Loading

அத்தியாயம் 6

“அன்புள்ள என்னவனிற்கு…

இதழினி எழுதிக்கொள்வது…

இன்று அவனின் வீட்டிற்கு சென்றேன். அவன்தான் தேவநந்தன் அவர்களின் மகன் இளையபாரதி. திகழுக்கு காய்ச்சல் என்று சென்றேன், இரண்டில் ஒன்று இடமாறி இருப்பதை அறிந்து இல்லம் திரும்பினேன், மாறியது இதயமோ என்ற தடுமாற்றத்தில் நான். அவனைப் பற்றி ஒன்றும் தெரியாது எனக்கு. அவசியமில்லை, இத்தனை நாள் பொறுத்திருந்தேன், இன்னும் பத்துநாட்கள் தானே. அவனின் ரசனையோ கொள்ளை அழகு. பார்த்தேனடா உன்னையும் உந்தன் புகைப்படத்தையும். இத்தனை ரசனைக்காரனாக இருக்கக் கூடாது, சற்றே பொறாமையாகத்தான் இருக்கின்றது உன் ரசனையை பார்த்தால். என்னை விட அதிகமாக ரசித்து வைத்திருக்கிறாய்.

அவன் புகைப்படவியலாளராம். அழகான குடும்பம்தான். அதில் நானும் ஒருவளாக என்னைப் பொருத்திக் கொள்ள எண்ணுகிறேன். ஒரு கை தட்டினால் ஓசை எப்படி வரும். அவனின் மனதில் என்ன இருக்கின்றதோ? எண்ணுகையில் நீண்ட நெடிய பெருமூச்சிதான் வருகிறது. லடாக் சென்றிருக்கின்றானாம். அவனைக் காணும்”

அதற்குள் “இதழ் இங்க வாயேன்” என்று இளம்பிறை அழைத்ததால் நாட்குறிப்பை அப்படியே மூடி வைத்துவிட்டு வெளியே வந்தாள்.

“நினைக்க மறந்தாய்

தனித்துப் பறந்தேன்

நினைக்க மறந்தாய்

தனித்துப் பறந்தேன்

மறைத்த முகத்திரை திறப்பாயோ

திறந்து அகசிறை இருப்பாயோ

இருந்து விருந்து இரண்டுமனம் இணைய

உன் பார்வையில்

ஓராயிரம் கவிதை நான்

எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்”

என்ற பாடலை முணுமுணுத்தவாறே “சொல்லுங்க மிஸஸ் இளமாறன்.”

“வாயாடி, அடிச்சேன்னா பாரு. நான் உனக்கு அம்மாடி. எப்பப்பாரு மிஸஸ் இளமாறன், இல்லன்னா சி.ஐ.டி ஆஃபீசர். ஒழுங்கா அம்மான்னு கூப்டுறியா?”

“சரி, சரி.! இளம்பிறை அம்மா. கூப்டுட்டேன் போதுமா. எதுக்கு கூப்டீங்க?” என்றவாறு அருகே அமர்ந்தாள்.

“ஒரு பைவ் மினிட்ஸ், உன் அப்பா காஃபி போட்டுட்டு இருக்காரு. வரட்டும்.”

“ராணி மாதிரி இருக்கம்மா நீ. உனக்கென்ன, சொடக்கு போடுற நேரத்துல நினச்சத செஞ்சு கொடுக்க புருசன் இருக்காரு. ம்ம்ம்… எனக்கு எப்டி அமையப் போகுதோ.?” என்று புலம்பும் மகளை சிரிப்புடன் பார்த்தவர்,

“உன்னோட வாய அமைதியா வச்சிக்கிட்டு இருந்தீன்னா, உனக்கு வரப்போறவனும் உனக்காக எல்லாம் செய்வான்.”

“எனக்காகன்னு செய்றவன், என்னோட ப்ளஸ் மைனஸ் ரெண்டயும் ஏத்துக்கணும். நான் அவனுக்காக என்னோட குணத்த மாத்திக்க முடியாது. அத விடுங்க, தோ அப்பா வந்துட்டாரு. சொல்லுங்க, என்ன விசயம்?”

“உன் அப்பாதான்டி கூப்ட சொன்னாரு. அவர கேளு.”

“சொல்லுங்கப்பா.” என்றவளின் அருகே குழம்பி கோப்பையோடு அமர்ந்தார் இளமாறன்.

“தேவா வீட்டுக்கு போனியா இதழ்மா?”

குழம்பியை ஒரு மிடறு அருந்தியவாறே, “ம்ம் போனேன்பா. திகழுக்கு காய்ச்சல். ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும். நான்தானே டி.எல். சோ, ரெஸ்ட் எடுத்துட்டு வான்னு சொல்லிட்டேன். உங்க ஃப்ரெண்டும் தேன்மொழி ஆன்ட்டியும் இருந்தாங்க. ஒரு டீயை குடிச்சிட்டு அவங்ககிட்டலாம் பேசிட்டு நானும் மகிழும் கிளம்பிட்டோம்பா.” சொல்லும்போதே அவளின் வதனத்தில் தெரிந்த பூரிப்பினை அன்னையாக அறிந்துக் கொண்டார் இளம்பிறை.

“நீயே கெஸ் பண்ணியிருப்ப இதழ்மா. இருந்தாலும் நான் சொல்றேன். அம்மாவும் நானும் உனக்கு வரன் பாத்து இருக்கோம். தேவாவோட பையன்தான். உனக்கு ஓகேவா?”

அவளிற்கு சம்மதம்தான். இருந்தாலும் ஏதோ ஒன்றினால் அவளின் மனம் அமைதி காத்தது.

“நேர்ல வரட்டுமேப்பா. பேசிப்பாத்துட்டு சொல்றேனே.” இதற்கு மேல் அவளிற்கு வார்த்தை வரவில்லை. தன் பெற்றோர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால், இளம்பிறைக்கு சிரிப்புத்தான் வந்தது. ‘இவள்தான், இவளேதான் சிறுவயதில் இளையாவை திருமணமே செய்துக் கொள்ள மாட்டேன் என்று சபதம் இட்டவளோ?’ என்று எண்ணுகையில் பொங்கி வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டார்.

அதனை ஓரக்கண்ணால் கண்ட தன் கணவரின் பார்வையை அறிந்தவர், தன் ஒற்றை விற்புருவத்தைத் தூக்கி என்னவென்று வினவிட, ஒன்றுமில்லை என்று தலையாட்டிய இளமாறன் இதழிடம், “சரிம்மா, அப்போ பத்து நாள் கழிச்சு பொண்ணு பாக்க வர சொல்லலாமா?” என்று கேட்க, சிறிது நேரம் மௌனத்திற்கு பின் புன்னகையுடன் தலையசைத்தாள் இதழினி.

மகிழ்ச்சியில் இளமாறனோ குதித்துவிட்டார். “ரொம்ப சந்தோசம் இதழ்மா. நீ போ, நான் மத்த விசயத்த எல்லாம் பேசிக்குறேன்” என்று அவளை அனுப்பிய கையோடு, தன் மனைவியை அணைத்து இருந்தார்.

“அட, என்னங்க நீங்க. உங்க பொண்ணு பேசிட்டு சொல்றேன்னு தான் சொல்லி இருக்கா. சரின்னு சொல்லலயே” என்றதில் தன் மனைவியை முறைத்தவர்,

“வாய வச்சிக்கிட்டு பேசாம இரு பிறை. அவளயும் என்னையும் சீண்டலன்னா உனக்கு தூக்கம் வராதே. நான் போய் தேவாக்கிட்ட பேசிட்டு வரேன்.” என்று சென்று விட்டார்.

அவர் சென்றவுடன் பிரவீனுக்கு அழைத்தார் இளம்பிறை.

“சொல்லுங்கம்மா” என்றவனின் குரல் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது.

“என்னடா, பல்லு டைப் அடிக்குது? அவ்ளோவா குளுருது?” என்று கேலியாகக் கேட்டவரின்மீது கடுப்பு வந்தாலும்,

“நீங்க ஏன் பேசமாட்டீங்க? ஆக்ராவுலயே இப்டி குளுருதுமா. இதுல லே லடாக் போனா நான் அவ்ளோதான், அங்கேயே ப்ரீஸ் ஆகி பனிச்சிலையா மாறிடுவேன் போல.” என்றவனின் பதிலில் சிரித்தவர்,

“அமுதன் எங்கடா?”

“யாரு, உங்க சிஷ்யபுள்ளயா? அவரு குளுருக்கு இதமா நெருப்பு பக்கத்துல உட்காந்து டானிக் குடிச்சிட்டு இருக்காரும்மா” என்று அவன் மதுபானம் குடித்துக் கொண்டிருப்பதை அழகாகப் போட்டுக் கொடுக்க, விரைந்து அவ்விடம் வந்த அமுதன் தலையிலடித்துக் கொண்டு, “அய்யோ இல்ல மேடம், அவர் வேணும்னே சொல்றாரு.” என்று கத்தியபடியே கைப்பேசியை வாங்கினான்.

“உங்க ரெண்டு பேரையும் அவன பத்தி டீடையில்ஸ் கலெக்ட் பண்ண அனுப்பினா, ரெண்டும் நல்லா என்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று காய்ந்தார் இளம்பிறை.

“எதே, என்ஜாய்யா? ஏம்மா இங்க அவனவன் என்ன கஷ்டத்துல இருக்கான். என்ஜாய் பன்றோம்னு அசால்ட்டா சொல்றீங்க?” என்று வெறியானான் பிரவீன்.

“சரிடா, என்னதான் நடக்குது? அவங்க என்னதான் பன்றாங்க?”

“அவங்களா? ஒருத்தன் ரொம்ப நேரமா யமுனா நதிய பாத்துட்டு இருக்கான். இன்னொருத்தன் மூஞ்சிலயே சோக கீதம் வாசிச்சிட்டு கிடக்கான். ஆக மொத்தம் லடாக் போய்ட்டு திரும்பி வரப்போ நாங்க  பைத்தியம் புடிச்சு வரப்போறோம்.”

“டேய், தெளிவா சொல்லு. என்னதான் பன்றாங்க?”

“ஆக்சுவலா அம்மா, இளையாவும் அகிலனும் கண்டிப்பா ஒரு பொண்ணத் தேடித்தான் வந்து இருக்காங்க. அது மட்டும் நல்லா தெரியுது. மே பீ அது உங்க மாப்பிள்ளையோட எக்ஸ்சா கூட இருக்கலாம். ஆனா மத்தபடி தண்ணீ தம்முன்னு எந்த பழக்கமும் கிடையாது. பொய் சொல்ல மாட்டான். ஆனா, ஒரு விசயத்துல உறுதியா இருக்கணும்னு முடிவு பண்ணிட்டா யார் என்ன சொன்னாலும் அதுல இருந்து மாற மாட்டான். இதுலாம் என்னோட ஏழாம் அறிவுல இருந்து நான் கலெக்ட் பண்ண டீடையில்ஸ். அதே மாதிரி ஒன்னு வேண்டாம்னு முடிவு எடுத்துட்டாலும் யார் கம்பெல் செஞ்சாலும் சார் ஒத்துக்க மாட்டாரு.” என்றதில் இளம்பிறை மென்னகை புரிந்தார். இவையெல்லாம் அவர் அறிந்த ஒன்று தானே. அவர் அறிந்து கொள்ள வேண்டிய விசயம் வேறாக இருக்கையில் அரைத்த மாவை எத்தனை முறைதான் இவர்கள் அரைக்க போகின்றனர் என்றேதான் அவருக்கு தோன்றியது.

“ஆனா மேடம், கண்டிப்பா எல்லாருக்கும் மைனஸ் பாய்ண்ட் இருக்கத்தான் செய்யும். அது என்னதுன்னு கண்டுபிடிக்கத்தான் நீங்க அனுப்பியிருக்கீங்கன்னும் எனக்கு தெரியும். இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்ப போறோம். லடாக் போய்ட்டு என்னன்னு சொல்றோம் மேடம்” என்ற அமுதனின் மொழிதனில் அவனின் திறமையை எண்ணி மெச்சிக்கொண்டார் இளம்பிறை, குருவின் மனமறிந்த சிஷ்யன் என்று.

பின் இதழின் ஒப்புதலை அவர்களிடம் தெரிவித்தவர், “சீக்கிரம் என்ன விசயம்ன்னு தெரிஞ்சிக்கிட்டு சொல்லுங்க” என்றபடி அழைப்பைத் துண்டித்தார் இளம்பிறை. இவரின் இந்த செயல் பின் எந்த ரூபத்தில் பூதாகரமாக வெடிக்க இருக்கின்றது என்று பாவம் இவர் அறிந்திருக்கவில்லை.

“இளையா கிளம்பலாமாடா” என்று கேட்டுக்கொண்டே அவனருகில் வந்தான் அகிலன்.

“ம்ம்… போலாம்.” என்றவனின் குரல் பிசிறுதட்ட,

“டேய், என்ன ஆச்சுடா?” 

“நான் சுயநலமா யோசிக்குறேன்னு தோணுதுடா. என்னை நம்பிதானே அவ வந்தா. ஆனா…” என்றவனின் பேச்சை இடையிட்டவன்,

“அவனுங்க வராங்க. கன்ட்ரோல்” என்றபடி நால்வரும் பயணிக்கத் தொடங்கினர் லே லடாக்கிற்கு.

“தேவா, நான் மாறன் பேசுறேன்டா” என்றபடி ஆரம்பித்த சந்தோசக் கூச்சல், தேவநந்தனையும் தொற்றிக் கொண்டது.

“சொல்லுங்க சம்பந்தி. என் மருமக என்ன சொன்னா?”

“அவளுக்கு சம்மதம்தான்டா. ஆனாலும், நேர்ல பாத்துட்டு முடிவு சொல்றேன்னு சொல்லியிருக்கா.”

“அவள பத்தி எனக்கு தெரியாதா. எனக்கு இந்த பயல நினச்சாதான் பயமா இருக்கு. என்னதான் தேனு மிரட்டி அனுப்பியிருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல பிள்ளைங்க கிட்ட நாம என்னதான் சொல்றது? நிஜமாலுமே கல்யாணம்னு ஒரு கட்டமைப்புக்குள்ள அவன தள்ளுறோமோன்னு தோணுது மாறா.” ஒரு தந்தையாக தேவநந்தனின் எண்ணம் இளமாறனுக்கும் புரிந்தது.

“இங்க பாரு தேவா, இளையா ஒன்னும் சின்ன பையன் கிடையாது. நம்மள விட, ஊரு உலகத்த நல்லா தெரிஞ்சவன். கண்டிப்பா கல்யாணத்துக்கு சரிதான் சொல்லுவான். நீ எதுக்கும் பயப்படாத.” என்று சமாதானம் செய்தார் ஒரு நண்பனாக.

“பிறை என்ன சொன்னா? தங்கச்சிக்கு சம்மதமா?”

“சம்மதம் இல்லாமலா மேடம் முகூர்த்த நாள்லாம் பாத்துட்டு இருப்பாங்க. அவளுக்கு பரிபூரண சம்மதம்டா. தேனு என்ன சொன்னா?”

“அவளுக்கு என்ன, இதழ பாத்த உடனே தலையும் புரியல, காலும் புரியல. என்னோட மருமக வீட்டுக்கு வந்து இருக்கான்னு ஒரே குஷிதான் போ. ஏங்க, இதழ் திகழுக்கு எப்டி அட்வைஸ் பன்றா, இடத்த சுத்தமா வச்சிக்குறா, மரியாதையா பேசுறா. கண்ணுக்கு உருத்தாத மாதிரி இந்த காலத்துல டிரெஸ் பன்றான்னு மருமகள கண்ணு வச்சிட்டாடா. இளம்பிறைக்கிட்ட சொல்லி சுத்தி போடு” என்றதில்,

“என் மருமகள நான் கொஞ்சாம வேற யாரு கொஞ்சப் போறா. கொடுங்க பேசாம” என்றபடி கணவரிடமிருந்து அழைபேசியை தன்கைக்கு மாற்றிக் கொண்டார் தேன்மொழி.

“அண்ணா, எப்டி இருக்கீங்க? பிறை அண்ணி எப்டி இருக்காங்க? என் மருமக என்ன சொன்னா?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகணைகளைத் தொடுத்தார் தேன்மொழி.

“பொறுமையா கேளுமா. நான் நல்லா இருக்கேன். பிறையும் நல்லா இருக்கா. உன் மருமக மாப்பிள்ளைய நேர்ல பாக்கணும்னு சொல்றா. எப்போ ஐயா லடாக்ல இருந்து வரப் போறாரு?”

“இப்போதான் ஆக்ராவுக்கு போய் இருக்கானாம்ண்ணே. ப்ராஜக்ட்ட முடிச்சிட்டு சீக்கிரம் வர சொல்லி இருக்கேன். வந்த உடனே கையோட அழச்சிட்டு வந்து பேசிக்குறேன்.” என்றவரின் வார்த்தை மகிழ்ச்சியில் கும்மாளமிட்டது.

ஆக்ராவில்.

நால்வரும் ஆக்ராவில் இருந்து புறப்பட்டனர். அகிலனும் இளையாவும் ஒரு மனநிலையில் இருக்க, பிரவீன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அமுதன் இருவரையும் கண்காணித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். திடீரென்று பிரவீன், “அய்யோ எரும, எரும விடுடி. கழுத்த பிடிக்காத. அய்யோ மூச்சு விட முடியலடி. உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல, அம்மாதான் அனுப்பி விட்டாங்க. இதழ்… இதழ்… அய்யோ கொலகாரி. நான் செத்துட்டேன். இவளுக்கு கல்யாணம் செய்து வைக்க என்னை பழிகொடுத்துட்டீங்களே மா… கன்னிக்கழியாத பையனோட சாபம் சும்மா விடாது. காப்பாத்துங்க… காப்பாத்துங்க… காப்பா…” என்று கண்விழித்திட மூவரும் கண்சிமிட்டாமல் அவனைத்தான் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘ஹப்பாடா கனவா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டவன், “அமுதா, கனவுல அந்த ராட்சசி என்னை கொல்லப் பாக்குறா. ஒரு நிமிசம் உசுரே போச்சு” என்றதில் மூவருக்கும் சிரிப்புத்தான் வந்தது.

அகிலன்தான் நீரைக் கொடுத்து அவனை ஆசுவாசப்படுத்த, தண்ணீரை அருந்தியவன் “ரொம்ப தாங்க்ஸ் ப்ரோ. ஆனா மூணு பேரும் வேடிக்கைதான் பாத்தீங்களே தவிர, ஒருத்தராவது கனவுல இருந்து காப்பாத்தக் கூடாதா? பயத்துலயே செத்துருப்பேன்” என்று அப்பாவியாகக் கூறியதில், இதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை சிதறவிட்டனர் மூவரும். இப்போது பிரவீன்தான் பே’வெனப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இளையாவிற்கும் அகிலனிற்கும்தான் அவனின் இதழ் என்ற வார்த்தை ஒரு ஆர்வத்தைத் தூண்டியது.

“யாரு அது, எரும? இதழ்?” என்ற இளையாவின் கேள்விற்கு,

“ரெண்டுமே ஒருத்திதான்” என்று பதிலளித்தான் பிரவீன்.

“இன்ட்ரஸ்ட்டிங்க். கொஞ்சம் அவங்களப்பத்தி சொல்றது. கேட்டுட்டே வண்டி ஓட்டுவோம்ல” என்றான் அகிலன்.

“அந்த ராட்சசிய பத்தி ஏன் கேட்குறீங்க. 20 வருசமா அவ கூட குப்ப கொட்டிட்டு இருக்கேன். மனுசியே கிடையாது. ஆனாலும் அவ இல்லாம என்னால இருக்க முடியாது.” என்றவனின் இதழில் மெல்லிய சிரிப்பு, கேட்டவர்களுக்கும்தான்.

“என்ன பாஸ் லவ்வா?”

“என்ன லவ்வா? அவளும் நானும் திக் பிரண்ட்ஸ் பாஸ். ஒரு கொசுவர்த்தி சுருள சுத்தி விடுறேன் அப்பர்க்கே தேக்கோ” என்று அவன் மேலே பார்த்திட,

“நானும் மேல பாத்தா எல்லாம் மேலதான் போகணும். நீங்க சொல்லுங்க, நான் கேட்குறேன்” என்றான் அகிலன்.

“சாரி ப்ரோ சிரிப்பு வரல. நீங்க ரோட்டப் பார்த்துக்கிட்டே கதைய கேளுங்க. அப்போ எனக்கொரு ஆறேழு வயசு இருக்கும். ரெண்டு பேரும் ஒரே க்ளாஸ் வேற. இந்த பைத்தியக்காரி என்ன செஞ்சா தெரியுமா? இவ ஒருத்தி ஹோம்வொர்க் எழுதாத காரணத்துனால எல்லாரோட ஹோம்வொர்க் நோட்டயும் எடுத்து கிழிச்சு போட்டுட்டா. இது அவளோட திருட்டுத்தனம். ஆனா, மாட்டுனது நான்தான்.”

“நீங்க எப்டி? புரியலையே?”

“கிழிச்ச பேப்பர்ஸ் எல்லாம் என் பேக்குலதான போட்டு வச்சுச்சு அந்த எரும. பேக் செக் பன்றப்போ நான்தான் செஞ்சேன்னு மாட்டிவிட்டுட்டா. இதுல ஹைலைட் என்னதுன்னா, அவளோட நோட்டயும் கிழிச்சு வச்சியிருக்கா. சரி, இது சின்ன பிள்ளை ஏதோ சேட்டை செஞ்சு இருக்கான்னு விட்டுடலாம். ஆனா, அதுக்கு அப்ரோம் ஒவ்வொரு விசயத்துக்கும் திருட்டுத்தனம் செஞ்சு கடைசில இவ அப்பாக்கிட்ட நான்தான் மாட்டுவேன். இந்த லட்சணத்துல அவங்க அப்பா இவளுக்கு கராத்தே வேற சொல்லிக் கொடுத்துட்டாரு. எத்தன அப்பாவி பசங்க இவக்கிட்ட அடி வாங்கியிருக்காங்க தெரியுமா? ஆறு வயசுல நோட்ட கிழிச்சவ, ஆறாவது படிக்குறப்போ அடுத்தவங்க வாய கிழிக்குற அளவுக்கு போய்ட்டா. ஆனாலும் நல்ல பொண்ணுதான்.” என்று சொல்லி முடித்தான்.

“இதுக்கு ஒரு கொசுவர்த்தி சுருள் வேற. எல்லா பொண்ணுங்களும் பழகுற வரைக்கும்தான் பாஸ் அம்மாஞ்சி, பழகிட்ட அப்ரோம் சொர்ணாக்கா மாதிரி தான் தெரிவாங்க. எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா பாருங்க. அவளாம் அந்த திமிரு படத்துல வர ஈஸ்வரி மாதிரி. மாதிரி என்ன மாதிரி ஈஸ்வரிதான். அண்ணாக்கும் மரியாதை கிடையாது அண்ணனோட ஃப்ரண்ட்ஸ்க்கும் மரியாதை கிடையாது.”

“எல்லாம் ஆண்களுக்கு விதிக்கப்பட்ட சாபம் பாஸ்.” என்றான் அகிலன்.

“இதுலாம் தைரியம் இருந்தா அந்த பொண்ணுங்க முன்னாடி சொல்லிதான் பாருங்களேன்.” என்ற அமுதனின் சொல்லிற்கு,

“என்னை போய் குழில புதைய சொல்றீங்களா செய்றேன். ஆனா அந்த ராட்சசி முன்னாடி இத சொல்ல சொன்னீங்கன்னா என்னோட உடம்பு கூட மிஞ்சாது சுக்கு நூறா சும்மா கிழி கிழி கிழின்னு கிழிச்சு நாறு நாறா தொங்க விட்டுடுவா அமுதா.” என்று கதறினான் பிரவீன்.

“அய்யோ பாவம், அவங்க ப்ரெண்ட்டே இந்தளவுக்கு கதறுறாங்கன்னா, கல்யாணம் செய்துக்க போறவங்க என்ன பாடுபட போறாங்களோ?” சொன்னது வேறுயாரும் இல்லை நம் நாயகன்தான். (அடேய், அந்த அதிர்ஷ்டசாலியே நீதான்டா. அந்த செல்லத்த கொஞ்சம் தூக்கிட்டு வாங்கடான்னு இதழ் கத்துறது என் காதுல கேட்குதே)

இவ்வாறே பயணம் தொடர்ந்தது லடாக் வரையிலும்.

 

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்