
காலம் தாண்டிய பயணம் -13
மகிழின் இரத்தத்துளிகள் கீழே ஒவ்வொன்றாய் விழ, பார்த்திருந்த இனியாவுக்கோ மனது ஏதோ செய்தது.
கூடவே பயமும் அவளைச் சூழ்ந்து கொள்ள, அவனையே வெறித்தபடி நின்றிருந்தாள்.
மித்ரனோ “யாழ் இது உண்மையா?” என்ற கேள்வியுடன் அந்த முத்து மாலையைக் கையில் ஏந்த,
மகிழோ அவனைப் பார்த்து அர்த்தமாகப் புன்னகைத்தவன், அந்த மாலையில் உறைந்திருந்த மித்ரனின் இரத்தத்துடன் அவனது இரத்தத்தைக் கலக்க விட்டான்.
அந்த சித்தரின் வார்த்தையின் விளைவால் அவன் மனதில் சற்று முன்னர் எழுந்ததை நிஜத்தில் நிகழ்த்தி இருந்தான்.
அடுத்த நொடி கலந்த இரத்தத் துளி இரண்டும் உயிர்பிக்கப்பட்டு, அந்த மாலை முழுவதும் பரவி அந்த முத்து மாலை அப்படியே சிவப்பு நிறத்தில் ஜொலிக்கத் தொடங்கியது.
அங்கு நின்றிருந்த மூவருக்கும் அவர்கள் கண்ணையே நம்ப முடியவில்லை. ஏதோ மாயாஜாலத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் போலவே நின்றிருக்க, முதலில் சுதாகரித்த மித்ரனோ நிலைமை உணர்ந்து செயற்படத் தொடங்கினான்.
முதலில் மகனின் காயத்துக்கு அவசரமாய் மருந்து போட்டவனோ, அந்த மாலையை எடுத்துக்கொண்டு அவனது மேசைக்கு விரைந்தான்.
அதன் பின் எங்கும் தோய்வில்லை அவனிடம்…
கடந்த பதிமூன்று வருடமாக அந்த ஓலைச்சுவடியின் ஒவ்வொரு அணுவையும் கரைத்துக் குடித்தவனாங்கிற்றே!
ஒரு இடத்தைத் தவிர எல்லாம் அவனுக்குப் புரிந்திருந்தது. இதோ இப்போது அந்த உடையவன் யாரென்ற சந்தேகத்துக்குத் தீர்வு கிடைத்தபின் அவனைத் தேக்குவார் யார்???
“யாழ் குவிக், அந்தப் பெட்டிக்குள்ள ஒரு ஸ்டோன் இருக்கும் சீக்கிரம் எடு” என்று மகனைத் துரிதப்படுத்த, மகிழும் தந்தையின் அவசரம் உணர்ந்து எடுத்து வந்திருந்தான்.
மித்ரனோ ‘என் யாழ் எங்க இருக்காளோ அந்த இடத்துக்கு நான் போகணும்’ என்று மனதார எண்ணியவாறு அந்த நீள் வட்ட வடிவக் கல்லின் ஓரத்தைச் சூழ ஆபரணம் பொறுத்துவதற்காக அமைக்கப்படிருந்த இடத்தில், ஒளிரும் முத்து மாலையைச் சரியாகப் பொறுத்தினான்.
அந்தக் கல்லோ சில வினாடிகளிலேயே மாலையை அப்படியே தன்னுள் உள்வாங்கிக்கொண்டது, கூடவே அதன் ஒளியையும்…
சிறிது நேரம் எந்த வித மாற்றமும் இல்லை, மாலை சென்ற இடமும் தெரியவில்லை…
சுற்றி நடக்கும் அத்தனையும் நம்ப முடியாத ஜாலமாக இருக்க, மகனும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அந்த விழித்தழுவலில் ஆயிரம் அர்த்தம், கூடவே புதிதாய் ஒரு நம்பிக்கை சுடர் விட்டிருந்தது.
அடுத்து இரு வினாடிகள் மூச்சு விடும் சத்தம் மட்டுமே அந்த அறைக்குள்…
அப்படியொரு அமைதி, அதனைக் கலைப்பதற்கு கூட அங்கிருந்தவர்களுக்கு எண்ணம் இல்லை போலும், அப்படியே சமைந்து தான் நின்றிருந்தனர். ஆனால் பார்வை மொத்தமும் அந்தக் கல்லின் மீது தான்.
அடுத்த நிமிடமே அந்தக் கல்லில் வெடிப்பு உண்டாக, அதனுள் இருந்து ஒளி கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகத் தொடங்கி அந்த அறையையே நிறைந்தது.
இனியாவோ இதையெல்லாம் ஒரு பயத்துடனே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு இதெல்லாம் புதிய விடயம் அல்லவா???
கண்களில் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தவளைக் கண்ட மகிழுக்கு என்ன தோன்றியதோ? கரத்தை அவளிருந்த திசையை நோக்கி உயர்த்த, அதுக்காகவே காத்திருந்தவள் போல, அவனருகில் சென்று நீண்டிருந்த அவனது வலது கரத்தினுள் அவளது இரு கரங்களையும் நுழைத்து பக்கவாட்டில் அணைத்துக்கொண்டாள்.
இதனிடயே கல்லின் ஒளியோ படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்ல, அடுத்து நிகழப் போவது என்னவென்று மித்ரனால் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது.
அவன் கண்களிலோ மின்னல், அவன் எதற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்தானோ, அது கைக்கூடப் போகும் நேரம்…
அவன் காதலைக் காக்க அவனுக்குக் கிடைத்த அதிசய ஆயுதம்…
காலத்தைத் தாண்டியும் காதலைத் தேடிய ஒரு பயணம்…
அவன் உணர்வுகளை வார்த்தையால்
வடித்திட முடியுமா என்ன??
ஆனால் இதை எல்லாம் தாண்டி மகிழைத் திரும்பிப் பார்த்தவனது கண்ணில் ஒரு பரிதவிப்பு,
‘உன் காதலைக் காக்க, உன் தனிமையைப் போக்கி உனக்கு துணையாய் இருந்த மகனை விட்டுக்கொடுக்கப் போகிறாயா??’ என்று மனம் ஒருபுறம் ஓலமிட,
‘என் மகன் வாழ வேண்டியவன், நான் திரும்பி வந்தாலும் வரலனாலும் நிச்சயம் அவன் சந்தோசமா இருப்பான்’ என்று இன்னொரு மனம் அவனைத் தேற்றியது.
சிந்தனைகளுக்குத் தடை விதித்தவன் மகனிடம் “யாழ், ஐ திங்க் இப்போ டைம் ட்ரவெல் பண்ணப்போற நேரம் நெருங்கிடிச்சுனு நினைக்கிறேன். உன் அம்மா எங்க இருக்காளோ அங்கேயே நானும் போகப்போறேன். திரும்பி வந்தா…” என்றவனுக்கு குரல் கமற சிறிது நிறுத்தியவனோ,
மீண்டும் “நிச்சயம் உன் அம்மாவோட தான் வருவேன்” என்று முடித்திருந்தான்.
அதற்குள் அந்தக் கல் முற்றாகப் பிளந்து, அதிலிருந்து வெறியேறிய வெளிச்சமானது சுழன்று காற்றில் கரும் புகை ஒன்றை உருவாக்க, அதுவோ நிலைக்குத்தாக நீள் வட்ட வடிவில் மிதந்தது.
மேசையில் இருந்த காகிதத்தைச் சுருட்டி அதனை நோக்கி எரிய, அந்தக் கரும்புகை அதனை உள்வாங்கிக் கொண்டது.
செல்வதற்கான நேரம் வந்துவிட்டத்தை உணர்ந்த மித்ரனோ, மகிழின் அருகில் நெருங்கியவன் பேச நினைக்கிறான் தான், ஆனால் வார்த்தைகள் தான் குரல்வளையைத் தாண்டி வரச் சண்டித்தனம் செய்கின்றனவே!
இனிமேல் மகனைப் பார்ப்போமா என்பதே கேள்விக்குறி தானே! அவன் இப்போது நுழைய இருப்பது அவனுக்கான மரணவாயில்…
மீண்டு திரும்பி வந்துவிடுவோம் என்பதை ஒரு சதவீதம் கூட உறுதியாய் சொல்ல முடியாதல்லவா?
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டவனோ மகிழை ஆரத்தழுவிக் கொண்டான்.
அந்த அணைப்புத் தவிப்பைக் குறைப்பதற்குப் பதில் அதிகரிக்கவே செய்தது.
அணைப்பிலிருந்து விலகியவனது விழிகளோ மகனின் விழிகளைச் சந்திக்க மறுத்தது.
‘எங்கே அவனும் வருவதாகச் சொல்லி விடுவானோ?’ என்று அத்தனை அச்சம் அதனாலேயே பார்வையைத் தவிர்த்தான்.
இனியும் காலம் தாழ்த்த முடியாது என்பதை உணர்ந்து மகனின் உச்சந்தலையில் ஆழ்ந்த முத்தத்தைப் பதித்தவன், அருகில் நின்றிருந்த இனியாவின் தலையில் கரத்தினால் ஒரு அழுதத்தை கொடுத்து, நொடியும் தாமதிக்காமல் மேசையில் இருந்த சிறிய பெட்டியை எடுத்துக்கொண்டு அந்தக் கரும்புகைக்குள் நுழைந்தான்.
இதோ உள்ளே முழுவதுமாக நுழைய ஒரு நொடி தான், அந்த நேரம் அவன் கரத்தை ஒரு வழிய கரம் பற்ற, மித்ரனின் உடலில் ஒரு விறைப்பு…
எது நடக்கவே கூடாது என்று பயந்தானோ அது இதோ நடந்துவிட்டதே!!!
சில வினாடிகளின் பின் அந்தக் கரும் புகை, எதனாலோ உறிஞ்சபடுவது போல் அதன் மையத்தில் குவிந்து மொத்தமாய் காணாமல் போனது.
____________________
அங்கே ஐந்தாம் நூற்றாண்டில்…
மார்த்தாண்டன் அந்தக் காட்டின் நடுவே அமர்ந்திருக்க, அவன் மேனியில் ஒரு அதிர்வு…
அதன் அர்த்தம் புரிந்தவனோ “வரவேற்கிறேன், என் இலட்சியம் நிறைவேற்றவே பேராவல் கொண்டு வரவிருக்கும் உம்மை வரவேற்கிறேன்” என்று இதழ்கள் விரிய புன்னகைத்தான்.
மீண்டும் “இதோ நேரம் நெருங்கி விட்டது, இன்றே என் தவம் நிறைவேறும்” என்றவன் சிரித்த சிரிப்பில் அங்கிருந்த பறவைகள் பயத்தில் ஆளுக்கொரு புறமாய் பறந்து மறைந்தது.
இதே நேரம் அங்கே பைரவன் கோட்டையில், பொழுது புலர்ந்ததிலிருந்து. இளவேந்தனின் மனது ஒருநிலையில் இல்லாமல் போக, ஏதோ தவறு நிகழப் போவதை உணர்த்திக் கொண்டே இருந்தது.
கடந்த எட்டு மணி நேரமாகப் பைரவன் கோயிலில் தான் அமர்ந்திருக்கிறார், ஆனால் மனது இன்னும் சமப்பட்டிருக்கவில்லை…
அவரைத் தேடி வந்த துயிலேனோ “தந்தையே தாங்கள் இன்னும் உணவருந்தவில்லையே, நெடு நேரமாய் இங்கேயே அமர்ந்திருப்பதன் நோக்கம் என்னவோ?” என்று வினவினான்.
அவரோ பெரும் மூச்சுடன் “ஏதோ தவறாக உள்ளது துயிலா, உன் பட்டனார் உடல் இப்போது நலமா?” என்றார் கேள்வியாக…
“நலம் தான் தந்தையே, உடல் நன்கு தேறி வருகிறது. இன்று காலை வார்த்தைகள் கூடத் தெளிவாய் வந்தன, விரைவில் பூரண குணமடைந்து விடுவார். தாங்கள் அதனை எண்ணிக் கவலை கொள்ள வேண்டாம் தந்தையே! யான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான் அவனும் பதிலாக…
அவரும் யோசனை தீராமல் மீண்டும் “விரைந்து செல் துயிலா, உன் பட்டனாரிடம் கோயில் கிணற்றின் சாவியைப் பெற்று வா” என்றிருக்க,
துயிலனோ அதிர்ச்சியுடன் “தந்தையே!” என்றவனுக்கு அடுத்த வார்த்தை வராமல் போக,
இளவேந்தனே மீண்டும் “அவசியம் ஏற்படும் என்றொரு எண்ணம் துயிலா, பெற்று வா… என் சொப்பனத்தில் இன்று அதனை காண நேர்ந்தது” என்றவர் கண்களை மூடித் தியானத்தினுள் நுழைந்து கொண்டார்.
அடுத்து அரைமணி நேரத்தில் அவனும் தந்தையின் கட்டளையை நிறைவேற்றி இருக்க, இருவருமாகக் கோயிலின் பின்னே இருக்கும் பெரிய கிணறு ஒன்றினுள் இறங்கினர்.
அங்கே சுவரில் இருந்த எதையோ ஒன்றை இளவேந்தன் அழுத்த நீர் விலகி உள்ளே பாதை திறந்தது.
அதன் வழியே கீழே இறங்கி,
நீருக்கு அடியில் மறைவாகக் குகைபோல இருக்கும் இடத்தின் சுவரை மீண்டும் கைகளால் தட்ட நுழைவாயில் ஒன்று வெளிப்பட்டது.
அந்த நுழைவாயிலை இளவேந்தன் சாவி கொண்டு திறக்க அதுவோ, இவர்களுக்கு வழி விட்டு நின்ற வேளை வெளியே யாரோ அழைக்கும் சத்தம்.
இளவேந்தனும் திறந்த கதவை அப்படியே மூடியவர், சாவியை எடுக்க மறந்து போயிருந்தார்.
மறந்தாரா இல்ல மறக்க வைக்கப்பட்டாரா??? விதி தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
இருவரும் உடனடியாக மேலே வர, பூவிழி தந்தையைத் தேடி ஓடி வந்திருந்தாள்.
“தந்தையே, யாழினியை அந்த மார்த்தாண்டன் கவர்ந்து சென்று விட்டான். எத்தனை முயன்றும் காக்க முடியவில்லை தந்தையே!” என்று பதற்றதுடன் சொல்ல,
இளவேந்தனோ கண்களை மூடித்திறந்து, “துயிலா, பூஜைக்குத் தயாராகு, இன்று இரவு யாம் மார்தண்டனின் இருப்பிடம் செல்ல வேண்டும். இனியும் தாமதித்தல் சரியல்ல” என்றவர்,
பூவிழியிடம் “என்னவாகிற்று பூவிழி? அவனால் இந்த ஊருக்குள் வர முடியாதே! பின்னர் எப்படி?” என்று சந்தேகமாக வினவினார்.
அவளோ “யாழினி தான் ஊர் எல்லையை விட்டு வெளியே சென்றாள் தந்தையே” என்றவர் நடந்ததை சொல்லத் திடங்கினாள்.
____________
சில மணி நேரங்களுக்கு முன்பு…
அங்கே ஊரில் இருந்த தோட்டத்தினுள்ளே மாங்காய் ஒன்றைப் பறிக்க முயன்று கொண்டிருந்தாள் யாழினி.
அந்த நேரம் அங்கே வந்த, பூவிழியோ “மாங்காய் வேண்டுமா யாழினி, நான் வேண்டுமென்றால் பறித்துக் கொடுக்கட்டுமா?” என்று வினவினாள்.
அவளும் சம்மதமாகத் தலையசைத்திருக்க, சட்டென மரத்தில் ஏறிய பூவிழியோ மாங்காயுடன் கீழே இறங்கினாள்.
அவளை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்த யாழியைக் கண்டு புன்னகைத்தவளோ பறித்ததைத் தோழியிடம் கொடுத்து, அங்கே மரத்தின் கீழே அமர யாழினியும் அருகே அமர்ந்தாள்.
அப்படியே சிறிது நேர மௌனமாகவே கழிந்தது. யாழினிக்கோ எப்படி சொல்வது என்ற தடுமாற்றம்.
உள்ளுக்குள் அத்தனை உவகை ஊற்றெடுத்தாலும் முழுதாய் மகிழ முடியாத நிலை அவளுக்கு, கரங்கள் அவள் வயிற்றில் புதிதாய் உதிர்த்திருக்கும் சிசுவை ஆதரவுக்காய் அணைத்துக் கொள்ள, ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டவளோ நண்பியின் புறம் திரும்பினாள்.
“பூவிழி, உன்னிடம் ஒரு விடயம் கூற வேண்டும்” என்றாள். இப்போதெல்லாம் அவளும் அவர்கள் போலவே ஓரளவுக்குப் பேசத் தொடங்கி இருந்தாள்.
இதோ இங்கு யாழினி வந்து ஒரு மாதம் ஆகி இருக்க, இவள் பேசுவது புரியாமல் அவர்கள் முழிப்பதைக் கண்டவள் தன் பேச்சைக் கொஞ்சமாக மாற்றிக் கொண்டாள்.
முழுவதுமாக மாறவில்லை என்றாலும் புரிந்து கொள்ளும்படி பேசத் தொடங்கி இருந்தாள்.
அவளும் “சொல் யாழினி, என்ன விடயம்” என்று கேட்டவள், இவளையே பார்த்திருக்க,
“என் வயிற்றில் எங்கள் காதல் சின்னம் வளர்கிறது என்று நினைக்கின்றேன் பூவிழி” என்றதும் பூவிழியின் கண்கள் விரிய, சந்தோசத்துடன் தோழியின் கரம்பற்றிப் பரிசோதித்தவள்,
“யாழினி, மிகவும் சந்தோசமாக இருக்கிறது தோழியே! உள்ளே இருக்கும் என் வாண்டு தான் உன்னை ஆகாரம் அருந்த விடாமல் தொல்லை செய்தானா?” என்று கேட்டுத் தோழியின் மணி வயிற்றில் கரங்களை வைத்து ஆர்ப்பரிப்புடன் புன்னகைத்தாள்.
ஆனால் அப்புன்னகை தோழியைத் தொற்றவில்லை என்றதும் “என்னவாகிற்று யாழினி?” என்று வினவ,
அவளோ “நான் என் தேவ் கிட்ட போகணும்” என்க, பூவிழிக்கு அவள் மனநிலை புரிந்தது.
“கவலை வேண்டாம் யாழினி, விரைவில் எம் தந்தையார், உன்னை உன் இடத்துக்கே அனுப்பி விடுவார்” என்றாள் நம்பிக்கையுடன்…
“உண்மையாவே போய்டுவேன்ல, என் குழந்தைக்கு ஒன்னும் ஆகாதே” என்று ஒரு தாயாய் அவள் உள்ளம் பதற,
அவள் கரத்தில் கரம் வைத்துச் சத்தியம் செய்த பூவிழியோ “நிச்சயம் நீயும் உன் குழந்தையும் நலமாக இருப்பீர்கள் யாழினி, என் உயிரைக் கொடுத்தேனும் இருவரையும் காப்பேன்” என்றாள் மனதார…
அதுதான் பிற்காலத்தில் நடக்கப் போகிறது, நடந்து முடிந்திருக்கிறது என்பதை அறியாமல்…
தோழியின் மனதை மாற்ற எண்ணிய பூவிழியோ “வா யாழினி, இந்த இனிப்பான செய்தியைத் தந்தையிடமும் தமையனிடமும் கூறலாம்” என்று அழைக்க,
அவளோ “எனக்குச் சிறிது தனிமை வேண்டும் பூவிழி” என்று இறைஞ்சுதலுடன் கேட்க,
பூவிழியும் “இங்கேயே அமர்ந்திரு யாழினி ஊரைவிட்டு வெளியே செல்ல வேண்டாம்” என்று அங்கிருந்தே ஊர் எல்லையைக் காட்டியவள் கிளம்பிவிட்டாள்.
அங்கேயே அமர்ந்திருந்த யாழினியின் மனம் எங்கும் அவளவன்…
அவனைப் பார்த்து ஆறுமாத காலத்துக்குள் இப்படி அவளுயிராகி போவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை…
இதோ அவன் உயிர் நீர் இவளுள் கருவாக உயிர்த்திருக்கும் வேளையில், அவனைப் பிரிந்து தான் இங்கே மாட்டிக்கொண்டோமே என்ற அலைப்புறுதல் அவளுள்…
வயிற்றில் கரத்தை வைத்தவளோ “தேவ் நம்ம பாப்பா தேவ்” என்றவள் கண்ணில் கண்ணீர்…
அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு “யாழ்” என்ற தேவ் மித்ரனின் குரல் கேட்க, நிமிர்ந்து சுற்றி முற்றிப் பார்த்தவளுக்கு கண்ணீர் மறைத்ததில் பார்வை தெளிவு இல்லாமல் தோன்ற, நன்கு கண்களைத் துடைத்து மீண்டும் பார்த்தாள்.
அங்கே ஊர் எல்லையில் மித்ரன்.
அதுவும் அவளுடைய மித்ரன்… அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை…
மனதில் உவகை ஊற்றெடுக்க, அவனை நோக்கி அடியெடுத்து வைத்தாள் பாவை…
அத்தனை வேகம் அவளிடம், அவன் தன்னை நோக்கி வராமல் அங்கேயே நிற்கிறானே என்ற சந்தேகம் எல்லாம் வரவில்லை…
‘என் தேவ், என்னுடைய தேவ்’ என்று அவள் மனம் கூப்பாடு போட, சென்ற வேகத்தில் அவனை அணைத்துக் கொண்டு “வந்துடீங்களா தேவ் வந்துட்டீங்களா தேவ்” என்றபடி அவன் முகத்தையே பார்த்திருக்க, அவன் முகத்தில் புன்னகை விரிந்தது.
எதை அவனிடம் சொல்ல முடியவில்லை என்று கவலையில் ஆழ்ந்திருந்தாளோ அதனை அவனைக் கண்ட நொடி அவளது இதழ்கள் மொழிந்திருக்க, கேட்டவன் சிரித்த சத்தத்தில் பாவை பயந்தே போனாள்.
பயத்தில் அவனை விட்டு நகரப்பார்க்க, அவன் விட்டால் தானே!
“யான், இந்த மார்த்தாண்டன் அனுமதி அளிக்காமல் என்னிடமிருந்து விலக முடியாது பெண்ணே!” என்று சட்டென அவளைக் கையில் ஏந்திக் கொண்டவனோ,
“என்னவளுக்கு உடல் கொடுக்க மட்டுமன்றி, என்னுயிருக்கும் உயிர் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சியே” என்றான்.
அந்த நேரம் “யாழினி” என்று அழைப்புடன் பூவிழி ஓடிவர, அதனைக் கண்டவனோ அவளை நோக்கிச் சொடுக்கிட, அவளது கால்களோ இயங்க முடியாமல் தரையுடன் கட்டுன்டது போல் உறைய, எத்தனை போராடியும் அவளால் விடுபட முடியவில்லை…
யாழினிக்கோ அத்தனை நேரம் இருந்த சோகம், சற்று முன்னர் தன்னவனைக் கண்ட உவகை, இதோ இப்போது அவள் காதுக்கள் உணர்ந்த உண்மை, தோழியின் நிலை, இப்படி எல்லாம் அவளை மொத்தமாய் புரட்டிப் போட்டிருக்க, கண்கள் சொருக மயங்கியவளின் இதழ்களோ இறுதியாய் “தேவ்” என்று அவளவன் நாமத்தை உச்சரித்தபடியே விழிகள் மூடிக்கொண்டது.
விழிகள் மூடி இருக்க, விழித்திருந்த அவள் மனதிலோ அவளவனுடனான கடந்த காலம் படமாய் விரிந்தது.
_______________
பதிமூன்று வருடங்களின் முன்…
காதலைத் தேடும்…
ஆஷா சாரா…


