Loading

எனதழகா❤️ – 2

சிட்டு குழந்தை தன் பட்டு பாவாடையை  அணிந்து சுற்றி சுற்றி தனது ஆடையை நிலத்தில்  பரவி  தான் தான்  பேரழகு  என்று ரசிப்பது போல் ஆதவன் நிலவுக்கு விடைக் கொடுத்து தனது வெளிச்சத்தை  ஆடை போல் வானில்  பரவி ரசித்து மகிழ்ந்தது.

எவருக்கு தூங்கா இரவானாலும், சூரியன்  தன் வேலையே தலையாய வேலை என்று மஞ்சள் ஒளியை பரவி தான் வந்து விட்டேன் என்று  உதித்ததால் அவ்வீட்டில் அனைவரும் அவர் அவர் வேலையைச் செய்யத் தொடங்கினர்.

பிருந்தாவன்.தேவன் குருப்ஸ் ஆப் கம்பெனியின் அழகிய பங்களா.பங்களாவில்  உள்ளே நுழையும் போதே கிருஷ்ணர் வலது பக்கத்தில் அழகாக சிரித்து வரவேற்பது போல் காட்சி அளித்தார் அக்குட்டி கோவிலுக்குள்.

இடது புறத்தில் அழகான பூக்கள் தனக்கு
இக்குடும்பத்தில் இடம் கிடைத்ததற்கு நன்றி செலுத்தும் விதமாக பூத்து குலுங்கி கொண்டிருக்கின்றது.

அங்கு உள்ள ஊஞ்சலுக்கும், சின்ன சின்ன மேஜைகளுக்கும் மரங்கள் இடம் விட்டு, நிழல் கொடுத்து வளர்ந்து இருக்கின்றது அவ்வீட்டாரின் சிரிப்பலைகளைக் கேட்பதற்காக .

வீட்டில் நுழையும் போதே மணக்கும் ப்ரு காப்பியும் , அவ்வீட்டின் மகாலெட்சுமி அம்மாவின் குரலில் வரும் சாமி பாடல்களும்  மனதுக்கு இனிமைத் தருகின்றன.

மகாலெட்சுமி வசுதேவரின் மனைவி. வீட்டின் முத்த குடிமக்கள். இவர்கள் காலம்காலமாக கிருஷ்ண பக்தர்கள்.

லட்சுமி அம்மாவின் பாடலினால் அங்கு உள்ள வேலையாட்கள் அனைவரும் கிருஷ்ண பக்தர்கள் ஆகினர் என்று கூறினால் அது ஆச்சர்யப்படுவதற்கில்லை .

ஏனென்றால், அவ்வளவு அழகாகவும் பக்தியுடனும் பாடுவர். வெளிப்படையாக கூற வேண்டுமானால் கிருஷ்ணரை விட இவர் பாடல்களுக்கு ரசிகை ஆகி விட்டனர்.

வீட்டின் பின் புறம் பசுமாட்டிற்காகவே ஒரு இடம் ஒதுக்கி பராமரிக்கின்றனர்.

அவர்கள் வீடு பழங்காலத்தில் கட்டிய வீடு .அதை இக்காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கின்றனர். கீழே அழகான சதுரமான ஹாலில் ஒரு பிராம்மாண்டாமான ஷோபா.

அதற்கு வலது புறத்தில் அவர்கள் முன்னோர்கள் புகைப்படமும், இடது புறத்தில் இக்குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படங்களும் அழகாக அமைந்து இருக்கிறது.

இவ்வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் அவ்வீட்டின் செழுமையை அழகாக எடுத்துக்காட்டும். இவ்வீட்டில் உள்ளவர்களும்  பெரிய மனம் கொண்டவர்கள்.

வசுதேவர்- மகாலெட்சுமி தம்பதியர்க்கு மூன்று பிள்ளைகள். முதல் பையன் கேசவ் தேவன் .இவரின் மனைவி சத்யபாமா. இரு குழந்தைகள் அர்ஜூன் தேவன் , பவித்ரா.இரண்டாவது பெண் மீரா .இவரின் கணவர் வெங்கடேஷன். மகள் ஆருஷி. மூன்றாவது பெண் ராதே. பெற்றவர்களை விட காதல் முக்கியம் என்று காதலனுடன் கைகோர்த்து விட்டார்.

அதனால் மூத்தவர்கள் மற்ற இரு பிள்ளைகளையும் தன்னுடன் வைத்து கொண்டு காலத்தை கடந்து கொண்டிருப்பதற்குள் சில வருடங்களில் பவித்ரா பேத்தியும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து சென்று விட்டாள்.

வசுதேவர்க்கும் ,கேசவர்க்கும் பெண் பிள்ளைகள் என்றாலே கொள்ளை பிரியம். 5 ஆண்டுகள் கழித்து மீரா பிறந்தவுடன் வீடே கோலாகமாகக் கொண்டாடியது. எதிர்பாராமல் அடுத்த ஒரு வருடத்திலேயே மகாலெட்சுமி  மீண்டும் கருவுற்று ராதே பிறந்தார். அவர் கடைக்குட்டி என்பதால் அவர் கல்யாணம் வரையும் இவர் மீது அனைவர்க்கும் தனிப் பிரியம் உண்டு.

இவர் இத்தனை அன்பும் வேண்டாம் என்று போனப் பின் அதை மறப்பதற்கு தங்களுடைய முழு கவனத்தையும் தொழிலில் கொடுத்து வெற்றியும் கண்டனர்.வசுதேவர்  வம்ச வம்சமாக கட்டிட தொழிலில் சிறந்தவர்கள். அதனுடன் அதைச் சார்ந்த மர சம்பந்தப்பட்ட பெரிய ஷோரும் திறந்தார். பின்னர் அவரே   துணி கடையும் தொடங்கினார் .

கேசவர் தன் அப்பாக்கு சளைத்தவர் இல்லை என்பதை காட்டும் பொருட்டு அனைத்துக்கும் கிளைகள் தொடங்கியதோடு அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி தொடங்கினார்.

இவர்களைப் பின் தொடராமல்  அர்ஜுன்     தன் நண்பர்களுடன் தன் படிப்புக்கு சம்பந்தமான  ஐடி நிறுவனம் ஒன்று தொடங்கினான்.அதில் வெற்றிப் பெற்றதற்கு சான்றாக இரண்டாம் இடத்தை ஐந்தே வருடத்தில் பெற்றுள்ளான்.

கையில் மணக்கும் ஏலக்காய் டீயுடன் மேல் மாடியில் இரண்டாம் அறையில் இருக்கும்  தன் மகன் அர்ஜூனை  எழுப்பினார் பாமா. சிறு வயதிலிருந்தே அம்மாவுக்கும் மகனுக்கும் உள்ள எழுதப்படாத ஒப்பந்தம்.

பிருந்தாவனத்தில் பாமாவின் சமையலைப் போல் எவராலும் செய்ய இயலாது. லட்சுமி அம்மா உட்பட அனைவரும் ஆச்சர்யம் கொள்வர். கல்யாணம் ஆகி இவ்வீட்டில் நுழைந்ததில் இருந்து முகம் சுளிக்கமால் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடிப்பது போல் செய்வர்.

அதனால் பிருந்தாவனத்தில் அனைத்துக்கும் வேலையாட்கள் உண்டு சமையலைத் தவிர.

அர்ஜுனுக்கு அனைத்தும் சுத்தமாக இருக்க  வேண்டும். அவன் அறையை அவ்வளவு அழகாக பராமரித்து கொள்வான். இவ்வறையில் நுழைய அம்மா மற்றும் தன் பாட்டிக்கு மட்டுமே உரிமை உண்டு.

மற்றவர்கள் தன்னிடம் ஏதாவது பேச வேண்டுமெனில் அருகில் இருக்கும் அவன் ஆபிஸ் அறைக்கு தான் வர வேண்டும்.

எப்பொழுதும் போல் தன் மகனை  ஆழ ரசித்து மகிழ்ந்து பூரித்து கொண்டார். அவர் வந்தததை உணர்ந்தவன் கண் திறந்து அவரைப் பார்த்தான். ஒரு நொடி தான், அவன் பார்த்தற்கு அடையாளமே இல்லாமல் தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.

அந்த ஒரு நொடியே வானத்தை மேகம்  சிறு துளி நேரம் மறைப்பதைப் போல் தனது பாரமும் அம்மாவை காணும் போது மறைகின்றது என்று உணருகிறான். சிறு வயதிலிருந்தே மீ என்றே அழைக்கும் மகன் இப்பொழுது அவ்வார்த்தைக்காக  ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

“என்ன அம்மா யோசனை பலமா இருக்கு? ” அணைத்து முத்தமிட்டு டீக்கப்பை வாங்குபவன் இன்று கேள்விக்கூட முகம் பார்த்து கேட்காமல் தலையாய வேலையாக போர்வையை மடித்துக் கொண்டிருந்தான். இந்த 5 வருடத்தில் எத்துனை மாற்றங்கள். பெரு மூச்சுடன் டீக்கப்பை டீபாயில் வைத்து விட்டு அமைதியாக சென்று விட்டார்.

கண்ணீரை அடக்கிக் கொண்டு அதை கோபமாக தனக்குள்ளே மாற்றிக் கொண்டு குளித்து முடித்து தனக்கு  நேர்த்தியான கருப்பு பேண்ட் , சாம்பல் நிறச் சட்டை , அதற்கு பொருத்தமா கருப்பு கோட் அணிந்து கொண்டான்.

கருப்பு நிற ஷீ ,கையில்  ரோலஸ் வாட்ச் கட்டிக் கொண்டு, கைக்கு அடங்காத முடியை ஜெல் வைத்து அடக்கினான் .இது எதற்கும் சம்பந்தம் இல்லாத வெள்ளி பிரேஸ்லட் வலது கையில் அணிந்து இருந்தான்.

எப்பொழுதும் சிரித்து ஆளை மயக்கும் கண்ணனானவன் தனது மீசையையும் டிரிம் செய்யப்பட்ட தாடியையும் கொண்டு சிரிப்பை மறைத்ததாக நினைப்பவர்களுக்கு தெரியாது அவன் மனதுக்கு சிரிப்பு மறந்து விட்டதென்று.

ஆளுமையோடு கீழே வந்தவன் கண்டது தன் அன்னையை வறுத்தி கொண்டிருக்கும் அத்தைக் குடும்பம்.

ஒரு சின்ன இருமல் சத்தம் கொடுத்து , தான்  கவனிப்பதை காட்டிக் கொடுத்தவுடன் அமைதியின் சொரூபமாக தன் மருமகனுக்கு சிற்றுண்டி எடுத்து வைப்பதே தலையாய கடமை என்று மாறிவிட்டனர் அவன் அத்தையும், அத்தை மகளும்.

இதை கண்டு அமைதியுடன் இருக்கும் அன்னையையும், பாட்டியையும் குற்றப் பார்வை வீசி விட்டு சென்று விட்டான்.

அதற்கும்  தன் அம்மாவிடம் அவரின் அண்ணியையே குறைக் கூறினார் .

லட்சுமி அம்மாவுக்கு பெரு மூச்சு விடுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை. யாரையும் ஒன்றும் கூற முடியாத இக்கட்டில் இருப்பது இப்பொழுதும் மனதுக்கு எரிச்சலைக் கிளப்பியது.

அவரும் உண்ணாமல் எழுந்து கீழே உள்ள அவர் அறைக்கு சென்று விட்டார். பாமா அவர்களும் அமைதியாக தனது அமைதி குடிக் கொண்டிருக்கும் சமையலைறைக்கு சென்று விட்டார்.

அனைத்தையும் மாடியில் இருந்து வசுதேவர் அமைதியாக கவனித்து கொண்டிருந்தார்.

திரும்பிப் பார்த்தப் பொழுது கேசவரும்  வசுதேவரும்  நேரடியாகப் பார்த்துக் கொண்டனர். ஒன்றும் கூறாமல் கேசவர் சென்று விட்டார். வசுதேவருக்கு மனதில் எப்பொழுதும் போல் மனதில் பாரம் கூடிக் கொண்டது.

எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அதை தொழிலில் கொண்டு வரக்கூடாது என்ற கோட்பாட்டை கற்றுக் கொண்டதால் நேர்த்தியாக வீட்டை மறந்து ஆபிஸில் தனது பென்ஸ் காரிலிருந்து இறங்கி சென்றான் அர்ஜுன்.

அவன் வருவதை தெரிந்து கொண்ட ஊழியர்கள் பயத்தோடு எந்த தவறும் தன்னை அறியாமல் கூட நடந்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு வேலைச் செய்தனர் AA சொல்யுஷனில்.

அவன் உள்ளே நுழைந்தவுடன் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு அமைதி. அங்கு அவன் ஷீ சத்தமும், பணியாளர்களின் காலை வணக்கம் மட்டுமே ஒலித்தது.

அர்ஜுன் அவன் கேபினுள் உள்ளே நுழைந்தவுடன் அதிர்ந்தான் அவளைப் பார்த்து.

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்