Loading

 

ஈர்ப்பு 14

 

பொடிக் ஆரம்பிப்பது என்பது என்னுடைய டீனேஜ் கனவு. பள்ளி இறுதியிலேயே நானும் சாண்டியும் எங்களுடைய பொடிக் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன அங்கு விற்கப்பட வேண்டும், எப்படியெல்லாம் எங்கள் பொடிக்கை அலங்கரிக்க வேண்டும் என்பன பற்றியெல்லாம் பேசியுள்ளோம். எங்கள் பொடிக்கின் உட்புற வடிவமைப்பு, அதை விளம்பரப்படுத்தும் நுட்பம் என்று எங்கள் கற்பனைகள் விரிந்துக் கொண்டே சென்றன.

 

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது எங்கள் பொடிக்கின் பெயரை மட்டுமே தேர்வு செய்ய. இருவரும் மாறி மாறி பெயர்களை சொல்லி பலவற்றை நிராகரித்து மேலும் பல பெயர்களை இணையத்தில் தேடி அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்தோம் – ‘NaVya boutique’s இதுவே நாங்கள் இறுதியாக தேர்வு செய்த பெயர்.

 

நாங்கள் கண்ட கனவுகள்  நிஜமாகுமா என்பது அப்போது எங்களுக்கு தெரியாது. ஆனாலும், அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் கனவு கண்டோம்.

 

இன்று அதை நோக்கிய என்னுடைய முதல் அடியை எடுத்து வைக்க போகிறேன் என்று நினைக்கும்போது சற்று பெருமையாகவே உணர்ந்தேன். அதே சமயம் என் அப்பா இதற்கு சம்மதிப்பாரா என்ற பயம் எனக்குள்ளே இருந்தது என்னவோ உண்மை தான்.

 

என் அப்பாவிடம் இதைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும் முதலில் சற்று தயக்கமாக இருந்தாலும் பின் போகப் போக பொடிக்கின் மேலுள்ள ஆர்வத்தில் என்னை அறியாமல் நான் பேசிக் கொண்டே இருந்தேன்.

 

பொடிக் எதற்கு ஆரம்பிக்கப் போகிறோம், அதை எவ்வாறு செயலாக்குவது, அதனால் கிடைக்கும் லாபம் என்ன என்பன போன்ற பல விஷயங்களை எடுத்துக் கூறினேன். முதல் நாள் தான் க்ரிஷும் நானும் இதற்காக சில பல ‘ஹோம் ஒர்க்’களை செய்தோம்.

 

இவற்றை சொல்லி முடித்து அவரின் முகம் நோக்கினால், அது எப்போதும் போலவே நிர்மலமாக இருந்தது.

 

‘ப்ச், இவ்ளோ பேசிருக்கேன், ஆனா ஒரு ரெஸ்பான்ஸும் இல்லையே. என்ன பண்ணலாம்? எதுக்கும் ஒரு செண்டிமெண்ட் பிட்டை போட்டு பாப்போம்!’ என்று எண்ணிய நான், அவரருகே சென்று, “அப்பா நான் கண்டிப்பா பொடிக் ஆரம்பிக்கணும்னு சொல்ல வரல. அதை ஆரம்பிச்சா நான் என்னோட சொந்த கால்ல நிக்கிறேன்னு எனக்கே ஒரு கான்ஃபிடேன்ஸ் கிடைக்கும். படிச்சுட்டு சும்மா இருக்கேங்கிற கில்டினஸ் எனக்கு இருக்காது ப்பா.” என்று அவரை இறைச்சுதலாய்ப் பார்த்தேன்.

 

அவரோ என்னை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்துவிட்டு, “அந்த பொண்ணு பேரு என்ன சொன்ன?” என்று வினவினார்.

 

“சாண்டி..சந்தியா ப்பா.” என்று திக்கியபடி நானும் பதில் கூறினேன்.

 

“அவங்க அப்பா கிட்ட நான் பேசணும்.” என்று பட்டும் படாமல் அவர் கூற, அதைக் கேட்ட எனக்கு என் காதுகளையே நம்ப இயலவில்லை. அவர் நிர்தாட்சண்யமாக மறுக்காமல் இருந்ததே எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

 

“தேங்க்ஸ் ப்பா.” என்று உளமார நான் கூற, அதை கண்டுகொள்ளாத பாவனையுடன், “இதைப் பத்தி தெளிவா விசாரிச்சு, எல்லாம் எனக்கு சரின்னு பட்டா தான் இதுக்கு சம்மதிப்பேன். அதுக்கு முன்னாடி எந்த  ஹோப்ஸும் வளர்த்துக்காத.” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

 

நானோ மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருந்தேன். அவர் இவ்வாறு சொன்னதே பெரிது என்று கருதினேன். மேலும், தாமோ அங்கிள் மீது எனக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது, அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிடுவார் என்று.

 

உடனே சாண்டியை அலைபேசியில் அழைத்து, இங்கு நடந்தவற்றை மீண்டும் அவளுக்கு ஒலிபரப்பினேன். அதைக் கேட்டவளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள்.

 

“ஹே, நந்தி சூப்பர் டி. மீ வெரி ஹாப்பி! இனி ரெண்டு பேரும் சேர்ந்தே ஒர்க் பண்ணலாம். நம்ம கனவு நினைவாகப் போகுது!” என்று அவள் துள்ளி குதித்தது, அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாலும் என்னால் உணர முடிந்தது.

 

“லூஸி, எத்தனை முறை என்னை நந்தினு கூப்பிடாதனு சொல்லிருக்கேன்.” என்று நான் கத்த, “அது ஒரு ஃப்ளோல வந்துடுச்சு நதி மா!” என்று சமாளித்தாள் சாண்டி.

 

“வரும் டி வரும், இன்னைக்கு ஈவினிங் உங்க வீட்டுக்கு வந்து எப்படி உன் வாயில இருந்து மட்டும் ‘நந்தி’னு வருதுன்னு பார்க்குறேன்.” என்று நான் கூற, “ஹாஹா, இன்னைக்கு ஈவினிங் நான் மௌன விரதம் நதி டார்ஜிலிங்.” என்றாள் சாண்டி.

 

“ஆஹான், தாமோ அங்கிள் வீட்டுல இருப்பாரு தான?” என்று முக்கிய விஷயத்திற்கு வர, “அப்பா கிட்ட சொல்லிடுறேன் டி. அவங்க ‘க்யூட்டி’ வந்தா இருக்காம எங்க போயிட போறாரு.” என்று என்னை கேலி செய்தாள் அவள்.

 

“சரி டி ஈவினிங் பார்ப்போம், பை.” என்று அழைப்பை துண்டித்து விட்டு பார்த்தபோது அம்மாவும் அபியும் என்னையே ஆச்சரியமாக பார்த்திருந்தனர்.

 

“என்ன அம்மாவும் பிள்ளையும் என்னை சைட்டடிச்சுட்டு இருக்கீங்க? போங்க போய் வேற வேலை இருந்தா பாருங்க. அப்பறம் அம்மா பேசி பேசி தொண்டை வறண்டு போச்சு. அதனால சில்லனு ஒரு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வாங்க.” என்று என் அம்மாவிடம் கட்டளைகளை பிறப்பித்தேன்.

 

“கொழுப்பு டி உனக்கு. அந்த மனுஷன் உன் செண்டிமெண்ட் பேச்சை நம்பிட்டு போறாருல, அதான் ஆடிட்டு இருக்க. இதுவே அவரு ஒத்துக்கலேனா என்கிட்ட தான வந்துருப்ப.” என்று உதட்டை சுழித்தார் அவர்.

 

“ஹாஹா, அப்போ மட்டும் உன்னோட பவரை யூஸ் பண்ணி அப்பாவை ஒத்துக்க வச்சுருப்பியோ ம்மா. அதெல்லாம் நடக்காதுன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அப்பறம் எதுக்கு இந்த டயலாக்?” என்று அம்மாவிடம் நாக்கை துருத்தி காட்டினேன். 

 

“போடி போ, ஒரு நாள் என்கிட்ட வந்துதான ஆகணும். அப்போ கவனிச்சுக்குறேன்.  என் பையன் கடை ஆரம்பிக்குறதுக்கு மட்டும் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பாராம், இவரு பொண்ணுக்குனா மட்டும் ஒன்னும் சொல்ல மாட்டாராம்.” என்று புலம்பியபடியே சமையலறைக்கு சென்றார்.

 

“அம்மா, அபியோடது ரெஸ்டாரன்ட். நான் ஆரம்பிக்கப் போறது பொடிக். கடைன்னு சொல்லி இன்சல்ட் பண்ணாத. இப்படி தான் பக்கத்து வீட்டுக்கெல்லாம் சொல்லிட்டு இருக்கியா?” என்று நானும் வேண்டுமென்றே அவரிடம் வம்பு வளர்த்தேன்.

 

“உன்கூட பேசுனா எனக்கு வேலையே ஆகாது போடி.” என்று கூறி என்னை அங்கிருந்து விரட்டி விட்டார்.

 

இவற்றையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த அபியிடம் சென்று, “என்ன ப்ரோ, இவ்ளோ பாசமா பார்க்குற?” என்று அவனிடம் வினவ, “ஒன்னும் இல்ல. ஒரு வாரத்துக்கு முன்னாடி என்கிட்ட அஞ்சு ரூபா சாக்லேட்டுக்காக சண்டை போட்டவ இன்னிக்கு அப்பா முன்னாடியே இவ்ளோ தைரியமா பேசுற அளவுக்கு வளர்ந்துட்டாளேன்னு ஆச்சரியமா பார்க்குறேன்!” என்று கூறினான் அபி.

 

“ரொம்ப புகழாத ப்ரோ, எனக்கு புகழ்ச்சி அவ்ளோவா பிடிக்காது” என்றேன்.

 

அவன் என் மண்டையில் லேசாக தட்டிவிட்டு, “ரொம்ப ஹாப்பியா இருக்கு டா நதி!” என்று என்னை தோளோடு அணைத்துக் கொண்டான்.

 

சூழ்நிலையை சகஜமாக்க, “இங்க பாரு ப்ரோ,  நீ ஒரு பிசினஸ்-மேன், நானும் இன்னும் கொஞ்ச நாள்ல பிசினஸ்-வுமன் ஆகப் போறேன். அதனால, ஒரு அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்.” என்று லேசாக இடைவெளி விட்டு அவனைப் பார்த்தேன்.

 

‘ஏதோ லூசுத்தனமா தான் சொல்லப் போற, சொல்லி முடி!’ என்ற பார்வை பார்த்தான் அவன்.

 

நான் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “நீ உன் கேர்ள் பிரெண்ட்ஸுக்கெல்லாம் என் ‘பொடிக்’கை இண்ட்ரோ கொடுப்பியாம். நானும் என் பிரெண்ட்ஸுக்கெல்லாம் உன் ரெஸ்டாரண்ட்டை இண்ட்ரோ கொடுப்பேனாம். இப்படி பண்ணா என்னோட பொடிக்கும் டெவலப் ஆகும் உன் ரெஸ்டாரண்ட்டும் டெவலப் ஆகும்.” என்று கூறி அவனைப் பார்த்து இளித்தேன்.

 

“இப்படி பண்ணா என் ரெஸ்டாரண்ட்டை இழுத்து மூட வேண்டிவரும். பொண்ணுங்களா டி அதுங்க எல்லாம்? ஒரே நேரத்துல எப்படி தான் இவ்ளோ சாப்பிடுதுங்களோ!” என்றான் அபி.

 

“அம்மா இவன் சொன்னதை கேட்டியா?” என்றேன் அவனைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்புடன்.

 

“எதுக்கு டி கத்திக்கிட்டு இருக்க? திரும்பவும் ரெண்டு பேரும் பிரச்சனை பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?” என்றவாறே கரண்டியை தூக்கிக் கொண்டு வந்தார் என் அன்னை.

 

“உன் பிள்ளைக்கு நிறைய கேர்ள் பிரெண்ட்ஸ் இருக்காங்களாம். அப்படின்னு  நான் சொன்னதை அவன் மறுக்கவேயில்ல.  எனக்கென்னமோ உன் பையன் ஏற்கனவே உனக்கு ஒரு மருமகளை பார்த்து வச்சிருப்பான்னு தோணுது! ஹ்ம்ம், அதெல்லாம் உங்க பிரெச்சனை, எனக்கெதுக்கு?” என்று லேசாக பற்றவைத்துவிட்டு அமைதியாக அங்கிருந்து நழுவினேன்.

 

அங்கு என் அம்மா அவனை விசாரிப்பதும் அவன் அதற்கு தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்து மறுப்பதும் தெரிந்தது. இங்கிருந்தே அவனைப் பார்த்து கண்ணடித்துவிட்டு என் அறைக்குச் சென்றேன்.

 

*****

 

மாலை சாண்டி வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்கையில், அபி என்னிடம் வந்து, “நாளைக்கு ஏதாவது பிளான் இருக்கா உனக்கு?” என்று வினவினான்.

 

“பொடிக் வைக்கணும்னு தான சொன்னேன். அதுக்குள்ள பெரிய ஆள் ஆகிட்டோமோ! நம்ம கிட்ட வந்து ஷெட்யூல் கேட்குறான்?” என்று மனதிற்குள் பேசிக் கொள்வது போல சத்தமாகவே பேசினேன்.

 

“ஹே, ரொம்ப ஓவரா பண்ணாத டி எருமை. சொல்லு எந்த பிளானும் இல்லல?” என்று வினவினான்.

 

“அதெல்லாம் ஒரு வேலையும் இல்ல அபி, எதுக்கு கேட்குற?”

 

“ரெஸ்டாரண்ட் சக்ஸஸானதுனால நாளைக்கு ஈவினிங் ஒரு சின்ன பார்ட்டி இருக்கு. நமக்கு க்லோஸ் ஆனவங்களை மட்டும் கூப்பிடப் போறேன். அதான் கேட்டேன்.” என்று அவன் கூறியதும், “டேய் அண்ணா… இதுக்கெல்லாம் என்னை கேட்கவே வேண்டாம்.” என்று நான் சொல்ல வருவதற்குள் இடைவெட்டி, “ஆமா, சோறு விஷயத்துல உன்னை கேட்க வேண்டாம்னு தான் நினைச்சேன். ஆனா, என்ன பண்றது, மேடம் தான் இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய பிசினஸ்-வுமன் ஆகிடுவீங்களே. அதான் ஒரு மரியாதைக்கு கேட்டேன்.” என்று என் காலை வாரினான்.

 

“ச்சு, மரியாதை எல்லாம் மனசுல இருந்தா போதும் டா அண்ணா!” என்று அந்த இடத்தை விட்டு ஓடினேன்.

 

*****

 

“ஹாய் தாமோ அங்கிள், எப்படி இருக்கீங்க?” என்றவாறே அவரின் வீட்டிற்குள் நான் நுழைய, “நீயே பாரு டா க்யூட்டி எப்படி இருக்கேன்னு.” என்று அவர் ஒரு முறை சுற்றினார்.

 

“ஒரு மாசம் ஃபாரின் போயிட்டு ஜாலியா வந்துருக்கீங்க போல!” என்று அவரைப் பார்த்து கண்ணடித்தேன்.

 

“க்கும்…” என்று சாண்டி அவளும் இருப்பதை உணர்த்த முயன்றாள்.

 

“யாருக்கோ நம்மள பார்த்து பொறாமை போல டா க்யூட்டி!” என்று அவர் கூற, நானோ அவருக்கு ஒரு ஹை-ஃபை அளித்துவிட்டு அங்கு அமைதியாக சென்று அமர்ந்தேன்.

 

“ஹலோ, என்ன ஓவரா கொஞ்சிட்டு இருக்கீங்க? அவரு ஃபர்ஸ்ட் எனக்கு அப்பா, அப்பறம் தான் உனக்கு அங்கிள்.” என்று சாண்டி கூறவும் நாங்கள் இருவரும் சிரித்துவிட்டோம்.

 

“சாண்டி பேபி, உனக்கு சரியா திட்டக்கூட வரல. அப்பறம் எதுக்கு வேஸ்ட்டா ட்ரை பண்ணிட்டு இருக்க?” என்று சிரித்தபடி நான் கூற, “போடி நந்தி!” என்று அவள் சிணுங்க, அவள் ‘நந்தி’ என்று கூறியதைக் கேட்டு நான் துரத்த என்று அந்த இடமே கலகலப்பாக மாறியது.

 

ஒரு வழியாக துரத்தி முடித்து, அவள் கொடுத்த சிற்றுண்டியை உண்டுவிட்டு தளர்வாக அமர்ந்தோம்.

 

“என்னடா க்யூட்டி பொடிக் ஆரம்பிக்க போறீங்களாமே. கங்கிராட்ஜுலேஷன்ஸ்! ரெண்டு பேரும் பெரிய லெவல்ல ஷைன் பண்ணனும்.” என்று எங்களை வாழ்த்தினார் தாமோ அங்கிள்.

 

“தேங்க்ஸ் அங்கிள், ஏதாவது டவுட்னா உங்கள தான் கேட்போம்.” என்று நான் கூற, “சுயர் டா க்யூட்டி. அதுக்காக தான நான் இருக்கேன்.” என்று சிரித்தார் அவர்.

 

“அப்பறம் அப்பா உங்க கிட்ட பேசணும்னு சொன்னாங்க அங்கிள்…” என்று நான் இழுக்க, “சாண்டி சொன்னா டா. கவலைப்படாத, மனுஷனை பேசிப் பேசியே கரைச்சுடுறேன்.” என்று கூறி சிரித்தார்.

 

“ஹாஹா, நீங்க அவரை ஒத்துக்க வச்சுடுவீங்கன்னு தெரியும் அங்கிள். நீங்க எப்போ ஃப்ரீ?” என்று விசாரித்தேன்.

 

“நாளைக்கு கூட ஃப்ரீ தான் டா.” என்று அவர் கூற, “அங்கிள், நான் மறந்தே போயிட்டேன். அபி அண்ணா ஆரம்பிச்ச ரெஸ்டாரன்ட் சக்ஸஸ்ஃபுல்லா போயிட்டு இருக்குறதுனால நாளைக்கு ஒரு சின்ன பார்ட்டி இருக்கு. அதுக்கு உங்களை அவனே இன்வைட் பண்றேன்னு சொன்னான். நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா நாளைக்கு வரணும்.” என்று கூறினேன்.

 

“சூப்பர் டா, அபிக்கும் நான் விஷ் பண்ணேன்னு சொல்லிடு. கண்டிப்பா நாளைக்கு நாங்க வரோம். அதுக்கு எதுக்கு தனியா இன்வைட் பண்ணனும். அதான் பெரிய மனுஷி நீங்களே கூப்பிட்டீங்களே!” என்று அவர் கூற, “அங்கிள்…” என்று நான் சிணுங்கினேன்.

 

“அபி கிட்ட சொல்லிடு இன்வைட் பண்ணலாம் வீட்டுக்கு வர வேண்டாம்.” என்று அவர் கூற, “சரி அங்கிள், அவன்கிட்ட நீங்க வீட்டுக்கு வர வேண்டாம்னு சொன்னீங்கன்னு சொல்லிடுறேன்.” என்று கூறி அவரை நோக்கி கண்ணடித்தேன்.

 

“அடிப்பாவி, ப்பா இவ ஒரு ஃபிராடு. அபி அண்ணா கிட்ட தப்பு தப்பா சொன்னாலும் சொல்லிடுவா. நீங்களே அவங்க கிட்ட பேசிடுங்க.” என்று வேகமாக சாண்டி கூறினாள்.

 

“ஓகே டா க்யூட்டி, அப்போ நாளைக்கு ஃப்ரீயா இருந்தா நாளைக்கே அப்பாகிட்ட பேசிடலாம். என்ன ஓகே வா?” என்று அவர் வினவ, “சூப்பர் அங்கிள்! வந்து ரொம்ப நேரம் ஆச்சு. நான் கிளம்புறேன் அங்கிள்.” என்று நான் அவரிடம் விடைபெற்றேன்.

 

“வா டி நானும் வரேன்.” என்று சாண்டியும் என்னுடன் நடந்தாள்.

 

“அப்பறம் நாளைக்கு என்ன டி ஸ்பெஷல்?” என்று சாண்டி கேட்டாள்.

 

“நாளைக்கு என்ன ஸ்பெஷல்?” புரியாமல் நான் விழிக்க, “அட லூசு… நாளைக்கு உன் மிஸ்டர். பெர்ஃபெக்ட்டும் தான அங்க இருப்பாரு.” என்று அவள் கூற, அப்போது தான் அதுவே எனக்கு தோன்றியது.

 

சில நாட்களுக்கு முன்னர் தான், சாண்டியிடம் ராகுலின் மேல் எனக்குள்ள ஈர்ப்பை பற்றியும், ஊட்டி சென்றது பற்றியும் கூறினேன். அதுவும், அவள் ராகுலை சைட்டடிப்பது பொறுக்காமல் தான்!

 

என் பதிலை அவள் எதிர்பார்த்திருப்பது புரிய, “ஆமா அதுகென்ன?” என்று நான் கூறினாலும் மனதின் ஓரம் உற்சாகம் உண்டானது என்னவோ உண்மை தான்.

 

அவளிடம் விடைபெற்று வீட்டிற்கு வந்து எப்போதும் போல என் அம்மாவை தொல்லை செய்து அவர் என்னை சமையலறையை விட்டு துரத்தியதும் என் அறைக்குள் புகுந்தேன்.

 

அப்போது தான் க்ரிஷிற்கு நடந்ததைப் பற்றி கூறவில்லை என்பதை உணர்ந்து முகநூலிற்குள் சென்றேன். என் நல்ல நேரம் க்ரிஷும் ஆன்லைனில் இருந்தான். அவனிடம் விஷயத்தைக் கூறியதும் அவன் சந்தோஷப்பட்டான். மேலும், சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கச் சென்றேன்.

 

கண்களை மூடிய போது சாண்டி கூறியது ஞாபகம் வந்தது. நாளை ராகுலை பார்க்கும் போது எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்ற நினைப்பிலேயே உறங்கிப் போனேன்.

 

*****

 

அடுத்த நாள் மாலை, நான் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தேன். அரை மணி நேரம் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த ப்ளாக் வெல்வெட் டாப்பும் கோபால்ட் ப்ளூ மாக்ஸி ஸ்கர்ட்டும் எனக்கு கச்சிதமாக பொருந்தியது. அதற்கேற்ற காதணிகளையும் கழுத்தணியையும் அணிந்து லேசாக மேக்-அப் போட்டு என்னை கண்ணாடியில் பார்த்தேன். 

 

‘இப்படி பார்த்து பார்த்து அலங்காரம் பண்ணிட்டு போற, அங்க அவன் உன்னை கண்டுக்கலேனா என்ன பண்ணுவ?’ என்று என் மனச்சாட்சி என்னை கிண்டல் செய்தது.

 

‘நான் ஒன்னும் அவனுக்காக மேக்-அப் போடலையே. எனக்கா தோணுச்சு அதான் போட்டேன்!’ கேட்பது என் மனசாட்சி என்று தெரிந்தாலும் சப்பை கட்டு கட்டினேன்.

 

‘அடேங்கப்பா! நீ யாருன்னு எனக்கு தெரியும், நான் யாருன்னு உனக்கு தெரியும், நம்ம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியும்! அப்பறம் எதுக்கு இப்படி பீலா உட்டுட்டு இருக்க?’ என்று அதற்கும் கேலி செய்ய, ‘ஷ், ரொம்ப பேசுற போ உள்ள!’ என்று அதனை தலையில் தட்டி வெளியே செல்ல எத்தனித்தேன்.

 

அப்போது என் அம்மா, “இந்தா டி பூ வச்சுக்கோ.” என்று கூறியதும் என் முகம் அஷ்டகோணலாய் சுருங்கியது.

 

“எதுக்கு டி இப்படி முழிச்சுட்டு இருக்க?” என்று அவர் வினவ, நான் ஒன்றும் கூறாமல் அவர் கையில் இருந்த பூவையும் என் உடையையும் மாறி மாறிப் பார்த்தேன்.

 

“எனக்கு வேற வேலை இருக்கு டி. இந்தா பிடி இதை!” என்று அவர் பூவை என் கையில் கொடுக்க, “அம்…ம்…மா… இந்த ட்ரெஸுக்கு யாராவது பூ வைப்பங்களா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டேன்.

 

“பூவை வேண்டாம்னு சொல்லக் கூடாது டி.” என்று அவர் கூற, “அப்போ நான் இப்படி ட்ரெஸ் பண்றப்போலாம் நீ பூ வேணுமான்னு கேட்கக் கூடாது ம்மா.” என்று கூறி அவரைப் பார்த்து கண்ணடித்தேன்.

 

“தப்பான நேரத்துக்கு என்ட்ரி கொடுத்துட்டேனோ?” என்றவாறே வந்தாள் ப்ரியா.

 

அவளோ அழகான நவாப்பழ கலரில் க்ரேப் சில்க்கை கட்டியிருந்தாள். அதற்கேற்ற நகைகளோடு அழகாக இருந்தாள். 

 

“அந்த பொண்ணு எவ்ளோ லக்ஷணமா சேலைல வந்திருக்கா. நம்ம வீட்டு ஃபங்க்ஷனுக்கு நீ இப்படி ட்ரெஸ் பண்ணிருக்க!” என்று என்னை திட்டிவிட்டு, “இந்தா மா நீயாவது இந்த பூவை வச்சுக்கோ.” என்று ப்ரியாவிடம் கொடுத்தார்.

 

‘நல்ல வேளை ப்ரியா வந்து என்ன காப்பாத்துனா, இல்லனா  இந்த பூ வேஸ்ட்டாகிடுச்சுன்னு அதுக்கு ஒரு முறை அம்மா கிட்ட திட்டு வாங்கியிருப்பேன்!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

 

அங்கு என் அம்மா ப்ரியாவின் கன்னத்தை வழித்து, “அழகா இருக்க டா ப்ரியா!” என்று கொஞ்சிக் கொண்டிருக்க அவளோ லேசாக வெட்கப்பட்டாள்.

 

“க்கும், போதும் போதும். அங்க உங்க ஹஸ்பண்ட் கிளம்பிட்டாரான்னு போய் பாருங்க.” என்று என் அம்மாவை அனுப்பி வைத்துவிட்டு அவளிடம் திரும்பினேன்.

 

அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட அவள், “எதுக்கு டி இப்படி பார்த்துட்டு இருக்க?” என்றாள் இன்னும் வெட்கத்தோடு.

 

“ம்ம்ம் சும்மா தான் பார்த்தேன். வா நாம முன்னாடி போகலாம்.” என்று அவளிடம் கூறிவிட்டு வெளியே என் டியோவை எடுக்கச் சென்றேன்.

 

டியோவில் அவள் ஏறியதும், வெளியிலிருந்தே என் அம்மாவிடம் கிளம்புவதாக கத்திவிட்டு வண்டியைக் கிளப்பினேன். ரெஸ்டாரண்ட்டிற்கு வந்ததும் வண்டியின் சைட் மிரர்ரைப் பார்த்து என் முடியை சரி செய்தேன்.

 

“ஹே, எவ்ளோ நேரம் டி இங்கயே நின்னுட்டு இருப்ப?” என்று ப்ரியா வினவ, “உனக்கு அவ்ளோ அவசரம்னா நீ முன்னாடி போயேன்.”என்றேன் நான்.

 

அவள் ஒரு மாதிரி விழிக்க நான் அவளை நமுட்டுச் சிரிப்போடு கடந்து சென்றேன். உள்ளே பார்ட்டிக்காக அனைத்தும் தயாராகிக் கொண்டிருந்தது. நான் அபியைத் தேடிக் கொண்டிருந்தேன். நான் மட்டும் இல்லை என்பதும் எனக்கு தெரித்தே இருந்தது!

 

அப்போது என் மனசாட்சி, ‘அபியை மட்டுமா தேடுற?’ என்று உசுப்பேற்றியது.

 

‘நீ எதுக்கு இப்போ தேவையில்லாம ஆஜராகுற?’ என்று அதை அனுப்பிவிட்டு மீண்டும் நோட்டமிட்டேன்.

 

நாங்கள் தேடிய யாரும் எங்கள் கண்களுக்கு சிக்காததால், நான் அங்கு நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்திருந்தேன். ப்ரியாவிற்கு பேஸ்ட்ரியில் ஆர்வம் அதிகம் இருந்ததால், அங்கு கேக் தயாராகிக் கொண்டிருப்பதைப் பார்க்கச் சென்றுவிட்டாள். 

 

நான் அங்கிருந்த அனைவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு குட்டி அவளின் அம்மாவின் பேச்சிற்கு அடங்காமல் அங்கும் இங்கும் தத்தி தத்தி அழகாக நடபயின்று கொண்டிருந்தது.

 

அந்த அழகான காட்சியை மெல்லிய சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தேன். அந்த குட்டி என்னைக் கடந்து செல்லும்போது அதன் பொக்கை வாயைத் திறந்து சிரித்தது. நானும் சன்னமாக சிரித்தேன்.

 

என் அலைபேசியின் ஒலியில் சிந்தை கலைந்து கவனத்தை அலைபேசிக்கு மாற்றினேன். சாண்டி தான் அழைத்திருந்தாள். அவளிடம் சீக்கிரம் வருமாறு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தேன்.

 

அப்போது அந்த குட்டியின் ஞாபகம் வர நான் திரும்பிப் பார்த்தபோது அவளோ தடுமாறி கீழே விழப்பார்த்தாள். அவள் கீழே விழப்போகும் இடத்தில் மேசையின் கூர்மையான கால்பகுதி இருந்ததால் அதில் இடித்துக் கொள்வாளென விரைந்து அவளை தாங்கச் சென்றேன்.

 

ஆனால், அதற்குள் அவள் விழுந்துவிட்டாள். நல்ல வேலையாக அவள் அந்த மேசையில் இடிக்கவில்லை.

 

அவளை தூக்க குனிந்தபோது எனக்கு முன்னாடியே இரு கரங்கள் அந்த குட்டியை தூக்கியிருந்தன. அந்த கரங்களுக்கு சொந்தக்காரன் யாரென நிமிர்ந்து பார்த்தபோது, அங்கு ராகுல் இருப்பதைக் கண்டு அதிர்ந்தேன். இனிமையான அதிர்ச்சி தான்!

 

ராகுல் ஹாஃப் வைட் ஷர்ட்டும் அதற்கு மேல் மெரூன் கலர் நேரு ஜாக்கெட்டும் கிரீம் பேண்ட்டும் அணிந்து அசத்தலாக இருந்தான். எப்போதும் போல் அவனின் ஒமேகா கடிகாரமும் அர்மானி குலேர்ஸும் அவனை அலங்கரித்தன. அவனின் தோற்றத்தில் நான் வாயடைத்து நின்றது என்னவோ உண்மை தான்!

 

என் கண்களை அவனிடமிருந்து திருப்பவே மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் அவனோ என்னை சிறிதும் கண்டுகொள்ளாமல் அந்த குட்டியை சமாதானப் படுத்துவதிலேயே குறியாக இருந்தான். சிறிது நேரத்திலேயே அந்த குட்டியும் அழகாக சிரித்தது. அப்போது அந்த குட்டியின் அம்மா வந்து நன்றி கூறி அந்த குட்டியை வாங்கிச் சென்றார்.

 

என்னை தாண்டும்போது அந்த குட்டி என்னை பார்த்துச் சிரிக்க, நானும் பதிலுக்கு சிரித்து விட்டு திரும்பிய போது ராகுல் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அவன் சாதாரணமாக சிரித்தாலும் எனக்கு என்னவோ அவன் கிண்டலாக சிரிப்பது போல் தோன்றியது.

 

“யாரை தேடிட்டு இருந்த?” என்று என்னிடம் கேட்டான்.

 

‘அச்சோ முன்னாடியே என்னை பார்த்துட்டானோ! அவனை தேடினதை கண்டுபிடிச்சிருப்பானோ? இப்போ என்ன சொல்லி சமாளிக்க?’ என்று நான் மனதிற்குள்ளே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிரும்போது என் குழப்பமான பாவனையை பார்த்து அவன் மீண்டும், “உன் அண்ணா கிச்சன்ல இருக்கான்.” என்று கூறினான்.

 

‘ச்சே, இது ஏன் எனக்கு தோணல!’  என்று நினைத்தவாறே, “தேங்க்ஸ்! அது வந்து… நான் அபியை தான் தேடிட்டு இருந்தேன்.” என்று இளித்து சமாளித்தபோது, அவன் என் நன்றியை ஏற்றுக் கொள்வது போல தலையசைத்தான்.

 

ஆனால், அவன் உதட்டோரம் சிரிப்பில் வளைவதைக் கண்ட நான் யோசனையோடு அவனைப் பார்க்கும்போது என் அருகில் அரவம் உணர்ந்து நான் திரும்பிப் பார்த்தேன்.

 

அங்கு சாண்டி என்னையும் ராகுலையும் அவளின் குறும்பு நிறைந்த கண்களால் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் ஏதாவது உளறி என் மானத்தை வாங்கி விடுவாள் என்று உணர்ந்து அவளை அங்கிருந்து அப்புறபடுத்துவதற்கு முயன்றேன். 

 

ஆனால், அதற்குள் அவள் அவனிடம் சென்று, “ஹாய் நான் சாண்டி. நந்தி… ஸ்ஸ்ஸ்… நதியோட பிரெண்ட்!” என்றாள் என்னைப் பார்த்து கண்ணடித்தவாறே. அவள் ‘நந்தி’ என்று சொல்வதைக் கேட்டு என் பிபி தாறுமாறாக எகிறியது. ராகுலோ இன்னும் சிரித்துக் கொண்டிருந்தான். 

 

சாண்டி என்னிடம், “உன்னை உங்க அம்மா தேடிட்டு இருந்தாங்க. நீ அவங்களை பாரு. நான் இங்க சீனியர் கூட கொஞ்சம் பேசிட்டு இருக்கேன்.” என்று விடாமல் என்னை சீண்டிக் கொண்டிருந்தாள். 

 

‘என்ன இன்னும் அவன்கிட்ட பேசப் போறியா? இப்படியே உன்னை விட்டா என்னை ஃபுல்லா டேமேஜ் பண்ணிடுவ. ஃபர்ஸ்ட் உன்னை இந்த இடத்தை விட்டு கூட்டிட்டு போகணும்.’ என்று மைண்ட்வாய்ஸில் திட்டம் தீட்டிய நான், “எங்க அம்மா உன்னை தான் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. அதனால நீயும் என் கூட வா.” என்று அவளைக் கையோடு அழைத்து(இழுத்து) சென்றேன்.

 

அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் சாண்டி சிரித்தாள். “ஏன் டி லூசு மாதிரி சிரிச்சுட்டு  இருக்க?”என்று எரிச்சலாக நான் வினவ, “ஹாஹா, உன் பொறாமை பார்த்ததும் சிப்பு வந்துடுச்சு… சிப்பு… ஹாஹா.” என்று விடாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

“எனக்கு ஒன்னும் பொறாமை இல்லையே.” என்று வெளியில் சொன்னாலும் ‘ஒருவேளை அப்படியும் இருக்குமோ!’ என்று எனக்குள் யோசித்துக் கொண்டிருந்தேன்.

 

“ஆஹான், நம்பியாச்சு நம்பியாச்சு.” என்று கூறியவள் மேலும் சிரித்தாள்.

 

இப்படி பேசிக் கொண்டே சமையலறையைக் கடக்கும்போது அங்கிருந்து ப்ரியா வேகமாக  வெளியில் செல்வதை பார்த்தேன். நான் அவளை  அழைத்தபோதும் அவள் திரும்பி பார்க்காமல் வேகமாக ரெஸ்ட் ரூம்மிற்குள் நுழைந்தாள்.

 

நானும் சாண்டியும் ஒருவரை ஒருவர் புரியாத பாவனையோடு பார்த்துக் கொண்டோம். பின்பு சமையலறையில் நுழைந்து பார்த்தபோது அங்கு அபி தீவிரமாக கேக்கை அலங்கரித்துக் கொண்டிருந்தான். அவன் கை கேக்கை அலங்கரித்தாலும் மனமோ இங்கில்லை என்பது எனக்கு புரிந்தது.

 

அபி எப்போதும் எந்த விஷயத்திற்காகவும் இப்படி குழம்பிக் கொண்டிருக்கமாட்டான். ஆனால், அவன் இப்போது இப்படி குழம்பி இருப்பதும் ப்ரியா இவ்விடத்தை விட்டு வேகமாக வெளியேறியதும் எனக்கு எதையோ உணர்த்தியது.

 

சாண்டி அபியிடம்  சென்று, “ஹாய் அபி அண்ணா.” என்று கூறினாள்.  அதைக் கேட்டதும் தான் அவன் நிகழ்வுக்கு வந்தான்.

 

“ஹே, சந்தி நீ எப்போ வந்த?” என்று அவன் வினவ, “ப்ச் அண்ணா, எப்போ பார்த்தாலும் சந்தின்னு கூப்பிட்டுட்டு இருக்கீங்க.” என்று அவள் சிணுங்க, “நீ மட்டும் என்னை நந்தின்னு கூப்பிடுற. அது மாதிரி தான் நாங்க உன்னை சந்தின்னு கூப்பிடுறோம்.” என்று அபிக்கு ஒரு ஹை-ஃபை கொடுத்தேன். சாண்டியை கிண்டல் செய்வதற்காக மட்டும் நானும் அபியும் ஒரே கட்சியாகி விடுவோம்.

 

மேலும் மூவரும் பேசிக்கொண்டே அந்த ரெட் வெல்வெட் கேக்கை செய்து முடித்தோம். விரிவாக கூற வேண்டுமென்றால், அபி ஐசிங் செய்ய நாங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்!

 

இப்படி அரட்டையடித்தவாறே பார்ட்டிக்கான எல்லா ஆயத்த வேலைகளையும் முடித்தோம். நேரம் ஆக ஆக என் அப்பாவின் பொறுமை குறைந்து அவர் அனத்த ஆரம்பித்துவிட்டார். அபி அண்ணாவோ தாமோ அங்கிள் வரவிற்காக காத்திருந்தான்.

 

சாண்டி கூட பார்ட்டியை ஆரம்பிக்குமாறு கூறினாள். ஆனால், அபியோ அதற்கு மறுத்துவிட்டான்.

 

“எனக்கு என்னோட கரியர்ல ரொம்ப சப்போர்ட்டிங்கா இருந்த ரெண்டு பேருல ஒருத்தர் தாமோ அங்கிள். அவர விட்டுட்டு இந்த பார்ட்டியை தொடங்குறது எனக்கு சரியா படல.” என்று கூறிவிட்டான்.

 

அப்போதும் சாண்டி சும்மா இருக்காமல், “அப்போ அந்த இன்னொருத்தர் யாரு அபி அண்ணா?” என்றாள் என்னைப் பார்த்துக் கொண்டே.

 

நானோ அவர்களை கண்டுகொள்ளாமல் என் அலைபேசியில் சற்று முன்பு எடுத்த செல்ஃபிக்களை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், என் கவனம் முழுவதும் அவர்களின் பேச்சிலேயே இருந்தது.

 

“உன் சீனியர் ராகுல் தான்.” என்று அபி கூற, “ஓஹ், நீங்களும் சீனியரும் இப்போ திக் பிரெண்ட்ஸாமே. கொஞ்சம் என்னையும் அவங்களுக்கு இண்ட்ரோ கொடுங்க அபி அண்ணா.” என்றாள் சாண்டி கேலிக் குரலில்.

 

அவளை பார்க்காமலே கூறுவேன், அவள் இதை சொல்லும்போது என்னைப் பார்த்துக் கொண்டே தான் கூறியிருப்பாள் என்று.

 

இதற்கு மேல் விட்டால் அவளே அபியிடம் என் காதலை போட்டுக் கொடுத்து விடுவாள் என்று பயந்து அபியிடம், “அபி ரொம்ப லேட்டாகப் போகுது. நீ கேக்லாம் எடுத்து வச்சு எல்லாம் ரெடியாகிடுச்சான்னு பாரு. நாங்க ரெண்டு பேரும் அங்கிள் வந்துட்டாரான்னு பார்த்துட்டு வரோம்.” என்று மறுபடியும் அவளை இழுத்துக் கொண்டு வெளியே சென்றேன்.

 

“உன் வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா? இப்போ எதுக்கு அவன்கிட்ட  ராகுல் பத்தி சொன்ன? அவனுக்கு ஏதாவது டவுட் வந்துடுச்சுனா….” என்று நான் இழுக்க, “வரணும்னு தான அந்த பேச்சை ஆரம்பிச்சது.” என்று அவள் முணுமுணுக்க நான் அவளை முறைத்தேன்.

 

“எதுக்கு இப்போ முறைக்குற? ஒன்னு நீ லவ் பண்ணுற விஷயத்தை ராகுல் கிட்ட சொல்லணும். அப்படி சொல்றதுக்கு உனக்கு தயக்கமா இருந்துச்சுனா அபி அண்ணா கிட்ட சொல்லணும். அபி அண்ணா உன்கூட பிரின்ட்லியா தான பேசுறாங்க. அண்ட் இதுல உனக்கு சாதகமான விஷயம் அவங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் வேற. ராகுலும் பக்கா ஜென்டில் மேன். அப்பறம் எதுக்கு தயங்குற? லவ் பண்ணுறதா இருந்தா உடனே சம்மந்தப்பட்டவங்க கிட்ட சொல்லிடனும். இல்லனா அதுக்கு அப்பறம் நீதான் ஃபீல் பண்ணுவ!” என்றாள் ப்ரியா.

 

இவையெல்லாம் எனக்கும் மனதில் தோன்றினாலும் ஏதோ ஒன்று நான் அவனை நோக்கி அடியெடுத்து வைப்பதற்குத் தடையாக இருந்தது. 

 

அதற்கான காரணத்தை யோசிக்கும்போது எனக்கு தோன்றியது அவன் என்னை முதலில் கண்டுக்கொள்ளாமல் தவிர்த்து, என்னை தவிக்கவிட்ட நிகழ்வுகள் தான்!

 

அந்த நிகழ்வுகள் ஏற்படுத்திய தாக்கத்தால் அவனிடம் என் காதலை சொல்வதற்கு எனக்கு பயமாக இருந்தது.

 

ஆம் பயமே! நான் என் காதலை சொல்லி அதை அவன் மறுத்துவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால், அதை கிண்டல் செய்வது போல் ஏதாவது பேசினாலோ, என்னை தவிர்த்தது போல் அதை கண்டுகொள்ளாவிட்டாலோ என்னால் தாங்க முடியாது. அதற்காகவே அவனிடம் என் காதலை பகிர்வதை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தேன்.

 

ஆனால், இக்காரணங்களை எல்லாம் சாண்டியிடம் நான் கூறவில்லை. இதற்கு முன்னால் என்னை தவிர்த்ததையும் நான் கூறவில்லை. என்னவனை நானே எப்படி மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்க முடியும்!

 

“ஹே நந்தி, என்னடி யோசிச்சுட்டு இருக்க?” என்று சாண்டி என்னை உலுக்கியதும் தான் நிகழ்விற்கு வந்தேன்.

 

“என்னை நந்தின்னு கூப்பிடாதன்னு எத்தனை முறை சொல்றது?” என்று அவளிடம் சண்டையிடும் வேளையில், “இன்னும் ரெண்டு பேரும் சண்டை போடுறதை நிறுத்தலையா?” என்ற குரலில் இருவரும் எங்கள் சண்டையை நிறுத்திவிட்டு குரல் வந்த திசையை நோக்கினோம்.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
15
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்