Loading

காதல் மனசிலாயோ! 04

விருமாவின் ஃபோன் நம்பர் வரவும், வீரனார் அவசரமாக எடுத்துப் பேசினார்.

“சொல்லுங்க சம்பந்தி!”

“ஆ! வீரனார், சோசியர் இப்ப தான் வந்துட்டுப் போனார், ரெண்டுத் தேதி குறிச்சுக் கொடுத்தாரு, இந்த மாச கடைசி ஒன்னு, அடுத்த மாசம் மொத வாரத்துல ஒன்னு, நான் தலைவர் கிட்ட பேசிட்டேன், ரெண்டுமே வரதுக்கு தோதுனு சொல்லிட்டார். நீ என்ன சொல்ற வீரனார்?” எனக் கேட்டார்.

“நாளைக்கே வச்சாலும் எனக்குப் பிரச்சனை இல்லை சம்பந்தி, காசைக் கொடுத்தா எல்லாத்தையும் முடிக்க ஆள் இருக்கும் போது, நமக்கு என்ன கவலை” என பணத்திமிராகப் பேசினார் வீரனார்.

“ஏய்யா! காசு இருந்தா நம்ம விதியை விலைக்கு வாங்க முடியுமா என்ன..? வாழ்க்கையில் தலைவிதி என்னவோ அப்டி தான் நடக்கும், பணத்தை வச்சு எல்லாத்தையும் நடத்திட முடியாது, பணம் அது வரவழியில் வந்தா தானே உனக்குப் புரியும், சரி! சரி! இந்த மாச கடைசில வச்சுடுவோம். இன்னும் பத்து நாள் இருக்கு” என ஃபோனை வைத்தார் விருமா.

இது தான் வீரனார் மற்றும் விருமாவின் குணங்கள், இருவரிடமும் பணம் இருக்கிறது. ஆனால் அதன் மதிப்பும், அவசியமும் விருமாவிற்கு தெரியும், வீரனாரிற்கு பணம் பேப்பர் என்ற ரீதியில் பகட்டாக காட்சியளிக்கும்.

வீரனார், தன் குடும்பத்திடம் விருமாவின் ஃபோன் பற்றிக் கூறினார், பைரவியிடம்
“நகை, சாமான், துணிமணிகள் வாங்கனுமுனா போய் வேலையை முடிச்சுட்டு வந்துடு, அசோக், ஜனனியை துணைக்கு அழைச்சுட்டுப் போ” என்றார்.

“ஏங்க! அவளுக்காக வாங்கப்போறது அவ வந்து பாத்து எடுத்தா தானே, நல்லது”

“உனக்கும், ஜனனிக்கும் தெரியாததா? எல்லாம் போதும், பாத்து பாத்து ஏற்கனவே நெறைய வாங்கி குவிச்சாச்சு. இப்ப கல்யாணத்திற்கு பொண்ணுக்கு இவ்வளவு போடுறோமுனு கணக்கு தான், இருநூறு பவுன் கணக்கு வரனும், அத மட்டும் பாத்து வாங்கிட்டு வா, நமக்கு இருக்குறது ஒரே பொண்ணு, நல்லா செஞ்சி அனுப்பனும், அப்புறம் வெள்ளிப் பாத்திரம் கிலோ கணக்கு எப்டினு நீயே பாத்து முடிவுப் பண்ணிக்கோ, ரெட்டை செய்முறை ஒரே பொண்ணுக்கு, அதை மனசுல வை” எனக் கூறிவிட்டு வெளியில் கிளம்பிவிட்டார்.

“என்னடா சொல்லிட்டுப் போறார்…?” எனக் கேட்டார் பைரவி தம்பியிடம்.

“ம்ம்ம்! ரேகா கல்யாணத்துக்கு செய்ய வேண்டியதையும் சேத்து மீராக்கு செய்யப் போறார், அத தான் சொல்லிட்டுப் போறார். சரிக்கா! நீங்க கிளம்பிட்டு சொல்லுங்க” என அசோக் நகர்ந்தான்.

ஜனனி”ஆனாலும் சித்தப்பா ரொம்ப பண்றார், இவளைக் கூட்டிட்டுப் போனா என்னவாம்” என நாத்தனாரிடம் கேட்டாள்.

“மாமி! எனக்குமே வர இன்ட்ரெஸ்ட் இல்லை, நீங்களும், அம்மாவும் போய் வாங்கிட்டு வாங்க” என்றாள் மீரா.

“சரி, என்ன வேணுமுனு மெசேஜ்ல அனுப்பி வை, நான் பாத்துக்கிறேன்”

“ம்ம்ம்!”
…………

மீராவின் நண்பர்கள் ஃபோனில் பேசினர், அவளின் திடீர் கல்யாணம் பற்றி முதலில் அதிர்ச்சியானாலும், பிறகு ஆனந்தமாக கூச்சலிட்டனர்.

அந்த வயதில் கல்யாணம் என்ற வார்த்தை மட்டுமே ஈர்க்கும், அதன் பின் வரும் சுக, துக்கங்கள் பழகினால் மட்டுமே உணர முடியும்.

“ஐ! காலேஜ் வரவே தேவையில்லை…”

“ஹஸ்பண்ட் கூட ரொமான்ஸ் தான்…”

“ஹனிமூன் எந்த கண்ட்ரிடி..?”

“அந்தப் பக்கமும் ரிச் ஃபேமிலி தான் போல…”

தோழிகளின் இந்த மாதிரியான கேள்விகளால் கடுப்பான மீரா, “ஹேய்! நானே காலேஜ் வரமுடியலைனு ஃபீலில் இருக்கேன், நீங்க இப்ப தான் மொக்கையா பேசிட்டு இருக்கீங்க” எனத் திட்டினாள்.

“பாருடி! என் வீட்டுல எல்லாம் இப்டி எதுவும் குட் நியூஸ் சொல்ல மாட்டுறாங்களேனு ஃபீல் பண்றேன். இவ என்னடா காலேஜ், படிப்புனு புலம்புறா” என்றாள் ஒருத்தி.

“அவ படிப்புஸ்டி, அப்டி தான் யோசிப்பா. நீ இருக்க அரியரை க்ளியர் பண்ணவே இன்னொரு செம் தேவைப்படும்” எனக் கிண்டலடித்தாள் மற்றொருவள்.

குரூப் ஃபோன் காலில் பேசியதால், மற்றவர்கள் சிரித்தனர்.

தோழிகளோடு பேசியதில் மனம் கொஞ்சம் சுதந்திரமான உணர்விற்கு திரும்பியது.
………

“டேய்! என்னடா பொண்ணுப் பாக்க எல்லாம் போயிருக்க, என் கிட்ட எதுவும் சொல்லல” என்று கேட்டவனை கண்டுக் கொள்ளாமல் சிஸ்டத்தின் முன் அமர்ந்திருந்தான் சௌந்தர்.

“உன் கிட்ட தான்டா கேக்குறேன்”

“என்ன…?”

“என்னவா… நான் கேட்டது உன் காதுல விழல?”

“சம்பத்!” எனக் கடுப்பாகினான்.

“ஆமான்டா! நான் தான் அது, கேட்டதுக்துக்குப் பதில் சொல்லு, காலையில ஆடிட் ஃபைல் அனுப்ப சுந்தருக்கு கூப்புட்டேன், அவன் சொல்லி தான் தெரியுது, உன் கூடவே சுத்துறேன் எனக்குத் தெரியல” என நண்பனாக ஆதங்கப்பட்டான் சம்பத்.

“எனக்கே அப்பா போகும் போது தான் சொன்னார், இப்ப என்ன அதுக்கு.?”

“சரிடா மச்சான், பொண்ணு பாக்க எப்படி இருப்பாங்க..?” என ஆர்வமாக கேட்டான் நண்பன்.

“ம்ம்ம்! பொங்கல் டைம்ல பழைய வீட்டுக்குப் பெயிண்ட் அடிச்ச மாதிரி இருந்தா” என்றான் பட்டென்று.

“டேய்! ஏன்டா” எனக் குழம்பிய நண்பன்,
‘ஒரு வேளை இருக்குமோ’ எனச் சந்தேகம் அடைந்த நேரத்தில் அவனின் ஃபோனில் மெசேஜ் வந்தது.

அதை எடுத்துப் பார்த்தவன் கொஞ்சம் அதிர்ச்சியாக ஆனாலும் கோபம் வர, “டேய்! இது உனக்கு ஓவரா இல்ல, மீராவைப் பார்த்தா பெயிண்ட் அடிச்சு ஏமாத்துறப் பொண்ணு மாதிரியா இருக்கு, அவ இயற்கையாகவே இப்டி தான்டா.” என்றான். சுந்தர் நேற்று எடுத்த போட்டோகளை அனுப்பியிருந்தான்.

அப்பொழுது தான் தலையை நிமிர்த்தியவன்”உனக்குத் தெரிஞ்சப் பொண்ணா…?” எனக் கேட்டான்.

“ஆமாடா! எங்க ஊரு தான், பங்காளி வீட்டுச் சித்தப்பா வீரனார், அவரு பொண்ணு, அவங்க இங்கயே செட்டில் ஆகிட்டாங்க, திருவிழா, விசேஷமுனா ஊருக்கு வருவாங்க, பெருசா எனக்குப் பழக்கமில்ல, ஆனா எல்லாரையும் தெரியும். போன வருசம் கூட உனக்கு ஞாபகம் இல்லையா, மீரா கூட நான் பேசிட்டு இருந்தேன்ல…”

“இல்ல!” என்றான் அவன்.

“ஓ! நீ எங்க ப்ரீயா இருந்த, நான் பேசியதை பாக்க” என நக்கலாக கேட்ட நண்பனை கொலை வெறியோடுப் பார்த்தான்.

“ஓகே! ஓகே! அதை விடு, மீரா சூப்பர் பொண்ணுடா, அவ அக்கா தான் கொஞ்சம் அதிகப்படி… அவ கூட ஏதோ ஒரு பையன் கூட போயிட்டானு அம்மா சொன்னாங்க, மீரா காலேஜ்ல படிச்சுட்டு இருக்கா, அதுக்குள்ள கல்யாணம் பண்றாங்க…” என சம்பத் நிறுத்தினான்.

“அக்கா ஓடிப்போனதால தங்கச்சிய சேவ் பண்றாங்க போல” என்றான் சௌந்தர்.

“ஓ! நல்லா படிக்குறப் பொண்ணு, பத்தாவது, பன்னிரெண்டாவதுல ஸ்கூல் ஃபர்ஸ்ட், ஊருக்கே ஸ்வீட் வாங்கி அமர்க்களம் செஞ்சாரு வீரனார் சித்தப்பா”

“அவரு உன் சொந்தமுனு நீ சொன்னதே இல்ல”

“அவரு பத்தி நம்ம எப்ப பேசினோம்டா.. அதோட அவரு பொசிஷன் வேற என்னதுக்கு பெரிய இடத்தைப் பத்தி சொல்லிகிட்டு, நீயும் பெரிய இடம் தான், ஆனா ப்ரண்ட் ஆகிட்ட, உன் கிட்ட வேலை செய்றதால ஒன்னும் தெரியல..” எனச் சிரித்தான்.

“ம்ம்ம்!” என சௌந்தர் அமைதியானான்.

“டேய்! மீரா நல்ல பொண்ணுடா…” என நிறுத்திய நண்பனை கேள்வியாகப் பார்த்தான் சௌந்தர்.

“அவளை கல்யாணம் பண்ணிட்டு ஹேப்பியா வாழுடா, பழசை மறந்து தான் தொலையே. இன்னும் அதையே நெனச்சுட்டு இருந்தா என்ன பிரயோஜனம் நீயே சொல்லு”

“நானா போய் அதுல விழுந்தேனா, அவங்களா பாத்தாங்க, என் வாழ்க்கை முடிஞ்சுட்டு..” எனக் கூறி முகத்தைச் சுளித்தான்.

சம்பத்”என்னடா முடிஞ்சுட்டு…? இங்கப் பாரு, ஒத்துக்கிறேன் அப்பா, அம்மா பாத்த பொண்ணுனு அந்த அர்ச்சனா கிட்ட நீ பேசி பழகின, கல்யாணத்தப்ப உன் அக்கா ஏமாத்திட்டுப் போயிட்டாங்கனு, உன் கல்யாணமும் நின்னுட்டு, அந்தப் பொண்ணுக்கு மேரெஜ் ஆகிட்டுடா, நீ என்னனா அதையே நெனச்சு தண்ணி அடிச்சுட்டுச் சுத்துற, கொஞ்சமாச்சும் நடைமுறையை யோசிடா” என்றான்.

“சம்பத்! அர்ச்சனாவை ரொம்ப விரும்பினேன்டா, உனக்கே தெரியுமுல அவ எனக்குனு ஃபிக்ஸ் பண்ணியதால, கல்யாணத்துக்குத் தேவையான எல்லாத்தையும் பாத்து பாத்து சேர்ந்துப் போய் வாங்கினோம். அவளும் நானும் மனசால விரும்பி கல்யாணத்துக்குத் தயார் ஆனோமுடா… அதை எப்படி மறக்க முடியும்..?” என தலையைக் கோதிப் பின்னால் சாய்ந்தான்.

“டேய்! அதான் நீ அன்னைக்கு அவ கிட்ட அவ்வளவு கெஞ்சிக் கேட்டீயே, அவ என்னனா என் அப்பா சொல்றதை தான் கேப்பேனு போயிட்டா, அது மட்டுமில்ல அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையே பிறந்துட்டுடா”

“அவளை மாதிரி எல்லாம் என்னால நெக்ஸ்ட்னு போக முடியல”

“அப்புறம் என்னதுக்கு மீராவைப் பொண்ணு பாத்துட்டு வந்த..?” எனக் கோபமாக கேட்டான் சம்பத்.

“நானா போகல, அப்பா தான் என்னமோ பேசி என்னைய கன்பியூஸ் பண்றார், என்னால முடியல”

“டேய்! அவரு பெத்தவரா கடமையைச் செய்ய நினைக்கிறார, நீயும் பிள்ளையா பொண்ணுப் பாத்துட்டு வந்துட்ட… அதே நாளைக்கு மீராவுக்கு நீ புருசனா மாறனும் அதையும் யோசி சொல்லிட்டேன்.” என சம்பத் வெளியேறினான்.

சௌந்தர் மனம் அப்பொழுது தான் அதை யோசித்தது, ‘புருசனா மாறனுமா..?’ என்பதையே அவனால் ஏற்க முடியவில்லை. பிறகு எங்க அன்னியோன்னியம்…?

~~~~

இரண்டு தினங்கள் சென்றது…..

அன்று மீராவிற்கு கல்யாணப் புடவை எடுக்கப் போவதாக மாப்பிள்ளை வீட்டில் இருந்து அழைப்பு வந்தது.

மீராவும் உடன் வரவேண்டும் என்பது பிரேமாவின் விருப்பம். எனவே மறுக்க முடியாத வீரனார் அசோக், ஜனனியுடன் மீராவை அனுப்பி வைத்தார்.

அந்தப் பக்கம் பிரேமா, சுந்தர், உறவில் சிலர் வந்திருந்தனர், விருமாவின் கட்டாயத்தால் சௌந்தர் சம்பத்துடன் வருவதாக கூறியிருந்தான்.

ஈரோடு அருகில் பட்டுப்புடவைக்கு என்றே தனி கடைகள் உள்ளது. அதில் பிரேமாவின் குடும்பத்திற்கு பழக்கமான ஒருவரின் கடைக்குள் நுழைந்தனர்.

அவர்கள் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்பவும் நெய்து தருவர்.

“வாம்மா! இப்டி வந்து உட்காரு” என மீராவை அழைத்துத் தன் அருகில் அமர வைத்தார் பிரேமா.

“என்னக்கா! இப்பவே மருமகளை தாங்க ஆரம்பிச்சுட்டீங்களா..?” எனக் கிண்டல் செய்தனர் உறவினர்.

“எனக்கு மூத்த மருமகடி, என் குடும்பத்தையே தாங்கப் போற பொண்ணு, அவளைத் தாங்குறதில் என்ன தப்பு இருக்கு. நீ உன் வாயை மூடிட்டு புடவையைப் பாரு” என்றவர், மீராவிடம், “கண்ணு! உனக்கு எந்த மாதிரி வேணுமோ அப்டி மனசுக்குப் புடிச்சத பாரு” என்றார்.

ஜனனியும் மீரா அருகில் அமர, “பாரு மீரா!” என்றாள் அவளிடம்.

அசோக், சுந்தருடன் பேசிக் கொண்டு வெளியில் நிற்க, சௌந்தரும், சம்பத் வந்துச் சேர்ந்தனர்.

“டேய்! நீ எங்கடா இங்க..?” எனக் கேட்டான் அசோக், சம்பத்திடம்.

“மாமா! சௌந்தர் கார்மென்ட்ஸ்ல தான் வேலைப் பாக்குறேன், அவன் என் ப்ரண்ட் தான். எனக்குமே மீராவை தான் பாக்க வந்தாங்கனு தெரியாது, போட்டோ பாத்து தான் தெரியும்” என்றான்.

“அப்படியா!” என்றதோடு, “வாங்க மாப்பிள்ளை” என அடுத்து சௌந்தரை வரவேற்றான் அசோக்.

“ம்ம்ம்!” என்றதோடு, தம்பியிடம்”எப்படா முடியும்..?” எனக் கேட்டான்.

“இப்ப தான் வந்தோம் அண்ணா, உள்ள வாங்க, அம்மா நீங்க வந்ததும் கூட்டிட்டு வரச் சொன்னாங்க”

“சம்பத்! வா” என நண்பனை அழைக்க, சம்பத் அசோக்கை அழைத்துக் கொண்டு நான்குப் பேரும் உள்ளே சென்றார்கள்.

அசோக் மனதில்’நல்ல வேளை சம்பத் இருக்கான், ப்ரண்ட்டுனு வேற சொல்றான, சௌந்தரைப் பற்றி தனியா விசாரிக்கனும்’ என முடிவு எடுத்தான்.

காதல் மனசிலாயோ!

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்