Loading

காதல் மனசிலாயோ! 03

மீராவிற்கு பூ வைத்த பிரேமா, மற்ற உறவினர்களையும் வைக்குமாறு பணிந்தார்.

பிறகு குங்குமம் வைத்து மீராவைத் தங்கள் வீட்டு மருமகளாக உறுதிப் படுத்தினர்.

சௌந்தர் பெரிதாக பங்களிப்பு இல்லாமல் தன் ஃபோனையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“அண்ணா! பொண்ணு உனக்கு தான் பாக்க வந்தது, நீ என்னனா ஃபோனை பாத்துட்டு இருக்க” எனக் கேட்டான் அவனின் தம்பி சுந்தர்.

“அதான் பாத்துட்டனே, மறுபடியும் பாக்க அந்த முகத்தில் எதும் சேஞ்சஸ் நடந்திருக்கா என்ன….?” என நிமிராமலே கேட்டான் சௌந்தர்.

“ம்ம்ம்! அண்ணிக்கு எல்லாரும் வச்ச சந்தனம், குங்குமத்தில் முகமே பிரைட்டா மாறிட்டாங்க பாரு”

“டேய்! இப்டி மொக்கப் போடுறத மொதல நிறுத்து… சந்தனம், குங்குமம்… பிரைட்னு கடுப்பாக்காம” என சீறி விழுந்தவனிடம் அடுத்து பேசாமல் திரும்பிக் கொண்டான் சுந்தர்.

சௌந்தர் ஃபோனில் இருந்து தலையை எடுக்காமல் இருக்க, பிரேமா”சௌந்தர்! இங்க வாப்பா, மருமகளோட சேர்ந்து நில்லு… தம்பி போட்டோ எடுக்கட்டும்” என்றார் ஆசையாக, அவரோ வெள்ளந்தியான பெண்மணி.

“அது எல்லாம் வேணாம்” என்றவன்,
“அப்பா! வந்த வேலை முடிஞ்சுட்டுல, நான் கிளம்பவா, எனக்கு அவசரமா போகனும்” எனக் கேட்டான்.

“இருப்பா!” என ஒற்றைப் பார்வையை அழுத்தமாக காட்டினார் விருமா.

சௌந்தர் தன் கோபத்தின் உச்சமான உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.

மீரா அவன் பக்கமே திரும்பவில்லை. ஜனனி”ஏங்க! மாப்பிள்ளையை வரச் சொல்லுங்க, ஒரு போட்டோ எடுத்துடலாம்” என்றாள் கணவன் அசோக்கிடம்.

அசோக் சென்று சௌந்தரிடம்”தம்பி! வாங்க மீராவோடு நின்னு போட்டோ எடுத்துக்கலாம்” என்றான்.

“இப்ப என்ன தாலியா கட்டிட்டேன், சேர்ந்து நின்னு போட்டோ எடுக்க, போங்க” என எரிந்து விழுந்தான் அசோக்விடம்.

மற்றவர்கள் அவர்களைத் திரும்பி பார்க்க, அசோக் சங்கடமாக மீராவை தான் பார்த்தான்.

மீராவும் மாமாவை பாவமாக நோக்கினாள். வீரனார் கண்டும் காணாமல் அமர்ந்திருந்தார்.

விருமா”சௌந்தர்! போய் போட்டோக்கு நில்லு” என்றுக் கூறவும், வேகமாக எழுந்துச் சென்று மீரா அருகில் நின்றான்.

“நீ என்னடா வேடிக்கைப் பாக்குற, அதான் வந்து நின்னுட்டான்ல போட்டோவை எடு” என இளைய மகன் சுந்தரை அதட்டினார்.

“சரிப்பா!” என்ற சுந்தர், “அண்ணா! ஸ்மைல்” என்றான்.

“ஸ்மைல் பண்ற அளவுக்கு பெருசா ஒன்னும் காமெடி பாக்கல, நீ எடு” என என தம்பியை முறைத்தவன், மாறாத முகத்துடன் நின்றான்.

மீரா இயற்கையான புன்னகையுடன் நின்றாள்.

“அண்ணி! யுவர் ஸ்மைல் மார்வெலஸ் கீப் இட் அப், அப்படியே அண்ணனுக்கும் சொல்லிக் கொடுங்க” என்றான் சுந்தர்.

அவள் பக்கம் திரும்பிய சௌந்தர்”ஏன் உன் அப்பா ரொம்ப வசதியா இருக்காருனு காட்டுறதுக்காக இவ்வளவு மேக் அப் பண்ணி வச்சு இருக்கீயா? நீங்க எல்லாம் ரியலாவே இருக்க மாட்டீங்களா! அப்புறம் எதுக்கு இப்டி பல்லைக் காட்டிட்டு நிக்கிற, ஜஸ்ட் போட்டோ அவ்ளோ தானே, என்னமோ காணததை கண்ட மாதிரி, ஷிட்” என முகத்தைச் சுளித்தப்படி திரும்பிக் கொண்டான்.

மீரா அதிர்ச்சியில் அவனையே அசையாமல் பார்த்தவாறு நிற்க, ஜனனி அருகில் வந்து”மீரா! என்ன ஆச்சு..?” எனக் கேட்டாள்.

மாமியின் பக்கம் சட்டென்று திரும்பியவள்”ஒன்னுமில்ல மாமி! சும்மா தான்.” என லேசாக சிரித்தாள்.

ஆனால் மனதில் ஏனோ ஒரு வலி ஏற்பட்டாலும், அதையும் மீறி அவள் யோசித்தது இது தான்’ஓ! இவருக்கு மேக் அப் போடுவது பிடிக்காது போல’

சௌந்தர் விலகிட, மீரா தனியாக அமர்ந்து இருந்தாள்.

பெரியவர்கள் பேசத் தொடங்கினர்.

விருமா”அப்புறம் வீரனார்! முதல் நாள் சாயந்திரம் நிச்சயம், அடுத்த நாள் காலையில கல்யாணம் வச்சுடலாம். தேதிக் குறிச்சு அனுப்பி வைக்கிறேன்.” என்றார்.

“நல்லதுங்க சம்பந்தி, நீங்க சொல்ற மாதிரியே பண்ணிடலாம்” என்றார் வீரனார்.

அசோக் மெல்ல தன் மாமாவிடம்”மாமா! என்ன அவர் சொல்றதுக்கு அப்படியே தலைய ஆட்டுறீங்க, தேதி நமக்கும் செட் ஆக வேண்டாமா..? தலைவர் கிட்ட அப்பாயிண்மென்ட் வாங்கனுமுல…” என நிறுத்தினான்.

“ம்ம்ம்! புரியுது, கொஞ்சம் பொறுடா எனக்கு எல்லாம் தெரியும்” என மைத்துனனை அடக்கினார் வீரனார்.

விருமா”அங்க என்ன குசுகுசுனு பேசுற, எதுவா இருந்தாலும் வெளியில பேசு, அந்த அரசியல்வாதி தோரணைக் கொஞ்சமும் மாறாம இருக்க, இது என்ன உன் கட்சிக் கூட்டமா…?” எனக் கூறி நக்கலாக பகீரங்கமாக சிரித்தார்.

வீரனார் மனதில் கோபம் கொழுந்து விட்டாலும், அடக்கி வாசித்து பற்களைக் காட்டியவாறு”ஹிஹி! என்ன சம்பந்தி கிண்டல் பேசிக்கிறீங்களா! ஒன்னுமில்ல மச்சான் கட்சித் தலைவரை கூப்புடனுமேனு சொன்னான், அதான் நீங்க கொடுக்குற தேதியை தலைவர் கிட்ட சொல்வோமுனு சொல்லிட்டு இருந்தேன்” என மழுப்பி மாற்றினார்.

“ஏதோ நீயும், நம்ம தலைவர் கட்சியா போயிட்ட, அதனால தலைவர் கிட்ட நான் பேசிக்கிறேன், ஒன்னும் பிரச்சனையில்லை, கிளம்பலாமா..?” எனக் கேட்டார் மனைவியிடம் விருமா.

பிரேமா எழுந்திரிக்க, கூடவே மற்றவர்களும் எழுந்தனர்.

சௌந்தர், விருமா போகலாமா எனக் கேட்டதுமே வெளியில் சென்றிருந்தான்.

விருமா வீட்டினர் கிளம்பிட, வீரனார் குடும்பம் மற்றும் அசோக் குடும்பம் மட்டுமே இருந்தது.

வீரனாரின் பிஏ கணேசன் அருகில் நின்றார், கொஞ்சம் நடுத்தர வயதுடையவர் தான்.

கணேசன்”சார்! இவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு தானே நம்ம போயிருந்தோம். இந்தப் பையனுக்கும் கல்யாணம் நின்னுட்டுல” எனக் கேட்டதும், அசோக் மாமாவைக் கேள்வியாக பார்த்தான்.

பைரவி”ஏங்க, கணேசன் என்ன சொல்றார்…?” எனத் தயங்கியப்படி கேட்டார்.

மீராவும், ஜனனியும் டைனிங் டேபிளில் தான் அமர்ந்திருந்தனர்.

“ஆமா! விருமா மகளுக்கும், இந்தப் பையனுக்கும் ஒரே நேரத்தில் முகூர்த்தம் வச்சு இருந்தாங்க, பொண்ணுக் கொடுத்து பொண்ணு எடுப்பது என்ற பேச்சில், ஆனா விருமா மக ஓடிப்போனதால் இந்தப் பையன் கல்யாணமும் நின்னுட்டு, அவ்ளோதான்” என்றார் வீரனார்.

“மாமா! எனக்கு என்னமோ இந்தப் பையன் சரியான திமிர் பிடித்தவனா தெரியுறான், நீங்க அவசரப்படுறீங்கனு தோணுது, பாவம் மீரா” என்றான் அசோக்.

“அசோக்! உன் கிட்ட பேசினதை வச்சு சொல்றீயா, நானும் கவனிச்சேன். அது திமிர் இல்லை, விருமாண்டிக் குணம். அந்தாளும் அப்டி தான், நல்ல வசதி, பரம்பரைப் பேரு இருக்கு, அத்தனை அரசியல்வாதி, பெரிய ஆளுங்களை கைக்குள் வச்சு இருக்கார்.

எல்லாரும் அவர் பணத்துக்காக அடிப்பணியல, அவரோட அந்த பேச்சு, கொஞ்சம் கை சுத்தமானவர். நம்மளை மாதிரி நெளிவுசுளிவு இல்லை, அதனால அவர் கிட்ட யாரும் வச்சுக்க மாட்டானுங்க, ஆனாலும் பையனுக்குப் பொண்ணு எடுப்பதில் சிக்கல் வந்துட்டு.

அவர் முடித்த சம்பந்தமும் பெரிய இடம், சென்ட்ரல் வரை தொடர்பு, இவர் பொண்ணு ஓடிப்போனதும், அவங்க பொண்ணுக்கும், இவரு பையனுக்கும் நடக்கவிருந்தக் கல்யாணத்தையும் நிறுத்திட்டாங்க அந்தப் பக்கம், இவரால ஒன்னும் சொல்ல முடியல, அப்புறம் அப்படியே தள்ளிப் போய் இப்ப நம்ம பேசி முடிச்சிருக்கோம்”

“மாமா! அது எல்லாம் சரி தான். பையன் என்ன படிச்சிருக்கான், என்ன வேலைப் பாக்கிறான்?”

“படிப்பு இன்ஞ்சினியர் தான், சொந்தமா பிஸ்னெஸ் பண்றார், விருமா தொழில் பாத்துக்கவே ஆளில்லை, என்னதுக்கு வேலைக்குப் போகனும்.”

“எனக்கு என்னமோ இந்த பையனைப் புடிக்கல மாமா, கொஞ்சம் கூட மரியாதை இல்ல, முகத்தில் சிரிப்பில்லை. ஏதோ வெறிப் பிடித்தவன் மாதிரி இருக்கான். அப்படி என்ன அவசரம் இவனை தான் முடிக்கனுமுனு.”

மீரா மனமும் சௌந்தரை நினைத்து பயம் கொள்ள தான் செய்தது.

“அடேய்! இந்த இடம் நமக்கு அமைஞ்சதே பெருசு, உனக்குப் புரியல. போதும்! விடு
இவர் தான் மாப்பிள்ளை.”

“என்ன மாமா இப்டி பேசுறீங்க…? மீரா வாழ்க்கை இது”

“என் பொண்ணு வாழ்க்கைப் பத்தி என்னைய விட நீ நல்லா யோசிச்சுடுவீயா என்ன.? எனக்குத் தெரியும், நீ அமைதியா இரு” என அதட்டினார்.

“அப்படியில்ல மாமா! மாப்பிள்ளையைப் பார்த்தா ஒரு ஈர்ப்பு வரனும், ஆனா இந்தப் பையன்…” என நிறுத்தினான் அசோக்.

“சார்! மாப்பிள்ளை பத்தி நான் கேள்விப் பட்டிருக்கேன், கொஞ்சம் தண்ணீ பார்ட்டி போல” எனத் தடுமாறிக் கூறினார் கணேசன்.

அசோக் மாமாவைக் கேள்வியாக பார்த்தான்.

“யோவ்! இப்ப யார் தான் தண்ணீ அடிக்கல, ஏன் நீ, நான், அசோக் நீ அடிக்கலையா சொல்லு, நமக்கு எல்லாம் கல்யாணம் ஆகலையா என்ன..? இது ஒரு குறைனு, என் பொண்ணுக்கு நான் மாப்பிள்ளைப் பாத்து முடிச்சுட்டேன்” என எழுந்துச் சென்றார் வீரனார், அசோக் அழைத்ததைப் பொருட்படுத்தாது நடத்தவரை தலையை குலுக்கியவாறு நோக்கினான் அவன்.

ஜனனி மெல்ல கணவர் அருகில் வந்து
“என்னங்க சித்தப்பா இப்டி சொல்லிட்டுப் போறாங்க.?” எனக் கேட்டாள்.

“என்னைய என்ன பண்ண சொல்ற, நானும் போராடிப் பாத்துட்டேன், அவ்ளோ தான் மீரா தலையெழுத்து இதான் போல” என்றான்.

“அத்தாச்சி! நீங்க எதுமே பேசாம இருக்கீங்க, ஏதாவது சொல்லி இருக்காலம்ல..” என்ற தம்பி மனைவியிடம், “அவன் பேசியே ஒன்னும் நடக்கல, நான் கேட்டா மட்டும் அந்த மனுசன் முடிவை மாத்திப்பாரா என்ன..? ஏதோ நடக்கட்டும் போ” என்றார் பைரவி.

“மீரா! அந்தப் பையனே ஒரு வாய்ப்புக் கொடுத்தான், நீ சொல்லி இருக்கலாம்ல எனக்குப் படிக்கனும், கல்யாணம் பண்ண போறதில்லைனு. அட்லீஸ்ட் இந்தச் சம்பந்தம் நின்னு இருக்கும்..” எனக் கேட்டான் அசோக்.

“மாமா! நான் அப்டி சொல்லி இருந்தா அப்பா அடுத்து ஒருத்தரை அழைச்சுட்டு வந்து நிப்பார். மறுபடியும் பொண்ணுப் பாக்கும் படலம்… போதும் இதுவே” என்றாள் வருத்தமாக.

“மாமா சொன்ன மாதிரி, வேற மாப்பிள்ளையாச்சும் கிடைச்சிருக்குமில மீரா, இந்தப் பையனை பார்த்தால் எனக்குமே சரியா படல” என வருந்தினாள் ஜனனி.

“அடுத்து வரவர் இவருக்கு மேல் இருந்தால் என்ன செய்றது மாமி, விடுங்க எப்டியோ போகட்டும் என் வாழ்க்கை” என எழுந்து அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

இரவு…..

மீரா, தலையணை நனையும் அளவிற்கு அழுதுத் தீர்த்து இருந்தாள்.

யாருமே அவள் அறைக்குள் செல்லவில்லை, வீரனார் பிள்ளைகளுக்கு தனி அறைகளை ஒதுக்கியிருந்தார். அதுவும் ரேகாவின் செயலிற்கு ஒரு காரணமாகும், பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை அறிய முடியாத சூழ்நிலை அந்த தனிமையான இடம்.

மீரா தன் விதியை நினைத்து அழுதுத் தீர்த்தாலும், ஏனோ மனதில் சௌந்தர் மீது ஒரு எண்ணம் தோன்றியது.

அனைவர் முன்பும் தனக்கு இக்கல்யாணத்தில் முழுச்சம்மதா எனக் கேட்டுக் கொண்டான். மேலும் படிப்பது என்றால் உன் விருப்பம் , ஆனால் கல்யாணத்திற்கு பிறகு முடியாது, தவிர நீ படிக்கக் கூடாது எனக் கூறவில்லை.

மீராவிற்கு அவன் எப்படிப்பட்டவன் என்பதில் குழப்பம் இருந்தது.

………

சௌந்தர் இரவு வீட்டிற்கு நேரம் கழித்தே திரும்பினான். அதுவும் போதையில் வந்து நுழைந்தவனைக் கண்ட விருமா,

“சௌந்தர்! நீ இத்தனை நாள் இப்டி குடிச்சுட்டு வந்த, நானும் ஏதோ மனசுல வலினு பொறுத்துப் போனேன், ஆனா இனிமே உனக்குனு ஒருத்தி வரப்போறா, இந்தப் பழக்கத்தை குறைச்சுக்கோ” எனச் சற்று அழுத்திக் கூறினார்.

“அப்பா! நீங்க சொல்றதை தான் எப்பவும் கேட்டேன், இப்பவும் கேக்கிறேன். ஆனா இந்த விசயத்தில் நீங்க தலையிடாதீங்க, இது எனக்கு மருந்து, இது இல்லைனா தூக்கம் வராது, கல்யாணம் எனக்காக பண்ணல, உங்களுக்காக நீங்கக் கட்டாயப் படுத்தி ஒத்துக்கிட்டேன்.” எனக் கூறிவிட்டு அவன் அறையை நோக்கிச் சென்றான்.

“என்னங்க இப்டி பேசிட்டுப் போறான், நாளைக்கு அந்தப் பொண்ணு வந்ததும் இப்டியே பண்ணா நல்லாவா இருக்கும்..” எனப் புலம்பினார் பிரேமா.

“எல்லாம் கல்யாணம் பண்ணா சரியாகிடும், நீ புலம்புறதை நிறுத்திட்டு போய் அவனுக்குச் சாப்பாடு போடு, நாளைக்கு நம்ம சோசியரை வரச்சொல்லி சீக்கிரம் நல்ல நாள் பாத்துடுறேன்” என்றார்.

பிரேமா நகரவும், “நம்ம பெத்த சனியானால என் பையனுக்கு இந்த நிலை” என வெளிப்படையாக புலம்பியவர், மகளை விட மகனையே தன் நம்பிக்கையாக உணர்ந்தார்.

காதல் மனசிலாயோ!

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்