
திமிர்-2
“ஹலோ! மதும்மா எப்படி இருக்கே டா தங்கம்? நெடுமாறன் எப்படி இருக்கான்? நம்ம ஆது குட்டி எப்படி இருக்கான்?” மகனையும் மருமகளையும் அலைபேசியின் வழியாய் விசாரித்துக் கொண்டிருந்தார் பூங்கொடி.
“எல்லாரும் நல்லா இருக்கோம் அத்தை! ஆதுவுக்கு மூணு வயசு ஆகிடுச்சு ஸ்கூல்க்கு அனுப்பலாம்ன்னு இருக்கேன்.!”
“மூணு வயசு தானே மதும்மா ஆகுது? இப்போவே பள்ளிக்கூடம் அனுப்பனுமா? பிள்ளைக்கு உச்சா வந்தால் கூடச் சொல்ல தெரியாது.!”
“அட நீங்க வேறத்தே! உங்க பேரன் ஊரையே வித்துடுவான். சென்னை என்ன விலைன்னு கேட்கிறான். அதெல்லாம் போய்ட்டு வந்துடுவான்.!”
“இல்லை மதும்மா! நான் ஏன் சொல்றேன்னா..!”
“புரியுது அத்தை! நான் வேலை பார்க்கிற கேம்பஸ்குள்ளேயே இருக்கிற ஸ்கூலில் தான் விடப் போறேன். இப்போ பார்ட் டைம் தானே அத்தே பார்க்கிறேன். ஸோ, ப்ராப்ளம் இல்லை சமாளிச்சுடலாம்.!” என என்னதான் மதுரிமா சமாதானம் சொன்னாலும், பூங்கொடியின் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.
“ஒரு நாலு வயசு வரை லீவ் போட்டுட்டு புள்ளையைப் பார்த்துக்கலாம் தானே மது.? புள்ளை பாவம் தாய்ப்பாசத்துக்கு ஏங்கிப் போய்டுவான்.!” என்ன தான் மற்ற விஷயங்களில், மதுவிற்கு ஆதரவாய் பூங்கொடி பேசினாலும், தன் பேரன் ஆத்விக் என வருகையில், அவர் மனம் எனோ வேதாளமாய் முருங்கைமரம் ஏறிவிடுகிறது.
“அத்தே! நான் பார்த்துக்கிறேன்.! நீங்க கவலைப் படாதீங்க! ஆமா! விழி எப்படி இருக்கா?” பேச்சை மாற்றினாள் மது.
“நல்லா இருக்கா! கல்யாணமாகி நாலு வருஷத்துக்குப் பிறகு பிள்ளை உண்டாகி இருக்காளே.. அதனால் எங்கேயும் அனுப்பாமல், அரசியும் மீனாட்சியும்தேன் பார்த்துக்கறாங்க!”
“சரி அத்தே! எனக்கு டைம் ஆகிடுச்சு. வாரக் கடைசியில் விழிக்கு கால் பண்ணுறேன்னு சொல்லுங்க! எல்லாரையும் கேட்டேன்னு சொல்லுங்க! வீராவை வேணும்ன்னா இங்கே வரச் சொல்லுங்க! நம்ம ஃப்ளாட்டிலேயே தங்கிக்கலாம். எதாவது ஜாப் இங்கிருந்தே பார்த்துக்கலாம்ன்னு சொல்லுங்க!” எனச் சொல்லிவிட்டு, அலைபேசியை நெடுமாறனிடம் கொடுத்துவிட்டு நகர்ந்திருந்தாள் மதுரிமா.
“டேய் நெடுமாறா! நீயாச்சும் உன் பொண்டாட்டிக்கு சொல்ல வேண்டியது தானே டா? பச்சைப்புள்ளை அவனைப் போய் ஸ்கூல்க்கு அனுப்பறேன்னு சொல்றா!”
“ம்மா! இங்கெல்லாம் பிள்ளைகளை ஒரு வயசிலேயே டே கேரில் விட்டுட்டு வேலைக்குப் போயிருவாங்க! உன் மருமகள் வேலையையும் பார்த்துக்கிட்டு, அவனையும் பார்த்துக்கிட்டு மேனேஜ் பண்ணுறாளேன்னு சந்தோஷப்படு.!”
“என்னமோ டா! எனக்கு இந்த ஒருவிஷயம் மட்டும் மதுக்கிட்டே பிடிக்கவே இல்லை.!”
“ம்மா! சும்மா அவளையே குறை சொல்லாதேம்மா! அவள் எல்லா விஷயத்திலேயும் சரியாகத்தான் இருப்பா!” என மனைவிக்குப் பரிந்து வந்த மகனைப் பார்த்து அவருக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.
“என்னமோ போங்கடா! ஆது குட்டியை மட்டும் நல்லா பார்த்துக்கோங்க! அவ்வளவு தான் எனக்கு வேணும்.!” என சொல்லிவிட்டு அலைபேசியை அணைக்க,
“என்னக்கா! பேரன் என்ன சொல்றான்.? மது நல்லா இருக்காளா? எப்போ இங்கே வருவாகன்னு கேட்டீங்களா?” என்றபடியே வந்து நின்றார் அரசி.
“எப்போ வாராங்கன்னு தெரியலை அரசி. லீவு கிடைக்கும் போது தானே வருவாங்க! இந்தச் சின்னப் பையன் வேற கண்ணுக்குள்ளேயே நிக்கிறான். மூணு வயசுதேன் ஆகுது. புள்ளையை ஸ்கூலுக்கு விடப் போறேன்னு சொல்லுறா! என்னத்தை சொல்லுறது போ!” எனச் சலித்துக் கொண்டார் பூங்கொடி.
“அக்கா! இதையெல்லாம் மனசில் போட்டுக்கிட்டு ப்ரஷரை ஏத்திட்டு கிடக்காதீங்க! மது எல்லாத்தையும் பார்த்துக்கிடுவா! அவங்க போக்குக்கு விட்டுருங்க! வேலையையும், வீட்டையும் கவனமா பார்த்துக்கிறாளே.. விடுங்க!” என அரசி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தன் பயணப் பொதிகளைச் சுமந்தபடியே கீழே இறங்கி வந்தான் வீரபத்ரன்.
“அரசி! வீரா கிளம்பிட்டான் போல இருக்கு, பையும் கையுமா வாரானே?” என்ற பூங்கொடியின் குரலில் மாடியிலிருந்து இறங்கிவரும் மகனைப் பார்த்தார் அரசி.
“ஏன்டா! காலையிலேயே கிளம்புவேன்னு முன்னமே சொல்லியிருந்தால், புளிச்சோறு எதாச்சும் கட்டிக் கொடுத்திருப்பேனே?”
“எம்மா! நான் என்ன பாதயாத்திரையா போறேன், கட்டுச் சோறு கொண்டு போய் மரத்தடியில் உட்கார்ந்து திங்க?”
“அப்போ எங்கே டா போற?”
“சொல்லமாட்டேனே?”
“நான் உன் அம்மாடா! என்கிட்டே சொல்ல மாட்டியா?”
“அதனால் தான் சொல்ல மாட்டேன்.!”
“ஆனாலும் நீ ரொம்ப திமிருத்தனம் பண்ணுறேடா!”
“அரசி பெத்த புள்ளையாச்சே.. உன்னை மாதிரித்தானேம்மா நானும் இருப்பேன்.!”
“ம்க்கும்! இப்படி வீடியோ பிடிச்சு போட்டு, காசு சாம்பாதிக்கும் போதே, உனக்கு இம்புட்டு திமிரு. நல்ல வேலையில் மட்டும் உட்கார்ந்திருந்தேன்னா, உனக்கு சீமை காணாது ராசா!” என அங்கயற்கண்ணி சொல்ல, வீரபத்ரனின் முகம் சட்டென சுருங்கி பின் இயல்புக்கு மீண்டது.
“இந்தாரு அப்பத்தா! எனக்குப் பிடிச்சதை நான் செய்றேன். சும்மா என்னத்தையாவது பேசி எரிச்சலைக் கிளப்பாதே சொல்லிப்புட்டேன்.!”
“போடா போக்கத்த பயலே, நாளைப் பின்னே அப்பத்தா, ஆட்டுக்குட்டின்னு வா, உன்னை பார்த்துக்கிறேன்!” என அங்கயற்கண்ணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“டேய்! டென்ரூப்பீஸ்..! நில்லுடா!” எனக் கத்தியபடியே படிகளில் அவசரமாய் இறங்கி வந்தாள் கருவிழி.
“ஏய்! மைடப்பி என்னத்துக்கு இம்புட்டு அவசரமா ஓடி வர்ர? இரு நானே வர்ரேன்.!” என வீரபத்ரன் அவளை நோக்கிப் போக,
“ஏய்! பார்த்து விழிமா!”
“எந்தக் கோட்டையைப் பிடிக்க இம்புட்டு வேகமா ஓடியார?” என்ற கேள்விகளின் நடுவே, அவள் பாதி படிகளில் இறங்கும் போதே, அவள் பின்னால் வேகமாய் வந்த அழகர், அவள் இடையோடு கையிட்டு தன் கரங்களில் ஏந்தியிருக்க,
“அழகரு!” என்ற அழகிய சிணுங்கலுடன், அவன் மார்பில் புதைந்தாள் கருவிழி.
“நான் தான் வர்ரேன் இருன்னு சொன்னேன்ல்ல டி, என்னத்துக்கு இப்படி ஓடிவர்ர? உனக்குள்ளே என் பொண்ணு இருக்காள்ன்னு நெனைப்பெல்லாம் உனக்கு இருக்கா? இல்லையா?”
“பொண்ணு இல்லை பையன்தேன்!”
“பொண்ணு தான்!”
“போ மாமா! பையன்தான்.!”
“என் மீசையைப் பிடிச்சு விளையாட, எனக்கு பொண்ணு தான் வேணும்டி கரு கரு!”
“உன் மீசையைப் பிடிச்சு விளையாடத்தேன் நான் இருக்கேனே? இதில் பொண்ணு வேற வேணுமாக்கும்?” யாருக்கும் கேட்காமல் அவன் செவிக்குள் அவள் முணுமுணுக்க, கண்ணுக்குப் புலப்படாத நாணம் சுமந்தது ஆணவன் முகம்.
“போடி! கிறுக்கச்சி! எங்கே என்ன பேசணும்ன்னு இவளுக்குத் தெரியாது!” என போலியாய் சலித்தபடியே, தரைக்கு நோகாமல், அவளை இறக்கிவிட்டான் துடிவேல் அழகர்.
“ஏன் மைடப்பி! அழகர் தூக்கும்ன்னு தெரிஞ்சு தானே ஓடியாந்த?”
“போடா பதிற்றுப்பத்து! நீ கிளம்பிருவியோன்னு அவசரமாய் ஓடிவந்தால், லூசு மாதிரியே பேசுறே?” என்றவள்,
“நீ எங்கே வேணும்ன்னாலும், போ டென்ருப்பீஸ்.! ஆனால் என் புள்ளை பொறக்கும் போது, சித்தப்பனா மருதையில் நீ இருக்கணும் சொல்லிப்புட்டேன்!” எனச் சொன்னவள், தன் கையிலிருந்து கட்டுப் பணத்தை வீரபத்ரனின் கரத்தில் திணித்தாள்.
“இதெல்லாம் எனக்கு வேணாம் மைடப்பி! நான் பார்த்துப்பேன்! என்கிட்டே பணம் இருக்கு மைடப்பி!” என்றவன் மீண்டும் அவள் கரத்தினில் திணிக்க முயல,
“அண்ணன் பொண்டாட்டின்னு நினைச்சு வாங்க மாட்டேங்குறியாக்கும்? அப்போ நான் உன் ஃப்ரெண்ட்டுன்னு சொன்னது? நீ எப்போவுமே எனக்கு மைடப்பி தான்னு சொன்னதெல்லாம் பொய்யாடா?” எனக் கேட்டாள் கருவிழி.
“இதையெல்லாம் செஞ்சு தான், ஃப்ரெண்ட்டுன்னு நிரூபிக்கணுமா? நான் வச்சிருக்கிற கேமிராவில் இருந்து எல்லாமே நீ வாங்கிக் கொடுத்தது தான் மைடப்பி! நான் இதுவரை உனக்கு ஒண்ணுமே செய்யலையே?”
“போடா லூசுப்பயலே! உன் ஆசைப்படி நீ பெரிய டைரக்டர் ஆன பிறகு நானே எனக்கு என்ன வேணும்ன்னு உன்கிட்டே கேட்டு வாங்கிக்கறேன்.!”
“ம்க்கும்! எது நடக்கவே நடக்காதோ? அதைச் சொல்லு!”
“அதெல்லாம் உன் மனசுக்கு எல்லாமே நல்லதாகத்தான் நடக்கும். எல்லாம் எடுத்துக்கிட்டியா? கேமரா ஹோல்டர் மெத்தையில் (மாடியில்) இருந்துச்சே டா எடுத்தியா? ஆமா எப்படி போகப் போற?” எனக் கேட்டாள் கருவிழி.
“அது.. அது..!” என அவன் திக்கித் திணறும் போதே,
“வீரா நீ சொன்னபடியே வண்டி ரெடி!” என்றபடியே உள்ளே வந்தான் காத்தவராயன்.
“என்னது பைக்கில் போகப் போறியா?” ஒட்டுமொத்தக் குடும்பத்தின் பார்வையும், காத்தவராயனின் மீது திரும்பியது.
“என்னத்துக்கு எல்லாரும் நம்மளையே குறுகுறுன்னு பார்க்கிறாய்ங்க? அம்புட்டு அழகாவா இருக்கோம்? இந்த கயலு கூட, நெதமும், அழகா இருக்கீங்கன்னுதேன் சொல்லுறா! நமக்கு தான் நம்ம அழகு தெரியலை போல?” யோசனையோடு புலம்பியபடி அவன் நிற்க,
“அடேய்! காக்காவிரட்டி போட்டுக் கொடுத்துட்டியேடா?!” என காத்தவராயனின் காதுக்குள் முணுமுணுத்தான் வீரபத்ரன்.
“ஏன்டா! இன்னும் நீங்க திருந்தலையா? உங்க தாத்தன் இருந்த வரைக்கும் என்னையவே தான் முறைச்சுக்கிட்டு திரிஞ்சாரு! இப்போ நீங்களுமா டா? ஓயாமல் முறைச்சுக்கிட்டே திரியறதுக்கு நான் என்ன வயசுப்பிள்ளையா? உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா?”
“டேய்! நீதானே அவனுக்கு வண்டியை ரெடி பண்ணி கொடுத்திருக்கே? உன்னைத் தானே கேப்போம்?” என அங்கயற்கண்ணி கேட்க,
“இந்தாரு கிழவி, என்கிட்டே நெதமும் ஒரண்டை இழுக்கலைன்னா உனக்கு பொழுது அடையாது! இந்தா குத்துக்கல்லு மாதிரி தானே உன் பேரன் நிக்கிறியான்! அவன்கிட்டே கேளேன்.!” எனச் சொன்னான் காத்தவராயன்.
“அவனுக்கு என்ன தெரியும்? நீதேன் அவனுக்கு ஐடியா குடுத்திருப்பே! அவன் புறப்படுற நேரமெல்லாம் தெரிஞ்சு வண்டியெல்லாம் தயாராய் வச்சிருக்க, அவன் எந்த ஊருக்குப் போறான்னு சொல்லு? உன் சாமர்த்தியம் என்னன்னு பார்ப்போம்!” அழகாய் காத்தவராயனிடம் போட்டு வாங்கினார் அங்கயற்கண்ணி.
“அட்ய்! சொல்லிராதே டா!”
“டேய்! காக்காவிரட்டி! தெரியலைன்னு சொல்லு!”
“அடேய்! என்னைப் பாருடா!” வீரபத்ரன் என்ன தான் சைகை செய்தாலும், அதையெல்லாம் காத்தவராயன் கவனிக்கவே இல்லை.
“சொல்லிராதே..!” என வீரபத்ரன் கத்தியதையும் மீறி,
“அவன் எங்கே லண்டனுக்கா போறான். இங்கண இருக்கிற அம்மாபட்டிக்குதேன் போறான்!” என உளறியிருந்தான் காத்தவராயன்.
“என்னது அம்மாபட்டியா? எந்த அம்மாபட்டி?” என்ற அரசியின் குரல் கொஞ்சம் அதிகமாய் உயர்ந்தது.
“நம்ம பெரிய அம்மாபட்டிதேன்!” என காத்தவராயன் சொன்ன அந்த நொடி, அதிர்வும் ஆச்சர்யமுமாய் மொத்தக் குடும்பமும், வீரபத்ரனையே பார்த்தது.
“நீ அந்த ஊருக்குப் போகக் கூடாது சொல்லிப்புட்டேன்!” மகன் முன் கோபமாய் வந்து நின்றார் அரசி.
“எம்மா! ஏம்மா நீயும் என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்குற?”
“இதுக்குத்தேன், எந்த ஊருன்னு சொல்லாமல் மறைச்சியா வீரா? நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்! நீ போகக் கூடாது அவ்வளவுதேன்!”
“அழகரு! நீயாவது அம்மாகிட்டே சொல்லு! இங்கே எல்லாருக்கும் என் கல்யாணம் நின்னு போனது தெரிஞ்சு, என்னமோ குற்றவாளியைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்க! எனக்கு அதெல்லாம் பிடிக்கலை அழகரு! கொஞ்ச நாளைக்கு நான் நிம்மதியா இருக்கணும்ன்னு நினைக்கிறேன். அங்கே போய், நான் சொக்கேசனோட பேரன்னு யாருக்கிட்டேயும் சொல்லப் போறதில்லை. என் சேனலுக்குத் தேவையானதை வீடியோ எடுத்துட்டு வந்துடப் போறேன் அவ்வளவு தான்.!” தன் தமயனைத் துணைக்கழைத்தான் வீரபத்ரன்.
“மாமா! டென்ருப்பீஸ் போய்ட்டு வரட்டுமே? பாவம் தானே? நீ அத்தைக்கிட்டே சொல்லேன்!” கணவனிடம் கிசுகிசுப்பாய் பேசினாள் கருவிழி.
“ம்மா! வீரா தான், இம்புட்டு தூரம் சொல்றானே போய்ட்டு வரட்டுமே? அங்கே இவனை யாரு என்னன்னு தெரியவா போகுது?”
“நீ பேசாமல் இரு அழகரு! உனக்கு ஒண்ணும் தெரியாது. உங்க அப்பனைக் கொண்டு பிறந்திருக்கிற இவன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரிஞ்சு போய்டும். உன் கல்யாணத்தோடவே, அவிங்க எம்புட்டு ஒரண்டை இழுத்தாய்ங்க தெரியுமா? கல்யாணப் பத்திரிக்கைக் கொண்டு போன, என்னையும் உங்க அப்பனையும் அவமானப் படுத்தி அனுப்பினாய்ங்க! அங்கே போய் இவன் போறேன்னு சொல்றான்? உங்க அப்பனுக்கு மட்டும் இவன் அங்கே போறான்னு தெரிஞ்சுது அம்புட்டுதேன்.!” எனச் சொன்னவர், வீரபத்ரனிடம் திரும்பி,
“இந்தாரு வீரா! உனக்கென்ன வீடியோ தானே எடுக்கணும்? சமையல் வீடியோவிலிருந்து வ்லாக் (Vlog) போடுறவரை நான் உனக்கு உதவி செய்றேன். எப்பவும் போல, நாம டூயட் பாடி ரீல்ஸ் போடுவோம்! ஆனால் நீ அங்கே போகக் கூடாது.!”
“நான் போவேன்ம்மா! உங்க உதவியால் நான் சம்பாதிச்சதெல்லாம் போதும்! நானே தனியா என் சொந்தக் காலில் நிற்கணும்ன்னு நினைக்கிறேன். அதனால் நான் போகத்தான் போறேன்.!” என இருவருமாய் ஆளுக்கொருபக்கம் மல்லுக்கு நின்றனர்.
“அரசி! அழகர் கல்யாணம் முடிஞ்சே நாலு வருஷம் ஆகிருச்சு. அவனுக்குப் புள்ளையும் வரப் போகுது! இன்னுமும் அவங்க இதையெல்லாம் நினைச்சுக்கிட்டா இருக்கப் போறாங்க?” அங்கயற்கண்ணியும் கூட, பேரனுக்காகப் பேசிப் பார்த்தார்.
“உங்களுக்கு அவங்களைப் பத்தி தெரியாதுங்க அத்தே! சரியான காட்டுமிராண்டி கூட்டம். என்ன ஏதுன்னு விசாரிக்காமல், சம்பவத்தை முடிச்சுப்புட்டுதேன் விசாரிப்பாய்ங்க! வீரா வேணாம்டா சொன்னால் கேளுடா!”
“ஏன் அழகரு! உங்க அம்மா என்னத்துக்கு இப்படி பயப்படுறாங்க? அப்படி அம்மாபட்டியில் யாரு இருக்காங்க?” எனக் காத்தவராயன் அழகரிடம் கேட்க,
“அம்மாவோட ஒண்ணுவிட்ட சொந்தம்! அங்கேதான் இருக்காய்ங்க! சரியான விவகாரம் புடிச்சவிங்க! அதேன் அம்மா வேணாம்ன்னு சொல்லுறாங்க!” என அழகர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தன் பயணப் பொதியை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு,
“எம்மா! நான் உன் பேச்சை மீறிப் போறேன்னு நினைச்சுக்காதே! நான் உன் மயன்ம்மா! எல்லாத்தையும் சமாளிச்சுடுவேன். பயப்படாதேம்மா! அழகரு! அம்மாவைப் பார்த்துக்கோ! மைடப்பி உடம்பைப் பார்த்துக்கோ! எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணிடு!” எனக் கருவிழியின் கரத்தில் அழுத்தம் தந்து சொல்லிவிட்டு அவன் கிளம்பியிருக்க, அவன் தன் புல்லட்டை உதைத்துக் கிளப்பும் ஓசையில், உடைந்து போய் மெத்திருக்கையில் அமர்ந்தார் அரசி.
*******
“ஏன்டி! பொழுதன்னைக்கும் அழகரை வேலையும், சோலியும் பார்க்க விடாமல் கூடவே வச்சிருக்கணும்ன்னு சொல்றியே இதெல்லாம் நல்லாவா இருக்கு?” எனத் தன் மகளிடம் கேட்டார் தங்கமீனாட்சி.
“என் புருஷனை என் பக்கத்திலேயே வச்சிக்கிறேன். உனக்கென்னம்மா?” தாய் தன் கரத்தினில் தந்த கஷாயத்தைக் குடித்தபடியே பதில் சொன்னாள் கருவிழி.
“அதுக்கு இல்லைடி! அப்பறம் சோலியெல்லாம் யார் பார்க்கிறது?”
“ம்மா! நான் பிறக்கும் போது, என் அப்பனைப் பார்த்ததில்லை. இப்போ பார்க்கவும் விரும்பலை. ஆனால் என் பிள்ளை பிறக்கும் போது, என் அழகரு என் கூட இருக்கணும். பிள்ளையை முதலில் அழகருதேன் தூக்கணும். டாக்டர் வேற நாள் கிட்டே நெருங்கிடுச்சுன்னு சொல்லிட்டாகளா? புள்ளை பொறக்கும் போது, அழகர் கிட்டே இல்லாமல் போயிருமோன்னு பயமா இருக்கும்மா!” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அழகர் அறைக்குள் வரவும்,
“கஷாயத்தை முழுசா குடிச்சுப்புடு விழி! அடுப்பில் என்னமோ வச்சிருந்தேன் பார்த்துட்டு வந்துடுறேன்!” எனச் சொல்விட்டு வெளியேறியிருந்தார் தங்கமீனாட்சி.
“உன்னைப் பார்த்ததும், இந்த அம்மா ஏன் வெளியே வெளியே ஓடிப் போயிருது அழகரு?” எனக் கேட்டபடியே கட்டிலில் அமர்ந்திருந்தவனின் மடி மீது தன் கால்களை நீட்டினாள் கருவிழி.
“நீ பொழுதன்னைக்கும் என்னை உரசிக்கிட்டே திரியணும்ன்னு நினைக்கிறல்ல, அதனால்தான் அத்தை, நான் வந்தாலே எந்திருச்சு போய்டுறாங்க!” எனச் சொன்னபடியே, நீர்க்கோர்த்து வீங்கியிருந்த அவள் பாதங்களை மென்மையாய் பிடித்துவிட்டான் அழகர்.
“என்னடி கரு கரு! கால் ரொம்ப வீக்கம் கண்டிருக்கு. தண்ணீர் ஒழுங்கா குடிக்கிறியா?”
“குடிக்கிறேன் அழகரு! ரொம்ப டயர்டா இருக்கு. ரொம்ப பயமாவும் இருக்கு. புள்ளை பொறக்கும் போது ரொம்ப வலிக்குமா அழகரு!”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது டி! பிள்ளையோட அசைவையோ, அது வெளியே வரும்போது இருக்கிற வலியையோ உணரும் குடுப்பினை ஆணுக்கு இல்லை. ஆனால், என் ஆள்மயக்கி, எல்லாத்தையும் சமாளிச்சு, புள்ளையோட வந்துருவாள்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.!” அவனின் கரம் மனையாளை மென்மையாய், தன்னை நோக்கி இழுக்க, அவனின் மீசையடர்ந்த உதடுகள் அழுத்தமாய் அவள் நெற்றியில் முத்தம் வைத்தது.
“மாமா!”
ஒற்றை முத்தத்திற்கே கிறங்கிச் சிணுங்கும் மனையாளை பின்னாலிருந்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவனின், கரம் அவளின் சூல் தாங்கிய வயிற்றைத் தாங்கியிருந்தது.
“ஏன் அழகரு! அத்தை ஏன் வீரபத்ரனை அங்கே அனுப்பக் கூடாதுன்னு இம்புட்டு பிடிவாதமாய் நின்னாங்க? நம்ம கல்யாணத்தோடு அப்படி என்ன நடந்துச்சு?” கணவனின் மீது வாகாக சாய்ந்துக் கொண்டபடியே கேட்டாள் கருவிழி.
“அதுவா..? அம்மா வழி சொந்தக்காரய்ங்க அந்த ஊருதேன். அம்மாவோட ஒண்ணுவிட்ட தம்பி அங்கதேன் இருக்காரு! அம்மாவுக்குக் கூடப் பொறந்தவங்க யாரும் இல்லை. அப்போ முறைப்படி, சித்தப்பா, பெரியப்பா பசங்கதானே முறை செய்யணும்?!”
“ஆமா! தாய்மாமனுக்கு இருக்கிற உருத்து அவிங்களுக்கு இருக்குமே?”
“ஆமா! நம்ம கல்யாணத்திற்கு முதல் பத்திரிக்கை அவிங்களுக்கு வைக்கலைன்னு பெரிய பஞ்சாயத்தாகி போச்சு. அப்போதைக்கு தாத்தா தான் என்னமோ பேசி சமாளிச்சு வச்சிருக்கார். நம்ம கல்யாணத்திற்கு அவிங்க வீட்டிலிருந்து யாருமே வரலை. ஆனாலும், நல்லது, கெட்டதுன்னு எங்கே பார்த்தாலும் ஒரண்டை இழுத்துக்கிட்டே திரிவானுங்க! அதனால் தான் அம்மா வேணாமின்னு சொல்லியிருப்பாங்க!”
“அப்போ வீரா அங்கே போய் மாட்டிக்க போறானா?”
“அரசியோட மயன்னு தெரியாதவரை அவன் தப்பிச்சான். தெரிஞ்சுது, பஞ்சாயத்துதேன்.”
“பேசாமல், ஃபோன் பண்ணி அவனைத் திரும்பி வரச் சொல்லிருவோமா அழகரு?” அக்கறையானக் குரலில் கேட்டாள் கருவிழி.
“எல்லாம் தெரிஞ்சு தானே போறான். எல்லாம் சமாளிச்சுடுவான். மாட்டிக்கிட்டாலும் என்ன தலையவா எடுத்துடப் போறாங்க.? போய்ட்டு வரட்டும்! இதுவும் அவனுக்கொரு அனுபவம் தான்!” என அழகர் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரிய அம்மாபட்டியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன்.
தித்திக்கும்…

