Loading

அத்தியாயம்-2

முப்பதுக்கும் மேற்பட்ட தளங்களைத் அசால்ட்டாகத் தாங்கிய அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் உள்ளிருந்து நளனும் வினோத்தும் கையில் அக்ரிமெண்ட் அடங்கிய சிறு சூட்கேஸுடன் வெளியில் வந்தனர்.

கட்டிடத்தின் உள்ளிருக்கும் ஏசி குளிரை விட, வெளியே மனதிற்கு இதமான மழைச்சாரல் மற்றும் அசுத்தமில்லாக் குளிர்காற்று மனதைக் குளிர்விக்க அதை ரசித்து அனுபவித்தான் நளன்.

அதைக் கலைக்கும் பொருட்டு “டேய் நளா வாவாவாவ்…” என்ற இடையீட்டால் கலைந்த நளன் வினோத்தின் கண்கள் சென்ற திசையைத் தானும் நோக்கினான்.

அங்கே ஐந்து வெளிநாட்டு பெண்கள் குட்டை பாவாடையும், ஸ்லீவ்லஸ் டாப்பும் அணிந்திருக்க, அவை கனகச்சிதமாக அவர்கள் உடலில் பொருந்திய அவர்களது அங்கங்களை எடுத்துக் காட்ட, தலையை ப்ரீ ஹேரும், போனிடைலும் அலங்கரித்திருக்க, அந்த இளம் மங்கையர்கள் அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். 

வினோத் சொன்ன திசையைப் பார்த்த நளனோ கோபக்கணைகளை வினோத் மீது வீச, வினோத்தோ காதல் கணைகளை அந்த கட்டிளம் குமரிகள் மீது வீசிக் கொண்டிருந்தான்.

வினோத்தை கவனித்துவிட்ட அந்த பெண்களும் அவனுக்கு “ஹாய்…” என்று சொல்லவும், இங்கு வினோத்தை கையில் பிடிக்க முடியவில்லை.

அந்த பெண்கள் வினோத்தை பார்த்துக்கொண்டு அவர்களுக்குள் ஆங்கிலத்தில் எதோ பேசுவது தெரியவும் பற்கள் அனைத்தும் தெரிய ஈ… ஈ … என்று இளித்தவன், பதிலுக்கு ஹாய் சொல்ல தன் ஒரு கைக்கு பதில் இரு கைகளையும் மேலே தூக்கி வேகமாக அசைத்தான்.

இதனைப் பார்த்த நளனுக்கு கோபம் உச்சத்தை தொட வினோத்தை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

“டேய் வினோ என்ன பண்ற நீ, என்றவன் மேலிருந்து கீழ் பார்த்து கோட் சூட் போட்டுக்கிட்டு நீ பண்ற வேலை உனக்கே நல்லா இருக்கா?

ஏன்டா அசிங்கப்படுத்துற… என்று தலையில் அடித்தவன் வா டா மொதல்ல” என்ற நளன் அவனை கைபிடித்து இழுத்தான்.

“டேய் என்ன பேச்சு பேசுற… இதெல்லாம் அசிங்கமா? நாம அந்த பொண்ணுங்கள பாக்கலைன்னா அந்த பொண்ணுங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும், நீயே சொல்லு, பொண்ணுங்க மனசு கஷ்டப்பட்டா அந்த ஆண்டவனுக்கே அது பொறுக்காது, ஆண்டவனுக்கே பொறுக்கத்தப்போ பொண்ணுங்கள இவ்வளவு நேசிக்கிற எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் சொல்லு, டூ பேட்…” என்றவன், 

“டேய் நளா… இதே நம்ம ஊரு பொண்ணுன்னு வைய்யி நான் விட்ட ஜொள்ளுல இந்நேரம் செருப்பை தூக்கி காட்டீருப்பாங்க, இவங்கள பாரு, கூலா நமக்கு ஹாய் சொல்றாங்க அதை நாம நிராகரிக்க கூடாது டா ” என்று பெருமூச்சு விட்டவன்,

டேய் நீ இங்கயே இரு நான் போயி அவங்க கிட்ட பேசீட்டு வந்திடுறேன்” என்றவன் அந்த பெண்களை பார்த்துக் கொண்டே நளனிடம் பேசிக்கொண்டிருக்க,

அங்கே நிலவிய பேரமைதியில் “என்ன நளா நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ பேசாம அமைதியா இருக்க…” என்றவன் திரும்பி நளனைப் பார்த்தான்.

அவன் பார்த்த இடத்தில் அவன் இல்லாமல் அவர்கள் நிறுத்தியிருந்த பார்க்கிங்கில் அவர்கள் காரின் அருகே சென்று கொண்டிருந்தான் நளன்.

“டேய் அதுக்குள்ள போயிட்டியா… ச்ச உன்னை பத்தி தெரிஞ்சும் உன்கிட்ட போயி பேசி என்னோட டைம் வேஸ்ட் பண்ணேன் பாரு… உன்கிட்ட பேசுன நேரத்துக்கு இந்நேரம் அந்த பொண்ணுங்க கிட்ட பேசியிருந்தா ப்ரயோஜனமாவது இருந்திருக்கும்” என்றவன் அந்த பெண்களின் பக்கம் ஒரு எட்டு எடுத்து வைத்தான்.

பின் என்ன நினைத்தானோ ச்ச்ச என்றவன் மீண்டும் தன் நண்பனிடம் சென்றான்.

வினோத் அந்தப் பெண்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே தலையை சலிப்பாக இடமும் வலமும் அசைத்த நளன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு,

“இது திருந்தாத கேசு என்னமோ பண்ணித் தொலை நான் போறேன்” என்று அவன் காரை நோக்கி நடக்க தொடங்கியிருந்தான்.

காரில் இடப்பக்கம் அமைந்துள்ள ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவன், காரை ஆன் செய்திருந்தான்.

நளன் காரை ஸ்டார்ட் செய்யவும் வேகமாக நளன் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே உள்ள விண்டோ அருகே வந்த வினோத், கையசைத்து விண்டோவை கீழே இறக்குமாறு சைகை செய்தான்.

ஸ்டேரிங் வீலை இறுக்கமாக பற்றி கண்களை முன்னே வைத்திருந்த நளன், வினோத் அருகில் வந்து சைகை செய்யவும், விண்டோவை கீழே இறங்கினான், அவன் புறம் திரும்பாமல்.  

நளன் விண்டோவைக் கீழே இறங்கியவுடன் “நளா… நீ அப்பார்ட்மென்டுக்கு போ, நான் பின்னாடியே வந்திடுறேன்” என்ற வினோத்திற்கு,

அந்த ஆட்டோமேட்டிக் காரின் பிரேக்கை நன்கு அழுத்தி ஆக்சில்லெட்டரின் வேகத்தைக் கூட்டியவன் வண்டியை உறும விட்டான், அழுந்த மூடியிருந்த உதடுகளை மேலும் அழுத்தி… வண்டியின் உறுமல் அவன் ஆத்திரத்தை எடுத்துக் காட்ட,

“ச்ச… என்று காலை தரையில் உதைத்தவன் இவன் கூட இருந்தா கடைசி வரைக்கும் சிங்கிளா தான் இருக்கணும் போல, நம்மள மிங்கில் ஆகவே விடமாட்டான் போலவே”

என்று சலித்துக்கொண்டவன்,

கண்களைச் சுருக்கி நளனை முறைத்துவிட்டு, அசடுவழிய அந்த பெண்களுக்கு சிரிப்புடன் கையசைத்து விட்டு காரின் மறுபுறம் வந்து நளனுக்கு அருகில் உள்ள சீட்டில் அமர்ந்தான்.

 வினோத் அமர்ந்தவுடன் காரை அதிவேகத்தில் கிளப்பிய நளன் வினோத்தைத் திரும்பியும் பார்க்கவில்லை.

அவன் காரைக் கிளப்பிய வேகத்தில் வேகமாக சீட் பெல்ட்டை அணிந்த வினோத் “டேய் மெதுவா போ டா, எதையும் அனுபவிக்க விடாம சாவடிசிறுவான் போல” என்று முனகியவன் பேசாமல் வெளியே வெறித்தான்.   

வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்திய நளன் அவர்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கை அடைந்தான்.

பார்க்கிங்கை அடைந்த நளன் வினோத்தைக் கண்டு கொள்ளாமல் வேகமாக இறங்கி அப்பார்ட்மெண்ட் லிஃப்டை அடைந்தான். சலிப்புடன் அவனைப் பின் தொடர்ந்தான் வினோத். 

வீட்டின் கதவைத் திறந்து வீட்டினுள் நுழைந்த நளன் பொத்தென்று வரவேற்பறையில் போடப்பட்டிருந்த சோஃபாவில் தலையை பின்னே சரித்து கண் மூடி அமர்ந்தான்.

  நளனை தொடர்ந்து சில நொடிகளில் வந்த வினோத், நளன் அமர்ந்திருக்கும் விதத்தைப் பார்த்து புருவத்தை உயர்த்தி தலையை இடம் வலம் ஆட்டியவன் அவன் அறைக்குள் புகுந்துகொண்டான்.

சில நிமிடங்களில் ஹாலில் இருந்த லேண்ட்லைன் போன் நீண்ட ஒலி எழுப்பி நின்று, பின் மீண்டும் நீண்ட ஒலி எழுப்பிக்கொண்டே இருந்தது.

அறையினுள் சென்ற வினோத் கட்டிலில் குப்புற விழுந்திருக்க, ஹாலில் மீண்டும் மீண்டும் எழுந்த போனின் அலறலில் எழுந்து வேகமாக ஹாலுக்கு வந்தான். 

“டேய் நளா போன் உன்னோட பக்கத்துல தானே இருக்கு எடுக்க வேண்டியது தானே” என்று அவன் அறை வாயிலில் நின்று கத்தினான்.

‘எனக்கு காதுகள் இரண்டும் செவிடு’ என்பது போல் அமர்த்திருந்தவனை முறைத்தவன்,

“ஊர்ல ஏகப்பட்ட பிரெண்டு வச்சிருக்கவன்லாம் சந்தோஷமா இருக்கான், ஒரே ஒரு பிரெண்ட வச்சுக்கிட்டு நான் படர பாடு இருக்கே யப்பா… சொல்லி மாளாது, இனிமே இன்ஸ்டால மட்டும் தான் பிரெண்டு வச்சுக்கணும்” என்று ஏகத்துக்கும் சலித்துக் கொண்டவன் வேகமாக வந்து போனை எடுத்து “ஹலோ” என்றான்.

எதிர்முனையில் “என்னப்பா வினோத் என்ன ரெண்டு பேரும் போன சுவிச் ஆப் பண்ணி வச்சுட்டு என்ன செய்யிறீங்க, நானும் எத்தனை வாட்டி தான் லேண்ட்லைனுக்கு ட்ரை பண்றது, எங்க போனீங்க ரெண்டு பேரும்” என்றார் கார்த்திகேயன்.

“அங்கிள்… சாரி அங்கிள் நாங்க கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் ஓட மீட்டிங் ல இருந்தோம். அதான் போன சுவிட்ச் ஆப் பண்ணி வைச்சோம்” என்றான் வினோத்.

“சரி மீட்டிங் முடிஞ்ச உடனே ஆன் பண்ண வேண்டியது தானே, எங்க அவன்?” என்று பொரிந்தார். 

“அது வந்து அங்கிள்… என்று தலையை சொறிந்தவன், நீங்க நளன் கிட்ட பேசுங்க அங்கிள், நான் கொடுக்குறேன்” என்ற வினோத் (பின்னே அவன் பெண்களை பார்த்து வழிந்ததில் மறந்துவிட்டேன் என்றா கூற முடியும்?) ரிஸீவரை அவன் தோளில் புதைத்துக் கொண்டு,

“நளா இந்தா புடி அப்பா பேசுறாங்க…” என்று அவன் தோள் தொட்டு உலுக்கினான்.

  வினோத் உலுக்கியதில் நடப்புக்கு வந்தவன் ஹா… என்று விழித்தான்.

“டேய் என்ன ஆச்சு டா நீ எந்த உலகத்துல இருக்க… இந்தா புடி அங்கிள் பேசுறாங்க” என்ற வினோத் ரிசீவரை அவன் கைகளில் திணித்தான்.

ரிசீவரை கைகளில் வாங்கியவன் தொண்டையை செருமிக்கொண்டு “அப்பா…” என்றான்.

மகனின் குரலில் இருந்தே அவன் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தவர்,

“என்னப்பா ரொம்ப சோர்வா பேசுற, உடம்புக்கு முடியலையா? இல்ல மீட்டிங் ல ஏதும் பிரச்சனையா? நீ எதுக்கும் வருத்தப்படாத பா, உன்னோட விடா முயற்சிக்கு பலன் கண்டிப்பா ஒருநாள் கிடைக்கும்” என்று மகனின் மௌனத்தில் ஓராயிரம் அர்த்தம் கண்டுபிடித்தார் அந்த அன்புத் தந்தை.

பின்னே, தன் வாரிசு படிப்பை முடித்தவுடன் “வா வந்து நம்ம பிசினெஸ்ஸ பாரு, வேற வேலைக்கெல்லாம் போக வேண்டாம்” என்று சொல்லும் தந்தைகளுக்கு மத்தியில்,

“உன்னோட விருப்பம் எதுவோ அதை செய்யி பா, நாம செய்யிற வேலையில மனத்திருப்தி ரொம்ப முக்கியம், அதை அடையிரதுக்கு எத்தனை தோல்வி வந்தாலும் விட்டுக்கொடுக்காத… தொடர்ந்து முயற்சி பண்ணு, கண்டிப்பா நீ ஜெயிப்ப” என்று

அவர் தொழிலை தன் மகன் மீது திணிக்காமல் மகனின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவர் கார்த்திகேயன்.

“நளா என்னப்பா அமைதியாவே இருக்க…” என்ற தந்தையிடம்,

“இல்ல பா ஒன்னும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன். மீட்டிங் ல இருந்தேன் பா, அதான் போன சுவிச் ஆப் பண்ணி வைச்சேன், இப்போ தான் வீட்டுக்கு வந்தோம்” என்றவரிடம்,

“அப்படியா பா சரி” என்றவர் மீட்டிங் என்ன ஆனது என்பது பற்றி கேட்காமல் சிறு இடைவெளி விட,

தன் தந்தை தயங்குவது புரிந்துக் கொண்ட நளன் “அப்பா கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் ஓட டீலர் ப்ராஜெக்ட் நமக்கு கிடைச்சிருச்சு பா” என்று அவன் எண்ணங்களை மறைத்து உற்சாகமாக பேசினான் நளன்.

“அப்படியா பா… ரொம்ப சந்தோசம், உன்னோட விடா முயற்சிக்கு கிடைச்ச வெற்றி இது சந்தோசமா இரு, எதை பத்தியும் யோசிக்காத, புரியுதா பா எதை பத்தியும்… உனக்கு அப்பா நான் இருக்கேன்” என்றவர் எதை பத்தியும் என்பதில் அழுத்தம் கொடுத்து சொல்ல,

தன் தந்தை எதை பற்றி கூறுகிறார் என்பதை புரிந்து கொண்ட நளனுக்கு கண்களில் கண்ணீர் சுரந்தது.

பின்னே பல ஆயிரம் மையில் தொலைவில் இருந்தாலும் தன் எண்ணங்களை சரியாக புரிந்து கொண்டு சொல்பவரின் நேசத்தை நினைத்து கண் கலங்கத்தானே செய்யும்.

கார்த்திகேயன் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்திருந்த நளனின் தாய் நந்தினி, ரிஸீவரை தன் கணவனிடமிருந்து பருங்கி அவர் காதுகளுக்கு கொடுத்திருந்தார்.

“நளா… நல்லா இருக்கியா டா கண்ணு, வேலா வேலைக்கு சரியா சாப்பிடுரியா, நேத்து பேசும்போது தலைக்கு எண்ணை வச்சு குளிக்க சொன்னேனே குளிச்சியா கண்ணு உனக்கு உஷ்ண உடம்பு கண்ணு அதான் அம்மா சொல்றேன்” என்று பேசிக்கொண்டே போனவரின் பாசத்தில் உதட்டில் புன்னகையைத் தவழ விட்டவன்,

“அம்மா அம்மா கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோங்க ம்மா, நீங்க சொன்னதெல்லாம் சரியா செய்யுறேன் போதுமா, சாப்பாடு கூட நீங்க சொன்ன மாதிரி வீட்ல தான் நாங்க ரெண்டு பேரும் சமைச்சு சாப்பிடுறோம், எப்போவாது தான் வெளிய சாப்பிடுறோம், சரியா” என்றான்.

 நளனின் பேச்சை அவன் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த வினோத் “என்ன… ரெண்டு பேரும் சமைக்கிறோமா?  அடப்பாவி பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்லுடா, நீ சமைக்கிறேன்னு சொல்றதை உங்க அம்மாவே நம்ப மாட்டாங்க,

உன்ன பிரெண்டா ஏத்துக்கிட்ட பாவத்துக்கு உனக்கு ரெண்டு வேலையும் நான் தான் டா சமைச்சு போடுறேன், இதுல உப்பு பத்தலை, ஓரப்பு கொஞ்சம் தூக்கலா இருக்குன்னு கமெண்ட் வேற தர வேண்டியது” என்று நளனை முறைத்து வைத்தான் வினோத்.

ஆம் மதிய வேளைகளில் வேலை காரணமாக உணவை வெளியே முடித்துக் கொள்வார்கள் இருவரும், காலை இரவு நேரங்களில் சமையலில் அவனுக்கு தெரிந்த உணவு வகைகளை யூ-டியூப் உதவியுடன் செய்வான் வினோத், எப்போதாவது காய் நறுக்கும் வேலையை செய்பவன் நளன், பாத்திரம் கழுவும் வேலையை செய்வது டிஸ்வாசர். (பின் கோபம் வரத்தானே செய்யும்)

“சரிப்பா நளா, வினோத் எங்க? குடு தம்பி கிட்டயும் ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன்” என்ற நந்தினியிடம்,

அருகே வினோத் இருக்கானா என்று தேடியவன் “இருங்க மா தரேன் என்றவன், வினோ இங்க வா அம்மா பேசுறாங்க” என்று அழைத்தான் நளன்.

வேகமாக வெளியில் வந்த வினோத் ரிசீவரை வாங்கி “அம்மா…” என்றான்.

“வினோத் நல்லா இருக்கியா பா” என்றவரிடம்

“ம்ம் நல்லா இருக்கோம் மா, சீக்கிரமே இந்தியா வந்திருவோம், வந்து உங்க கையால ஒரு விருந்து சாப்பிட்டா தான் செத்துப்போன என்னோட நாக்குக்கு உயிர் வரும்” என்றவனிடம்

“அப்படியா வினோத்! எப்போ வரீங்க சீக்கிரம் வாங்க பா, உனக்கு சமைச்சு போடாம யாருக்கு போட போறேன்” என்றார் நந்தினி.

நந்தினியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகேயன் ரிசீவரை வாங்கி “வினோத் எப்போ பா வரீங்க” என்றார்.

“இங்க இருக்க வேலையெல்லாம் முடிச்சிட்டு தான் பா டிக்கெட் பாக்கணும், எப்படியும் இன்னும் ஒரு 10 டேஸ் ஆகும் ப்பா” என்ற வினோத்திடம்,

“நளனை கொஞ்சம் பாத்துக்கோ வினோத், டல்லா பேசுனானே? ஊருக்கு வரணுன்னு தான் அப்படி இருக்கானா?” என்ற கார்திகேயனிடம்,

ஓரக்கண்ணில் நளனைப் பார்த்தவன் “இல்ல ப்பா அவன் நல்லா தான் இருக்கான். நான் பாத்துக்கிறேன், எப்போன்னாலும் இந்த சிச்சுவேசன ஒரு நாள் பேஸ் பண்ணி தானே ஆகணும், நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க, நீங்களும் அம்மாவும் உடம்ப பாத்துக்கோங்க, சரிப்பா நளன் கிட்ட கொடுக்கிறேன்” என்ற வினோத் நளனிடம் ரிசீவரைக் கொடுத்தான்.

தந்தையிடம் மேற்க்கொண்டு பேசிவிட்டு, அன்று மாலை அவர்கள் கலந்து கொள்ளப் போகும் பார்ட்டியைப் பற்றியும் கூறியவன் இணைப்பைத் துண்டித்தான்.

நளன் ரிசீவரை வைக்கக் காத்திருந்த வினோத் “டேய்… நளா அப்போ நாம பார்ட்டிக்கு போறோமா… தேங்க்ஸ் டா, தேங்க்ஸ் டா, எனக்காகவா பார்ட்டிக்கு போக ஒத்துக்கிட்ட? ” என்ற வினோத்துக்கு,

“ஆமா இவரு பெரிய இவரு இவருக்காக ஒத்துக்கிட்டாங்க, ப்ராஜெக்ட் ஓகே சொல்லீட்டு போகலனா நல்லா இருக்காது, அதுக்கு தான்” என்றான் நளன்.

“எப்படியோ… போத்திகிட்டு படுத்தா என்ன, படுத்துகிட்டு போத்திக்கிட்டா என்ன… ரெண்டும் ஒன்னு தான். ஏ ஜாலி நாம பார்ட்டிக்கு போறோம், எங்க நாம போறோம்? பார்ட்டிக்கு” என்று டோரா போல் பேசி சிறு குழந்தை போல் குதித்தவனைக் கண்டு பற்கள் தெரிய வாய்விட்டு சிரித்தான் நளன்.

அவனது சிரிப்பினைக் கண்டும் காணாதது போல் பார்த்திருந்தான் வினோத்.       

 

இந்த நாவலை ஆடியோ வடிவில் நீங்கள் கேட்க விரும்பினால் உங்களுக்காக லிங்க் https://www.youtube.com/@SofiRanjithNovels

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்