Loading

காலம் தாண்டிய பயணம் 14

 

நிகழ்காலத்திலிருந்து பதிமுன்று வருடங்களுக்கு முன்…

 

வருடம் இரண்டாயிரத்து பதினொன்று…

 

அங்கே பைரவன் கோட்டையில் காலப்பயணம் செய்வது குறித்த ஆராய்ச்சிக்குத் தேவ் மித்ரன் வந்து இதோடு நான்கு மாதங்கள் கடந்திருந்தது.

 

எந்த வித முன்னேற்றமும் இல்லை, கோயில் சிற்பங்கள் தொடர்பான ஆராய்ச்சி என்று தான் உள்ளே நுழைந்திருந்தான்.

 

ஊர் தலைவர் காசிநாதனின் அனுமதியின் பெயரில் அவரது பண்ணை வீட்டில் தான் இப்போதைக்கு வசிக்கிறான்.

 

உணவும் அவனுக்கு அங்கிருந்தே கிடைப்பதால் ஒன்றும் பிரச்சனை இருக்கவில்லை…

 

தேடும் பொருள் கிடைத்தால் போதும் என்ற எண்ணம் தான் அவனுக்கு…

 

முன்பொரு நாள், இங்கே சற்றுத் தொலைவில் இருக்கும் குகை ஒன்றுக்கு ஆராய்ச்சிக்காக வந்தபொழுது அவன் கையில் கிடைத்த ஓலைச்சுவடியே அவனை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருந்தது.

 

ஓலைச்சுவடியில் குறிப்பிடப்பட்டிருந்தபடி பைரவன் கோட்டையிலுள்ள கோயிலைச் சல்லடையாக ஆராய்ந்துவிட்டான் தான், ஆனால் இன்று வரை அவனுக்குப் பெரிதாய் தகவல் ஒன்றும் கிடைத்துவிடவில்லை…

 

இதற்கிடையில் குமரவேலின் தொல்லை வேறு,

 

‘முடிந்து விட்டதா இல்லையா?’ என்று தினமும் அவன் உயிரை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

 

சீக்கிரம் கிடைத்துவிட்டால் பெரிய தொகைக்கு வியாபாரம் பேசலாம் என்பது அவர் எண்ணம், அவருக்கு அவர் பிரச்சனை…

 

இதோ இப்போதும் விடாமல் அழைபேசியில் அவர் தொல்லையைத் தான் சகித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

 

ஒரு கட்டத்தின் பின் அவனுக்கும் அடங்காமல் கோபம் வர “சார் நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு சீக்கிரம் எப்படி சார் கண்டுபிடிக்கிறது. நானே இங்க கொண்டு வந்து மறைச்சி வெச்சிருக்கிற போல, எடுத்துட்டு வாங்குறீங்க, சார் யூ நோவ் இட்ஸ் டைம் கன்சியூமிங் ஒர்க்” என்றவன்,

 

சிறு அமைதிக்குப் பின் மீண்டும் “சீக்கிரமே உங்களுக்கு அப்டேட் பண்ணுறேன் சார்” என்று அழைப்பைத் துண்டிக்க, அவன் காதிலோ வண்டி வருவதற்கான சத்தம்…

 

அத்தனை நேரம் இருந்த எரிச்சல் மொத்தமும் காணாமல் போயிருக்க, முகத்திலோ ஒரு மந்தகாசப் புன்னகை…

 

யாரின் வருகை என்பது அவன் அறியாததா???

 

முகத்தில் தோன்றிய புன்னகையை மறைத்துச் சற்று கோபத்தைக் கொண்டு வந்தவனோ அப்படியே அந்த மெத்தையில் அமர்ந்திருக்க, இதோ வந்துவிட்டாள் அவன் தேவதை…

 

“என்ன சார், பசில மூஞ்சி புல்லா சிவந்துடிச்சு போல, வாங்க சாப்பிடலாம்” என்றவள் மேசையின் மீது அவனுக்கான உணவை வைக்க, அவனோ அப்படியே அமர்ந்திருந்தான்.

 

அவனருகே வந்தவளோ “என்ன சார் ரொம்ப தான் முறுக்கிக்கிறீங்க, பசிச்சா சாப்புடுங்க இல்லட்டி போங்க” என்றவள் நகரப் போக, அவள் கரம் அவன் கரத்தினுள் சிக்குன்றிருந்தது.

 

அவள் திரும்பி அவனைப் பார்க்க, அவன் முறைப்பில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் அவள் கரம் மட்டும் அவன் பிடியில்…

 

அவன் அருகில் அமர்ந்தவளோ “இப்போ என்ன ஆகிடிச்சினு இப்படி உக்காந்திருக்கீரு, அவன் நான் பொறந்த நாளுல இருந்து தான், எம்பொஞ்சாதி எம்பொஞ்சாதினு பினாத்திட்டு திரியிறான். நானே கண்டுக்க மாட்டேன். உங்களுக்கு என்ன?” என்றாள் சர்வ சாதாரணமாக…

 

அதில் மீண்டும் அவன் முறைப்பு காரம் ஏற, அவன் முகத்தைக் கையில் ஏந்தியவளோ “நான் உங்க பொஞ்சாதி தேவ், எவனும் எதுவும் சொல்லிட்டு போறான், இதுக்கெல்லாமா கோச்சிப்பீங்க” என்று அவன் கன்னம் கிள்ளி முத்தமிட, அவனுக்கோ அத்தனை நேரம் கட்டுப்படுத்திய புன்னகை சட்டென உதட்டில் விரிந்திருந்தது.

 

“எப்படிடி இப்படி இருக்க நீ?  எல்லாத்துலயும் ஆசால்ட்டு… அப்படியே அள்ளிக்கலாம் போல இருக்க அள்ளிக்கட்டுமா???” என்றவன் அவளை மெத்தையில் சரிக்க,

 

அவன் கையில் அடி ஒன்றை வைத்து எழுந்தமர்ந்தவளோ “எங்க வீட்டுல ஒரு நாள் உங்கள வாழ விடணும் அப்போ புரியும், எப்பபாரு மரியாதை மரியாதைனு சாவுற அண்ணன், பொண்ணுனா இப்படி பொண்ணுனா அப்படினு புதுசு புதுசா ரூல்ஸ் போடுற அண்ணி, அதுகூடவே ஒட்டிட்டு வந்த பெருசாலி. விளக்குமாருக்கு பேரு பட்டுகுஞ்சம் எங்குற கணக்கா அதுக்கு பேரு முரட்டு காளையாம் சகிக்கல. இப்படி இதுக்களுக்குள்ள தினம் சிக்கி, அதுக வாயடைச்சு வாழ்ந்தா மத்தது எல்லாம் ஆசால்ட்டு தான்” என்றாள் கோபமும் எரிசலும் கலந்த குரலில்…

 

“உனக்கு ஏன்டி இந்த விபரீத ஆசை? என்ன ஆள விடுப்பா, அந்தக் குடும்பத்துல தப்பி பிறந்துட்டியேனு உன்ன கடத்திட்டு போகப் பிளான் பண்ணுனா, நீ என்ன மாட்டி விடப் பார்க்குறியா?”  என்று அவள் கன்னத்தில் கடித்து வைத்தான்.

 

அவளோ “நான் மட்டுமில்ல, என் இனிக்குட்டியும் தங்கம் தான்.  அவளை என்ன மாதிரி தான் நான் வளர்ப்பேன்” என்று சிலாகித்துக் கூறியவளை அணைத்துப் பிடித்தவனோ

 

“வளர்க்கலாமே அப்படியே நமக்கொரு வாண்டையும் பெத்து வளர்க்கலாம்” என்றவன் அவனிதழ்களை அவள் கன்னத்தில் அழுந்தப் பதித்தான்.

 

“தேவ் வர வர உங்க  சேட்டை ரொம்ப அதிகமாகுது. 1 உங்க வாலை ஒட்ட நறுக்கப் போறேன் பாருங்க” என்று வெட்கத்தை மறைக்க,

 

கண்டுகொண்ட கள்வனோ “அடடே என் ஜான்சி ராணி பொண்டாட்டிக்கு வெட்கம் எல்லாம் வருதே!” என்று அதிர்ச்சி பாவனையுடன் மீண்டும் அவளுடன் இணைய, இந்த முறை அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.

 

கணவனவனை மறுக்க எந்த மனைவியால் தான் முடியும்?

 

ஆம் கணவனே தான், போன மாதம் அவர்களது திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது,  அதுவும் பைரவன் முன்னிலையில்…

 

_____________

 

யாழினியின் தாயோ அவள் பிறந்ததும்  இறந்திருக்க, தந்தை வீரபாகு மட்டுமே அவர் பிள்ளைகளுக்கு…

 

வீரபாகு ஒரு முற்போக்குவாதி ஆனால் அவரது தங்கை அப்படி இல்லை, பிற்போக்கின் உச்சகட்டம் அவர்.

 

பிறந்தது பெண் என்பதால் வீரபாகுவின் தங்கையோ பெண் குழந்தையின் சுமை தன் மீது விழுந்து விடுமோ எனப் பயந்து, உஷாராக முதல்  மகன் காசிநாதனை பொறுப்பில் எடுக்க, அவரோ  முழுவதுமாக அவரது அத்தையின் வார்ப்பாய் தான் வளர்ந்தார்.

 

ஆரம்பம் முதல் அத்தையும் கைப்பவை தான் அவர். தாய் இறந்த பிறகு இன்னும்  கூடுதலாய் அவரடிமை ஆகிப்போனார்.

 

தான் ஆண் என்ற கர்வமும் மரியாதைக்காக என்னவென்றாலும் செய்யும் குணமும் அவரிடம் ஊரிப்போனது  என்னவோ அத்தையின் கைகாரியம் தான்.

 

திருமணமும் அத்தை மகளை வள்ளியைத் தான் கட்டிக்கொண்டார்.

 

வள்ளி அப்படியே தாயை உரித்து வைத்திருக்க, பிறகு சொல்லவும் வேண்டுமா?

 

யாழினி காசிநாதான் இருவருக்கும் வயது இடைவெளி அதிகம் கிட்டத்தட்ட இருபது வருடங்கள். அது அவர்களை இன்னும் தள்ளி நிறுத்தி இருந்தது.

 

சாதாரண அண்ணன் தங்கைக்கான பாசம் கூட அவர்களிடத்தில் இருந்ததில்லை…

 

அதுவும் கொண்டிருக்கும் கொள்கை மாறுபாடு இன்னும் தள்ளித் தான் நிறுத்தியிருந்தது.

 

காசிநாதனின் குணங்களை, வீரபாகு அவர் இருக்கும் வரை மாற்ற எத்தனையோ போராடிப் பார்த்தார் ஆனால்  முடியவில்லை…

 

மகனைத் திருத்த முடியாமல் போக,  மகளை அவரது விருப்பம்போல அவரது எண்ணங்களுடன் வளர்த்துவிட்டார்.

 

முடியும் வரை படிக்கவும் வைத்தார். இதோ யாழினி பண்ணிரெண்டாம் தேர்வும் எழுதி, நல்லா பெறுபேரும் பெற்றிருக்கிறாள்.

 

மகள் படிப்பதில் என்றும் வீரபாகுவிற்குப் பெருமை தான் ஊரில் அத்தனை பேச்சுகள் வாங்கினாலும் தனக்குப் பின் தனது பெண் சொந்தக்காலில் நிற்பாள் என்ற எண்ணமே அவர் நெஞ்சை நிறைத்திருந்தது.

 

படிப்பு முடிந்தது தான் தாமதம் வள்ளி திருமணப் பேச்சை ஆரம்பித்துவிட்டார்.

 

வள்ளியின் தம்பி முரட்டுக்காளையுடன் யாழினிக்கு திருமணம் எனச் சிறிய வயதிலேயே பேசி வைத்தது தான்.

 

அது முழுக்க முழுக்க காசிநாதன் வள்ளி தம்பதியினரின் முடிவு…

 

தந்தை இருக்கும் வரை அதற்கு மறுப்பு இருக்க, இதோ இப்போது அவர் இறந்து ஆறு மாதங்கள் ஆகிறது…

 

இனி தடை ஏதென அவர்களது திருமண ஏற்பாட்டை ஆரம்பித்திருந்தனர்.

 

ஆனால் யாழினி அதற்கு அடங்குபவளா? முடியாது என்று எப்போதும் அவள் மறுப்பதுதான் வீட்டினர் தான் காதில் வாங்கிக்கொள்வதில்லை…

 

இவளும் ‘தான் சொல்லிவிட்டேன் இனி உங்கள் பாடு’ என்பதாய் நாட்களைக் கடத்த, அவர்களோ ஒரு மாதம் முன்பு நிச்சயம் என்று வந்து நிற்க, வெகுண்டெழுந்து விட்டாள்.

 

வள்ளி எத்தனை பேசியும் அவள் தலையசைக்கவில்லை… வள்ளியின் பேச்சு அவளிடம் எப்போதும் எடுபடாது…

 

நிச்சயத்துக்கு வந்த அத்தனை பேர் முன்னிலையிலும் “இந்தாரு வள்ளி அண்ணி, எனக்கு இன்னும் பதினெட்டு ஆவல அதுக்குள்ள கல்யாணம் அது இதுனு ஏதாச்சும் பேச்சு வந்திச்சு உன் தம்பியோட சேர்ந்து நீயும் கம்பி எண்ணனும் சொல்லிப்புட்டேன்” என்று ஒரே போடாகத் தைரியமாய் சொல்லிவிட்டாள்.

 

அதன் பின் அவர்களே அவளது பிறந்தநாள் அன்று திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று பேசி முடித்திருந்தனர்.

 

இது யாழினிக்கு தெரியாமல் போனது என்னவோ அவர்களின் அதிஷ்டம்…

 

நிச்சய விடயம் கேள்விபட்ட தேவ் மித்ரனோ கோபத்தில் கொதிக்க தொடங்கி இருந்தான்.

 

தன்னவளை இன்னொருவன் பெண் பார்ப்பதா என்ற கோபம் அவனுக்கு…

 

இந்த ஊருக்கு வந்த அன்று அவள்மீது காதலில் விழுந்தவன் அவன்…

 

இந்த இடைப்பட்ட நாளில் அவள் மனதையும் கவர்ந்து, இருவரும் காதலில் திலைத்திருக்க, அவனால் இதனைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

 

தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அவன் கோபத்துடனே சுற்ற,  அவன் கோயிலில் இருக்கும் நேரம் அவன் முன்னே வந்தவளது கையில் அவளது தாயின் தாலி.

 

அவள் அதிரடியில் அவன் தான் மிரண்டு விட்டான். அவன் பார்வையை கண்டவளோ “என்ன தேவ் கல்யாணம்னு சொன்னதும் முகத்தில பயம் தெரியுது, ஏமாத்தலாம்னு நினைப்போ? வெட்டிப் போட்டுடுவேன்” என்று மிரட்ட, இவன் தான் இன்னும் முழிக்க வேண்டி இருந்தது.

 

அவன் முழியில் அவள் சிரித்தே விட்டாள்.

 

அவள் தன்னை கேலி செய்ததை உணர்ந்தவன், இப்போது அவளே எண்ணாத ஒன்றை நடத்தி இருந்தான்.

 

ஆம் தாலியை அவள் கழுத்தில் கட்டி அவளை மனைவியாக்கி இருந்தான்.

 

இப்போது அதிர்வது அவள் முறை ஆகிற்று!

 

கோபத்துடன் சுற்றும் அவனைச் சீண்டவே அவள் தாலியைக் காட்டி திருமணம் என்று மிரட்டியது. ஆனால் அவனோ அதனை நடத்தி இருந்தானே!!

 

மித்ரனும் செய்ய வேண்டும் என்றெல்லாம் எண்ணவில்லை. அந்த நேரம் அவனது மனநிலை, கோயிலில் தன்னவள் நீட்டிய தாலி, முன்னே வீற்றிருக்கும் பைரவன் இவை எல்லாம் அவனை உந்த, தாலியைக் கட்டிவிட்டான்.

 

அதிர்ச்சியுடன் நின்றவளைக் கண்டவனுக்குப் புன்னகை.

 

“என்ன மேடம் சைல்ட் மேரேஜ் பண்ணிட்டேன்னு என்னயும் போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுப்பீங்களா?” என்று குறும்புடன் அவன் வினவ,

 

அவளோ “இன்னும் ஒரு மாசத்துல உங்க பொஞ்சாதி சைல்ட் இல்லையே ஆஃபிஸர் சார்” என்று வெட்கத்துடன் அவனை அணைத்திருந்தாள்.

 

காதலைத் தேடும்…

 

ஆஷா சாரா…

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்