Loading

நட்சத்திரம் 13

அன்று

நீல வான மேடையில் வெள்ளை நிலா மகள் நாணம் கொண்டு செம்மை பூசிக்கொண்டு, வெந்நிறத்தில் ஒரு புள்ளி குருதி நிறம் கலந்து செந்நிறம் கொண்ட வெண்ணிலவாய் முழு நிலவாய் செம்மை நிறத்தில் வலம் வரும் அன்று செந்நிலா ஆனாள் வான தேவதையின் ஒரே மகள் வெண்ணிலா.

 

முப்பதாண்டுக்கு ஒரு முறை வான வீதியில் வலம் வருவாள் செந்நிலவாய், தனக்குச் சாயம் பூசிக்கொண்டு வானை அலங்கரிக்கும் வேளையில் தங்க மீனாய் வான் முழுவதும் நட்சத்திரங்கள் சூழ்ந்திருக்கும் அந்த இரவில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட துருவன், நக்‌ஷத்ராவின் மறுபிறப்பே பிரகதீரன், மகிழினி..

 

நான் துருவன் இப்பொழுது எனக்கு மூச்சு வாங்குகிறது என்னால் இந்தச் சைக்கிளில் அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியாது ஆனால் நான் செய்தாக வேண்டும், என் நக்‌ஷத்ராவுக்காக ஆமாம் என் நக்‌ஷத்ரா, நித்தம் எனக்காக என்னைக் காண வரும் என் நட்சத்திரம் அவள், செந்நிலா ஆரம்பம் ஆவதற்குள் நான் அங்குச் செல்ல வேண்டும் எனக்காக அவள் காத்திருப்பாள் என் நட்சத்திர தேவதை..

 

இப்பொழுது என் இதயத் துடிப்பை துல்லியமாக என்னால் கேட்க முடிகிறது, என்னுள் எழும் படபடப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை,ஆனால் என் இதயத்தின் துடிப்பே அவள் தானே அவளுக்காகத் தான இந்த அவசரகதியில் சைக்கிள் ஓட்டி பழக்கம் இல்லாதவன் சென்னை கடற்கரை சாலையில் தாறுமாறாய் ஓட்டி கொண்டிருக்கிறேன்.

 

இதோ அவள் இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டேன், நித்தமும் எனக்காகக் காத்திருக்கும் நட்சத்திர தேவதை இனி காத்திருக்கத் தேவையில்லை.

 

இந்தப் படபடப்பும் வேகமும் அவளுக்காகத் தான், அவள் என் தேவதை, அவளை முதல் முறை கண்ட நொடியில் காதலில் விழுந்தான் அவளின் துருவன் , அவள் ஒரு சுவாரசிய பொக்கிஷம்., துருவனின் நக்‌ஷத்ரா.

 

நீல வானத்து நிலவுத் துகள்களாய்

நட்சத்திரப் புள்ளியாய் உருவான காரிகை!

அடர்ந்த பேரண்டத்து அமுதாய்த் தோன்றி,

என் அக அகிலத்தை ஆளும் தேவதையிவள்!

விண்வெளியின் பேரமைதியைக் கிழித்துக்கொண்டு

நட்சத்திரத் துகள்களாய் உருவெடுத்த பேரரசியே!

காலத்தின் எல்லையைக் கடந்து என்னாளும் எனை ஆளும்,

உன் ஒரு துளி எழிலைக் காணக் கண் கோடி போதாதடி!

​இருள் சூழ்ந்த என் விதியின் விளிம்பில்,

மின்னி மிளிரும் விண்மீன் ஒளிச்சுடரே!

நீலக் கடலின் ரகசியத்தைச் சுமக்கும் உன் விழிகளில்,

என்னைத் தொலைத்து காதல் செய்ய யுக யுகமாய் தவம் கிடந்தேன்!

​விண்மீன் தேவதையே…

இரவின் மௌனத்தில் உன் கால் தடம் தேடி,

ஆயுள் வரை காத்திருக்கும் உன் துருவன் நான்!

******************

கிழக்கில் ஆதவன் உதயமாகி தன் ஒளி கதிர்களைப் பரப்ப அந்த விடியற் காலை வேளையில் கையில் கோப்பை தேநீருடன் வீட்டின் பால்கனியில் எதையோ யோசித்தவாரு நின்றிருந்தான் துருவன்.. அவனின் மனதை குடைந்தெடுத்துக்கொண்டிருந்தது அந்த ஏரியின் பெயர் மின்னும் நட்சத்திர ஏரி, ஷைனிங் ஸ்டார் லேக் (கற்பனை பெயர்)

 

“பேப்பர்” என்ற குரலில் தன்னிலை அடைந்தவன்,

 

வாசலில் கிடந்த செய்திதாளை பார்த்து விரைந்து ஓடினான் வேக வேகமாகப் புரட்டி பார்த்தவன் அதிலிருந்த எதோ செய்தியை பார்த்து சற்று அதிர்ந்தவன்,

 

இது தான் நடக்கும் என்று அறிந்தவன் போல் நின்றிருந்தான்

 

“அம்மா அம்மா” என்ற அழைப்புடன் அடுக்களையில் நுழைந்தவன் நாசியை நிரப்பியது மண்ணெண்ணெயின் வாடையுடன் வடித்த சோற்றின் வாசனையும் சேர்ந்து வர, புகை மண்டிய அடுக்களையிலிருந்து கேட்டது தாய் நர்மதாவின் குரல்.

 

“எய்யா செத்த நேரம் பொறுத்துக்க இந்தா இப்போ சாப்பாடு தயாராகிரும்” என நர்மதா சொல்ல,

 

“அம்மா வடிச்ச தண்ணில சோற்றைப் போட்டு கொடு போதும், முக்கியமான வேலையா வெளிய கிளம்பணும் மா” எனச் சொல்லியபடி தரையில் அமர,

 

“மன்னிச்சுக்க அய்யா செத்த தாமசம் (தாமதம்) ஆயிருச்சு.”

 

“அம்மா, நீ எதைக் கொடுத்தாலும் நான் சாப்பிடுவேன் தெரியாதா, இப்போ மண்ணெண்ணெய்ல எரியுற ஸ்டவ் வந்திருச்சு வாங்கித் தாரேன்னு சொல்லுறேன் கேட்க மாட்ற, சமைச்சா மண் அடுப்புல தான் சமைப்பேன்னு சொல்லுற, அப்போ தாமதம் ஆகத் தான் செய்யும்” எனச் சொன்னவன் அடுக்களையில் நுழைந்து சாப்பாடு வடித்த தண்ணீரில் சோற்றைப் போட்டு உண்ண ஆரம்பித்திருந்தான் துருவன்.

 

“உங்க அய்யனை மாதிரியே செய்றீயே துருவா?”

 

“எனக்கு இப்போ அதைப் பத்தி பேச நேரமில்லை நான் உடனே கிளம்பியாகணும் “ என்றவன் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினான் துருவன்.

 

 

 

 

“என்ன செழியன் சொல்றீங்க இப்போ நீங்க செய்யுற வேலையால எத்தனை பேர் வேலையிழக்க போறாங்க தெரியுமா” எனக் கோபமாகவே வந்து விழுந்தன துருவனின் வார்த்தைகள்.

 

“இங்க பாரு துருவன் நீ இப்போ தான் கத்துக்குட்டி, நீ சொல்றன்னு ஒரு குழுவை அமைச்சு ஒண்ணும் இல்லாத மண்னை தோண்டிப் பார்க்க முடியாது அந்த இடம் இப்போ அரசு கட்டுபாட்டுக்கு கீழ வந்திருச்சு இனி எது பேசுறதா இருந்தாலும் அரசாங்கத்துகிட்ட கடிதம் போட்டு பேசிக்க, நீ கடுதாசி போட்டு அதைச் சர்கார் பார்த்து அங்கீகாரம் கொடுக்குறதுகுள்ள அந்த இடம் சுற்றுலாத்தலமா மாறிரும் “ எனச் சொல்லி சிரித்தார் செழியன்.

 

“செழியன்., நீங்க நினைச்சா இதை மாத்த முடியும் “ எனத் துருவன் சொல்ல,

 

“நினைச்சா மாத்த தான் முடியும் ஆனால், நான் இதைச் செஞ்சால், எனக்கு எந்த ஆதாயமும் இல்லையே, ஆனா இப்போ எனக்கு இரண்டடுக்கு மாடி வீடு, என் குழந்தைங்க படிப்பு எல்லாம் சர்காரே பார்த்துகுறேன் சொல்லிருச்சு” எனச் சொல்லியவர் மர்ம்மாய்ப் பார்க்க,

 

“நீங்க வரலாற்ற மாற்ற முயற்சி பண்ணுறீங்க யோசிச்சு பேசுங்க செழியன்”

 

“துருவன் நீங்க என்ன தான் தோண்டினாலும் அங்கயிருந்து ஒரு மண்ணும் கிடைக்கப் போறதில்லை, அந்த இடத்துல படகு சவாரி வைக்கலாம்ணு சர்கார் முடிவு பண்ணிருக்கு, இதுல என்னால தலையிட முடியாது” எனச் செழியன் சொல்ல,

 

“அங்க எதோ இருக்குறதா என் மனசு சொல்லிக்கிட்டே இருக்கு, உங்களால் தான் இதற்குச் சட்ட ரீதியில் அனுமதி வாங்கிக் கொடுக்க முடியும்” எனச் சொன்னவன் செழியனை ஆராய்ச்சியாய் பார்க்க,

 

“உங்க பார்வைக்கான அர்த்தம் என்னால புரிஞ்சுக்க முடியுது துருவன், நான் சம்பளம் வாங்குவேனே தவிரக் கிம்பளம் வாங்க மாட்டேன், உங்களுக்காக வேணும்னா நான் ஒரு உதவி செய்யுறேன், மூன்று மாத கால அவகாசம் வாங்கித் தருகிறேன் அதற்குள் முந்தைய காலத்தைச் சேர்ந்த பொருளோ அல்லது அதற்குச் சமந்தபட்ட எதாவது அந்த ஏரியிலிருந்து எடுத்திட்டு வாங்க அதை வைத்து நான் சர்காரிடம் எதாவது பேசி பாக்குறேன் “ எனச் செழியன் சொல்ல துருவனின் முகத்தில் ஒரு பொலிவு ஏற்பட்டது.

 

“எனக்கு ஐந்து பேர் கொண்ட குழுவும் வேண்டும், அதையும் சேர்த்து ஏற்பாடு செய்து தர முடியுமா.? செழியன்” எனத் துருவன் சட்டெனக் கேட்டு விட,

 

“இல்லை துருவன், ஏற்கனவே இங்கே ஆட்கள் குறைவாக இருக்காங்க, ஒண்ணும் இல்லாத இடத்தை ஆராய்வதற்கா இத்தனை பேர்னு சர்கார் என்னைத் தான் கேள்வி கேட்கும் நீங்கள் முதலில் போய் அங்கு வித்தியாசமான பொருள் கிடைத்தால் முதலில் எனக்குத் தான் சொல்லணும் நான் உங்களுக்கு உதவி ஆள் கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன்” எனச் செழியன் சொல்ல,

 

அனுமதி கிடைத்த வரை போதுமென்றே துருவனின் மனம் எண்ணியது

 

“இரண்டு நாள் கழித்து, அனுமதி கடிதத்துடன் வருகிறேன் துருவன், நான் பெர்சனலா சொல்லுறேன் இப்படி நீர் நிலைகளை ஆராய்ந்து அதில் பொருள்களைக் கண்டுபிடிப்பதென்பது அரிதிலும் அரிது” எனச் செழியன் சொல்ல,

 

“இல்லை செழியன் அந்த ஏரி எப்படிக் கடலுக்கு அருகிலேயே உருவானது, அதுவும் அந்த நீர் உவர்க்கவில்லை எப்படி இது சாத்தியம் இதற்கான தேடலில் தான் நான் இறங்க போகிறேன்.”

 

“துருவன் நீங்க சொல்ற யூகம் எல்லாமே சரி தான் ஆனால் இதெற்கெல்லாம் அரசாங்கம் நிதி ஒதுக்காது அதுக்காகத் தான் சொல்றேன் இருந்தாலும் இவ்வளவு சின்ன வயசுல உங்களுக்கு இருக்குற ஆர்வம் அதுக்காகப் பேசிப் பார்க்கிறேன் சாதகமான பதிலோட ஒரு வாரம் கழித்து வாரேன் ” எனச் செழியன் யோசனையில் நின்றிருந்தான் துருவன்.

 

 

 

நாட்களும் கடந்தன ஆனால் சாதகமான பதில் துருவனை வந்து சேரவில்லை, அவனின் ஒரே கனவு அகழ்வாராய்ச்சி பணியில் யாரும் கண்டறியாத ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும், அதற்கு அவன் தேர்வு செய்த இடம் தான் அந்த மின்னும் நட்சத்திர ஏரி, பெயரிலே மின்னுகிறதே அது தான் துருவனை முதலில் ஈர்த்தது.

 

அகழ்வராய்ச்சி செய்ய அவன் தனக்கான குழுக்களைத் தேர்வு செய்ய முயன்ற போது தான் அந்த ஏரியை படகு சவாரி செய்யும் சுற்றுலா தலமாக மாற்ற போவதை அறிந்து உடைந்து போனான் துருவன் ஆனால் அந்த ஏரியின் மீது உண்டான ஈர்ப்பும் ஆர்வமும் துளியும் குறையவில்லை துருவனுக்கு.

 

தனிமையை விரும்ப ஆரம்பித்தான் துருவன், அந்த இடத்தைச் சுற்றுலா தளமாக மாற்றினால், அந்த நிலத்தின் தன்மை மாறிவிடும் குப்பைகள் படிந்த ஏரியாக மாறிவிடும் , இயற்கை தன் குணத்தை இழந்துவிடும் என்ற கவலை மேலோங்க, எதோ ஒன்று அந்த ஏரியை காணத் தூண்ட உடனே அங்குச் செல்ல நினைத்தான் துருவன்.

 

 

 

 

 

பறவைகளின் ரம்மியமான இசையில் பனை மரங்களும் தேக்கு மரமும் சூழ்ந்த அந்தக் காட்டுப் பகுதியில் நின்றிருந்தான் துருவன், விலங்குகளின் சத்தமும் சேர்ந்து கேட்,க சிந்தை கலைக்கும் வண்ணம் பொங்கும் கடலின் அலையோசை இந்த ரம்மியமான சூழல் அவன் மனதில் இருந்த குழப்பங்கள் மறக்க செய்த்து..

 

அங்கே நிரம்பி வழிந்த ஏரி கொள்ளை அழகு தண்ணீரை கைகளில் ஏந்தி பருகியவன் ‘உவர் நீர் சுற்றியுள்ள பகுதியில் இவ்வளவு தித்திப்பான நீரா .?’ அவன் மனம் கேள்வி எழுப்ப இந்த ரம்மியமான சூழலை இசையால் நிரப்ப அவனை ஊந்தியது அவன் மனம்

 

தேக்கு மரங்களும் மாமரங்களும் சூழ்ந்திருந்த அந்தக் காட்டில் தனித்து நின்றிருந்தது அந்த மாமரம் அதிலிருந்த தங்க நிற மாம்பழங்கள் அவனுள் பசியைத் தூண்டியது அதைப் பறிக்க முற்பட்டவன் மரத்தின் மீது ஏறினான் துருவன் தித்திப்பான மாம்பழங்களை உண்டு முடித்தவன் தன்னிடமிருந்த புல்லாங்குழலை எடுத்து இசை மீட்ட ஆரம்பித்திருந்தான் துருவன்..

 

​திசையெங்கும் பரவிய மோகனக் குழலிசை,

காற்றின் கரம்பற்றி அவள் செவிகளைத் தீண்டியது!

இரு துருவங்களை இணைக்க வந்த தூதுவனாய்

அந்தக் காற்றே காலத்தின் கதவைத் திறந்தது!

விதியின் ஆட்டம் தொடங்கியதை உணராமல்,

அவ்விசையில் தங்களைக் தொலைத்தனர் இருவரும்!

 

 

 

கத்தரிப்பூ நிற வானில் மஞ்சள் நிற மேகங்கள் சூரிய ஒளியின் பிரதிபலிப்பில் குறைந்த வெளிச்சத்தில் பகல் பொழுதில் முடிவில்லா உயரத்தில் இருந்து ஊதா நிற பூக்கள் கொடியாய்ப் படர்ந்திருக்க அதில் தொங்கி கொண்டிருந்த ஊஞ்சல் , அந்தக் கொடியின் இலைகள் மஞ்சள் நிறத்திலிருக்க,

 

பூ ஊஞ்சலில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள் அவள் நக்‌ஷத்ரா அங்குப் பரவியிருந்த காற்றில் எப்பொழுதும் ஒரு வித நறுமணம்,

 

“இளவரசி என்ன அழகாய் ஊஞ்சல் ஆடுகிறார்கள், இன்று அவர்களின் கூந்தலை அலங்கரிக்கும் பாக்கியம் பெற்றவள் நான் தான்” எனச் சிவப்பு நிற பூ சொல்ல

 

“நீ சிவப்பாக இருக்கலாம் ஆனால் இளவரசிக்குப் பிடித்தது ஊதா நிறம் தான், ஆகாயத்தைப் பார்த்தாயா? ஊதா நிறத்தில் இருக்கிறது, இன்று என்னைத் தான் இளவரசி சூடப் போகிறார்கள்” என்றது ஊதா பூ.

 

“நீங்கள் இருவரும் இளவரசியின் சிகையை அலங்கரிக்கப் போவதில்லை அவரின் வெள்ளை நிற உடைக்கு ஏற்றார் போல் நான் இருக்கிறேன்” என வெள்ளைப் பூ சொல்ல,

 

ஒய்யாரமாய் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தவளின் சிகை தரையை உரச எழுந்து நிற்க அங்கிருந்த வெண்நிற அணில்கள் அவளின் பழுப்பு நிற சிகையை அலங்கரிக்க ஆரம்பித்திருந்தனர் அழகாய் பின்னலிட்ட அணில்கள்,

 

“இளவரசி, தங்களுக்கு எந்த நிற பூக்கள் வேண்டும் “ ஒரு அணில் கேட்க

 

புன்னகை சிந்தியவளின் இதழ்கள் அழகாய் வளைய, அந்த வெள்ள நிற அணிலின் முன் வலக்கையை நீட்ட ஆனந்த கூச்சலிட்ட அணில் துள்ளி குதித்தோடி அவள் தோள்களில் அமர்ந்தது வெள்ளை நிற அணில், அணிலின் காதுகளில் அவள் எதோ சொல்ல,

 

அவள் தோளில் அமர்ந்தபடி கீச் கீச்சென்று கூச்சலிட அனைத்து மலர்களும் தானாய் சரமாய் மாறியிருந்தது அத்துனை நிறமும் கலந்த மலர் சரத்தை வெள்ளை அணில்கள் சூடி விட, காரிகை அவள் கூந்தலில் அழகாய் இதழ் விரித்துச் சிரித்தது மலர்கள்.

 

தேவலோகத்து தேவதைகளும் அஞ்சி நிற்கும் பேரழகு!

மாய உலகத்து மங்கையரும் வியந்து பார்க்கும் பேரரசி!

அழகெனும் சொல்லுக்கே அகராதியாய் அவதரித்தவள்…

​விண்மீன்களின் தேசத்தில்

ஒளிவீசும் கிரீடமாய்,

நிகரற்ற சிங்காரப் பேழையாய்

அரியணையில் அமர்ந்திருக்கும் இளவரசி… நக்‌ஷத்ரா!

“சிக்கு..” அவள் அழைத்தாள் தேன்குரல் கொண்டவளின் அழைப்பில் சிரித்தபடி வந்து நின்றது அந்த அணில்.

 

“இளவரசியாரே, உங்களின் குரல் மெல்லிசையாய் என் செவிகளைக் குளிரூட்டுகிறது “ என்றது சிக்கு என்ற வெள்ளை அணில். அந்த வெள்ளை அணில் கூட்டத்திற்கு இவர் தான் தலைவராம்.

 

“சிக்கு உனக்கு அந்த மெல்லிசை கேட்கிறதா?, எதோ இசை என் செவிகளைத் தீண்டுவது போல் உணர்கிறேன்” என்றாள் நக்‌ஷத்ரா.

 

“நட்சத்திர தேவியே அப்படி ஒன்றும் எனக்குக் கேட்கவில்லையே” சிக்குப் பதில் கொடுக்க அங்கிருந்த மற்ற அணில்கள் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர்

 

அந்த நட்சத்திர உலகத்தில் இருக்கும் விலங்குகளும் பறவைகளும் மிகச்சிறியதாக இருக்கும் கைகளில் ஏந்தும் அளவிலே இருக்கும்.

 

நக்ஷ்த்ராவின் செவிகளை எதோ மெல்லிசை தீண்ட இசையில் மயங்கியவள் இசை எங்கிருந்து வருகிறது என்பதை அறியத் துணிந்தாள்.

 

“சிக்கு எனக்காக ஒன்று செய்வாயா? இந்தப் படலத்தைத் தாண்டினால் என்ன இருக்கிறது என்று பார்த்து வருவாயா? ” என முகத்தை வாட்டமாய் வைத்தபடி அவள் கேட்க,

 

“தேவி அதற்கு நமக்கு அனுமதி இல்லை” எனச் சிக்கு சொன்ன நொடியில் அவளின் நீல நயனங்கள் அகல விரிய அவளின் கோபத்திற்கு ஏற்றாற் போல் அவள் தலைக்கு மேலிருந்த ஆகாயம் ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் மாறினாலும் அந்த இசை இவளின் செவிகளை எட்ட சாந்தமாய் மாற மீண்டும் ஊதா நிறத்திற்கே மாறியது அந்தப் படலம்.

 

“இப்பொழுது நீ சென்று பார்த்து வருகிறாயா இல்லை நானே சென்று பார்த்து வரவா? இந்த இனிமையான இசை எங்கிருந்து வருகிறதோ அந்தக் கருவி எனக்கு வேண்டும்” என அவள் சிக்குவை பார்த்து உத்தரவிட,

 

“இளவரசியாரே நான் எவ்வாறு செல்வது” தன் சிறிய பல் வரிசையைக் காட்டி சிக்கு கேட்க,

 

“ஒளிரும் வண்ணத்துப் பூச்சிகள் உனக்கு வழிதுணையாய் வரும் சிக்கு அதன் போக்கில் செல்” என அதன் தலையை வருடி அவள் சொல்ல,

 

“ஒளிரும் வண்ணத்துப் பூச்சிகளா..?” ஆவென வாயை பிளந்தது சிக்கு.

 

“ஆம் சிக்கு அதைத் தொடர்ந்து செல்” என நட்சத்திர லோகத்தின் தேவதை நக்‌ஷத்ரா அனுமதிக்க,

 

அங்கே தொங்கிக்கொண்டிருந்த ஊஞ்சலில் வேகமாய் ஏற ஆரம்பித்திருந்தது சிக்கு நக்‌ஷத்ரா சொன்னது போல் ஒளிரும் வண்ணத்துப்பூச்சியின் உதவியுடன் நிமிடங்களில் நட்சத்திர ஏரியிலிருந்து பொத்தெனக் கரைக்கு வந்து விழுந்தது சிக்கு விழுந்த நொடியில் சுற்றும் முற்றும் பார்த்தது ஆனால் இசை எங்கிருந்து வருகிறது என்பதைச் சிக்குவால் அறிய முடியவில்லை.

 

“இது தான் பூலோகமா, நம் உலகத்தைப் போன்று இவை வண்ணமயமாக இல்லை, சரி வந்த வேலையைப் பார்ப்போம்” எனத் தனக்குள் பேசிக்கொண்ட,

 

தன் காதுகளைக் கூர்மையாக்கி மெல்ல கேட்ட போது மாமரத்தின் மேல மாயக் கண்ணனை போல் குழல் இசைத்துக்கொண்டிருந்த துருவனைப் பார்த்தது.

 

‘ஓஓ..! இந்தக் கருவியில் இருந்து தான் இசை வருகிறாதா.?’ என நினைத்துக்கொண்ட சிக்கு மாமரத்தின் மேல் ஏறியது “இவன் தான் அந்தக் கருவியை இசைத்து கொண்டிருக்கிறானா..?” எனப் பேசியபடி துருவனின் தலையில் குதிக்க அரண்டு விழித்தவனின் முகத்தில் பஞ்சு போன்ற வாலைக் கொண்டு மூன்று முறை அடித்தது, துருவன் அங்கேயே உறங்கி போனான் அப்பொழுது கீழே விழுந்த புல்லாங்குழலை எடுத்துக்கொண்டு மறுபடியும் நட்சத்திர உலகிற்கு எடுத்துச் சென்றது சிக்கு.

 

சிக்குவின் வருகை நோக்கி அந்த ஊஞ்சலிலே காத்திருந்தாள் நக்‌ஷத்ரா,

 

“சிக்கு வந்து விட்டாயா..?” கேள்வியுடன் சேர்ந்து அவள் விழிகளில் ஆர்வம் தேங்கி நிற்க,

 

“இளவரசியாரே, இதோ நீங்கள் கேட்ட கருவி” என நக்ஷ்த்ராவிடம் சிக்கு கொடுக்க,

 

“எங்கே சிக்கு இதில் இசை வெளிபடவில்லை, எதோ குச்சியைக் கொடுத்து என்னை ஏமாற்றுகிறாயா.?” எனச் சற்று கோபமாகவே கேட்டாள் நக்‌ஷத்ரா.

 

“அய்யோ கோபம் கொள்ளாதீர்கள் நான் உண்மையைத் தான் உரைக்கிறேன் இந்தக் கருவியிலிருந்த அந்தச் சத்தம் வந்தது” எனச் சிக்கு சொல்ல,

 

“அப்படியென்றால், இப்பொழுதே எனக்கு இதில் இசையை வர வை சிக்கு” என நக்‌ஷத்ரா குழந்தையாய் அடம் செய்ய “இப்படி அடம் செய்தால் , நான் எவ்வாறு இதை இசைப்பது? எடுத்து வரச் சொன்னீர்கள் எடுத்து வந்துவிட்டேன் இளவரசியாரே அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது இளவரசியாரே” எனச் சிக்கு வருத்தமாய்ப் பேச,

 

இதில் எப்படி இசை வரும் என யோசித்தவாரு புல்லாங்குழலில் இருந்த துளைகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள் நக்‌ஷத்ரா

 

புல்லாங்குழல் இசையில் கண்ணனிடம் ராதை தொலைந்தது போல், துருவனிடம் நக்‌ஷத்ரா தொலைவாளா..?

 

மாயக் கண்ணனின் குழலிசைக்கு மயங்காத பெண் தான் உண்டோ..?

 

செம்பொன் பாதங்கள் தரைதொட்டு அடியெடுத்து வைக்க,

இதழ்கள் மெல்ல நடுங்க மெய்மறந்து நின்றாளே!

காற்றினில் மிதந்துவந்த வேய்ங்குழல் கானத்திலே,

தன் உணர்வுகளைத் தொலைத்து மயங்கினாள் காரிகையிவள்!

​அவள் பாதம் பட்ட இடமெல்லாம் வண்ண மலர்கள்,

மெல்ல இதழ் விரித்து மெய்சிலிர்த்துப் புன்னகைக்க…

சிந்தையெல்லாம் அந்த குழலிசையின் வழியிலேயே மிதந்துபோக,

இசை மீட்டக் மாயக் கண்ணனை நேரில் காண்பாளோ?

​கண்ணனின் காதலில் உருகி வழியும்

காவிய ராதையாய் இவளும் மாறிப்போவாளோ?

விண்ணகத்துக் தாரகைகள் வடித்தெடுத்த பேரழகு…

நம் நட்சத்திர தேவதை நக்‌ஷத்ரா!

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்