Loading

“விக்ரா…” அக்னியின் அழைப்பை அசட்டை செய்து விட்டு சென்றதில், அக்னியும் அவசரமாக ஒரு ஆட்டோவைப் பிடித்துச் சென்றான்.

விக்ரம் காரை செலுத்திய வேகத்திற்கு விபத்து ஏற்படாமல் சென்றதே அதிசயம் தான்.

நடுக்கூடத்தில் நின்றிருந்த சிவக்குமாருக்கு, திலோத்தமாவையும் அக்னிலாவையும் காப்பாற்றி விட்டனர் என அறிந்ததும் சினம் பீறிட்டது.

இதில் அவருக்கு விசுவாசியான காவலர் வேறு, இரட்டைக் கொலை முயற்சி வழக்கில் அவரைக் கைது செய்ய வருவதாகக் கூறியதில், உடனடியாக வக்கீலுக்கு அழைத்தார்.

அவரது அலைபேசியை காலால் எத்தி விட்ட விக்ரம வேந்தன், தந்தையென்ற மரியாதையை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, பளாரென அறைய சிவக்குமார் கூடத்தின் ஓரத்திற்குச் சென்று விழுந்தார்.

“பச்சக் குழந்தைன்னும் பார்க்காம, நிலா மேல எல்லாம் கை வைக்க உனக்கு எப்படியா மனசு வந்துச்சு” என்றவனுக்கு வெறி அடங்கியபாடில்லை.

சவுந்தரவல்லியோ “டேய் விடுடா… ஐயோ பெத்த தகப்பனை போட்டு அடிக்கிறானே நிவேதா ஏய் இங்க வா…” என்று கத்தி கூப்பாடு போட, நிவேதா எந்த சலனமும் அல்லாது அவரையே வெறித்திருந்தாள்.

“நிவேதா இவனை பாரு உன் புருஷனை அடிக்கிறான் கல்லு மாதிரி நிக்கிற…” என்று அவளை உலுக்க,

நிவேதா ஒரு பேச்சுக்கு கூட விக்ரமை தடுக்க முயலவில்லை. அழுத்தமாக நின்றார்.

சவுந்தரவல்லி நிவேதாவை விட்டுவிட்டு விக்ரமை பிடித்து தள்ள முயல, “ஏய்” என அவரை நோக்கி கையை ஓங்கியவனின் விழிகள் காட்டிய வெறியில் சவுந்தரவல்லி சிலையாகி விட்டார்.

“வயசான பொம்பளன்னு பாக்குறேன். ஓடிப்போய்டு” என விரல் நீட்டி எச்சரித்தவன், ஒரு பூச்சாடியைத் தூக்கி தனது காலுக்கடியில் படுத்திருந்த சிவக்குமாரின் மீது போட போக, அக்னி அவனைத் தடுத்திருந்தான்.

“விக்ரா விடுண்ணா…”

“நீ விடுடா. இந்த ஆளை கொன்னா தான் எனக்கு நிம்மதி” கர்ஜித்த தமையனை அடக்குவதற்குள் பெரும்பாடு ஆனது.

“அவரைக் கொன்னுட்டு நீ ஜெயிலுக்குப் போனா அப்ப உன் குடும்பத்தை யார் பாக்குறது? நிறுத்துடா…” என்று விக்ரமை நிதானப்படுத்தினான்.

அதற்குள் காவலர்கள் அவ்வீட்டை முற்றுகை இட்டனர்.

விக்ரமின் மீது விபத்து ஏற்படுத்தியதற்கும், தற்போது இரட்டை கொலை முயற்சிக்கும் அரெஸ்ட் வாரண்டுடன் வந்திருந்தனர்.

சிவக்குமார் வக்கீலுக்கு அழைக்கப்போக, அக்னி அலைபேசியைத் தட்டி விட்டான்.

“நீ யாருக்கு போன் பண்ணாலும் ஒன்னும் நடக்காது. போலீஸ் ஸ்டேஷன்ல இரு டேடி. உன்மேல அடுத்த ஒரு ஸ்ட்ராங் கேஸ் வந்துட்டே இருக்கு…” என உறுமிட,

“ஐயோ என் மகன்களை இப்படி போலீஸ் ஸ்டேஷன்க்கு போக வைக்கிறாங்களே” என்று சவுந்தரவல்லி அங்கலாய்த்ததில்,

“இதுல உனக்கும் பங்கு இருக்குன்னு எனக்குத் தெரியும் பாட்டி. நீ ஜெயிலுக்குப் போனா ஒரு நாளைக்குத் தாங்க மாட்ட. என்ன? உன்பேர்லையும் கேஸ் போடவா?” என அக்னி நக்கல் நகையுடன் கேட்க, அவருக்கு அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விட்டது.

சிவக்குமாரை கைது செய்ததும், “நிவேதா நீயாவது சொல்லு…” என்று சிலை போல நின்றிருந்தவரை தூண்டினார் சிவக்குமார்.

“அவரை விடுங்க…” அமைதியாக காவலர்களை பார்த்து உரைத்ததில் அக்னி அதிருப்தியாக ஏறிட்டான்.

“விடுயா” தன் கையைப் பிடித்திருந்த காவலரின் கையை உதறிய சிவக்குமார், “தேவை இல்லாம என் மேல பழி போடுறாங்க நிவே…” என்று சொல்லி முடிக்கும் முன்னே, நிவேதா அவரை கன்னம் வீங்க அறைந்திருந்தார்.

“மனுஷனாயா நீ எல்லாம். நீயும் உன் அம்மாவும் செய்ற பைத்தியக்காரத்தனத்தை பொறுத்துக்கிட்டதே என்னை பெத்தவங்களுக்காகவும், நான் பெத்துக்கிட்டவங்களுக்காகவும் தான்.

நீங்க குட்ட குட்ட குனிஞ்ச ஒரே காரணத்துக்காக என்னைப் பெத்தவங்களை கஷ்டப்படுத்துனீங்க. ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மனுஷனையே கடிக்கிற கதையா, பெத்த பிள்ளைங்களை கூட விட்டு வைக்கலைல. அப்டி என்ன கவுரம் கேட்குது உனக்கும் இந்த பெரிய மனுஷிக்கும். இப்ப குடும்பமா போலீஸ் ஸ்டேஷன் போங்க. உங்க கவுரவம் எங்க ஆட போகுதுனு நானும் பாக்குறேன்…” சிவந்த விழிகளுடன் சீறிய மனைவியை திகைப்பாகப் பார்த்தார்.

“அகி.. இந்த அம்மா மேலயும் கம்பளைண்ட் குடு. எப்படியும் இந்த ஆளுக்கு ஐடியா எல்லாம் இது தான் குடுத்துருக்கும்…” என வெறுப்பாக கூற, சவுந்தரவல்லிக்கு செய்வதறியாத நிலை.

“ஐயோ நிவேதா சத்தியமா எனக்கு இதெல்லாம் தெரியாது. விக்ரமை எப்படியாவது அவகிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வரணும்னு நினைச்சேன். அப்போ தான் விக்ரமுக்கு ஆக்சிடென்ட் ஆன விஷயத்தை சிவா என்கிட்ட சொன்னான். அதை சாக்கா வச்சு விக்ரமை இங்கயே கூட்டிட்டு வரணும்னு நினைச்சேன். ஆனா அந்த ஆக்சிடென்ட்ட இவன் தான் செஞ்சான்னு என்கிட்ட சொல்லவே இல்ல” எப்போதும் கர்ஜிக்கும் கம்பீரக் குரல் தற்போது தளர்ந்து நடுங்கியது.

ஆகினும் நிவேதா மனம் தளரவே இல்லை.

“ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷன்ல போய் உக்கார வை அகி. அப்ப தான் அறிவு வரும். அடுத்தவங்களை அவங்களோட வாழ்க்கைய விமர்சனம் பண்ண இனி நாக்கு யோசிக்கும்ல…” என்று மூச்சிரைக்க, சவுந்தரவல்லிக்கு கண்ணீரே வந்து விட்டது.

“ம்மா விடுங்க…” என்ற அக்னி வேந்தன், காலவர்களுக்கு கண்ணைக் காட்ட அவர்கள் சிவக்குமாரை அழைத்துச் சென்றனர்.

இன்னும் சவுந்தரவல்லியை முறைத்துக்கொண்டிருந்த நிவேதாவை இரு ஆடவர்களும் தான் வம்படியாக இழுத்துச் செல்ல வேண்டியதாகப் போயிற்று.

“முன்னாடியே அப்பாவை அடிக்க போறீங்கன்னு சொல்லிருந்தா ஒரு வீடியோ எடுத்து நெட்ல போட்டுருப்பேன். வைரல் ஆகியிருக்கும்…” இறுக்கம் தளர்க்க நிவேதாவை வாரினான் அக்னி வேந்தன்.

கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக் கொண்டிருந்த நிவேதா, அதற்கு மேல் முடியாமல் அக்னியின் தோளில் சாய்ந்து அழுது தீர்த்தார். விக்ரம் வண்டியை ஓட்டியபடி கண்ணாடி வழியே தாயைக் கண்டு, “இப்ப ஏன்மா அழுகுறீங்க? அவரை அடிச்சதுக்கா?” எனக் கேட்டான்.

“தெரியல விக்ரா. இந்த வாழ்க்கை நல்லா இருந்துருக்கலாமோன்னு ஒரு ஆதங்கம்” என்றதில், இருவரின் முகமும் வேதனையைத் தாங்கியது.

நிவேதாவை அரவணைத்துக் கொண்ட அக்னி வேந்தன், “இனி நல்லாருக்கும்னு நம்பலாம்மா. அழாதீங்க ப்ளீஸ்” என்று தேற்றினான்.

மருத்துவமனையில் விஷயம் கேள்விப்பட்டு, தேவாரம், விஜயா, குருமணி, ஜெயசுதா நால்வரும் கவலையுடன் பவித்ராத்யாவின் அருகில் அமர்ந்திருந்தனர்.

“நிவேதா…” மகளைக் கண்டதும் விஜயா அவரை நோக்கி செல்ல, அவரையும் கட்டிப்பிடித்து ஒரு மூச்சு அழுதார் நிவேதா.

விக்ரம் ஒரு நாற்காலியில் சோர்வாக அமர்ந்து விட்டான். நிவேதா பவித்ராத்யாவிடம் எந்த பேச்சும் வைத்துக்கொள்ளவில்லை.

அவள் இருந்த நிலையில் எதையும் கவனிக்கவும் இல்லை.

அக்னிலா கண் விழித்து விட்டதாகக் கூற, அனைவர்க்கும் முன்பும் புயலாக அறைக்குள் நுழைந்தாள் பவித்ராத்யா.

“குட்டிமா… நீங்க ஓகே தான?” என அவள் கையைப் பிடித்து முகத்தில் வைத்துக்கொண்டு தேம்பினாள்.

“இது கை வலிக்குது சித்தி…” என உதட்டைப் பிதுக்கி க்ளூகோஸ் பாட்டிலை காட்ட, “என் செல்லத்துக்கு சரியாகவும் இதெல்லாம் கழட்டிடுவாங்க. அதுவரை போட்டுக்கோடா. என் தங்கம்ல…” என்றவளுக்கு அழுகையை அடக்க இயலவில்லை.

அவர்களை விட்டுச் சென்றிருக்க கூடாதோ? அக்கேள்வி தான் அவளைக் குத்தி குத்தி காயம் செய்து கொண்டிருந்தது.

அக்னிலா அடுத்ததாக “அப்பா” என விக்ரமிடம் பார்வையைத் திருப்பி இருக்க, அவனும் கண்ணில் நீர் தேங்க நின்றிருந்தான்.

பவித்ராத்யா அதற்கு மேல் முடியாமல் வெளியில் சென்று அழுது தீர்த்தாள்.

சற்று பிசகி இருந்தாலும் எத்தனை பெரிய அவலம் நேர்ந்திருக்கும். யோசியாது, திலோத்தமா சொன்னதற்கு தலையாட்டி விட்டோமே! அவளைக் கவனித்திருக்க வேண்டும் என்ற குற்ற உணர்ச்சி அவளை முள்ளாக குத்தியது.

முதல்முறை அவள் வீட்டை விட்டு சென்றபோதும் அவளைக் கவனிக்கவில்லை.

தற்போதும், அவளது அலைப்புறுதலை கவனிக்கவில்லை என்றே எண்ணி எண்ணி தன்மீது கோபம் கொண்டாள்.

இங்கோ விக்ரம் “அகி…” என மகளை அழைக்க,

“அம்மாட்ட, அப்பாட்ட போறேன்னு சொன்னேன்பா. அம்மா என்னை ட்ரெயின்ல கூட்டிட்டுப் போறேன்னு சொன்னாங்களா. அப்பறம் டூ அண்ணாஸ் வந்து அம்மாவை அடிச்சாங்களா. அப்பறம் என்னையும் அடிக்க வந்தாங்க. அம்மா அவங்களை தள்ளி விட்டுட்டு என்னைப் பிடிச்சதும், அவங்க ஏதோ ஸ்ப்ரே அடிச்சாங்களா. அப்பறம் நான் தூங்கிட்டேன்பா. அம்மா எங்கப்பா இன்னும் தூங்குறாங்களா?” என மடை திறந்த வெள்ளமாக தந்தையைக் கண்டதும் ஒப்பித்த மகளை கட்டிக்கொண்டு கதறினான்.

“சாரிடா. அப்பா உங்களை இனி இப்படி விட மாட்டேன். சாரிடா…” என்றவனுக்கு பேச வேறு வார்த்தைகளும் தெரியவில்லை.

அக்னி வேந்தனுக்கும் இருவரையும் கண்டு கண் கலங்கியது.

தமையனின் கண்ணீரை காண பிடிக்காதவனாக வெளியில் வந்திருந்தான். அங்கோ தன்னவளின் அழுகைச் சத்தம் அவனைத் திசை திருப்பியது.

அவளைக் காணாது அவளுக்கு எதிர்புறம் நகர முயன்ற கால்களை மனம் தானாக அவளிடமே திருப்பி விட, ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன், மனமதன் புறமே சாயும் நிலை கொண்டான்.

அவளருகில் இறுகிய முகத்துடன் சென்றவன், அவளின் பின்னந்தலை கூந்தலை பற்றி தன்னெஞ்சில் சாய்த்துக் கொள்ள, அவன் நெஞ்சில் முட்டியே மீதி கண்ணீரையும் செலவழித்தாள்.

அவனும் அவளை அணைக்கவில்லை. அவளும் அவன்மீது கரங்களை பதித்துக் கொள்ளவில்லை. அவளது நெற்றியும் அவனின் மார்பும் மட்டுமே உறவாடிக் கொண்டது.

மெல்ல மெல்ல அவளின் அழுகை அடங்கியதும், தானாக விலகியவன் விறுவிறுவென அங்கிருந்து சென்று விட, மகளை சமன்செய்து விட்டு வெளியில் வந்த விக்ரம் தான் இருவரையும் கண்டு புருவம் சுருக்கினான்.

இடைப்பட்ட நேரத்தில் அக்னி வேந்தனின் காதலை பவித்ராத்யா மறுத்து விட்டதை அறிந்திருந்தான்.

திலோத்தமாவின் நிலை சீராகும் வரை, அனைவரும் அமைதியையே கடைபிடித்தனர்.

தற்போது அவள் இயல்பு நிலைக்குத் திரும்புவதாகத் தெரிந்ததும் தான் மூச்சே விட முடிந்தது விக்ரம வேந்தனுக்கு.

மனையாள் கண் விழித்து விடுவாள் என்ற தைரியம் வந்தபிறகே சற்று இலகுவானான்.

அக்னிலாவிற்கு தேவையானதை எல்லாம் அவனே செய்து கொண்டிருக்க, மற்றவர்கள் வெளியில் அமர்ந்திருந்தனர்.

விஜயா தான் முதலில் ஆரம்பித்தார்.

“நீ வேலை கிடைச்சுருக்குன்னு தான சொன்ன. ஆனா ஏன் சொல்லாம போன பவி?”

பவித்ராத்யா தயக்கத்துடன் நிவேதாவை பார்த்தாள். அவரோ அவளை முறைத்திருக்க, “அது… சொன்னா விட மாட்டாங்கன்னு தான்… சாரி அத்தை” என்றாள் மெல்லிய குரலில்.

“என்னவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிருக்கணும் தான பவி? இவகிட்ட சொன்னா மட்டும் என்ன ஆகிட போகுதுனு நினைச்சுட்டீங்களோ அக்காவும் தங்கச்சியும்” நிவேதாவின் வார்த்தைகள் சுட,

“என்ன அத்தை இப்படிலாம் பேசுறீங்க நிஜமா அப்படியெல்லாம் இல்ல. சாரி அத்தை” என்றவளுக்கு மீண்டும் கண்ணில் நீர் நிரம்பி விட்டது.

அதற்கு மேலும் அவளிடம் கோபத்தைக் காட்ட மனம் வரவில்லை. “இனி இப்படி பண்ணாத பவிமா…” என்றதும், பலவீனமாகத் தலையசைத்தாள்.

“இனி சொல்லாம போக மாட்டேன் அத்தை…”

“அப்போ சொல்லிட்டுப் போவியா?” ஜெயசுதா முறைத்தார்.

அவளிடம் பதில் இல்லை. அவளையும் சற்று தள்ளி இந்த உரையாடல்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல அலைபேசியில் மூழ்கி இருந்த அக்னியையும் பார்த்த விஜயா,

“நீ ஏன் அகியை வேணாம்னு சொன்ன?” என நேரடியாகக் கேட்டிருக்க, அக்னியின் விரல்கள் ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்து விட்டு மீண்டும் தொடர்ந்தது.

அக்கேள்விக்கு தலையைக் குனிந்தவள் தான் நிமிர்த்தினாளில்லை.

“பதில் சொல்லு டார்லிங்… எங்க அகிக்கு என்ன குறைச்சல்? ஏன் நோ சொன்ன?” குருமணியும் கேட்க, “நோ சொல்ல கூடாதா அங்கிள்” என்று முணுமுணுத்தாள்.

அதில் ஜெயசுதா கடுப்பாகி, “தாராளமா சொல்லலாம். அந்த நோ’வை அவன் கூட ஒட்டி உறவாடுறதுக்கு முன்னாடியே சூசகமா சொல்லிருக்கலாம். நீ அப்படி எதுவும் சொன்ன மாதிரி எங்களுக்குத் தெரியல” என்றதும், நெஞ்சில் பெருத்த வலி.

அவனுடன் அளவளாவி விட்டு கழற்றி விட்ட தொனியில் இருந்தது ஜெயசுதாவின் பேச்சு.

அது நிவேதாவிற்கும் சங்கடம் கொடுக்க, “விடுங்கமா. அவங்க பிரச்சினை அது… நம்ம தலையிட வேணாம்” என்றிட,

“அது அவங்களுக்குள்ள நடக்குற வரை தான். அப்பட்டமா எங்களுக்கும் தெரிஞ்சுதே ரெண்டு பேரும் காதலிக்கிறாங்கன்னு” ஜெயசுதா அக்னி வேந்தனின் முகம் காட்டிய வலியை தாங்கிக்கொள்ள இயலாமலே சண்டை இட்டார்.

அக்னியோ வெடுக்கென எழுந்து, “போதும் சுதா. லவ் தானா வரணும். அப்படி வந்தாலும் அதை ஸ்ட்ராங் ஆக்கிக்கிற அறிவும் தானா வரணும். அடுத்தவங்க வேணும் வேணாம்னு சொல்றது பொறுத்து, மனசை மாத்திக்கிற காதல் எனக்கு வேணாம்… இனி இதை பத்தின பேச்சு என் காதுக்கு வரக்கூடாது…” என அழுத்தம் திருத்தமாகக் கூறி விட்டு செல்ல, பவித்ராத்யா திடுக்கிட்டாள்.

அடுத்தவங்க வேணும் வேணாம்னு சொல்றதுன்னா? நானும் திலோவும் பேசிக்கிட்டது இவருக்கு தெரிஞ்சுடுச்சா? திலோ சொல்லல. நானும் சொல்லல. ஒருவேளை பொதுவா சொன்னாரா? எச்சிலை விழுங்கினாள்.

இறுதியாக ‘இந்தக் காதல் தேவையில்லை’ என்ற வாசகம் அவள் உயிரை உறுஞ்சி வதம் செய்வதை வார்த்தையால் விவரிக்க இயலவில்லை.

திலோத்தமா கண் விழித்ததும் முதலில் தேடியது அக்னிலாவைத் தான்.

“நிலா எங்க நிலா எங்க” என்று நிதானமற்று எழுந்து அமர்ந்து விட்டவளை விக்ரம் தான் சரி செய்தான்.

“அவள் நல்லாருக்கா திலோ. தூங்கிட்டு இருக்கா… நீ படு”

“இல்ல அவளை நான் பார்க்கணும். அவளை பார்க்கணும்” எனப் பரபரத்திட, இறுதியில் உறங்கி கொண்டிருந்த அக்னிலாவையே பவித்ராத்யா தூக்கி வந்து காட்டி விட்டாள்.

“பாருக்கா அவளுக்கு ஒன்னும் இல்ல நல்லா தான் இருக்கா. நீ முதல்ல ரிலாக்ஸ் ஆகு” என்றாள்.

அவளோ மகளைக் கட்டிக்கொண்டு கதறி அழுதாள். தாயின் அழுகுரலில் தானும் அழத்தொடங்கிய குழந்தையை விக்ரம் தான் தூக்கி சரி செய்தான்.

“போதும் நிறுத்து. இப்ப எதுக்கு இப்படி ஒப்பாரி வச்சுட்டு இருக்க. அவளைக் கூட்டிட்டுப் போய் பிரச்சினைல மாட்டிக்கிட்டு… எங்களையும் பதற வச்சுட்டு இந்த அழுகை வேற…” அவளை நிறுத்த அக்னி தான் சத்தமிட்டான்.

அதன்பிறகே சுயநினைவுக்கு வந்தவளுக்கு, விக்ரமை ஏறிடவே இயலவில்லை.

பூமியில் புதைந்து விட மாட்டோமா என்றிருந்தது. மகளைத் தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்து கொண்டிருந்த விக்ரம், “நீ படு திலோ. கைல ட்ரிப்ஸ் ஏறுது பாரு” என்றதோடு, அவளிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

அக்னி, பவித்ராத்யா, நிவேதா என அனைவரும் கடிந்தனர். கோபம் காட்டினர். பின் சமாதானம் செய்தனர். ஆனால் விக்ரம்?

அவளுக்கு ட்ரிப்ஸ் முடியும் நேரத்தில் தாதியரை அழைத்து வருவதும், கழிவறைக்குச் செல்ல உதவி செய்வதுமாக அவளைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டானே தவிர்த்து கோபத்தை கூட காட்டவில்லையே.

ஒருவேளை கோபம் கொள்ளும் அளவு இந்த உறவு முக்கியமானதாகப் படவில்லையோ? நினைக்க நினைக்க நெஞ்சம் ஆறவில்லை.

ஒரு நாள் கழிந்தும், அவன் எதுவுமே கேளாதது மனத்தைக் குத்தி குடைந்தது.

பெரியவர்கள் அக்னிலாவை மற்றொரு அறையில் வைத்திருக்க, விக்ரமும் திலோத்தமாவும் மட்டும் தனித்திருந்தனர்.

“இந்த ட்ரிப்ஸோட ஸ்டாப் பண்ணிக்கலாம்னு சொல்லிருக்காங்க திலோ. உன் புது ஆபிஸ்ல இருந்து கால் வந்துட்டு இருக்கு. பேசுறியா?” என சலனமின்றி கேட்டான்.

அவனுக்கு தெரியாமல் வேலையை விட்டுட்டு வேறொரு கம்பெனியில் சேர்ந்திருக்கிறாள். அதுவும் பெங்களூரில்!

“எப்ப வர்றதா கேட்பாங்க? என்ன சொல்லட்டும்?” கம்மிய குரலில் கூற, “உன் இஷ்டம்…” என்றான்.

பொங்கிய கேவலை அடக்கி கொண்டு, “என்மேல கோபமே இல்லையா விக்ரம். இல்ல, கோபப்பட கூட பிடிக்கலையா?” எனக் குமுறியவளை வெறித்தான்.

“என் கூட வா’ன்னு சொன்னப்ப எந்தக் கேள்வியும் கேட்காம என்னை நம்பி வந்த. எந்த பிடிமானமும் இல்லைன்னாலும் எனக்குப் பிடிச்ச ஒரு அழகான வாழ்க்கையை குடுத்த. இப்போ நீயே இந்த உறவை முடிச்சுக்க நினைக்கிற. உன் முடிவை மதிக்கிறது தான சரி…” எனத் தலை சாய்த்துக் கூறிட, அவள் திகைத்தாள்.

“ஆனா ஒன்னு சொன்னியே, சந்தர்ப்ப சூழ்நிலையால உருவான உறவுன்னு… மேலோட்டமா பார்த்தா அப்படி இருக்கலாம். ஆனா நான் உன்னை சந்தர்ப்பத்துக்காக மட்டுமே கல்யாணம் பண்ணிக்கல. உன்னை விரும்புனேன் திலோ. உன்னை பார்க்குறதுக்காவே உன் தெரு வழியா வருவேன். அதை தாண்டுற வரை என் கண்ணு உன்னைத் தேடிட்டே இருக்கும். உனக்கு என்னால ஒரு பிரச்சினைன்னதும், அதை தீர்க்க நிறைய வழி இருந்துருக்கலாம். ஆனா, உன்னை எனக்குள்ள வச்சு அடைகாத்துக்கணும்னு நினைச்சதுக்கு காரணம் காதலைத் தவிர வேற எதுவுமே இல்ல. இதை நான் சொல்லிருக்கணும்னு எப்பவும் யோசிச்சது இல்ல திலோ. ஏன்னா இதை விட அதிகமா உன் மேல நான் காதலை காட்டிருக்கேன்னு நம்பிட்டு இருந்தேன்.

கொஞ்ச நாளாவே இதை உங்கிட்ட சொன்னா நல்லாருக்குமோன்னு யோசிச்சுருக்கேன். ஆனா, இதை சொல்லாம விட்டது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு நீ எழுதி வச்ச லெட்டரை படிச்சதும் தான் புரிஞ்சுது.

நீ என்னை சந்தர்ப்ப சூழ்நிலைக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டன்னா, இப்ப நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் ஒத்துக்குறேன்…” என்று திடமாக நின்றவனை கண்ணிமைக்காது பார்த்தாள்.

போதை தொடரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 55

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
48
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment