Loading

அத்தியாயம் 9

ரிசார்ட்டில் இருந்து வீட்டிற்கு வந்தவள், தாய் தந்தை எழும் முன் நைட்டியை மாற்றிக் கொண்டு படுத்து விட்டாள்.

அலைபேசிக்கு சார்ஜ் போட விழைந்தவள், அதன்பிறகே அதில் ரிஷான் இரவு மிஸ்ட் கால் கொடுத்ததையே கண்டாள்.

இதில் குறுஞ்செய்திகளாக முத்த ஸ்மைலிகள் வேறு.

“இன்னும் ஒரு நாள்ல நீ எனக்குப் பாதி பொண்டாட்டி ஆகிடுவ அகா!” குதூகலம் நிறைந்த தொனியில் அனுப்பி இருந்தான்.

“என்னடி, இன்னும் ஆன்லைன் வரலை நீ…”

“அகா?”

“தூங்கிட்டியா? லவ்வ்வ்வ் யூ! அகா, ஒரு கிஸ் குடேன் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…”

‘இவன் என்ன, நேத்துப் புதுசா ஓவர் டோஸ்ல ரொமான்ஸை அள்ளி விட்டிருக்கான். நான் இருக்குற நிலைமைக்கு கிஸ் ஒரு கேடு…’ என எண்ணும்போதே,

“ஒன் நைட் ஸ்டேக்கு ஓகே பர…” எனத் தன் முன்னே நின்ற ஆடவனின் வதனமே தோன்றியது.

‘வாயிலயே குத்தணும் அவனை…’ எனக் கடுப்படித்தவள்,

“டேய்… செம்ம டயர்ட் டா, நைட்டு சரியா தூங்கவே இல்ல. நான் தூங்கி எந்திரிச்சுப் பேசுறேன். நீ போய் தனியா லவ் பண்ணு.” என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு உறங்கியே விட்டாள்.

ரிஷான் தான், எழுந்ததும் அக்குறுஞ்செய்தியைக் கண்டு புருவம் சுருக்கினான்.

“நைட்டு தூங்கவும் இல்ல, ஆன்லைன்லயும் இல்ல அப்ப எங்கடி போன?”

அக்கேள்விக்குப் பதில் அனுப்பும் நிலையில் அவள் இல்லை. மதியமே உறங்கி எழுந்தவளுக்கு, வீட்டு வேலையே தலைக்கு மேல் இருந்தது.

அடுத்த நாளைக்குத் தேவையான பொருள்கள், ஏற்பாடுகள் என அவளே முன்னின்று பார்க்க வேண்டியதாகப் போயிற்று.

“இதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ அழகா பேஷியல் பண்ணிட்டு ரெடி ஆகிடு!” என்று கூறிய ரூஹியை நினைத்துக் கவலை கொண்டவள், இரவு வரையிலும் அலைந்து விட்டு மீண்டும் உறக்கத்தில் புகுந்து கொண்டாள்.

மறுநாள், ஏனோ தானோவென பேஸ்பேக் மட்டுமாகப் போட்டுக் கொண்டவள்,

“அம்மா, காலைல சாப்பாடு வாங்கிக்கலாம்… எதுவும் செய்யாதீங்க!” எனக் கட்டளையிட்டுத் தாய்க்கும் வேலையைக் குறைத்தாள்.

“சரி அகா, நீ புடவையைக் கட்டு. இப்ப இருந்து பின் குத்த ஆரம்பிச்சா தான் உனக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்கும்.” என்ற தாயின் கூற்றில்,

“எனக்கு சேரி தான் கம்ஃபர்ட்டபிள்!” என இதழ் வளைத்த அந்த மலையாளியின் கூற்றே நினைவு வர, பல்லைக் கடித்தாள்.

“உனக்கு கம்ஃபர்ட்டபிளுக்கு நான் ஏன்டா சேரி கட்டணும்.” சற்றே வெளிப்படையாகக் கேட்டு விட, “என்ன பேசுற புரியல.” என்றார் வசந்தி.

“அ..அது… ஒன்னும் இல்லமா. நான் போய் மேக்கப் ஸ்டார்ட் பண்றேன்.” என்று அறைக்கு ஓடி விட்டாள்.

மணி பன்னிரண்டைத் தாண்டி இருக்க, இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவதாகக் குறுஞ்செய்தி அனுப்பினான் ரிஷான்.

அதற்கு ஒரு தம்ஸ்அப் ஸ்மைலியைப் போட்டு விட்டவளுக்கு இன்னும் மதிய உணவு வீடு வந்து சேரவில்லை என்ற கவலை.

உணவகத்திற்கு அழைத்தபடியே இருந்தாள். இங்கோ ரிஷான் தான் முகம் வாடி இருந்தான்.

காரில் வந்ததால் சாலையில் கவனம் இருந்தாலும், அவள் சரியாகப் பேசாததில் அவனுக்குச் சிறு உறுத்தல்.

‘எத்தனை வேலை இருந்தாலும் பேசி விடுவாளே!’ அப்போதெல்லாம் அவளது வேலையைப் பாதியாகக் குறைக்க ரூஹி அவளுக்காக அனைத்தும் செய்து விடுவாள் என்ற நிதர்சனம் அவனுக்கு அப்போதைக்கு உறைக்கவில்லை.

“அகா, போனை வச்சுட்டுச் சீக்கிரம் புடவையைக் கட்டு.”

“இன்னும் லன்ச் வரலையேமா… ரிஷு வேற அவங்க அத்தை மாமா ரொம்ப சம்பிரதாயம் பார்ப்பாங்கன்னு சொன்னான்…” என வருத்தமாகக் கூறிட,

“அகாம்மா, நான் போய் ஹோட்டல்ல நேரா பார்த்துட்டு வரேன்.” என பாஸ்கர் கிளம்பும்போதே சாப்பாடு வந்திருந்தது.

“ஹப்பாடா!” எனப் பெருமூச்சு விட்டவள், மீண்டும் கிளம்பத் தொடங்கினாள்.

ரிஷான் மீண்டும், “சேரி கட்டிட்டா போட்டோ அனுப்பு!” எனக் குறுஞ்செய்தி அனுப்பி இருக்க, அதனைத் திறந்து பார்த்தவள் மெலிதாய் புன்னகைக்கும் போதே வசந்தி வந்து விட்டார்.

அவன் வேறு முத்த ஸ்மைலிகளை ஏற்கெனவே அனுப்பி இருந்ததால், அதனை வசந்தி பார்த்தால் சங்கடமாக இருக்குமென்று சட்டென அலைபேசியை லாக் செய்தவளிடம்,

“அகா, இந்த ஆரத்தையும் போட்டுக்கோ… என் மாமியார் எனக்குக் குடுத்தது…” என்று நெஞ்சைத் தீண்டிய மாங்காய் மாலையைப் போட்டு விட்டார்.

“ஐயோ, அழகா இருக்கு உனக்கு…” என்று மகளை நெட்டி முறிக்க,

“சரி சரி கண்ணு வைக்காதீங்க. வெட்கம் கமிங்…” எனச் சிவந்தாள்.

அரக்கில் நீலம் தோய்த்த பட்டுப்புடவை, அவளது மேனியில் கச்சிதமாக ஒட்டிக்கொண்டது.

சடை பின்னி தலை மறைக்கப் பூவும் வைத்து விட்டார் வசந்தி.

மீண்டும் அலைபேசியை எடுக்கும்போதே ரிஷான் வீட்டினர் வரும் அரவம் கேட்க, வசந்தியும் பாஸ்கரும் அவர்களை வரவேற்றனர். கொசுறாய் அக்கம் பக்கத்தினரும் இருந்தனர்.

ரிஷானின் தந்தை ராகவன், “எப்படி இருக்கீங்க சம்பந்தி… இவர் என் மச்சான், இவங்க என் அக்கா…” என்று ரேவதியையும் தனசேகரையும் அறிமுகம் செய்தார்.

“வணக்கங்க!” என அவர்களும் புன்னகை முகமாய் அமர்ந்திருந்தனர்.

“ஏற்கெனவே லேட்டாகிடுச்சு… நல்ல நேரம் போறதுக்குள்ள தட்டை மாத்திடலாமா சம்பந்திமா?” ரிஷானின் தாய் மாதவி கேட்க,

“இன்னும் உன் மருமகளைக் கண்ணுலயே காட்டலையே…” எனக் குறைப்பட்டார் ரேவதி.

“அகா எங்க?” அவர் கேட்டதும், “நான் கூட்டிட்டு வரேன்.” என வசந்தி உள்ளே சென்றார்.

“நான் கூப்பிட்டா தான் நீ வெளில வரணும். ரிஷு வந்ததும் எப்பவும் போல, ‘ஹாய் டா எருமை மாடு’ன்னு வந்து நிக்காத.” என்று கண்டித்து இருந்தார் வசந்தி.

அதனாலேயே அடக்க ஒடுக்கமாக அறையில் அமர்ந்திருந்தாள்.

வசந்தி அவளை அழைத்துக் கொண்டு வரவேற்பறைக்கு வர, அவள் அனைவருக்கும் வணக்கம் வைத்தாள்.

ரிஷான் தான் அவளைக் கண்டு விழி விரித்தான்.

“என்னடி, இன்னைக்குப் பொண்ணு மாதிரி இருக்க…”

“டேய்ய்ய்…” என அவள் முறைக்கத் தொடங்க, வசந்தி அவள் கையைக் கிள்ளினார்.

ரேவதி சற்றே முகம் மாறிட, “சரிம்மா நீ உள்ள போ!” என்று அறைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் பெரியவர்கள் விவரங்களைப் பரிமாறி விட்டுப் பின், திருமணத் தேதியையும் கையோடு குறித்து விடலாம் என்றதில், மாதவியும் ரேவதியும் எழுந்தனர். அகமொழியிடம் பேசும் பொருட்டு.

அறைக்குள் விரல் நகத்தை ஆராய்ச்சி செய்தபடி அமர்ந்திருந்த அகமொழி, இவர்களைக் கண்டதும் புன்னகைத்தபடி எழுந்தாள்.

“என்னமா… கடைசியா ரெண்டு வருஷம் முன்னாடி தீபாவளிக்கு வந்தது எங்க வீட்டுக்கு. அடுத்து மருமகளா தான் வரப்போற…” எனக் கிண்டல் செய்தார் மாதவி.

அதில் வெட்கம் கொண்டு சிரித்தவளிடம், ரேவதி “நீயும் அவனும் ஒண்ணா பிசினஸ் பண்றதா சொன்னாளே…” என வினவ,

“ம்ம் ஆமா ஆண்ட்டி… நாங்க காலேஜ் ப்ரெண்ட்ஸ். நான் ரிஷு ரூஹி மூணு பேரும் தான் பண்றோம்.”

“ஒண்ணா பண்றீங்கன்னா, பார்ட்னர்ஸ் மாதிரியா?”

“ஆமா, அப்பாவோட இடம். அங்க நான் கிளாம்பிங் போட பிளான் பண்ணேன். அவங்களும் இன்வெஸ்ட் பண்ணுனாங்க.”

“அப்போ ஷேர் எல்லாம் எப்படி?”

அவளோ அதற்கும் உற்சாகமாகவே பதில் அளித்தாள்.

“ஒரு மாசம் வர்ற புக்கிங் லாபத்துல, நாலு பங்கா போட்டுப்போம். அப்பாவோட இடத்துல தான் போடுறோம். அதுனால அவருக்கு வாடகை மாதிரி ஒரு அமவுண்ட் நான் கொடுத்துடுவேன்.”

“உன் அப்பாவோட இடம் உன்னோடது தான. அதுக்கு உன் பேர்ல வாங்கிட்டுப் பண்ணலாமே.” அவரும் சிரித்தபடியே விவரம் கேட்டார்.

“என் இடம் மாதிரி தான். ஆனா அது அவங்க இருக்குறவரை அவங்க பேர்ல தான் இருக்கும்.” என அவளும் சிரித்தபடி அழுத்தம் திருத்தமாகக் கூறி விட,

“அதுசரி!” எனத் தலையாட்டிக் கொண்டார்.

“அண்ணி, வந்த விஷயத்தைப் பேசலாமே… அகா, கல்யாணத் தேதி குறிக்கனும்.” என்று மாதவி நிறுத்த, “ம்ம் குறிங்க!” என அவளும் கூறினாள்.

“அது இல்ல… நீ எப்போ தலைக்குக் குளிச்ச. தேதி சரியா சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி பண்ணலாம். அடுத்து ஆடி மாசம். அதுக்குள்ள வச்சுடலாமேன்னு உங்க மாமா நினைக்கிறாரு.”

“ஆடி மாசத்துக்கு இன்னும் பதினஞ்சு நாள் தான இருக்கு ஆண்ட்டி?”

“ஆமா, சிம்பிளா பண்ணுனா போதும்னு ரிஷு சொன்னான். அதுனால முன்னாடி வச்சுடலாம்னு சொல்றாங்க.”

“அப்பா ஓகேன்னு சொன்னா ஓகே தான் ஆண்ட்டி. ஆனா எனக்குத் தேதி கரெக்ட்டா தெரியாதே…” என்றாள் தலையைச் சொறிந்து.

“ஏன்?” ரேவதி வினவ,

“எனக்கு பீரியட்ஸ் கொஞ்சம் முன்னப் பின்ன தான் வரும். இப்பவே வந்து 20 நாளைக்கு மேல ஆகிடுச்சு. பதினஞ்சு நாளைக்குள்ள வந்தாலும் வரலாம். இல்ல தள்ளியும் வரலாம். சில நேரம் 45 – 50 டேஸ் கூட ஆகுமே.” அவள் இயல்பாகவே தான் கூறினாள்.

“ஓ… ஆனா தேதி கரெக்டா தெரியாம எப்படி அகா? கல்யாணத்துக்கு அப்புறமா நிறைய பார்மாலிட்டி இருக்கும். கோவிலுக்குப் போகணும்.” என முணுமுணுத்தவர்,

“சரி, மூணு நாளைக்கு தான அட்ஜஸ்ட் பண்ணலாம்.” என்றதில் ரேவதி முறைத்தார்.

அவரை இன்னும் கடுப்பேற்றும் விதமாக, “ஆனா எனக்கு மூணு நாள் மட்டும்னு கரெக்ட்டா சொல்ல முடியாது ஆண்ட்டி. 5 டு 7 டேஸ் கூட ஆகும். ஏழாவது நாளைக்குத் தான் தலைக்குக் குளிப்பேன். சில நேரம் எல்லாம் முடிஞ்சு ஒன்பதாவது நாள் கூட குளிப்பேன்.” என்றதில்,

ரேவதி தான் நாத்தனாரை முறைத்தார்.

“இதைக் கூட ஒழுங்கா விசாரிக்க மாட்டீங்களா அண்ணி…” என்றதும் அகமொழி விழித்தாள்.

“இல்ல இல்ல ப்ராப்ளம் எதுவும் இல்ல ஆண்ட்டி… டாக்டர் செக் பண்ணிட்டு மெடிக்கல் இஸ்யூ எதுவும் இல்ல. மேரேஜ் ஆனதும் லைப் ஸ்டைல் சேஞ்ச் ஆகும்போது இதுவும் சேஞ்ச் ஆகும்னு சொன்னாங்க. பெயின், ப்ளீடிங் எல்லாம் அதிகம் இருக்காது. ஆனாலும் எனக்கு நாள் அதிகம் தேவைப்படும்… தேதியும் டியூரேஷனும் மட்டும் எக்ஸ்சாக்டா சொல்ல முடியாது அவ்ளோ தான்.” அவர்களைப் பயமுறுத்தக் கூடாதென்றே இத்தனை விளக்கமும் கொடுத்தாள்.

ரேவதி அதிருப்தியாகத் தலையாட்டி விட்டு வெளியில் சென்றார். அதில் அகமொழிக்குச் சற்றே வருத்தம் தான். அதெல்லாம் மீறி, அவளுக்குப் பசிக்க வேறு தொடங்கியது.

“இவங்க எப்ப தட்டை மாத்தி எப்ப சாப்பிடுவாங்கன்னு தெரியலையே” என்று எண்ணியவள்,

“சாப்பிடலாமே ஆண்ட்டி” எனக் கேட்க, அவரே தேதி குறிப்பதா அல்லது ரேவதியைச் சமன் செய்வதா என்ற குழப்பத்தில் இருந்தார்.

அவரைச் சமன் செய்யும் பொருட்டு, “உங்களுக்கும் என்னை மாதிரி கேரளா சாப்பாடு பிடிக்காதுல. அதுனால தலைப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி, உங்களுக்காக ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி வாங்குனேன்.” என்று ஒரு கூடை ஐஸைத் தலையில் சொருகிட, அவரோ அதற்கெல்லாம் மசியவில்லை.

“பாரு அகா, நீ நான் வெஜ் எல்லாம் கொஞ்ச நாளைக்கு சாப்பிடாத. அப்ப தான் பீரியட்ஸ் ஒழுங்கா வரும். நான் போய் அண்ணியைச் சரி பண்றேன்…” என்று செல்ல, அவளோ கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.

‘இதெதுடா, நான் வாங்குன சிக்கன் பிரியாணிக்கு வந்த சோதனை… முட்டை கூட இல்லாம எனக்குச் சோறு இறங்காதே! ஹையோ எம்பிபிஎஸ் படிச்ச டாக்டரே இது ஒரு பிரச்சினை இல்லைன்னு சொல்லிட்டாங்க. இந்தப் பெருசுங்க காதுல வாங்க மாட்டேங்குதுங்களே’ எனப் பரிதாபமாகப் புலம்பியவள், ‘பேசாம கிட்சனுக்கு போய் திருட்டுத்தனமா சாப்பிட்டு வந்துடுவோமா’ எனத் தீவிர சிந்தனையில் இருந்தாள்.

அந்நேரம் வசந்தி மோதிரம் மாற்ற மகளை அழைத்தார்.

அவர்களே ஒரு தேதி குறித்திருந்தனர்.

ரிஷான் புன்னகை மின்ன, கையில் மோதிரத்துடன் நின்றான்.

அவளுக்கோ இப்போது கவலை எல்லாம் சிக்கன் பிரியாணியைச் சாப்பிட முடியுமா முடியாதா என்பதில் தான் இருந்தது.

காலையில் இருந்து ஒன்றுமே உண்ணவில்லை அவள். பசி மயக்கம் வேறு.

அதில் ரிஷானைக் கவனியாமலே வசந்தி நீட்டிய மோதிரத்தை வாங்கிட, அவனுக்கு முகம் சுருங்கிப் போனது.

ரிஷான் அவள் கையைப் பிடித்து மோதிரம் அணியப்போக, அதில் தான் அவளும் நிமிர்ந்தாள்.

ஆனால் அவள் கண்களில் பட்டதோ, ரிஷானுக்குப் பின்னால் வாசல் கதவில் கையைக் கட்டி நின்று கொண்டிருந்த அர்ஜித் அகன் தான். அவனருகில் திருதிருவென விழித்தபடி பிரணீத் நின்றிருந்தான்.

‘இந்தப் பைத்தியக்காரன் இங்க ஏன் வந்தான்?’ என்ற திகைப்பில் அவள் மலைபோல நிற்க, அவளது பார்வையைக் கண்டு தானும் பின்னால் திரும்பிப் பார்த்தான் ரிஷான்.

அவனிடமும் அதே திகைப்பு.

அர்ஜித் அகனின் கையில் ஒரு பிளாஸ்டிக் கவரும் இருந்தது.

அழுத்த நடையுடன் அவன் உள்ளே வர, அவனை அடையாளம் கண்டுகொண்ட வசந்தி, “தம்பி நீங்களா? சுஜாதாம்மா அனுப்புனாங்களா?” என வரவேற்க, ஒரு நொடி அவரைக் கண்டு தளர்ந்தவன் மறுநொடியே இறுகினான்.

“இல்ல ஆண்ட்டி, உங்க பொண்ணு தன்னே வரான் பரஞ்சது!” என்றதில்,

‘டேய் கிளம்பிடுடா, ஒரு பீரியட்ஸ்கே என்னை டார்ச்சர் பண்றாங்க… திங்க சோறு இல்லாம பண்ணிடுவான் போல’ எனக் கண்ணாலேயே கெஞ்சினாள்.

அவனோ அவளை நக்கலாய் பார்த்தபடி, “நிண்ட சேரியை என் ரிசார்ட் ரூம்லயே வச்சுட்டு வந்து மொழி… அதானு கொடுத்துட்டுப் போகாமெந்து வந்தது.” என்று வெகு அடக்கமாகக் கொடுக்க, அவளுக்குக் கண்ணில் புகையே அடித்தது மயக்கத்தில்.

அனைவருமே அங்குத் திகைத்திருக்க, ரிஷான் தான், “அவன் ரிசார்ட் ரூம்ல உன் சேரி?” எனக் குழப்பமாகக் கேட்டான்.

அவளோ நொந்து போய் நிற்க, “நம்மள் வேறே ரிலேஷன்ஷிப்க்குப் போவனதாலே நின்ட பொருள் என்டடுத்தோ, என்டெ பொருள் நின்டடுத்தோ இருக்கக் கூடாதுனு நினைக்கிறேன் மொழி. பட் யூ நோ வாட், ஐ பேட்லி மிஸ் யூ… என்னே நீ ஏமாத்தி இருக்க வேண்டா! அதும் ஆப்ட்ரால் ஆ கிளாம்பிங் பிசினஸ்க்கு வேண்டி என்னே லவ் பண்ணி நம்ப வச்சு… ப்ச்… நீ என்னைத் தன்னே கல்யாணம் செய்யும்னு விசாரிச்சு இவிடே இடம் குடுத்தேன்.” என நெஞ்சைத் தொட்டுக் காட்டியவனின் முகத்தில் டஜன் கணக்கில் சோகம் வழிந்தோடியது.

“லவ்வா?” அவள் எப்போதோ உறைநிலைக்குச் சென்றிருந்தாள்.

பாஸ்கர் தான் அதிர்வை விழுங்கியபடி, “அகா, என்ன இதெல்லாம்?” எனும்போதே ரேவதி அந்த கவரை வாங்கிப் பார்க்க, அதில் அவளது புடவை இருந்தது.

“இது உன்னோடதா?” அவர் காட்டத்துடன் கேட்க, ரிஷானின் முகம் இறுகி விட்டது.

அது அவளுடையது தானே. அவளது பிறந்தநாள் அன்று அவன் வாங்கிக் கொடுத்த புடவை தான். அவன் கையில் இருந்த மோதிரம் நழுவிக் கீழே சத்தத்துடன் விழ, அதில் தான் சுயம் பெற்றாள் அவள்.

“நீ உண்மையாவே ரிசார்ட்டுக்குப் போனியா?” ரிஷான் கேட்டதில்,

“ஐயோ!” என ஆரம்பிக்கும் முன்னே,

“கடைசியா அவளும் ஞானும் காணணம்னு ஆசைப்பட்டு… அதுகொண்டு ப்ரைடே நைட்டு வந்தா… ஜஸ்ட் வந்திட்டுப் போயி, வேற எதுவும் நடந்தில்லா…” என்று அவன் வெகு அழுத்தமாகக் கூறிட ரேவதி முகத்தைச் சுளித்தார்.

“அவள் சேரி உங்கிட்ட இருக்கு, உன் ரூமுக்கு வந்தான்னு சொல்ற… எதுவும் நடக்கலைன்னா எப்படி நம்புறது?”

“ப்ச்! அட நிஜமாவே எதுவும் நடந்தில்லா… என் மொழியை யாரும் தப்பா நினைக்க வேண்டா.” என்று வெகு பவ்யமாகக் கூற,

‘நாசமா போனவனே!’ ஒன்றும் பேச இயலாது அரண்டு நின்றிருந்தாள் அகமொழி.

“சரி, என்டே வாட்சை என்டே ஞாபகார்த்தமாய் நின்டெ ஹேண்ட்பேக்ல போட்டு எடுத்து வந்தில்லே… அதைத் தா மொழி. டைம் பார்க்க கஷ்டமா இருக்கு…” எனக் கெஞ்சல் தொனியில் கேட்டான்.

‘அவார்டா தர்றாங்க இப்படி நடிக்கிறான்.’

“இதோ பாரு… உன் வாட்ச் எதுவும் என்கிட்ட இல்ல. நீ தேவை இல்லாம பண்ணிட்டு இருக்க அகன்…” என விரல் நீட்டி எச்சரிக்க, வசந்தி அவள் கைப்பையை எடுத்துச் சோதித்ததில் அதில் ஆடவனின் கடிகாரம் இருந்தது.

அதைக் கண்டு திகைத்துப் போனவள், ‘இதை எப்படா உள்ள போட்ட’ என்ற ரீதியில் அதிர்ந்திருந்தாள்.

அக்கம் பக்கத்தினர் குசுகுசுவெனப் பேச ஆரம்பித்து விட்டனர்.

பாஸ்கருக்கு அவமானத்தில் முகம் சிவந்தது.

“என்ன அகா இதெல்லாம்? அந்தப் பையன் சொல்றது உண்மையா? நீ போனியா… அதுவும் எங்ககிட்டப் பொய் சொல்லிட்டு!” எனும்போதே அவருக்கு வலித்தது.

“ப்பா… நான் போனேன் ஆனா…” என முடிக்கும் முன்னே அவள் கன்னத்தில் பளாரென அறைந்திருந்தார் பாஸ்கர். அவளோ கொந்தளித்த கோபத்துடன் ஆடவனைத் தான் தீயாக முறைத்தாள்.

அதனைத் திருப்தியாய் பார்த்த அர்ஜித் அகன், அலட்டலின்றி கைக்கடிகாரத்தை வாங்கிக் கொண்டு “ஐ வில் மிஸ் யூ காந்தாரி!” என பிளையிங் கிஸ் ஒன்றைக் கொடுத்து விட்டு, குளிர் கண்ணாடியை மாட்டியபடி வெளியில் செல்ல, பிரணீத் சுவரோடு சுவராக விழி பிதுங்க நின்றான்.

“டேய் என்னடா இதெல்லாம். ஏதோ பங்க்ஷன்னு தானடா கூட்டிட்டு வந்த” காரில் ஏறி அமர்ந்தபடி கேட்க,

“கேரக்டரை அசாசினேட் செய்தால் எந்து நடக்கும்னு அவளுக்கும் அறயணமல்லோ! அறயட்டே… சீக்கிரம் காரை எடு. மண்டபத்துக்குப் போகணும்.” எனக் கண்ணாடியில் தன் கேசத்தைச் சரி செய்து கொண்டவன் அறியவில்லை, அவன் எட்டடி பாய்ந்தால் அவள் பதினாறு அடி பாய்வாள் என்று.

அகன் வசமாவாள்
மேகா

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
20
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஆரம்பிச்சு விட்டுட்டான்.. அடுத்து அவ ரவுண்ட்… எப்படி ஆடப்போறாளோ…