
எபிலாக்:
அழகிய நான்கு வருடங்களுக்குப் பிறகு…
அந்த அதிகாலை வேளை, அத்தனை அழகாக விடிந்து, அனைவரின் மனதிலும் இன்பமான சாரல்களை வீசிக் கொண்டிருந்தது.
அழகாகவும் அளவாகவும் இருக்கும் அவ்வீட்டின் மூன்று படுக்கையறைகளிலும், வெவ்வேறு விதமான உணர்ச்சிகள்…
“ப்ச்… லேட்டாகுது..” என்று மெல்லிய நாணம் கலந்த குரலில் பிரம்மா கூற,
“ஆகட்டும்..” என்றபடி, அவள் கற்றைக் கூந்தலில் மோகத்தின் வாசம் பிடித்துக் கொண்டிருந்தான், ராஜசிம்மன்.
“என் புள்ள வந்துடப்போறான்” என்று பிரம்மா கூற,
“அதென்னடி உன் புள்ள? நாயில்லாமலா பெத்துகிட்ட?” என்று நக்கல் செய்தான், ராஜ சிம்மன்.
“வரவர கொழுப்பு கூடுது மிஸ்டர் சுட்ட செங்கல்..” என்றபடி அவன் அணைப்பிலிருந்து அவள் விலகி எழ முற்பட, அவளை இழுத்துத் தன்மீது போட்டுக் கொண்டவன், “கொழுப்பு எனக்கில்லை.. உனக்குத்தான் ஏறுது” என்று அவள் கன்னம் கடித்தான்.
“ஸ்ஸ்..” என்று வலியில் குரல் எழுப்பியவள், “சிம்மா..” என்று பல்லை கடிக்க,
“கொஞ்ச நேரம்டி.. ஏதோ நேத்துத்தான் அப்பனுக்கு பாவம் பாத்து நம்ம புள்ள அவன் தாத்தாகூட தூங்குறேன்னு ஓடிருக்கான்.. எத்தனை மாசமாச்சு தெரியுமா உங்கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ணி? நானே ஒரு மாசம் கேஸ் கேஸ்னு பெங்களூருல அலஞ்சுட்டு வந்தா, நம்ம புள்ள அம்மா அம்மானு என்னேரமும் உன்னையே சுத்தி வரான்.. சத்தியமா சொல்றேன்டி.. பொறாமையா இருக்கு” என்று ராஜசிம்மன் கூறினான்.
அவன் குரலில் அப்பட்டமான ஏக்கம்.. உணர்ச்சிகளை இழந்தவனிடமிருந்து ஊற்றெடுக்கும் உணர்வுகள் எப்போதும், அவளுக்காக மட்டுமே, இன்றளவும் பிறக்கின்றன… அதில் அவளுக்கு காதல் கொடுக்கும் தனி கர்வ மகுடம் முகத்தில் நாணமாய்..
“இப்பவே பொறாமை பட்டா எப்படி? இன்னொரு என்ட்ரி வேற இருக்கு” என்று தன் மேடு தட்டிய ஐந்து மாத சூழ் தாங்கிய வயிற்றைத் தேய்த்தபடி அவள் கூற,
அவள் மணிவயிற்றில் முத்தம் வைத்தவன், “வரட்டும்.. எத்தனை வந்தாலும் நான் தான் உனக்கு ஃபர்ஸ்ட்” என்றான்.
“எத்தனை வந்தாலுமா? ஹல்லோ ஹல்லோ.. ரெண்டு தான்.. எக்ஸ்ட்ரா வேணும்னா தத்து எடுத்துக்கோ” என்று அவள் கூற,
“எடுத்துப்போமா? நான் வளர்ந்த ஆசிரமத்துலருந்தே” என்று ஆசையாகக் கேட்டான்.
மென்மையான புன்னகையுடன் அவன் முகம் வருடியவள், “தாராளமா எடுப்போம்” என்க,
அவன் முகத்திலும் கனிவு கூடியது.
அவன் நுனிமூக்கில் முத்தமிட்டவள், “நம்ம தோழர்களின் குழந்தைகளுக்கு முதல் பிறந்தநாள்.. போய் ரெடியாக வேணாமா?” என்று கேட்டாள்.
சட்டென்று, “வேணாம்” என்று ராஜசிம்மன் கூற,
“குழந்தை மாதிரி பண்ற சிம்மா” என்று சிரித்தாள்.
“உன்னாலதான்டி… நான் பாட்டுக்கு உன் பாஷைல சுட்ட செங்கல் போல சுத்திட்டு இருந்தேன். வந்து எனக்குள்ள இல்லாததையெல்லாம் பண்ணி, அழவச்சு, கட்டிப் புடிச்சு, இச்சு வச்சு, கல்யாணம் பண்ணி, கொஞ்சம் கூட கேப் குடுக்காம, நைட்டே..” என்று பேசிக் கொண்டே போனவன் வாயைப் பொத்தியவள், “வெட்கமே இல்லையா?” என்று நாணத்தில் செவ்வரளியாய் சிவக்கக் கேட்டாள்.
“உன்கிட்டத்தான? இல்ல இல்ல” என்று அவன் கூற, சிரித்தபடி அவனை சரிகட்டி எழுந்து தயாராகச் சென்றாள்.
அங்கு மற்றொரு அறையில், அழகுபட பச்சை வர்ண பட்டுடுத்தி, அழகோவியமாகத் தயாராகிய சுபிக்ஷாவின் புடவை மடிப்புகளைக் கீழே அமர்ந்து சரிசெய்து கொண்டிருந்தான், கருப்பசாமி.
அழகிய புன்னகையோடு அவனைப் பார்த்தவள், அவன் எழுந்ததும், தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.
புடவைக்குத் தோதான அழகான நகைகள் பூட்டி, அவள் அழகுபட தயாராகியிருக்க, “ப்ச்.. என்னமோ குறையுதே” என்று நாடி தட்டிக் கொண்டவள், தன் கன்னத்தை அவன் பக்கம் காட்டி, “ஒன்னு குடுங்க” என்றாள்.
அதில் முத்து முறுவல்கள் தெரிய புன்னகைத்தபடி அவள் முகம் பற்றியவன் இரண்டு கன்னத்திலும் அழுத்தமாய் முத்தம் வைக்க, அவன் தீண்டலில் சிவக்கும் கன்னத்தைத் தட்டிக் கொண்டு, “இப்பத்தான் பெர்ஃபெக்ட்டா இருக்கு” என்றாள்.
அதில் காதல் கணவனாய் அவனுக்கு அப்படியொரு சந்தோஷம்..
உறங்கும் தங்கள் குழந்தைக்கு முத்தம் வைத்து எழுப்பி, குளிக்க வைத்து புத்தாடை உடுத்தி அவன் கொண்டு வந்து கொடுக்க, “என் தங்கம்” என்று மகனுக்கு முத்தங்களிட்டுக் கூறினாள்.
தானும் சென்று தயாராகி வந்த கருப்பசாமியைக் கண்கள் நிறைக்க ரசித்தவள், அவனுக்கும் நிலைகண்ணாடிக்கும் இடைப்பட்ட இடத்தில் புகுந்து கொண்டு, அவன் சட்டைப் பட்டாக்களை அணிவித்தாள்.
“நாயென்ன தீரனாடி?” என்று சிரித்தபடி அவன் கேட்க,
“ஏன்? குழந்தைக்குத்தான் போட்டுவிடனுமா? நீங்க எனக்கு மடிப்பு வச்சுக் கொடுத்தீங்க தானே? நான் பட்டன் மாட்டி விடுறேன்” என்று காதல் தர்க்கம் புரிந்தாள்.
அதில் சிரித்தபடி அவளை இடையோடு அணைத்தவன் சட்டென்று நினைவு பெற்றவனாய் திரும்பிப் பார்க்க,
“இல்ல இல்ல.. வெளிய தூக்கிட்டுப் போனேன், சரியா பிரம்மா வந்தா. நான் லவ்ஸ் பண்ணனும் கொஞ்ச நேரம் வச்சுக்கோடினு அவனைக் குடுத்துட்டு வந்துட்டேன்” என்றாள்.
“அடியே..” என்று வெட்கத்தில் கருப்பசாமி பல்லைக் கடிக்க,
“ச்ச! அழகுபா நீங்க” என்றவள் அவன் சட்டைக் காலரைப் பற்றி மூக்குடன் மூக்குரச,
“உன்னவிடவா?” என்றவன், அவள் இதழோடு இதழ் பொருத்தி, தன் காதல் தடம் பதித்து நின்றான்.
அந்த மற்றொரு அறையில் இதம் என்ற வார்த்தையே தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தது.
“டேய்.. அப்பா சொல்றேன்லடா தங்கம்? இங்க வாடா குட்டிமா” என்று அபூர்வன் கத்திக் கொண்டே அவ்வறையில் சுற்றிச் சுற்றி தத்தை நடையிட்டு தப்ப முயன்ற தனது மகள் அமிர்தாவை தூக்கிக் கொண்டான், அபூர்வன்.
“ப்பா..ப்பா..” என்று கத்தி அவள் ஊரையே கூட்ட,
“ஷ்ஷ்.. பாப்பா” என்று சப்தம் போட்டான்.
அவ்வளவு தான்.. குழந்தை மீயாவென்று இதழ் பிதுக்கி கண் கலங்கி பாவமாய் அவனைப் பார்க்கவும்,
‘அச்சோ…’ என்று அபூர்வன் முகம் அதில் சுருங்கிவிட,
அடக்கப்பட்ட புன்னகையுடன் அமைதியாகத் தன் சொல் பேச்சு கேட்டு அமர்ந்திருக்கும் மகனை அலங்கரித்துக் கொண்டிருந்தாள், சிவப்ரியா.
‘சொட் சொட்’ என்று தன் ஆழி போன்ற கண்களிலிருந்து குண்டு கன்னங்களுக்கு அமிர்தா எனும் ஒரு வயது குழந்தை கண்ணீர் பாசனம் செய்து அழத் துவங்க,
“அச்சோ.. பாப்புமா.. அப்பா சும்மாதான்டா.. சரிடா சரிடா” என்று தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தான்.
சிவப்ரியா தயார் செய்த தனது மகன் அர்ஜுனுக்கு முத்தம் வைத்து, “என் தங்கம்டா குட்டிப்பா” என்று கொஞ்ச,
அவனும் கிளுக்கிச் சிரித்து அன்னையைக் கழுத்தோடு கட்டிக் கொண்டான்.
அவர்கள் சப்தத்தில் அவர்களை நிமிர்ந்து பார்த்த அபூர்வன் பார்வையில் அப்பட்டமான கோபம்.
“ப்பா..” என்று இதழ் பிதுக்கி அமிர்தா அவனை அணைத்துக் கொள்ள, குழந்தையின் கண்ணீர் துடைத்து, முத்தம் வைத்து, “சரிடா தங்கம்.. அப்பா தானே.. இங்கப்பாரு.. பாப்புக்கு பர்த்டேல? புது டிரஸ் போடனும்ல?” என்று கொஞ்சி கெஞ்சி எப்படியோ சிரிக்க வைத்து புத்தாடை உடுத்தி முடித்தான்.
இரண்டு குழந்தைகளையும் தயார் செய்ததும், நிற்க வைத்து சிவப்ரியா அழகழகாய் புகைப்படம் எடுக்க, அபூர்வன் அக்காட்சியை புன்னகையுடன் பார்த்தான்.
“என்ன மிஸ்டர் அபூ.. ரெடியாகுற மனசில்லையா?” என்று சிவப்ரியா கேட்க,
“உன் புள்ளைக்கு மட்டும் முத்தமெல்லாம் குடுத்து ரெடி பண்ணின.. எனக்கில்லையா?” என்று கேட்டான்.
“ஆஹாங்.. ஆசைதான்” என்று அவள் குழந்தைகளிடம் வந்து, “வாங்க போலாம்..” என்க,
“ஆசைதான்” என்று முனகிக் கொண்டான்.
அதில் கிளுக்கிச் சிரித்தவள் குழந்தைகளோடு கூடத்திற்கு வர, பிரம்மவதனி மற்றும் ராமராஜன் ஏற்கனவே இரண்டு குழந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.
“இதுகளையும் பார்த்துக்கோடி.. நான் ரெடியாகிட்டு மட்டும் வரேன்” என்று சிவப்ரியா கூற,
“நாசூக்கா சொல்றாங்களாம்ப்பா” என்ற பிரம்மா, “இன்னும் ரெண்டு டம்பிளர் எக்ஸ்ட்ரா பால் கலக்கு சிம்மா” என்று சமையலறை பக்கம் குரல் கொடுத்தாள்.
ராஜசிம்மன் எட்டிப் பார்த்து, “ரைட்டு” என்க,
ராமராஜன் வாய்விட்டு சிரித்துக் கொண்டார்.
அதில் நாணத்துடன் சிரித்துக் கொண்டு அறைக்குள் அவள் நுழையவும் தன் கைசிறையில் அபூர்வன் இழுத்துக் கொள்ள, அவள் இதழில் வெட்கப் புன்னகை…
செல்ல குறும்புகளோடு தயாரான அபூர்வன் தன்னவளோடு வர, கருப்பு மற்றும் சுபிக்ஷாவும் வந்தனர்.
வாயிலில் வாகனம் நிறுத்தும் சப்தம் கேட்க,
“ஐ..ஐ..” என்று துள்ளி குதித்தான், பிரம்மவதனி மற்றும் ராஜசிம்மனின் மூன்று வயது ஆண் குழந்தை சித்தார்த்தன்.
“குதிக்காதடா.. வருவாங்க” என்று பிரம்மா மகனைப் பிடித்து வைக்க,
சிவகாமி, ராஜசேகர், அவர்களது பத்து வயது மகன் யுவன், பிரபா, சுந்தர், ஆகியோரோடு, சுடரொளிவானன், ப்ரீத்தி, அவனது மூன்றரை வயது பெண் குழந்தை சாதனா மற்றும் ஆறு மாத இரண்டாம் பெண் குழந்தை பிரார்த்தனா வந்தனர்.
வீடே அத்தனை ஆனந்தம் கொண்டது…
இந்த அழகிய நான்கு வருடங்களில் அழகழகான மாற்றங்கள் நிகழ்ந்திருந்தது.
திருமணம் முடித்து, சுடர் காட்டிய காதலின் அழகிய பக்கங்களில் திளைத்து, அடுத்த வருடமே தன் முதல் குழந்தையை ஈன்றெடுத்த ப்ரீத்தி, இதோ ஆறு மாதங்கள் முன்பு தான் இரண்டாம் மகவையும் ஈன்றெடுத்திருந்தாள்.
சுடர் திருமணம் முடிந்த இரண்டே மாதங்களில் பிரம்மா ராஜசிம்மனின் திருமணம் முடிந்து, திருமண வாழ்வின் சாட்சியாய் தங்கள் முதல் ஆண் குழந்தையான தீரனை ஈன்றெடுத்து, தற்போது அடுத்தக் காதல் பரிசை மணி வயிற்றில் சுமந்து கொண்டிருக்கின்றாள், பிரம்மா.
அபூர்வனின் சிகிச்சையும் அவனது படிப்பும் முடிய இரண்டரை வருடங்கள் ஆகிவிட, பச்சை நிறமும், அதனை தூண்டும் மரபணுவும் அவனிடமிருந்து நீக்கப்பட்டிருந்தது. அதனில் நிறம் மாறி, அடர் கருமை நிறத்திற்கு அவன் வந்திருக்க, முதல் போல் அதை கண்டு மனம் வருந்தாமல், தன்னையும் தன் உடலையும் மதித்து, தன்னவள் துணையோடு நேசிக்கத் துவங்கியிருந்தான்.
அபூர்வன் இளநிலை மருத்துவம் முடித்ததும், கருப்பசாமிக்கு கிண்டி வனத்துறை அலுவலகத்தில் வேலை மாற்றப்பட, அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து பணிபுரியத் துவங்கினான், அபூர்வன்.
அபூர்வன் சிவப்ரியா, கருப்பசாமி சுபிக்ஷா திருமணம் ஒன்றாக நடந்ததோடு, பெண்கள் கரு தரித்தது, இருவருக்கும் குழந்தை பிறந்ததும் ஒரே நாளில் நிகழ்ந்தது தான் அத்தனை அழகிய தற்செயலாக விளங்கியது… ஒரே வித்தியாசம், சிவப்ரியாவிற்கு ஆண் ஒன்று பெண் ஒன்றாக இரட்டைக் குழந்தைகள், சுபிக்ஷாவிற்கு ஒரு ஆண் குழந்தை.
தற்போது அந்த மூன்று குழந்தைகளின் முதல் வருட பிறந்தநாளைக் கொண்டாடத்தான் அனைவரும் கூடியுள்ளனர்.
பெரியவர்கள், இளையவர்கள், குழந்தைகள் என்று அவ்வீடே அத்தனை ஆனந்தம் கொண்டிருந்தது.
கருப்பசாமி மற்றும் அபூர்வனுடன் ராஜசிம்மனும் இணைந்துகொள்ள, மூன்று தம்பதியர்கள் மற்றும் ராமராஜனுடன் அவ்வீடு அத்தனை ஆனந்தம் கொண்டது.
“ஹே குட்டீஸ்.. ஹாப்பி பர்த்டே” என்று ப்ரீத்தி அக்குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்ச,
“ம்மா ம்மா..” என்று தன்னைவிட்டு வேறு ஒருவரை அன்னை கொஞ்சுவதைக் கண்டு, சாதனா இதழ் பிதுக்கினாள்.
“நான் பண்ண வேண்டியதெல்லாம் நீ பண்றியா வாண்டு” என்று சுடர் தன் மகளை அள்ளிக் கொஞ்சி முத்தம் கொடுக்க,
“ஓஹோ..” என்று தோழிகள் மூவரும் கேலியாய் கோஷம் போட்டனர்.
அதில் வெட்கம் கொண்ட ப்ரீத்தி, “ப்ச்..” என்று சுடரை முறைக்க,
தன்னவளைக் காதலாய் பார்த்த சுடரும் சிரித்துக் கொண்டான்.
அனைவருமாகப் புறப்பட்டு, கோவிலுக்குச் சென்று, ஆசிரமம் ஒன்றில் அன்றைய நாள் முழுதும் தங்கள் செலவில் உணவுகள் ஏற்பாடு செய்து, சின்னச் சின்ன உபயோகப் பொருட்களையும் பரிசாக வழங்க, அக்குழந்தைகளின் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட சந்தோஷம் தோன்றியது.
அதை கண்ட ராஜசிம்மனும் கருப்பசாமியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்ள, சுடரும் அபூர்வனும் அவர்கள் தோளில் கரமிட்டு தட்டிக் கொடுத்தனர்.
பெண்கள் நால்வரும் தங்கள் கணவன்மார்களைக் கண்டு புன்னகைத்து, நால்வரையும் அழகாய் ஒரு புகைப்படம் எடுக்க,
அவ் ஓசையில் திரும்பிய நால்வரும் அழகாய் புன்னகைத்துக் கொண்டனர்.
மாலை வீடு திரும்பிய அனைவரும் தேநீரோடு தோட்டத்தில் அமர்ந்து பேசி சிரிக்க,
பெரியவர்கள் தங்கள் மகவுகளைப் புன்னகையுடன் பார்த்தனர்.
சுடர் ப்ரீத்தியின் அமைதியான காதல்,
கருப்பசாமி சுபிக்ஷாவின் முதிர்ச்சியான காதல்,
ராஜ சிம்மன் பிரம்மவதனியின் அதிரடியான காதல்,
அபூர்வன் மற்றும் சிவப்ரியாவின் அடாவடியான காதல் அவ்விடத்தை ஆக்கிரமித்திருக்க, வேறு என்ன வேண்டும் அவ்விடம் நிறைந்துபோக என்று தேவர்களே பொறாமை கொள்ளும் அளவு அழகோவியமாய் அத்தருணம் விளங்கியது.
“ஹ்ம்.. ஆறு வருஷம் முன்ன நம்ம லைஃப ரீவைன் பண்ணி பார்த்தா..” என்று சுபிக்ஷா ஏதோ கூற வர,
“நான் புதைகுழிக்குள்ள விழுந்தது தான் நினைவு வரும்” என்று சிவப்ரியா குறுக்கிட்டாள்.
அதில் மற்றவர்கள் பக்கென்று சிரிக்க,
“ஃபீலிங்கா பேச விடுறியாடி?” என்று சுபி அவள் தலையில் அடித்தாள்.
“நீ சொன்னதும் எனக்கு அதுதான்டி நினைவு வந்துச்சு.. வாட் டு டூ?” என்று சிவப்ரியா கேட்க,
“மிஸ்டர் புரஷோட பிரதர்.. நீங்க அப்புடியே கிடனு அவளை விட்டிருக்கனும். என்ன வாயி பேசுது பாருங்க” என்று சுபி, அபூர்வனிடம் கூற,
“விட்ருக்கலாம் தான்..” என்று இழுத்தவன் தன்னவளைப் பார்த்தான்.
அவள் விழிகளை உருட்டி உஷ்ணமாய் நோக்க, “அ..அது.. லவ் பண்ணிட்டேனே.. விட முடியலை” என்று அபூர்வன் கூறினான்.
“மிஸஸ் அண்ணி.. எங்கண்ணாவை பார்வைலயே மிரட்டுறியாக்கும்?” என்று கருப்பசாமி கேட்க,
“இப்ப புரியுது. என் பொண்டாட்டி பார்வைக்குக் காரணம் சகவாச தோஷம் தான் போல” என்று ராஜசிம்மன் கூறினான்.
“ஒரு காலத்துல ஒரு ஆளு எந்நேரமும் இப்படித்தான் பாத்துட்டு இருந்தாரு.. போனா போகுதேனு காதலிச்சு வாழ்க்கை குடுத்து பார்வையை மாத்திருக்கேனாம்” என்று பிரம்மா அழுத்துக் கொள்ள,
“ஆஹாங்? மாத்திருக்கனா? இப்ப எப்படி மாத்திருக்கியாம்?” என்று சிவப்ரியா கேட்டாள்.
“அடியே.. எம்புள்ளைக்கு வெவரம் தெரியுர வயசு. உன் சென்சார் பேச்ச ரூமோட நிறுத்திக்க” என்று ப்ரீத்தி கூற,
“ஏதோ வசமா கலாய்ச்சு விட்ருக்கா போல நம்ம சாதனா” என்று சுபிக்ஷா கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலகலத்து சிரித்தனர்.
“எங்க புள்ள கலாய்க்காம இருந்தா தான் அதிசயம்” என்று சுடரொளிவானன் பெருமூச்சு விட,
“இது தெரியாதுல்ல உங்களுக்கு? பிரபா அத்தையோட பிறந்தநாளுக்கு வீட்டுக்குப் போயிருந்தோம். அவங்க திருநீறு கொடுத்தாங்க, எங்க டாடி மம்மிட்டருந்து தான் வச்சுப்பாங்க பாட்டினு சாதனா போட்டு உடைச்சுட்டா” என்று பிரம்மா வாய்விட்டு சிரித்தாள்.
அதில் மற்றவர்களும் சிரிக்க, சுடரொளிவானன் வெட்கம் கொண்டு, தன்னவளைப் பார்த்தான்.
இன்றளவும் அவர்கள் காதலில் இந்த வெட்கத்திற்கு மட்டும் பஞ்சமே இல்லை என்று சொல்லும்படி அழகோவியமாய் இருந்தது..
“டாடி ஃபோட்டோ.. ஃபோட்டோ” என்றபடி சாதனா அலைபேசியோடு வர,
“மகாராணிக்கு இப்பவே அவங்கத்தை புத்தி போல.. சரியான ஃபோட்டோஹோலிக்கா இருக்காளே” என்று கருப்பசாமி கூற,
“அய்யோடா” என்று முகவாயைத் தோளில் இடித்துக் கொண்ட சுபிக்ஷா, “நீ வாடி தங்கம். நாம எடுக்கலாம்” என்று சாதனாவைத் தூக்கினாள்.
“அத்த.. எல்லாதும்” என்று குழந்தை கூறவும்,
“அரே குடும்ப மெம்பர்ஸுகலா.. என் புள்ள விடமாட்டா.. வாங்க க்ரூப் ஃபோட்டோக்கு அஸம்பில் ஆகலாம்” என்று சுடரொளிவானன் கூற, அனைவரும் புன்னகையோடு ஒன்று கூடினர்.
புன்னகை மட்டுமே அவ்விடத்தை பிரதானமாய் நிறைத்திருக்க,
அவர்கள் காதல் மற்றும் சந்தோஷம் நீடித்து, அகம் நிறைந்த மகிழ்வோடு குடும்பமாய் அவர்கள் வாழ்வு சிறக்க வாழ்த்தி, நாமும் விடைபெறுவோம்…
-சுபம்…

