
பழைய வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் டெம்போவில் ஏற்றிக்கொண்டு வந்துவிட்டான் வெற்றிமாறன். அவன் பொருட்களை எல்லாம் தனியாளாக உள்ளே வைப்பதைப் பார்த்து, அவனுக்கு உதவி செய்ய வைத்தியநாதனும் அங்கு வந்தார்.
வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, காற்றாட வெளியே அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தபோதுதான் வண்டி வந்து நின்றதை அவர் கவனித்தார்.
டிரைவரும் வெற்றியும் மட்டுமே பொருட்களை உள்ளே வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அவர்களுக்கு உதவிடச் சென்றார்.
“கொடுப்பா! நானும் கொஞ்சத்தை எடுத்துட்டுப் போய் உள்ளே வைக்கிறேன்.”
“வேணாம் பாட்னர், உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என்றான் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி.
“சும்மா வெட்டியாத்தான்பா படிச்ச பேப்பரையே படிச்சிட்டு இருக்கேன். அதனால எனக்கு ஒரு சிரமமும் இல்லை, கொடு…” என அவன் கையிலிருந்த பொருட்களை வாங்கிக்கொண்டார்.
அவனும் அதிக எடையில்லாத பொருட்களை எல்லாம் அவரிடம் கொடுக்க, அவற்றை வாங்கி வாங்கி உள்ளே வைத்தார். கனமான பொருட்களை எல்லாம் டிரைவரும் அவனுமாகத் தூக்கிக்கொண்டு, தாயிடம் கேட்டு அதனதன் இடத்தில் வைத்தனர்.
ஒருவழியாக ஜாமான்களை உள்ளே வைத்துவிட்டு டிரைவர் கிளம்ப, அவரிடம் பேசிய பணத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தவன், வைத்தியை உள்ளே அழைத்துச் சென்றான்.
“அம்மா! பாட்னருக்கு ஒரு ஜூஸ்… வித்தவுட் சுகர்!” என்று கூடத்திலிருந்து கத்திச் சொல்ல, “ஏம்பா… நீயும்?” எனப் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்.
“என்ன பண்ண பாட்னர்? உங்களுக்கு இனிப்பு கொடுத்தாலே உங்க பொண்ணுதான் ஊசியோட கண் முன்னாடி வந்து நிக்கிறாங்க! வாட் டு டூ (What to do)?” என்றான் கேலியாக.
அவரோ சலிப்பாகத் தலையாட்டியபடி, “தம்பி, இங்க வாயேன்…” எனத் தன் பக்கம் அழைத்தார்.
“என்ன பாட்னர்?” என அவனும் ரகசியம் கேட்பது போல அருகே சென்றான்.
“காலையில கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கல் இருக்கா?” என ஹஸ்கி குரலில் கேட்டவரைச் செல்லமாக முறைத்தவன், “ஆனாலும் பாட்னர், உங்க பொண்ணு அவ்வளவு மிரட்டியும் உங்க வாய் அடங்கலையே!” என்றான் அளந்த பார்வையோடு.
“என்னப்பா பண்ண! இனிப்பு சாப்பிட்டுப் பழகிய நாக்கு, சட்டுனு மாத்திக்க முடியல. கண்ட்ரோல் பண்ணத்தான் நினைக்கிறேன், முடியலையே…” என்று உதட்டைப் பிதுக்க, புன்னகையுடன் இரு பக்கமும் தலையசைத்தான் மாறன்.
“கண்ட்ரோல் வேணும் பாட்னர்… உங்க பொண்ணுக்கு நீங்க மட்டும்தான் இருக்கீங்கன்னு நினைச்சாலே ஆட்டோமேட்டிக்கா கண்ட்ரோல் ஆகிடும் பாட்னர்…” என அறிவுரை கூறினான்.
அவரோ, “நீங்க வேற தம்பி, என் பொண்ணை நினைச்சாலே போதும், இனிப்பைப் பார்த்து ஊறின எச்சில் கூட வத்திப்போயிடும்…” என்றார் சிரித்தபடி. அவனும் கலகலவென சிரித்தான்.
“இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருந்தும் நீங்க பொண்ணுகிட்ட டிமிக்கி கொடுக்குறீங்களே!”
“அது அப்பப்ப…” என வழிந்தபடி சொல்ல, இருவரும் சிரித்தனர்.
உள்ளிருந்து வந்த மதி, இருவருக்கும் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். அவருக்கு ‘நன்றி’ கூறிவிட்டுப் பருக ஆரம்பித்தார் வைத்தி.
“வீட்டு வேலை எல்லாம் நீங்கதான் செய்யுறீங்கன்னு தம்பி சொன்னான். உங்களுக்குக் கஷ்டமா இல்லையா அண்ணா?”
“பழகிடுச்சுமா! என் மனைவி இறக்கும்போது என் பொண்ணு சின்ன வயசு. அப்போ எடுத்துக்கிட்ட வீட்டுப் பொறுப்பு இப்ப வரைக்கும் தொடருது. முதல்ல வேலைக்குப் போயிட்டு வீட்டு வேலையும் பார்க்கும்போது சிரமமா இருந்தது.”
“ஆனா, இப்ப இல்லை… பாப்பாவை வேலைக்கு அனுப்பிவச்சுட்டாலே எனக்கு வேலை இல்லை, ரொம்பவே ஃப்ரீதான். அவ வந்ததும் கொஞ்சம் வேலை இருக்கும், ரெண்டு பேரும் சேர்ந்து கதை பேசிக்கிட்டே வேலையை முடிச்சிடுவோம். அப்படியே நாட்கள் போயிடுச்சுமா…”
“இனி பொண்ணு கல்யாணம் பண்ணிட்டுப் போனதுக்கு அப்புறம் இருக்கப் போற வாழ்க்கையை நினைச்சாதான்…” என்று குரல் கம்மப் பேசினார்.
அவரது தோளை அழுத்திய மாறன், “வீட்டோட மாப்பிள்ளையா பாருங்க! பொண்ணு உங்களோடவே இருப்பாங்க” என்றான் ஆறுதலாக.
“ஏம்பா, என் பொண்ணை வச்சே என்னால சமாளிக்க முடியல, இதுல மாப்பிள்ளை வேறயா? என் பொண்ணை ஒரு அப்பாவி கையில பிடிச்சுக் கொடுத்துட்டு; மலேசியா, தாய்லாந்து, பேங்காக்னு ஊர் சுத்தலாம்னு நினைக்கிறேன்ப்பா…”
“பொதுவாக வயசானவங்க காசி, ராமேஸ்வரம்தானே போவாங்க?”
“அதெல்லாம் வயசானவங்க, ஆன்மீக வழியில போறவங்கப்பா! எனக்கு என்ன இப்போ வயசாயிடுச்சு? சுகர் இருக்கறதால கொஞ்சம் ஓல்டு மேன் போல தெரியுறேன். மத்தபடி நானும் யங்பா (Young)…”
அவரை ஏற இறங்கப் பார்த்தவன், “சரிதான் யங் மேன்! நல்ல பிளான் தான். ஆனா, நீங்க மட்டும் போறதா பிளானா? இல்ல…” என அவரை வம்பிழுக்க…
“தம்பி!” என அவனை மதி அடக்கினார்.
வைத்தியோ, “போங்க தம்பி…” என வெட்கப்பட்டார்.
“இருந்தாலும் நீங்க உங்க பொண்ணுக்கு எல்லா வேலையும் சொல்லிக் கொடுக்கணும் அண்ணா! போற வீட்டுல பார்க்கணும் இல்லையா? பையன்னா எல்லாம் செய்வான், பொண்ணுதானே பொறுப்பா பார்க்கணும்…”
“பார்க்கணும் தான்மா! ஆனா டாக்டருக்குப் படிக்கிறாளேன்னு எந்த வேலையும் செய்ய விடலை. இப்போ வேலைக்குப் போறான்னு செய்ய விடுறதில்லை. வரும்போதே என் பொண்ணு டயர்டா வர்றா! அவளை வேலை செய்யச் சொல்ல எனக்கு மனசில்லை.”
“அப்படியே நாட்களை ஓட்டிட்டோம். தம்பி போல வீட்டைப் பொறுப்பா பார்த்துக்கிற மாப்பிள்ளை என் பொண்ணுக்குக் கிடைச்சா எனக்குச் சந்தோஷம்தான்மா” என அவர் விளையாட்டுக்குச் சொல்ல, மதிக்குச் சுர்ரென்று கோபம் வந்துவிட்டது.
“அதெப்படி அண்ணா? பொண்ணுக்கு ஒரு வேலையும் சொல்லிக் கொடுக்காம பொறுப்பான பையன் கிடைக்கணும்னு சொல்றீங்க! உங்களைப் போலவே உங்க பொண்ணுக்குச் சேவகம் பண்ண இன்னொரு பையனைத் தேடுறீங்களா? இது என்ன நியாயம்?”
“பையன் வீட்டுப் பொறுப்பைப் பார்த்துக்கணுமா? உங்க பொண்ணு ஆம்பளப் பிள்ளை போல வேலைக்கு மட்டும் போவாளா, வீட்டைப் பார்த்துக்க மாட்டாளா?” எனக் கொதிக்க, வைத்தி திகைத்துப் போனார்.
“அம்மா! பாட்னர் விளையாட்டுக்குத்தான் சொன்னார். நீ ஏன்மா சீரியஸா எடுத்துக்கிற?” எனக் கேட்டுப் பல்லைக் கடித்தான் மாறன்.
“அப்படி இல்லை தம்பி. பொண்ணுன்னா பொறுப்பா இருக்கணும், வீட்டுல எல்லா வேலையும் பார்க்கத் தெரிஞ்சிருக்கணும். அப்போதான் போற வீட்டுல அவ நல்லா வாழ்வா, இல்லைன்னா கஷ்டப்படுவா!”
“அண்ணா, நீங்க உங்க பொண்ணுக்கு ஒவ்வொரு வேலையா கத்துக்கொடுங்க. அப்போதான் அவ நீங்க நினைக்கிறது போல கஷ்டப்படாம வாழ்வா. இல்லைன்னா ஒவ்வொரு நாளும் அவ மாமியார் வாயில விழுவா…”
“பையனை வச்சிருக்க நானே சொல்றேன், என் புள்ளை ரொம்ப நல்லவன், சொக்கத்தங்கம், பொறுப்பானவன்தான், வீட்டு வேலை எல்லாம் பார்ப்பான். அதுக்காக உங்க பொண்ணு போல எதுவும் தெரியாத பொண்ணை மருமகளா எடுக்க முடியுமா? என்னால முடியாததாலதான் என் பையனைப் பார்க்க விடுறேன். இல்லைன்னா அவனை ஒரு வேலையும் செய்ய விடமாட்டேன்.”
“கல்யாணத்துக்கு முன்னாடி பொறுப்பா பார்த்துக்கிறவன், கல்யாணத்துக்கு அப்புறமாவது கொஞ்சம் நிம்மதியா இருக்கணும். வரப்போற பொண்ணு பொறுப்பா வீட்டைப் பார்த்துக்கணும். அப்படி ஒரு பொண்ணைத்தான் நான் பார்ப்பேன்…” என்று, அவர் நகைச்சுவையாகச் சொன்னதற்கு இவர் நேரடியாகப் பதிலடி கொடுக்க, வைத்தியின் முகம் வாடிவிட்டது.
“அம்மா… அமைதியா இரு…” என மாறன் கண்ணைக் காட்ட, அதையெல்லாம் பற்றிக் கவலை இல்லை என்பது போல, “சொல்றதைச் சொல்லிட்டேன், அப்புறம் உங்க விருப்பம் அண்ணா…” என்றார் அசட்டையாக மதி.
வேகமாக அங்கிருந்து கிளம்ப எழுந்த வைத்தி, “பரவாயில்லைப்பா… தங்கச்சி சொல்றதும் சரிதானே…” எனச் சங்கடமாகச் சொல்ல, மாறனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
“நான் வர்றேம்மா… வர்றேன் தம்பி, வீட்டுல போட்டது போட்டபடி இருக்கு…” என்று கஷ்டப்பட்டுச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னவர் வெளியே செல்ல, அவரைத் தொடர்ந்து வந்தவன், “சாரி பாட்னர்! எங்க அம்மா அப்படித்தான், பொண்ணு பையன்னு பிரிச்சுப் பார்க்குற ஆள். அதான் அப்படிப் பேசிட்டாங்க, தப்பா எடுத்துக்காதீங்க…” என்று கெஞ்சுதலாகக் கேட்டான்.
“ஐயோ! எதுக்கு தம்பி சாரி எல்லாம்… உங்க அம்மா உண்மையத்தானே சொன்னாங்க! வீட்டுக்கு மருமகளா போற பொண்ணு பொறுப்பா இருக்கணும் இல்லையா? அதைத்தான் அவங்க சொன்னாங்க. என்ன… என் ஒரே பொண்ணு, தாயில்லாத பொண்ணுன்னு செல்லமா வேலை சொல்லாம வளர்த்துட்டேன். என்ன பண்ணப் போறேன்னு தெரியல.”
“மாமியார் இடத்துல இருக்கவங்க யாரா இருந்தாலும் எதிர்பார்க்கத்தானே செய்வாங்க, அதைத் தப்பு சொல்ல முடியாது. ம்ஹூம்… என் பொண்ணோட வாழ்க்கை எப்படி அமையப் போகுதோன்ற பயம் எனக்குள்ள இருக்குப்பா. நான் இன்னும் என்னென்ன அனுபவிக்க இருக்கேனோ…”
“சில் அங்கிள் (Chill uncle)! நீங்க எதிர்பார்க்கிற மாதிரிதான் மாப்பிள்ளை வருவார். உங்கப் பொண்ணை நல்லா பார்த்துப்பார். கல்யாணத்துக்கு அப்புறம் நீங்களே ஃபீல் பண்ணுவீங்க… இப்படிப்பட்ட மாப்பிள்ளை அமைவார்னு தெரியாம புலம்பிட்டு இருந்தோமேன்னு!” என்று மாறன் சிரிக்க, அவரும் புன்னகையுடன் விடைபெற்றார்.
உள்ளே வந்தவன் தாயைக் கடிந்து கொள்ள, அவரோ அதை அசட்டை செய்துவிட்டு உள்ளே சென்றார்.
இரவில் மருத்துவமனையிலிருந்து அலுப்புடன் வந்த சம்ருதியைத்தான் பார்த்தார் வைத்தி.
முப்பது வயதாகிறது அவளுக்கு. மஞ்சள்காமாலை வந்து மனைவி இறந்துவிட, இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு தனியாளாக நின்று வளர்த்தார் வைத்தியநாதன்.
மூத்தவன் சாத்விக், இளையவள் சம்ருதி. சாத்விக் இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) படித்து வேலைக்குச் சென்றவன், வைத்தியை எதிர்த்துக் காதல் திருமணம் செய்துகொண்டு ஒட்டும் உறவும் இல்லாமல் போய்விட்டான். அதன்பின் அவர் இடிந்துபோய்விட்டார்.
அதன்பின், சம்ருதி தந்தையுடன் அண்ணனைச் சேர்த்து வைக்க எவ்வளவு போராடியும் அவர்களை இணைக்க முடியவில்லை. கோபத்தில் இருந்த தந்தையை மனமிறங்க வைத்து, ஒன்று சேர்க்க இருந்த வேளையில் அவன் விபத்தில் சிக்கி இறந்துபோனான்.
மகன் இறந்த சோகத்தில் இருந்தவரை மீட்டுக் கொண்டு வந்தாள் சம்ருதி. அண்ணன் செய்த தவறை ஒருபோதும் செய்யக் கூடாது என்றும், தந்தை பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற முடிவிலும் இருக்கும் மகளை எப்போதும் மெச்சுக்கொள்வார் வைத்தி.
அவளது பதினைந்து வருட உழைப்பில், இன்று சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனையில் பொதுநல மற்றும் இருதய நிபுணராக (General Physician & Cardiologist) பணியாற்றி வருகிறாள். கைநிறையச் சம்பாதிக்கவும் செய்கிறாள்.
மருத்துவம் படிக்கும் காலத்திலேயே ஒரு வேலையும் செய்ய விடாதவர், இப்போது வேலைக்குச் சென்று சோர்வாக வரும் மகளிடம் வேலை சொல்ல மனம் வரவில்லை அவருக்கும்.
இருக்கும் வரை பார்ப்போம், அதன்பின் அவள்தான் வாழ வேண்டும் என்று அவளை அப்படியே வேலை சொல்லாமல் வளர்த்துவிட்டார். இன்று மதி பேசியதை வைத்து, இப்போது உள்ளுக்குள் பயந்து புலம்பித் தவிக்கிறார் வைத்தி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
+1
+1

