
திமிர்-17
அந்த வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் அங்கும் இங்குமாய், நடையாய் நடந்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன். மனதில் மேகவர்ணாவைப் பற்றிய விஷயங்கள் தான் ஓடிக் கொண்டிருந்தது.
‘என்னதான் இவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்? தொட்டுப் பேசுகிறாள்! கட்டிப் பிடிக்கிறாள். உரிமையாய் அவள் உணர்வுகளை என்னிடம் வெளிப்படுத்தி கண்ணீர் சிந்துகிறாள். ஆனால் காதல் இருக்கிறதா? எனக் கேட்டால் மௌனம் சாதிக்கிறாள். இதை நான் என்னவென்று நினைத்துக்கொள்வது? நட்பா? காதாலா? இல்லை இரண்டிற்குள்ளும் அடங்காத உணர்வா?’ யோசிக்க யோசிக்க அவன் நடையின் வேகம் கூடியது. அவள் மீது கோபமும் வந்தது. கோபத்தின் விளைவாய், தோட்டத்தின் குறுக்கும் நெடுக்குமாய் வேகமாய் நடக்கத் துவங்கினான் வீரபத்ரன்.
“அடேய்! அரசி பெத்த அருமை மயனே? தோட்டத்தை அளந்துக்கிட்டு, குறுக்கேயும் நெடுக்கேயும் நடந்துக்ட்டு திரியுற? எம்புட்டு நேரமா, கழுத்தை இங்கிட்டும், அங்கிட்டும் திருப்பி திருப்பி பார்க்கிறது? கழுத்து நோகுது டா!”
“உன்னை யாரு இங்குட்டும் அக்கிட்டும் திரும்பச் சொன்னது? என்னைப் பார்க்காமல் வேற என்னத்தையாவது பாரு காக்காவிரட்டி!”
“அடேய்! நெட்வொர்க்கே இல்லாத ஒரு ஊரில் கூட்டியாந்து உட்கார வச்சிப்புட்ட! இங்கண நான் என்னத்தை பார்க்கிறது? பார்க்கிறதுக்கும் பேசுறதுக்கும் உன் மூஞ்சியைத் தவிர ஒண்ணுமே இல்லை. என் பொண்டாட்டியைப் பார்க்கலாம்ன்னு ஆசையோட இருந்தேன். எந்தப் படுபாவி கண்ணு பட்டுச்சோ, வேற இடமே இல்லாமல், மரத்தில் வண்டியைக் கொண்டு முட்டிப்புட்டு, என் தலை தேங்காய் மாதிரி வீங்க வச்சு கூட்டியாந்தீங்க! எனக்கு தெரிஞ்சு, உன் மாமன் அந்த வெள்ளை மண்டை தான் கண்ணு வச்சிருப்பாருன்னு நினைக்கிறேன்.!”
என காத்தவராயன் தன் போக்கில் புலம்பிக் கொண்டிருக்க, பதிலேதும் சொல்லாமல் தன் நடையைத் தொடர்ந்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன்.
“அடேய்! அரசி மயனே.. நான் உன்கிட்டக்கத்தேன் பேசுறேன்.நீ என்னவோ புள்ளத்தாச்சி பொண்ணு மாதிரி இங்கேயும், அங்கேயும் நடந்துக்கிட்டே இருக்கே? என் கண்ணுக்குத் தெரியாமல், எவனாச்சு போட்டி வைக்கிறாய்ங்களோ?” எனக் காத்தவராயன் கேட்க,
“அட, கொஞ்ச நேரம் சும்மா இரு காக்காவிரட்டி! நானே இந்த மயிலம்மா, அந்த மொட்டையைப் பத்தி ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறாளேன்னு சிந்தனையில் இருக்கேன். நீ என்னத்தையாவது உளறிக்கிட்டுத் திரியாதே!” சலிப்பாய் பதில் சொன்னான் வீரபத்ரன்.
“மொட்டையா? யாரு மொட்டை? எந்த மொட்டை? திருப்பதி மொட்டையா? இல்லை பழநி மொட்டையா?” எனக் காத்தவராயன் கேட்க,
“அதேன், அன்றைக்கு இதே வீட்டுக்குள்ளே வர்ணாவைத் தேடி வந்தானே அவன்தேன்.!” என எதையோ யோசித்தபடியே பதில் சொன்னான் வீரபத்ரன்.
“ஓ! அப்போ அவனை நம்ம தங்கச்சிக்கு தெரியுமா? அந்த மொழு மொழு மொட்டை, ஒருவேளை உன் காதலுக்கு இடைஞ்சலாய் வந்துருவான்னு பயம் உனக்கு.!” என்ற காத்தவராயனின் கேள்விக்கு,
“ம்க்கும் அவன் உசுருக்கே உலை வைக்கப் பார்க்குறியான்னு எனக்கே சந்தேகமா கிடக்கு.!” என எதேச்சையாய் வீரபத்ரன் பதில் சொல்ல,
“அடேய் அரசி மயனே..! என்னடா சொல்ற? பயந்து வருது டா!” எனக் கேட்டான் காத்தவராயன்.
“நெசந்தேன் காக்காவிரட்டி! அன்றைக்கு நம்ம வண்டிக்கு முன்னால் மரம் விழுந்துச்சே அதுக்குக் காரணம் அவன்தேன். வண்டிக்குக் குறுக்கே வந்து நின்னதும் அவன்தேன். அந்தப் பரதேசி யாருன்னு தெரியலை. உன் தங்கச்சி இப்படி பயந்து நடுங்குறா!”
“அப்போ எருமைமாடு குறுக்கே வரலையா?”
“அந்த எருமை மாடே அவன்தேன்.!”
“ஆத்தாடி ஆத்தா! என்னடா அசால்ட்டா அணுகுண்டை கொளுத்துறீங்க? இந்த ஒத்தை உசுரை வச்சிக்கிட்டு நான் படுற பாடு! முடியலை டா சாமி! எந்தப் பக்கம் போனாலும் கேட்டைப் போடுறீங்களே? எங்குட்டுத்தேன் நான் போக? இந்தப் பக்கம் உன் மயிலோட, அண்ணேங்க அந்த மலைமாடுங்க மூணூ பேரு. பத்தாக்குறைக்கு அந்த காளை மாடு கருப்பன் ஒருபக்கம். இன்னொரு பக்கம் என்னடான்னா உங்க அப்பன் எனக்குத்தேன் குறி வச்சிட்டு திரியறாரு. இதெல்லாம் பத்தாதுன்னு இந்த மொழு மொழு மொட்டைத் தலையன் வேற! யாருடா அந்த முடி முளைக்காத மொட்டைத் தலையன்.?”
“யாருன்னுதேன் தெரியலையே! உன் தங்கச்சி அந்தப் பைத்தியக்காரியும் சொல்ல மாட்டேங்குறாளே?”
“ஆமா! எங்க ஆத்தாதேன் அந்தப் புள்ளையைப் பெத்துச்சு பாரு! பொழுதன்னைக்கும் என் தங்கச்சி, என் தங்கச்சின்னு சத்தமா சொலேலாதே டா! அந்த மொட்டையன் காதில் விழுந்துடப் போவுது.!”
“விழுந்தால் என்ன? காதலுக்காக இது கூட செய்ய மாட்டியா காக்காவிரட்டி! எங்க அம்மா உன்னை நம்பித்தானே என்னை இங்கே அனுப்பி வச்சுச்சு?”
“ஆமாடா! ஆமா! நீ வாயில் விரல் வச்சாக் கூடக் கடிக்கத் தெரியாத பச்சை மண்ணு! என்னை நம்பித்தேன் உங்க ஆத்தா அனுப்பிச்சாக்கும். அடேய் கோளாறு பிடிச்சவிங்களா! உங்க காதல் செடியை வளர்க்க, என் உசுருதேன் கிடைச்சுச்சா?”
“காதலுக்காக உசிரையும் கொடுக்கலாம் தப்பில்லை காக்காவிரட்டி!”
“அதானே.. நல்லா பேசுவிங்க டா! கேட்கிறவன் கேணையாய் இருந்தால், கேப்பையிலும் நெய் வடியுமாம்! அந்தக் கதையாய் இல்ல இருக்கு. உங்க காதலுக்கு உங்க உசிரைக் கொடுங்க டா! அடுத்தவன் உசுரு என்ன உங்களுக்கு அவல் பொறியா? பொட்டலம் கட்டி கொடுக்கிறதுக்கு.?” என காத்தவராயன் பேசிக் கொண்டிருக்க, காத்தவராயனின் முன் வந்து நின்ற, வீரபத்ரன்,
“அந்த மொட்டை மண்டையன் யாருன்னு கண்டுபிடிக்கணும் காக்காவிரட்டி! அவன் யாரு, அவன் என்னத்துக்கு மேகாவை துரத்துறான்? அவனுக்கும், அவளுக்கும் என்ன சம்மந்தம்ன்னு நாம தெரிஞ்சுக்கணும். எனக்கு என்னவோ, இது சாதாரண விஷயமா இருக்கும்ன்னு தோணலை.!”
“எப்பா ராசா! நீ என்னத்தையோ கண்டுபிடி! என்னை ஆளை விட்டுரு! நான் ஊரைப் பார்த்து போறேன்.!”
“விட்டால் தானே போவ? கருவிழி வளைகாப்புக்கு இன்னும் ரெண்டுநாளுதேன் ஊடால கிடக்கு. எப்படியும் ஊருக்குப் போகத்தேன் வேணும். அதுவரை சத்தங்காட்டாமல் இரு!”
“அடேய் சத்தங்காட்டாமல் இருக்கிறது பெரியவிஷயமில்லை டா! முதலில் உசுரோட இருக்கணும்டா வீரபத்ரா.! அந்த மொட்டத் தலையன் எங்கே இருக்கானோ தெரியலை? நமக்கு எதிரே உட்கார்ந்து நம்மைப் பார்த்துக்கிட்டே இருந்தாலும், ஆச்சரியப்படுறதுக்கு இல்லைதேன்.” என வீரபத்ரனிடம், காத்தவராயன் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், ஏதோ தோன்றியவனாய், அவசரமாய் அறைக்குள் ஓடினான் வீரபத்ரன்.
“அடேய், அரசி மயனே.. எங்கே ஓடுற?” என்றபடியே பின்னால் ஓடினான் காத்தவராயன்.
ஆனால் வீரபத்ரனோ, காத்தவராயனின் கேள்வியைக் காதில் வாங்காமல், அறைக்குள் நுழைந்து எதையோ கையில் எடுத்துக் கொண்டு, மாடியை நோக்கி ஓடினான். தன் கரத்திலிருக்கும் திரையை இயக்க, சிறிய வகை வான்சிவிகையைப் (helicopter) போல் சிலுப்பிக் கொண்டு பறக்கத் துவங்கியிருந்தது, அவனுடைய ட்ரோன் கேமிரா.
தன் கரத்திலிருந்த விசையின் மூலமாய், அதனை இயக்கி,’அந்த ஊரின் ஒட்டுமொத்த இடங்களையும் சல்லடைப் போட்டு அலசினான். ஒவ்வொரு இடத்திலும், நிதானமாய் நிறுத்தி, ஆராய்ந்து முடிவெடுத்தவனாய், கீழே இறங்கி சென்றான் வீரபத்ரன்.
****
“ப்பா! எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா! பேசாமல் நடக்கிறது நடக்கட்டும்ன்னு அண்ணேங்க கிட்டே சொல்லிப்புடுவோமா? நாளைப் பின்னே ஏதாச்சும் பெருசா நடந்துருச்சுன்னா தாங்கிக்க எனக்கு தெம்பு சுத்தமாக இல்லைப்பா!” என உள்ளே போனக் குரலில் நாச்சியப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் மேகவர்ணா.
“சொல்றதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை மயிலு! ஆனால் ஏதாவது ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிடுச்சுன்னா என்ன செய்றது? பசுபதி ஒண்ணும், நாம நினைக்கிற மாதிரி லேசுப்பட்டவன் இல்லைன்னு உனக்கு தெரியும் தானே?உன் அண்ணேங்க, முத்துப்பாண்டியையும், இராஜபாண்டியையும் கூட, சமாளிச்சுடலாம். ஆனால், மூத்தவன் போஸூ.. அரிவாளைத் தூக்கிட்டு வெட்டப் போறேன்னு நிற்பான். அவனுங்களுக்கு எதாச்சும் ஒண்ணுன்னா என்னால் தாங்க முடியாது மயிலு!”
“அப்போ உங்க மவளுக்கு எதாவது ஆனால் பரவாயில்லையா?” என்ற வீரபத்ரனின் குரலில், மேகவர்ணா மற்றும் நாச்சியப்பன் இருவருமே ஒருசேர திரும்பி அவனைப் பார்த்தனர்.
“வீரா! இங்கண இருந்து முதலில் போ! இதை நாங்க பார்த்துக்கிறோம்! இது உனக்கு சம்மந்தமில்லாத விஷயம்!” என அவனை அங்கிருந்து விரட்ட முயன்றாள் மேகவர்ணா.
“நீ என் மாமன் மவ! பத்தாக் குறைக்கு, எங்க ஆத்தா, உனக்கும் எனக்கும்தேன் கல்யாணம்ன்னு பேசி வச்சிருக்கு. வருங்கால பொண்டாட்டிங்கிற உரிமை போதும்ன்னு நினைக்கிறேன். நான் காளை மாட்டுக்குப் பயந்தவனா இருக்கலாம். ஆனால், ஓடி ஒளிஞ்சுக்கிற கோழை இல்லை!” என மேகவர்ணாவைப் பார்க்காமலே பேசினான் வீரபத்ரன்.
அவளிடம் தான் பேசுகிறான்.. அவளுக்காகத்தான் பேசுகிறான். ஆனால் அவளைப் பார்க்காமலே கல்லையும் மண்ணையும் பார்ப்பது எங்கோ பார்த்துக் கொண்டு அவன் பேசிய விதத்திலேயே அவன் கோபமாய் இருக்கிறான் என்பது மேகவர்ணாவிற்கு, தெளிவாகவே புரிந்தது.
“வீரா.. நான் சொல்றதைக் கேளு!”
“கேட்க முடியாது. நான் உன்கிட்டே பேச வரலை! நான் பேச வந்தது, என் மாமன் நாச்சியப்பன் கிட்ட மட்டுந்தேன். நான்தேன் உனக்கு வேண்டாதவனாய் போய்ட்டேன்ல்ல. அப்பறம் என்னத்துக்கு என்கிட்டே பேசுறே?” அதீத கோபத்துடனே பேசினான் வீரபத்ரன்.
“வீரா.. ப்ளீஸ்..!”
“என்னடி வீரா? இந்த மூஞ்சியைப் பாவமாய் வச்சுக்கிற வேலை எல்லாம் என்கிட்டே வேணாம்! நான் வர்ரது எனக்கு முன்னவே உனக்கு தெரியுது. கேட்டால் அந்த மைடப்பி கருவிழி சொன்னாள்ன்னு சொல்லுவ! அவளை எப்படி தெரியும்ன்னு சொல்ல மாட்டே! நல்லா பல்லைக் காட்டி, காட்டி பேசுவ, ஆனால், பிடிச்சிருக்கான்னு கேட்டால் பதில் சொல்ல மாட்டே! என்னைப் பார்த்தால் உனக்கு எப்படிடி தெரியுது. இளிச்சவாயன்னு நெத்தியில் எழுதி ஒட்டி வச்சிருக்கேனா? இப்போவும் அந்த மொட்டைத் தலையன் யாருன்னு கேட்டால் சொல்லித் தொலைய மாட்டே! அப்பறம் என்னத்துக்குடி வீரா.. மாறான்னு என் பேரைச் சொல்லுற?!”
“உன்னை எனக்குப் பிடிச்சுருக்குடா! அதனால் தான் உன் பேரை ஓயாமல் சொல்றேன். ஒரு முறை மட்டுமில்ல, ஓராயிரம் முறை வீரா.. வீரான்னு சொல்லுவேன். அந்த உறுத்தும் உரிமையும் எனக்கு இருக்கு.!” அவன் குரலுக்கு நிகராய் சத்தமாய் பேசினாள் மேகவர்ணா.
அவள் கோபமாய் சொன்னாலும், அவள் சொன்ன செய்தியில் இதற்கடையோரம் குறுஞ்சிரிப்பு மலர, அவளைப் பார்த்தவன், அதே சிரிப்புடன் காத்தவராயனை நோக்கினான்.
“அடேய்! அரசி மயனே..! என்னை என்னத்துக்கு டா பார்க்கிறே? அப்படியே தங்கச்சியைத் தூண்டிவிட்டு, அந்த சந்தணம் பூசாத மொழு மொழு மொட்டை யாருன்னு கேளுடா! அந்தப் புள்ளை பிடிச்சுருக்குன்னு ஒத்தை வார்த்தை தானே சொன்னிச்சு. அந்த ஒத்தை வார்த்தைக்கே ஊரு உலகத்தையெல்லாம் மறந்துரு. பராக்கு பார்த்துட்டு நிற்காமல் கேட்டுத் தொலையேன்டா!” என காத்தவராயன் அவசரப்படுத்த,
“நல்ல வேளை ஞாபகப்படுத்தின காக்காவிரட்டி! முக்கியமான விஷயத்தைக் கேட்க மறந்துடேன் பாரு.!” என காத்தவராயனின் காதோரமாய் புலம்பியவன்,
“இந்தாரு மயிலம்மா! இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் அந்த மொட்டைத் தலையன் யாருன்னு சொல்லு!” எனக் கேட்டான் வீரபத்ரன்.
“அது.. வந்து..!” எனத் தடுமாறித் திணறியவள், தன் தகப்பனைக் கேள்வியாய் பார்தாளே ஒழிய, அவன் கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.
“தம்பி! நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்கிடாதீங்க! நீங்க இதுக்கு ஊடால வராதீங்க! இது எங்க பிரச்சனை, நாங்களே பார்த்துக்கிறோம்!” என நாச்சியப்பன் இடையிட்டு பேச,
“ஓ! அம்புட்டுதேன் இல்ல? என்னை இன்னும் மூணாவது மனுஷனா தானே பார்க்குறீங்க? நான்தேன் அவசரப்பட்டு, அம்மா வழி சொந்தம் இருக்குதுன்னு இங்கண வந்துட்டேன் போல! உங்க குடும்பத்தில் என்னையும் சேர்த்துப்பீங்கன்னு நினைச்சேன். ஆனால் இப்படி விலக்கிதேன் நிறுத்துவீகன்னு தெரியாமல் போச்சு. இது உங்க குடும்பம், உங்க பிரச்சனை, ஊடால நான் யாரு? இருக்கட்டும், எல்லாம் நல்லதுக்குத்தேன். நாங்க கிளம்புறோம். இத்தனை நாள் தங்க இடம் கொடுத்து சாப்பாடு போட்டதுக்கு நன்றிங்க!” எனச் சொன்னவன்,
“நாம நாளைக்கு விடியலிலேயே கிளம்பிருவோம் காக்காவிரட்டி! எல்லாத்தையும் பேக் பண்ணிருவோம்!” எனச் சொல்லிவிட்டு, தான் தங்கியிருந்த அறையை நோக்கி நடக்கத் துவங்கியிருந்தான் வீரபத்ரன்.
“அடேய்! வீரபத்ரா! என்னடா பொசுக்குன்னு இப்படி பேசிட்டே? அப்போ தங்கச்சி உனக்கு வேணாமா? நெசமாவே நாம ஊருக்குத்தேன் போறோமா?” எனக் கேட்டான் காத்தவராயன்.
“ஆமா! யாரும் எதுவும் எனக்கு வேணாம்!” எனச் சொன்னவனின் பார்வை, மேகவர்ணாவைத் தொட்டுத் தழுவி நழுவியது. வீரபத்ரனின் செயலில், எதுவுமே புரியாமல், குழப்பத்துடனே.. வீரபத்ரனின் பின்னாலேயே,’அந்த அறைக்குள் நுழைந்தான் காத்தவராயன்.
***
மறுநாள் காலை.. செவிக்குள் கேட்ட பலமான கதவு தட்டும் ஒலியில், உறக்கம் கலைந்து, கண்களைத் திறக்காமலே எழுந்து அமர்ந்தான் காத்தவராயன்.
“அடேய்! அரசி மயனே.. கதவைத் தட்டுறாய்ங்க போய் திற டா!” எனக் கண்ணை மூடியே சொன்னவன், எந்த பதிலும் அந்தப் பக்கமிருந்து வராததால், கண்களைத் திறந்து பார்த்தான். வீரபத்ரன் படுத்திருந்த இடம், காலியாக இருக்கவே,
“அடேய்! என்னைக் கோர்த்து விட்டுட்டு நீ மட்டும், ஊரைப் பார்த்து ஓடிட்டியா?” எனப் பதறி எழுந்தவன், கதவை நோக்கி நகர்ந்தான்.
“திறந்துதேன் கிடக்கு, என்னத்துக்கு டொக்கு டொக்குன்னு தட்டுறீக?” எனக் கேட்டபடியே வெளியே வந்தவன், வெளியே நின்றிருந்தவர்களைப் பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டான்.
“என்ன, பாண்டி ப்ரதர்ஸ் மூணு பேரும் ஒட்டுக்கா வந்துருக்காய்ங்க! ஒண்ணும் சரி இல்லையே? அடேய் வீரபத்ரா, ஒத்தையில் விட்டுப்புட்டு ஓடி போய்ட்டியே டா!” எனப் புலம்பியவன்,
“சார்.. எதுக்கு வந்துருக்கீங்கன்னு சொன்னீங்கன்னா..” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காத்தவராயனைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கியிருந்தான் போஸ்பாண்டி.
“ஆத்தாடி, ஆத்தா! என்ன ஏதுன்னு சொல்லாமல், இப்படி அந்தரத்தில் தொங்க விட்டால், என்ன அர்த்தம் சார்? அரையடி உயரமே நமக்கு ரொம்ப பயம். கொஞ்சம் பொத்துனாப்ல இறக்கி விட்டுருங்க சார்!” பயத்தில் வாய்க்கு வந்ததைக் காத்தவராயன் பேச,
“தங்கச்சி எங்க டா?” என சத்தமாய், சூழல் அதிரக் கேட்டான் போஸ்பாண்டி.
“தங்கச்சியா? எந்த தங்கச்சி?” எனத் தெரியாதது போல் கேட்டவன்,
‘அடேய், தனியா போயிருப்பன்னு பார்த்தால், துணைக்கு அந்தப் புள்ளையையும் இழுத்துக்கிட்டு போய்ட்டியா? இவிங்க என்னை வச்சு செஞ்சுருவாய்ங்களே டா!’ என மனதிற்குள் புலம்பியபடியே எச்சில் கூட்டி விழுங்கினான் காத்தவராயன்.
“இந்தாரு! ஒழுங்கு மரியாதையா, உன் கூட, இருந்தவனும், எங்க தங்கச்சியும் எங்கே போனாகங்கன்னு சொல்ற! இல்லைன்னு வையி, ஒரேடியாய் முடிச்சு விட்டுப்புடுவேன் பார்த்துக்க!” என தன் கட்டைக் குரலில் மிரட்டியபடியே, காத்தவராயனை கீழே இறக்கிவிட்டான் போஸ்பாண்டி.
“இவன் கிட்டே என்ன பேச்சு வேண்டி கிடக்கு? நாலு சாத்து சாத்தினால், தன்னால் சொல்லிடப் போறான். இவனெல்லாம் ஒரு ஆளுன்னு பேச்சு வார்த்தை நடத்திட்டு கிடக்கீக?” என முத்துப் பாண்டி சொல்ல,
“நானும் அதைத்தேன் சொல்றேன்! காலையிலேயே நம்ம தங்கச்சியையும் காணோம்! இந்தா இவன் கூட இருந்த அந்தப் பயலையும் காணோம்! அப்படின்னா அவன்தேன் நம்ம தங்கச்சியைக் கூட்டிட்டு போயிருக்கணும். அது கட்டாயம் இவனுக்கு தெரிஞ்சுருக்கணும்!” என இராஜபாண்டியும் ஆமோதித்தான்.
“ம்க்கும்! நான்தேன் கூகுள் மேப், எனக்குத்தேன் அவிங்க எங்க போயிருக்காங்கன்னு தெரியும். நானே தூங்கி எந்திருச்சு பல்லு கூட விளக்காமல், நின்னுட்டு இருக்கேன். என்கிட்டே வந்து கேணைத் தனமா கேள்வி கேட்டுட்டு நிக்கிறீக?” எனக் காத்தவராயன் குரலுயர்த்த,
“இந்தாரு காக்காவிரட்டி! அதெப்படி அவன் உனக்குத் தெரியாமல் போவான்? இல்லை, நீ தெரியாதுன்னு சொன்னதும் நாங்க நம்பிடணுமா? சொல்லு, எங்கே போனாய்ங்க அவிங்க?” என மீண்டும் கேட்ட போஸ்பாண்டியின் குரலில், நீ உண்மையைச் சொல்லியே தீர வேண்டுமென்கிற இரகசிய சங்கதி ஒளிந்திருந்தது.
‘அடேய், லூசுப் பயலுங்களா! அவன் எங்கே போயிருக்கான்னு எனக்கே தெரியாதே! எனக்குத் தெரியாததை நான் எப்படிடா சொல்ல முடியும்? ஆனால் ஒண்ணு, எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு, நல்லா செஞ்சு விட்டுட்ட டா வீரபத்ரா!’ என மனதிற்குள் புலம்பியவன்,
“அண்ணே சார்! அண்ணே சார்! அவிங்க எங்கே போனாய்ங்கன்னு சத்தியமா தெரியாதுங்க சார். ரெண்டு பேரும் ஒண்ணாகத்தேன் போனாய்ங்கன்னு என்ன நிச்சயம் சார்? தங்கச்சி வேற எங்கேயாச்சும், போயிருக்கலாமே சார்!” என காத்தவராயன் சொல்ல,
“திரும்பத் திரும்ப பொய் சொல்றியா? ஊரு பேரு தெரியாதவிங்களை வீட்டுக்குள்ளே தங்க விட்டேன்ல்ல, என்னைச் சொல்லணும்.!” என்றபடியே போஸ்பாண்டி கரத்தை ஓங்கிய அதே தருணம்,
“நிறுத்து போஸூ!” என்றபடியே வந்து நின்றார் நாச்சியப்பன்.
‘வாய்யா! வெள்ளாவி தலையா! கொஞ்சம் சீக்கிரமே வந்திருந்தால்தேன் என்ன?, உன் மயனுங்க என்னைக் கொன்னு கூறு போட்டுருவாய்ங்க போல!’ என மனதிற்குள் புலம்பியவன்,
“ஐயா! ராசா! உங்க மவ எங்கேன்னு கேட்டு உசிரை எடுக்குறாய்ங்க! எனக்குத் தெரியாதுன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாய்ங்க!” எனக் காத்தவராயன் புலம்ப,
“அந்தப் பயலுக்கு ஒண்ணும் தெரியாது. மயிலையும், அந்தப் பய வீராவையும், நான்தேன் கருவிழி வளைகாப்புக்காக மருதைக்கு அனுப்பி வச்சிருக்கேன்.!” என நாச்சியப்பன் சொல்ல,
“யாரைக் கேட்டு அனுப்புனீக? இப்போ அங்கண போய்த்தேன் தீரணும்ன்னு என்ன அவசியம்?” என மூன்று சகோதரர்களின் குரலும் ஒருசேர கேட்டது.
“வீடு தேடி வந்து அழைச்சுட்டு போயிருக்காக! நம்ம வீட்டிலிருந்து யாராச்சும் போக வேண்டியது கட்டாயம் தானே? நீங்களும் போக மாட்டீக! என்னையும் போக விட மாட்டீக! அதேன், அவளாவது போய்ட்டு வரட்டும்ன்னு அனுப்பி வச்சேன். அந்தப் பயலும், கருவிழி வளைகாப்புக்குத்தேன் ஃபோட்டோ எடுக்கப் போறேன்னு சொன்னான். அதேன் அனுப்பினேன்.!” எனச் சாதாரணமாய் அவர் சொல்ல, அவர் பெற்ற மகன்கள் மூவரும் அவரை முறைத்துக் கொண்டு நின்றனர்.
“என்னதேன் நீங்க நியாயம் பேசினாலும், நம்ம தங்கச்சியை அங்கண அனுப்பினது தப்புத்தேன். நாங்க இப்போவே புறப்பட்டு போய் அவளைக் கூட்டி வரப் போறோம்.! பேருக்குதேன் பெரிய மனுஷன். பெத்த மவளை எங்கே அனுப்பனும், எங்கே அனுப்பக் கூடாதுன்னு ஒரு மண்ணும் தெரியலை.!” என்ற போஸ்பாண்டியின் சலிப்பான குரலுக்கு,
“யாரும், அவளைப் போய் கூப்பிடக் கூடாது. அவள் விஷேஷம் முடிஞ்சுதேன் வருவா! அவங்க அவங்க, சோலியை மட்டும் பார்த்தால் போதும்!” என சுருக்கென பதில் தந்தார் நாச்சியப்பன்.
“இம்புட்டு திண்ணக்கமா பேசுறீகளே! யாரை நம்பி அவளை அனுப்புனீக.? உங்க உடம் பொறவா அக்காவை நம்பி அனுப்புனீகளாக்கும்? அவிங்களே உருப்படாதவிங்க! ஒரு செய்முறையை செய்ய எம்புட்டு அசிங்கப்பட்டோம்ன்னு தெரியும் தானே? என்னை விட உங்களுக்குதேன் நல்லா தெரியுமே? எல்லாத்தையும் துடைச்சுப் போட்டுட்டு, இரகசியமா மவளை அனுப்பி விட்டுருக்கீகளாக்கும்?!” எனக் கோபமாய்க் கேட்டான் போஸ்பாண்டி.
“நான் பெத்த மவளை, யாரை நம்பி அனுப்பனும்ன்னு எனக்குத் தெரியும்டா போஸூ! அவள் விஷேஷத்திற்கு போய்ட்டு வர்ர வரைக்கும், எல்லாரும் வாயை மூடிக்கிட்டு அமைதியாய் இருங்க!” உறுதியாய் நாச்சியப்பன் சொல்லிவிட,
“நீங்க செய்றது எதுவுமே சரியா படலை! உங்க உடம் பொறவாத பொறப்பு மேலே, ரொம்பத்தேன் பாசம் பொத்துக்கிட்டு வருது. இம்புட்டு நாளும், இந்த பாசத்தையெல்லாம் எங்கிட்டு ஒளிச்சு வச்சிருந்தீகன்னு கேட்கிறேன்? மேகவர்ணா உங்களுக்கு மகளா இருக்கலாம்! ஆனால் எங்களுக்கு, எங்களைப் பெத்த ஆத்தாளுக்கு சமம். எங்க தங்கச்சியை நாங்க போய் கூப்பிடுவோம். உங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு, நமக்கு ஆகாதவிங்க வீட்டுக்குள்ளே போய் அவளை விட்டு வைக்க, நாங்க ஒண்ணும் கோழைங்க இல்லை.!” என்றுமே உயராத முத்துப்பாண்டியின் குரல் உயரவும், நிமிர்ந்து மகனைப் பார்த்தார் நாச்சியப்பன்.
“சொந்த பந்தத்துக்குள்ளே ஆயிரம் மனத்தாங்கல், ஆயிரம் சண்டை சச்சரவு இருக்கும். ஆனால் முச்சூடும், அதைச் சுமந்துக்கிட்டே திரிய முடியாது. சில இடங்களில், அனுசரித்துப் போய் முன்னே இருந்த விரிசல், இன்னும் பெருசாகாமல் இருக்க, இறங்கிப் போறதில் ஒண்ணும் தப்பே இல்லை. தப்பு அரசி குடும்பத்து பக்கமே இருந்துட்டு போவட்டும். விட்டுக் கொடுத்துப் போறவன் நானாகவே இருந்துட்டுப் போறேன்.!” என உணர்ச்சி வேகத்தில் நாச்சியப்பன் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், இடையூறாய் சத்தமாய் அலறியது காத்தவராயனின் அலைபேசி.
“எருக்கஞ் செடியோரம் இறுக்கிப் புடிச்ச எம் மாமா..!” என அவசரமாய் அலறிய அலைபேசியை சட்டைப் பைக்குள்ளிருந்து எடுக்க முயன்று கொண்டிருந்தான் காத்தவராயன். பதற்றத்தில் கரம் நடுங்கியது அவனுக்கு.
“ஏன்டா! இது ஃபோனா? இல்லை ஸ்பீக்கரா? இந்த அலறு அலறுது.? முதலில் சைலண்ட்டில் போட்டுட்டு பேசு! ரிங்டோன் வச்சிருக்கிற பாட்டைப் பாரு, எருக்கஞ்செடியோரம் இறுக்கிப் புடிச்ச என் மாமான்னு வச்சிருக்கான். இந்தக் கோமாளிப் பயலை எங்கிட்டு இருந்து புடிச்சானோ இந்த வீரா?”
என போஸ்பாண்டி சலிப்பாய் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், அவசரமாய் அறைக்குள் நுழைந்து அலைபேசியை எடுத்து அழைப்பை ஏற்று, தன் காதுக்குக் கொடுத்த காத்தவராயனோ, சூழ்நிலையை உணராது..
“அடேய்! அரசி மயனே..! நீ பாட்டுக்கு, நேக்கா இந்த அணகோண்டா மூஞ்சனுங்கக் கிட்டே சிக்க வச்சிட்டு போய்ட்டியே டா! சுத்தி நின்னுக்கிட்டு கேள்வியாய் கேட்டு கொல்றாய்ங்க டா! எப்போவுமே மூக்கை விடைச்சுக்கிட்டு திரிவியான் பாரு போஸூ.. என்னைக் கழுத்தைப் பிடிச்சு தூக்குறான் டா! எல்லாத்துக்கும் காரணம் நீதேன் டா வீரா! நீ உன் ஆளு கூட டூயட் பாட, என்னை இந்த பீம் பாய்ஸ்கிட்டே அடகு வச்சுப்புட்டியே டா?” என இடம், பொருள், ஏவல் என எதையும் யோசிக்காது, சத்தமாய்ப் புலம்பியிருந்தான் காத்தவராயன்.
“ஏய்! காக்காவிரட்டி! மாமாகிட்டே சொல்லியிருக்கேன். உன்னை மருதைக்கு அனுப்பி விடச் சொல்லியிருக்கேன். தவிர்க்க முடியாத காரணத்தால்தேன் மயிலம்மாவைக் கூட்டிக்கிட்டு வர வேண்டியதாகப் போச்சு.! நீ பார்த்து பத்திரமாக வந்து சேர்ந்துரு.” என வீரபத்ரன் அலைபேசியின் அந்தப்பக்கமிருந்து சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம்,
“அடேய்! அரசி மயனே.. கொஞ்சம் இரு! என் கழுத்துக்குப் பின்னால் ஏதோ அணகோண்டா மூச்சு விடற மாதிரி அனலா இருக்கு. என்னன்னு தெரியலையே..!” என அலைபேசியில் பேசியபடியே திரும்பிய காத்தவராயன்,
“சிக்கிட்டோம் டா! சிந்தாமல் சிதறாமல் சிக்கிட்டோமே..! வகையாய் சிக்கிக்கிட்டோ ம் டா! வீரா..!”
எனக் காத்தவராயன் புலம்புவதைக் கேட்காமலே, வீரபத்ரன் அலைபேசியை அணைத்திருக்க, தன் முன்னே கோபத்தில், கண்கள் சிவக்க, முறைத்த படி நின்றிருந்த, போஸ்பாண்டியையும், அவன் தம்பிகளையும் பார்த்து அரண்டு போய் நின்றிருந்தான் காத்தவராயன்.
‘கட்ட கடைசியில் என் ஓட்ட வாயால்தேன் நீ மாட்டனுமாடா வீரா!’ என அவன் மனம் புலம்பியது அங்கே யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லைதான்.
தித்திக்கும்…🔥

