
தோழியின் அறையில் விட்டத்தைப் பார்த்து படுத்திருந்தாள் பவித்ராத்யா.
இதுவரையில், மெல்லிய உணர்வுகளெதுவும் தாக்கியதில்லை. இப்போதோ காதெலெனும் மின்னணு மின்சாரமாகத் தாக்கி விட்டுச் சென்றதில், உடல் நடுக்கங்கள் இன்னும் தீரவில்லை.
விக்ரமை பற்றியோ, அக்னிலாவை எண்ணியோ வருந்தினாலும் கூட, இறுதியில் மனக்கண்ணில் தோன்றி தீ மூட்டி விடுகிறான் அக்னி வேந்தன்.
‘நல்லா பேர் வச்சுருக்காங்க. தீ வேந்தன்னு… ப்ச்!’ எரிச்சலுற்றாள்.
அந்நேரம் காலிங் பெல் சத்தம் கேட்க, யோசனையாக பார்த்தாள். இரு படுக்கையறை கொண்ட வீட்டில் அவளது தோழி மட்டுமே தங்கி இருக்க, இப்போதும் அவள் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டிருந்தாள்.
முந்தைய நாளே கூறி இருந்ததால், சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துச் சென்றிருந்தாள்.
“யாரு?” பவித்ராத்யா கேட்க, யாரும் பதில் அளிக்கவில்லை.
ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள். தடிமாட்டின் மறுஉருவமாக நான்கு ஆண்கள் நின்றிருந்தனர். மெல்ல அச்சம் தலைக்கேற வாசற்கதவின் அருகில் செல்லும்போது மீண்டும் வேகமாகக் கதவைத் தட்டினர்.
அதில் பயந்து பின்னால் நகன்றவளுக்கு, அவர்கள் கத்தி போன்ற பொருள்களை எடுப்பதும் ஊர்ஜிதமாக கதவையும் ஜன்னலையும் நன்கு அடைத்து விட்டு, அறைக்கு ஓடினாள்.
என்ன செய்ய ஏது செய்யவென்று தெரியவில்லை.
நெஞ்சம் திக் திக்கென்று அடித்து வியர்த்தது.
காவல்துறைக்கு அழைக்கலாம் என அலைபேசியை எடுக்க, அதில் பல முறை அக்னி வேந்தன் அழைத்திருந்தான். விக்ரம வேந்தனும் தான்.
அப்போதும் அவளுக்கு சிறு துணுக்கு. தான் சென்னையில் இருந்து கோவை வந்த போது கூட விக்ரம் பெரியதாக எந்தக் கேள்வியும் கேட்கவில்லையே. இப்போது மட்டும் ஏன் இத்தனை முறை அழைத்திருக்கிறார்… என்ற யோசனை எழுந்தாலும் பயத்தில் அவளுக்கு கைகள் நடுங்கியது.
“ஏய் கதவைத் திற” இம்முறை கதவு உடையும் அளவு தட்டினர்.
அந்நேரம் மீண்டும் அக்னி வேந்தனிடம் இருந்து அழைப்பு வர, யோசியாமல் எடுத்து விட்டாள்.
அழைப்பு ஏற்கப்பட்டதும், காரை ஓரங்கட்டிய அக்னி வேந்தன் “எங்கடி இருக்க?” என்று எரிந்தான்.
“அகி… அகி… இங்க…” என்றவளுக்கு பேச்சும் வரவில்லை. அடுக்களை பக்கம் இருக்கும் வாசல் வழியாக வர எத்தனித்தார்கள்.
வேகமாக ஓடியவள், பின்பக்க கதவை நன்கு பூட்டி விட்டாள்.
அவளது தடுமாறிய குரலில் சற்றே நிதானித்த அக்னி வேந்தன், “ஆத்யா எங்க இருக்க… என்னாச்சு?” எனப் பரபரத்தான்.
“அகி இங்க நாலு பேர் கத்தியோட வந்துருக்காங்க… நான் என் பிரெண்டு வீட்ல இருக்கேன். கதவை உடைக்கிறாங்க அகி…” திணறினாள்.
உடனடியாக காரை எடுத்தவன், “ஆத்யா ரிலாக்ஸ். எந்த ஏரியா? எனக்கு லொகேஷன் அனுப்பு…” எனும்போதே ஒருவன் ஜன்னல் கதவை உடைத்திட, அவள் அலறும் சத்தம் கேட்டது.
“ஜன்னலை எல்லாம் உடைக்கிறாங்க அகி…” எனத் தேம்பிட, இங்கு அக்னி வேந்தனுக்கும் கூட இதயம் தாறுமாறாகத் துடித்தது.
“எனக்கு லொகேஷன் அனுப்புடி…” என்றதும் இருங்க என்றவளின் நடுங்கிய கரம் வேகமாக அவளது இருப்பிடத்தை அனுப்ப, அங்கிருந்து அவன் இன்னும் பத்து நிமிடம் பயணிக்க வேண்டும்.
“என்னாச்சுடா?” இங்கு விக்ரம் வேறு கேட்டுக்கொண்டே இருந்தான். அப்போது தான் பவித்ராத்யா தன்னை மறுத்து விட்டதை விக்ரமிடம் உரைத்திருந்தான்.
கண்ணை மூடி யோசித்தவனுக்கு அதன்பிறகே அதே ஏரியாவில் ஒரு நண்பன் இருப்பது உறைத்தது.
அவனுக்கு அழைத்து விவரம் கூறியவன், காரின் வேகத்தையும் அதிகப்படுத்தினான்.
இங்கோ அனைத்து ஜன்னல் கதவுகளும் உடைக்கப்பட்டதில் காதை இறுக மூடினாள்.
ஜன்னல் கம்பியை உடைத்து ஒருவன் உள்ளே வர முற்பட, பயத்தில் அறைக்குள் ஓடி கதவை அடைத்தாள். அந்தப் பக்கமும் ஆட்கள் உள்ளே வர முயன்றனர்.
இதில் அலைபேசியும் தவறி அடுக்களையில் விழுந்து விட்டது.
‘ஐயோ…’ என நொந்தவளுக்கோ செய்வதறியாத நிலை.
“அகி… சீக்கிரம் வந்துடுங்க” என கண்ணை இறுக மூடி முனகும் போதே, ஜன்னல் வழி வந்த ஆள்கள் காணாமல் போயினர்.
வாசலில் ஏதேதோ சத்தம் கேட்க, மெல்லக் கதவைத் திறந்தாள்.
அந்நேரம் அக்னியும் புழுதி பறக்க அவ்வீட்டு வாசலில் காரை நிறுத்த, அங்கு சஞ்சீவும் அக்னியின் மற்றொரு நண்பன் தினேஷும் தான் அந்த ஆள்களுடன் வாய் தகராறில் இருந்தனர்.
“யாருடா நீங்க? இங்க எதுக்கு பிரச்சினை பண்ணிட்டு இருக்கீங்க?” சஞ்சீவ் சத்தமிடும்போதே ஒருவன் அவன் மீது கை வைக்க, அக்னி வேந்தன் அந்த ஆளை தள்ளி விட்டான்.
சஞ்சீவை அங்கு எதிர்பாரா அக்னி புருவம் சுருக்கிட, அவனை ஏறிட தயங்கியவன் “நீ தினேஷ்கு கால் பண்ணும்போது நானும் அங்க தான் இருந்தேன்…” என்றான்.
விக்ரம் அவனை பார்வையால் ஊடுருவ, அவன் முகத்தை முற்றிலும் பார்க்க இயலவில்லை.
அக்னி மீது காட்டிய பாசத்தை அவனது நண்பர்களுக்கும் அவன் கொடுக்க தவறியதில்லை.
சஞ்சீவ் செய்த முட்டாள்தனத்தை அறிந்து அவனது மற்ற நண்பர்களும் அதட்டியதிலேயே அவனுக்கும் குற்ற உணர்வு ஆட்டி படைத்தது.
அக்னி, ரௌடி ஒருவனின் சட்டையைப் பற்றி “யாருடா அனுப்புனது உன்னை” என கடுகடுக்க, அவனோ திருதிருவென விழித்தான்.
அதிலேயே புரிந்து விட்டது இது யார் வேலையென. “என் அப்பாவா?” என்று கேட்டதில், எச்சிலை விழுங்கினான்.
அதற்குள் காவலர்களும் அங்கு வந்து, அவர்களை அள்ளிச் சென்றனர்.
அக்னி வேந்தனைக் கண்டதும் ஓடிச் சென்று அணைத்து பயத்தை தணித்துக்கொள்ளவே ஒவ்வொரு அணுவும் துடித்தது அவளுக்கு.
ஆகினும் உள்ளம் எண்ணுவதை மூளை செயல்படுத்த விடவில்லையே!
கையை இறுக மூடி வாசலிலேயே நின்று விட்டவளை, அக்னியும் விக்ரமும் ஒரு சேர முறைத்தனர்.
“அத்… அத்தான்…” அவனைக் காண சங்கடப்பட்டு தலையைக் குனிந்தவளிடம், “என்னை அத்தானா நினைச்சுருந்தா இப்படி சொல்லாம கொள்ளாம போயிருப்பியா பவி?” எனக் காய்ந்ததில் விழி கலங்கியது.
விக்ரம் கூட கோபத்தை வார்த்தையால் காட்டி விட்டான். ஆனால் அக்னி? ஓரமாய் ஒதுங்கி நின்றவன், அவளை பார்க்க கூட விரும்பாதவனாக வேறெங்கோ பார்வையை பதித்திருந்தான்.
உள்ளத்தை குத்தி குடைந்தது அவனது ஒதுக்கம்.
விக்ரமோ, “சரி திலோ எங்க?” எனக் கேட்டபிறகே நிமிர்ந்த பவித்ராத்யா, “திலோ எங்கன்னு என்கிட்ட கேட்குறீங்க? அவள் உங்க கூட தான இருப்பா…” என்றதில் இப்போது அக்னி அவள் புறம் திரும்பினான்.
“என்ன பவி சொல்ற. திலோ உன்கூட இல்லையா? அவள் லெட்டர் எழுதி வச்சுட்டு எங்க போனான்னு தெரியல. நீ இங்க இருக்கன்னு தெரிஞ்சதும் இங்க தான் இருப்பான்னு நினைச்சேன்…” என முன்னெற்றி கேசத்தை கோதிக்கொண்ட விக்ரமிற்கு படபடப்பு மீண்டும் தொடங்கியது.
பவித்ராத்யா சிலையாகி விட்டாள்.
அத்தானை விட்டுச் செல்வதற்காக தான் என்னை இங்கு வந்து விட்டாளா?
‘கொஞ்ச நாள்ல உன்னைக் கூப்பிட்டுக்குறேன் பேபி’ என்றவளின் கூற்றின் அர்த்தம் தற்போது விளங்கியது. அவள் முகத்தில் கண்ட உணர்வுகளின் பிரதிபலிப்பு இப்போது சுட்டது.
“அவ என்கூட இல்ல…” எனும்போதே பவித்ராத்யா தளர்ந்து விட்டாள்.
“பாப்பா எங்க?” அவளது கேள்வியில், “அவளையும் கூட்டிட்டு தான் போயிருக்கா…” என்ற விக்ரமிற்கு ஆற்றாமை ஆறவில்லை.
அக்னி மீண்டும் திலோத்தமாவிற்கு அழைக்க முற்பட்டு தோல்வியே கண்டான்.
“திலோ எங்கடா போனா?” தினேஷ் கேட்டதில் அவன் சஞ்சீவை முறைத்தான்.
“எனக்கு எதுவும் தெரியாது. நாங்க வேணும்னா போய் தேடி பாக்கட்டுமாடா?” எனக் கேட்க,
“எதுக்கு? கிடைச்சா, அவளை அப்படியே ஓட விட்டுட்டு எங்ககிட்ட கிடைக்கலைன்னு பொய் சொல்லவா?” அக்னி காட்டத்துடன் கேட்டதில், சஞ்சீவிற்கு முகத்தில் அறை வாங்கிய உணர்வு.
“அவ விஷயத்துல இனி நான் யாரையும் நம்புறதா இல்ல” என்றவன், பவித்ராத்யாவின் புறம் திரும்பி, “நீ இங்க வந்தது திலோவுக்குத் தெரியுமா?” என வினவ, அமைதியாகத் தலையாட்டினாள்.
அவளைக் கூர்மையாக பார்த்தவன், “யார் முடிவு இது?” எனக் கேட்டதில்,
“என்னோட முடிவு தான்” என்றாள் வேகமாக.
“நிஜமாவா?” ஒற்றைப்புருவம் உயர்த்திக் கேட்டவனின் அழுத்தத்தில் நாக்கு தந்தியடித்தது.
“அது… அவளுக்கும் தெரியும். அவள் என்னை இங்க டிராப் பண்ண வந்தா…”
“எதுல வந்தீங்க?”
“கேப்ல…”
சுற்றி பார்வையை ஓட விட்டனர் சகோதரர்கள்.
அவ்வீட்டிற்கு பக்கவாட்டில் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியில் சிசிடிவி கேமரா இருந்தது.
அங்கு சென்று புட்டேஜ் பார்த்தவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக, அவர்கள் வந்த கேப் எண் துல்லியமாகத் தெரிய, அந்த காரின் எண்ணை வைத்து ஓட்டுனரை தொடர்பு கொள்ள முயன்றனர்.
விக்ரமோ, “எதுக்கும் நம்ம பஸ் ஸ்டேண்ட் ரயில்வே ஸ்டேஷன்ல தேடுவோமாடா?” என வினவ,
இங்க இருந்து பக்கத்துல காந்திபுரம் தான் இருக்கு. அங்க போயிருப்பாளோ? என்றான் தினேஷ்.
“இருக்கலாம். போலீஸ்ட்ட திலோ போட்டோ குடுத்து அங்க எல்லாம் தேட சொல்லிருக்கேன்” என்ற அக்னி, “நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க… ஆன் டைம்கு வந்ததுக்கு தேங்க்ஸ்” என்றதில் தினேஷ் “என்னடா தேங்க்ஸ் எல்லாம் சொல்ற புதுசா. திலோ கிடைச்சதும் எனக்கு சொல்லிடு” என்றான்.
அதற்கு மேல் சஞ்சீவிற்கும் வருத்தமளிப்பதால் அவனை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.
அக்னி வேந்தன் கேப் ஓட்டுனருக்கு அழைத்துக்கொண்டு இருக்க, பவித்ராத்யாவிற்கு சுற்றி நிகழும் எதுவுமே உறைக்கவில்லை.
எப்படி அவளால் அத்தானை விட்டுச் செல்ல முடிந்தது அது மட்டுமே அவளின் கேள்வியாக!
“அவ கிடைச்சுடுவாள்ல” படபடப்புடன் அக்னியிடம் கேட்க, “என்கிட்ட கேட்டா? நானா அவளை போக சொன்னேன்” என்று எரிந்து விழுந்தான்.
முணுக்கென கண்ணில் நீர் கோர்த்து விட்டது.
அவனை விட்டுத் தள்ளி நின்றவள் பின் அவன் முகம் பார்க்கவே இல்லை.
திலோத்தமா ரயில்வே நிலையத்திற்கு சென்றதாகத் தெரிய வர, காவலர்களோ அவள் அங்கு எந்த ரயிலிலும் ஏறியதாகத் தெரியவில்லை என்று விட்டனர்.
இங்கோ, சவுந்தரவல்லி அங்கலாய்த்தார்.
“இப்படி ஏமாத்திட்டானே சிவா. நம்ம வேற எல்லாத்தையும் எழுதி குடுத்துட்டோம். அங்க உன் தம்பி என்ன நிலைமைல இருக்கானோ”
“ம்மா… சும்மா கவலைப்படாதீங்க. ஷேர்ஸ எப்படி திருப்பி வாங்கணும்னு எனக்குத் தெரியும்.” என்றவரின் குரலில் ஒரு அழுத்தம் தெரிய, மருமகளை காணாத பதற்றத்தில் வாசலில் நின்றிருந்த நிவேதா அப்போது தான் வீட்டினுள் நுழைய விழைந்தார்.
ஆனால் சிவக்குமாரின் கூற்றில் அங்கேயே மறைந்து நின்று விட்டார்.
சிவக்குமார் ஒரு முறை வாசற்புறத்தை பார்த்து விட்டு, “பேக்டரில கழிவை எல்லாம் நான் சரியா அப்புறப்படுதலைன்னு பொலியூஷன் ஆபிஸர்ஸ் சம்மன் அனுப்பிருக்காங்க. என் ஷேரும் பதவியும் கையை விட்டுப் போன நேரத்துல சரியா பேக்டரியை நடத்தலைன்னு கேஸ் போட்டு ஷேர் வாங்கிப்பேன். அப்படியும் இல்லைன்னா, என்கிட்ட இருக்கே ஒரு துருப்பு சீட்டு. திலோத்தமா” என ஏளனமாக இதழ் வளைக்க, அங்கு ஒரு குடோனில் திலோத்தமா ஒரு புறமும் அக்னிலா ஒரு புறமும் மயங்கி கிடந்தனர்.
சிறிது நேர குழப்பத்திற்கு பிறகு, அக்னி வேந்தனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் சில தகவல்களை சேகரித்தவன், “ஓகே… நான் பாத்துக்குறேன்” என அழைப்பை துண்டித்து விட்டு, உடனடியாக காவலர்களுக்கும் தெரியப்படுத்தினான்.
“என்னடா?” விக்ரம் கேட்டதும், “எனக்கு அப்பா மேல சந்தேகம் வந்தப்பவே அவரோட ஆக்டிவிட்டீஸ் எல்லாம் வாட்ச் பண்ண டிடக்டிவ் ஏஜென்சி ஹயர் பண்ணிருக்கேன் விக்ரா.
அவங்க மூலமா தான் எனக்கு நிறைய விஷயம் தெரிய வந்தது” என்றான்.
“இப்ப திலோ எங்கன்னு தெரிஞ்சுதா?”
“ம்ம்… வா!” என வேகமாக காரை எடுக்க, விக்ரமும் பதற்றத்துடன் உள்ளே அமர்ந்தான்.
தமக்கை கிடைத்துவிட வேண்டுமென்ற வேண்டுதலுடன் ஒரே இடத்தில் சிலை போல நின்றிருந்தவளை ஜன்னல் வழியே ஏறிட்ட அக்னி, “அம்மணி எப்படி வர்றீங்களா? இல்ல அப்படியே ஓடிப்போய்டுறீங்களா…” என கோபத்தைக் காக்க, அவள் கீழுதட்டைக் கடித்தபடி நின்றாள்.
விக்ரம் தான், அவளது பாவப்பட்ட முகத்தை கண்டதில், “விடுடா… வா பவி!” என்றதும், பின்னால் அமர்ந்து கொண்டவள், கண்ணாடி வழியே அவளையே எரித்து கொண்டிருந்த அக்னியின் பார்வைச் சூட்டில் உருகிக் கொண்டிருந்தாள்.
கார் நேராக அவர்களது ஷோ-ரூமைச் சேர்ந்த குடோனை அடைந்தது.
அதற்குள் நிவேதாவும் அவனுக்கு அழைத்து விவரம் கூறிட, விக்ரமுக்கு கடும் கோபம்.
“இப்ப தெரியுதா நான் ஏன் ஓடிப்போனேன்னு! எந்த எல்லைக்கும் போவாங்கன்னு தெரியும். ஆனாலும் அது ரியலா நடக்குறப்ப வலிக்குதுடா…” வேதனையுடன் கூறியவனிடம்,
“இது நான் எதிர்பார்த்தேன். ஆனா, நம்ம கூட தான இருக்காங்கன்னு அமைதியா இருந்தேன். தனியா போய் ரெண்டு அறிவுஜீவியும் இப்படி மாட்டும்னு நினைச்சுருந்தா, அந்த ஆளை அன்னைக்கே தூக்கி உள்ள வச்சுருப்பேன்…” என்று பல்லைக்கடித்தான்.
“ஆனா அக்கா எதுக்காக அத்தானை விட்டுப் போகணும்?” பவித்ராத்யா குழப்பமாக கேட்டாள்.
“அதை உன் அக்கா தான் சொல்லணும்” என்ற விக்ரம் இறங்கி குடோனுக்குள் ஓடினான்.
காவலர்களும் அங்கு வந்து குடோன் ஆள்களை கைது செய்திட, அவர்கள் சிவக்குமாரை கை காட்டினர்.
மனைவியும் மகளும் ஆளுக்கொரு திசையில் தரையில் கிடந்ததைக் கண்டு விக்ரமிற்கு உயிரே பறிபோன நிலை.
“நிலா… திலோ” என்று இருவரையும் மடியில் போட்டுக்கொண்டு கதறி விட்டான்.
பேச்சு மூச்சில்லாமல் இருந்த இருவரையும் அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட அங்கேயே முட்டியிட்டு அமர்ந்து அழுது அரற்றினான் விக்ரம வேந்தன்.
“விக்ரா… ஒன்னும் இருக்காதுடா” அக்னி அவன் தோளைத் தொட, அவனது இடுப்பைக் கட்டிக்கொண்டு தேம்பி அழுத தமையனை தேற்றும் வார்த்தை தான் தெரியவில்லை.
பவித்ராத்யா இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை.
அவளாவது புகுந்த வீட்டில் அவளது வாழ்க்கையை நிம்மதியாக வாழ வேண்டும் என்று தானே அவளை விட்டு ஒதுங்கினாள்.
இப்படி சுயநினைவின்றி போகவா தன்னை அத்தனை வேகமாக கிளப்பினாள்.
உடைந்து நின்றவளின், கண்ணீர் அணையும் தானாய் உடைந்திருந்தது.
மருத்துவர்கள், அதிக அளவிலான மயக்க மருந்து இருவரின் இரத்தத்திலும் கலந்திருப்பதாகக் கூறியதோடு, இன்னும் சற்று அளவு கூடி இருந்தாலும் அது மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்திருக்கும் அவலம் நேர்ந்திருக்கும் என்றிட, விக்ரமின் விழிகள் சிவந்தது.
அக்னிலாவிற்கு சின்ன அளவிலான மருந்தை கொடுத்ததற்கே அவள் அதீத மயக்கத்தில் இருந்திருக்கிறாள்.
ஆனால் திலோத்தமா, அரை மயக்கத்திலும் தனது குழந்தையைத் தேடி எழுந்ததில் அவளுக்கு மருந்தை கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.
மயக்கத்திலேயே இருவரையும் கடலில் வீசுவது தான் சிவக்குமாரின் திட்டம். அவரைப் பொறுத்தவரை திலோத்தமாவும் அக்னிலாவும் தேவையற்ற களை தான்.
பவித்ராத்யாவும் இதில் அடக்கம்.
“ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு… குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமா ரெகவர் ஆகுது. உங்க வைஃப்க்கு இன்னும் 12 மணி நேரம் அப்சர்வேஷன்ல வச்சு பாலோ பண்ணனும். வில் ஸீ” என்று விட்டு மருத்துவர் செல்ல, விக்ரமிற்கு வெறியே பிடித்தது.
அக்னி வேந்தனின் கையில் இருந்த சாவியை பிடுங்கிய விக்ரம், காரை உறுமலுடன் கிளப்பி நேராய் வீடை நோக்கிச் சென்றான்.
போதை தெளியும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
49
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


💙💖💚💖❤️