Loading

மலையின் உச்சியை மெதுவாகத் தழுவியிருந்த வெண்மேகக் கூட்டம், காலையிலேயே அந்த இடத்தை ஒரு ஓவியமாக மாற்றியிருந்தது.

மூணாறின் பரபரப்பிலிருந்து சற்று விலகி, அடிமாலி மலைச்சரிவுகளை ஒட்டியிருந்த அந்தப் பகுதி, சுற்றுலாப் பயணிகளின் கண்களில் இன்னும் முழுமையாகப் படாத ஒரு சிறிய சொர்க்கமாகவே இருந்தது.

பசுமை போர்த்தியிருந்த மலைச்சரிவுகளுக்கு நடுவே, மரக்கிளைகளின் இடைவெளியில் சூரிய ஒளி சிதறி விழுந்தது. அந்த ஒளியைச் சற்றும் வீணாக்காமல், மலையின் விளிம்பில் மரத்தால் அமைக்கப்பட்டிருந்த சிறிய நடைபாதை, நேராக ஒரு வட்ட வடிவத் தளத்திற்குச் சென்றது.

அதன் நடுவே நின்றிருந்தாள் அவள். வட்ட முகம். சற்றே உயரமான உடல்வாகு. லேயர் கட் செய்த கூந்தல் தோளைத் தாண்டி போனிடெயிலில் சிக்கி இருந்தது.

முன்னெற்றி முடிகள், அழகாக வெட்டப்பட்டு புருவம் வரையிலும் தவழ்ந்து விளையாடியது. குளிருக்கு இதமாக முழுக்கை ஷர்ட்டும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தாள்.

கையில் ஒரு பேப்பரும் பென்சிலும் அவளது கட்டளைகளுக்கெல்லாம் செவி சாய்த்துக் கொண்டிருந்தது.

அவளது கரு விழிகளோ, சற்றே தள்ளி இருந்த பள்ளத்தாக்கை ரசித்திருக்க, மென்தென்றல் அவளது மின்னும் முகத்தைத் தழுவிச் சென்றது.

கடந்த நான்கு வருடங்களாய் இதே ரம்மியமான காலைப்பொழுதுக்காகவே முதல் வேலையாக இங்கு வந்து விடுவாள்.

அவள் நிற்கும் இடத்திற்குச் சற்று தள்ளி, மூன்று லக்ச்சுவரி கிளாம்ப்பிங்க் டென்ட் போடப்பட்டிருந்தது.

வெளியில் இருந்து பார்த்தால் சாதாரண வட்ட வடிவ டென்ட் போலத் தோன்றும். ஆனால் உள்ளே ஒரு ராயல் ஹோட்டல் அறை போலான அமைப்பு கனக்கச்சிதமாக அமைந்திருந்தது.

மென்மையான விலாசமான படுக்கை. மரத்தாலான அலமாரி. சிறிய சோபா. நவீன குளியலறை, ஒவ்வொரு டெண்ட்டின் வெளியேவும் சிறிய டீ டேபிள். மெத்தையில் படுத்தபடியே விட்டத்தைப் பார்த்து நட்சத்திரங்களை எண்ணிக் குவிக்க இயலும். அது தான் அவளின் ஹை வியூ, ‘அகவனா க்ளாம்ப்பிங் ஸ்டே’.

அகமொழி! பெயருக்கேற்றவாரே அன்பான அகத்தாலும் அனுசரணையான மொழியாலும் குளிர வைப்பவள்.

அதுவே கோபம் வந்து விட்டால்!?

சரளமாகக் கெட்ட வார்த்தைகள் வந்து விடும். நான்கு வருடங்களாக திறம்பட வியாபாரத்தை நடத்தி வருபவள். சில நேரம் அதிகப்படியான துணிச்சலுடன் நடந்து கொள்ள வேண்டியிருந்ததால், மனதில் பயமும் அகன்றிருந்தது.

“என்ன அகா… வச்ச கண்ணு வாங்காம யாரை சைட் அடிச்சுட்டு இருக்க…” கேட்டபடி அங்கு வந்தான் அவளது தோழன் ரிஷான்.

“எல்லாம் இந்த மலையையும் அழகையும் தான் ரிஷு” புன்முறுவலுடன் பதிலளித்தவளிடம்,

“ம்ம்க்கும், இதை தான் டெய்லி பாக்குறோமே” என்றதில்,

“இப்ப பார்க்குறதுல வித்தியாசம் இருக்குடா. இவ்ளோ நாள் இந்த இடம் எல்லாம் லோன்ல இருந்துச்சு. இப்ப இதுல வர்ற ப்ராஃபிட் எல்லாமே நம்மளுக்கு” எனக் கண் சிமிட்ட, அவனும் உற்சாகமாகப் புன்னகைத்தான்.

“ஆமா அகா. நாலு வருஷத்துக்கு முன்னாடி, இதே மாதிரி ஒரு நாள் காலேஜ் முடிச்ச கையோட இங்க வந்து நின்னது ஞாபகம் இருக்கா? அப்பவும் நீ இப்படி தான் கைல பேப்பர் பென்சிலோட நின்ன…” என்றான் நமுட்டு நகையுடன்.

“எப்படி மறக்க முடியும். என் அப்பா, இங்க நம்மளோட ஒரு ஏக்கர் இடம் இருக்கு, அதை வித்து எனக்கு கல்யாணம் பண்ணனும்னு சொன்னப்போ தான இங்க வந்து இந்த இடத்தைப் பார்த்தோம்… பார்த்ததும் பிடிச்சுதுல…”

“யம்மா, எனக்குலாம் சத்தியமா ஐடியாவே இல்ல. நீ தான், ஆர்க்கிடெக் படிச்சுட்டு எதுக்கு யாருக்கோ டிசைன் பண்ணனும், நம்மளே சொந்தமா டிசைன் கிரியேட் பண்ணலாம்னு, ஆன் ஸ்பாட்ல யோசிச்ச. ஆனாலும் கேரளாவுல ஃபர்ஸ்ட் டைம் ரிசார்ட் எல்லாம் அடிச்சுட்டு கம்மி பட்ஜெட்ல கிளாம்பிங் ஸ்டே கொண்டு வந்து அதுல ஜெய்ச்சும் காட்டிட்ட அகா. நண்பிடி, லவர்டி…” என்று அவளது தோளைப் பற்றினான்.

அதில் சிரித்த அகமொழி, “‘கண்டதையும் உளறாம கல்யாணம் பண்ணிட்டுப் போ’ன்னு சொல்லாம, நீயும் ரூஹியும் எனக்குப் பக்கபலமா இல்லைன்னா, இதை சாதிச்சுருக்கவே முடியாது ரிஷு” எனப் பாராட்டினாள் மனதார.

“சாதி மதமெல்லாம் இருக்கட்டும். இது என்ன மறுபடியும் ஏதோ ஸ்கெட்ச் பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டு எட்டிப்பார்த்தான்.

“நம்ம புது ப்ராஜக்ட்” அகமொழி கண்சிமிட்டி ரிஷான் விழித்தான்.

“எதே புது ப்ராஜெக்ட்டா? காட்டு” என அந்தத் தாளை வாங்கிப் பார்த்தான்.

மலைச்சரிவைக் குடைந்து அவள் உருவாக்கி இருந்த ஹாபிட் ஹவுஸ் (Hobbit House) அவளது கற்பனைத் திறனை அதிகம் விவரித்திருந்தது.

மலையின் உடலைக் கீறி தனியாக ஒரு கட்டிடம் எழுப்ப அவள் விரும்பவில்லை. இயற்கை உருவாக்கி வைத்திருந்த சரிவுக்குள்ளேயே, மலையின் ஒரு பகுதியாகத் தோன்றும் வகையில் அந்த வீட்டை வடிவமைக்க முடிவு செய்திருந்தாள்.

“ஹே… இது என்ன?” ரிஷான் குதூகலாமாகக் கேட்க,

“இது குகை மாதிரி இருக்கும். கேவ் ஸ்டே. மலைக்குள்ள ரூம் கட்டுவோம் ரிஷு. வெளில இருந்து பார்த்தா இயர்த் ஹவுஸ் மாதிரி இருக்கும். வெளில ஒரு ரவுண்ட் வுடன் டோர். உள்ள பெரிய க்ளாஸ் வால். காலைல கண் முழிச்சதும் ஒரு அழகான வேலே வியூ (valley view), வெளில ஒரு பிரைவேட் ஸ்பேஸ், ஒரு ஃபயர் பிட்” என இரு புருவத்தையும் நளினமாக உயர்த்திக் காட்ட,

“வாவ்!” எனத் துள்ளிக் குதித்தான் அவன்.

“செம்ம பிளான் அகா… எப்ப ஸ்டார்ட் பண்ண போறோம்?”

“கூடிய சீக்கிரமே. முதல்ல ஒரு ரெண்டு கேவ் போட்டு ஸ்டார்ட் பண்ணலாம். எப்படி போகுதுன்னு பார்த்துட்டு எக்ஸ்டரா போட்டுக்கலாம். கொஞ்சம் லோன் போகலாமான்னு யோசிக்கிறேன்” என்றதும், “லாஸ்ட் டைம் மாதிரி அலையத் தேவையில்ல. நம்ம கிளாம்பிங் வச்சே லோன் கிடைக்கும்…” என்றான்.

“ம்ம் நானும் அதான் யோசிச்சேன். பார்க்கலாம்… அப்ரூவல் அது இதுன்னு நிறைய பார்மாலிட்டிஸ் இருக்கு… அதுசரி ரூஹி எங்க போனா?” என வினவ, அந்நேரம் ரூஹி யாருடனோ சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

“நீ ஒழுங்கா வேலை பார்த்திருந்தா, நான் ஏன் உன் சம்பளத்துல கையை வைக்கப் போறேன்…” ரூஹி அவர்களின் இடத்தை கூட்டிச் சுத்தம் செய்யும் வேலையாளிடம் சண்டை பிடிக்க,

“நான் ஒழுங்கா தான் வேலை பார்த்தேன் மேடம். பேசுன சம்பளத்தை குடுங்க” என்று பிடிவாதம் பிடித்தான்.

“ரூஹி என்னடி பிரச்சினை?” அகமொழி கேட்டதில்,

“பாருடி இவனை… க்ளீனிங் வேலையை ஒழுங்காவே செய்யல. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வந்த கஸ்டமர் க்ளீனிங் இஷ்யூவை ரேட்டிங்ல போட்டாரு” எனப் புகார் கூற,

வேலையாளோ “மேடம் நான் மனசாட்சிக்கு தகுந்த மாதிரி தான் வேலை பார்த்தேன். எனக்குத் தெரியாம தப்பு நடந்துருக்கலாம். அப்பவே கூப்பிட்டு நல்லா சுத்தம் பண்ண சொல்லிருந்தா நான் பண்ணிருப்பேனே மேடம். எதுவுமே சொல்லாம, சம்பளத்துல கையை வைக்கிறது என்ன நியாயம்?” என்று குமுறினான்.

“ஏன் சொன்னா தான் நல்லா வேலை பார்ப்பியா? சம்பளத்துல பிடிச்சா தான் உனக்கு உறைக்கும்” என வாதம் செய்ய, “ரூஹி!” என குரல் உயர்த்தி அதட்டினாள் அகமொழி.

அவளிடம் இருந்த பணத்தை வாங்கி முழு சம்பளத்தையும் அவனுக்கு கொடுத்தவள், “இனி கவனமா வேலை பார்க்கணும். தெரியாம கூட தப்பு நடக்கக் கூடாது” என்று கண்டித்து அனுப்பிட, ரூஹி தோழியை முறைத்தாள்.

“அவனுக்கு ஏன்டி பணத்தைக் குடுத்த?”

“விடு ரூஹி. இதை வச்சு அவன் மாடி வீடா கட்டப்போறான். அப்பவே கூப்பிட்டு கண்டிச்சுருக்கலாம்ல. வஞ்சம் வச்சு பழி வாங்குறது எல்லாம் உன்னை விட்டு எப்போ போகுமோ!” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“செஞ்ச தப்புக்கு வாயில சொன்னா புத்தி வராது. பதிலடி குடுத்தா தான் உறைக்கும்” என்ற தோழியை முறைத்தவள், “அதுக்காக எல்லா விஷயத்திலயும் அதை ஃபாலோ பண்ண கூடாது…” என்றாள் கண்டிப்புடன்.

ரிஷான் தான், “இவளுக்காக பயந்து விட்டுட்டு டீ குடிக்க கூட போக முடியல அகா. அதை ஒரு வெஞ்சன்ஸ்ஸா மனசுல வச்சுட்டு, அடுத்த தடவை டீ குடிக்க போறப்ப, அதுல பாய்சனை கலந்துடுவேன்னு மிரட்டுறா” எனப் பரிதாபமாக உரைக்க, அகமொழி நமுட்டு நகை புரிந்தாள்.

இரவு வரையிலும் வேலை நெட்டித் தள்ள, எட்டு மணியளவில் தான் வீட்டை அடைந்தாள் அகமொழி.

அவளுக்காக வாசலில் போடப்பட்ட திண்ணையிலேயே அமர்ந்திருந்தார் பாஸ்கர். அகமொழியின் ஆருயிர் தந்தை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஸ்கர், பொதுப்பணித்துறையில் பணியாற்றிய காலத்திலேயே கேரள எல்லையோர மலைப்பகுதியுடன் பழகிவிட்டவர். ஓய்வுக்குப் பிறகு அங்கேயே குடியேற வேண்டும் என்ற எண்ணத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி வைத்திருந்த நிலம்தான், இன்று அகமொழியின் கனவுக்கு அடித்தளமாக மாறியிருந்தது.

“என்னப்பா பனில உக்காந்துருக்கீங்க?” செல்லமாக அதட்டியபடி ஸ்கூட்டியை நிறுத்தினாள்.

“உன் அம்மா காபி தரேன்னு சொன்னா, அதான் பயந்து வெளில வந்துட்டேன்…” மனையாளை நக்கலடித்த பாஸ்கரை முறைத்தபடி கையில் காபியுடன் வெளியில் வந்தார் வசந்தி.

“என் காபியைத் தான் 26 வருஷமா குடிச்சுட்டு இருக்கீங்க…” நொடித்துக்கொண்ட தாயினை சிரிப்புடன் ஏறிட்ட அகமொழி, “பார்த்தீங்களாமா, அப்பாவுக்கு உங்க காபி போர் அடிச்சுடுச்சு போல” என்றதில்,

“தினமும் ஒரே ஃபில்டர் காபி அகாம்மா… போர் அடிக்க தான செய்யும்” என்றார் பாவம் போல.

அகமொழிக்கு இரட்டை அர்த்தமாக அனைத்தும் காதில் விழுக, சிரிப்பை அரும்பாடுபட்டு அடக்கினாள்.

வசந்தியோ, “தினமும் வகை வகையா காபி டீ போட்டாலும், ஒரு கட்டத்துக்கு மேல மனசு பழகுன இந்த ஃபில்டர் காபியைக் கேட்டு தான் அடம்பிடிக்கும்…” என்றிட, இம்முறை தந்தையும் மகளும் சத்தமாக சிரித்து விட்டனர்.

“அம்மா கொஞ்சம் மக்கு தான் போலப்பா! எப்படி சமாளிச்சீங்க இவ்ளோ வருஷமா?” அகமொழி பாஸ்கரின் அருகில் அமர்ந்து கேட்க, அதன்பிறகே இருவரும் கிண்டல் செய்தது புரிந்தது.

“ரெண்டு பேரும் அடிவாங்க போறீங்க. பொண்ணுகிட்ட பேசுற பேச்சா இது” எனக் கணவனைக் கடிந்தவருக்கு அசடு வழிந்தது.

அதில் உள்ளே சென்று விட்டவர், “அகா சாப்பாடு எடுத்து வைக்கவா?” என வினவ, “வேணாம்மா… நான் ப்ரெஷ் ஆகிட்டு சாப்ட்டுக்குறேன்… நீங்களும் அப்பாவும் தூங்குங்க” என எப்போதும் போலவே சத்தம் கொடுத்தாள்.

இரு பெரியவர்களும் ஏழு மணிக்குள் இரவு உணவை முடித்து விடுவர்.

“நீ போய் ப்ரெஷ் ஆகிட்டு வாமா…” பாஸ்கர் கூறியதில், அவளும் தனது அறைக்குச் சென்றாள்.

அடமாலியின் அமைதியான குடியிருப்புப் பகுதியில், சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி இருந்தது அகமொழியின் வீடு. சுற்றிலும் உயரமான காம்பவுண்ட் சுவர்களுடன் காட்சியளிக்கும் பிரம்மாண்ட வீடுகளுக்கு நடுவே, அளவில் பெரியதல்லாத அந்த ஒற்றை மாடி வீடு அமைதியாக அமர்ந்திருந்தது.

சிறிய இரும்புக் கேட்டைத் தாண்டினால், இரண்டு சக்கர வாகனங்களையும் ஒரு காரையும் நிறுத்தக்கூடிய அளவிலான முன்புற இடம். அதன் ஓரத்தில் வசந்தி வளர்த்திருந்த சில பூச்செடிகளும், மழையில் நனைந்து பசுமையாகத் தெரிந்த வாழைக்கன்றும் இருந்தன.

நான்கு படிகள் ஏறிச் சென்றால், இருவர் அமரக்கூடிய சிறிய வராண்டா. அதைத் தாண்டி உள்ளே சென்றதும், எளிமையான வரவேற்பறை. அதனுடன் இணைந்திருந்த டைனிங் இடத்தின் ஒரு பக்கத்தில் சமையலறையும், மறுபக்கத்தில் சிறிய பாதையை ஒட்டி இரண்டு படுக்கையறைகளும் அமைந்திருந்தன.

இரவு உடையை அணிந்து அடுக்களைக்கு வரும்போதே, நெய் தோசை வாசனைப் பசியைக் கிளறியது அகமொழிக்கு.

“நான் தோசை ஊத்திப்பேன்லமா…” கண்டித்தபடியே சுடச் சுட தோசைத் தட்டை எடுத்து அடுப்பு மேடையிலேயே ஏறி அமர்ந்து உண்ணத் தொடங்கினாள்.

“ம்ம்… சட்னி சூப்பர்” எனக் காரச் சட்னியை சப்புக் கொட்டி உண்டாள்.

அவளை முறுவலுடன் பார்த்த வசந்தி, அவள் கேட்கும் முன்னே, ஹாப் பாயில் தோசையில் மிளகுப் போடி தூவி, மஞ்சள் கரு உடையாதவாறு கவனமாக அவளது தட்டில் வைக்க, அவளது கவனமும் உணவைத் தவிர வேறு எதிலும் சிதறவில்லை.

“சாம்பார் கொஞ்சம் இருக்கு தரவா அகா?” எனக் கேட்க, “ம்ம்ஹும் வேணாம் வேணாம் சட்னியே சூப்பரா இருக்கு. டேஸ்ட் மாறிடும்” என்றவள், சட்னி தீரும் மட்டும் ஐந்து தோசையை உள்ளே தள்ளி விட்டு தான் இறங்கினாள்.

காலையில் இருந்து நிரப்பி வைத்திருந்த பாத்திரம் சிங்கிள் நிறைந்திருந்தது.

“ம்மா டைம் ஆச்சு நீங்க தூங்க போங்க” எனப் பணித்தவள், பாத்திரங்களைக் கழுவத் தொடங்கினாள்.

வசந்தி இடத்தை விட்டு நகராமல் மகளை ரசிக்கத் தொடங்கினார்.

ஒற்றைப் பெண்ணாய் வளர்ந்தாலும், அதிக செல்லம் கொடுத்திருந்தாலும் கூட தனக்கு கிடைத்த அன்பை தவறாக பயன்படுத்திடாத அழகியவள்.

வசந்திக்கு வீசிங், மூட்டு வலி வந்ததில் இருந்து வீட்டுப்பொறுப்பை மெதுவாக கையகப்படுத்திக் கொண்டாள்.

கல்லூரி படிக்கும்போதிருந்தே, மாலை வந்து பாத்திரங்களை கழுவி வைத்து அடுத்த நாளைக்கான காய்கறிகள் அனைத்தையும் நறுக்கி வைத்து, அடுக்களையைப் பளபளவெனச் சுத்தம் செய்து விடுவாள்.

காலையில் கல்லூரிக்கு கிளம்பும் முன்னே, வீட்டைப் பெருக்கித் துடைத்து குளியலறையையும் சுத்தம் செய்து விட்டே கிளம்புவாள்.

வசந்திக்கு அவள் நறுக்கி வைத்திருக்கும் பொருள்களை தாளித்து சமைப்பது மட்டுமே வேலை. அதை மீறி ஒரு கிளாஸை கூட கழுவக்கூடாதென்பது அவரது செல்ல மகளின் மீறக்கூடாத விதி. வாரம் ஒரு முறை, விடுமுறை நாளில் வீடு மொத்தத்தையும் தூசி தட்டி விடுவாள்.

தந்தைக்கு பணி ஓய்வு கொடுத்ததில் இருந்து பொருளாதாரத்தையும் தனதாக்கிக் கொண்டாள்.

அவருக்கு வரும் பென்ஷனை அவர்களது எதிர்கால அவசர செலவுக்காக சேமிப்பிலேயே வைத்திருந்தவள், அவளது சம்பாத்தியத்திலேயே பெற்றோரை பார்த்துக் கொள்கிறாள். அதில் அவளுக்கும் ஒரு நிறைவு.

அவ்வப்பொழுது பாஸ்கரும் அவளது வியாபாரத்தில் உதவிக்கொள்வார். அழகான குருவிக்கூடு! கல்லெறிந்திட காத்துக் கொண்டிருந்தது விதி.

அகம் தொடரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
22
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment