Loading

அத்தியாயம்-1

கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். கனடா இரண்டாவது பெரிய நாடாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் சிறிய மக்கள் தொகையையே கொண்டது. உலகின் சந்தோஷமான நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்று.

டொரோண்டோ (Toronto) கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்டோரியோ (Ontorio) மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். கனடாவில் மக்கள் திரளாக வாழும் புகழ் பெற்ற ஒரு நகரம் டொரோண்டோ. இது கனடாவின் பொருளியல், வணிக, பண்பாட்டு, கல்வி மையமாகும்.

உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு பல்வகை இன, மொழி, சமய, தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக, திறந்த மனப்பாங்கோடு, ஒற்றுமையாக செழிப்புடன் வாழ்வது இங்கே தான்…

நம் இந்திய நாட்டில் ஏப்ரல் மாதத்தில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்க, அங்கு டொரோண்டோ நகரில் வசந்தகாலம் ஆரம்பமாகியிருந்தது.

வசந்த காலம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் நாம், ஆனால் நேரில் பார்த்ததில்லை. வசந்த காலம் என்றால் கனடா தான், என்று என்னும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக, பச்சை வண்ண இலைகள் இல்லாமல் மலர்களை மட்டும் கொத்து கொத்தாகக் கொண்ட வண்ண வண்ண மரங்கள்.

ஆம் இலைகள் எங்கே என்று தேடுமளவுக்கு மரங்கள் முழுவதும் வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா வண்ண மலர்கள் மரங்களை கொத்துக் கொத்தாக நிறைந்திருக்க, குளிந்த காற்றும், சாரல் மழையும் பூமியை நனைத்து எங்கு பார்த்தாலும் பச்சை வண்ணப் புல்வெளிகளாக கண்ணுக்கு விருந்தாக அமையும்.

அந்த வேலை நாளில் ஊரின் அழகை ரசித்துக் கொண்டும், அவர்கள் வேலை நேரத்தைக் கணக்கில் கொண்டும், மக்கள் சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களிலும் நடைபாதையில் புயலென நடந்து கொண்டும் வானளவு உயர்ந்து நிற்கும் பெரிய பெரிய கட்டிடங்களைக் கடந்து சென்றவர்கள், அந்த கட்டிடங்களை அண்ணாந்து பார்க்க நேரமற்று, அவர்கள் அலுவலுக்கு விரைந்து கொண்டிருந்தனர்.

ஒரு பெரிய அடுக்கு மாடிக் கட்டிடம் கண்ணாடிகளால் முழுதும் அலங்கரிக்கப்பட்டிருக்க அதன் உள்ளே பதினான்காம் தளத்தில் உள்ள கலந்தாய்வு அறையில் (Conference room) கோள வடிவ மேசையைச் சுற்றிலும் நாற்காலிகள் இடப்பட்டு அதில் கனடா வாழ் மக்கள் சிலரும் நம் இந்தியர்கள் சிலரும் வித வித வண்ணங்களில் கோட் சூட் சகிதம் அமர்ந்து, தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.  

அவர்கள் அமர்ந்திருக்கும் தோரணையிலும், அவர்களின் உரையாடலிலும் அவர்கள் யாரோ ஒருவரின் வரவுக்காக காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

சற்று நேரத்தில் கதவு திறக்கப்படும் ஓசையில் அமர்ந்திருந்தோர் அனைவரது கண்களும் அறை வாயிலை நோக்க, அங்கே  

மூன்று பேர் கொண்ட ஆடவரில் நடுநாயகமாக வந்த ஒரு நாற்பது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க மனிதர், அவர் கண்களில் ஒரு துள்ளலும் முகத்தில் பிரகாசமான புன்னகையையும் ஏந்தி உற்சாகமான குரலில்,

 “குட் மார்னிங் ஜென்டில்மென்…” என்று அனைவரையும் வரவேற்றார்.   

அவரது உற்சாகம் அறையில் இருந்த அனைவரையும் தொற்றிக்கொள்ள அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். உடன் வந்த இருவரில் ஒருவர் நம் இந்தியர் பாணியில் காட்சியளித்தார்.

இனி அவர்களது ஆங்கில உரையாடல் தமிழில்….

“உக்காருங்க உக்காருங்க, மன்னிச்சுக்கோங்க கொஞ்சம் லேட் ஆயிடுச்சு…” என்றவர்,

அவருக்கு இடப்பட்டிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தார். உடன் வந்த இருவரும் அவருக்கு இருபுறமும் அமர்ந்துகொள்ள, 

“இப் யு டோன்ட் மைண்ட்… எனக்கு எழுந்து நின்னு பேசுறது தான் பிடிக்கும், மே ஐ….” என்றவர் தன் மேல் கோட்டின் பட்டனை கழட்டிவிட்டபடியே எழுந்து நின்றார்.

“மை நேம் இஸ் ஜோனாதன்… என்று ஆரம்பித்தவர் நான் கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் (Gorgeous cloth House) உடைய சேர்மன், இவங்க ரெண்டு பேரும் என்னோட பாட்னர்ஸ், சுந்தர் அண்ட் ஆண்டனி”.

“கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் கிளை இங்க டொராண்டோ ல மட்டுமில்லை அமெரிக்கா, ஈரோப் இதுபோல பல நாடுகள்ல வெற்றிகரமா போயிட்டு இருக்கு. இப்போ நம்ம கார்ஜியஸ் கம்பெனி ஆரம்பிச்சு வெற்றிகரமா பத்து வருடங்களாக போற நிலையில இந்தியாவிலும் நம்மளோட கிளையை கொண்டுவர போறோம்னு நாங்க விளம்பரம் கொடுத்திருந்தோம்.

அதை பாத்துட்டு நிறைய இளம் தொழிலதிபர்கள் அவங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுக்க சொல்லி கேட்டிருந்தாங்க. பட் அவங்க எல்லாரும் ஏற்கனவே இந்தியால இதுபோல வெவ்வேறு நிறுவனங்களின் கிளைகளை எடுத்து வெற்றிகரமா நடத்தீட்டு இருக்காங்க.

சோ எல்லாரோட விண்ணப்பங்களை அலசி ஆராயிந்தோம், அதுல வாய்ப்புக்காக காத்திருக்கும் ஒருவரைத்தான் நாங்க மூணு பேரும் தேர்ந்தெடுத்திருக்கோம். இதை மற்றவர்களும் சப்போட்டிவா எடுத்துக்கணுன்னு கேட்டுக்கிறேன்” என்றவர்.

சுந்தர் மற்றும் ஆண்டனியின் புறம் திரும்பி “என்ன சுந்தர், ஆன்டனி அவங்க பேரை சொல்லீடலாமா? என்றவர், அவர்கள் சிரிப்புடன் தலையசைக்கவும் அவங்க பேரு ‘நளன் கார்த்திகேயன் அண்ட் வினோத் சக்கரவர்த்தி’ என்று பெயர்களை கஷ்டப்பட்டு உச்சரித்தார்.

அவர் பெயரை உச்சரித்தவுடன் அந்த இருவர் முகத்தைத் தவிர அனைவர் முகத்திலும் ஒரு நொடி ஏமாற்றம் பரவ, ஓரிரு நொடிகளில் அதை துடைத்தெறிந்தவர்கள் உடனே நளனுக்கும் வினோத்துக்கும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அவர்கள் வாழ்த்தை ஏற்ற நளனும் வினோத்தும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க,

“இப்போ மிஸ்டர் நளன் கார்த்திகேயனும் வினோத் சக்கரவர்த்தியும் நம்ம கூட சில வரிகள் பகிர்த்துப்பாங்க” என்ற ஜோனாதன் புன்னகை முகமாக அவர் இருக்கையில் அமர்ந்தார்.

நளனும் வினோத்தும் அவர்கள் இருக்கையிலிருந்து எழுந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்,

“நீ பேசு டா…” என்று வினோத் சொல்லவும்,

தொண்டையை பிறர் அறியா வண்ணம் செருமி சரி செய்தவன் “நான், நளன் எங்க அப்பா பேரு கார்த்திகேயன். சோ ஐ ஆம் நளன் கார்த்திகேயன், எங்க அப்பா சென்னையில ஒரு கார்மெண்ட்ஸ் வச்சிருக்காங்க.

எங்க அப்பாவோட கார்மெண்ட்ஸ் அ எடுத்து நடத்தணும் அப்படிங்கிற பொறுப்பு எனக்கு இருந்தாலும், எனக்கு நானா என்னோட சுய முயற்சியில என்னோட சொந்த கால்ல நிக்கிறது தான் என்னோட கனவு.

அதுக்கு ஒரு வாய்ப்பு அளித்த கார்ஜியஸ் கம்பெனியோட சேர்மன் ஜோனாதனுக்கும் அவரோட பாட்னர்ஸ் சுந்தர் அண்ட் ஆண்டனிக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்” என்றவன் தொடர்ந்து,

“வினோத் என்னோட உயிர் நண்பன் நாங்க ரெண்டு பேரும் சேந்துதான் இந்த ப்ரொஜெக்ட்டை பண்ணப்போறோம், தேங்க்ஸ்” என்றவன் அமர்ந்துகொள்ள,

அவன் பேசி முடித்தவுடன் எழுந்த அமைதியான கைத்தட்டல்களுடன் வினோத் இருக்கையிலிருந்து எழுந்தான்.

 “ஹாய் எவரிஓன், நான் வினோத், என்னோட அப்பா சக்கரவர்த்தி, சோ ஐ ஆம் வினோத் சக்கரவர்த்தி, அப்பா சென்னையில ஒரு சாப்ட்வேர் கம்பெனி வச்சிருக்காங்க,

நளன் என்னோட பிரெண்டுங்கறதால அவனுக்கு உதவி செய்ய அவன் கூட சேர்த்து இந்த ப்ரொஜெக்ட்டை பண்ண போறேன், தேங்க்ஸ் வெரி மச்” என்று அவனுக்கு கொடுத்த சில மணித்துளிகளில் தன்னை அறிமுகப்படுத்தியவன் அவன் இருக்கையில் அமர்ந்தான்.

அவன் இருக்கையில் அமர்ந்தவுடன் “ஓகே ஜென்டில்மென், உங்களோட பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி நீங்க தந்த ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி” என்று ஜோனாதன் முடிக்கவும்,

நளன் மற்றும் வினோத்தைத் தவிர அனைவருக்கும் கைகுலுக்கி விடை கொடுத்தனர் ஜோனாதன், சுந்தர் மற்றும் ஆண்டனி குழுவினர். 

அவர்கள் அனைவரும் நளன் மற்றும் வினோத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டுச் சென்றவுடன், “ஓகே நளன் வாங்க அக்ரிமெண்ட்ல சைன் பண்ணலாம்” என்று அழைத்தார் ஜோனாதன். 

பின் மீண்டும் ஐவரும் அமர்ந்தவுடன் அக்ரிமெண்ட்டை நளன் கையில் கொடுத்தார் ஜோனாதன்.

நளன் அக்ரிமெண்ட்டை வாசிக்கத் தொடங்கினான், அதில் கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ்சுக்கு தேவையான அனைத்து விதமான உடைகள், உடைகளை வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் பைகள் மற்றும்

அங்கு வேலை செய்வோருக்கு யூனிபார்ம் உடைகள் பில் போடும் சாதனங்கள் முதற்கொண்டு அனைத்தும் அவர்கள் கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் தொழிற்சாலையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் என்றும்,        

 அதனை நிர்வகிக்கும் பொறுப்பு, அதாவது கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் அமைக்க தகுந்த இடம், அங்கு பணிபுரிய தேவையான ஆட்கள்,

வெளிநாட்டிலிருந்து வரும் பொருட்களை இறக்குமதி செய்ய தேவையான அரசுரிமை காப்புகள், இன்ன பிற அனைத்தையும் எந்த வித இடையூறும் இன்றி செய்து முடிக்க வேண்டும் என்றும் இன்னும் மேலும் சில முக்கிய குறிப்புகளும் அடங்கியிருக்க, அனைத்தையும் கவனமாக வசித்தவன் வினோத்திடமும் கொடுத்தான்.

வினோத்தும் அதை முழுதாக வசித்தவன், நளன் புறம் திரும்பி வலது கை கட்டைவிரலை உயர்த்திக் காட்டினான்.

அதனை சம்மதமாக ஏற்ற நளன் கண்களை மூடி ஆழ மூச்செடுத்து அக்ரிமெண்ட்டில் கையெழுத்திட்டான் முழு மனதாக சந்தோஷத்துடன். அவன் கையொப்பத்தின் தொடர்ச்சியாக வினோத்தும் கையெழுத்திட்டான்.

அவன் கையெழுத்திட்ட அக்ரிமெண்ட்டை கைகளில் வாங்கிய ஜோனாதன் “ஒன்ஸ் அகைன் கங்கிராட்ஸ் மிஸ்டர் நளன் அண்ட் வினோத், உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு, நீங்க இங்க இருக்குற நம்ம பிரான்ச்சை இந்தியா போறதுக்கு முன்னாடி ஒரு விசிட் பண்ணுங்க, உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.

அண்ட் உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணுன்னாலும், இல்லை சந்தேகம்னாலும் நீங்க தாராளமா எங்க மூணு பேர்ல யாரை வேணுன்னாலும் காண்டாக்ட் பண்ணலாம்”.

“மோரோவர், நம்ம அக்ரீமெண்ட் சைன் ஆனதுனால இன்னைக்கு நைட் நம்ம ஸ்டாப்ஸ் எல்லாருக்கும் பார்ட்டி ஏற்பாடு பண்ணீருக்கேன், ப்ளீஸ் ஜாயின் வித் தெம்,

நான் இப்போ ஒரு இம்பார்டண்ட் வேலை விஷயமா ஆஸ்திரேலியா கிளம்புறேன், சுந்தர், ஆண்டனி உங்கள கைடு பண்ணுவாங்க, டேக் கேர்” என்ற ஜோனாதன் சுந்தர் ஆண்டனியிடம் கண் அசைவிலும், நளன் மற்றும் வினோத்திடம் கைகுலுக்களுடனும் விடைபெற்றார்.  

ஜோனாதன் கிளம்பியதும் சுந்தர் அழகிய செந்தமிழில் வாழ்த்து தெரிவித்து “ரொம்ப சந்தோஷமா இருக்கு பா உங்கள பாக்கும் போது, இதோட நிக்காம இன்னும் மேலும் மேலும் நீங்க முன்னேறணும்” என்றவரிடம்,

“கண்டிப்பா நாங்க நல்லா பண்ணுவோம் சார்” என்றான் நளன்.

“அப்புறம்… இன்னைக்கு நைட் பார்ட்டிக்கு வரீங்கல்ல?” என்ற சுந்தருக்கு

“அது… சார்…” என்று நளன் கூறும் முன்னே

“ஆமா சார் கண்டிப்பா…” என்று வாக்கியத்தை முடித்திருந்தான் வினோத்.

முடித்தவன் நளனைப் பார்த்து தலையைச் சொரிய, வினோத்தை லேசாக முறைத்த நளனும் “வரோம் சார்…” என்றான் ஆமோதிப்பாக.

சிரித்தவர் “தென் நீங்க இங்க இருக்குற பிரான்ச்சை விசிட் பண்றதுக்கு… இந்தாங்க இது இங்க இருக்குற பிரென்ச் மேனேஜரோட கார்டு, நானும் அவருக்கு இன்போர்ம் பண்ணீடுறேன், நீங்க போகும்போது அவரை காண்டாக்ட் பண்ணிக்கோங்க” என்றார்.   

நன்றி தெரிவித்த இருவரும் அவர்களிடம் விடைபெற்று அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்.    

இந்த நாவலை ஆடியோ வடிவில் நீங்கள் கேட்க விரும்பினால் உங்களுக்காக லிங்க்

https://www.youtube.com/@SofiRanjithNovels

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்