியவில்லை. ஓரமாக வண்டியை நிறுத்தியவன், “என்னாச்சுடா?” எனக் கேட்டான்.

“அதுல தெரிஞ்ச பொண்ணு போன மாதிரி இருந்ததுடா. அதான்.” என்றான் சித்து. “உனக்கு தெரிஞ்ச பொண்ணா, ரெகுலரா ஆபிஸ் பார்க்கறவங்களா இருந்தா இவ்ளோ எமோஷனல் ஆக மாட்ட. வேற யாரு.” என யோசித்தான் கவின்.

பிறகு அவனாகவே, “ஒருவேளை நிரஞ்சனியாடா. ஆனா அவ எதுக்கு இங்க வந்தா.” என்றான். “ஹேய். இப்ப எதுக்கு நீ அவ பேச்சை எடுக்கற. இது யாருன்னு உனக்கு சொன்னாலும் புரியாது. நீ வண்டியை எடு.” என்ற சித்து கூறவும் இருவரும் வீட்டுக்கு வந்தனர்.

அடுத்த வாரத்தில் இருந்து அலுவலகத்தில் நிகழ்ந்த மாற்றங்களால் இருவரும் இனிமேல் தொடர்ந்து ஜெனரல் வரவேண்டும் என கூறிவிட, இருவருக்கும் அதில் மகிழ்ச்சியே. இருவரும் ஒன்றாக கிளம்பி அலுவலகம் வர, உள்ளே போகும் முன்பே ஒரு பெண் வந்தாள்.

அவள் ஸ்ரேயா. பெங்களூர்தான் அவளுக்கு சொந்த ஊர். பிறந்து, வளர்ந்தது, படித்தது இப்போது தொழிலும் இதே நகரத்தில்தான். எம்.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு இங்கு பணியாற்றுகிறாள்.

“உனக்கும் ஜெனரல் மாத்திட்டாங்களா சித். சூப்பர்.” என்றவளின் பார்வையோ கவின் மீதே இருந்தது. சித்து, “ஆமா ஸ்ரேயா. இப்ப கொஞ்சம் ரிலீப். எனக்கில்ல. இவனுக்கு.” எனக் கூறி மெலிதாக சிரிக்க, “சரி நீங்க பேசிட்டு வாங்க. நான் உள்ள போறேன்.” என கவின் வேகமாக சென்று விட்டான்.

“என்னாச்சு ஸ்ரேயா. உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் பிரச்சனையா? அவன் ஏன் உன்கிட்ட பேசாம போறான்.” என சித்து கேட்க, “ஆமா ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு பேசி.” எனும்போதே அவளது தோழி வந்து விட அவளுடன் சென்று விட்டாள்.

‘இருவரும் பேசிக்கொள்வதில்லையா? அந்த அளவு என்ன நடந்திருக்கும்’  என யோசித்துக் கொண்டே உள்ளே சென்றான் சித். ஏனென்றால் இருவரும் உற்ற தோழமைகள்.  அலுவலக நேரம் முழுக்க ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஒன்றாகவே இருப்பர். அவள் வீட்டிற்கு கூட கவின் சென்றிருக்கிறான். அப்படி இருக்கும்போது சண்டை என்றால் நம்ப முடியாது தானே.

கவினுக்கும், சித்துக்கும் அடுத்தடுத்த கேபின்தான் என்பதால் நேராக அங்கு சென்றவன், “என்னடா பிரச்சனை உங்களுக்குள்ள? அதான் ஒரு வாரமா நல்ல மழை போல.” எனக் கேட்டான்.

அவனது கேலியை கண்டு கொள்ளாதவன், “அவளை பத்தி பேசாதடா. செம கடுப்புல இருக்கேன்.” என்றான் கவின். “என்ன நடந்ததுனு இப்ப சொல்ல போறீயா இல்லையா?” என்றான் சித்து.

“லூசாடா அவ. எவ்ளோ பாசம் வைச்சிருக்கேன் அவ மேல. என்னை போய் லவ் பண்றேனு சொல்றா. எவ்ளோ திமிர் இருக்கும் அந்த கழுதைக்கு.” என கோபம் கொள்ள அப்போது ஸ்ரேயாவும் அங்கு வந்து விட்டாள்.

“அதேதான் நானும் சொல்றேன் சித். நானும் அவன் மேல பாசமா இருக்கேன். அவனும் என் மேல பாசமா இருக்கான். அப்ப நாங்க கல்யாணம் பண்ணிக்கறதுல என்ன தப்பு. அததான் அவன்கிட்ட சொன்னேன். ரொம்ப கோபப்படறான்.” என்றவளை பார்த்து சித்துக்கு பாவமாக இருக்க கவினோ அவளை கோபம் கொண்டு பார்த்தான்.

‘காதல் பாசமாக இருக்கும் உறவுகள் அனைவரிடமும் துளிர்ப்பதில்லையே. சில நேரம் கோபம் கொண்டு இருப்பவர்களிடமும் கூட மலர்ந்து வரும் ஒரு வித்தியாச உணர்வால்லவா. இதை எப்படி ஸ்ரேயாவிற்கு புரிய வைப்பது’ என்ற யோசனையில் சித்து நின்றிருக்க,

கவினோ, “ஹேய். உனக்கு எத்தனை முறை சொல்றது. நீ என் ஃப்ரண்ட். உன்னை எப்படி நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்.” என்றான். அவனை அமைதிப்படுத்திய சித்து, “நான் பேசிக்கறேன். நீ உன் வேலையை பாரு.” என அவளை அழைத்துக் கொண்டு நகர்ந்தான்.

“நாம பொறுமையா இதைப்பத்தி டிஸ்கஸ் பண்ணலாம் ஸ்ரேயா. இப்ப பெண்டிங் வொர்க்ஸ் நிறைய இருக்கு. நாம அதை பார்க்கலாம் சரியா?” என்றதும் அவள் சென்றுவிட இவன் வேலையில் ஆழ்ந்தான்.

மதிய உணவு வேளையிலும், கவினும், சித்தும் தனியாகவே சாப்பிட்டு வர ஒரு மூன்று மணிக்கு மேல் திடீரென பக்கத்து டீமில் ஏதோ சத்தம் கேட்க, என்னவென்று போய் பார்த்தால் ஸ்ரேயா தான் மயங்கி விழுந்திருந்தாள்.

என்னவென்று கேட்டால், “காலையில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லை. ஏதோ விரதம் இருப்பதாக கூறிக் கொண்டிருந்தாள்” என தோழி ஒருத்தி தகவல் குடுக்க அவளை எழுப்பியவர்கள் மெதுவாக மருத்துவ உதவிக்கு அழைத்து சென்றனர்.

பொதுவாகவே பெரிய தனியார் அலுவலகங்களில் மருத்துவ உதவிக்கென்று தனியாக ஒரு இடம் இருக்கும். ஒரு மருத்துவர்  மற்றும் ஒரு செவிலியராவது இருப்பர். அவசரக் காலங்களில் ஊழியர்களின் வசதிக்காக இது போன்ற அமைப்புகள் இருந்தன.

அங்கிருந்த செவிலியர், விவரம் கேட்டு அவளுக்கு குளுக்கோஸ் போட்டுவிட்டு, ஏதாவது சாப்பிட வாங்கி வருமாறு கூற சித்து வேகமாக கேண்டீனுக்கு சென்றான். மற்றவர்களை தாங்கள் பார்த்துக் கொள்வதாக கூறி அனுப்பியிருந்தான் கவின்.

அவளை சோதித்து விட்டு, கவினிடம் மருத்துவர் ஏதோ கூறிக் கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த சித்து அந்த மருத்துவரை பார்த்து அதிர்ந்து நின்றான். அது வேறு யாருமல்ல. அவன் ஆட்டோவில் பார்த்த அதே பெண்.

           இங்கே சென்னையில் ஒரு வாரம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இன்று தனித்தனியாக டீம் பிரிப்பதாக இருந்தது. மற்றவர்கள் வேறு வேறு துறைகளில் பணியமர்த்தப்பட, ஏற்கனவே அனுபவம் இருந்ததால் ஆகாஷூம், மகியும் சந்துருவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைக்கு அனுப்பப்பட்டனர்.

மகிக்கு அது மகிழ்ச்சியாக இருக்க, ஆகாஷ்க்கு அது சித்தார்த் பற்றிய விவரங்களை அறிய பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தான். அன்றைக்கு சந்திரு அலுவலகம் வராததால் அன்றைய பொழுது சாதாரணமாகவே சென்றது.

அடுத்த நாள் காலையில் மகி கிளம்பிக் கொண்டிருக்க, அங்கு வந்தார் அவளது அப்பா. “சொல்லுங்கப்பா.” எனக் கேட்க, “இந்த வாரத்துல ஒருநாள் சீக்கிரமா வர முடியுமாமா?” எனக் கேட்க. அவளோ எதற்கு என்ற கேள்வியோடு அவரை பார்த்தாள்.

“இல்லம்மா. உன்னை பொண்ணு பார்க்க வரேனு சொன்னாங்க. மாப்பிள்ளை வீட்ல ஞாயிற்றுக் கிழமை வேணாம்னு யோசிக்கறாங்க போல. அதான் நடுவுல நீயே ஒரு நாள் சொன்னா வர சொல்லிடலாம்.” என்றதில் சிறிய அதிர்வு வந்து போனது அவளது முகத்தில்.

முதலில் அங்கு வேலை கிடைத்தபோது திருமணம் பற்றி பேச்சு வந்தபோது சரி என்றிருந்தாள் தான். ஆனால் இப்போது அலுவலகம் மாறி விட்டதால் புதிய இடம் கொஞ்சம் பழகிய பிறகு திருமணம் பற்றி யோசிக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தாள்.

அதையே அவள் தந்தையிடமும், “மேரேஜ் கொஞ்ச நாள் கழிச்சு பண்ணிக்கலாமே பா. இப்பதான் ஜாயின் பண்ணியிருக்கேன். உடனே லீவ் அது இதுன்னு போட்டா நல்லாயிருக்காதுல்ல.” என்றாள்.

“அது என்னோட ஃப்ரண்ட் சொன்ன சம்மந்தம். உடனே வேணாம்னு சொன்னா நல்லா இருக்காது. அவங்க பார்க்க தானே வராங்க. பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம். அப்ப மேரேஜ்க்கு டைம் கேட்டு பார்க்கலாம். உனக்கு பிடிக்காத எதையும் அப்பா ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்டா.” என்றார் அவர்.

“சரிப்பா. நான் இன்னைக்கு ஆபிஸ்ல கேட்டுட்டு ஈவ்னிங்குள்ள சொல்லிடறேன்.” என்றவள் அலுவலகம் கிளம்பினாள். அன்றும் சந்திரு வராமல் இருக்க, “யாரிடம் பர்மிஷன் கேட்க வேண்டும்?” என உடன் இருப்பவர்களிடம் விசாரித்தாள் மகி.

“மத்தவங்க அவங்க டீம் ஹெட்கிட்ட கேட்டா போதும். ஆனா நம்ப டீம் மட்டும் பர்மிஷன், லீவ் எல்லாமே சந்திரு சார்கிட்டதான்.” என தகவல் கொடுத்தனர். “அவர் எப்ப வருவாரு?” என மகி கேட்க, “அவங்க ஏதோ பிஸினஸ் டிரிப் போயிருக்காங்களாம் ஒரு ஒன் வீக் ஆகும் வர. ரொம்ப எமர்ஜென்ஸினா மெயில் பண்ணலாம். சில்லி ரீசன்னா டென்ஷன் ஆகிடுவாரு.” என்றாள் மற்றொருத்தி.

ஆனால் சற்று நேரத்தில் எம்.டி அறையை திறந்து கொண்டு ஒரு பெண் உள்ளே நுழைய, அதைப்பார்த்த அவளது கொலிக் ஒருத்தி மகியிடம், “இங்க எம்.டிக்கு ஈக்குவல் பவர் இவங்களுக்கு இருக்கு. ஆனா ரொம்ப ஸ்ட்ரிக்ட். நீ வேணா கேட்டு பாரு.” எனக் கூறிச் சென்றாள்.

மகியும் அனுமதி கேட்டு அறைக்குள் செல்ல அங்கே நாகரீக உடையில், தலைமுடியை விரித்து போட்டு, அதீத அலங்காரத்தில் சுளித்த முகத்தோடு அவள் அமர்ந்திருந்தாள்.

“எக்ஸ்யூமி மேம்.” எனக் கேட்டு இவள் செல்ல அவளை பார்த்தவள், “இருக்கறதுலயே அழகான பொண்ணுங்களா பார்த்து வேலைக்கு எடுப்பானுங்க போல அண்ணனும், தம்பியும்.” என மகியின் இயற்கையான அழகில் பொறாமை கொண்டவள், “என்ன வேணும்.” என அசட்டையாக கேட்டாள்.

“நாளைக்கு ஈவ்னிங் ஒரு டூ அவர்ஸ் மட்டும் பர்மிஷன் வேணும் மேம்.” என மகி கேட்கவும், “ஆமா உன்னை நான் இங்க பார்த்ததே இல்லையே. எப்ப ஜாயின் பண்ண?” எனக்கேட்டாள் அவள்.

மகி, “ஒன் வீக் ஆகுது மேம். புது பேட்ச்.” எனவும், “வந்து ஒரு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ள உனக்கு பர்மிஷன் கேட்குதா? அப்படி என்ன நீ கத்துக்கிட்ட.” என ஆரம்பித்தவள் மகி காதில் இரத்தம் வரும்வரை திட்டி தீர்த்து விட்டாள்.

“எனக்கு பர்மிஷனே வேணாம் மேம். விடுங்க.” என்றபடி மகி கிளம்பவும், “ஆமா எதுக்கு பர்மிஷன்?” எனக் கேட்டாள் அவள். “அது என்னை பொண்ணு பார்க்க வராங்க அதான்.” என தயங்கியவாறே கூற, “ஓ அப்ப கல்யாணம் பண்ணிட்டு வேலையை விட்டுருவ. உன் போஸ்ட்க்கு வேற ஆள் தேடனும் அதானே.” என்றாள் அவள்.

மகி, “அப்படில்லாம் இல்ல மேம். ஆஃப்டர் மேரேஜும் வேலைக்கு வருவேன்” என்றதும், என்ன நினைத்தாளோ, “அப்ப சரி பர்மிஷன் என்ன நாளைக்கு ஆஃப் டே லீவ் எடுத்துக்கோ.” என்றாள் அவள். மெதுவாக தலையாட்டிய மகி அதே ஆச்சர்யத்தோடு இருக்கைக்கு வந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
6
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்