Loading

அத்தியாயம் 25

ஒரு வருடம் கழித்து…

“இந்த குவெஸ்ட்டின் படிச்சீங்களா நிவே. ரொம்ப இம்பார்ட்டண்ட்.” பட்டுச்சேலை சரசரக்க, மணப்பெண் அலங்காரத்தில் கையில் குச்சியுடன் நின்றிருந்தாள் கண்மணி.

நிவேதனோ, பட்டு வேட்டி சட்டையில் கழுத்தில் மாலையுடன் கையில் பத்தாவது புத்தகத்தை வைத்துத் தூங்கி வழிந்து கொண்டிருந்தான்.

இன்று, கதிரவன் சிந்தாமணி மற்றும் நிவேதன் கண்மணியின் திருமண நாள்.

“இன்னைக்கு நிறைய ஃபார்மாலிடீஸ் இருக்கும் நிவே… இன்னைக்கான போர்ஷன் விட்டுப் போயிடும். சீக்கிரம் இதை முடிங்க. அய்யர் கூப்பிடப் போறாரு!” எனப் பரபரத்திட, “இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையா கண்மணி… கல்யாணத்து அன்னைக்கும் படிக்கச் சொல்றதுலாம் நியாயமே இல்ல.” என்று உதட்டைப் பிதுக்க, “நியாயம், அநியாயம் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப இந்த குவெஸ்ட்டினை முடிங்க!” என்று முறைத்து விட்டுக் கழுத்தில் அணிந்த நகைகளைச் சரி செய்து கொண்டிருந்தாள்.

அவள் சாதாரணச் சுடிதாரில் வளைய வரும்போதே கிறங்கும் உள்ளம், இப்போது இத்தனை அலங்காரத்தில் அமைதியாக எப்படி இருக்கும்?

“நான் வேணும்னா அட்ஜஸ்ட் பண்ணி விடவா கண்மணி…” அவன் உதவிக்கு எழ, “ஒழுங்கா உக்காந்து படிக்கிறீங்க…” என்று விரல் நீட்டி எச்சரித்தவள், “இப்படித் தான் எட்டாவது பரிட்சை நடக்கும்போது என்கேஜ்மென்ட் வச்சுட்டாங்க. ஹெல்ப் பண்றேன்னு வந்து அந்த எக்ஸாம்ல கம்மி மார்க் வாங்குனீங்க! நீங்க பண்ண ஹெல்ப் வரைக்கும் போதும் சாமி…” என்றவளுக்கு இன்னுமே அவள் இதழில் செய்த காயம் குறுகுறுத்தது.

தானாய் சிவந்து போனவள் மறுபுறம் திரும்பிக் கொள்ள அவளை ரசித்து வைத்தவன், “இதெல்லாம் நீ கோபமா சொல்லணும் கண்மணி… இப்படி சிணுங்கிட்டே சொன்னா இந்த குவெஸ்ட்டின் எப்படி மண்டைல ஏறும்?” அவனும் சிணுங்கினான்.

“ஐயோ! நீங்க பேச்சை மாத்துறீங்க நிவே… ஒழுங்கா படிங்க!” என்று போலியாய் மிரட்டி விட்டு, இதழில் தங்கிய புன்னகையுடன் மணப்பெண் அறைக்கு ஓடி விட்டாள்.

அன்று நிவேதன் சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, அவனைப் படிக்க வைத்து எட்டாவது பாஸ் செய்ய வைத்திருந்தாள் கண்மணி.

தனக்குப் படிப்பில்லை எனத் தன்னை விட்டுச் சென்றவனுக்கு, இனி தன்னை மறுக்க எந்தக் காரணமும் இருக்கக் கூடாது என்ற பிடிவாதமும் ஒரு காரணம்.

குடும்பத்தினரும் இவர்களது தனிப்பட்ட விருப்பத்தில் தலையிடுவதில்லை. நிதர்ஷனாவும் கூட நிவேதனுக்காகவே, அவனது எதிர்காலத்தையும் மனநிலையையும் அதிகப்படியாக முக்கியத்துவம் கொடுக்கும் துணை கிடைத்ததில், அவர்களுக்கான இடைவெளிக்குள் வர முயல்வதில்லை.

அதற்கு அவளை அந்த அரக்கன் விட வேண்டுமே! பிரிவிற்கும் வலிக்குமாகச் சேர்த்து வைத்துத் திகட்டத் திகட்ட இல்லற வாழ்வினுள் அவளை இழுத்துச் சென்றிருந்தான்.

கூடவே, அவனது கண்டுபிடிப்பான விண்வெளி செயற்கை நுண்ணறிவு இயந்திரமும் சைனா அரசிற்குத் தோல்வியாக முடிந்தது.

தனது தோல்வியை ஒப்புக் கொண்டவர்கள், யாஷ் பிரஜிதனிடமே மீண்டும் சரணடைந்திருந்தனர்.

இதனால் அவர்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டமும் ஏற்பட்டிருந்தது.

இறுதியில் யாஷ் பிரஜிதனே பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தான்.

பலரது கையில் ஆபத்தாக உருவெடுக்கும் செயற்கை நுண்ணறிவின் இத்தகைய ஆராய்ச்சிகள், நல்லதற்காக அன்றி அழிப்பதற்கான கருவியாக இருத்தல் கூடாது.

இதன் அடிப்படை ரகசியம் தன்னுடைய குழுவினரைத் தவிர, அரசின் எந்த முக்கியப் பொறுப்பிலிருப்பவர்களுக்கும் பகிரப்பட மாட்டாது என்ற பல நிபந்தனைகளை விதித்திருக்க, சைனா அரசு அவனது விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டது.

கடந்த மாதம் தான், அவனது பல வருடக் கனவை எட்டி இருந்தான். ஆம், விண்வெளிக்கு அவனது ஆராய்ச்சி இயந்திரத்தை வெற்றிகரமாக அனுப்பி வைத்து, அதிலிருந்து வானிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப மக்களைப் பேராபத்துகளிலிருந்து காப்பாற்றும் பணியில் திருப்தி கொண்டான்.

இன்னும் கூட, அதில் பல ஆராய்ச்சிகளுக்கான திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தவனை நச்சரித்து இந்த ப்ராஜெக்ட்டை விட்டு விடக் கூடாதென்று மிரட்டி, இறுதியில் அவனது வெற்றிக்கு ஒரு காரணமான நிதர்ஷனாவிற்குத் தனது வெற்றியைச் சமர்ப்பித்திட, அவளுக்கோ ஏணி போட்டு வானத்திற்குச் சென்று அவன் அனுப்பிய ரோபோவைப் பார்த்து விட வேண்டுமென்ற பேராசையே எழுந்து விட்டது.

அவளே வெற்றி கண்டது போல அத்தனை மகிழ்வு அவளுக்கு.

“ஜெயிச்சுட்ட மாறா!” என்ற வசனத்தைக் கூறியவளிடம்,

“ஹூ இஸ் தட் மாறா?” என்றான் குழப்பமாக.

அதில் பக்கெனச் சிரித்து விட்டவள், “முதல்ல உன்னைத் தமிழ் படத்தை எல்லாம் பார்க்க வைக்கணும். காமெடி கூடப் பண்ண முடியல…” எனச் சிலுப்பிக் கொண்டாள்.

நிதர்ஷனாவின் அறுவை சிகிச்சை முடிந்த மூன்று மாதத்திலேயே ஆஹில்யன் ரித்திகாவிற்குத் திருமணம் நடைபெற்றது.

அதற்கு மேலும், அவர்களது திருமணத்தைத் தள்ளிப் போடக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறி விட்டாள்.

தற்போது ஆஹில்யனும், ரித்திகாவும் அவர்களது மகவுக்காகக் காத்திருக்கின்றனர். ஐந்து மாதக் கருவைத் தாங்கி இருந்த ரித்திகா, அன்றும் ஆஹில்யனைக் காணாது மண்டபத்தில் தேடிக் கொண்டிருந்தாள்.

“டேய் யாஷ்… உன் அடியாள் எங்கடா போனான்?” யாஷ் பிரஜிதனின் அறைக்குள் வயிற்றைத் தாங்கியபடி வந்தாள்.

சென்னையிலேயே பிரம்மாண்ட மண்டபம் தான். கீழே ஆறு அறைகளும் மேலே ஆறு அறைகளுமாக கோட்டை போல இருந்தது. மூன்று நாளாக அனைவரும் அங்கு தான் தங்கி இருக்கின்றனர். ரித்திகாவிற்கும் பெரியவர்களுக்கும் கீழறையை ஒதுக்கி விட்டு, சிறியவர்கள் மேலே தங்கிக் கொண்டனர்.

“உன்னை யாரு மாடி ஏறி வரச் சொன்னா? டாக்டர் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிருக்காங்க தான பேப்? கால் பண்ணிருக்கலாம்ல…” எனக் கடிந்தவன் அவளை மெத்தையில் அமர வைத்தான்.

“அட, இந்த ஆஹி சொல்லாம கொள்ளாம கிளம்புனாலே நெஞ்சு திக்கு திக்குன்னு ஆகிடுது யாஷ். அவனா எங்கயும் போனானா, இல்ல என்னை அடிச்சுக்கோங்கன்னு தலையைக் காட்டிட்டு எதிரிங்ககிட்ட நிக்கிறானான்னு தெரியலை…” எனக் கிண்டல் போல சொன்னாலும், அவளது பயம் புரிந்தது.

“லூசா பேப் நீ… அவன் கடைக்குத் தான் போயிருக்கான். அம்மா ஏதோ வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. நீ தூங்கிட்டு இருந்ததுனால சொல்லாம போயிருப்பான்.” எனும்போதே ரித்திகாவைக் கீழே காணாமல் பதறி அடித்து மேலே வந்திருந்தான் ஆஹில்யன்.

யாஷ் பிரஜிதனின் அறையில் அவளைக் கண்டதும் தான் நிம்மதியானவன், “எங்கடி போன, பயந்தே போயிட்டேன்…” என்றதில், யாஷும் ரித்திகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்து விட்டனர்.

“ஒருத்தன் உசுர் பயத்துல உன்னைத் தேடி வந்தா சிரிக்கிறியா, கொய்யால!”

“டேய்! உன்னைக் காணோம்னு தான்டா நான் மேல வந்தேன்.”

“அய்யய்யோ! அப்படியா… நான் பக்கத்துல தான் போயிருந்தேன், நீ எந்திரிக்கிறதுக்குள்ள வந்துடலாம்னு… அதுக்குள்ள உன்னை யாரு மாடிக்கு வரச் சொன்னா?” அவனும் செல்லமாகக் கடிந்து கொண்டான்.

அந்நேரம் இளவேந்தன், “யாஷ், உன்னைத் தாத்தா கூப்பிடுறாரு. உங்களுக்கும் ரிசப்ஷன் வச்சுருக்கலாம்னு அவருக்கு வருத்தம்… எனக்கும் தான்…” என்றபடி உள்ளே வந்தவர், “என்னமா ரித்தி, மாடி ஏறக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க தான…” என அவரும் கடிய,

“மீ பாவம் மாமா. ஒரு நாள் தான ஒன்னும் செய்யாது!” என்ற ரித்திகாவைச் சிறிது நேரம் அங்கேயே ஓய்வெடுத்து விட்டுக் கீழே வருமாறு அன்புடன் கட்டளையிட்டார்.

யாஷ் தான், “இவன் எதுக்கு இருக்கான் பப்பா… அவளைத் தூக்கிட்டு வருவான்!” என்று ஆஹிலைக் கை காட்ட, “அவளைத் தூக்குறதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல பாஸ். ஆனால் அவளுக்கு எங்கயாவது வலிச்சா, நான் தூக்குனதுனால தான்னு அதுக்கு அப்புறம் என்னைப் போட்டுப் பொளப்பீங்களே, இந்த விஷப்பரீட்சைக்கு நான் வரலை…” எனக் கையெடுத்துக் கும்பிட ரித்திகா சிரித்தாள்.

“ஏன்பா, இன்னுமா அவனை நீ பாஸ்னு கூப்பிட்டுட்டு இருக்க?” இளவேந்தன் கேட்க,

“நல்லா சொல்லுங்க பப்பா… இந்த விஷயத்துல என் பேச்சைக் கேட்கவே மாட்டுறான்…” என யாஷும் சலித்தான்.

“அப்படியே பழகிடுச்சு பாஸ்! ஏன் இதுவும் நல்லா தான இருக்கு…” என வாதம் செய்ய, அவனை முறைத்து விட்டுத் தந்தையின் புறம் திரும்பியவன், அவர் முதலில் கேட்டதற்குப் பதில் அளித்தான்.

“ஆல்ரெடி அவளுக்கு ஹெவி ட்ரீட்மெண்ட்பா… ரிசப்ஷன் அது இதுன்னு அவளை அலைக்கழிக்க வேணாம். இப்ப எங்களுக்கு அதுக்குல்லாம் பொறுமையும் இல்ல…” என்றவனுக்குத் தனிமையின் இனிமையை எண்ணிக் குறுநகையும் எழுந்தது.

மகனின் முகத்தில் கண்ட பரவசமும், நிறைவும் அவரது மனத்தையும் நிறைவாக்கியதில், புன்னகைத்துக் கொண்டார்.

இங்கு, கதிரவன் கிளம்பித் தயாராக இருந்தான். தாய், தந்தையற்ற திருமணத்தை அவன் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை.

கடந்த ஒரு வருடமாக, எலைட் நிறுவனத்தில் உழைத்து அவனுக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருந்தான் கதிரவன்.

ஆகினும், அவ்வப்பொழுது பெற்றோரின் நினைவு வந்து செல்வதைத் தடுக்க இயலவில்லை.

அவர்களை என்ன செய்தானென்றும் தெரியவில்லை. தெரிந்து கொண்டாலேனும், அவர்கள் உயிரோடு இல்லையென்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முற்படுவான்.

“டேய் கதிரு கிளம்பிட்டியா?” பட்டுச் சேலை மினுக்க அங்கு வந்தாள் நிதர்ஷனா.

அவளது குரல் கேட்டதும் வேகமாகக் கண்ணைத் துடைத்துக் கொண்ட கதிரவன், “கிளம்பிட்டேன் நிதா…” என்றான்.

சடுதியில் அவனைக் கண்டு கொண்டவள், “என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” எனக் கேட்டவளுக்கும் பதில் தெரியும்.

“ஒன்னும் இல்லை, நல்லாத்தான் இருக்கேன்… ஆமா, இந்த நிவே எங்க போனான்? இன்னைக்கும் புக்கு வச்சுப் படிச்சு ஓவரா சீன் போடுறான். வா அவனைப் பார்க்கலாம்.” என்று வம்படியாக அவளை இழுத்துச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அவனும் இந்தக் காயத்திலிருந்து வெளிவந்து விடுவான் என்ற நம்பிக்கையில் அவனுடன் சென்றாள் நிதர்ஷனா.

இரு ஜோடிகளுக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்து முடிந்தது.

சிந்தாமணிக்குத் தாலி கட்டி முடித்து விட்டு, “நம்மலாம் மந்திரம் சொல்லித் தான தாலி கட்டுவோம். என் நண்பன் மட்டும் ‘ஏ ஸ்கொயர் ப்ளஸ் பி ஸ்கொயர்’னு ஃபார்முலா சொல்லிட்டே தாலி கட்டுவான்.” எனக் கிண்டலடிக்க, சிந்தாமணி குலுங்கிச் சிரித்தாள்.

சொன்னது போன்றே ஏற்கெனவே அரைத் தூக்கத்தில் இருந்த நிவேதன், அய்யர் சொன்ன மந்திரத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, “மஹாத்மா காந்தி இஸ் அ ஃபாதர் ஆப் தி நேஷன்…” என்று எஸ்ஸே சொன்னதில் கண்மணி வாயைப் பொத்தி நகைத்தாள்.

“டேய் அண்ணா, என்னடா பண்ணிட்டு இருக்க?” நிதர்ஷனா நொந்த பிறகே நன்றாக விழித்தவன், “என்னை இவள்கிட்ட இருந்து காப்பாத்து நிதா…” என்றான் போலியான அழுகையுடன்.

“இந்த ஜென்மத்துல வாய்ப்பில்லையாம்” கண்மணி நாக்கைத் துருத்தியதில், “ஃபர்ஸ்ட் நைட்ல கூட எஸ்ஸே சொல்லனுமா கண்மணி…” எனக் கிசுகிசுப்பாகக் கேட்டு அவளைச் சிவக்க வைத்துக் குறும்பு நகை பூத்தான்.

ஆதிசக்தி இளவேந்தன், கிருஷ்ணவேணி அழகேசன், மகேந்திரன் என அனைவருக்கும் தங்களது இளைய தலைமுறைகளின் நிறைவான திருமணம் மன நிம்மதியைக் கொடுத்தது. இந்த நிறைவு இறுதி வரைக்கும் அவர்களைத் தொடர வேண்டுமென்ற ஆசையுடனும், வேண்டுதலுடனும் அர்ச்சனை தூவினர்.

அதன்பிறகு கேலி கிண்டலும், வெட்கமும் சிரிப்புமாக அன்றைய பகல் பொழுது முடிவடைய, இரு ஜோடிகளுக்கும் முதலிரவு அறையைத் தயார் செய்து கொண்டிருந்தனர் இளையவர்கள்.

கதிரவனோ, “டேய் நிவே, உனக்கு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரூம் ரெடி பண்ணனுமா என்ன?” எனக் கிண்டலாக வினவியதில், நிதர்ஷனா “அவன் அங்க போயும் ‘சச்சின் டெண்டுல்கர் இஸ் அ கிரிக்கட் பிளேயர்’னு பாராகிராஃப் படிச்சுட்டுத் தான் இருக்கப் போறான் கதிரு!” என வாரினாள்.

“ஒருத்தன் சின்சியரா படிக்கிறது பொறுக்காதே உங்களுக்கு…” நொடித்துக் கொண்ட நிவேதனிடம், “என்னடா பண்றது? நீங்க வாங்கிட்டு வந்த வரம் அப்படி!” என வாசலில் வந்து நின்ற கண்மணியைக் கண் காட்டினாள் நிதர்ஷனா.

“இது வரம் இல்ல நிதா, வெஷம்!” நிவேதன் கிண்டலடித்ததில் இருவரும் வாய்விட்டு நகைக்க, கண்மணி இடுப்பில் கையூன்றி நிவேதனை முறைத்தாள்.

“அப்பாடா, சண்டை இழுத்து விட்டாச்சு… வாடா அடுத்து உன் ரூமுக்குப் போகலாம்.” என நிதர்ஷனா வெளியில் வர, “அடிப்பாவி! நீ எனக்கு ரூமே டெகரேட் பண்ண வேணாம், ஆளை விடுமா…” என ஓடியே விட்டான்.

“நான் உங்களுக்கு விஷமா?” உதடு குவித்துக் கேட்ட கண்மணியின் இதழ்களில் தங்கிய விழிகளை நகர்த்தப் பிரியமற்றவனாக, “ஆமா விஷம் தான்! குடிச்சதும் ஹார்ட்பீட் எல்லாம் நின்னுடுற மாதிரி, உன்னைப் பார்த்ததும் உலகமே ஒரு செகண்ட் சுழர்றதை நிறுத்திடுது!” எனப் பெரிய உருட்டாக உருட்டினான்.

“அடடா… புக்கை மனப்பாடம் பண்ணிப் பண்ணி இப்போ நல்லா வசனமெல்லாம் பேசுறீங்க” என மூச்சிரைக்க,

“நீ நம்பலைனா நான் ட்ரையல் காட்டுறேன்!” என அவளை நெருங்கி நின்றான் நிவேதன். இப்போது இதயத்துடிப்பு நிற்கும் அவலம் அவளுக்கு.

“நிவே, தள்ளுங்க…” நாக்கு தந்தியடிக்க, நொடியில் அவள் இதழ்களைச் சிறைப் பிடித்தான்.

வேண்டுமட்டும் முத்தத்தில் மூழ்கியவன், “உனக்கு உலகம் சுத்துறது நிக்கிற மாதிரி இருக்கா கண்மணி?” எனக் கிறக்கமாகக் கேட்க, “ம்ம்ம்ம்” எனக் கண் மூடி நின்றாள்.

இதழ் வளைத்த நிவேதன், “அதான் சொன்னேன்… பூமி சூரியனை எப்படிச் சுத்துதுன்னு இன்னைக்கு ப்ராக்டிகலா படிச்சுட்டா எனக்குப் புரிஞ்சுக்க ஈஸியா இருக்கும் கண்மணி!” என அவள் கன்னத்தில் இதழ்களால் கவிதை வடிக்கத் தொடங்கி இருந்ததில், இருவருக்குமே உலகம் மறந்து போனது.

——————

சிந்தாமணி பால்கனியில் நின்றிருந்தாள். மூன்று ஜோடிகளும் யாஷ் பிரஜிதனின் பங்களாவில் தான் தங்களது வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இதற்கு முன்னும், பின்னும் இனி அவர்களுடன் தான் இருக்க வேண்டுமெனக் கட்டளையாகக் கூறி விட்டான். ஆஹில்யன் அவன் குடும்பத்துடன் இருந்தாலும், மாதத்தில் பாதி நாள்கள் ரித்திகா தனது உடன்பிறப்புகளுடன் உறவாட வந்து விடுவாள்.

கதிரவனை முதன்முதலில் பார்த்த நாளில் தொடங்கி, சிந்தாமணியின் எண்ணங்கள் அதன்பிறகு நடந்த அத்தனை நம்ப இயலா விஷயங்களிலும் இலயிக்கத் தொடங்கியது.

எத்தனைத் திருப்பங்கள், எத்தனை வலிகள், எத்தனைக் கண்ணீர்… அப்பப்பா! தனது உயிரான உறவுகள் அனைவரும் எத்தனைத் துயரங்களைக் கடந்து இன்று அனைத்தும் சீராகிக் கேலி கூத்தாட அழகான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

இதுவே இறுதி வரை நீடித்திட வேண்டுமென நட்சத்திரக் கூட்டத்திடம் ஒரு வேண்டுதலை வைத்துக் கொண்டாள்.

தனது தோளில் ஆடவனின் தாடை உரசும் அரவம் தெரிய, புன்னகை மலர்ந்தது அவளிடம்.

“பால் சொம்போட வெயிட் பண்ணுவன்னு பார்த்தா, சாவகாசமா வேடிக்கை பார்த்துட்டு இருக்க சிந்தா!” கதிரவன் கிண்டலாகக் கேட்டதில்,

“சும்மா… மலரும் நினைவுகளை அசைபோட்டுட்டு இருந்தேன்!” என்றாள் அவன் புறம் பின்னால் சாய்ந்தபடி.

“ஹ்ம்ம்… நிறைய நம்ப முடியாத, நம்ப விரும்பாத விஷயங்கள் எல்லாம் நடந்துடுச்சுல…” ஆடவனின் குரலில் ஒரு சோகம் தென்பட,

“விரும்பாத விஷயங்கள் நடக்குறதும் நம்மளை ஸ்ட்ராங் ஆக்கும் கதிர். அக்செப்ட் தி ரியாலிட்டி…” எனும்போதே அவளது தோளில் அவனது கண்ணீர்த் துளியை உணர்ந்தாள்.

“கதிர்?”

சிந்தாமணி அவசரமாக அவன் புறம் திரும்ப, வேகமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவன், “அக்செப்ட் பண்ணிக்கத் தான் ட்ரை பண்றேன் சிந்தா… அவங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சுட்டேன் போல. கூட இருந்தே இப்படி குழி பறிக்க எப்படி மனசு வந்துச்சுன்னே தெரியல. மனசு ஆறவே மாட்டேங்குது.” என்றான் ஆதங்கமாக.

“இங்க எல்லாருமே தப்புப் பண்ணவங்க தான் கதிர். அலெஸ்ல ஆரம்பிச்சு, எல்லாருமே… ஏன், தாத்தா கூட யாஷ் மாமாவை ஒதுக்கி வச்சுத் தப்புப் பண்ணலையா? ஒரு சிலருக்கு அதை உணருற காலம் வரும். ஒரு சிலருக்கு உணரக் கூட காலம் வராத அளவு அந்தத் தப்பு பெருசா இருக்கும். விடுங்க கதிர்… அதுல இருந்து வெளில வாங்க.” என்றவளுக்கும் அவனது நிலை வருத்தம் அளித்தது.

“வெளில வந்துட்டேன் தான் சிந்தா. இன்னைக்குக் கல்யாணத்துல அவங்க இல்லாதது ஒரு மாதிரி இருந்துச்சு. வேற ஒன்னும் இல்ல…” என்றவனுக்கு அவளது இனிய நொடிகளைக் குலைக்கிறோம் என்பது மட்டும் புரிந்தது.

“புரியுது! நான் இருக்கேன்ல, ம்ம்?” என அவன் தோள்களில் கரங்களைப் பூமாலையாக்க, “நிஜமா நீ மட்டும் இல்லைன்னா, இந்த அளவு கூட நான் இதுல இருந்து வெளில வந்திருக்க மாட்டேன் சிந்தா… நீ எனக்குத் தேடாமல் கிடைச்ச பொக்கிஷம்…” என அவள் நெற்றி முட்ட,

“பாருடா, லவ் டயலாக் எல்லாம் ஓவர்ஃப்ளோ ஆகுது!” சிந்தாமணி கிண்டல் செய்ததில், “லவ் கூட ஓவர்ஃப்ளோ ஆகுமாம்…” எனக் குறும்பாய் நகைத்தவன், அதிகபட்ச அன்பின் உச்சத்தைக் காட்டும் பணியில் இறங்கினான்.

இருவரையும் முதலிரவு அறைக்கு அனுப்பி விட்டுத் தனதறைக்கு வந்தாள் நிதர்ஷனா.

மறுநாள், யாஷ் பிரஜிதனுக்குப் பிறந்த நாள். ஆனால் சர்ப்ரைஸ் தருகிறேன் பேர்வழி என யாரும் அறையை விட்டு வெளியில் வர வேண்டாமெனக் கண்டிப்பாகக் கூறி விட்டாள்.

“நானுமா?” ஆதிசக்தி பரிதாபமாகக் கேட்க, “முக்கியமா நீங்க தான். வந்து செண்டிமெண்ட் சீன் ஓட்டிட்டு இருப்பீங்க.” என வாரி மாமியாரின் முறைப்பைப் பரிசாகப் பெற்றுக் கொண்டாள்.

யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த யாஷ் பிரஜிதனைப் பின்னிருந்து அணைத்தவள், அவனது வாசத்தைச் சுவாசிக்க, அழைப்பைத் துண்டித்து விட்டு அவள் புறம் திரும்பினான் ஆடவன்.

“பிசியா?” நிதர்ஷனா வினவ, “நீ தான் பிசியா இருந்துட்டு என்னைக் கவனிக்க மாட்டுறடி…” அவள் இடையைப் பிடித்துத் தன்பக்கம் இழுத்தான் யாஷ்.

“கல்யாண வேலை எல்லாம் இருந்துச்சுல…” அவனது சட்டைப் பட்டனைத் திருகியவளின் கழுத்தினுள் முகம் புதைத்து ஆழ்ந்து சுவாசித்தவன், “தூங்கலாமா?” எனக் கேட்டான் மயக்கத்துடன்.

தீண்டலில் குறுகுறுத்த மேனி சிவக்கக் மெல்லமாய் புன்னகைத்தவள், “உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே!” என்றபடி மணியைப் பார்த்தாள்.

நேரம் 11 ஐ தொட்டிருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் அவனை விழிக்க வைத்து விட வேண்டுமென்றே பேச்சை வளர்த்தாள்.

அதில் சற்றே தெளிந்தவன், “என்னடி?” என வினவ,

“கதிரோட அப்பா, அம்மா, அப்புறம் உன் அத்தை எல்லாரும் என்ன ஆனாங்க யாஷ்? என்ன ஆச்சுன்னு தெரிஞ்சா கூட கதிர் கொஞ்சம் நார்மலா இருப்பான்ல…” என வினவினாள்.

“அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு அவனுக்குத் தெரியாம இருக்குறதே நல்லது.”

“எனக்குக் கூடவா?”

“உனக்கும் சேர்த்து தான். இல்லன்னா அப்படியே அவன்கிட்ட ஒப்பிச்சுடுவ…” என்றான் கண்டிப்பாக.

அதில் முகம் சுருங்கியவள், “அதுசரி! அப்போ உன் அப்பாவும், என் அப்பாவும் என்ன ஆனாங்க?” என்றதற்கும் பதில் இல்லை.

“போ…” அவள் நொடித்து விட்டு நகர முற்பட, “ப்ச்! இங்கயே இரு ஆலம்பனா…” என அவளை இறுக்கி அணைத்து நிற்க வைத்தவன், “இதைத் தவிர வேற கேளு, பதில் சொல்றேன்.” என்றான் கொஞ்சலாக.

“ம்ம்ம்ம்” எனச் சிந்தித்தவள்,

“நான் ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சேன் அரக்கா… எனக்கு ரோபோடிக் சர்ஜரி செஞ்ச தான? அதெப்படி நீ அவ்ளோ கான்ஃபிடென்டா சக்ஸஸ் ஆகிடும்னு நம்புன. பொதுவா, இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் முன்னாடியே சோதிச்சுப் பார்ப்பாங்க தான. அந்த அலெஸ், அவனோட கண்டுபிடிப்ப என்மேல திணிச்ச மாதிரி…” என்றாள் விழிகளை உருட்டி.

அவ்விழிகளுக்குள், எப்போதும் போலத் தொலைந்தவனின் இதழ்களில் ஏளனப் புன்னகை.

“கண்டிப்பா டெஸ்ட் பண்ணிப் பார்க்கணும் ஆலம்பனா… ரிசர்ச் சக்ஸஸ் ஆகுறதைத் தெரிஞ்சுட்டுத் தான் அதை உனக்கு எக்சிகியூட் பண்ணுனேன்.”

“எப்படி? யாரை வச்சு? இதுக்குன்னே சோதனை எலி வச்சுருப்பீங்களோ?”

“சோதனை எலி எதுக்கு? அதான் அலெஸ்ஸும், வரதராஜனும் இந்த எர்த்துக்கு பாரமா இருந்தாங்களே…” எனத் தோளைக் குலுக்க, நிதர்ஷனா விழிகள் தெறித்து விடும் அளவிற்கு அதிர்ந்து போனாள்.

“என்ன சொல்ற அரக்கா?” திக்கித் திணறி வினவ,

புருவம் இடுங்கத் தீவிரமானவன், “உனக்குக் குடுத்த அதே வைரஸை அவங்களுக்கும் குடுத்தேன். வரதராஜன் வேஸ்ட்! வைரஸ எடுக்கும் போது ஒரு சின்ன டெக்னிகல் பிரச்சினையாகி, ஜீவசமாதி ஆகிட்டான். பட் மை பப்பா இஸ் ஸ்ட்ராங் நோ… அவன் மூளையைக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஆரம்பிச்ச வைரஸை, ரோபோடிக் சர்ஜரியால ரொம்ப பெர்ஃபக்ட்டா க்ளியர் பண்ணிட்டேன்.

என் ரிசர்ச் சக்ஸஸ்னு தெரிஞ்சதும், அந்தச் சந்தோஷத்துல அவனுக்கு இன்னொரு தடவையும் வைரஸை இஞ்செக்ட் பண்ணுனேன். அகைன் டாக்டர்ஸ் வச்சு அந்த வைரஸை அவன் மூளைல இருந்து எடுத்து பிராக்டிஸ் பண்ணோம். பட் ஹீ இஸ் சோ ஸ்ட்ராங். இருந்தாலும் வைரஸ் அவன் மூளைல நல்ல தீவிரமா அட்டாச் ஆகி, அவனோட மெமரிஸ் எல்லாம் எரேஸ் ஆக ஸ்டார்ட் ஆகிடுச்சு. இன்னொரு தடவை பிராக்டிஸ் பண்ணலாம்னு தர்ட் டைம், அவனே கண்டுபிடிச்ச இன்னும் பவர்ஃபுல் வைரசை இஞ்செக்ட் செஞ்சேனா, அதை அவன் பாடி தாங்கல, பாவம்…” என வெகு இயல்பாகப் பாவமாகக் கூறியவனை மிரண்டு பார்த்தாள் நிதர்ஷனா.

“அப்…அப்போ கதிர் அப்பாவுக்கும், ஏஞ்சலினாவுக்கும்…” என எச்சிலை விழுங்க, “ஏஞ்சலினாவால உருவான வைரஸ்களோட எண்ணிக்கை அதிகம்டி ஆலம்பனா. அதெல்லாம் ஸ்டோர் பண்ணி வச்சு மியூசியமா கட்ட முடியும்? அவங்க ஆசையா கண்டுபிடிச்சதை அவங்களுக்கே யூஸ் பண்ணிட்டேன். எல்லாரும் என் கண்ணு முன்னாடி துடிதுடிச்சுச் சாகுறதைப் பார்த்ததுக்கு அப்புறமா தான் ஹார்ட் சைலன்ட் ஆச்சு!” என்று பேரானந்தத்துடன் கூறியவனைக் கண்ணிமைக்காது ஏறிட்டாள்.

சட்டென வயிற்றை மூடிக் கொண்டவள், “இதைப் பத்தி நான் பேசிருக்கவே கூடாது. முதல்ல உன் வாயை மூடுயா!” என்று அதட்டினாள்.

“என்னடி ஆச்சு? ஏன் வயிறைப் பிடிக்கிற, வலிக்குதா?” என அத்தனை நேரமும் முகத்தில் தாண்டவமாடிய மிருகத்தன்மை துளியும் இல்லாது அவளிடம் மட்டுமே இளகித் தவித்திருந்தது.

தன்மீதான ஆடவனின் நேசம் எத்துணைப் பெரிதென்று அவளுக்குத் தெரியும் தான். ஆகினும், இத்தனைக் கோரத்தனமாக உயிர்களைப் பறிக்க வேண்டுமா என்ற ஆதங்கமும் மிக, “இனி இந்த மாதிரி பண்ணாத அரக்கா… உன்னைப் பார்த்துத் தான நம்ம பிள்ளையும் வளருவான். இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு அவனும் வயலண்டா வளரப் போறான்…” என்றாள் உர்ரென.

“அதெல்லாம் நான் தெரியாமல் பார்த்துப்பேன்டி! நான் என்ன தினமும் கொலையா பண்ணிட்டு இருக்கேன்? இத்தனை வருஷமும் நம்ம எல்லாரும் பட்ட கஷ்டத்துக்குக் காரணமானவங்களுக்குத் தண்டனை குடுக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதுவும், உன்னோட உயிரோட விளையாடுன யாரையும் நிம்மதியா சாகக் கூட விட எனக்கு விருப்பமில்லை…” எனச் சீறியவன் சட்டென நிறுத்தி, “வெய்ட்… இப்ப என்ன சொன்ன?” என்றான் விழிகள் மின்ன.

அவளோ இன்னும் வயிற்றை விடாது, “என்ன சொன்னேன்? இனி இப்படி பண்ணாதன்னு சொன்னேன்!” என்றாள் குழப்பமாக.

“நோ! ஏதோ பேபி பத்திச் சொன்னியே!”

அக்கேள்வியில் கன்னங்கள் சிவந்தவள், “போயா… உன் பர்த்டேக்கு சர்ப்ரைஸ் தரலாம்னு 12 மணி வரை வெய்ட் பண்ணுனா, என்னைப் பீதியோட பேச வச்சுட்ட. நீ செஞ்ச வேலையெல்லாம் கேட்டிருக்குமா?” எனக் குனிந்து வயிறை ஒரு முறை தடவிப் பார்த்துக் கொண்டாள்.

அவனோ சற்றே உணர்ச்சி மிகுதியில் நின்றிருந்தான்.

“ஆல..ஆலம்பனா… ஆர் யூ சீரியஸ்? ஆர் யூ ப்ரெக்னன்ட்?”

“ம்ம்ம்ம்ம்…” மேலும் கீழுமாகத் தலையாட்டியவள், அவன் நெஞ்சிலேயே முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

அவளை இறுக்கி அணைத்துக் கொண்டவனின் கரங்கள் நடுங்கிற்று.

“இந்தத் தடவை உன்னையும், பேபியையும் ஹர்ட் பண்ண மாட்டேன் மின்னல். ப்ராமிஸ்!” எனக் குரல் கரகரக்கக் கூற, சட்டென அவனிடம் இருந்து விலகியவள், “யோவ் லூசு அரக்கா… நீ எப்பவும் எங்களை ஹர்ட் பண்ண மாட்ட. அது எனக்கும் தெரியும், நம்ம பேபிக்கும் தெரியும்!” என எக்கி அவன் நெற்றியில் முத்தமிட, “ஆலம்பனா…” என முணுமுணுத்தபடி அவள் முகமெங்கிலும் முத்தமிட்டான் ஆடவன்.

மணி பன்னிரெண்டைத் தொட, பல இழப்புகளைச் சந்தித்த பிறந்த நாளிலேயே மீண்டும் இழந்ததைப் பெற்றுக் கொண்டவன், தந்தையான கர்வத்தில் மிளிர, திரைச்சீலைகளும் அவர்களது நெருக்கத்தில் நாணம் கொண்டு அசைந்தாடி ஆசி கொடுத்தது.

இனிவரும் அனைத்து நாள்களிலும், தினம் தினம் இழந்ததை மீட்கும் வரம் கிடைக்க வாழ்த்தி விடை பெறுவோம்.

மேகா

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 44

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
39
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்