Loading

யாழினியிடமும் அவள் கணவன் இனியன் மற்றும் பாட்டி, தாத்தாவிடமும் விடை பெற்று தன் வீட்டிற்கு செல்வதற்கு அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்தாள் காவ்யா.

 

அவளின் வருகைக்காக அங்கு காத்திருந்த பிரசன்னா, அவளின் எதிரில் வந்து நின்றான். 

 

தன் எதிரில் வந்து வழியை மறைத்து நிற்கும் பிரசன்னாவை கண்டு முறைத்தவாறு, “கொஞ்சம் வழி விடுங்க” என்று கோபமாக சொன்னாள்.

 

அவளின் கோபத்தை ரசித்தவாறு, “வழி விட வேண்டுமா! ஏன் வழி துணையாக வரக் கூடாதா?” என்று அவள் கண்களை பார்த்து கேட்டான்.

 

“ஹலோ.. என்ன ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கீங்க? டைம் ஆயிடுச்சு. தள்ளுங்க” என்று அவனைத் தாண்டி செல்ல பார்த்தாள். 

 

பாதையை மறைத்தவாறு அவளை இன்னும் கொஞ்சம் நெருங்கி, “உன்னிடம் ஒரு நிமிடம் பேச வேண்டும்”என்றான். 

 

அவன் வழி விட மறுப்பதில் எரிச்சலாக, “சரி.. சீக்கிரம் சொல்லுங்க” என்று எங்கயோ பார்த்துக் கொண்டு நின்றாள்.

 

“என்னுடன் வா. அப்படி உட்கார்ந்து பேசலாம்” என்று அருகில் இருந்த மேஜை நாற்காலியில் அமர்ந்து கொண்டு, “எதுவும் சாப்பிடுகிறாயா?” என்றான். 

 

“ஒன்றும் வேண்டாம். என்ன சொல்ல வேண்டுமோ? சீக்கிரம் சொல்லுங்கள். நான் வீட்டிற்கு போகணும். நேரம் ஆகிறது” என்று சொன்னதையே திரும்ப சொல்லி அவனின் எதிரில் அமர்ந்தாள்.

 

அவனும் அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு, “இங்கே பார்..” என்று அவள் பெயர் தெரியாமல் நிறுத்த, 

 

“காவ்யா” என்றாள் அழுத்தமாக.

 

‘ம்ம்ம்.. காவ்யா’ என்று ரசனையாக ஒரு முறை தனக்குள் சொல்லிக் கொண்டு, “இங்கே பார் காவ்யா. உன் பிரண்டு நினைச்சு நீ வருத்தப்படாதே. அவள் இனியனுடன் கண்டிப்பாக சந்தோஷமாக வாழ்வாள்” என்று அவளிடம் பொறுமையாக கூறினான். 

 

அவன் பேசி முடித்துவிட்டு அவளை பார்க்க அவளோ அமைதியாகவே தனக்குள் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

“ஏய்.. என்ன யோசனை” என்று அவளை உலுக்கினான் பிரசன்னா. “நீ ரொம்ப கவலை படாதே” என்று மீண்டும் அவளிடம் சொல்ல, 

 

அவளோ, “எனக்கு ஒன்னும் கவலை இல்லை. இனியன் அண்ணா என் யாழினியை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்று எனக்கு தெரியும்” என்றா5 வெடுக்கென்று. 

 

“என்னது இனியன் அண்ணா வா? எப்போதிலிருந்து?” என்று அவனும் நக்கலாக கேட்க, 

 

“எப்போ மூன்றாவது முடிச்சு நான் போட்டேனோ? அப்போவே நான் அவர்களின் தங்கையாகி விட்டேன்”

 

“அதுவும் இல்லாமல் அவர் யாழினிக்காக யோசித்து உடை வாங்கி வந்திருக்கிறார். இதிலேயே அவர் அவளை நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது என்றாள் பெருமையாக.

 

“ம்ம்ம்.. ரொம்ப நல்லது. என் நண்பனை புரிந்து கொண்டதற்கு நன்றி. பின் ஏன் ஏதோ யோசனையாகவே இருக்கிறாய்?”

 

“நான் என்ன யோசித்தால் உங்களுக்கு என்ன? உங்கள் வேலையை பார்த்துக்கிட்டு போங்க. எல்லாத்தையும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று அவசியம் எனக்கு இல்லை” என்று சொல்லிவிட்டு கிளம்புவதற்கு அங்கிருந்து எழுந்தாள். 

 

அவளின் கையைப் பிடித்து உட்கார வைத்துவிட்டு, “ஏன் என்னிடம் சொல்ல மாட்டாயா?” என்று ஒரு மாதிரி குரலில் கேட்க,

 

“இந்த பாருங்க. நீங்க இனியன் அண்ணாவோட ஃப்ரெண்ட் அவ்வளவுதான். அதை தாண்டி நான் உங்களிடம் எதையும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இனி ஒரு முறை என்னிடம் இப்படி பேசாதீர்கள். அப்புறம் நான் இவ்வளவு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு இருக்க மாட்டேன்” என்று அவனின் கையைத் தட்டி விட்டுவிட்டு அவனை முறைத்துக் கொண்டு எழுந்து சென்று விட்டாள்.

 

பிரசன்னாவும் பெருமூச்சு விட்டு ‘இப்ப இவ பொருமையா பேசினாளாக்கும்’ என்று நினைத்துக் கொண்டே எழுந்து தன் நண்பனை காண சென்றான். 

 

மாடியில் வரவேற்பு அறையில் தனியாக அமர்ந்திருந்த இனியனிடம் வந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “என்ன மச்சான்? தனியா உட்கார்ந்து இருக்க. தங்கச்சி வெளியே விரட்டி விட்டுட்டாளா?” என்று கேட்டுக் கொண்டே அவனின் அருகில் அமர்ந்தான். 

 

அவனை முறைத்து பார்த்த இனியன், “என்னை விரட்டி விடுவது இருக்கட்டும். அய்யா முகம் ஏன் வாடிப்போய் கிடக்கு” என்று எள்ளாக கேட்டான்.

 

மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டு, அதைவிடுடா. சரி கிளம்புவோமா? இப்பொழுது கிளம்பினால் ஏர்போர்ட் போக சரியாக இருக்கும் என்று பேச்சை மாற்றினான் பிரசன்னா.

 

அவர்களைத் தேடி தாத்தா வருவதை கண்ட இனியன், “ஐ.. நம்ம பிளைட்ல போக போறோம். ஜாலியா இருக்கும் இல்ல” என்று சிறு குழந்தை போல் குதுகுளித்தான். 

 

அருகில் வந்த தாத்தா, இனியனின் தலையை ஆதுரியமாக தடவி விட்டுவிட்டு, பிரசன்னாவிடம் “கிளம்பலாமா? நேரம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார். 

 

அவனும் “ஆமாம்” என்று தலையாட்டினான் 

 

பின்னர் இனியனை பார்த்து, நீ போய் “பேத்தி ரெடி ஆயிட்டாளா? என்று பார்த்துவிட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.

 

அவனோ “பாட்டி அவளை பார்த்துக்குவாங்க தாத்தா” என்று அமர்ந்து கொண்டு இருந்தான். 

 

“டேய் நேரம் ஆகுது. பாட்டி கால் வலி என்று படுத்து இருக்கா. நீதான் பேத்தியை நல்லா கவனித்துக் கொள்ளனும். போய் ரெடி ஆகிட்டாளா என்று கேட்டுவிட்டு வா?” என்று அனுப்பினார். 

 

அவனும் “எல்லா வேலையையும் நான்தான் செய்ய வேண்டுமா?” என்று காலை உதைத்துக் கொண்டு சென்றான். 

 

அவர்களின் அறைக்கு சென்ற இனியன், அங்கு அவன் வாங்கிக் கொடுத்த சுடிதாரை அணிந்து, தன் கை விரல் நகத்தை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்த யாழினி கண்டு புன்னகைத்துக் கொண்டே, அவளின் அருகில் சென்று அமர்ந்தான்.

 

 திடீரென்று அவன் தன் பக்கம் வந்து அமர்ந்ததைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள் யாழினி. 

 

“ஏய்.. ஏன் பயப்படுற? நான் தான் இனியன்” என்று அவளின் கைகளைப் பிடித்து தன் அருகே அமர வைத்தான்.

 

அவன் சாதாரணமாக அவளை தன் அருகில் அமர வைத்தாலும் ஒரு ஆணின் பக்கத்தில் அமர்ந்திருப்பது யாழினிக்கு புதுவிதமான உணர்வாக இருக்க கை லேசாக நடுங்க ஆரம்பித்தது.

 

அவளின் நடுக்கத்தை உணர்ந்தான் இனியன்.

 

“நீ ரெடியா ஆயிட்டியா? என்று தாத்தா பார்த்து வர சொன்னாங்க. இப்ப கிளம்பினால் சரியாக இருக்குமாம். போகலாமா?” என்று அவளிடம் சாதாரணமாக பேசினான்.

 

அவன் கேட்டதற்கு தலையை மட்டும் ஆட்டி விட்டு எழுந்து நின்றாள் யாழினி. 

 

அதன் பிறகு இரவு உணவை முடித்துவிட்டு தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு அனைவரும் திருச்சி ஏர்போர்ட் சென்றார்கள். 

 

சென்னை ஏர்போர்ட் வந்ததும் பிரசன்னா தன் வீட்டிற்கு சென்று விடுவதாக கூற, நரசிம்மன் தாத்தா தங்கள் வீட்டு கார் யாழினியை அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி பறந்தது. வீட்டிற்கு வந்து சேர மூன்று மணி ஆகிவிட்டது. 

 

ஏற்கனவே போன் செய்து இனியனுக்கு திருமணம் முடிந்து விட்டது என்று கூறி, மணமக்கள் வருவதால் ஆரத்தி எடுக்க தயாராக இருக்கும்படி மருமகளிடம் தெரிவித்து இருந்ததால், இவர்கள் கார் வந்ததும் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தார் அபிராமி. 

 

ஏர்போர்ட்டில் இருந்து வீட்டிற்கு வருவதற்குள் காரிலேயே சற்று கண் அசைந்து விட்டாள் யாழினி. கார் நின்றதும் அவளை எழுப்பி இனியனின் அருகில் நிற்க வைத்தார் பாட்டி தூக்க கலக்கத்திலேயே அவள் நின்று கொண்டிருக்க திடீரென்று ஆரத்தி தட்டுடன் ஒரு பெண்மணியை கண்டதும் கொஞ்சம் கொஞ்சமாக கண்களை கசக்கி தெளிவாக பார்க்க முயன்றாள்.

 

ஆரத்தி எடுத்ததும் இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர் பாட்டியும் தாத்தாவும். 

 

“வலது காலை எடுத்து வைத்து உள்ளே வாமா” என்று யாழினியை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் பாட்டி.

 

மருண்ட விழிகளுடன் வீட்டிற்குள் நுழைந்த யாழினி சுற்றும் மற்றும் பார்க்க பெரிய ஹால். ‘இவ்வளவு பெரிய வரவேற்பறையா? என்று மிரண்டு நின்று கொண்டிருந்தாள்.

 

அங்கே இருந்த பெரிய பெரிய சோபாக்களிலும் ஒவ்வொருவர் அமர்ந்திருந்தனர்.

ஒவ்வொருவரையாக பார்த்தாள் யாழினி. தன் தந்தையின் வயதுள்ள வயதை ஒத்த ஒரு மனிதர் ஒரு சோபாவில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.

 

இதுதான் இனியனில் அப்பாவாக இருக்குமோ? என்று நினைத்துக் கொண்டு அடுத்த சோபாவை பார்க்க, அதில் இனியனினை போல் வயதொத்த ஒருவனும் இவளை போல் வயதொத்த ஒரு பெண்ணும் அமர்ந்திருக்க, இது அவரின் தம்பி தங்கையா இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். 

 

அதற்குள் ஆரத்தியை வெளியே கொட்டிவிட்டு வீட்டுக்குள் வந்த பெண்மணி தன் கணவனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார். இதுதான் இனியனின் அம்மா போல என்று நினைத்து, தாத்தா பாட்டியை பார்த்தாள். 

 

அவர்களும் அங்கிருந்த சோபாவில் கம்பீரமாக அமர்ந்து கொண்டு இனியனிடம், “இனியா.. உன் மனைவியை எல்லோருக்கும் அறிமுகப்படுத்து” என்றார். 

 

இனியனும் மகிழ்ச்சியுடன். அந்த பெரிய மனிதரின் முன் நின்று. “இதுதான் என் சித்தப்பா ஆதி மூலம். இது அபிராமி சித்தி” என்று அறிமுகப்படுத்த, அவர்களை கையெடுத்து கும்பிட்டு, அவர்களின் காலில் விழுந்து வணங்கினாள் யாழினி.

 

அபிராமி அவளை தூக்கி நிறுத்தி, “நன்றாக தீர்க்க சுமங்கலியாக இருமா” என்று வாழ்த்தினார். 

 

உடனே இனியனும் என்னையும் வாழ்த்துங்க சித்தி” என்று அவர் காலில் விழுந்து வணங்கினான். 

 

“நீயும் சௌபாக்கியமாக வாழுப்பா” என்று அவன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். 

 

அடுத்தது இருந்தவனை “இது என் சித்தப்பாவின் பையன் அன்பு செல்வன். இது அவனது தங்கை அறிவுமதி” என்று அங்கிருந்த இளம் வயது இளைஞனையும் இளைஞியையும் அறிமுகப்படுத்தினான். 

 

இருவரையும் பார்த்து புன்னகைத்தாள் யாழின. 

 

அறிவுமதியோ “ஹலோ அண்ணி” என்று புன்னகையுடன் சொல்ல, அன்புச்செல்வனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்தான்.

 

அறிவுமதி பாட்டியை பார்த்து, பாட்டி இதற்குத்தான் எங்களை நடுராத்திரி எழுப்பி விட்டீர்களா? காலையில் அறிமுகப்படுத்தி இருக்கலாம் அல்லவா?” என்று சொல்லிவிட்டு, யாழினி பார்த்து “நான் தூங்க போறேன் அண்ணி. காலையில் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டாள். 

 

அபிராமி யாழினியின் அருகில் வந்து ஒரு அறையை காண்பித்து “நீ அங்கு சென்று குளித்துவிட்டு வாமா. விளக்கேற்ற வேண்டும்” என்று சொல்லிவிட்டு, இனியனைப் பார்த்து “நீயும் போய் குளித்து வா” என்று அவனை, அவனது அறைக்கு போகச் சொன்னார்.

 

உடனே இனியன். “யாழினி என்னோட பொண்டாட்டி. என் பொண்டாட்டி என்னோட ரூம்ல தானே இருக்கணும். அதனால நான் அவளை என்னோட ரூமுக்கு கூட்டிட்டு போறேன்” என்று சொல்லி விட்டு, “நீ வா யாழினி” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து மாடியை நோக்கி சென்றான்.

 

அவனை தடுத்து அபிராமி, “இனியா.. சித்தி சொல்றதை கேளு. முதலில் நீ போய் குளித்துவிட்டு வா. இன்னும் உன் திருமணத்தை பற்றி யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. அதுவும் இல்லாமல் மற்ற சம்பிரதாயங்களை எல்லாம் முடித்து விட்ட பிறகு இதை பற்றி பேசுவோம்” என்று சொல்லி யாழினியை கெஸ்ட் ரூமுக்கு அழைத்துச் சென்றார். 

 

விருந்தினர் அறைக்கு அழைத்து வந்த யாழினியிடம் “குளித்துவிட்டு வா” என்று சொல்லி புது புடவையும் தேவையானவற்றையும் கொடுத்து அனுப்பினார். 

 

மூன்றையும் மணிக்கு எல்லாம் குளிக்க வேண்டுமா? என்று நினைத்துக் கொண்டே வேறு வழி இல்லாமல் குளியலறைக்குள் சென்றாள் யாழினி. 

 

சித்தி சொன்னது போல இனியனும் குளிக்கச் செல்ல, யாழினியும் குளித்து முடித்து அவர்கள் கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு தலையை துவட்டிக் கொண்டு வெளியே வந்தாள். 

 

அவள் வெளியே வரவும் அவளின் தலையை நன்றாக துவட்டி தலை பின்னி, மல்லிகை பூவை சூடினார் அபிராமி.

 

மிதமான ஒப்பனையிலேயே பேரழகியாய் தெரிந்த யாழினியைப் பார்த்து சற்று பொறாமை தான் வந்தது அபிராமிக்கு. அவளைப் பற்றி ஏதும் விசாரிக்கலாம் என்றால், முடியாதபடி லட்சுமி பாட்டியும் அவர்களின் அருகிலேயே இருந்தார். 

 

இனியனும் குளித்து வர இருவரையும் அழைத்துக் கொண்டு பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்கள். 

 

பார்ப்பதற்கு கோயில் வாசல் போல் இருந்தது பூஜை அறை வாயில். கதவை திறந்ததும் அதே போல் மூன்று அடுக்கு இருந்தது. முதலாம் அடுக்கில் வலது புறம் ஆறு அடி உயரத்தில் ஒரு தாத்தா பாட்டி படம் பெரிய மாலை போட்டு இருந்தது. 

 

நரசிம்மன் தாத்தா “இதுதான் என் அப்பா அம்மா” என்று காண்பித்தார். கையெடுத்து கும்பிட்டுக் கொண்டாள் யாழினி. 

 

அதன் பிறகு ஒரு சிறிய அறை அதில் பூஜைக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்ட செல்ஃப் இருந்தது.

 

அடுத்து முக்கிய பூஜை அறை. நேராக பார்த்தாலே அவர்கள் குலதெய்வம் அய்யனார் படம் பெரிதாக இருந்தது. அருகில் அனைத்து சாமி படங்கள் இருந்தது. பெரிய பெரிய குத்துவிளக்கு இரண்டு. காமாட்சி அம்மன் விளக்கு. தொங்கு விளக்கு என்று அந்த அறையே தெய்வீகமாக காட்சியளித்தது. 

 

அனைத்தும் சுத்தமாக துடைத்து புது மாலை சூடி, அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காமாட்சி அம்மன் விளக்கை காண்பித்த அபிராமி, யாழினியின் கையில் தீப்பெட்டியை கொடுத்து, “விளக்கை ஏற்றுமா” என்றார். 

 

யாழினியும் பக்தியுடன் இறைவனை வணங்கி விளக்கை ஏற்றினாள். பின்னர் அபிராமி சொல்ல சொல்ல ஒவ்வொன்றையும் செய்து கடைசியாக கற்பூரம் காண்பித்தாள். ஒரு கையில் மணி அடித்துக்கொண்டு மறுகையால் கற்பூர தட்டை பக்தியுடன் சாமி படங்களுக்கு காண்பித்துக் கொண்டிருந்தாள். 

 

அவளின் செய்கையிலேயே இது அவளுக்கு புதிய செயல் அல்ல என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. 

 

பூஜை முடித்து அனைவருக்கும் கற்பூர கட்டை காண்பித்து அனைவரும் கும்பிட்டதும் அவளும் அங்கு விழுந்து வணங்க இனியனையும் அவளின் அருகில் விழுந்து இறைவனை வணங்கும்படி கூறினார் தாத்தா. 

 

சாமி கும்பிட்டு விட்டு வெளியே வர, தாத்தா பாட்டியின் அருகில் இருந்த விளக்கை ஏற்றும் படி பாட்டி கூறினார். அதன்படியே அங்கும் விளக்கேற்றி கற்பூரம் காண்பித்து சாமி கும்பிட்டு முடித்தாள் யாழினி. 

 

சாமி கும்பிட்டு முடித்ததும் இருவரையும் வரவேற்பறையில் இருந்த பெரிய சோபாவில் அருகருகே அமரச் செய்தார் அபிராமி. பின்னர் இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்தார். 

 

அனைத்தும் முடித்ததும் தாத்தா பேச ஆரம்பித்தார்.

“என் அப்பா அம்மாவிற்கு நானும் என் தம்பி நாகராஜன் இருவரும் தான் பிள்ளைகள். எங்கள் அப்பா இறக்கும் தருவாயில் அவரின் சொத்துக்கள் அனைத்தையும் எங்கள் இருவருக்கும் பிரித்து வைத்து விட்டார். 

அதன் பிறகு தான் எனக்கும் என் தம்பிக்கும் திருமணம் நடந்து இருவருக்கும் ஆளுக்கு ஒரு மகன்கள் பிறந்தார்கள்.

 

என் தம்பியின் மகன் தான் ஆதிமூலம்” என்று அங்கு அமர்ந்திருந்தவரை காண்பித்தார். அபிராமியை காண்பித்து “இவர்களுக்கு ஒரு மகனும் மகளும். அவர்களைத் தான் நீ பார்த்தாய் அல்லவா?” என்று யாழினியை பார்த்தார்.

 

அவளும் ஆமாம் என்று தலையாட்டினாள். 

 

“எனக்கு ஒரே மகன் அவனுக்கும் இனியன் ஒரே மகன். ஆதிகேசவன். அவன் மனைவி அமிர்தா.

 

இனியனுக்கு பத்து வயது இருக்கும் பொழுது ஒரு கார் விபத்தில் அவனும் அவனது மனைவியும் இறந்து விட்டார்கள்” என்று சொல்லும் போதே அவரின் தொண்டை கரகரத்தது. 

 

“அதன் பிறகு அவன் தொழிலை கவனித்துக் கொள்வதற்காக ஆதிமூலம் இங்கு வந்து எங்களுடனே தங்கி கொண்டான். எங்களையும் இதுவரையில் நன்றாக கவனித்து வருகிறான்” என்று கூறி புன்னகைத்து ஆதிமூலத்தை பார்த்தார். 

 

அவரும் அலட்சியமாக சிரித்துக்கொண்டு, “எங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றும் இப்பொழுது அவசியம் இல்லை பெரியப்பா. அவளைப் பற்றி சொல்லுங்கள். நல்ல பெண்தான் என்று நன்றாக விசாரித்தீர்களா?” என்று தாத்தாவை பார்த்தான்.

 

அவரும் “நல்ல குடும்பத்து பெண் தான் பா. இதில் என்ன உனக்கு சந்தேகம் வந்துவிட்டது” என்றார். 

 

உடனே ஆதி மூலமும் “ஒரு பைத்தியத்தை கல்யாணம் பண்ண சம்மதித்து கல்யாணம் பண்ணி வந்திருக்கிறாள் என்றால்…. சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது அல்லவா? சொத்துக்காகத்தான் கல்யாணம் பண்ணி வந்திருப்பாள் என்று நினைக்கிறேன்” என்று கூறினார் ஆதிமூலம். 

 

அவர் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் யாழினி.

 

 

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்