என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -11

Loading

 

முகம் 11

 

தியாகராஜனும் ராம்பிரசாத்தும் கல்லூரி நண்பர்கள்.

மருத்துவக் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது இருவருக்கும் பழக்கம். சிறிதாக ஆரம்பித்த நட்பு அவர்களுக்குள் இணைபிரியா நேசத்தைக் கொடுத்திருந்தது.

அவர்களது இறுதியாண்டின் ஆரம்பத்தில் தான் தியாகராஜனின் சித்தி மகள் பூங்கோதை அங்கே மருத்துவ கல்லூரிக்கு வந்திருந்தார்.

தியாகராஜனின் சித்தி மகள் என்றாலும் பல வருடங்களுக்கு முன்பிருந்தே அவர்களது குடும்பம் பேசிக்கொள்வதில்லை என்பதால் இருவருக்கும் பெரிய இடைவெளியே இருந்தது.

எங்கோ சிறிய வயதில் தங்கையைப் பார்த்த ஞாபகம் தான் தியாகராஜனுக்கு…

இரண்டு குடும்பங்களுக்கும் பொதுவான ஒருவர் மூலம் தான் கோதை அந்தக் கல்லூரிக்கே வந்திருக்க, மீண்டும் தங்கையை சந்தித்தவருக்கு அவர் நிலை கவலையாகிப் போனது.

அவரது சித்தி சித்தப்பா இறந்திருக்க, தங்கை இப்போது தனியாய் இருப்பது தெரிந்தது.

அதனால் அவருக்குத் தேவையானது அனைத்தையும் பார்த்துக்கொள்ள தியாகராஜன் முன் வந்திருந்தார்.

அதனை எல்லாம் கோதை ஏற்றுக்கொண்டாலும், வீட்டுக்கு அழைத்த போது மட்டும் முடியாது என மறுத்திருந்தார்

அதில் அடிக்கடி தங்கையுடன் அவர் பேச, கூட இருந்த ராம்பிரசாத்துக்கோ கண்டதும் காதல்.

பூங்கோதையின் அமைதியான ஆர்ப்பரிக்கும் அழகு ராம்பிரசாத்தை தூங்க விடவில்லை என்றால் தனித்து நிற்கும் அந்த தைரியமும் அத்தனை பிடித்தது.

பல போராட்டத்தின் பின் தன் காதலுக்குச் சம்மதம் வாங்கியவர் அடுத்த சில வருடங்களில் திருமணமும் செய்து கொண்டார்.

இருவருமே மருத்துவர்கள் என்பதால் ராம்பிரசாத்தின் மருத்துவமனை அவரது தந்தைக்கு அடுத்ததாக இவர்களின் பொறுப்புக்குத் தான் வந்திருந்தது. தியாகராஜனும் அங்கு தான் பணியில் சேர்ந்தார்.

அதன்பின் அவர்களது வாழ்க்கை ஏறுமுகம் தான். எந்த சண்டை சச்சரவும் இன்றி அதிக காதலோடு தான் கடந்தது.

அதன் சான்றாக பூங்கோதையின் வயிற்றில் முத்தாய் அவர்களின் இரு குழந்தைகளும் உதித்திருக்க, இருவரும் சந்தோஷத்தில் திளைத்தனர் எனலாம்.

இப்படியே நாட்கள் செல்ல, குழந்தைகளும் பிறந்திருந்தனர். அதுவும் இரட்டை குழந்தைகள், சந்தோசத்தின் உச்சம் தான் அவர்களுக்கு…

யாருமில்லாமல் தனியே வாழ்ந்த தனக்கு ரெண்டு முத்துக்கள் என ராமிடம் சொல்லிச் சொல்லியே மாய்ந்து போவார் கோதை.

ராம் பிரசாத்தோ “அப்போ நான்?” என்று கேட்டு மனைவியின் வெட்க முகத்தை ரசிப்பதுண்டு…

குழந்தைகளுக்கு கயல்மொழி, மயல்மொழி என்று பெயர் வைத்து அழகு பார்த்தனர்.

இப்படியே நாட்கள் செல்ல, குழந்தை கயல் அடிக்கடி நோய்வாய்ப் படுவது வழக்கம். சிறு மழை என்றாலும் காய்ச்சல் பிடித்துக்கொள்ளும் அவளுக்கு…

பூங்கோதை தான் அவளை அதிகம் கவனம் எடுத்துப்பார்த்துக் கொள்வார். அப்போதெல்லாம் மயல் ராம்பிரசாத்தின் வசம் தான்.

அன்றும் அப்படிதான். கயலுக்கு காய்ச்சல் அதிகமாகி இருக்க, மருந்து கொடுத்துப் படுக்க வைத்திருந்தார் கோதை.

ராம் மயலுடன் உள்ளே வந்தவர், அவளை அங்கே கயல் அருகே படுக்க வைக்கப்போக, கத்தியே விட்டார் பூங்கோதை.

“என்ன பண்ணுறீங்க ராம். இவ உடம்பே சரியாகலைனு நான் கவலைல இருந்தா, நீங்க இவளையும் பக்கத்துல படுக்க வைக்கிறீங்க?” என்று உச்ச அழுத்தில் அவர் கத்த, ராமுக்கு புரிந்தது. மகளை நினைத்து கோதைக்கு அழுத்தம் என்று…

“ஓகே ஓகே டென்ஷன் ஆகாத கோதை, கயலுக்கு சரி ஆகிடும். நீ அவ ரிப்போர்ட் பார்த்தல்ல ஒரு பிரச்சனையும் இல்ல, இது சாதாரண ஃபீவர் தான்” என்று மனைவியைத் தேற்றியவர்,

“இவளப் பாரு, எப்படி அப்பா மாதிரி ஸ்ட்ரோங்கா இருக்கான்னு… ஆனா கயல் சரியான கள்ளி, அம்மாவ அவகூடவே வெச்சிக்கணும்னு ஃபீவர இழுத்துப் பிடிச்சுக் கூடவே வெச்சிக்கிறா” என்றார் மகள் கன்னத்தை லேசாக கில்லி…

அதில் தூங்கிய கயல் கண்களை சுருக்க, ராமின் கரத்தில் அடி விழுந்தது.

“பார்த்தியா என் பொண்டாட்டிய என்கிட்ட இருந்து பிரிச்சிட்டா. என்னையே அடிக்க வெச்சிட்டல்ல” என்று கயல் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தார். தந்தையின் முத்தம் கொடுத்தக் கதகதப்பில் அவள் நன்றாக தூங்க, அவரோ புன்னகையுடன் இரு மகள்களையும் பார்த்தார்.

“மயல் அப்படியே என் அக்கா மாதிரி, கண்ணக் கூடப் பாரு, என் அக்கா கண்ணும் இப்படித்தான்” என்று மனைவியிடம் சொன்னவர்,

“என் அக்காவா நீங்க? சொல்லுங்க என்னோட அக்காவா நீங்க” என்று குழந்தையைச் செல்லம் கொஞ்சி சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தார்.

கோதையோ “ராம், உங்களுக்கு அக்கா இருக்காங்களா?” என்று கேட்டார்.

“ம்ம்ம், ஆமாம் இருந்தாங்க கோதை, உனக்கு தெரியாதுல” என்று சொல்ல,

“இருந்தாங்கன்னா?” என்று கோதையிடமிருந்து மீண்டும் கேள்வி வந்தது.

“முன்னாடி எங்க கூடவே தான் இருந்தாங்க கோதை, என்ன விட ஒரு ஆறு வயசு தான் அதிகம். சின்ன வயசுலயே டிசேபில் சைல்ட் அவங்க. அவங்களால நடக்கவோ பேசவோ எதுவுமே முடியாது. எங்க பாட்டிக்கு அவங்க மேல ரொம்ப பாசம். அப்போ நான் அம்மா வயித்துல உண்டாகி இருந்ததால அக்காவை அம்மாவால பார்த்துக்க முடியாதுனு, பாட்டி அவங்களோடவே அக்காவ ஊருக்கு கூட்டிட்டுப் போய்ட்டாங்க. நாங்க அப்பப்போ போய் பார்ப்போம்” என்றார்.

“அப்படியா?” என்பதாய் கேட்டுக்கொண்டார் கோதை…

அப்படியே ஒரு வாரம் சென்றிருக்கும் கோதை மனதில் அமைதி இல்லாமல் தான் தவித்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் அது நன்றாக தெரியவும் செய்தது.

இரண்டு நாட்களின் முன்னர் அவர்கள் நால்வரும் காரில் ராம்பிரசாத்தின் ஊரில் இருக்கும் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த நேரம், தீடீரென ஒருவன் காரின் முன்னே குதிக்க, ராம் சட்டென காரை நிறுத்தியிருந்தார்.

அவனோ சத்தமாய் சிரித்தபடி, “ஆபத்து இருக்கு… ஆபத்து இருக்கு. இரண்டாவது மண்ணை பார்த்த உயிர் மூலமா அடுத்ததுக்கு நிச்சயம் மரணம் காத்திருக்கு. குடும்பத்துல நிம்மதி இல்லாம போன உயிர் மறுஜென்மம் வாங்கி வந்திருக்கு, முடிஞ்சா பிரிச்சு வைங்க தாயி” என்று அவன் கத்தியது, கோதை மனதில் அன்றே வடுவாய் பதிந்து போக, அடுத்து வந்த நாட்களில் கோதையின் பேச்சு குறைந்து போனது.

மனதுக்குள் எதையோ போட்டு உலன்று கொண்டே தான் இருந்தார். ராம் எத்தனை கேட்டும் அவரும் சொல்வதாய் இல்லை. ஆனால் அதன் எதிர்வினை அடுத்த வாரமே வந்தது.

ஆம் எதிர்வினை தான். பிரிவு வேண்டும் என்று வந்து நின்றார் கோதை. ராம்பிராசத்துக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனென்று காரணம் கேட்டும் கோதையிடம் பதில் இல்லை.

ராம் பிரசாத் சற்று கோபமாய் கேட்டதும் “ரெண்டு பொண்ணுங்களும் ஒன்னா இருந்தா ஆபத்துனு அன்னைக்கு ஒருத்தர் சொன்னாரே!” என்க,

“வாட்… ஸ்டுபிட் மாதிரி பேசாத கோதை, நீ ஒரு டாக்டர். இத எல்லாமா நம்புவ?” என்று எரிச்சலுடன் கேட்க,

“ஆமா, நம்புறேன்… நம்புறேன்” என்று கத்தியவர், “என் பொண்ணுங்க ராம். அவங்க வாழனும், மறுஜென்மம் அது இதுனு எல்லாம் சொன்னாரே! எனக்கு பயமா இருக்கு ராம், அவங்க நம்ம மூலமா வந்தவங்க ராம். நாம தான பத்திரமா பார்த்துக்கணும்” என்றார்.

ராமால் அவரை சமாதானப் படுத்த முடியவில்லை…

இப்படியே சென்ற நாட்களில் ஒருநாள் வீட்டுக்கு வந்த ராமுக்கோ அதிர்ச்சி, வீட்டின் முன்னறையில் ஒரு சாமியார் அமர்ந்திருந்தார்.

ராமுக்கோ சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை. எவ்வளவு கற்று தேர்ந்து என்ன பயன். மனைவி மூட நம்பிக்கையைக் கட்டிக்கொண்டு அழுகிறாளே!

இப்போது அவரும் அந்த சாமியார் முன்னிலையில் மனைவியுடன் அமர்ந்திருந்தார். வேறு என்ன செய்வது காதலித்துத் தொலைத்து விட்டாரே!

“உண்மையில் பேராபத்து காத்திருக்கிறது. பெரியவள் உயிருக்கு ஏமனாய் சிறியவள்” என்றார் குழந்தைகளின் ஜாதகத்தை பார்த்தபடி…

கோதையோ “என்ன பண்ணனும் சாமி பரிகாரம் ஏதாச்சும் இருக்கா?” என்க,

“ஹாஹாஹா, இது விதியின் எழுத்து நடக்கும் நடந்தே தீரும்” என்றார் சாமியார்.

“ஐயோ அப்போ இதுக்கு என்ன தான் வழி?” என்று பூங்கோதை பயத்துடன் கேட்க,

கண்களை மூடி மந்திரங்கள் சிலதை உதித்தவரோ “கிரக பெயர்ச்சியால் உண்டாகவிருக்கும் இழப்பைத் தடுக்க முடியாது. ஆனால் காலம் தாழ்த்த முடியும். அதற்கு அவர்கள் பிரிவு ஒன்றே வழி” என்றிருந்தார்.

ஏற்கனவே அதையே நம்பிக்கொண்டிருக்கும் கோதைக்கு இன்னும் தூபம் போடும்படி தான் இருந்தது அவர் பேச்சு…

ராமோ எவ்வளவு சொல்லியும் கோதை கேட்பதாய் இல்லை. நாட்கள் செல்லச் செல்ல அவர் பிடிவாதம் உறுதியானது தான் மிச்சம்.

அதிலும் உச்சமாய் குழந்தைகள் நடை பயில ஆரம்பித்த நாளில், கயலோ மாடி படிக்கட்டிலிருந்து விழுந்திருந்தாள்.

பெரிய காயமும் கூட, மூன்று நான்கு நாட்கள் மருத்துவமனையே கதியென கிடந்தனர் பெற்றவர்கள்.

எத்தனையோ காயங்களை பார்க்கும் வைத்தியர்கள் தான் ஆனால் தங்கள் குழந்தை என்று வரும் பொழுது அவர்களும் குழந்தையாகி விடுகின்றனர்.

அதுவரை கணவரை சம்மதிக்க வைக்க போராடிய கோதையோ, கயலை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்த அன்று பிடிவாதத்துடன் ‘போய் ஆகவே வேண்டும்’ என்று ஸ்திரமாய் நின்றார்.

“கோதை ஏன்மா இப்படிலாம் யோசிக்கிற, இது ஜஸ்ட் ஒரு ஆக்ஸிடென்ட்” என்று எத்தனை பேசியும் கோதையின் மனதில் அன்று குழந்தைகள் மட்டும் தான் இருந்தனரோ என்னவோ? எந்த வார்த்தைக்கும் அசைந்து கொடுத்தாரில்லை.

கோதையை அவ்வளவு காதலிப்பவர் அவர், அவர் உணர்வுகளை மதிக்க மாட்டாரா? கொடுத்துவிட்டார் அவர் கேட்ட பிரிவை…

போகும் போது கயலை ராம்பிரசாத்திடம் கோதை கொடுக்க,

“உன் ராமை பிரிஞ்சு உன்னால இருக்க முடியுமா கோதை? என்னால முடியலையே! இதுக்கு என்னை கொன்னிருக்கலாம் நீ. என்கூடவே இருக்க மாட்டியா கோதை?” என்று கேட்க,

“ப்ளீஸ் ராம் என்னை வார்த்தையால கொல்லாதீங்க, இந்த பிரிவு என்னோட முடிவு இத நீங்க மதிப்பீங்கன்னு நினைக்கிறேன். நம்மளோட குழந்தைங்களுக்காக ராம்” என்றவர்,

“நான் இல்லாம உங்களால இருக்க முடியாதுங்குற மாதிரி என்னாலையும் நீங்க இல்லாம இருக்க முடியாது ராம்” என்றார்.

அடுத்து சிறிது மௌனம் பார்வையால் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்ட தருணம் அது…

கோதையோ கயலை அவர் கையில் கொடுத்து, அவள் கன்னம் வருடியவர் மயலுடன் ஒரு நீண்ட பிரிவுக்கு தயாராகினார்.

சிறிது தூரம் சென்று மீண்டும் கயலின் அருகில் வந்து, அவளது நெற்றியில் கை வைத்தவர்,

“சட்டுனு ஏதாச்சும் வந்துடும் இவளுக்கு, கவனமா பாத்துக்கோங்க” என்று திரும்பி நடக்கப் போக, அவர் கை பற்றி தடுத்திருந்தார் ராம்பிரசாத்.

கோதையோ கேள்வியாய் பார்க்க, கயல் நெற்றியில் அழுந்த முத்தமிட்ட ராம், தாயின் தோளில் தூங்கிகொண்டிருந்த மயலை தூக்கி தன் தோளில் போட்டு, கயலை கோதையிடம் கொடுத்தார்.

“எனக்கும் மயலுக்கும் உன் ப்ரெசென்ஸ் தேவைப்படுறத விட இவளுக்குத்தான் அது அதிகமா தேவை” என்றவர் மனைவியின் நெற்றியில் பிரிவுக்கு மருந்தாய் அழுந்த முத்தம் பதித்தார்.

கயலின் உயிர் பற்றிய மனைவியின் பயம் எப்படிப்பட்டது என கடந்த நாட்களில் கண்டிருக்கிறாரே, அவளை விட்டுச் சென்றாள் நிச்சயம் மனைவி நிம்மதி இழப்பது உறுதி. அதனாலேயே அவரது இந்த முடிவு.

அப்போதும் மனைவி நலனை யோசிக்கும் அளவுக்குக் காதல் அவர் மேல், அதனை அனுபவிக்க முடியாத நிலையில் மனைவி. அத்தனை காதல் மனதில் இருந்தும் வலிக்க வலிக்க ஒரு பிரிவு இருவருக்கும்.

அதன்பின் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழவில்லை அவ்வளவே! காதல் அது அப்படியே தான் இருந்தது.

அதன்பின்னும் கோதை கற்பகம் மருத்துவமனையில் தான் பணி புரிந்தார். ஆனால் கவனமாக குழந்தைகள் இருவரும் பார்த்துக்கொள்ளாதபடி பார்த்துக் கொண்டார்.

கயல் தாய் தந்தை இருவர் கண்காணிப்பிலும் வளர, மயல்மொழி தான் தாயின் அரவணைப்பின்றி தள்ளாடினாள்.

கயலுக்கு எப்போதும் தாய் வேண்டும் அவள் இல்லாமல் எங்கும் செல்ல விட்டதில்லை. அவள் பள்ளி செல்லும் நேரங்களில் தான் கோதை மயலை வந்து பார்த்துச் செல்வார். அதுவும் பத்து நிமிடங்களின் மேல் இருக்க முடிவதில்லை.

அதுவும் பல நேரங்களில் தடைப்படும். முதலில் நேரில் என்றிருந்த அந்த பத்து நிமிடங்கள், வருடங்களின் நீட்சியில் அழைப்பு மூலம் பத்து நிமிடம் என்றாகிப் போனது.

“என்னால மயல் கூட இருக்க முடியலேயேங்க, நீங்க மயல இங்க விட்டுட்டு கயல கொஞ்ச நாளைக்குக் கூட்டிட்டு போறீங்க” ராமிடம் அதற்கும் கோதை புலம்புவதுண்டு,

ஆனால் அவர் என்ன சொல்வார். அப்படி செய்தாலும் கயலை தாய் இல்லாமல் சமாளிப்பது கடினமாகிப் போகிறதே! பயத்தில் எப்போதும் அருகிலே வந்து கோதை பழக்கி விட்டிருக்க அதுவே இப்போது வினையாகிப் போனது.

கோதையின் புலம்பல் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் சென்றது. ராமால் என்ன செய்திட முடியும்? தானாய் தேடிக்கொண்டதல்லவா இது? அப்போதும் மனைவியை தேற்ற அவர் தவறியதில்லை.

ராம்பிரசாத் மனைவி இழந்த துக்கத்தில் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாலும் மகள்களை பார்த்துக்கொள்ளவே செய்தார்.

ஆகமொத்தம் இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ மயல்மொழி தான். ஒரு வயதுக்கு மேல் அவளாகவே ஒதுங்கிக் கொள்ள பழகி இருந்தாள்.

பள்ளி முடியும் வரை பொறுமையாய் இருந்தவள், கல்லூரியில் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்ததும், ராம்பிரசாத் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், விடுதியில் தங்கிப் படிப்பேன் என தாய்க்கு மேல் அவள் பிடிவாதம் உயர்ந்திருந்தது.

மறுக்க முடியாத நிலையில் அவர், மகள் தாயைப்பற்றி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் மௌனம் காக்கும் அவரால் வேறு என்ன செய்ய முடியும், அவள் கேட்பதைக் கொடுப்பதைத் தவிர…

அப்போதும் மகள் கேட்பது போல் விடுதியில் விட மனம் வராதவரோ என்ன செய்வது என்று தவிக்க, அப்போது அவருக்கு தோள் கொடுத்திருந்தார் தியாகராஜன்.

திருமணத்தின் மீது நாட்டம் இல்லாமல் தனித்திருந்தவர்க்கு மயல்மொழி ஒரு பற்றுகோள் எனலாம்.

அதற்கும் மறுத்தவளை அதட்டி உருட்டி ராம் பிரசாத் சம்மதிக்க வைத்திருந்தார்.

எவ்வளவு சந்தோஷமாக வாழ வேண்டிய அந்த குருவிக்கூடு அங்கொன்று இங்கொன்றுமாய் சிதறிப் போயிருந்தது.

_____________________

கடந்த கால எண்ணங்களில் மூழ்கி இருந்த ராம்பிரசாத் கண்களில் இன்றும் அந்த நினைவுகளில் ரணம் மிஞ்சிக்கிடந்தது.

 

 

ஈர்க்கும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்