Loading

35

 

அழகிய ஆரஞ்சு வர்ண டிசைனர் சேலையில் ப்ரீத்தியும், இள ஆரஞ்சு வர்ண ஷெர்வானியில் சுடரொளிவானனும் புன்னகை முகத்துடன் மேடையை அலங்கரித்திருந்தனர்…

 

அவர்கள் முகத்தில் அத்தனை சந்தோஷம்.

 

காலை இனிதினும் இனிதாய் தன் இனியவளின் கைத்தலம் பற்றி, அவளைத் தன்னுயிராய் ஊரறிய அவள் கேட்ட உரிமத்தை அவன் வழங்கியிருக்க, அவர்கள் சந்தோஷத்தினைச் சொல்லில் வடித்திட செந்தமிழில் கூட வார்த்தைகளுக்குப் பஞ்சமாகிப் போனது…

 

“லவ்விங் யூ மோர் அன்ட் மோர்டி ப்ரீத்தி.. இன்னும் இன்னும் நிறைய காதலிக்கனும் உன்னை” என்ற வாக்கியங்களோடு அவன் கட்டிய பசும் மஞ்சள் தாலி, அவள் அகத்தோடு கதைபேசி கணப்பதில் அவளுக்கு அத்தனை சந்தோஷம்.

 

அவர்கள் இருபக்க வேலையிட நண்பர்கள் வந்து வாழ்த்து மழை பொழிவதும், கேலி செய்து சிவக்கச் செய்வதுமாக இருக்க, கீழே டீ.ஜேவின் பாடல் அந்த பொழுதுகளுக்கு இனிமை சேர்த்தது.

 

அண்ணன் திருமணத்தை ஆசைதீர ரசனையோடும், தன் காதலனோடும் சேர்ந்து செய்ததில் சுபிக்ஷாவிற்கு இன்னும் சந்தோஷம்…

 

கீழே டீ.ஜேவில் காதிற்கினிய காதல் கானம் இசைக்க,

 

சுபிக்ஷா சற்றும் எதிர்பாராத விதமாக, அவளை இழுத்துக் கொண்டு வந்து, நடனம் ஆடினான் கருப்பசாமி.

 

அவளுக்கே பெரும் ஆச்சரியம். ‘இந்த மனுஷனா இது?’ என்று அதிர்வு கொண்டாலும், காதலாய் அவள் நடனம் ஆட,

 

“ம்க்கும்..” என்று சிவப்ரியா தன் குரலை செருமினாள்.

 

அவள் அருகிலிருந்து, தம்பியின் புன்னகை முகத்தை ரசித்துக் கொண்டிருந்த அபூர்வன் திரும்பிப் பார்த்தான்.

 

திருமணத்திற்கு வர அவன் கொஞ்சம் சங்கடப்பட்டான் தான். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி, அவனவளின் காதல் முயற்சிச்சிக்காக புறப்பட்டு வந்திருந்தான். மேலும் சுடர் தனக்கு செய்யும் இன்றியமையாத உதவிக்காகவும் வந்திருந்தான்.

 

அவன் கல்லூரியில் சேர்ந்து, தன் படிப்பைத் தொடரவும் துவங்கியிருந்தான். அதில் சிவப்ரியாவிற்கு அத்தனை சந்தோஷம்…

 

அவன் நினைத்ததைப் போல் அவனிடம் யாரும் ஒதுக்கம் காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவன் ஆராய்ச்சிப் பத்திரிக்கைகளில் பேசப்படும் சூடான செய்தி. அதனாலேயே உடன் பயிலும் மாணவர்கள் அவனிடம் பேசவும், நட்பு பாராட்டவும் தான் அதிகம் ஆர்வம் கொண்டனர்.

 

பெரியவர்கள் அனைவரின் முகத்திலும் நிறைவான புன்னகை.

 

“நம்ம பொண்ணு முகத்துல இப்படியொரு சந்தோஷத்தைப் பார்க்க எவ்ளோ சந்தோஷமா இருக்கு பிரபா.. அவளுக்கு சுடர் தான் சரியான துணை” என்று சுந்தர் கூற,

 

“ஆமாங்க” என்று பிரபாவும் கூறினார்.

 

குரல் செறுமிய தன்னவளைப் பார்த்த அபூர்வன், “என்னவாம்?” என கேட்க,

 

“என் கொழுந்தனுக்கு இருக்களவு லவ்ஸு உனக்குலாம் இருக்காடா?” என்று வம்பு செய்தாள்.

 

“என் லவ்ஸு எப்படினு காட்டனும்னா சொல்லு. காட்ட நான் ரெடி.. அப்றம் வர்ற கான்ஸிகுவன்ஸ்கு நான் பொறுப்பில்ல” என்று அபூர்வன் கண்ணடிக்க,

 

“ச்ச.. காலேஜ் சேந்தாலும் சேர்ந்த இந்த ஜென்ஸி கிட்ஸ் கூட சேர்ந்து ரொம்ப கெட்டுப்போயிட்டடா” என்று அவன் புஜத்தில் அடித்தாள்.

 

அதில் கிளுக்கிச் சிரித்தபடி எழுந்தவன், அவளை நோக்கிக் கரம் நீட்ட,

 

“டாக்டர் சாருக்கு ஆட தெரியுமா?” என்று கேட்டாள்.

 

“வா காட்டுறேன்” என்று அவள் கரம் பற்றி இழுத்தவன், ஆடும் இடம் நோக்கி செல்லாது, தன் மாமனார் முன் சென்றான்.

 

‘என்னடா பண்ற?’ என்பதாய் அவள் பார்க்க,

 

“மாமா.. உங்க பொண்ணு ஆட கூப்பிடுறா.. ஆடலாமா?” என்று அவரிடம் அனுமதி கேட்டான்.

 

‘அடப்பாவி.. அங்க சென்ஸார் போட்டு பேசிட்டு இங்க பர்மிஷன் கேட்குற நல்ல பிள்ள மாதிரி’ என்று அதிர்வாய் அவள் பார்க்க,

 

அவன் கூற்றில் சிரித்துவிட்ட ராமராஜன், “போய் ஆடுங்க” என்று கூறினார்.

 

“தேங்ஸ் மாமா” என்றவன், சென்று தன் தம்பி மற்றும் தம்பியின் வாக்கால் மனைவிக்கு அருகில் சென்று தனது ஆட்டத்தைத் துவங்கினான்.

 

உறவினர்கள் கலைந்து நெருங்கிய சொந்தங்கள் மட்டும் மிஞ்ச, சுடர் மற்றும் ப்ரீத்தி கூட ஆட்டத்தில் இணைந்து கொண்டனர்.

 

விழாவின் நாயகன் மற்றும் நாயகியான சுடர் ப்ரீத்தியின் ஆட்டம் புகைப்பட கலைஞர்களால் அழகாக படம் பிடிக்கப் பட்டது.

 

“கையத் தொட்டாகூட ஓடி போவ. இப்பப் பாரு உன்கூட டேன்ஸே ஆடுறேன்” என்று சுடர் அவளிடம் கிசுகிசுக்க,

 

“நான் தான் சொன்னேனே.. உரிமம் கொடுக்க உரிமை தரேன்னு” எனக் கூறி கிளுக்கிச் சிரித்தாள்.

 

அங்கு கூட்டமில்லா இடத்தில் ஒரு இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டு, விதியே என்று அமர்ந்திருந்தான், ராஜ சிம்மன்.

 

ஆம்! சுடரின் கல்யாணத்திற்காக கருப்பசாமியால், கட்டாயப்படுத்தி வரவழைக்கப் பட்டிருந்தான்.

 

அவனால் அவ்விடத்தில் நிலையாக இருக்க முடியவில்லை.

 

பார்க்காமல் மனதில் சுமந்து கொண்டிருக்கும் பொழுதே, அத்தனை தீயாய் எரிந்தது அவன் காதல் வலி.. இன்று கண் முன் அவளைக் கண்டு, கலங்கத் துடிக்கும் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை அவனால்..

 

திருமணத்திற்கு உள்ளே நுழையும்போது நுழைவாயிலிலேயே அவள் தான் வரவேற்றாள்.

 

அவனைக் கண்டு, அவள் அதிர்ந்து போக,

 

அவனுக்கு உயிரே வற்றிப் போனது.

 

‘ப்ளீஸ்டி.. என்னை ஏத்துக்கோ’ என்று அவள் கால் பற்றி வன்மையாகக் கெஞ்சி அழுதுவிடுவோமோ என்று பயம் கொண்டான்.. அவளை வற்புறுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவதாய் அவன் உள்மனம் அஞ்சியது.

 

அழகிய பச்சை நிறப் புடவையில் பச்சரிசிப் பற்கள் சிரிக்க வளம் வந்தவளை ரசிக்கும் உரிமையும் அவனிடம் இல்லை, உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் கலையும் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

 

திருமணம் முடிந்ததும் புறப்படுவதாய் அவன் நிற்க, கருப்பசாமி கெஞ்சி அவனை இருக்க வைத்திருந்தான்.

 

தற்போது கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவும் முடியாமல், தனியே அமர்ந்து அவர்களை சங்கடப்படுத்துவதையும் தாள இயலாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

 

அங்கு கூட்டத்தில் ஆடிக் கொண்டிருந்த பிரம்மவதனியிடம் நிமிடத்திற்கு ஒருமுறை அவன் பார்வை தொட்டு மீண்டது.

 

உணர்வுகளை மூடி புதைத்து வைத்திருந்தவனிடம் கொஞ்சம் நாட்களாக, உணர்ச்சி மிகுதி..

 

தாள முடியாமல் தவித்து மறுகினான்.

 

‘உணர்ச்சிகளே இல்லையா?’ என்று கேட்டு சண்டையிட்டவளே, தனது உணர்ச்சிகளைக் கட்டிப்போட்டுவிட்ட விதியை நிந்தித்து அமர்ந்திருந்தவன், அவர்கள் ஆடி முடித்தவுடன் எழுந்தான்.

 

அனைவரும் இரவு உணவுக்காக நகர, கருப்பசாமியிடம் கூறிவிட்டு, புறப்பட எண்ணி, மேடை நோக்கிச் சென்றான்.

 

சடுதியில் யாரும் எதிர்பாராத விதமாக, அரங்கம் மொத்தமும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருள் பூசியது…

 

ராஜசிம்மன் திடீர் இருளில் திடுக்கிட்டு, அடுத்த அடி வைக்காமல் தடைபட்டு நிற்க, அவன் முகத்திற்கு நேராகப், பளீரென்ற வெள்ளை ஒளி வீசப்பட்டது.

 

அதில் கண்கள் கூசி, கரத்தால் முகம் மறைத்து அவன் திரும்பிக் கொள்ள, மெல்ல ஒளி, அவனுக்கு முன்புள்ள உருவத்தை மட்டும் காட்சிப் படுத்தியது.

 

அழகிய லாவென்டர் நிற அனார்கலி…

 

தன் முன் தெரிந்த உடையைக் கண்டதும் அதற்கு உரிமையானவளை அறிந்துகொண்ட மனம் தடதடக்க, மெல்ல பார்வையை உயர்த்தி, அவள் முகம் பார்த்தான்.

 

மென்மையினும் மென்மையான புன்னகையோடு, கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு, அவனைப் பார்த்தபடி ஒற்றைப் புருவம் உயர்த்தி நின்றிருந்தாள்.

 

பார்வைக்குப் புலப்பட்டவளின் தோரணையும் புன்னகையும், அவன் இதயத்தின் வேகத்தை இன்னும் இன்னும் அதிகரிக்க, படபடக்கும் இதயம் வெளியே குதித்து விடுமோ? என்று பயந்தவனாக, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.

 

அழகாய், அவன் முன், ஒற்றைக் கால் மடக்கி அவள் மண்டியிட, அவன் பார்வை அவள் விழிகள் கூறும் செய்தியை மொழிபெயர்க்க முற்பட்டு அதிர்ந்து கொண்டிருந்தது.

 

தன் காலுக்கருகே இருக்கும் பூங்கொத்தினை கையிலெடுத்தவள் அவனை நோக்கி நீட்ட, அவன் முடிவே செய்துவிட்டான், இது கனவு தான் என்று..

 

பளாரென்று தன் கன்னத்தில் தன்னைத் தானே அவன் அடித்துக் கொள்ள,

 

“ஹேய்..” என்று பதறி எழுந்து அவன் கரம் பற்றிய பிரம்மவதனி, “ரொமான்டிக்கா ப்ரபோஸ் பண்ண விடமாட்டியா?” எனக் கேட்டு, “கனவில்லை..” என்றாள்.

 

அவனுக்கு நம்பிக்கையே இல்லை.. ஏதோ ஆழமான உறக்கமாக இருக்குமோ? என்று நினைத்தான்.

 

அவன் முன் பூங்கொத்தை நீட்டியவள், “இந்த மண்டபமே ஓகேவா? அடுத்த முகூர்த்தத்துக்கு பிக்ஸ் பண்ணிப்போமா?” என்று கேட்க,

 

அவன் விழிகள் ஏகத்துக்கும் விரிந்தது.

 

தன் காதுகள் கேட்டவை உண்மை தானா? உண்மையில் தன்னிடம் தான் கேட்கின்றாளா? தன்னவள் தான் கேட்கின்றாளா? என்று அவன் அதிர, அவன் விழிகள் கலங்கி, பொத் பொத்தென்று இரண்டு சொட்டுக் கண்ணீர் சிந்தியது…

 

அதை மென்மையாகத் துடைத்துவிட்டவள், அவன் கன்னத்தில் கை வைத்து, “என்ன சுட்ட செங்கல் சிடுமூஞ்சி.. என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா? இல்ல நோ சொன்னதுக்குப் பழி வாங்கப் போறியா?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க,

 

அவனுக்குப் பேச்சே இல்லை.

 

“கவலைப்படாத.. நல்லாதான் பாத்துப்பேன்.. நிறைய காமெடிலாம் எடுத்து வச்சுருக்கேன். டெய்லி குட்மார்னிங் டோஸ்கு ஒன்னு, குட்நைட் டோஸ்கு ஒன்னு.. சொல்லி சிரிக்க வைக்குறேன்.. ஓகேவா?” என்று கேட்க,

 

அதற்குமேல் தாங்க முடியாமல், “பிரம்மா..” என்று காற்றாய் கரைந்தவன், கதறலோடு அவள் முன்பு பொத்தென்று மண்டியிட்டு அமர்ந்தான்.

 

“ஹேய்..” என்று தானும் பதறி அமர்ந்தவள் அவன் முகம் பற்ற முயல, அவள் கரங்கள் இரண்டையும் பற்றிக் கொண்டு, அதில் முகம் புதைத்து, விக்கி அழுதான்…

 

மெல்ல மெல்ல அவர்களைச் சுற்றியிருக்கும் விளக்குகள் ஒளிரத் துவங்க, கருப்பசாமி கண்களில் கண்ணீரோடு அக்காட்சியைப் பார்த்து நின்றான்.

 

அவன் புஜத்தினை இறுக்கிக் கொண்டு, சுபிக்ஷா அவனுக்கு ஆறுதல் கூற,

 

“அவன் இப்படி அழுது கடைசியா அந்த நாள் தான் பாத்தேன் சுபிமா…” என்று கண்ணீரும் வேதனையுமாகக் கூறினான்.

 

அங்கு வெடித்துக் கதறிக் கொண்டிருக்கும் ராஜசிம்மனைக் கண்டு, தாள முடியாமல் பிரம்மவதனியின் கண்கள் கலங்கியது.

 

“ப்ளீஸ்.. அழாத” என்று அவள் அவன் முகம் பற்ற,

 

அவளை இறுக அணைத்துக் கொண்டு இன்னும் அழுதான்…

 

“சிம்மா..” என்று மென்மையான அழைப்போடு, அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள்.

 

அவள் எலும்புகள் நொருங்கும் இறுக்கத்துடன் அணைத்தவன் அணைப்பு சொன்னதெல்லாம் அவன் வேதனை மட்டும் தான்…

 

அவளுக்கு மனம் கனத்துப்போனது..

 

“சிம்மன்.. ப்ளீஸ்” என்று மீண்டும் அவள் கரைந்தொழுகும் குரலில் கரைய,

 

“நி..நிஜமாவா?” என்று கேட்டான்.

 

இறுக்கம் பூசிய அவன் குரலில் அத்தனை நடுக்கம், அத்தனை வலி…

 

“உம்மேல சத்தியமா..” என்றவள், அவன் கலங்கிய கண்கள் பார்த்து, “உன்னை ரொம்ப காதலிக்கிறேன்.. கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்றாள்.

 

“பிரம்மா” என்று அழுதவனாய் தலை கவிழ்ந்தான்.

 

விம்மி வெடித்துக் கொண்டிருந்தான்.

 

சுற்றியிருந்த அனைவரின் கண்களும் கலங்கி பொழிந்தன.

 

அவனுக்குள் இத்தனை வேதனையும், வலியும் இருந்ததா? என்று அது அனைவரையும் வியக்க வைத்தது.

 

“சிம்மா.. ப்ளீஸ்..” என்று மீண்டும் பிரம்மா கெஞ்ச,

 

“எ..என்னை அழவிடுடி” என்று கெஞ்சினான்.

 

அவள் கண்ணீரோடு அவனைப் பார்க்க, “அ..அழனும்.. உன்கிட்ட” என்றான்.

 

உள்ளம் உடைந்தது.

 

அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

 

கண்கள் சிவந்து கன்னம் நனைய, மெல்ல விழி திறந்தவள், தன் அக்காவைப் பார்த்தாள்.

 

அவள் பார்வை தனிமை வேண்டியது.

 

சிவகாமி ராஜசேகரை நோக்க, சிறு தலையசைப்புக் கொடுத்தவன், மற்றவர்களை நோக்கி, அனைவரையும் கலைந்து செல்ல விழிகளால் பணிக்க, அனைவரும் அவ்விடம் விட்டு கலைந்து உணவு கூடத்திற்கு சென்றனர்.

 

பெரும் மண்டபம், அவர்கள் இருவர், அவர்களுக்கான தனிமை…

 

பிரம்மவதனியைக் கட்டிக் கொண்டு கதறியவன், “செத்துகித்துப் போயிடுவேனோனு பயமா இருந்துச்சுடி” என்க, அவளுக்கு உயிர் துடித்து உருகியது.

 

“நி..நிஜமா என்னாகப் போகுதோனு பயந்துட்டே இருந்தேன் பிரம்மா.. சத்தியமா ரொம்ப பயமா இருந்துச்சு. இங்க வரவே மாட்டேன்னு எவ்ளோ கெஞ்சினேன் தெரியுமா? உன்னைப் பாத்துட்டு உசுரோட இருக்க முடியலடி.. எ.. எப்படி? எப்படி இவ்ளோ அடிக்ட் ஆனேன்னு நிஜமா தெரியல எனக்கு. உன் கையப் பிடிச்சுட்டு, பிடிக்காட்டியும் பரவால்ல என்னைக் கல்யாணம் பண்ணிக்கோயேன்டினு கெஞ்சிடலாம் போல இருந்துச்சு.. உன்னை ஹர்ட் பண்ணி இன்னும் உனக்குப் பிடிக்காதவனா ஆகிடுவேனோனு பயந்து, உயிரே போற போல வலிச்சுது” என்று ராஜசிம்மன் கூற,

 

பிரம்மவதனி கண்கள் ரத்தமென சிவந்தன.

 

தன்மீது இத்தனைக் காதலை சுமப்பவனைத் தனக்கு ஏன் முன்பே பிடிக்கவில்லை? என்று வருந்தினாள். காதல் என்ன சொன்னதும் வந்துவிடும் வளர்ப்புப் பிராணியா? அதை மெல்ல மெல்லத்தானே உணர இயலும்? அப்படி மெதுவாக, மென்மையாக உணரப்படும் காதலின் ஆழமே தனி தானே?!

 

“இப்பக்கூட, இது கனவா இருக்குமோனு பயமா இருக்கு பிரம்மா” என்று கூறியவன் அவளைப் பார்த்து, “கனவில்ல தானே? வி..விட்டுட்டுப் போயிட மாட்டல்ல?” என்று கேட்க,

 

கண்ணீரோடு அவனைப் பார்த்தவள், அது கனவல்ல என்பதை உறுதி செய்யும் விதமாக, அவன் கன்னம் பற்றி, மென்மையினும் மென்மையாய், அவன் இதழ்களை சிறை செய்தாள். காவலதிகாரி சிறைப்பட்ட தருணமாய்…

 

பெண்ணவள் அவன் இதழ்களில் காதல் கவி வரைய, அவள் செயலில் முதலில் அதிர்ந்து, பின் மெல்ல மெல்ல கரையப் பெற்றான்.

 

அப்பெரிய அரங்கத்தின் அலங்கார பூக்களின் வாசம் மட்டுமே, அவர்கள் முதல் சஞ்சலத்தின் வாசம் மிகுந்த சாட்சியாய்…

 

அவன் இதழ்களில் ஆழப் புதைந்து மீண்ட பூவவள், அவனை இறுக அணைத்துக் கொண்டு, அவன் முதுகை மென்மையாக தடவிக் கொடுக்க, கூடு சேர்ந்த பறவையாய், அவளுக்குள் பொருத்தினான்.

 

நிமிடங்கள் மெழுகாய் ஒழுகிக் கரைய, மெல்ல அவனிடமிருந்து பிரித்தாள்.

 

அவள் இடைதனை வளைத்துப் பற்றியிருந்தவன் அவள் கண் பார்த்து, கவி படித்த நினைவுகளில் சற்று வெட்கம் கொண்டு, விலக, அவளுக்கு சிரிப்பு எட்டிப் பார்த்தது.

 

“இறுக்கத்தைத் தவிர எதுவுமே இல்லையானு கேட்ட ஒருத்தர்கிட்ட ஒரே நாள்ல எத்தனை உணர்வுகளைப் பார்க்குறேன்.. வெட்கமெல்லாம் படுற” என்று பிரம்மா சிரிக்க,

 

அவளை சோபையான புன்னகையுடன் பார்த்தான்.

 

அவன் தலையை பரிவாகக் கோதியவள், “சிரிக்கும்படி பாஸ்ட்ல எதுவுமே நடக்கலைனு சொன்னல்ல? கவலைப் படாத.. இனிமே எப்பவும் சிரிக்க வச்சுப் பாத்துக்க நான் இருக்கேன்” என்க,

 

மீண்டும் அவன் கண்கள் உடைப்பெடுத்தன.

 

“ப்..பிரம்மா.. நான்..” என்று அவன் பேச விழைய,

 

“ஷ்ஷ்..” என்று அவன் இதழில் விரல் வைத்தவள், “எனக்கு எல்லாம் தெரியும்” என்றாள்.

 

ராஜசிம்மன் அவளை அதிர்வோடு நோக்க, “எல்லாம் தெரியும்.. ஒன்னுமே இல்ல.. பழசை யோசிச்சு வருத்தப்படாம என்கூட சேர்ந்து அழகான பியூச்சர மட்டும் யோசி” என்றாள்.

 

“எ..எப்படி?” என்று ராஜசிம்மன் கேட்க,

 

தனது அலைபேசியை எடுத்து, அந்த பொய் கணக்கைக் காட்டினாள்.

 

அவன் அதிர்ந்துபோய் அவளைப் பார்க்க, “உங்களைப் பத்தித் தெரிஞ்சுகிட்டா, நோ சொன்னதுக்கு கில்ட் இல்லாம இருக்குமேனுதான் முன் வந்தேன்.. என்னமோ தெரியல.. விலக நினைச்ச மனசு ரொம்ப நெருங்கிடுச்சு.. கருப்பு சார்கிட்ட உங்க பாஸ்ட் லைஃப் கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.. மனசு ரொம்ப கனமாகிடுச்சு.. அப்படியே அமைதியா விட்டுடுவோம்னு பாத்தேன்.. முடியல.. கொஞ்ச நாள் உங்கட்ட பேசாம இருந்தா சரியாகிடும்னு நினைச்சுட்டே ஃபேக் ஐடில கடலை போடுவேன். இன்றே கடைசினு எனக்கு நானே சொல்லிச் சொல்லி, இது வேலைக்கு ஆகுதுனு லவ் சொல்லுற முடிவுக்கு வந்துட்டேன். என்ன வீட்ல ஓகே பண்றது தான் மலையை புரட்டிப் போடும் கதையா இருந்துச்சு. கருப்பு சார்கிட்ட எப்படியாவது சுடரண்ணா கல்யாணத்துக்கு அவர வர வச்சுடுங்கனு கெஞ்சி, ப்ரபோஸ் பண்ணி சக்ஸஸ் ஆக்கிட்டோம்ல?” என்று பெருமை கொண்டாள்.

 

அவனிடம் பெரும் ஆச்சரியம்.

 

ராஜசிம்மன் தனது ஐந்து வயது வரை, அழகான குடும்பத்தில் வாழ்ந்த குழந்தை தான். நடுத்தரத்திற்கு மேற்பட்ட குடும்ப நிலை. கேட்டதும் கைக்கு வரும் செல்வம் என்று அழகானது அவனது முதல் ஐந்து வருடம்…

 

அவன் குடும்பத்தில் அதீத சண்டை ஒன்று அன்றைய இரவை கெடுத்தது. காரணம், ராஜசிம்மன் தான்.. அவன் தாய் மற்றும் தந்தைக்கு, ராஜசிம்மன் அவனது தந்தையும் உயிரணுவில் உதித்தக் குழந்தை இல்லை என்பதே அந்த சண்டைக்கானக் காரணம்…

 

அவன் தாய் அமுதாவிற்குத் தெரியாமல், அவனது தந்தையின் நண்பர், போதை மருந்து கொடுத்து, அவரை தன் இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டது, போதையில் அவன் உளறல் மூலம் அவனது தந்தை ரத்தினத்திற்குத் தெரிய வந்தது.

 

மனைவிக்கு நடந்த அநீதியை எண்ணி மனம் உடைந்து போனவருக்கு, ராஜ சிம்மன் காதோரம் இருந்த மச்சம், தன் நண்பனின் உயிரணு கொடுத்த பரிசென்பது அப்போதுதான் புரிந்தது.

 

ஏனோ ஏற்க முடியவில்லை அவரால்.

 

தன்னிடம் ஆசையாக ஓடிவந்த மகனைக் கண்டு, கண்மண் தெரியாத ஆத்திரம் பிறக்க, அந்த கோபத்தில் அந்த மச்சத்தினில் மெழுகுவர்த்தி தீயை நீட்டி சூடு வைத்தார்.

 

தோள் பொசுங்கி குழந்தை கதறியதைக் கேட்டு அமுதா பயந்தோடி வர, கணவர் செய்யும் செயல் அவரை திகைக்க வைத்தது.

 

“அய்யோ ராஜ்” என்று மகனை அள்ளி மாரோடு அணைத்துக் கொண்டவர், “என்ன காரியம் பண்றீங்க?” என்று கத்த,

 

“இவனைப் பாக்கப் பாக்க எனக்கு ஆத்திரமா வருது” என்று கத்தினார்.

 

அந்த வார்த்தைகளைக் கேட்கப் பெற்ற ராஜசிம்மனுக்கு வயது ஐந்து தான்.. ஆனால் இன்றளவும் அந்த வார்த்தைகள் அவன் நினைவில் அழியாமல் உள்ளது விந்தை…

 

ஏனென்று கேட்டு அழுத அமுதாவிடம் நடந்தவற்றை ரத்தினம் கூற, அமுதா திகைத்து விட்டார். பெரிதாக பெண்ணிய எண்ணமில்லாத, சாதாரண பழைய எண்ணங்கள் கொண்ட அமுதாவுக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

 

தன் பிள்ளை, தன் கணவருக்கு உரிய குழந்தை இல்லையா? தான் தன் கணவருக்கு உண்மையாக இல்லையா? என்ற எண்ணங்கள் அவரைத் தீயாய் தாக்க, அதன் உஷ்ணம் தாளாமல், கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

 

மனைவியின் முடிவில், தான் இவற்றை சொல்லியிருக்கக்கூடாதோ? என்று காலம் கடந்து யோசித்திருந்தார், ரத்தினம். ராஜசிம்மனைக் காணக் காண, தன் வாழ்வும், தனது காதலுக்கு உரிய மனைவியின் உயிரும் நிலைகுலைந்து போனதற்கு அவன் தான் காரணமென்ற கோபம் பற்றி எரிந்தது.

 

அதன் விளைவாக, அவனைக் காணக்கூடப் பிடிக்காது பார்த்துக் கொள்ள விரும்பாமல் ஒதுக்கினார்.

 

அப்போது அவரது அண்டை வீட்டிலிருந்த ஃபிளோமினா தான், அவனைத் தங்கள் ஆசிரமத்திற்குத் தத்துக் கொடுக்கக் கூறினார்.

 

எதுவும் யோசியாமல் அவனை ஒப்படைத்துவிட்டு கண்காணாமல் எங்கோ சென்றிருந்தார். அத்தோடு அவன் வாழ்வு சீரானதா என்றால் இல்லை.

 

அவனுக்குப் பத்து வயதிருக்கும் போது, அவனை ஆசையாக ஒரு தம்பதியினர் வந்து தத்தெடுத்தனர். ஆனால் அவன் வந்த மூன்றே நாட்களில், நாளுக்கொரு அசம்பாவிதம் அவர்கள் வீட்டில் எதேர்ச்சியாக நடந்தது. அவன் வந்த நேரம் சரியில்லையென்று வீட்டுப் பெரியவர்கள் தூற்ற, அவற்றைக் கேட்ட சிறுவன் மனமொடிந்து போனான். வேறு வழியில்லாமல், மீண்டும் அதே ஆசிரமத்தில் அவனைக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தனர்.

 

அத்தோடு வாழ்க்கையில் சிரிப்பதற்கு காரணங்கள் இல்லாமல் போனது அவனுக்கு. எதிலும் நாட்டமில்லாமல், தன்மீதும் பிடிப்பில்லாமல், விதிக்கு ஒரு வாழ்வை வாழ்ந்தான். தனக்காக வாழ முடியாத வாழ்வில் பிறருக்காவாவது தன்னை அர்ப்பணிக்கலாம் என்றுதான் காவல் பணியைக் கையிலெடுத்தான். அது அவனை இன்னும் இருக்கமாக்கியது. அதிலும், சில ஆண்டுகள் முன்பு, அவனது தந்தையாகப் பட்டவரை, தன் சொந்த கரங்களால் போதை பொருள் வழக்கில் கைது செய்த போதும், அவனுக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச ஈரமும் இல்லாமலே போனது…

 

இவற்றையெல்லாம் கருப்பசாமி மூலம் தெரிந்து கொண்ட பிரம்மவதனிக்கு, அவனை ஜடம் என்று தூற்றியது எத்தனைப் பெரிய கொடிய செயல் என்று புரிந்து, குற்ற உணர்ச்சித் தாக்கித் தவிக்கச் செய்தது.

 

தன்மீதான அவன் காதல் அவனுக்குக் கொடுத்தக் காயத்தை, தன் காதலால் சீர் செய்திட சித்தமானவள் மனமெல்லாம் அவன் ஒருவன் மட்டுமே நிறைந்து போனான்.. தன் மனதை முழுதாக அவள் உணர்ந்த நொடி சிவகாமி மற்றும் ராஜசேகரிடம் வெளிப்படுத்தி, காத்திருந்து, கொஞ்சம் சண்டைகள் போட்டு போராடி, அவர்கள் சம்மதத்தையும் பெற்றிருந்தாள். 

 

கருப்பசாமி மேல் இருந்த அளவு நல்ல அபிப்ராயம் ராஜ சிம்மன் மேல் அங்கு பெரியவர்கள் யாருக்கும் இல்லை. அதனால் சிவகாமி பிடியாக அதை மறுத்தார். தங்கைக்கு வந்திருப்பது வெறும் ஈர்ப்பாகத்தான் இருக்கும் என்று ஸ்திரமாக நம்பிய சிவகாமி, உண்ணா விரதத்திலிருந்து, கண்ணீர் வடித்து பேசுவது, திட்டுவது, ஏன் அடிக்கும் வரை கூட சென்றுப் பார்த்தார். ராஜசேகரும் கூட அவளிடம் பேசி புரிய வைக்க முயன்றார். அவள் தன் பிடியில் அத்தனை உறுதியாக இருந்து, கடைசில் பேசிப் புரியவதைத்து அவர்களை இறங்கிவர வைத்திருந்தாள்.

 

‘நீங்க ஆயிரம் நல்ல மாப்பிள்ளைய நீட்டலாம். ஆனா என் சிம்மன் அத்தனைக்கும் அப்பார்ப்பட்ட காதலை சுமக்குறவன்.. அந்த பாரத்தை சுமக்குற தன்மையும், என்னை என் இயல்புபோல காதலிக்குற அவன் பாங்கையும் இதுக்கு முன்ன யாருட்டயும் பாக்கலை, இனி பார்த்தாலும் அது எனக்கு மனசுல பதிய போறதில்ல.. எனக்கு அவன் வேணும். அவனுக்கு நான் மட்டும் தான் வேணும்.. என்னால இனியும் அவனை வதைச்சு, சாக முடியாது க்கா’ என்று கண்ணீரோடு தைரியமாக அவள் கூறிய வார்த்தைகள் அவர்களை அசைத்திருந்தது.

 

நடந்தவற்றை பிரம்மவதனி சொல்லி முடிக்கும் நேரம், உணவை முடித்துக்கொண்டு மற்றவர்கள் வந்து சேர்ந்தனர்.

 

அழுத வடிந்த முகமாய் இருவரும்… ஆனால் கண்களில் பல மாதங்களாய் ராஜசிம்மனும், சில நாட்களாக பிரம்மவதனியும் தொலைத்துவிட்ட உயிர்ப்பு மீண்டிருந்தது…

 

இருவரும் மற்றவர்கள் வருகை கண்டு எழுந்து நிற்க, ராஜசிம்மன் மனமெல்லாம் நிம்மதியெனும் பெரும் அலை வந்து, வலியெனும் பாரத்தை அடித்துச் சென்றிருந்தது.

 

அவனால் அவன் நிம்மதியை வார்த்தைகளில் சொல்லிட இயலாது… ஏனென்று தெரியாமல் ஒருத்தியிடம் காதல் கொண்டு, அவன் சுமந்த வலியும் தவிப்பும், இன்று அதே பெண்ணால் கலையப்பெற்றுள்ளது. இதெல்லாம் எப்படியான வரம்?

 

பிரம்மவதனிக்கு அவனைப் பேசிவிட்ட வார்த்தைகளின் குற்ற உணர்வு வதைத்தாலும் சொன்னதை மாற்ற இயலாது, இனி வருவதை நினைத்து அவனை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம்…

 

இருவரின் உணர்வுகள் வெவ்வேறு விதமாக இருந்தாலும், அச்சாணி காதல் தானே!?

 

“என்னப்பா ராஜ்… என்னையெல்லாம் நினைவிருக்கா? இல்ல காதல் பித்துல மறந்துட்டியா?” என்று கருப்பசாமி கேட்க,

 

நண்பனை மனமார அணைத்துக் கொண்டவன், “தேங்க்ஸ்டா” என்றான்.

 

“அவ்ளோ தூரமாயிட்டேனா நானு?” என்று சண்டை போட்டபோதும் கருப்பசாமி அவனை அணைத்துக் கொள்ள,

 

“ரொம்ப தூரம் போக முடியாட்டியும் எனக்கு இடம் விட்டுத் தள்ளியிருந்துக்கோங்க சார்… ஷேர் எல்லாம் பண்ண முடியாது” என்று பிரம்மா மிதப்பாய் கூறினாள்.

 

ராஜசிம்மன் இதழ்கள் பூவாய் மலர்ந்தன.

 

“அம்மாடியோ… எனக்கே இடமில்லையா” என்று கருப்பு சோகம் போல் கேட்க,

 

“எனக்கான இடத்தில் உங்களுக்கு இடமில்லை” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினாள்.

 

“சிவாக்கா… நீ நல்லா தர்ம அடி குடுப்பனு பாத்தேன்” என்று சுடர் சிரிக்க,

 

“என்ன செய்ய? கொடுக்கத்தான் கட்டை கிட்டையெல்லாம் தூக்கினேன்… மேடம் மசியவே இல்ல… அடிச்சா கூட அடி அவரதான் கட்டுவேன்னு நின்னா… என் தங்கச்சியோட அழுத்தத்துக்கு அவ காதலும் காதலுக்குறியவரும் வர்த்துனு புரிஞ்சுது. அதனால சம்மதிச்சுட்டோம்” என்று சிவகாமி கூறினாள்.

 

ராஜசிம்மன் தனக்காக அவள் தனியாகப் போராடியிருக்கின்றாள் என்பதை கேட்ட நொடி, அத்தனை இன்பம் கொண்டான். அவளுக்குத் தன்மீது காதல் பிறந்திருப்பதில், உள்ளம் உருகி நின்றான்.

 

“சரி சரி… அப்ப அடுத்து பிரம்மாக்கு கல்யாணத்தப் பண்ணுங்க… நம்ம அபூர்வா அண்ணா படிச்சதும், மத்த ரெண்டு கல்யாணத்த ஒன்னாவே வச்சுடலாம்” என்று ப்ரீத்தி கூற,

 

“பெரிய மனுஷி சொல்லிட்டாங்க” என்று சுபி மற்றும் சிவப்ரியா ஒன்று போல் கூறி சிரித்தனர்.

 

அவர்கள் சிரிப்பொலியோடு பெரியவர்களின் சிரிப்பொலியும் தொடர, அவ்விடத்தில் அன்பும் ஆனந்தமும் அந்தாதியாய் இனித்து இசைந்தது…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்