Loading

‘வேறு யாருக்கும் போன் செய்யக்கூடாதா? ஏன் இப்படி சொல்லி விட்டு செல்கிறார்’ என்று யோசித்தபடியே தேனீரை எடுத்து பருகினாள் அறிவுமதி. 

 

தேநீர் குடித்து முடித்து குளித்து தயாரானதும் பிரசன்னாவிற்கு அழைத்து தாங்கள் ரெடியாகிவிட்டதை கூறினாள். 

 

சிறிது நேரத்தில் பியூட்டிஷியன்சை அழைத்துக் கொண்டு பிரசன்னா அவர்கள் அறையில் வந்து விட்டுவிட்டு, “ஆறு மணி அளவில் ரிசப்ஷன் ஆரம்பமாகிவிடும். அதற்குள் ரெடியாகி விடுங்கள்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

 

அதன்படியே ஒப்பனைக் கலைஞர்கள் இருவரும் சேர்ந்து யாழினியை தேவதை போல் தயார்படுத்தினர். மருதாணி வைக்கும் அன்று லெகங்கா அணிந்ததால், அதன் எடையில் மனதில் கொண்டு, ரிசப்ஷனுக்கு கண்டிப்பாக எனக்கு புடவை தான் வேண்டும் என்று சொல்லி விட்டாள் யாழினி. 

 

ஆகவே ரெட் ஒயின் வண்ணப் புடவையில் வெள்ளி திராட்சை கொடி ஓட, ஆங்காங்கே தங்க திராட்சை பழங்கள் இருப்பதாக அழகாக அமைந்திருந்த புடவையை தேர்வு செய்திருந்தான் இனியன்.

 

புடவை கட்டியதும் அவளின் வண்ணம் மேலும் மெருகேர அதற்கு இணையாக தங்கத்தில் வைரமும் புடவை வண்ண கற்களும் பதித்த நகைகளை அணிந்ததும் அவளைப் பார்க்க வானில் இருந்து தேவதை தான் இறங்கி வந்தது போல் தோன்றியது அறிவுமதிக்கு.

 

புடவையும் நகையும் இனியன் அண்ணா தான் செலக்ட் பண்ணி வாங்கினாங்க. சின்ன பையன் போல் இருந்தாலும் எவ்வளவு அழகாக தேர்ந்தெடுத்து இருக்காங்க என்று வியந்தாள். 

 

அவள் கூறியதும் தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள் யாழினி. அறிவுமதி கூறியது போலவே மிகவும் அழகாக இருந்தது புடவையும் நகையும். உண்மையில் அவன் ரசனையானவன் தான் என்று நினைக்கையில் அவளின் உதட்டில் புன்னகை மலர்ந்தது. 

 

அனைத்தும் முடிய யாழினியை பார்த்த அறிவுமதி, “வாவ் அண்ணி. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்று அவளை இருக்க அணைத்தாள். 

 

“மேடம். பார்த்து புடவை கசங்கி விடப் போகிறது” என்று பியூட்டிஷியன் சொல்ல, புன்னகைத்துக் கொண்டே விலகி ரொம்ப, “அழகா இருக்கீங்க அண்ணி” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே அவளும் தயாரானாள். 

 

பிங்க் நிற லெஹங்காவில் அழகாய் தயாராகி இருந்த அறிவுமதியை பார்த்து “நீ என்னை போய் சொல்கின்றாய். உண்மையில் என்னை விட நீ தான் அழகாக இருக்கிறாய்” என்று அவளின் கண்ணம் பிடித்து கொஞ்சினாள் யாழினி. 

 

இருவரும் தயாராகி முடிந்ததும் பியூட்டிஷியன் அவர்களுக்கு ஒப்பனை பற்றி சில அறிவுரைகள் சொல்லிவிட்டு கிளம்பினார்கள். அவர்கள் வெளியேறியதும் அங்கு வந்த பிரசன்னாவை கண்டு வியந்தாள் அறிவுமதி. கிட்டத்தட்ட யாழினியின் புடவை வண்ணத்திற்கு ஒத்தவாறு அவனுடைய உடை இருந்தது. 

 

அவளது வியப்பின் காரணத்தை புரிந்து கொண்டாலும், அவளை அதை கவனித்தது போல் காட்டிக் கொள்ளாமல் யாழினியின் அருகில் வந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் ஹாலுக்கு செல்லலாம். விருந்தினர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். இனியனும் தயாராகி விட்டான்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய செல்போனில் ஒரு சில புகைப்படங்களை யாழினியை எடுத்து விட்டு போட்டோகிராபர்சை அழைத்து, “தேவையான ஸ்டில்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, அறிவுமதியை பார்த்து “அவர்கள் முடித்ததும் சீக்கிரமாக அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வா. நான் இனியனை அழைத்து வருகிறேன்” என்று கிளம்பினான். 

 

அவன் கிளம்பியதும் புகைப்பட கலைஞர்கள் யாழினியை புகைப்படம் எடுக்க, அவ்விடம் வந்த அன்புச்செல்வம், “உங்களை நான் எனது அறைக்கு தானே போகச் சொன்னேன். நீங்கள் ஏன் இந்த அறைக்கு வந்தீர்கள்?” என்று கோபமாக கேட்டான். 

 

அறிவுமதியோ “ஆமாம். உன் அறைக்குச் சென்றாள், அங்கும் நீ வந்து அதை எடுக்க வேண்டும், இதை எடுக்க வேண்டும் என்று தொந்தரவு செய்து கொண்டே இருந்திருப்பாய். அதனால் தான் நான் இனியன் அண்ணாவின் அறையிலேயே இருந்து கொண்டு அண்ணனை அங்கு அனுப்பி விட்டேன்” என்று கூறிவிட்டு தன்னையும் புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளே சென்றாள். 

 

அன்புச்செல்வனும் என் பிளானை எல்லாம் கெடுக்கிறதுக்காகவே எனக்கு தங்கச்சியா வந்து பொறந்து தொலைச்சிருக்கா!’ என்று மனதில் நினைத்துக் கொண்டே அங்கிருந்து நகன்றான்.

 

அதன் பிறகு இனியனும் வர இருவரையும் சேர்த்து சில புகைப்படங்கள் எடுத்தனர். யாழினியின் புடவை வண்ணத்திலேயே அவனுடைய சட்டை அமைந்திருந்தது. அரை வெள்ளை நிற பிளேசர் அணிந்து ஆண்மை தழும்ப கம்பீரமாக நின்ற இனியனைக் கண்டு பிறகு, அவனை விட்டு கண்களை விளக்க முடியாமல் திணறினாள் யாழினி. 

 

அவளின் முகத்தில் அவளின் உணர்வுகளை அப்பட்டமாக தெரிய அவற்றையும் புகைப்படம் எடுத்தனர் புகைப்படக் கலைஞர்கள். இனியன் பிரசன்னாவிடம் கண்களால் ஏதோ கூற அவனும் புரிந்ததாக தலையாட்டினான். பின்னர் புகைப்படம் எடுத்து முடித்ததும் அனைவரும் ரிசப்ஷன் ஹாலை நோக்கி சென்றனர்.

 

அங்கு வந்திருந்த விருந்தினர்களை, பாட்டி தாத்தா ஒருபுறமும் ஆதிமூலம் அபிராமி ஒருபுறமும் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார்கள். 

 

பிரத்தியோக மியூசிக் முழங்க இனியனும் யாழினியும் ரிசப்ஷன் ஹாலுக்குள் நுழைந்தனர். இருபுறமும் நடன கலைஞர்கள் நடனமாடி பூ தூவி அவர்களை வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர். 

 

இனியனின் தாய் வழி சொந்தம் மற்றும் தந்தை வழி சொந்தம் அனைவரையும் நரசிம்மன் தாத்தா அழைத்து இருந்தார். 

 

மேலும் ஆதிமூலம் தொழில்துறையில் உள்ளவர்கள் அனைவரையும் அழைத்து இருந்தார். ஆகையால் அந்த ஹாலே நிரம்பி வழிய, பிரசன்னா பௌன்சர்கள் வைத்து மேடையில் கூட்டம் இல்லாமல் பார்த்துக் கொண்டான். 

 

திடீரென்று அங்கு நிறைய போலீஸ் ஆபீஸர்கள் வர ஆதிமூலம் சற்று பதட்டமானார். வேகமாக நரசிம்மனிடம் வந்து, “அவர்களை நீங்கள் அழைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். 

 

அவரோ இல்லை என்று சொல்ல, பின் யார் அழைத்து இருப்பார்கள் என்று குழம்பி சுற்றும் மற்றும் பார்த்தார்.  

 

வந்தவர்கள் பிரசன்னாவின் தந்தையிடம் சென்று பேச, ‘ஓ.. அவர்தான் அழைத்திருப்பார் போலிருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டார்.  

 

பிரசன்னாவின் தந்தை ராமகிருஷ்ணன் மனநல மருத்துவர். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் தற்போது டீனாக இருக்கிறார். அவருக்கு நிறைய அரசாங்க உத்தியோகர்களுடன் பழக்கம் இருப்பதால் அவர் அழைத்து இருப்பார் என்று நினைத்துக் கொண்டார் ஆதிமூலம். 

 

பிரசன்னாவின் நண்பர்கள் அனைவருக்கும் இனியனை தெரியும். ஆதலால் அவர்கள் மேடைக்கு வரும் பொழுது இனியன் மிகவும் மகிழ்ச்சியாக அவர்களுடன் பேசினான்.

 

அவர்களும் யாழினியை பார்த்து இனியனுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக வாழ்த்திச் சென்றார்கள். 

 

அந்த ரிசப்ஷன் ஹால் முழுவதும் இனியனின் சொந்தங்களும் நண்பர்களுமே கூடியிருக்க யாழினி மட்டும் தனித்து இருந்தாள்.

 

அதை அவள் உணராவிட்டாலும், அவர்களிடம் வந்து புகைப்படம் எடுக்க வந்த இனியனின் சொந்தங்கள் சிலர் நக்கலாக பேசி சென்ற பொழுது அவளது மனம் வாடியது. அந்த வாட்டம் முகத்தில் தெரிந்ததும் இனியன் அவளின் எண்ணத்தை மாற்றும் பொருட்டு ஏதாவது பேசி அவளை சகஜம் ஆக்கிக் கொண்டு இருந்தான். 

 

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று அந்த இடமே மகிழ்ச்சி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வந்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராக இனியன், யாழினியை வாழ்த்தி புகைப்படம் எடுத்துச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறைய ஆரம்பித்தது.

 

அனைவரும் கிளம்பியதும் மணமக்களை உணவு உண்ணும் படி கூறினார் நரசிம்மன் தாத்தா. அதன்படியே குடும்பத்தார்கள் மட்டும் அமர்ந்து உணவு உண்ண, இராமகிருஷ்ணனும் பிரசன்னாவும் அவர்களுடன் இருந்தார்கள். 

 

அனைவரும் உண்டு முடிந்ததும் புகைப்பட கலைஞர்களும் கிளம்ப, ஆதிமூலம் தன் மகனை அழைத்து, “நேரம் ஆகிறது. ஆகையால் நீ கணக்கு வழக்கை எல்லாம் முடித்துவிட்டு வா. நாங்கள் வீட்டிற்கு கிளம்புகிறோம்” என்றார். 

 

இனியன் பிரசன்னாவை காண, பிரசன்னாவும் தாத்தா பாட்டியிடம், “சரி தாத்தா நேரமாகிறது. நாங்களும் கிளம்புகிறோம்” என்று சொல்லி அனைவரிடமும் விடை பெற்று, இனியனை அணைத்து, யாழினியிடமும் வாழ்த்து சொல்லி கிளம்பினான்.

 

தாத்தா பாட்டி இனியன் யாழினி ஒரு காரில் கிளம்ப, ஆதி மூலம் தன் மனைவி மகளுடன் அடுத்த காரில் கிளம்பினார். மகனை கணக்கு வழக்குகளை முடித்துவிட்டு நாளை காலை வரும் படி சொல்லிவிட்டார். 

 

இரவு நேரமாகியதால் பேருந்து நெரிசல் இல்லாமல் மிதமான வேகத்தில் கார் அவர்களின் இல்லம் நோக்கி பறந்தது. 

 

வெகு நேரம் நின்று கொண்டிருந்ததால், கால் வலியும் உடம்பு அசதியுமாக, உறக்கம் வருவது போல் இருக்க, லேசாக கண்ணயர்ந்தாள் யாழினி. 

 

தூக்கத்தில் இனியனின் மீது சாய, புன்னகைத்து அவளை தன் மார்பில் வசதியாக சாய்த்து கொண்டான். 

 

வீட்டிற்கு வந்து கார் நின்றதும் இனியனை திரும்பிப் பார்த்த தாத்தா சிரித்துக்கொண்டார். இருவரும் அணைத்த படி உறங்கிக் கொண்டிருந்தனர்.

லக்ஷ்மி பாட்டி யாழினி எழுப்ப திடுக்கிட்ட எழுந்தாள் யாழினி. இனியனின் மார்பில் உறங்கியதை நினைத்து, வெட்கத்தில் முகம் சிவந்தது. அதை மறைக்க தலை குனிந்து கொண்டாள். 

 

“வீடு வந்துருச்சுடா வாங்க” என்று இருவரையும் பாட்டி அழைக்க, வாசலின் நிற்க வைத்து திருஷ்டி சுத்தி வீட்டிற்குள் வரவேற்றார் அபிராமி.

 

யாழினியிடம் இலகுவான புடவையை கொடுத்து, “சீக்கிரம் குளித்துவிட்டு வா” என்று அனுப்பினார் அபிராமி. 

 

யாழினியும் குளித்துவிட்டு, சந்தன நிற மைசூர் சில்க் புடவையை கட்டிக்கொண்டு வெளியே வர, இனியனும் குளித்து வேஷ்டி சட்டை அணிந்து தயாராக இருந்தான்.

 

இருவரையும் அழைத்துக் கொண்டு பூஜை அறை சென்று வணங்க செய்தனர் பெரியவர்கள். 

 

பின்னர் அபிராமி, இனியனிடம் இன்றிலிருந்து உன் பொண்டாட்டியை உன் அறையிலேயே வைத்துக்கொள் என்று சிரித்துக் கொண்டே சொல்ல, 

 

அவனும் “ஐ.. ஜாலி ஜாலி” என்று குதித்தான். 

 

ஆதிமூலம் தலையில் அடைத்துக் கொண்டு அவரது அறைக்குச் சென்று விட்டார்.

 

தாத்தாவும் இனியனிடம் “யாழினி திட்டக்கூடாது, அழ வைக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்கு செல்ல, 

 

அபிராமி இனியனிடம் “ஏதாவது சாப்பிடுகிறாயா?” என்று கேட்டார். 

 

“இல்லை சித்தி. எனக்கு பால் மட்டும் போதும்” என்று சொல்லி சோபாவில் அமர்ந்தான்.  

 

“சரி நீ உன் அறைக்கு போ. யாழினி பால் எடுத்துக் கொண்டு வருவாள்” என்று அவனை மேலே அனுப்பினார். அவன் சென்றதும் அபிராமியின் கையில் பாலை கொடுத்து, “அவனை கிண்டல் செய்து அழ வைத்து விடாதே!” என்று சொல்லிவிட்டு சென்றார். 

 

பாட்டியும் யாழினிடம், “ஒன்றும் பயப்படாதே மா. எல்லாம் ஒரு நாள் சரியாகும். நீயே புரிந்து நடந்து கொள்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்கு சென்று விட்டார். 

 

எல்லோரும் சென்றதும் தனித்துவிடப்பட்ட யாழினி மெதுவாக மாடிப்படி ஏறி பாட்டி சொன்ன அறையின் கதவை தட்டினாள். 

 

கதவைத் திறந்த இனியன் “வெல்கம் அவர் ரூம் மை டியர் ஏஞ்ஜெல்” என்று அவளின் கையில் பூங்கொத்தை கொடுத்து வரவேற்றான். அவள் கையில் பால் இருந்ததால் வாங்க திணற, அவள் கையில் இருந்த பாலை அவன் வாங்கிக் கொண்டு பூங்கொத்தை திணித்தான். 

 

“நான் கொடுத்தால் உன்னால் உடனே வாங்கிக் கொள்ள முடியாதா?” என்று சற்று கோபமாக கேட்டான். 

 

அவளோ “இல்லை.. கையில் டம்ளர் இருந்ததால்..” என்று பயந்து தயங்கினாள். 

 

அவளின் பயந்த முகத்தை கண்ட இனியன் உடனே சிரித்து விட்டு, “சும்மா உன்னை மிரட்டி பார்த்தேன்” என்று அவளை அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தான். 

 

கட்டிலில் மல்லிகை பூக்கள் தூவி இருந்தது. பூக்களை பார்த்து அவனையும் பார்த்தாள்.

 

உடனே இனியன் “இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட். ஆனா யாருமே நம்ம கட்டிளை டெக்கரேட் பண்ணவே இல்ல. அதனாலதான் நானே பூவ பிச்சுப் போட்டேன்” என்று அவன் கையில் மீதி இருந்த பூவை அவளின் மீது தூவினான்.

 

அவளுக்கோ கீழே அவன் குதித்ததிலிருந்து ஒரு மாதிரி வெட்கம் இருக்க, இப்பொழுது அவன் பேசியதில் மேலும் வெட்கம் கொண்டு தலை கவிழ்ந்து கொண்டாள். 

 

எல்லோரும் இருக்கும் போது இப்படி பேசக் கூடாது என்பதை அவனுக்கு புரிய வைத்து விட வேண்டும் என்று எண்ணத்தில் “இங்கே பாருங்க. நம்ம ரூமுக்குள்ள இருக்கும் பொழுது மட்டும்தான் நீங்க இப்படி எல்லாம் பேசலாம். வெளியே வந்தால் அமைதியாக இருக்கணும். சரியா?” என்று கேட்க,

 

அவனோ கோபமாக, “நான் எப்படி இருக்கணும். எப்படி இருக்க கூடாது என்று நீ எதுவும் எனக்கு சொல்லத் தேவையில்லை” என்றான்.

 

“அச்சோ.. அப்படி இல்லைங்க. நான் என்ன சொல்றேன் என்றால்” என்று சொல்லும் போதே அவளை பேச விடாமல் கையை நீட்டி தடுத்து, “எனக்கு பசிக்குது. பால் கொண்டு வந்து இல்ல. குடு” என்றான். 

 

அவளும் இவருக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல், பாலை எடுத்து அவனுக்கு கொடுத்தாள். 

 

மடமடவென்று குடித்துவிட்டு மீதி கொஞ்சம் வைத்து, “இந்தா.. இதை நீ குடி என்றான். 

 

“இல்லை. நீங்களே குடித்து விடுங்கள். எனக்கு வேண்டாம்” என்றாள். 

 

“இங்கே பார். இன்று நமக்கு ஃபர்ஸ்ட் நைட். நான் பாதி குடித்து கொடுக்க,ஜநீ பாதி குடிக்க வேண்டும்” என்று அவள் முகத்தை பார்த்தான். 

 

அவளோ இதை யார் இவருக்கு சொல்லி இருப்பார் என்று யோசித்தபடியே அவனைப் பார்க்க அவனே தொடர்ந்தான் “நான் எத்தனை படம் பார்த்திருக்கிறேன்” என்று. 

 

அவளும் லேசாக புன்னகைத்துக் கொண்டு அவன் கையில் இருந்த டம்ளரை வாங்கி மீதி பாலை குடித்து முடித்தாள். 

 

அவள் குடித்து முடித்ததும் கண்களை கசக்கிக் கொண்டு, “எனக்கு தூக்கம் வருகிறது. தூங்கலாமா?” என்று கேட்டான். 

 

அவளும் சரி என்று தலையாட்டி படுங்க என்று கட்டிலை பார்த்தாள்.

ஊரில் அவளின் அறையின் அளவு அந்த கட்டில் இருந்தது எவ்வளவு பெரிய கட்டில் என்று நினைத்து, சுற்றும் மற்றும் பார்க்க நல்ல பெரிய அறை தான். 

 

ஒரு பக்கம் அவள் உள்ளே வந்த கதவு இருக்க, மற்ற இரு பக்க சுவர்களிலும் இரண்டு இரண்டு கதவுகள் இருந்தது. இதில் ஒன்று குளியலறையாக இருக்கும். ஆனால் எது என்று யோசிக்க, அவளின் அருகில் வந்த இனியன், ஒரு கதவை காட்டி, “அதுதான் பாத்ரூம்” என்று சொல்லிவிட்டு அதுக்கு பக்கத்தில் இருந்த கதவை காட்டி “அது டிரெஸ்ஸிங் ரூம். இப்போதைக்கு இது போதும். நாளைக்கு காலைல எல்லாத்தையும் திறந்து பார்த்துக்கோ. சரியா? இப்ப வா தூங்கலாம்” என்று அவளையும் இழுத்துக் கொண்டு கட்டிலுக்கு சென்றான். 

 

அவளோ தயக்கமாக, “நீங்கள் கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள். நான் இந்த சோபாவில் படுத்து கொள்கிறேன்” என்று அங்கிருந்த பெரிய சோபாவை காண்பித்தாள். 

 

“ஏன்? இந்த கட்டில் தான் இவ்வளவு பெருசா இருக்கே. இதில் உனக்கு இடம் இல்லை என்று நினைக்கிறாயா? வா என்னுடனே படுத்துக் கொள்” என்று அவளை இழுத்து கட்டிலில் போட்டு அவளின் மேல் அணைத்தபடி படுத்துக் கொண்டான். 

 

அவனின் இந்த திடீர் செயலில் அவள் உள்ளம் துடிக்க, அவளின் உடலும் நடுங்கியது. ஒரு ஆணின் பரிசம். அவளின் உடல் முழுவதும் அணைத்தபடி அவன் இருக்க, “கொஞ்சம் தள்ளிப் படுங்களேன் எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது” என்று வாய்விட்டு சொல்லிவிட்டாள். 

 

“இங்கே பார் யாழினி. நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி. இப்படித்தான் கட்டி பிடிச்சுட்டு தூங்கணும். அது மட்டும் இல்லாமல் எனக்கு இப்படி படுத்தால் தான் தூக்கம் வரும். கொஞ்ச நாள் பொருத்துக்கோ. உனக்கும் இது பழகிடும். சரியா?” என்று அவளின் கழுத்தில் முகம் பதித்து உறங்க முற்பட்டான். 

 

அவளுக்கும் அவன் செயல் கூச்சத்தை தர நெளிந்துக் கொண்டே, “ப்ளீஸ் கொஞ்சம் தள்ளி படுங்களேன்”

 

அவனும் அவள் நெளியாவன்னம் மேலும் இறுக்கமாக அணைத்து கண்களை மூடி உறங்கி விட்டான். அவளும் வேறு வழியில்லாமல் அப்படியே அசையாமல் படுக்க இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றாக கலந்தது. 

 

சற்று நேரத்திற்கெல்லாம் அசதியால் தன்னாலேயே உறக்கத்தை தழுவினாள் யாழினி.

 

 

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்