
திமிர்-4
உறுமலோடு நின்ற அந்தக் கரியநிற வாகனத்திலிருந்து இறங்கியவனின் கரம், காதோரம் வரை கருத்து அடர்ந்திருந்த மீசையை வருடியது. கருப்புநிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்து, ஆஜானுபாகுவான உடல்வாகுடன், இறங்கியவனை அண்ணாந்து பார்த்தான் வீரபத்ரன்.
“காட்டான் மாதிரி இருக்கான்! இவன் யாரு? இந்த ஊருக்குள்ளே காரெல்லாம் வச்சிருக்காய்ங்களா? பெரிய இடமா இருக்குமோ?” என முணுமுணுத்தபடியே வீரபத்ரன் நின்றிருக்க, வீரபத்ரனை கடைக்கண்ணால் பார்த்த காட்டானோ,
“மயிலு! மயிலும்மா! தங்கம்!” என்றபடியே அழைத்தவன், அந்தப் பெண்ணின் தலை தெரியவும்,
“என்னத்துக்கு நம்ம கருப்பன், இப்படி வழி மறிச்சுட்டு நிக்கிறியான்.? நீதேன் குறுக்கால நிக்க சொன்னியாக்கும்.?” எனக் கேட்டான் அவன்.
“அண்ணே! ரெண்டு புதுக் கோமாளிங்க நம்ம ஊருக்குள்ளே வந்துருக்காய்ங்க! நம்ம கருப்பன்தேன் புதுசா யாரைப் பர்த்தாலும் வழியை விடமாட்டானே? அது தெரியாமல், ஊரு என்ன உன் பேரில் பட்டாவா போட்டு வச்சிருக்குன்னு சொல்றாய்ங்க! கருப்பன் காலில் விழுந்து ரெண்டு பேரையும் மன்னிப்பு கேட்க சொல்லுண்ணே! இல்லைன்னா கருப்பனைக் காவலுக்கு வச்சிட்டு, நான் போயிருவேன். இவிங்க இங்கணையே காத்துக் கிடக்க வேண்டியதுதேன்!” நறுக்குத் தெறித்தாற்போல் பேசினாள் அவள்.
“அப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா! நம்ம ஊருக்குள்ளே வந்தவிங்களை, இப்படியெல்லாம் சொல்லக் கூடாது ராசாத்தி! நம்ம ஊரைப் பத்தி ஒண்ணும் தெரியாதுல்லம்மா! போ மயிலு! கருப்பனைக் கூட்டிக்கிட்டு போ! நான் அவிங்க யாரு என்னன்னு விசாரிச்சுப்புட்டு பிறகு வர்ரேன்.!”
“நானும் இங்கணதேன் நிற்பேன்! அவிங்க யாரு என்னன்னு எனக்கும் தெரியணும்! கண்டவங்களையெல்லாம் நம்ம ஊருக்குள்ளே விட முடியாது!” பிடிவாதமாய் முகம் சுருக்கி நின்றாள் அவள்.
“மயிலு! வயசுப்பிள்ளை இப்படி அந்நிய ஆம்பிள்ளைங்க முன்னால் நிற்கக் கூடாது. போகச் சொன்னால் கேட்கணும். அண்ணனைக் கோபப்படுத்திப் பார்க்காதே மயிலு!” அவன் குரலில் கண்டிப்பு தெரிந்தது.
“போண்ணே! ரொம்பத்தேன் பண்ணுற? என்னை ஆம்பளை கணக்கா வளர்த்து விட்டுப்புட்டு, இவன் முன்னால் நிற்காதே! அவனைப் பார்க்காதேன்னு சொல்லாதே! எரிச்சலாய் கிடக்கு. இந்த மேகவர்ணாவை அடக்கி ஆளணும்ன்னா ஒருத்தன் பிறப்பெடுத்துதேன் வரணும்.! நான் அப்பாக்கிட்டே போய்ச் சொல்லுவேன், போஸ் அண்ணே என்னை வையுதுன்னு சொல்லுவேன்!” என அவ்வளவு பெரிய ஆண்மகனையே தன் விழிகளை உருட்டி மிரட்டினாள் மேகவர்ணா.
“சொல்லு மயிலு! ஆனால் அண்ணன்கிட்டே இப்படி மூஞ்சியை சுருக்காதே ராசாத்தி! உன் முகம் மாறினால் கூட மனசு வலிக்குது.! நீ முதலில் கருப்பனைக் கூட்டிக்கிட்டு வீடு போய் சேரு! புளியங்கா பறிக்கிறேன், கொடிக்காய் பறிக்கிறேன்னு எங்கேயும் சுத்தக் கூடாது மயிலு!” எனத் தங்கையை அனுப்பிவிட்டு வீரபத்ரனை நோக்கித் திரும்பினான் போஸ் பாண்டி.
போஸ் பாண்டி, நாச்சியப்பனின் மகன்களில் மூத்தவன். அதாவது அரசியின் உடன்பிறவா சகோதரன் நாச்சியப்பனின் முதல் மகன். பொறுப்பானவன்.
முரடனும் கூட.. வயது முப்பத்தி ஐந்தைத் தொட்டும் திருமணம் செய்துக் கொள்ளாமல் குடும்பம் மட்டுமே எல்லாம் என வாழ்பவன். தன் தாய் பஞ்சவர்ணத்தின் மறைவிற்கு பின், தன் தங்கையையே தாயாய் பாவித்து, அவளைப் பெயர் சொல்லிக் கூட அழைக்காமல், ‘மயிலு! மயிலு!’ எனச் செல்லப் பெயரிட்டு அழைப்பவன். அவனைப் பொருத்தவரை அவனுக்கு அவன் குடும்பம் தான் எல்லாம். தான் உயிராய் நினைக்கும் தன் தங்கை மேகவர்ணாவிற்கு, வீட்டோடு இருக்கும்படியாய் மாப்பிள்ளையைப் பார்த்து, திருமணம் செய்து, தன்னோடே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற திண்ணமான எண்ணம் அவனுக்குள் இருந்தது.
வீரபத்ரனை நோக்கி போஸ் பாண்டி வரவும், காத்தவராயனும் அவசரமாய் வந்து வீரபத்ரனோடு சேர்ந்துக் கொண்டான்.
“நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்? உங்க உறவுக்காரவுக இங்கே இருக்காங்களா? யாரையாவது பார்க்க வந்தீகளா?!” என போஸ்பாண்டி கேட்ட தோரணையிலும், கரடுமுரடான அவன் குரலிலும் உள்ளுக்குள் நடுங்கிப் போனான் காத்தவராயன். தங்கையிடம் பேசும் போது, மென்மையாய் இருந்த அவன் குரல், இப்போது கரகரப்பாய், கரடுமுரடாய் மாறியிருந்தது.
“ஏன்டா எக்ட்ரா லார்ஜாய் வளர்ந்த எருமை மாதிரி இருக்கான். இவனைப் பார்க்கவே பயமா இருக்கு. இந்த ஊருக்குள்ளே நாம போய்த்தேன் ஆகணுமா?!” பயத்துடன் வீரபத்ரனின் காதைக் கடித்தான் காத்தவராயன்.
“போய்த்தான் ஆகணும்!”
“அப்போ நீ ஒரு தீர்மானத்தோடதேன் வந்திருக்கிற? நீ சொன்ன மாதிரியே அந்தப் புள்ளையை இந்தக் காட்டான் மயிலுன்னுதேன் கூப்பிடுறான். என் சோலியை முடிக்க நீ ப்ளான் பண்ணிட்டே அப்படித்தானே வீரா?!”
“சும்மா இரு காக்காவிரட்டி! அவன் நம்மளையேதேன் பார்க்கிறான்.!” என பதில் சொன்னான் வீரபத்ரன்.
“என்ன நான் கேட்டுட்டே இருக்கேன், நீங்க உங்களுக்குள்ளேயே பேசிட்டு இருந்தால் எப்படி?!” என்ற போஸ்பாண்டியின் உறுமலில்,
“அது வந்துங்க.. நாங்க இந்த ஊரைச் சுற்றி பார்த்துட்டு, கொஞ்ச நாளைக்கு இங்கண தங்கலாம்ன்னு இருக்கோம்!” நடுக்கத்துடன் பதில் சொன்னான் காத்தவராயன்.
“ஏன்டா! எதையாவது சொல்லி சமாளிச்சுத் தொலையேன்டா! உனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கே?”
“அந்தப் பொண்ணு போயிருச்சான்னு பார்த்தேன். நல்லா அழகா இருக்கால்ல?” என வீரபத்ரன் கேட்க, வீரபத்ரனை முறைத்தான் காத்தவராயன்.
“நெசமாவே ஊரைச் சுத்திப் பார்க்கதேன் வந்தீகளா? மூஞ்சியையும் முழியையும் பார்த்தால் அப்படி ஒண்ணும் தெரியலையே?!” சந்தேகமாய் இருவரையும் பார்த்தான் போஸ்பாண்டி.
“ஆமாங்க சாமி! ஊரு நல்லா இருக்கேன்னு வந்துட்டோம்! ஆனால் பாருங்க, எங்கண தங்குறதுன்னுதேன் தெரியலை.!” இழுத்து நிறுத்தி, போஸ்பாண்டியின் முகம் பார்த்தான் காத்தவராயன்.
“ஆமா! நீங்க எந்த ஊரிலிருந்து வாரீங்க? உடுத்தியிருக்கிற துணியையும் தோரணையையும் பார்த்தால், டவுனு பக்கமிருந்து வர்ர மாதிரி தெரியுது.!”
“ஆமா! ஆமா! சென்னையிலிருந்து வர்ரோம்! காலேஜ் ரிசர்ச்க்காக வந்திருக்கோம்!” அவசரமாய் இடையிட்டான் வீரா.
“இந்தாருங்க தம்பி! நமக்கு இந்தப் பொய் பேசறவங்களைக் கண்டாலே ஆகாது. எதையாவது மறைக்கணும்ன்னு நினைச்சீகன்னா வாய் பேசாது! கை மட்டும்தேன் பேசும்.!” போஸ்பாண்டியின் உலக்கைப் போன்ற கரத்தின் மீது வீராவின் பார்வை பயத்துடன் விழுந்தது.
“ஆத்தி! ஒத்தை அடிக்கே சுருண்டு விழுந்துருவோம் போல! இவிங்கக் கிட்டே கொஞ்சம் சூதானமாகத்தேன் இருக்கணும்!” தனக்குள் முனகியபடியே, அசுரனைப் போல், தன் எதிரே நின்றவனிடம்,
“நான் பொய் சொல்றேன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?” எனப் போலியாய் வழிந்தப் புன்னகையுடன் கேட்டான் வீரா.
“அதுக்குத்தேன் பொய் சொன்னாலும், பொருந்தச் சொல்லணும்ன்னு சொல்றது.. வண்டி நம்பரைப் பார்த்ததுமே மருதை ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்ன்னு தெரியுது. மருதையிலிருந்து வந்துப்புட்டு சென்னைன்னு சொன்னதும் நாங்க நம்பிடுவோமா என்ன? அம்புட்டு கேணைக் கிறுக்கனுங்களாவா இருக்கோம்? என்னதேன் நாங்க பொழப்பு நடத்துறது அம்மாப்பட்டியாய் இருந்தாலும், நாங்களும் மருதைக்காராய்ங்கதேன். உங்க முகரையில்தேன் மருதைக்காரய்ங்கன்னு எழுதி ஒட்டியிருக்கே?!” எனப் போஸ்பாண்டி சொல்ல, உள்ளுக்குள் திடுக்கிட்டு அதிர்ந்தான் வீரபத்ரன்.
‘ஆத்தி! பார்த்ததுமே அக்கு வேரா, ஆணி வேரா பிரிச்சு கண்டுபிடிச்சுட்டாய்ங்க! நான் மட்டும் அரசி மவன்னு தெரிஞ்சுது அம்புட்டுதேன்.!’ என அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க,
“என்ன வீரபத்ரா! உள்ளுக்குள்ளே உதறுதா? பார்த்த உடனே கண்டு பிடிச்சுட்டாய்ங்கன்னு பதறுமே? உங்க ஒண்ணு விட்ட மாமன் நாச்சியப்பனுக்குப் பொறந்த பெரிய அண்டக் காக்காதேன் இந்த போஸ்பாண்டி! இன்னும் ரெண்டு அண்டக் காக்கா இருக்கிறாய்ங்க போல! மூணு அண்டக் காக்காவுக்கு பின்னால் பிறந்த மைனாக்குஞ்சுதேன், இப்போ காளை மாட்டோட போச்சே அந்த மயிலு! என்னை எங்கே வந்து நிறுத்தியிருக்க பார்த்தியாடா? உசிரோட ஊரு போய் சேருவேனான்னே பயமா இருக்குடா!” என வீரபத்ரனின் காதுக்குள் காத்தவராயன் இரகசியமாய் சொல்ல, அதிர்ந்து போய் காத்தவராயனைப் பார்த்தான் அவன்.
“என்னடா லுக்கு இங்கே விடுறே? உன் லுக்கை எதிரில் நிற்கிறானே அவன்கிட்டே விடு!” போஸ்பாண்டியை நோக்கிக் கையைக் காட்டினான் காத்தவராயன்.
“என்ன உங்களுக்குள்ளேயே இரகசியம் பேசிக்கிட்டு இருந்தால் எனக்கு என்ன தெரியும்? மருதையில் இருந்து தானே வாரீக?!”
“ஆமாங்க! மருதையிலிருந்து வாரோமின்னு சொன்னால், ஊருக்குள்ளே விடாமல் விரட்டிப்புடுவீங்கன்னு பயந்து பையன் சட்டுன்னு வாய்க்கு வந்ததைச் சொல்லிட்டான். தப்பா எடுத்துக்கிடாதீங்க!” சமாளிக்க முயன்றான் காத்தவராயன்.
“என்னமோ சொல்லுறீக, ஆனால் எனக்கு நம்பிக்கை வரலை. எங்க ஊரை நம்பி வந்தவங்களை திருப்பி அனுப்பற பழக்கமும் எங்களுக்கு இல்லை. ஆனால், நீங்க மருதைன்னு சொன்னதுதேன், கொஞ்சம் ரோசனையாய் கிடக்கு!” யோசனையாய் புருவத்தைச் சுருக்கினான் போஸ்பாண்டி.
“மருதையில் நமக்கு வேண்டப்பட்டவங்க யாராவது இருக்காங்களோ?” என்ற காத்தவராயனின் கேள்விக்கு,
“வேண்டப்படாதவீங்க இருக்காய்ங்க! அவிங்க மூச்சுக்காத்து கூட, இந்த ஊருக்குள்ளே பட்டுடக் கூடாதுன்னு நினைக்கிறேன். அதுக்குத்தேன் கேட்டேன்.!” என்ற போஸ்பாண்டியின் பதிலில் இருவருமே விழி பிதுங்க அதிர்ந்து நின்றனர்.
“அடேய்! பக்கிப் பயலே..! வந்து வராமலும் கண்ணிவெடியைக் காலுக்கு அடியில் கொளுத்துறாங்களேடா? சொந்தக்காராய்ங்க உங்க சண்டையில் என்னை இழுத்து நிறுத்திப்புட்டீங்களேடா! ஆக மொத்தத்தில் உங்க குடும்பத்து சார்பா என்னை நேர்ந்து விட்டுப்புட்டீங்க?!”
“நீ வேற சும்மா இரு காக்காவிரட்டி! நானே ஈரக்குலையைக் கையில் பிடிச்சுட்டு நிக்கிறேன். இவிங்க தோரணையும், பேச்சும் பர்த்தாலே பயந்து வருது.!” என வீரபத்ரன் புலம்பிய அதே நேரம்,
“உங்க பேரு என்ன தம்பி? வந்ததிலிருந்து பேர் கூடக் கேட்காமல் பேசிட்டு நிக்கிறேன் பாருங்க! ஆதார் கார்ட்டு எதாவது வச்சிருக்கீங்களா?” என போஸ்பாண்டி கேட்க,
“அடேய்! அரசி மயனே! இன்றைக்கு நமக்கு சங்குதான்! உசுரோட புதைச்சு, பால் ஊற்றாமல் விடமாட்டாய்ங்க போல! என்னமோ பேங்கில் லோன் கொடுக்கறவன் கேட்கிற மாதிரி, ஆதார் கார்டு, ஐ.டி ப்ரூஃப் எல்லாம் கேட்கிறான்! நீ தொலைஞ்ச.. உன் கூட சேர்ந்தப் பாவத்துக்கு நானும் சிக்கி சின்னானா பின்னமாகப் போறேன். அடியே.. கயலு! என்னை மன்னிச்சுரும்மா! இவிங்கக் கூட பழகின பாவத்திற்கு உன்னை ஒத்தையில் விட்டுட்டு போறேன்னு தான் சங்கடமா இருக்கு.!” எனத் தன் போக்கில் புலம்பினான் காத்தவராயன்.
“என் பேரு வீரா! ஆதார் கார்ட் எல்லாம் எடுத்துட்டு வரலை சார்! இம்புட்டு சந்தேகப்பட்டு நீங்க எங்களை இந்த ஊருக்குள்ளே விட வேணாம் சார். இன்னுமும் இப்படியொரு கிராமம் இருக்குன்னு இங்கே இருக்கிற பழக்க வழக்கங்களை வீடியோவோ போட்டு எல்லாருக்கும் தெரியப்படுத்தலாமம்ன்னு வந்தேன். ஆனாலும், இருக்கட்டும் சார்! பரவாயில்லை, நாங்க கிளாம்பறோம்!” எனச் சொன்னவன், திரும்பி நடக்க,
“நில்லுங்க தம்பி! நமக்கு இந்த வீடியோ, மீடியா இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனாலும் நீங்க இந்த ஊரை நம்பி வந்துட்டீங்க! வாங்க! ஆனால், எதுவும் ஏடாகூடம் பண்ணாமல் சூதானமா இருக்கணும். எதாவது விவகாரம் பண்ணுனீங்கன்னு தெரிஞ்சது, அம்புட்டுதேன் சொல்லிப்புட்டேன்!” என மிரட்டலாய் போஸ்பாண்டி சொல்ல,
“சரிங்க சார்!” எனத் தலையசைத்தான் வீரபத்ரன்.
“அப்பறம் நம்ம வீட்டுக்கு பக்கத்திலேயே, நம்ம இன்னொரு வீடு சும்மாத்தேன் கிடக்கு. வந்து தங்கிக்கிடுங்க! ஆனால், வீட்டை, தோட்டத்தை நீங்கதேன் பராமரிக்கணும்! வாடகை மாசம் தவறாமல் கொடுத்துடணும். நீங்க எம்புட்டு நாள் வேணும்ன்னாலும் தங்கிக்கோங்க!” என போஸ்பாண்டி சொல்ல,
“வாடகை எம்புட்டுங்க?” எனக் கேட்டான் காத்தவராயன்.
“அட, நீங்களும் மருதைக்காரங்களா போய்ட்டீங்க.. ஒரு மூவாயிரம் ரூபாய் கொடுங்க போதும்! நான் முன்னால் போறேன். என்னைத் தொடர்ந்து பின்னால் வாங்க!” எனச் சொல்லிவிட்டு அவன் ஜீப்பில் ஏறிக்கொள்ள, தன் இருசக்கர வாகனத்தில் போஸ்பாண்டியைப் பின் தொடர்ந்தான் வீரபத்ரன்.
******
“அடேய்! இம்சை பிடிச்சவனே! அவனே பார்த்த மாத்திரத்தில், ஊரெல்லாம் கண்டு பிடிக்கிறான். அவன் வீட்டு முன்னாலேயே போய் இருந்துக்கிட்டு, எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லைன்னு காட்டணுமா? எனக்கு நீ செய்றதெல்லாம் பார்த்தால் பயந்து வருது டா!”
“கண்டு பிடிக்கட்டுமே! நான் அரசியோட மயன்னு அவிங்களுக்கு தெரியாதே காக்காவிரட்டி! அப்பறம் நீதான் காக்காவிரட்டியாச்சே, அந்த அண்டக் காக்காங்களை விரட்டிப்புட்டு என்னை அந்தப் புள்ளையோட, ஜோடி சேர்த்து வச்சிரு.!”
“ஆமாடா! உங்களுக்கு சோடி சேர்த்து வைக்கத்தேன், எங்க அப்பன் ஆத்தா பெத்து விட்ருக்காய்ங்களா?”
“அப்போ, அழகரையும், அந்த மைடப்பி கருவிழியை மட்டும் சேர்த்து வச்சே?”
“அதுங்க ஒரே வீட்டுக்குள்ளே வளர்ந்த புள்ளைங்க! அது மட்டுமில்லாமல், அவிங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருந்த நேசம் உண்மையானது. எல்லாத்துக்கும் மேல கருவிழி, என் உடம் பொறக்காத தங்கச்சி!”
“மேகவர்ணாவும் உன் தங்கச்சிதேன்!”
“ஏற்கனவே ஊரு பூராவும் எனக்கு தங்கச்சியாதேன் கிடக்கு. இதில் நீங்க வேற எண்ணிக்கையை அதிகப்படுத்தாதீங்க டா! எதாவது ஒரு பொண்ணாச்சும், மாமன் மச்சான்னு ஆசையாய் கூப்பிடுதா? ஊரில் முக்கால்வாசி எனக்கு தங்கச்சிதேன்!” நிரம்பவும் சலித்துக் கொண்டான் காத்தவராயன்.
“ரொம்ப ஃபீல் பண்ணாதே காக்கா! நான் வேணும்ன்னா கயலுக்கிட்டே சொல்லி, உனக்கு முறைப் பொண்ணாய் பார்க்கச் சொல்லவா?”
“ஏன்டா? என் குடும்பத்தில் கும்மியடிக்கணும்ன்னே திரிவீங்களா? ஏற்கனவே என்னையும் என் பொண்டாட்டியையும் பிரிச்சுப்புட்டீங்க! இப்போ இதையும் போட்டுக் கொடுத்து மொத்தமா அத்து விட்டுரு! நல்ல எண்ணம்டா உனக்கு! நீயெல்லாம் நல்லா வருவடா!”
“அட, சும்மா சொன்னதுக்கே இப்படி பயந்தால் எப்படி? பொண்டாட்டி மேலே அம்புட்டு பயம்?!”
“பொண்டாட்டினாலே பயம் தான்டா வீரபத்ரா! உனக்கு கல்யாணம் ஆகும் போது இதெல்லாம் புரியும்.!”
“எனக்குதேன் இப்போவே புரியுதே! இந்த ராக்காச்சியையும் அவ வளர்க்கிற அந்த மாட்டையும் சமாளிக்கவே தனி தெம்பு வேணும் போல! வாய் மூடாமல் பேசிட்டே இருக்கா! இந்த மேகவர்ணா மைடப்பிக்கு அக்காவா இருப்பா போல..! பேரு மட்டுந்தேன் மேகவர்ணான்னு மென்மையாய் வச்சிருக்காய்ங்க! பேருக்கும் ஆளுக்கும் கொஞ்சமும் சம்மந்தமே இல்லை.!”
“அப்போ இந்தப் புள்ளை யாருன்னு உனக்கு நெசமாவே தெரியாதா?”
“தெரியாது காக்காவிரட்டி! நான் சும்மா பேச்சுக்கு மயிலம்மான்னு சொன்னேன். மத்தபடி, இப்படியொரு குடும்பம் இருக்குன்னு மட்டும்தேன் எனக்குத் தெரியும். அவிங்க யார் யாருன்னு எனக்கு தெரியாது. அந்தப் புள்ளையை மட்டும் முன்னவே தெரிஞ்சிருந்தால், இப்படியா விலகி நின்னு வேடிக்கைப் பார்த்திருப்பேன். ஓடிப்போய் கட்டிப்புடிச்சு தூக்கி சுத்தியிருக்க மாட்டேன்.!”
“ஆத்தாடி ஆத்தா! நல்லவேளை அந்தப் புள்ளையை உனக்குத் தெரியலை. ஒருவேளை தெரிஞ்சிருந்துச்சு, என் உசுருக்கு உத்திரவாதம் இல்லைடா சாமி.!”
“அந்த இராமனுக்கு அணில் உதவி செஞ்ச மாதிரி, எங்கக் குடும்பத்தைச் சேர்க்க நீ ஹெல்ப் பண்ண மாட்டியா காக்காவிரட்டி?”
“உங்க ஆத்தாதேன் இந்த ஊரே வேணாமுன்னு சொன்னுச்சே! வீம்பு பிடிச்சு நீ வந்துட்டு, சேர்த்து வைக்கணுமாக்கும்.. சேர்த்து..!”
“உனக்கு எங்க அம்மாவைப் பத்தி முழுசா தெரியாது. அப்பன், ஆத்தான்னு சீராட ஒரு வீடு இல்லைன்னு எங்க அம்மா எம்புட்டு விசனப்பட்டிருக்குன்னு உனக்குத் தெரியுமா? என் ஒண்ணு விட்ட மாமனா இருந்தாலும், தம்பி வீடுன்னு இங்கண வந்து சீராடணும்ன்னு எங்க அம்மாவுக்கு ஆசைதேன். ஆனால் எங்க தாத்தன்தேன், ஒண்ணு விட்ட சொந்தமெல்லாம் சீர், செய்முறைன்னு ஒண்ணும் செய்ய வேணாம்ன்னு சொல்லிப்புட்டாரு. அவரு போன பிறகும், அம்மாவால் இவங்கக்கிட்டே வந்து பேச முடியலை. இத்தனைநாள் இல்லாமல் திடீர்ன்னு வந்து பேசினால், என்னமும் நினைச்சுப்பாங்களோன்னு அம்மாவுக்கு ஒரு தயக்கம்.!”
“நிப்பாட்டு! நிப்பாட்டு..! இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?”
“அம்மா அழகரு கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைக்க எம்புட்டு ஆசையாய் கிளம்பிச்சு தெரியுமா? ஆனால், முன்னே செய்முறை செய்யவிடலைங்கிற கோபத்தில், இவிங்க ஒண்ணு பேச, அவிங்க ஒண்ணு பேசன்னு பஞ்சாயத்து ஆகிப் போச்சு.!”
“சரி! இப்போ அதுக்கு நீ என்ன பண்ணப் போற?”
“இப்போ மாட்டை மேய்ச்சுக்கிட்டு போச்சுல்ல, அந்தப் புள்ளை மேகவர்ணாவை நான் கட்டுனேன்னா ரெண்டு குடும்பமும் சேர்ந்திரும் தானே?!” எனக் கேட்ட வீரபத்ரனின் கண்களுக்குள், தன் பெரியம்மாவான பூங்கொடி, தாய் வீட்டிற்கு சென்று வரும் போதெல்லாம் ஏக்கமாய் பார்க்கும் தாயின் முகம் வந்து போனது.
“அடேய் விவகாரத்துக்குப் பொறந்தவனே.. நான் என்னமோ வீடியோ எடுக்க வந்திருக்கன்னு நினைச்சால், நீ என்னடா இம்புட்டு பெரிய பஞ்சாயத்தோட வந்திருக்க? நீயும் உன் மாமன் குடும்பமும் பாசப் பயிரை வளர்க்க நான்தேன் ஊறுகாயா? என்னை இப்படியே இறக்கிவிடு, நான் பொடி நடையாய் நடந்தே ஊரு போய் சேருறேன். உங்க மாமன் மயன் ஒருத்தனே அணகோண்டாவுக்கு அண்ணன் மாதிரி இருக்கான். இன்னும் ரெண்டு பேரு எப்படி இருப்பாய்ங்களோ? அந்தப் புள்ளை அதுக்கு மேல, மாட்டை விட்டு முட்ட விடுது. இது குடும்பமா? இல்லை மிருகக்காட்சி சாலையான்னு தெரியலை. என்னை விட்டுருடா எப்பா!” என வாகனத்தின் பின்னால் அமர்ந்தபடியே காத்தவராயன் கையெடுத்துக் கும்பிட, அதே நேரம், நாச்சியப்பனின் வீடும் வந்திருந்தது.
வீட்டின் தாழ்வாரத்தில், பூனைக்குட்டியுடன் விளையாடுவதைப் போல், தன் கருப்பனுடன் விளையாடிக் கொண்டிருந்த மேகவர்ணாவின் மீது வீரபத்ரனின் பார்வை அழுத்தமாய் விழுந்தது. அந்த மாலையில், மேற்கே மங்கி மறையும் சூரியனின் வர்ணம் மேகப் பஞ்சு ப் பொதிகளின் நடுவே பிரதிபலிப்பதைப் போல் தேன் நிறத்தில் இருந்தாள்.
பனங்கருப்பட்டியின் பாகு நிறத்தில் மினுமினுப்பாய் இருந்தவளை அவன் இரசனையோடு அவன் பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வையை மறைத்தபடி இரண்டு உருவங்கள் அவன் முன் வந்து நின்றது..
தித்திக்கும் 🔥

