Loading

“ஒரு பைத்தியக்காரனை எந்த காரணம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள இந்தப் பெண் என்ன முட்டாளா? நிச்சயம் இனியனின் சொத்துக்காகத் தான் இவள் கல்யாணத்திற்கு சம்மதித்து இருப்பாள்” என்று திமிராக கூறினார் ஆதிமூலம். 

 

அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த யாழினி இனியனை பார்க்க, அவனோ தாத்தா பேச ஆரம்பித்ததும், அவர் மடியில் தலை வைத்து பாட்டியின் மடியில் கால் நீட்டி படுத்து உறங்கியே விட்டான். 

 

சங்கடமாக ஆதி மூலத்தை பார்த்து, “நான் அவரை சொத்துக்காக எல்லாம் திருமணம் செய்யவில்லை” என்று தயங்கி தயங்கி கூறினாள்.  

 

“பின்ன வேற எதுக்காக? பைத்தியத்தை கல்யாணம் பண்ணி தியாகி பட்டணம் வாங்குவதற்காகவா?” என்று கோபமாக கர்ஜித்தார். 

 

“அவனை பைத்தியம் என்று நீயே ஓயாமல் சொல்லாதே ஆதிமூலம்” என்றார் தாத்தா சோகமாக தன் தம்பி மகனிடம். 

 

“வேறு எப்படி சொல்வது பெரியப்பா! பைத்தியத்தை பைத்தியம் என்று தானே சொல்ல வேண்டும்!” என்று நக்கலாக நரசிம்மன் பார்த்தார். 

 

உடனே யாழினி, “எனக்கு அவர் யார் என்றோ, அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்றோ எதுவும் தெரியாது. பாட்டி தான் என் பேரனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கின்றாயா? என்று கேட்டார்கள். நான் இவரை பார்த்தது கூட இல்லை. 

 

இருந்தும் நேற்று நான் இருந்த சூழ்நிலையில், எனக்கு பாதுகாப்பான ஒரு இடம் தேவைப்பட்டது. அதற்காகத்தான் பாட்டி கேட்டதும் இவரை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டேனே தவிர, நீங்கள் சொல்லுவது போல் அவரின் சொத்துக்காக ஒன்றும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை” என்று கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு நிதானமாக கூறி முடித்தாள். 

 

“பார்த்தீர்களா பெரியப்பா. எவ்வளவு தெளிவாக பேசுகிறாள் என்று. என்னை பார்த்தாலே பயந்து என் எதிரிவில் உள்ளவர்கள் பேச பயப்படுவார்கள். அப்படிப்பட்ட என்னிடமே இவ்வளவு கோபமாக பேசுகிறாள் என்றால், நிச்சயம் இவள் ஒரு திட்டத்தோடு தான் இனியனை மணந்திருப்பாள். 

 

நீங்கள் கொஞ்சம் உஷாராக இருங்கள். இல்லையென்றால் சொத்து முழுவதையும் ஆட்டைய போட்டுட்டு கிளம்பிடுவா?” என்று தாத்தாவை பார்த்து சொல்லிவிட்டு தன் மனைவியை பார்த்து, “ஏய் என்ன இங்க உக்காந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கே? போ போய் தூங்கி ரெஸ்ட் எடு” என்று மனைவியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து தங்களது அறைக்குச் சென்று விட்டார்.

 

ஆதிமூலம் பேசி சென்றதும் பெருமூச்சு விட்ட தாத்தா, உனக்கு இங்கு உள்ளவர்களை பற்றி இப்போது எதுவும் செல்ல முடியாது. பிறகு நேரம் வரும் போது வெளிப்படையாக சொல்லுகிறேன். இப்பொழுது நீ கெஸ்ட் ரூம்க்கு சென்று ஓய்வெடுத்துக் கொள்மா” என்று சொல்லி தன் மனைவியிடம், “லட்சுமி நீ பேத்தியுடன் படுத்துக்கொள். நான் இனியனை பார்த்துக்கொள்கிறேன்” என்று மனைவியை யாழினியுடன் அனுப்பி வைத்தார்.

 

லக்ஷ்மி பாட்டியும் யாழினியை அழைத்துக் கொண்டு அறைக்கு வந்து, “ஆதிமூலம் பேசியது எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே மா. அவன் இப்படித்தான் யாரையும் நம்பாமல் எடுத்துறிந்து பேசுவான். மற்றபடி மனதினுள் எதையும் வைத்துக்கொள்ள மாட்டான். 

 

நேற்று முழுவதும் நீ கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் இருந்தாய். இப்பொழுது கொஞ்ச நேரம் தூங்குமா! எல்லாவற்றையும் தாத்தா பார்த்துக் கொள்வார்கள்.

ஆகையால் எதையும் யோசிக்காமல் சிறிது நேரம் உறங்கி எழுந்திரு” என்று சொல்லி “எனக்கும் கொஞ்ச நேரம் தூங்கணும் போல் இருக்கிறது” என்று படுத்து விட்டார்.

 

பாட்டி படுத்ததும் வயதானவருக்கு ஓய்வு வேண்டும், என்று அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக விளக்கை அணைத்துவிட்டு, பாட்டியின் அருகில் படுத்து விட்டாள் யாழினி.

 

தன் மனைவி யாழினியை அழைத்துக்கொண்டு சென்றதும் தன் மடியில் இருந்த இனியனின் தலையை கோதி “இனியா இனியா” என்று எழுப்பினார்.

 

தாத்தா எழுப்பியதும் உடம்பை முறுக்கிக் கொண்டு எழந்து கண்களை கசக்கி கொண்டே “ஏன் தாத்தா சீக்கிரமே எழுப்புறீங்க? இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவேன் இல்ல” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவர் மடியில் படுக்கப் பார்த்தான். 

 

உடனே அவனை தடுத்த தாத்தா, “நம்ம ஹால்ல இருக்கோம். வா ரூமுக்கு போய் தூங்கலாம்” என்று தங்களது அறைக்கு அவனை கை தாங்கலாக அழைத்து வந்தார். அறைக்குள் வந்ததும் இனியன் கட்டிலில் தொப்பு என்று விழுந்து தன் தூக்கத்தை தொடர முயன்றான். 

 

தாத்தாவும் அவனுக்கு போர்வை போர்த்தி விட்டுவிட்டு, அவனின் தலையை தடவி அவனின் அருகில் படுத்துக்கொண்டார்.

 

புது இடமாக இருப்பதாலும், சற்று முன் ஆதிமூலம் பேசிய வார்த்தைகளாலும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் யாழினி. நேற்று காலை மூன்று மணி அளவில் எழுந்தது. அதன் பிறகு அவளது வாழ்வில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவளை தாக்கிக் கொண்டிருக்க, அவற்றை நினைத்துப் பார்த்ததும் எப்பொழுது உறங்கினோம் என்று தெரியாமல் உறங்கி விட்டாள்.

 

காலையில் ஏதோ சலசலவென்று சத்தம் கேட்க விழிப்பு தட்டியது யாழினிக்கு. மெதுவாய் கண்களை கசக்கி எழுந்து அமர்ந்து நேரத்தை பார்க்க மணியோ பத்து அரை என்று காண்பித்தது. அச்சோ அதிக நேரம் உறங்கி விட்டேனே என்று அவசரமாக எழுந்து காலை கடனை முடித்து தயங்கித் தயங்கி அறையை விட்டு வெளியே வந்தாள். 

 

ஹாலில் நிறைய பேர் அமர்ந்திருக்க இவளின் வருகையை உணர்ந்து ஒவ்வொருவராக திரும்பிப் பார்த்தனர். நரசிம்மன் தாத்தாவும் திரும்பிப் பார்த்து யாழினியை “இங்கே வாமா” என்று கூப்பிட்டார். 

 

தயங்கி தயங்கி அவரின் அருகில் வந்து நின்ற யாழினியை, அங்கு இருந்தவர்களிடம் காண்பித்து, “இவள் தான் இனியனின் மனைவி யாழினி. நேற்று சமயபுர மாரியம்மன் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடந்தது” என்றார். 

 

அவர் சொல்லி முடித்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் “ஏன் எங்களிடம் சொல்லவில்லை? எதற்கு இந்த அவசர கல்யாணம்?” என்று ஒவ்வொருவரும் தாத்தாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

 

பாட்டியின் கையை இறுக்கமாகப் பிடித்து, பயந்தவாறு அமர்ந்திருந்தான் இனியன். அவனின் பயந்த முகத்தை கண்ட தாத்தா, “எல்லோரும் ஒரு நிமிடம் அமைதியாக இருங்கள்” என்று கொஞ்சம் சத்தமா சொல்லிவிட்டு யாழினியை தன் அருகில் அமரச் சொன்னார்.

 

அவளும் தாத்தாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். தாத்தாவின் மறுபக்கத்தில் இனியன் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகில் அவனை அனைத்தவாறு பாட்டி அமர்ந்திருந்தார்.

 

யாழினி அமர்ந்ததும் யாழினியிடம், ” அனைவரும் நம் சொந்தக்காரர்கள் தான். பயப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, “நேற்று நாங்கள் கோயிலுக்கு சென்று இருக்கும் பொழுது, அங்கு நடந்த சில செயலால் இனினுக்கும் இவளுக்கும் திருமணம் செய்து வைக்க லஷ்மி முடிவு செய்தாள்” என்றார்.

 

“திருமணம் செய்ய முடிவு செய்தால் என்ன? எங்களிடம் எல்லாம் சொல்லிவிட்டு திருமணத்தை நடத்தி இருக்கலாம் அல்லவா? எங்களை விடுங்கள், என் மருமகனிடம் கூட சொல்லாமல் அப்படி என்ன அவசர திருமணம்” என்று ஆதிமூலத்தின் அருகில் இருந்த அபிராமியின் தந்தை கேட்டார்.

 

“எல்லோரிடமும் சொல்லி திருமணம் நடத்த வேண்டும் என்று எங்களுக்கும் ஆசைதான். இருந்தும் சூழ்நிலை அப்படி ஆகிவிட்டது” என்று நரசிம்மன் தாத்தா அவர்களிடம் மன்னிப்பு வேண்டும் குரலில் பேசினார்.

 

அவரின் இந்த குரலில் லக்ஷ்மி பாட்டிக்கு மனது கஷ்டமாக இருந்தது. தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ? என்று யோசித்தார். எல்லோரிடமும் சொல்லி திருமணம் முடித்திருக்கலாமோ? என்று யோசித்தபடி தாத்தாவை பார்த்தார்.

 

அவரின் பார்வையை வைத்து அவரின் எண்ணத்தை புரிந்து கொண்ட நரசிம்மன் தாத்தா, இனிமேலும் நடந்ததை சொல்லவில்லை என்றால் கேள்விகள் மேலும் மேலும் பெருகும் என்று உணர்ந்து, “இந்த பெண் யாழினி யை ஐம்பது வயது உள்ள அரசியல்வாதிக்கு திருமணம் செய்ய அவரது தந்தை முடிவு செய்திருந்தார்”

 

“என்ன..? ஐம்பது வயது ஆளுக்கு கல்யாணம் பண்ண இவளோட அப்பாவே ஏற்பாடு பண்ணி இருந்தாரா? பேஸ்.. பேஸ்…”என்று ஆதிமூலம் நக்கலாக அவளை மேலும் கீழும் பார்த்தார்.

 

அவரை கண்டன பார்வை பார்த்த நரசிம்மன் தாத்தா, “நான் சொல்லுவதை முழுமையாக கேள் ஆதிமூலம். அதன் பிறகு உன்னுடைய கேலியையும் கிண்டலையும் வைத்துக் கொள்ளலாம்” என்று அவரைப் பார்த்து சொல்லிவிட்டு, மற்றவர்களை எல்லோருக்கும் இதுதான் என்றபடி பார்த்தார். 

 

“அவளது அப்பா ஒன்றும் விரும்பி அந்த அரசியல்வாதிக்கு மனம் முடிக்க ஒப்பதில்லை. அவரின் மிரட்டல் காரணமாகவே ஒத்துக்கொண்டார். இவளின் ஜாதக ராசி இவளை மணந்தால் அவர் நிரந்தரமாக அரசியலில் இருக்கலாம் என்றும் முதல்வராகவதற்கும் சாத்தியம் இருப்பதாக ஜோசியர் கூறியதை கேட்டு யாருக்கும் தெரியாமல் இந்த திருமணத்தை ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.

 

அதுவும் கோயிலில் வைத்து திருமணம் செய்தால் கண்டிப்பாக நடக்கும் என்ற ஒரே காரணத்தினால் தான் யாருக்குமே தெரியாமல் காதும் காதும் வைத்த படி அன்று திருமணம் நடக்க ஏற்பாடு முழுவதும் நடந்து இருந்திருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மணமேடையில் அவரை கைது செய்து விட்டார்கள். அந்த செய்தியை தான் நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்களே?” என்று நிறுத்தினார்.

 

ஆதி மூலமும் ‘ஆமா ஆமா பார்த்தோம். கோயிலில் வைத்து அமைச்சர் கைது என்றதும், அங்கு கலவரம் நடக்கும். வயசான காலத்தில் அதில் மாட்டி சாவீர்கள் என்று தான் நினைத்தேன். இப்படி அவனுக்கு கல்யாணத்த பண்ணி என்னை சாவடிப்பீர்கள் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை’ என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு தன் பெரியப்பாவை வெறுப்பாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் ஆதிமூலம்.

 

“மணமேடை வரைக்கும் வந்து இந்தப் பெண்ணின் திருமணம் இனி நடக்குமோ என்று அவர்கள் பெற்றோர்கள் கவலைப்பட, லக்ஷ்மி தான் இனியனுக்கு உடனே பெண் கேட்டாள். அவர்கள் இருந்த சூழ்நிலையில் மறுப்பதற்கு வழி இல்லாமல் சம்மதித்து விட்டார்கள். 

 

உடனே அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று லட்சுமி பிடிவாதம் பிடித்ததால், வேறு வழியில்லாமல் நானும் அதற்கு ஒத்துக் கொண்டேன். இதுதான் அங்கு நடந்தது” என்று உண்மையையும் சிறிது பொய்யையும் கலந்து எடுத்துரைத்தார் நரசிம்மன்.

 

“இருந்தாலும் யாருமில்லாமல் திருமணம்…” என்று ஆதிமூலத்தின் மாமனார் மேலும் ஆரம்பிக்க,

 

“திருமணம் முடிந்தது முடிந்தது தான். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. யாரும் இல்லாமல் திருமணம் நடந்தது எனக்கும் லட்சுமிக்கும் வருத்தம் தான்.

அதனால் என்ன அனைவரையும் அழைத்து ஒரு வரவேற்பு நடத்தி விடலாம். உங்கள் அனைவரின் சம்மதத்துடனே வரவேற்பு நிகழட்டும். அடுத்து எந்த நாள் நல்ல நாளாக இருக்கிறதோ அப்பொழுதே வைத்துக் கொள்வோம். என்ன சொல்கிறீர்கள்?” என்று அங்கிருந்த சொந்தங்களை பார்த்து கேட்டார் நரசிம்மன் தாத்தா.

 

“இருந்தும்..” என்று மீண்டும் அவர் ஆரம்பிக்க,

 

“சரி விடுப்பா என்று ஒருவர் சொல்ல, அருகில் இருந்த மற்றொருவரோ அட என்ன மச்சான் இன்னும். அதான் இவ்வளவு சொல்றார் இல்ல. அடுத்து நடக்க வேண்டியதை பார்ப்போம்” என்று வரவேற்பு பற்றி பேச்சை மாற்றினார்.

 

அனைவரும் கூடி பேசி இன்னும் பதினைந்து நாள் கழித்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் வரவேற்பு நடத்தி விடலாம் என்று முடிவு செய்தார்கள். 

 

அதற்குள் மதிய உணவு நேரம் வர லட்சுமி பாட்டி அனைவரையும் உணவு உண்ண செல்லலாம் என்று அழைத்து வந்தார். அனைவருக்கும் உணவு தயாராக இருக்க அங்கிருந்த பெரிய உணவும் மேஜையில் அனைவருமே அமர்ந்து மதிய உணவை உண்ண ஆரம்பித்தனர். 

 

லட்சுமி பாட்டி, யாழினி, அபிராமி மூவரும் உணவை பரிமாற, மற்ற அனைவரும் உணவு உண்ண அமர்ந்தனர்.

 

வந்திருந்த பெரியவர்களில் இனினுக்கு அத்தை முறையில் உள்ள ஒருவர் யாழினி அழைத்து, “நீயும் இனியன் பக்கத்தில் உட்காருமா. சொந்தம் அனைவருக்கும் உன் திருமணத்திற்கு அப்புறம் நடக்கும் முதல் விருந்து. அதில் இருவரும் ஒன்றாக அமர்வது தான் முறை” என்று யாழினியை இனியனின் அருகில் உள்ள நாற்காலியில் அமர வைத்தார். அவளுக்கு மறுபக்கம் அவரும் அமர்ந்து கொண்டார்.

 

மதிய உணவு முடித்ததும் வரவேற்பில் பார்ப்போம் என்று ஒவ்வொருவராக கிளம்பிச் சென்றார்கள். முடிவாக குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அமர்ந்திருக்க, ஆதிமூலம் தன் மகன் அன்புச்செல்வனிடம “அன்பு அந்த ஞாயிற்றுக்கிழமை எந்த மண்டபம் சரியாக இருக்கு என்று சீக்கிரம் பாரு” என்று சொன்னார்.

 

அதன்படியே அவனும் போனிலேயே தேட மண்டபம் எதுவும் கிடைக்கவில்லை. ஆகையால் ஹோட்டலில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ஒரு பெரிய ஹோட்டலில் பார்ட்டி ஹாலை புக் செய்தான்.

 

அதன் பிறகு இனியன் யாழினி வரவேற்பு நாளை நோக்கி பரபரப்பாக அவர்களின் வேலைகள் சென்றது. 

 

பாட்டியும் இனியனின் சித்தி அபிராமியும் யாழினியை அழைத்துக் கொண்டு அவளுக்கு தேவையான உடைகளை வாங்கினார்கள். அதே போல் ஆதி மூலமும் அவரது மகன் அன்புச்செல்வனும் சொந்தம் பந்தம் நட்பு அனைவருக்கும் இனியனின் திடீர் திருமணம் பற்றி கூறி, ஆகையால் வரவேற்புக்கு கண்டிப்பாக வருமாறு அழைக்க ஆரம்பித்தனர். 

 

தாத்தா பிரசன்னாவிடம் இனியனை அழைத்துச் சென்று அவனுக்கு வரவேற்புக்கு போட வேண்டிய உடைய எடுக்குமாறு கூறினார். 

 

இப்படியாக ஒவ்வொரு நாளும் கல்யாண வேலையில் பரபரப்பாக நகர இன்னும் இரண்டு நாட்களே வரவேற்பு இருந்தது.

 

யாழினியை பார்க்கும் பொழுதெல்லாம் இனியன் தன்னுடைய அறையிலேயே வந்து தங்கிக் கொள்ளுமாறும் சொல்லிக் கொண்டே இருந்தான். 

 

ஆனால் அபிராமி சித்தியோ, வரவேற்பு முடிந்த பிறகு தான் அவள் உன்னுடன் உந்தன் அறைக்கு வருவாள், என்று கண்டிப்பாகும் சொல்லிவிட சித்தியை பார்க்கும் பொழுதெல்லாம் முறுக்கக் கொண்டு இருந்தான்.

 

அன்றும் அவர் லேசாக கண்டிப்புடன் பேசி விட, சித்தியிடம் கோபித்துக் கொண்டு சிறு பிள்ளை போல் அவர்கள் வீட்டு பின்னால் இருந்த மாங்கா மரத்தின் அடியில் இருந்த கல் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்க அவனை சமாதானம் செய்து கொண்டிருந்தார் அபிராமி.

 

அவரின் சமாதான பேச்சில் அங்கும் இங்கும் சிலிப்பிக்கொண்டு திரிந்த இனியனை பார்க்க யாழினிக்கு சிரிப்பு வந்துவிட, வாய்விட்டு சிரித்து விட்டாள். அவ்வளவுதான், அவனுக்கு வந்ததே கோபம். என்னை பார்த்து சிரித்து விட்டாள் என்று ஒரே அழுகை.

 

திடீரென்று அவனது அழுகையை கண்ட அபிராமி, “யாழினியை எவ்வளவு தைரியம் இருந்தால் இனியனை பார்த்து சிரிப்பாய்” என்று திட்டி விட்டார். 

 

அவனின் அழுகை சத்தத்தில் வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் பின்புறம் வந்து விட்டார்கள். 

 

“என்ன ஆச்சு? என்ன ஆச்சு?” என்று ஒவ்வொருவரும் கேட்க, அவனும் வருபவர்கள் எல்லாரிடமும் “என் பொண்டாட்டி என்னை பார்த்து சிரித்து விட்டாள்” என்று சத்தமிட்டு அழ, யாழினிக்கு குற்ற உணர்வாகி போனது. 

 

அவளோ செய்வதறியாமல் கைகளை பிசைந்து கொண்டு நிற்க, அபிராமி மேலும் யாழினியை திட்ட ஆரம்பித்து விட்டார். 

 

உடனே தாத்தா, “இவனைப் பற்றி தான் தெரியுமே அபிராமி. அவன் அழுவதற்கு இவளை ஏன் அம்மா திட்டுகின்றாய்?” என்று சொல்லிவிட்டு, இனியனை “நீ வா” என்று தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்று விட்டார். 

 

இனியன் அங்கிருந்து சென்றதும் அங்கு வீட்டு வேலை செய்பவர்களும் தோட்ட வேலை செய்பவர்களும் யாழினியை பாவமாக பார்த்துவிட்டு சென்றனர். 

 

அறிவுமதியும் அபிராமியும் கண்டிக்கும் விதமாக பார்வை செலுத்தி விட்டுச் செல்ல அன்புச்செல்வன் அவளை மேலிருந்து கீழ் அழுத்தமாக நிதானமாக பார்த்தான். அவனின் பார்வையில் அவள் உடல் கூச சட்டென்று பாட்டியின் பின் மறைந்து நின்றாள். 

 

இன்னும் எத்தனை நாள் என்று விதமாக அவளைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகன்றான் அன்புச்செல்வன். 

 

பாட்டியும் அவளை தோளுடன் அணைத்து, “அவன் திடீரென்று இப்படித்தான் அம்மா ஏதாவது நினைத்து அழ ஆரம்பித்து விடுவான். நீ ஒன்னும் வருந்தாதே” என்று சொல்லி வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

 

வீட்டிற்குள் சென்றதும் அவள் பார்த்த காட்சியில் இன்ப அதிர்ச்சி அடைந்து நின்றாள் யாழினி. 

 

 

 

தொடரும்… 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்