
முகம் 24
அன்று தீரன் மயலின் திருமணம். திருமணப் பதிவு அவலுவலகத்தின் முன் நின்றிருந்தவனுக்கு மனதெல்லாம் ஏதோ வெறுமை.
‘யாரோ ஒருவனுக்காக எதற்கு இந்த அவசர திருமணம்??’ என்ற கேள்வியே அவன் மூளைக்குள்.
அவளையும் வருத்தி தனக்கும் முழுமனது இல்லாமல் செய்து கொள்ள பிடிக்கவே இல்லை.
நண்பனின் முகத்தில் இருந்த குழப்ப ரேகையை கண்ட சித்தார்தோ “என்னாச்சு தீரா ஏன்டா என்னவோ போல இருக்க? எனக்கு இது சரியா படலடா. நீ அவசரப்படுறியோன்னு தோணுது” என்று சொல்ல,
தன் வேதனையை அவனிடம் சொல்லி அவனைக் குழப்ப வேண்டாம் என்று எண்ணியவனோ,
“உனக்குத் தெரியாதா மச்சான் வீட்ல எப்படியும் வேதாத்தை, இதுக்கு சம்மதிக்கப் போறதில்ல. எப்போவா இருந்தாலும் வீட்டுக்குத் தெரியாம தான் பண்ணனும். என்ன அது கொஞ்சம் நேரத்துக்கே நடக்குது அவ்வளவு தான? அதோட அந்த ராம்பிராசத்தையும் நம்ப முடியாது. எது நடந்தாலும் பார்த்துக்கலாம் விடு” என்றான்.
சித்தர்த்தோ “அப்போ மாமா?” என்று கேட்க, அப்பாவை எண்ணிக் கலங்கிய மனதை திடப்படுத்தியவன் “மீசை கொஞ்சம் டென்ஷன் ஆகும் தான் பார்த்துக்கலாம். என் அப்பா தானே” என்றவனுக்கு தந்தை தன் விருப்பத்துக்கு மறுப்பு சொல்ல மாட்டார் என்று அத்தனை உறுதி.
ஆம் அது உண்மை தானே இப்போதும் சக்திவேலுக்கு, மகன் வாழ்க்கையில் தோற்றுப் போய் வந்து நின்றதில் தான் கோபமே ஒழிய, அவன் விரும்பியவளைத் திருமணம் செய்ததில் இல்லையே! அதில் வருத்தம் மட்டுமே தானே!
நண்பனின் அமைதியில் “அதான் நீ ஸ்ட்ரோங்கா இருக்கியே தீரா, அப்போ ஏன் இந்தக் கலக்கம்” என்று கேட்க,
“நத்திங் மச்சான். ஜோதி கிட்ட கேட்டியா அவன் பக்கத்துல வந்துட்டானா?” என்று கேட்க,
“அவன் நம்பருக்கு கூப்பிட்டேன் மச்சான், நோ ரெஸ்பான்ஸ், நேத்து நைட் என்னைப் போட்டுப் படுத்தி எடுத்துட்டான். என்னடா சர்பரைஸ்னு கேட்டு ஒரே தொல்லை, பிள்ளை உண்டாகி இருக்க தேனுவையும் தூங்கவிடயாலாம் அவன், தேனு ஒரு பக்கம் புலம்புது” என்க, திரன் முகத்திலோ புன்னகை.
“நான் சொல்லமாட்டேன்னு சொன்னதும் உன்னப் பிடிச்சிடானா?” என்றவன்,
அப்போது அங்கே வந்திறங்கிய அவன் மயிலை புடவையில் பார்த்ததில் மயங்கியே விட்டான். மனதில் இருந்த அலைப்புறுதல் விலகி இருக்க, அவன் மனைவியாகப் போகிறவளை உரிமையோடு தான் பார்த்து வைத்தான்.
அவள் அருகில் நின்றிருந்த தியாகராஜன் கடுகடு முகத்துடன் தான் நின்றார்.
அவரை அனுப்பி வைத்தது கூட ராம்பிரசாத் தான். மயலின் முடிவு அவருக்கு அதிர்ச்சி தான். ஆனால் மகளின் பிடிவாதம் இந்த முறையும் வென்றிருந்தது.
கோதை தான் விடாமல் “என்னங்க நீங்க, இதெல்லாம் இப்போ முக்கியமா? அவளுக்கு கல்யாணம் பண்ணிக்கிற வயசான்னு சொல்லுங்க” என்று கத்த,
“பிடிவாதம்னு வந்துட்டா தாயும் மகளும் ஒன்னுன்னு நிரூபிக்கிறீங்களே!” என்றவர்,
“அவளுக்கு அவ ஜெய் தான் வாழ்க்கையாம். எப்போவா இருந்தாலும் அவனைத்தான் கட்டிக்கப்போறாளாம். இப்போவே பண்ணிக்கிட்டா என்னனு எங்கிட்ட கேக்குறா?, என்ன பதில் சொல்ல நான்” என்றார் மனைவியிடம் அவ்வளவு கோபம் அவருக்கு, அதுவும் அவனை, அன்று அப்படி பேசிச் சென்றவனுக்கு அவர் பொண்ணைக் கொடுப்பதா? என்ற எண்ணமே அவர் கோபத்தைக் கூட்டி இருந்தது.
அதன் பின் ராம்பிரசாத்திடம் ஒரு ஆழ்ந்த அமைதிதான். கோதை எத்தனை பேசியும் ராமிடம் பதில் இல்லை.
இதோ இன்று திருமணம் என்று தெரியும், அதனாலேயே தன் சார்பில் நண்பனை அனுப்பி வைத்திருந்தார்.
தியாகராஜனுக்கோ நண்பன் பேசிய இறுதி வரிகளே ஞாபகம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
“அன்னைக்கு அவ தனியப் போகணும்னு கேக்கும் போது நான் விட்டிருக்க கூடாதோடா தியா, கண்டிச்சுக் கூட வெச்சிருந்திருக்குமோ? கோதை பேச்சை கேட்டு இவ இல்லாம அங்க அந்த வீட்டுக்குப் போய் வந்தது தப்போ??? அன்னைக்கு எங்கிட்ட கேட்டாளேடா, நீங்க மூனு பேரும் ஒரு குடும்பம்னா நான் யாருப்பான்னு??? எனக்கு குடும்பம் எங்கன்னு கேட்டாளே! என் பொண்ணு என்ன விட்டு ரொம்ப தூரம் போய்ட்டா தியா. நான் ஒரு நல்ல புருசனும் இல்ல நல்ல அப்பாவும் இல்ல” என்றவர்,
“வாழ்க்கைல எவ்வளவு பணம் பேர் புகழ்னு இருந்து என்னத்துக்குடா, பொண்டாட்டி இருந்தும் இதோ கண்ணுக்கு நிறைவா ரெண்டு பொண்ணுங்க இருந்தும் அனாதையா நிக்கிறேனே!” என்று பிதற்றி அழுதவரை அப்படி ஒரு நிலையில் இதற்கு முன் தியாகராஜன் பார்க்கவே இல்லை…
அதுவே அவரை இன்னும் வேதனைக்குள்ளாக்கி இருந்தது. மயல் மீதும், தீரன் மீது கோபம் எல்லை கடந்தது அவருக்கு…
அவளருகில் வந்த தீரனோ, தியாகராஜனை ஒரு புன்னகையுடன் ஏறிட, அவரோ முறைத்தபடி உள்ளே நுழைந்தார்.
அதில் அவன் அவளைப் பார்க்க, “என் தியா மாமா, அப்பாவோட ஃபிரண்ட்” என்றாள்.
“அதுசரி ஃபிரண்ட்னா கோபம் வராமையா? பார்த்துக்கலாம் விடு, உனக்கு ஓகே தான, என்னடா இவன் இவ்வளவு அவசரப்படுறானேன்னு யோசிக்கிறியா?” என்று கேட்க, அவளோ இடம் வலமாய் தலை அசைத்தாள்.
“உங்க கூட இருக்குறதுனா எனக்கு ஏன் கசக்க போகுது ஜெய். அப்பா கொஞ்சம் ஃபீல் பன்றாரு, அது தான் கஷ்டமா இருக்கு” என்று அவள் முகம் சுருங்கியதும் அவளது விழிகளும் சேர்ந்தே சுருங்கியது.
அதில் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு “அதுக்கென்னடி மாமனார் கைல சீக்கிரமே நம்ம பிள்ளையைக் கொடுத்து பிஸியாக்கி விட்டுடலாம் அப்பறம் ஃபீல் பண்ணவும் நேரம் இருக்காது” என்றான்.
அவளுக்கு இன்னும் அவனது ராம்பிரசாத் மீதான சந்தேகம் தெரியவில்லை, அவனும் சொல்லி இருக்கவில்லை…
அவன் தோளில் அடித்து, “கல்யாணத்துக்கு மட்டும் தான் ஓகே, மத்தது எல்லாம் படிப்பு முடிஞ்சப்பறம் தான்” என்று விரல் நீட்டி மிரட்டியவள்,
“உங்க விருப்பதுக்கு நான் ஓகே சொல்லியாச்சு, என் அப்பாவை சமாதானப் படுத்த வேண்டியது உங்க பொறுப்பு சரியா?” என்றும் கண்களை உருட்டியதில்,
நீட்டிய அவள் விரலைப் பிடித்தவன் அவள் விழிகளை பார்த்தபடியே “என் கண்ணுக்கு இப்போ நீ பெரிய பொண்ணா தெரியுரியே! கண்ட்ரோல் கொஞ்சம் கஷ்டம் தான். கொஞ்ச நாளைக்குப் புடவை கட்டாம இருந்தா தப்பிச்சிக்குவ” என்க, அவள் பார்வையும் அவன் விழிகளுள் கட்டுண்டது.
அவர்கள் அப்படியே நிற்க, சித்தார்த் அவர்களிடம் விரைந்து வந்திருந்தான்.
“மச்சான், ஜோதி அழுறான்டா என்னனு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான்” என்று பதட்டத்துடன் சொல்லியவன், அழைபேசியை அவனிடம் கொடுத்திருந்தான்.
“ஜோதி, என்னாச்சுடா… எங்க இருக்க நீ? நான் இதோ வரேன்” என்க,
“டேய் தீரா, தேனு இங்க வழுக்கி விழுந்துடிச்சிடா. ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்திருக்கேன். இங்க என்னென்னவோ சொல்லுறாங்கடா. என் புள்ள இனிமே இல்லயாம்டா, தேனுவும் கண்ணு முழிக்கலடா எனக்கு என்ன பண்ணணு தெரியலையே!” என்று குழந்தையாய் அழ, இங்கே கேட்டுக் கொண்டிருந்தவனின் மனமோ அவர்களுக்காய் தவித்துதான் போனது.
“நீ எங்க இருக்க?” என்று கேட்டவன், அவர்கள் எந்த ஊரில் எந்த மருத்துவமனையில் இருக்கின்றனர் என்பதை கேட்டு,
“அங்கேயே இரு நானும் சித்துவும் வரோம்” என்று கிளம்பப் போனவன், திரும்பி மயலை ஒரு பார்வை பார்த்தான்.
தன்னை நம்பி, தனக்காய் தந்தையையும் எதிர்த்து தயாராகி வந்து நின்றவளை ஏமாற்றி அப்படியே தனியே நிற்க வைத்து விட்டுச் செல்ல மனம் வராதவனோ, அவள் கரத்தைப் பற்றி விருவிருவென உள்ளே அழைத்துச் சென்றான்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் எல்லாம் தயாராக, அவளை அவனது மனைவியாக்கிக் கொண்டான்.
மயலின் பக்கம் தியாகராஜன் சாட்சி கையெழுத்திட, இவன் பக்கம் சித்தார்த் இட்டிருந்தான்.
‘அவள் கூட இன்னொருநாள் பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லி இருந்தாள் தான். ஆனால் அவனால் ஏனோ அப்படியே விட்டுச் செல்ல முடியவில்லை…
அவள் கழுத்தில் தாலியைக் கட்டியவன், “இருந்துக்கோ மயல், சீக்கிரம் வந்துடுவேன்” என்று சித்தார்த்துடன் கிளம்பி இருந்தான்.
மீண்டும் ஒருவாரம் கழித்தே சென்னை வர முடிந்தது தீரனால். வந்ததும் மயலை அவன் குவார்ட்டஸுக்கே அழைத்தும் சென்றிருக்க, அவர்கள் வாழ்க்கையும் ஏற்ற இரக்கத்துடன் கடக்கத் தொடங்கியது.
மேலும் ஒரு மாதம் கடந்திருக்க, அங்கிருந்தே அவள் கல்லூரி சென்று வந்து கொண்டிருந்த தருணம் அது.
அன்று தீரனின் பிறந்தநாள். அவர்களுக்கு திருமணம் முடிந்து வரும் முதல் பிறந்தநாள். இந்த முறை அவனைக் கூட இருந்து வாழ்த்தப் போகிறோம் என்ற குதூகலத்தில் அறையை அலங்காரித்துக் கொண்டிருந்தாள்.
சித்தார்த்தோ “ஏன்டி லேங்குவேஜ் உன் புருசனுக்கு நீ சார்பிரைஸ் பண்ணு என்னவும் பண்ணு, வை மீ?” என்றான் அங்கே மெத்தையில் அமர்ந்து பலூனை ஊதியபடி,
“அது வந்துடா சித்து, நாய்க்கு வாக்கப்பட்டா குறைக்கணுமாம் உனக்கு தெரியாதா? என் நாத்தனார நான் உனக்கு கொடுக்கணும்னா நீ இதெல்லாம் பண்ணிதான் ஆகணும் தலைவரே!” என்றாள்.
“அவன் என் காதல்ல விளையாடுனது பத்தாதுன்னு உன்னையும் ஏத்தி விட்டிருக்கான் பாரேன், அவனை எல்லாம்…” என்று ஏதோ சொல்ல வர,
“சித்து ஸ்டாப், நாளைக்கு என் ஜெய்க்கு பர்த்டே சோ இன்னைக்கு நோ சாபம் சரியா?” என்றாள்.
அவனோ “அது சரி, அவன் நல்லா இருப்பான்மா… நல்லா இருப்பான். போதுமா?” என்க, “போதுமே” என்றாள் அவளும் புன்னகையுடன்…
“அவன் ரூம் அங்க இருக்கு நீ ஏன்டி உன் ரூம் டெகரேட் பண்ணுற?” என்று கேட்க,
“நீயெல்லாம் என்ன தான் டாக்டரோ, அவன் தீடீர்னு வந்தா மாட்டிப்பேன்ல லூசு” என்க,
“ஓஹோ, அப்போ இப்போ மாட்ட மாடீங்க அப்படி தானே!” என்று கேட்டவன் அவன் அவளது அறையை பதிவு செய்த காணொளியை கட்டி “நான் வேணா, ‘பர்த்டே சர்பிரைஸ் ஒர்க் கோயிங் ஒன், கெஸ் ஹூஸ்’ ன்னு ஸ்டேட்டஸ் வைக்கட்டா? அதுவும் தீரனுக்கு மட்டும்” என்று கேட்டபடி அவளிடம் இருந்தது ஓட அவளோ அவனைத் துரத்தினாள்.
___________________
அங்கே மனம் முழுவதும் மகிழ்வுடன் கரத்தில் இருக்கும் கைது ஆணையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயதீரன்.
அவனது பல நாள் கனவு நிஜமாகப் போகும் துருப்பு சீட்டு இது,
ராம் பிரசாத்தை கைது செய்து விசாரிக்க, நீதி மன்றத்தின் அனுமதி.
அன்று கற்பகம் மருத்துவமனையில் ஏற்பட்ட கலவரத்தை விசாரிக்க ஆரம்பித்தவனுக்கு சித்தார்த் மூலம் அது காலாவதியாகி இருப்பது தெரிந்தது. ஆனால், அது உண்மையில் அங்கே தான் கொடுக்கப்பட்டதா இல்லை அதிலும் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என ஆராய்ந்தவனின் கைகளில் போன வாரம் தான் அங்கே மருந்தகத்தில் பணி புரியும் மூர்த்தி ஆதாரத்துடன் சிக்கி இருந்தான்.
ஏற்கனவே காலாவதியான மருந்து கொடுத்திருக்கும் சிசிடிவி பதிவு அழிக்கப்பட்டிருக்க, இதோ ஒரு வாரத்துக்கு முன் மீண்டும் கொடுத்தது சித்தார்த்தினால் காணொளி ஆதாரத்துடன் கிடைக்கப்பட்டிருந்தது.
அவனை பிடித்து இந்த ஒரு வாரம் சிறப்பாக கவனித்ததில், ராம்பிரசாத்தான் விநியோகிக்கச் சொன்னதாக வாக்குமூலம் கொடுத்திருந்தான்.
அது ஒன்று போதுமே! அதனை வைத்தே அவருக்கு ஆப்பு வைக்க தயாராய் இருந்தான். அந்த விசாரணை மட்டுமல்ல, நடக்கப் போவது கடத்தல் வழக்குக்குமான விசாரணை என்பது அவனுக்கும் வராதராஜனுக்கும் மட்டுமே தெரியும்.
கிட்டத்தட்ட இரண்டு வருட கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்ட மகிழ்வில் அவன் வீட்டுக்குள் நுழைய, எப்போதும் அவனை வரவேற்கும் அவனது குட்டி மனைவி அங்கே இல்லை…
‘எவ்வளவு நேரம் ஆனாலும் தூங்காமல் காத்திருப்பாளே’ என்று எண்ணியவன் மணியைப் பார்க்க, அதுவோ இரவு பண்ணிரெண்டை தாண்டி இருந்தது.
“ப்ச், சீக்கிரம் வரணும்னு நினச்சா முடியுதா, பாவம் என் மயில்” என்றவன், “மயிலு… அடியேய் மயிலு” என்று அவளை அந்த இருளில் தேடினான்.
“எங்க போய்ட்டா, சொல்லாம எங்கயும் போக மாட்டாளே” என்று சொல்லிகொண்டு விளக்கைப் போட்டவன், ஒவ்வொரு இடமாய் தேடி இறுதியில் தூங்குறாளோ என அவள் அறையை திறக்க, அதுவோ மூடி இருந்தது.
‘என்னடா இது?’ என்று எண்ணியவன், அவள் அழைபேசிக்கு அடிக்க, அதன் சத்தம் உள்ளே தான் கேட்டது.
“தூங்கிட்டாளோ” என்றபடி தன்னறையில் இருக்கும் சாவியைக் கொண்டு திறக்க, கதவும் திறந்து கொண்டது.
அங்கேயும் இருள் தான் “மயல், ஏன்டி என்னாச்சு உடம்புக்கு ஏதும் செய்யுதா?” என்று அடுத்த எட்டை எடுத்து வைக்க, ‘பட்’ என்ற சத்தத்துடன் பலூன் ஒன்று வெடிக்க, சட்டென காலை எடுக்க மீண்டும் இன்னொரு பலூன் வெடித்தது.
“அடியேய்…” என்று அவன் புன்னகையுடன் அழைக்க, அந்த அறையே சட்டென வெளிச்சமாக, விளக்கின் அருகில் அவன் மனைவி அதுவும் புடவையில் நின்றிருந்தாள்.
அவனோ எதிர்பாராத சந்தோசத்திக் “ஊ…” என விசில் அடித்தபடி அவளை நெருங்க, மீண்டும் ‘பட் பட்’ எனத் தொடர் சத்தம், அதில் மனைவி மீதிருந்த பார்வை கொஞ்சம் அந்த அறையையும் நிறைக்க, அந்த அலங்காரமும் அவன் கண்ணில் பட்டது.
அப்போது தான் அவனுக்கு அவன் பிறந்த நாளே நினைவு வர, அவளிடம் நெருங்கப் போனவனை அவன் அழைபேசி சத்தம் நிறுத்தியது.
அழைத்தது ஜோதி தான். அதனைப் பார்த்ததும் தான், சற்று முன்னர் ஏன் ஜோதி அத்தனை தடவை அழைத்திருந்தான் என்பது புரிந்தது.
இந்த முறை அதனை உயிர்பித்து அவளுக்கும் கேட்கும்படியே வைத்துப் பேச ஆரம்பிக்க,
“ஏன்டா போன் பண்ண எடுக்க மாட்டியா? இங்க உனக்கு விஷ் பண்ண ஒருத்தன் தூங்காம முழிச்சிட்டு இருந்தா, நீங்க எடுக்க மாட்டீங்களோ…” என்று பேச ஆரம்பிக்க,
‘எங்கே அவன் முதலில் வாழ்த்தி விடுவானோ’ என்று மயலைப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
அது அவள் விழிகளிலும் தெரிய, “டேய் ஜோதிகா அப்படியே இரு” என்று ம்யூட்டில் போட்டவன், அவளை கண்களால் அழைக்க,
அதற்காகவே காத்திருந்தவள் போல் அவனைப் பாய்ந்து வந்து அனைத்துக்கொண்டாள் அவன் மயில் பெண்.
“ஹாப்பி பர்த்டே ஜெய்…” என்றவள் அவன் இதயத்தில் முத்தமிட்டு நிமிர்ந்து அவன் கண்களை நோக்க, அந்த நிலையில் ஆண்மகன் அவஸ்தைப் பட்டுத்தான் போனான்.
எதுவும் அவன் கண்களுக்கு தெரியவில்லை, தன்னைப் பார்க்கும் அவள் விழிகளின் ஈர்ப்பில் கட்டுண்டவன், “மெல்ல அவள் இதழ்களை நெருங்கினான்.
அவள் “ஜெ…” என்று அழைக்க ஆரம்பித்த, அவன் பெயரே, அவள் இதழுக்குள் அவன் இதழால் மூழ்கிப் போனது.
“டேய்ய்ய்ய் தீரா, எங்க போய் தொலைஞ்ச ம்யூட்ல வேற போட்டுட்டு போய்ட்டான். தூக்கம் வேற வருதே” என்று புலம்பியபடி கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தான் ஜோதி.
அவன் சத்தம் கேட்ட, அடுத்த நொடி இருவரும் பிரிய, புன்னகையுடன் அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு மெத்தையில் விழுந்தவன்,
“இப்போ சொல்லுடா?” என்றான்.
“என்னடா மூச்சு வாங்குற, இந்த நேரம் எந்த திருடனப் பிடிக்க ஓடுற நீ?” என்று விஷயம் தெரியாது அப்பாவியாய் கேட்டு வைக்க, மயல் அடக்க முடியாமல் மெல்ல சிரித்து விட்டாள்.
“என்னடா எலி எல்லாம் கத்துது, மச்சான் இவ்வளவு பிஸிலயும் என் ஃபோன எடுத்திருக்க பார்த்தியா அங்க நிக்கிறடா நீ” என்றான் பேச வந்ததையே மறந்து…
“பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தானே கூப்பிடீங்க, அத சொல்லுங்க முதல்ல” என்று அந்தப்பக்கம் தேன்மொழி அதட்டியது இங்கே இருவருக்கும் கேட்டது.
“அட ஆமால, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா தீரா, அடுத்த வருஷம் நீயும் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோட கஷ்டப்பட வாழ்த்துக்கள்” என்க,
இவனோ புன்னகையுடன் “நண்பன் ஆசைய நிறைவேத்திட்டாப் போச்சு, அப்பறம் ஏன்டா இப்படி பண்ணணு குதிக்கக் கூடாது, எல்லாம் நீ சொன்னா இந்த வார்த்தைக்காக தான்” என்றான்.
அவனோ இவன் சொல்வது புரியாமல் “அதெல்லாம் சொல்ல மாட்டேன். இன்னொரு விஷயம் சொல்லணும். உன்கிட்ட தான் முதல்ல சொல்லுறேன்” என்றவன்,
“தேனு முழுகாம இருக்குடா தோஸ்து” என்று அத்தனை சந்தோசமாய்… அந்த சந்தோசம் இவர்களையும் தொற்றிக் கொண்டது.
ஆனால் தீரன் முகத்தில் சிறு கவலை இழையோடியது. அவன் எவ்வளவு பெரிய விடயத்தை தன்னிடம் மறைக்காமல் பகிர்ந்திருக்க தானோ தன்னவர்கள் அனைவரிடமும் மறைக்கிறேனே என்ற குற்றவுணர்வு அது…
இவன் அமைதியில் அவனோ “தோஸ்து” என்று அழைக்க, “ரொம்ப ரொம்ப சந்தோசம்டா, சீக்கிரம் ரெண்டு பேரும் பரணிய என் கைல கொடுங்க சரியா? நான் தான் அவனை வளர்ப்பேன்” என்றான்.
ஜோதியோ புன்னகையுடன் “உனக்குதான்… நீயே வெச்சிக்க சரியா?” என்றவன் இன்னும் சிறிது பேசி வைக்க, அவன் மயில் அவன் மார்பில் தூங்கி இருந்தாள்.
“பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் ரெடி பண்ணி இருக்கா, இன்னைக்கும் சொதப்பிட்டேன்” என்று அவள் செய்து வைத்திருந்த ஏற்பாடுகளைப் பார்த்தவன் ஆசை மின்ன அவள் நெற்றியில் முத்தம் பதித்தான்.
அவன் ஈர முத்தத்தில் அவள் விழித்துக்கொள்ள, “அச்சோ டிஸ்டர்ப் பண்ணிட்டேனா, நீ தூங்குடா” என்று தட்டிக் கொடுக்க,
“லேட்டா வந்துட்டு என்னை தூங்க வைக்கிறீங்கல்ல ஜெய்” என்று அவன் மீது கண்டமேனிக்கு அடி விழுந்தது. அனைத்தையும் வாங்கிக் கொண்டவன், அவளை அணைத்துக் கொண்டான்.
“சரி சரி உன்னை இன்னைக்கு தூங்கவே விடல போதுமா?” என்க,
அவளோ சட்டெனத் தோன்றிய வெட்கத்துடன் “அது இல்லை…” என்றாள்…
“அடடே எதுவாம்? அதெல்லாம் தெரியுதா உனக்கு, அப்போ என் பொண்டாட்டி பெரிய பொண்ணாகிட்டா அப்படித்தானே!” என்று கேட்க,
எப்போவும் பெரிய பொண்ணு தான் என்றவள் அவனை விட்டு விலகி ஓட, இவனோ எழவே முடியாத அளவு சந்தோசத்தில் மூழ்கித்தான் போயிருந்தான்.
அவளே மீண்டும் அவனிடம் வந்திருந்தாள்.
“ஜெய் எழுந்திருங்க கேக் கட் பண்ணனும்” என்க, எழுந்து அமர்ந்தவன் வெட்டி அவளுக்கும் ஊட்டி விட, அவளோ கதை கதையாய் பேசினாள். அவனிடம் மௌனம் மட்டுமே!
மனது நிறைந்து போனதில், அவள் மீதான மையல் கூடி இருந்தது.
மயல் என்று பெயரே வைத்திருந்தவளிடம் மையல் இல்லாமல் இருக்குமா???
அவளை மனைவியாக்க அவன் ஒவ்வொரு அணுவும் துடித்துக் கொண்டிருக்க, இதனை அறியாதவளோ அவனிடம் ஒட்டிக்கொண்டும் பேசிக்கொண்டும் அவனை உணர்வுகளால் பந்தாடிக் கொண்டிருந்தாள்.
“ஓகே, தூங்கலாம் ரொம்ப நேரம் ஆகிடிச்சு பாரு, காலைல காலேஜ் போகணும்ல, இப்போ இத கிளீன் பண்ணவும் முடியாது சோ நீ என் ரூம்ல தூங்கு நான் வெளில சோபாவுல படுத்துக்கிறேன்” என்றவன் எழுந்துகொள்ள,
“சோபா எதுக்கு, உன் ரூம்லயே தூங்கலாமே!” என்றவளும் அவனுடன் எழுந்து கொள்ள, அவள் புடவை விலகியதில் விழித்துக்கொண்ட கணவனை காவலன் தான் அடக்க வேண்டியாதாய் போகிற்று…
‘வேற வினையே வேண்டாம்’ என்று எண்ணியவன், “செல்லக்குட்டி மாமாவோட நிலைமையை புரிஞ்சிக்காம பேசக்கூடாது. இன்னைக்கு உன் ஜெய் ரொம்ப ரொம்ப மோசமான ஆளா இருக்கான். இப்போவே சொல்லிட்டேன் தப்பிச்சிடு” என்றவன் பார்வை சென்ற இடத்தைப் பார்த்து, பாவை நாணிப் போனாள்.
அவள் வெட்கம் அவனை மேலும் படுத்த, ‘இது வேலைக்காதாது’ என்று எண்ணியவன், அவளை கையோடு அழைத்துச் சென்று அவன் அறையில் விட, அதுவே அவனுக்கு வினையாகிப் போனது.
அவன் மனைவி அவனையும் சேர்த்து அந்த அறையைப் பூட்டி கதவில் சாய்ந்திருந்தாள்.
“என்னடி பண்ணுற, விட்டுடு உன் படிப்பு முடியணும், நீ இன்னும் கொஞ்சம் பெரிய பொண்ணாகணும். இப்போ வேணாமே” என்றவனின் பேச்சு, அவனை நெருங்கிய அவள் நெருக்கத்தில் சுக்குநூறாகியது.
“நான் வேணாமா ஜெய் மாமா” என்றவள் மேலும் அவனை நெருங்க, கட்டுப்படுத்த முடியாமல் அவள் நெற்றியில் தொடங்கிய அவன் இதழ் ஊர்வலம் மெல்ல மெல்ல முன்னேற, அவன் கையில் குழைந்தாள் பெண்.
அவள் மயங்கி இருந்த நேரம் அவளை விட்டுக் கதவை திறந்து வெளியேறியவன் வெளியே நின்றபடி “என் சமத்து மயிலு இப்போ தூங்குமாம்” என்க,
அவனை நோக்கி கை நீட்டி “ஜெய்…”bஎன்று அவன் மயில் ஏக்கமாய் அழைத்ததில் கட்டுப்பாடாவது ஒன்றாவது என அவள் கை சேர்ந்திருந்தான் அவன்.
அதன்பின் அவளால் அவனை மட்டுமே எண்ண முடிந்தது.
நிமிடத்துக்கு நிமிடம் “மயிலு” என்ற குரல் அவன் குரலும், “ஜெய்” என்ற அவள் குரலுமே கானமாய் அந்த அறையை நிறைக்க,
அவளை தேடி தொலைந்து போனவன் அவளை தன்னுள் தொலைத்தான்.
அல்ல அல்ல குறையாத அவன் மயில் மீதான பித்தம் மொத்தமாய் அவளிடம் சேர்ந்திருக்க, பித்தம் களைக்க வேண்டியவளோ அவன் மீது பித்தாகித்தான் போனாள்.
இரவு முழுவதும் அவளிடம் அனுசரித்து, அவளை கொஞ்சி மிஞ்சி அவளையும் கெஞ்ச வைத்து புதுப்பாடம் நடத்திக் கொண்டிருந்தான் மயலின் ஜெய்…
அவள் திணறும் வேளைகளில் எல்லாம் தன்னை மஞ்சமாக்கியவன், அவள் மஞ்சத்தில் இவன் திணறிப் போனான்.
அவள் மென்மை மீதான பித்தம் என்றுமே தீராதென தீரனவன் உணர்ந்து கொண்ட பொழுதுகள் அவை…
விடியும் வரை அவளை கொண்டாட்டித் தீர்த்தவன் விடியும் தருவாயிலேயே தூங்கவும் அனுமத்திருந்தான். அதுவும் அவளுக்காகவே!
ஈர்க்கும்….

